இலங்கை இராணுவத்தை போர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதில் முதல்வன் தானே என ஜே.வி.பி. கூறுகின்றது

Pani Wijesiriwardena
31 March 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி) இலங்கையின் இணை அனுரசணையுடன் உருவாக்கப்பட்ட 'நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' ஆகியவற்றை ஊக்குவிக்கும் தீர்மானத்தில் இருந்து கொழும்பு அரசாங்கம் தனது ஒத்துழைப்பை விலக்கிக்கொள்வதாக சமீபத்தில் ஆணைக் குழுவிற்குத் தெரிவித்தது.

இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினரை அமெரிக்காவிற்குள் நுழைய விடாமல் தடை விதிக்க அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டமையே இதற்கான உடனடி காரணம் ஆகும். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி கட்டங்களில் இலங்கை படைகள் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பாக இராணுவத் தளபதி சில்வா மீது சுமத்தப்பட்டப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகின்றது.

பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ, பெப்ரவரி 19 அன்று, இணை அனுசரணையில் இருந்து தனது அரசாங்கம் விலகிக்கொள்ளும் என்று பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார். "ஐ.தே.க.-தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. இன் நல்லாட்சி கூட்டணியானது பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஜே.வி.பி. இன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, பெப்ரவரி 27 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, “2009 இல் போர் முடிவடைந்தபோது ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை அழைத்து ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டதன் மூலம் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கமே இதற்கு (யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானம்) அடித்தளம் அமைத்தது" எனத் தெரிவித்தார்.

பான் கி மூனுடன் 2009 ஆம் ஆண்டில் இராஜபக்ஷ அரசாங்கம் கையெழுத்திட்ட தீர்மானத்தையும், யு.என்.எச்.ஆர்.சி.யில் அமெரிக்காவுடன் 2015 இல் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் இணை அனுசரணையையும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், ஜே.வி.பி. எதிர்த்ததாக டி சில்வா கூறினார். "2015 இணை அனுசரணை தீர்மானத்தை ஜே.வி.பி. எதிர்த்தபோது, அதைப் பாராட்டியவர்கள் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள்" என்றும் டி சில்வா மேலும் கூறினார்.

போர் குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தை காப்பாற்றுவதற்காக ஜே.வி.பி. தனது "தேசபக்தி" போட்டியில் தன்னை முதல்வனாக நிரூபிக்க எப்போதும் முயல்கிறது. தனது "தேசபக்த கொடியை" இராஜபக்ஷ முகாம் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பதால் வரவிருக்கும் தேர்தலில் ஏற்படும் தீமைகள் குறித்து பேசிய டி சில்வா, "ஜெனீவா தீர்மானத்தை விட்டு வெளியேறுவது ஒரு அரசியல் நடிப்பு மட்டுமே, இதன் குறிக்கோள், வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் தேசபக்தியை தூக்கிப் பிடிப்பதாகும்," என்றார்.

பிறப்பிலிருந்தே, இலங்கை முதலாளித்துவமானது அதன் வர்க்க ஆட்சியை நடத்துவதற்கு "சிங்கள மற்றும் தமிழ்" தொழிலாள வர்க்கத்தை "பிரித்து ஆட்சி செய்யும் நடவடிக்கையையே" பயன்படுத்தி வந்துள்ளது. சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கொழும்பு ஆளும் வர்க்கம், தமிழ் பேசும் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுத்த கொடூரமான இன பாரபட்சங்கள், 1983இல் தொடங்கிய இனவாத யுத்தத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட யுத்தம், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. 2005 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம், சுருக்கமான போர்நிறுத்தத்துக்கு முடிவு கட்டி, 2006 இல் போரை மீண்டும் தொடங்கியது. இரத்தக்களரி யுத்தத்திற்கு முப்படைத் தளபதியாக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக தற்போதைய ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவும் தலைமை தாங்கினர்.

2009 இல் புலிகளின் தோல்வியுடன் முடிவடைந்த போரின் இறுதிக் கட்டத்தில், 40,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 200,000 க்கும் மேற்பட்டவர்கள் இராணுவ கட்டுப்பாட்டு முகாம்களில் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டனர்.

இந்த போர்க்குற்றங்கள் அனைத்திற்கும் இராஜபக்ஷ ஆட்சியும், போருக்கு பிரதானமாக அறைகூவல் விடுத்த ஜே.வி.பி.யும் பொறுப்புச் சொல்ல வேண்டும். யுத்தத்தின் இறுதிப் பகுதியில், அரச படைகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு தப்பி ஓடிய பொதுமக்கள் மத்தியில் புலி உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறி பாதுகாப்புப் படைகள் பொதுமக்களைத் தாக்கின.

அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய சக்திகளின் அழுத்தத்தின் கீழ், இராஜபக்ச ஆட்சி கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாக அறிவித்தது. அறிக்கையின் போலித் தன்மையை நன்கு அறிந்திருந்தும், ஜே.வி.பி. உடனடியாக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்தது.

இலங்கை மீது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக குற்றம் சாட்டியது, அந்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் மீதான எந்த அக்கறையினாலும் அல்ல. இலங்கைக்கு எதிரான அமெரிக்க குற்றச்சாட்டுகள் மற்றும் பிரேரணைகளும், இலங்கையானது எந்த வகையிலும் சீனா பக்கம் சாய்வதை தவிர்த்து, தீவை சீனாவுக்கு எதிரான அமெரிக்க மூலோபாய சுற்றுப்பாதையில் முழுமையாக ஒருங்கிணைக்கும் வழிமுறையாகும்.

இராஜபக்ஷ முகாமும், ஜே.வி.பி.யும் இதை நன்கு அறிவார்கள். எனினும், அவை அதை வேண்டுமென்றே மறைப்பதற்கு காரணம், இரு தரப்பினரும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டத்திற்கும் இலாயக்கற்று இருப்பதாலேயே ஆகும். ஒரு சிணுங்கலை ஒத்த அவர்களது “ஏகாதிபத்திய எதிர்ப்பு”, தலை முதல் கால் வரை போலியானதாகும். உண்மையில், முதலாளித்துவ அபிவிருத்தி காலங்கடந்த ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் என்ற வகையில், இலங்கை முதலாளித்துவத்தின் ஆளும் வர்க்கம் வரலாற்று ரீதியாக அத்தகைய போராட்டத்திற்கு இலாயக்கற்றுள்ளது.

மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), இலங்கையில் முதலாளித்துவத்தின் இரண்டு தூண்களில் ஒன்றாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்த கட்சியாகும்.

ஜே.வி.பி. 1960 களில் மாவோவாதம், குவேராவாதம் மற்றும் சிங்கள பேரினவாதத்தையும் கலந்த ஒரு தீவிரமான சித்தாந்தத்துடன் தீவின் தெற்கில் உள்ள கிராமப்புற ஏழைகளுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு ஒரு குட்டி முதலாளித்துவ தேசியவாத தீவிர இயக்கமாகத் தொடங்கிய ஜே.வி.பி, சர்வதேச அளவில் உள்ள மற்ற அனைத்து இயக்கங்களையும் போலவே, உற்பத்தியின் பூகோளமயமாக்கல் நிகழ்வுப் போக்கில் தங்களது இடது-தீவிர முகமூடிகளை களைந்துவிட்டு, ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக மாறிய முதலாளித்துவ ஸ்தாபகத்துடன் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டது.

கடந்த சில ஆண்டுகளாக, ஜே.வி.பி. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இரக்கம் காட்டத் தொடங்கியது. குறிப்பாக, புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து ஆங்காங்கே புலம்பிக் கொண்டிருந்தது.

ஆனால் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களை கண்மூடித்தனமாகக் கொன்ற போர்க்குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக ஜே.வி.பி. வெளிப்படையாக எடுத்துள்ள நிலைப்பாட்டின் மூலம், தமிழ் மக்கள் சம்பந்தமான பாசாங்கு இரக்கம் அடியில் போய், ஜே.வி.பி.யின் தோற்றத்திலேயே ஊறிப்போன சிங்களப் பேரினவாத பிற்போக்குத்தனத்தை மேல் மட்டத்துக்கு கொண்டுவந்துள்ளது. அதேபோல், மேற்கண்ட இரக்கம் தமிழ் வாக்குகளை கொள்ளையடிப்பதற்கான ஒரு சாக்குப்போக்கு என்பதும் தெளிவாகிறது.

ஜே.வி.பி.யின் போலி ஏகாதிபத்திய-விரோத வரலாற்றுப் பதிவு இதற்கு இரண்டாம் பட்சமானதல்ல.

2005 இல், அமெரிக்காவின் அழைப்பை ஏற்ற ஜே.வி.பி., கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு ஊர்ந்து சென்றது. தெற்காசியாவிற்கான அமெரிக்க துணை செயலாளராக இருந்த கிறிஸ்டினா ரொக்காவுடன் நடந்த அந்த சந்திப்பில் ஜே.வி.பி.யின் அப்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜே.வி.பி. தலைவர்களில் ஒருவரான விஜித ஹேரத்தும் பங்குபற்றினர். கொழும்பின் "பிரதான ஜனநாயக நீரோட்டத்தில்" சேருமாறு புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர்கள் அமெரிக்காவிற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அமரசிங்கவின் கையொப்பத்துடன் ரொக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதத்தில், அமெரிக்கா "கொடுங்கோன்மைக்கு எதிரான போரை", அதாவது புலிகளுக்கு எதிரான போரை ஆதரிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. வெட்கமின்றி கோரியது.

அமெரிக்க தலையீட்டின் உண்மையான நோக்கத்தை முற்றிலும் மூடி மறைத்து, 2004 சுனாமியின் போது, இலங்கைக்கு அமெரிக்க கடற்படை வீரர்கள் மேற்கொண்ட “மனிதாபிமான முயற்சிகளுக்கு” ஜேவிபி நன்றி தெரிவிப்பதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. யுத்தம் மற்றும் வர்த்தகத்திற்கும் ஒரு முக்கியமான மூலோபாய களமாக விளங்கும் இலங்கையிலும், ஒட்டுமொத்தமாக தெற்காசியாவிலும் அதன் இராணுவ ஆதிக்கத்தை பலப்படுத்துவதே வாஷிங்டனின் நோக்கமாகும்.

2015 இல் இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான அதன் திறந்த மற்றும் முழு ஆதரவும், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஜே.வி.பி. கொடுத்த முக்கியமான அனுசரணையாகும். போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வாஷிங்டனின் அழுத்தம் இருந்தபோதிலும், இராஜபக்ஷவின் சீனாவை நோக்கிய நகர்வை இனியும் அமெரிக்கா சகித்துக் கொள்ளாது என்ற நிலை வந்தபோது, இராஜபக்ஷைவை வெளியேற்றவும், அவரை அகற்றி தமக்குச் சார்பான ஆட்சியை ஸ்தாபிக்கவும் அது முடிவு செய்தது. சிறிசேன-விக்ரமசிங்க ஆட்சி வாஷிங்டனால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையின் மூலம் ஆட்சிக்கு வந்தது.

2015 முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில், சீனாவை முற்றுகையிடும் அமெரிக்க மூலோபாயத்தில் இலங்கை வேகமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் இலங்கையும் கையெழுத்திட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம், 2017 ஆம் ஆண்டில் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது. இதன் கீழ் இலங்கையின் நிலம், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலாக, சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில், அமெரிக்க மூலோபாய பணிகளை எளிதாக்கும் மற்றும் பலப்படுத்தும் இராணுவ நிலைப்படுத்தல் உடன்படிக்கை (சோஃபா) மற்றும் மில்லினியம் சேலன்ஜ் கோப்பரேஷன் (எம்.சி.சி) உடன்படிக்கை ஆகியவையும் தயாரிக்கப்பட்டன.

இருப்பினும், சிங்கள-பௌத்த இனவாதம், "தேசபக்தி" மற்றும் போலி ஏகாதிபத்தியத்தை-எதிர்ப்பையும் கலந்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, சோஃபா மற்றும் எம்.சி.சி. ஆகியவை நாட்டை "காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கைகள்" என்று விமர்சிக்கப்பட்டன.

2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற இராஜபக்ஷ அமைத்த புதிய அரசாங்கம், மேற் கூறிய இரண்டு ஒப்பந்தங்கள் சம்பந்தமாக காலங்கடத்துவது தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கவலையை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலைப்படுத்துவதற்காக கொழும்பு அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு முயற்சியையும், வாஷிங்டன் பொறுத்துக் கொள்ளாது என்றும், அவருக்கு எதிராக போர் குற்றச்சாட்டுகளை அது பயன்படுத்தும் என்றும், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது விதித்த பயணத் தடை மூலம் ஜனாதிபதி இராஜபக்ஷக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எரியும் போரின் மையமாக இலங்கையை கவர்ந்திழுக்க 2015இல் நடந்த ஆட்சி மாற்றத்திற்கு ஜே.வி.பி. கொடுத்த ஆதரவு அதன் ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்ச்சவடாலை நன்கு அம்பலப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய ஆட்சியின் ஏகாதிபத்திய-எதிர்ப்பின் போலித்தனம் அதிலிருந்து எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. இராஜபக்ஷ முகாம் வாஷிங்டனுடன் இணைந்து பணியாற்ற பலமுறை விருப்பம் காட்டியுள்ளது.

ஆனால், பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இராஜபக்ஷ ஆட்சி, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்த புறநிலை ரீதியாக நிர்பந்திக்கப்பட்டுள்ளது. அந்த தாக்குதல்களுக்கு எதிராக வேகமாக வளர்ந்து வரும் தொடர் வர்க்கப் போராட்டங்களை அடக்குவதற்கு, சர்வாதிகாரத்தை நோக்கி விரைவாக திரும்புவதைத் தவிர இராஜபக்ஷ ஆட்சிக்கு வேறு வழியில்லை. கோட்டாபய இராஜபக்ஷ ஒட்டுமொத்த சமூகத்தையும் இராணுவமயமாக்கி இதற்காகத் தயாராகி வருகிறார்.

அதற்காக, இராணுவத்தின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவது இராஜபக்ஷ ஆட்சிக்கு அவசியமாகியுள்ளது. அதனால்தான் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத் தளபதி தொடக்கம் இராணுவத்தின் குற்றவாளிகளைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

“தேசத்தின் பாதுகாவலர்கள்” என்ற யுத்தக் குற்றவாளி இராணுவத்துக்கு முண்டு கொடுத்து, தளபதி சவேந்திர சில்வா மீது வாஷிங்டன் விதித்த தடையை, “புலிகளின் சர்வதேச ஆதரவாளர்களின் அல்லது தமிழ் புலம்பெயர்ந்தோரின்” அழுத்தம் என மிகைப்படுத்தி, தமிழர் விரோத பிரச்சாரத்தை அரசாங்கம் முன்னணிக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னெடுத்த தமிழர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தை முறியடிக்கும் ஒரு பிரச்சாரத்தை, ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தல்களை இலக்கு வைத்து அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இராஜபக்ஷ முகாமினால் சிங்கள பேரினவாதம் மற்றும் "தேசபக்தி" ஆகிய கடும்பிற்போக்கு சித்தாந்தங்கள் தங்கள் கட்சியையும் விஞ்சி முன்னெடுக்கப்படுவது குறித்தே ஜேவிபி கவலை கொண்டுள்ளது.