காப் சதியின் பின்னர் 100 வருடங்கள்

சமூக ஜனநாயகக் கட்சி எவ்வாறு வலதுசாரிகளை ஆதரித்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 13, 1920 அன்று, ஒன்றரை வருடம் நீடித்திருந்த வைமார் குடியரசை ஒரு இராணுவச் சதி உலுக்கியது. இது, பேர்லினில் ஜேர்மன் இராணுவத்தின் தளபதியாக இருந்த ஜெனரல் வால்ட்டர் ஃவொன் லூட்விட்ஸ் (Walther von Lüttwitz) தலைமையில் இடம்பெற்றிருந்தது. இரவு பொழுதின்போது, லூட்விட்ஸ் அதன் மூர்க்கத்தனத்திற்கு இழிபெயர்பெற்ற ஏர்ஹார்ட் படைப்பிரிவுக்கு, தலைநகருக்கு புகுந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க உத்தரவிட்டார். அதிகாலையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பீதியில் தப்பி ஓடிவிட்டனர். சதிகாரர்கள் பின்னர் கிழக்கு பிரஷ்யாவின் நிலச்சுவாந்தர்களின் பரம பிற்போக்கு பிரதிநிதியான வொல்ப்காங் காப் (Wolfgang Kapp) இனை குடியரசின் சான்சிலராக நியமித்தனர்.

பேர்லினில் சதிகாரர்கள் (Bundesarchiv, Bild 146-1970-051-65 / Haeckel, Otto / CC-BY-SA 3.0)

காப் நான்கு நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருக்க முடிந்தது. ஜேர்மனியில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொது வேலைநிறுத்தத்தால் அவர் வீழ்த்தப்பட்டார். மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்ததத்தில் ஈடுபட்டு, நாட்டை ஸ்தம்பிக்கச்செய்து, ஆயுதங்களைப் கையிலெடுத்து, எதிர்ப்புரட்சிகர இராணுவ பிரிவுகளுக்கு எதிராக கசப்பான போராட்டதை நடத்தினர்.

காப் சதியானது ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தினால் மட்டும் ஆர்வத்திற்குரியதல்ல. மாறாக ஜேர்மன் முதலாளித்துவம் மீண்டும் இராணுவவாதத்திற்கு திரும்பும் ஒரு நேரத்தில், ஒரு வலதுசாரி தீவிரவாதக் கட்சி ஒன்று கூட்டாட்சி நாடாளுமன்றத்திலும் அனைத்து மாநில நாடாளுமன்றங்களிலும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகையில், மேலும் தீவிர வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல்கள் அரசு அமைப்புக்குள்ளும் இராணுவத்திற்குள்ளும் தடையின்றி செயல்படுகையில் இது எரியும் சமகால முக்கியத்துவம் கொண்டதாகும். வைமார் குடியரசின் ஸ்தாபித்தத்துடன், ஜேர்மன் முதலாளித்துவம் ஜனநாயகத்தையும் அறிவொளிமயமாக்கலின் மதிப்புக்களையும் நோக்கி திரும்பியது என்ற கட்டுக்கதையை இது இல்லாதொழிக்கிறது.

பாசிச குழுக்கள், இராணுவம் மற்றும் ஸ்தாபகக் கட்சிகளின் குறிப்பிடத்தக்க பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு சதித்திட்டத்தின் விளைவாகவே காப் சதி இருந்தது. 1918-19 இன் தொழிலாளர்களதும் சிப்பாய்களதும் புரட்சியை இரத்தக்களரியாக அடக்கியதிலிருந்து, 1920 இல் காப் சதி வரையும் மற்றும் 1933 ஜனவரியில் ஹிட்லரின் அதிகாரத்திற்கு வந்ததற்கும் இடையில் தொடர்ச்சியான ஏராளமான அமைப்புரீதியான, அரசியல் மற்றும் தனிப்பட்ட இழைகள் தொடர்ச்சியாக நீண்டுசெல்கின்றன.

இந்த சதி, குடியரசை வெளிப்படையாக எதிர்த்த வலதுசாரி மற்றும் பழமைவாத கட்சிகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. மிகவும் மிதவாத முதலாளித்துவக் கட்சிகளும், சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) இதில் தொடர்புபட்டுள்ளன. இந்த கட்சிகள் தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவத்துடனும் மற்றும் பாசிச துணை இராணுவப்படை (Freikorps) குழுக்களுடன் நெருக்கமாக பணியாற்றின. பொது வேலைநிறுத்தத்தால் சதியாளர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்ட சமூக ஜனநாயகக் கட்சி, பொது வேலைநிறுத்தத்தை அடக்குவதற்கு இதே சதியாளர்களை பயன்படுத்தியது.

மூன்றாம் குடியரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், தொடர்ச்சியான இந்த இழைகளின் தொடர்புகள் உடைக்கப்படவில்லை. அவை வெறுமனே ஒரு ஜனநாயக மூடுதிரையின் பின்னால் மறைக்கப்பட்டன. பழைய குழுக்கள் தொடர்ந்து இருந்தன, ஏராளமான மாநில அதிகாரிகள், அதிகாரிகள், நீதிபதிகள், பேராசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மரண தண்டனைகளை செய்தவர்கள் அல்லது இதுபோன்ற குற்றங்களுக்கு கூட்டாளிகளாக இருந்தவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையை தடையின்றி தொடர முடிந்தது. இன்று, ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஒரு ஆக்கிரோஷமான பெரும் சக்தி வெளியுறவுக் கொள்கைக்குத் திரும்புவதோடு, வர்க்க பதட்டங்களும் தீவிரமடைந்து வருவதுடன் சேர்ந்து, இந்த ஜனநாயக மூடுதிரை தோலுரிக்கப்படுகின்றது.

சதி, சூழ்ச்சி மற்றும் குற்றத்திற்கான ஜேர்மன் முதலாளித்துவத்தின் தகமையைப் பற்றி எந்தவொரு மாயையையும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் எவரும், காப் சதி மற்றும் வைமார் குடியரசின் வரலாற்றை அவசியம் படிக்க வேண்டும்.

காப் சதி

காப் சதியின் உடனடி தூண்டுதலால், ஜேர்மனியின் இராணுவத்தினரை 400,000 இலிருந்து 100,000 ஆக குறைக்கவேண்டி இருந்தது. இது ஜூன் 1919 வேர்சாய் உடன்படிக்கையின் படி மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதில் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்டு இராணுவத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர பாசிச துணை இராணுவப்படையும் (Freikorps) அடங்கும்.

பேர்லினில் மார்ச் 13 ஏஹார்ட் கடற்படை பிரிவின் அங்கத்தவர்கள் அணிவகுத்து செல்கின்றனர் (Bundesarchiv, Bild 183-R16976 / CC-BY-SA 3.0)

குஸ்டாவ் பெளவரின் கீழ் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசாங்கம், பெரும்பான்மை சமூக ஜனநாயகவாதிகள், கத்தோலிக்க மையக் கட்சி மற்றும் தாராளவாத ஜேர்மன் ஜனநாயகக் கட்சி (DDP) ஆகியவற்றின் கூட்டணி, நட்பு நாடுகளின் அழுத்தத்தின் கீழ் பல துணை இராணுவப்படை பிரிவுகளை கலைக்கும் அதன் நோக்கத்தை சுட்டிக்காட்டியது. இதனை ஏர்ஹார்ட் படைப்பிரிவு ஜெனரல் லூட்விட்ஸ் எதிர்த்தார். அவர் பதவி நீக்கப்பட்ட பின்னர், அவர் எழுச்சிக்கு ஆதரவளிக்க முடிவுசெய்து, பேர்லினுள் அணிவகுத்துச் செல்லுமாறு ஏர்ஹார்ட் படைப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.

சதியானது நீண்ட காலமாக தயாரிக்கப்பட்டதோடு இராணுவத்திற்குள்ளும் பரந்த ஆதரவை அனுபவித்தது. இராணுவ மந்திரி குஸ்டாவ் நொஸ்க (SPD) மிக உயர்ந்த பதவியில் இருந்த ஜெனரல் ஹான்ஸ் வொன் சீக்ட் (Hans von Seeckt) ஐ அரசாங்கத்தை பாதுகாக்குமாறு உத்தரவிட்டபோது, சீக்ட் அந்த உத்தரவை மறுத்துவிட்டார்.

குடியரசுத்தலைவர் ஃபிரீட்ரிச் ஏபேர்ட்டும் அரசாங்கமும் பின்னர் டிரெஸ்டனுக்கு (Dresden) தப்பிச் சென்றனர். அங்கு, “சிப்பாய்கள் மீது சிப்பாய்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம்” என்ற குறிப்புடன் ஜெனரல் Georg Maercker இடமிருந்து பாதுகாப்பைக் கோரினர். ஆனால் அவர் ஏற்கனவே பேர்லினில் இருந்து தந்தி மூலம் ஒரு உத்தரவைப் பெற்றிருந்தார். அதில் அரசாங்க உறுப்பினர்களை பாதுகாப்புக் காவலில் வைக்குமாறு கூறப்பட்டிருந்தது. அவ்வாறு செய்யக்கூடாது என்று அவருக்கு அதிக வற்புறுத்தல் தேவைப்பட்டது. மோதல் தொடர்ந்து ஸ்ருட்கார்ட் நகருக்கு சென்றது.

"சதிகாரர்களுக்கு பெரிய தொழிலதிபர்கள் மற்றும் பெரிய நில உரிமையாளர்களின் அனுதாபமும் ஜேர்மன் தேசியவாத மற்றும் வலதுசாரி மக்கள்வாத [Volkish] படைகளின் வெளிப்படையான ஆதரவும் இருந்தது" என்று ஹன்ஸ் மொம்சன் (Hans Mommsen) எழுதினார்.[1] அவர்கள் அனைவரும் பெளவர் அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட வேர்சாய் உடன்படிக்கையை எதிர்த்ததுடன் மற்றும் உள்நாட்டு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கும் வெளிநாட்டில் ஆக்கிரமிப்பு கொள்கையை பின்பற்றுவதற்கும் ஒரு சர்வாதிகார ஆட்சியை உருவாக்க முயன்றனர்.

லூட்விட்ஸ் மற்றும் காப் ஆகியோருடன் சேர்ந்து, சதித்திட்டத்தில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்க்னெக்ட் ஆகியோரை 1919 ஜனவரியில் கொலை செய்ய உத்தரவிட்ட தளபதி வால்டெமார் பாப்ஸ்ட் (Valdemar Pabst) உம் உள்ளடங்கியிருந்தார். “கிளர்ச்சி இயக்கத்தின் உந்துசக்தி, அக்டோபர் 1919 இல் பேர்லினில் எரிக் லுடென்டோர்ஃப் இன் ஆதரவுடன் நிறுவப்பட்ட தேசிய சங்கமாகும்” என்று ஹென்றிச் அகுஸ்ட் விங்லர் (Heinrich August Winkler) எழுதினார் [2]. ஹிண்டன்பேர்க்குடன், எரிக் லூடென்டோர்ஃப் முதலாம் உலகப் போரின் முடிவில் மிகவும் செல்வாக்கு மிக்க ஜேர்மன் தளபதியாக இருந்தார். இவர் காப் சதியின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அடோல்ப் ஹிட்லருடன் சேர்ந்து மூனிச் நகரில் Beerhall சதிக்கு தலைமை தாங்கினார்.

வொல்ப்காங் காப்

வொல்ப்காங் காப்

காப் ஹிட்லருடனும் உறவு கொண்டிருந்தார். கிழக்கு பிரஷ்யாவின் மாநில முதல்வர் 1917 ஆம் ஆண்டில் ஜேர்மன் தந்தைநாட்டு கட்சியை (DVP) நிறுவினார், யுத்தத்தின் ஒரு கட்டத்தில் யுத்தத்திற்கு ஆதரவுக்காக சமூக ஜனநாயகக் கட்சி உடைந்து போகத் தொடங்கியதுடன் மற்றும் இணைப்புகள் இல்லாமல் சமாதானத்திற்கான அழைப்புகள் எழுப்பப்பட்டன. எதிர்ப்புத் தெரிவுக்கும் தொழிலாளர்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாள வர்க்கக் கூட்டங்களுக்கு எதிராக இரக்கமற்ற இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுடனான வர்க்க உடன்பாட்டை முறியடிப்பதே DVP இன் குறிக்கோளாக இருந்தது. அதே நேரத்தில், அக்கட்சி யூத-விரோதம், தேசியவாதம் மற்றும் மக்கள்வாத கருத்தியலை பயன்படுத்தி ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்காக பாராளுமன்றத்திற்கு எதிரான பரந்த இயக்கம் ஒன்றினை கட்டியமைக்க முயன்றது.

காப்பின் கட்சி ஒருபோதும் வெகுஜன ஆதரவைப் பெறவில்லை, அது ஒரு வருடம் கழித்து கலைக்கப்பட்டது. ஆனால் அது இராணுவ மற்றும் பெருவணிகத்தின் வலுவான ஆதரவைப் பெற்றது. காப்புடன் தலைவரான Grand Admiral Alfred von Tirpitz மற்றும் மெக்லென்பேர்க் நகரின் Duke Johann Albrecht கௌரவ தலைவராக பணியாற்றினர். பல முன்னணி தொழிலதிபர்களும் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர், மேலும் அவர்கள் நிதி ஆதரவுக்கான முக்கியமான ஆதாரமாக பணியாற்றினர். இவர்களில் Max Roetger (முன்னர் Krupp இன் மற்றும் பின்னர் தொழில்துறைக்கான ஒரு பரப்புரையாளர்), Carl Duisberg (Bayer AG and IG Farben), Wilhelm (Siemens,), Carl Ziese (கப்பல்கட்டுதல்), Ernst von Borsig (உருக்கு மற்றும் அலுமினியத்துறை), Hugo Stinnes (மற்றும் இலத்திரினியல்), Emil Kirdorf (நிலக்கரி), Alfred Hugenberg (ஊடகம்), Freiherr von Wangenheim (விவசாயம் மற்றும் வர்த்தகம்), Johann Christian Eberle (பிராந்திய சேமிப்பு வங்கிகள்) Hermann Röchling (Völklinger இரும்பு ஆலை) ஆகியோரும் அடங்குவர்.

காப்பின் நெருங்கிய கூட்டாளர்களில் ஒருவரான கார்ல் மையர் (Karl Mayer), ஹிட்லரை இராணுவத்தின் புலனாய்வு அமைப்பில் தகவலறிந்தவராக நியமித்து, அவருக்கு போல்ஷிவிக் எதிர்ப்பு கிளர்ச்சியைக் கற்றுக் கொடுத்து, மேலும் அவரை ஒரு அரசியல் திறமைசாலியாக உயர்த்தினார். முன்னர் பெரிதும் அறியப்படாத தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியை (NSDAP) நிறுவிய ஹிட்லர், எழுச்சிக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் பேர்லினுக்குப் பறந்தார். ஆனால் தோல்வியடைந்தது என்பது தெரிந்ததும் விரைவாகத் திரும்பினார்.

செப்டம்பர் 1920 இல், காப் ஸ்வீடனுக்கு தப்பிச் சென்றபின், மையர் ஒரு நண்பருக்கு பின்வருமாறு எழுதினார், “நான் மிகவும் திறமையான சில இளைஞர்களை அணிதிரட்டினேன். உதாரணமாக, ஒரு திரு. ஹிட்லர் ஒரு சக்திவாய்ந்த சக்தியாக, முதல் தரமான பொது பேச்சாளராக உருவெடுத்துள்ளார். முனிச் பிராந்திய குழுவில் எங்களிடம் 2,000 உறுப்பினர்கள் உள்ளனர், அதேசமயம் 1919 கோடையில் எங்களிடம் 100 பேர் கூட இருக்கவில்லை”. [3]

Gustav Noske and Walter Lüttwitz (Bundesarchiv, Bild 183-1989-0718-501 / CC-BY-SA 3.0)

அரசாங்க தரப்பிலிருந்து ஆதரவு

சதிகாரர்களுக்கான ஆதரவு அல்லது குறைந்தபட்சம் அவர்களுடன் ஒரு உடன்பாட்டை அடைய விருப்பம், அரசாங்க முகாமில் இருந்து ஆழமாக நீட்டப்பட்டது. ஹன்ஸ் மொம்சன் ஒரு முடிவுக்கு வந்தார்: "பொது வேலைநிறுத்தம் இல்லாமல், சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள குழுக்களுக்கும் பாராளுமன்ற சக்திகளுக்கும் இடையே ஒரு சர்வாதிகார பாணியிலான சமரசம் எட்டப்பட்டிருக்காது." [4]

ஜனாதிபதி பிரீட்ரிக் ஏபேர்ட் மற்றும் இராணுவமந்திரி குஸ்டாவ் நொஸ்க ஆகியோர் சதியாளர்களிடமிருந்து தலைமறைவாக தப்பி ஓட வேண்டியிருந்தது என்பது வரலாற்று முரணாக காட்சியளிக்காமல் இருக்கவும் இல்லை. இந்த இரண்டு சமூக ஜனநாயகவாதிகள் இப்போது அவர்களைப் பின்தொடரும் அசுரனை உருவாக்கியிருந்தனர்.

நவம்பர் 1918 இல், தொழிலாளர்கள் மற்றும் படையினர் கைசரின் ஆட்சி, உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் தொழில்துறை உடைமையாளர்களுக்கு எதிராக எழுந்தனர். கீல் நகரில் ஒரு ஆரம்ப எழுச்சியின் பின்னர், தொழிலாளர்கள் மற்றும் படையினரின் சபைகள் நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. ஆனால் பழைய சக்தியை நிராயுதபாணியாக்குவதற்காக நூறாயிரக்கணக்கான ஆயுதப் புரட்சியாளர்களிடமிருந்து ஒரு புதிய குடியரசுக் காவலரை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏபேர்ட் மற்றும் நொஸ்க தங்களை இராணுவத்துடன் இணைத்துக் கொண்டு, முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதற்கும், இரத்தக்களரியாக அடக்குவதற்கும் சமூகத்தின் அழுக்குகளை அணிதிரட்டினர்.

நொஸ்க ஒரு மோப்பம்பிடிக்கும் வேட்டைநாயின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். வலதுசாரி தீவிரவாத துருப்புக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதுடன், மேலும் லுக்செம்பேர்க் மற்றும் லீப்க்னெக்ட் ஆகியோரைக் கொலை செய்ய உத்தரவிட்டார். 1918 ஆம் ஆண்டில் பேர்லினிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தற்காலிக இராணுவத்தின் உயர் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், தனது பதவிக்கு ஏபேர்ட் மற்றும் நொஸ்க விற்கு சதியின் தலைவர் வான் லூட்விட்ஸ் நன்றி தெரிவித்தார். ஜனவரி 1919 இல், லூர்ட்விட்ஸ் ஸ்பார்டகுஸ் எழுச்சியை நசுக்க வழிவகுத்தார்.

ஏபேர்ட் மற்றும் நொஸ்க ஆகியோர் காப் சதியில் இருந்து தப்ப தலைமறைவாக இருந்தபோது, சதிகாரர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக மற்ற அரசாங்க பிரதிநிதிகள் பேர்லினில் தங்கியிருந்தனர். துணை சான்சிலரும் நீதி அமைச்சருமான ஒய்கென் ஷிஃப்பர் (DDP) அவர்களுக்கு சமூக ஜனநாயகக் கட்சி பிரஷ்ய அமைச்சர்களான வொல்ப்காங் ஹெய்ன் (Wolfgang Heine) மற்றும் ஆல்பர்ட் சூடெகும் (Albert Südekum) ஆகியோரின் முன்னிலையில் பெரும் சலுகைகளை வழங்க முன்வந்தார். இதில் புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைத்தல் மற்றும் எதிர்காலத்தில் புதிய தேர்தல்கள் ஆகியவை அடங்கும்.

குஸ்டாவ் ஸ்ட்ரெஸமானின் தேசிய-தாராளவாத ஜேர்மன் மக்கள் கட்சி (DVP) பெருமளவில் சதியாளர்களை ஆதரித்ததுடன், தற்போதுள்ள அரசாங்கத்தை "நாங்கள் ஆதரிக்கும் வழமையான வளர்ச்சியின் பாதையிலிருந்து உடைத்துவிட்டது" என்று குற்றம் சாட்டியது.

பொது வேலைநிறுத்தம்

ஆனால், ஆட்சி கவிழ்ப்பிற்கு நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துடன் பதிலளித்த தொழிலாள வர்க்கத்தின் பிரதிபலிப்பை சதியாளர்கள் அல்லது அவர்களது உடந்தையாளர்கள் யாரும் கணக்கிடவில்லை. அரசாங்க பிரதிநிதிகள் கோழைகளைப் போல மலைகளுக்கு ஓடினார்கள் அல்லது சதியாளர்களுடன் சமரசம் செய்ய முயன்றபோது, தொழிலாளர்கள் தீவிர வலதுசாரி கிளர்ச்சியை எதிர்த்து தங்கள் உயிரைக் கொடுத்தனர். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக விமான குண்டுவீச்சு மற்றும் கனரக இயந்திர துப்பாக்கிகளைப் பயன்படுத்தி டஜன் கணக்கான நிராயுதபாணிகளை சுட்டுக் கொன்ற கடும் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினருக்கு அவர்கள் பயப்படவில்லை.

Soldiers from one of General von Lüttwitz's brigades (BArch, Bild 183-J0305-0600-003)

அரசாங்கம் டிரெஸ்டனுக்கு தப்பி ஓடுகையில், பொது வேலைநிறுத்தத்திற்கான முதல் அழைப்பை அரசாங்க செய்தித் தொடர்பாளர் உல்ரிச் ரோஷர் (SPD), ஏபேர்ட் மற்றும் SPD தலைவர் ஓட்டோ வெல்ஸ் பெயரில் வெளியிட்டார். ட்ரெஸ்டனுக்கு வந்தபின், ஏபேர்ட் உடனடியாக பொது வேலைநிறுத்த அழைப்பிலிருந்து விலகிவிட்டார். அதே நேரத்தில் அதிபர் குஸ்டாவ் பெளவர் அதை ஒரு "புரளி" என்று விவரித்து, அதற்கான எந்தப் பொறுப்பையும் அவர் ஏற்கவில்லை. ஆனால் பொது வேலைநிறுத்தத்தை இன்னும் நிறுத்த முடியவில்லை. வேலைநிறுத்தம் பரவியுள்ள வேகத்தை பொறுத்தவரையில் ரோஷர் இன் அழைப்பு எந்த பங்காவது வகித்திருக்குமா என்பது கேள்விக்குரியதே.

முந்தைய காலகட்டத்தின் கசப்பான அரசியல் போராட்டங்களுக்கு மத்தியிலும், சமூக ஜனநாயகக் கட்சியினதும் சுதந்திர சமூக ஜனநாயகவாதிகளினதும் (USPD), ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியினதும் (KPD) மற்றும் கிறிஸ்தவ மற்றும் அராஜகவாத போக்குகளின் உறுப்பினர்கள் தீவிர வலதுசாரி ஆபத்துக்கு எதிராக ஒன்றாக நின்று போராடினர். "வேலைநிறுத்தக்காரர்கள் காப் சதியை இராணுவ மற்றும் அரசு அதிகாரத்துவத்தினுள்ளும் குடியரசுக் கட்சி எதிர்ப்பு கருவிகளை அழிப்பதில் புரட்சியின் தோல்வியின் அறிகுறியாகக் கருதினர்" என்று மோம்சன் எழுதினார். [5]

இது பொது வேலைநிறுத்தத்தை ஆதரிக்க பொது ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு (ADGB) மற்றும் அதன் பழமைவாத SPD தலைவர் கார்ல் லெஜியன் Carl Legien ஆகியோரை கட்டாயப்படுத்தியது. "கிறிஸ்தவ மற்றும் தாராளவாத குழுக்களை உள்ளடக்கிய பரவலான ஒற்றுமை, தொழிலாளர்களின் பார்வையில் அதனது அனைத்து நம்பகத்தன்மையையும் இழக்காதிருக்க அதன் வழமையான பின்னடிக்கும் பழக்கவழக்கத்தைக் கைவிடுமாறு ADGB ஐ கட்டாயப்படுத்தியது," என்று மொம்சன் குறிப்பிட்டார்.

ஸ்பார்டகுஸ் லீக் மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரும், ஜேர்மன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு முக்கிய நபருமான ஒஸ்கார் ஹிப்ப (Oskar Hippe) இன் நினைவுகூரல்களில் சில பிராந்தியங்களில் நடந்த மோதல்கள் எவ்வளவு கசப்பானவையாக இருந்தன என்பது பற்றிய குறிப்புகள் வழங்கப்படுகிறது. சதி நடந்த ஹால-மெர்சபேர்க்கில் ஒரு தொழில்துறை தொழிலாளியாக அவர் இப்போது இருந்தார்.

மார்ச் 13, 1920 மாலையில், அரசாங்கம் தூக்கியெறியப்பட்டதாகவும், Freikorps (துணை இராணுவப்படை) மற்றும் இராணுவ பிரிவுகள் பேர்லினுக்கு அணிவகுத்து வரும் செய்தியை அவர் கேட்டார். அன்று மாலை, USPD மற்றும் KPD குழுத்தலைவர்கள் ஒரு "தோழர் ஸைப்னர்" தலைமையில் கூடி என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். அங்கு வந்தவர்களில் பலர், பெரும்பான்மை சமூக ஜனநாயகவாதிகள் துரோகங்களுக்காக தங்கள் விலையை பெறுகிறார்கள் என்று கருதினர். ஆனால் பெரும்பான்மையானவர்கள் இப்போது முன்வைத்துள்ள பிரச்சினை முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக தளபதிகளால் முன்வைக்கப்படும் சதியை எதிர்ப்பதே என கருதினர்.

அன்று மாலை வேலைநிறுத்தத்தை அழைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இரவு நேரங்களில், தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் சகாக்கள், குழுத்தலைவர்களுடன் சேர்ந்து, தொழிற்சாலைகளுக்குச் சென்று நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தனர்.

சதியாளர்களுடன் பக்கபலமாக இருந்த இராணுவப் பிரிவுகளை தொழிலாளர்கள் எவ்வாறு எதிர்த்துப் போராடி நிராயுதபாணியாக்கினர் என்பதை ஹிப்ப பின்வருமாறு விவரித்தார்:

நான் எனது ஒன்றுவிட்ட சகோதரனுடன் ஒரு பிரிவில் இருந்தேன். சுமார் 15,000 தொழிலாளர்கள் முகாம்களை சுற்றி வளைத்தனர். எங்களிடம் ஒரு சில ஆயுதங்கள் மட்டுமே இருந்தன. ஒரு சில குறுகியதுப்பாக்கிகள் மற்றும் வேட்டையாடும் துப்பாக்கிகளை நாங்கள் விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்திருந்தோம். ஆனால் அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. கூடியிருந்த படையினரை தங்கள் ஆயுதங்களை கீழே போடுமாறு போராடும் தலைவர்கள் அழைத்ததை படைகளின் அதிகாரிகள் நிராகரித்தனர். நாங்கள் அவர்களின் தண்ணீரை துண்டித்த பின்னரே அவர்கள் கைவிட்டனர். மேலும் போராடும் தலைவர்கள் ஆயுதங்கள் இல்லாமல் பின்வாங்க முடியும் என்று அவர்களுக்கு உறுதியளித்தனர்…

மெர்சபேர்க்கில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களினால் நான்கு பிரிவுகள் ஆயுதம் தாங்கியிருந்தன. போரின் போது ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொண்ட இளம் தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டனர். எங்கள் பிரிவு பெரும்பாலும் "சிசிலி," "எலிசபெத்" மற்றும் "லியோன்ஹார்ட்" சுரங்கங்களில் இருந்து ஒருவருக்கொருவர் நன்கு அறிந்த தொழிலாளர்களால் ஆனது. ... (சரமாரியாக) நாங்கள் 7.5 சென்டிமீட்டர் குண்டுகளால் சுடப்பட்டோம், எங்கள் இழப்புகள் கடுமையாக இருந்தன. “சிசிலி” சுரங்கத்தில் பணிபுரிந்த இளம் கம்யூனிஸ்ட் சங்கத்தின் தோழர் ஒருவர் எனக்கு அடுத்தபடியாக பலத்த காயமடைந்தார். ஒரு கையெறி குண்டு துண்டினால் அவரின் நாடி கிழிந்தது. [6]

டோர்ட்மூண்டில் உள்ள Red Ruhr இராணுவ உறுப்பினர்கள்

ரூஹ்ர் பிராந்தியத்தில் இரத்தக்களரியான மோதல் ஏற்பட்டது. இந்த பகுதியில் உள்ள எஃகு ஆலைகள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் பொது வேலைநிறுத்தம் மிகவும் கடுமையாக மேற்கொள்ளப்பட்டது. அது விரைவாக ஒரு எழுச்சியாக வளர்ந்தது. இராணுவத்தையும் மற்றும் Freikorps (துணை இராணுவப்படை பிரிவு) இனையும் வெளியேற்ற தொழிலாளர்கள் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டனர். சதியாளர்கள் மீது பெரும் இழப்பை ஏற்படுத்திய "சிகப்பு ரூஹ்ர் இராணுவம்" சுமார் 50,000 உறுப்பினர்களை ஈர்த்தது. சிகப்பு ரூஹ்ர் இராணுவத்திற்கு மத்திய தலைமை அல்லது அரசியல் முன்னோக்கு இல்லை. சிண்டிகலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், சுதந்திர சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் சில சமூக ஜனநாயகவாதிகள் கூட அதன் மீது அரசியல் ஆதிக்கத்தை செலுத்தினர்.

“ஒழுங்கிற்கு” திரும்புதல்

பொது வேலைநிறுத்தம் சதியாளர்களை தனிமைப்படுத்தியது. இரயில் பயணம் இல்லை, தொலைபேசி இல்லை, தபால் சேவை இல்லை, செய்தித்தாள்கள் இல்லை. முக்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தலைநகரில் தண்ணீர், எரிவாயு மற்றும் மின்சாரம் கூட துண்டிக்கப்பட்டது. இராணுவத் தலைமையின் பெரும்பான்மையானவர்கள் காப் மீது அனுதாபம் கொண்டிருந்தாலும், அது முடிவின் நிச்சயமற்ற தன்மையால் காத்திருந்து பார்க்கும் அணுகுமுறையை பின்பற்றியது. மூத்த அரசு அதிகாரிகள் புதிய அரசாங்கத் தலைவருக்கு அடிபணிய தயங்கினர்.

மார்ச் 17, 1920 அன்று, காப் ஒரு இரட்டை இறக்கை விமானத்தில் ஸ்வீடனுக்கு தப்பி ஓடினார். லூட்விட்ஸ் ஒரு இராணுவ சர்வாதிகாரியாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டார். ஆனால் நீதி அமைச்சர் ஷிஃப்பர் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கிய பின்னர் அவர் மாலை இராஜினாமா செய்தார். அவர் லுடென்டோர்ஃப் உடன் குடியரசு அதிபர் அலுவலகத்திலிருந்து வெளியேறினார். ஏர்ஹார்ட் படையணியும் பேர்லினிலிருந்து பின்வாங்கியது. அவ்வாறு வெளியேறும்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மற்றொரு இரத்தக்களரி படுகொலைகளை மேற்கொண்டது.

பழைய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் திருப்தி அடையவில்லை. எதிர் புரட்சிகர இராணுவ மற்றும் அதிகாரத்துவ எந்திரங்கள் அகற்றப்படும் என்பதற்கான உத்தரவாதங்களை அவர்கள் கோரினர்.

பொது வேலைநிறுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, ADGB தலைவர் லெஜியன் ஒன்பது அம்ச திட்டத்தை அரசாங்கத்திற்கு வழங்கினார். இராணுவ மந்திரி நொஸ்கவின் இராஜிநாமா, சதிக்கு அனுதாபம் காட்டிய பிரிவுகளை கலைத்தல், சதியாளர்களுக்கு தண்டனை, குடியரசுக் காவலர் படைப்பிரிவுகளை உருவாக்குதல், பெரும் சமூக சீர்திருத்தங்களை அமுல்படுத்துதல், நிலக்கரி சுரங்கங்களை தேசியமயமாக்குதல் மற்றும் "தொழிலாளர் அரசாங்கத்தின்" உருவாக்கம் ஆகியவற்றை அது கோரியது. இதன் உண்மையான அர்த்தம் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தில் பங்கெடுப்பதையே குறிக்கிறது.

மொம்சனின் கூற்றுப்படி லெஜியனின் முன்முயற்சி, "வேலைநிறுத்தம் இடதுசாரி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற விருப்பத்தால் பிரத்தியேகமாக தந்திரோபாயமாகவும் உந்துதலாகவும் இருந்தது." அரசாங்கம் கையளவிலான உறுதியற்ற வாக்குறுதிகளை அளித்தது மற்றும் தொழிற்சங்கத் தலைமையிலான வேலைநிறுத்தக் குழு மார்ச் 20 அன்று பொது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்தது. இருப்பினும், பல வேலைநிறுத்தக்காரர்கள் இந்த அழைப்பைப் பின்பற்ற மறுத்துவிட்டனர்.

Hans von Seeckt and Otto Geßler (Bundesarchiv, Bild 102-10883 / CC-BY-SA 3.0)

வெறுக்கப்பட்ட நொஸ்க மார்ச் 20 அன்று இராஜினாமா செய்தார். அவரை மார்ச் 26 அன்று பெளவரின் முழு அமைச்சரவையும் பின்பற்றியது. அதே கட்சிகளைக் கொண்ட ஒரு புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது, ஹெர்மான் முல்லர் அதிபராக இருந்தார். காப் சதிக்கு எதிராக அரசாங்கத்தை பாதுகாக்க மறுத்த அதே தளபதியான ஹான்ஸ் வான் சீக்டை முல்லர் ஆயுதப்படைகளின் தலைவராக நியமித்தார். வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொழிற்சங்கங்களின் அழைப்பைப் பின்பற்ற மறுத்த தொழிலாளர்களை இரத்தக்களரியாக அடக்கும் பணி சீக்டுக்கு வழங்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் புரட்சிகர தொழிலாளர்களின் மீதான இரத்தம்தோய்ந்த ஒடுக்குமுறைகளை மேற்பார்வை செய்யவிருந்ததுடன் இராணுவத்தை கட்டுப்படுத்தமுடியாத அரசுக்குள் ஒரு அரசாக மாற்றினார்.

நொஸ்கவுக்கு பதிலாக, புதிய அமைச்சரவையில் இராணுவத்திற்கான பொறுப்பு DDP யின் ஓட்டோ ஹீஸ்லருக்கு (Otto Geßler) வழங்கப்பட்டது. அவர் எட்டு ஆண்டுகளாக பல்வேறு அதிபர்களின் கீழ் இந்த பதவியில் இருந்து, சீக்ட்டுக்கு ஒரு திரைமறைப்பாக பணியாற்றினார். அவர் ஹீஸ்லரை "வெறும் குடிமகன்" என்று நிராகரித்தார்.

சிகப்பு ரூஹர் இராணுவத்தை கலைத்தல்

பொது வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான மிகவும் நீடித்த எதிர்ப்பு, சிவப்பு ரூஹ்ர் இராணுவத்திலிருந்து வந்தது. இது இராணுவத்தையும் மற்றும் Freikorps (துணை இராணுவப்படை பிரிவு) இனையும் ரூஹர் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றியது. பின்னர் டுயிஸ்பேர்க் நகரில் இருந்து தப்பி ஓடிய ஒரு அதிகாரி, “போர் அனுபவம்கொண்ட அதிகாரிகள் கூட இதுபோன்ற எதையும் அனுபவித்ததில்லை. துருப்புக்கள் வீடுகளிலிருந்தும், பாதாள அறைகளிலிருந்தும், குப்பைகளிலிருந்தும், மரத்தின் கிளைகளிலிருந்தும், கொதிகலன் அறைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கூட தொடர்ந்து சுடப்பட்டன” என தெரிவித்தார்.

முழுமையான வன்முறையை நாடுவதற்கு முன்னர் இயக்கத்தை பிளவுபடுத்த அரசாங்கம் ஒரு சமூக ஜனநாயகவாதியை அனுப்பியது. ரூஹர் பிராந்தியத்திற்கான குடியரசின் ஆணையாளரும், அதன்பின்னர் பிரஷ்யாவின் உள்துறை அமைச்சருமான கார்ல் செவரிங், மார்ச் 24 அன்று பீல்ஃபெல்ட் நகரில் உள்ள தொழிலாளர் கட்சிகளுடன் ஒரு ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டார். இது பேர்லினில் அரசாங்கம் வெறும் நிகழ்ச்சிக்காக ஏற்றுக்கொண்டது. அமுலாக்க ஆணையர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் கூட்டு மேற்பார்வையின் கீழ் ஆயுதமேந்திய தொழிலாளர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிடுமாறு கட்டாயப்படுத்தியது. மிதவாத கூறுகள் இதனை ஒப்புக்கொண்டபோதும் மிகவும் தீவிரமான பிரிவினர் போராட்டத்தை தொடர்ந்தனர்.

பீல்ஃபெல்ட் ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஒஸ்கார் ஹிப்பே பின்வருமாறு அறிவித்தார்:

இதற்கிடையில், பீலஃபெல்டில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டதாக எங்களுக்கு ஒரு அறிக்கை கிடைத்தது, அதில் அரசாங்கம் சதியாளர்களை நீதிமன்றங்களுக்கு ஒப்படைக்கவும், தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் மூலம் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கையில் தீர்க்கமான செல்வாக்கை வழங்கவும் உறுதியளித்தது. ஆனால் இதற்கான முன் நிபந்தனை பொது வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

சண்டைப் பிரிவுகளின் தலைமையிலும், KPD மற்றும் USPD இன் அரசியல் குழுவிலும், இதில் தொழிலாளர் ஆணையாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர், பீலஃபெல்ட் ஒப்பந்தத்திற்கு தலைவணங்கலாமா அல்லது போராட்டத்தை வெற்றிகரமான முடிவுக்கு தொடரலாமா என்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன. USPD யால் பெரும் பெரும்பான்மையுடன் ஆதிக்கம் செலுத்திய அரசியல் குழு, ஒப்பந்தத்தை ஏற்க முடிவு செய்தது.

சண்டைப் பிரிவுகளின் தலைமையில், கருத்துக்கள் பிரிக்கப்பட்டன. முன்பக்கத்தில் இருந்த தொண்ணூறு சதவீத தொழிலாளர்கள் ஆயுதங்களை கீழே போட்டு நிராயுதபாணிகளான சுரங்கங்களுக்குத் திரும்பத் தயாராக இல்லை என்று அறிவித்தனர். ஆனால் USPD தனது நிலைப்பாட்டை திணித்தது: அரசாங்கம் அதன் வார்த்தையை மீறாது. KPD பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி, சுரங்க பிராந்தியத்தில் முன் மற்றும் கூட்டங்களில் உள்ள தொழிலாளர்களிடம் அரசியல் குழுவில் தங்கள் வாதங்களால் வெற்றிபெற முடியவில்லை என்று கூறினார். [7]

தீவிரமான கூறுகள் தனிமைப்படுத்தப்பட்டவுடன், அரசாங்கமும் வான் சீக்டும் காப் மற்றும் லுட்விட்ஸுடன் இணைந்திருந்த அதே இராணுவம் மற்றும் Freikorps (துணை இராணுவப்படை) பிரிவுகளை அவர்களுக்கு எதிராக நிறுத்தினர். அவர்கள் இரத்தக்களரியுடன் பழிவாங்கினர். பாரிய துப்பாக்கிச் சூடு மற்றும் சட்டத்திற்கு புறம்பான நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் நடந்தன. இறப்புகளின் சரியான எண்ணிக்கை ஒருபோதும் கணக்கிடப்படவில்லை. விங்க்லரின் கூற்றுப்படி, இறப்புகள் "ரூஹர் சுரங்கத் தொழிலாளர்களிடையே 1,000 க்கும் அதிகமானவை, 208 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 123 பேர் இராணுவத்திரல் காணாமல் போயுள்ளனர், பாதுகாப்பு போலீசாரிலிருந்து 41 பேர் கொல்லப்பட்டனர்." [8]

சதியை தடுப்பதற்காக தங்கள் உயிரைக் கொடுத்த தொழிலாளர்கள் துன்புறுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட்டதுடன் மற்றும் கொல்லப்பட்டனர். அதே சமயம் சதியாளர்கள் பெரும்பாலும் பாதிப்பில்லாமல் இருந்தனர். ஆகஸ்ட் 2, 1920 இல் ஒரு பொது மன்னிப்புச் சட்டம் எந்தவொரு குற்றவியல் தவறுக்கும் அனைத்திலிருந்தும் விடுவிக்க அனுமதித்தது. அவர்கள் "காட்டுமிராண்டித்தனமாக" அல்லது "சுயநலத்திற்காக" செயல்படவில்லை என்று அது கூறியது. சதியை ஆதரித்த Freikorps (துணை இராணுவப்படை பிரிவு) அதிகாரிகள் இராணுவத்தில் ஒருங்கிணைக்கப்பட்டனர். ஒரு சில விதிவிலக்குகளுடன், சதியில் ஈடுபட்ட இராணுவத்தின் அங்கத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன அல்லது விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த பங்கில் முன்னணி பங்கேற்பாளர்கள் பவேரியாவுக்கு தப்பி ஓடினர், அங்கு மேல் பவேரிய மாவட்டத் தலைவர் Ritter von Kahr, மார்ச் 14, 1920 அன்று சமூக ஜனநாயகக் கட்சி மாநில அரசாங்கத்தை இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்த ஒரு சதித்திட்டத்தை தொடங்கினார். பவேரியா பின்னர் ஹிட்லரின் NSDAP ஐ வளர்த்த வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி சக்திகளின் மையமாக உருவெடுத்தது.

அவரது பெயரைக் கொண்ட படைப்பிரிவின் தலைவரான ஹேர்மான் ஏர்ஹார்ட், பின்னர் மூனிச்சில் அமைப்பு ஆலோசனை மையத்தை நிறுவினார். இது 5,000 உறுப்பினர்களை கொண்ட ஒரு துணை இராணுவ பயங்கரவாத அமைப்பாகும். இது மூனிச் காவல்துறைத் தலைவர் எர்ன்ஸ்ட் போஹ்னரால் எதிர்ப்பின்றி சகித்துக்கொள்ளப்பட்டது. இவ்வமைப்பானது 1921 ஆம் ஆண்டில் மையக் கட்சி அரசியல்வாதி மத்தியாஸ் எர்ஸ்பேர்கர் மற்றும் 1922 இல் ஜேர்மன் வெளியுறவு மந்திரி வால்டர் ரத்தெனாவ் உட்பட பல கொலைகளுக்கு பொறுப்பானது. இது ஹிட்லரின் SA க்கு பயிற்சி அளிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

ஸ்வீடனுக்கு தப்பி ஓடிய வொல்ப்காங் காப், இறுதியில் தன்னை குடியரசின் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆனால் விசாரணைகள் தொடங்குவதற்கு முன்பே இறந்துவிட்டார். சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே ஒரு சதியின் பங்கேற்பாளர் பேர்லின் காவல்துறை தலைவர் Traugott von Jagow ஆவார். அவருக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. நீதிமன்றம் அவருக்கு தண்டனையை தணிக்கும் சூழ்நிலைகளை வழங்கியது. ஏனெனில் அவர் "தந்தைநாட்டின் மீது தன்னலமற்ற அன்பினாலும், ஒரு கவர்ச்சிகரமான தருணத்தில் காப்பின் அழைப்பை பின்பற்றினார்." என்று குறிப்பிட்டது.

வேலைநிறுத்தக்காரர்களுக்கு அரசாங்கம் வழங்கிய சமூக வாக்குறுதிகள் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை. சமூகக் கொள்கை குறித்த ஒரு ஆணையம் தொடங்கப்பட்டாலும், அது ஒரு அதிகாரமும் இல்லாததாக இருந்தது.

எதிர் புரட்சி மாற்றங்களின் ஒரு சங்கிலி

ஜேர்மன் சான்சிலராக ஹிட்லரின் நியமனத்திற்குப் பின்னர் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், லியோன் ட்ரொட்ஸ்கி வைமார் குடியரசின் வரலாற்றை "எதிர் புரட்சிகர மாற்றங்களின் சங்கிலி" என்று விவரித்தார்:

தொழிலாளர்களதும் விவசாயிகளதும் சோவியத்துகளுக்கு அதிகாரத்தை வழங்கிய நவம்பர் புரட்சி, அதன் அடிப்படை போக்குகளில் பாட்டாளி வர்க்கமாக இருந்தது. ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் தலைவராக நின்ற கட்சி அதிகாரத்தை முதலாளித்துவத்திற்கு திருப்பி கொடுத்தது. இந்த அர்த்தத்தில், புரட்சி அதன் பணிகளை நிறைவு செய்வதற்கு முன்னர் சமூக ஜனநாயகம் எதிர் புரட்சியின் சகாப்தத்தை திறந்தது. எவ்வாறாயினும், முதலாளித்துவம் சமூக ஜனநாயகத்தை சார்ந்தது வரை, அதன் விளைவாக தொழிலாளர்கள் மீதும் சார்ந்து, ஆட்சியானது விட்டுக்கொடுப்புகளின் கூறுகளை தக்க வைத்துக் கொண்டது. ஜேர்மன் முதலாளித்துவத்தின் சர்வதேச மற்றும் உள் நிலைமை சலுகைகளுக்கு இடமளிக்கவில்லை. சமூக ஜனநாயகம் முதலாளித்துவத்தை பாட்டாளி வர்க்க புரட்சியிலிருந்து காப்பாற்றியதால், பாசிசம் முதலாளித்துவத்தை சமூக ஜனநாயகத்திலிருந்து விடுவிப்பதற்காக திரும்பியது. ஹிட்லரின் சதி என்பது எதிர் புரட்சி மாற்றங்களின் சங்கிலியின் இறுதி இணைப்பு மட்டுமே.[9]

காப் சதி மற்றும் அதை தொடர்ந்து பொது வேலைநிறுத்தத்தை ஒடுக்கியமை இந்த சங்கிலியில் ஒரு முக்கியமான இணைப்பாகும். ஜூன் 6 ம் தேதி விரைவில் நடந்த கூட்டாட்சித் தேர்தல் முதலாளித்துவ முகாமுக்குள் வலதுசாரி பக்கம் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. வலதுசாரி தாராளவாத ஜேர்மன் மக்கள் கட்சி (DVP) மற்றும் தேசிய பழமைவாத ஜேர்மன் தேசிய மக்கள் கட்சி (DNVP) ஆகியவை DDP இழப்பில் தமது ஆதரவைப் பெற்றன.

இதற்கு மாறாக, தொழிலாள வர்க்கம் இடது பக்கம் நகர்ந்தது. SPD இன் வாக்குகள் USPD க்கு சற்று முன்னால் 16 சதவிகிதத்தால் குறைந்து 21.3 சதவிகிதமாகியது. USPD அதன் பங்கை 7.6 சதவீதத்திலிருந்து 17.9 சதவீதமாக உயர்த்தியது. முதல் முறையாக தேர்தலில் நின்று கொண்டிருந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி 1.7 சதவீதத்தை வென்றது. அடுத்த ஆண்டில், USPD யின் பெரும்பான்மையானது ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். இதன் விளைவாக ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 78,000 இருந்து 450,000 வரை அதிகரித்தது.

ஆனால் தொழிலாள வர்க்கம் எவ்வளவு தீவிரமயமாக்கப்பட்டதோ, அந்தளவுக்கு சமூக ஜனநாயக கட்சி மற்றும் முதலாளித்துவ கட்சிகள் தங்கள் சதித்திட்டத்தை தீவிரப்படுத்தின. மத்திய ஜேர்மனியின் தொழில்துறை பகுதிகளில் ஒரு பொது வேலைநிறுத்தத்தை அடக்குவதற்காக 1921 மார்ச்சில், ஜனாதிபதி ஏபேர்ட் சாக்சோனி மீது அவசரகால நிலைமையை விதித்தார். இதற்கு வான் சீக்டின் படைகள் ஒரு முக்கியமான சேவையை வழங்கின. ஆக்கிரமிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மீது பீரங்கிகளால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் 150 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஆறாயிரம் வேலைநிறுத்தக்காரர்கள் கைது செய்யப்பட்டனர், 4,000 பேர் மொத்தம் 2,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தனர். நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1923 ஆம் ஆண்டில், ரூஹர் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு மற்றும் விரைவாக பணவீக்கம் ஒரு புரட்சிகர நெருக்கடியை உருவாக்கியபோது, ஏபேர்ட் குடியரசில் உள்ள அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் ஜெனரல் வான் சீக்ட்டிடம் ஒப்படைத்தார். சமூக ஜனநாயக கட்சி மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான கூட்டணிகளால் ஆன சாக்சோனி மற்றும் துரிங்கியா அரசாங்கங்களை அவர் வன்முறையுடன் கலைத்து, புரட்சிகர தொழிலாளர்களை துன்புறுத்தி மற்றும் ஹாம்பேர்க் நகரில் எழுச்சியை வன்முறையில் நசுக்கினார். ஒரு வெற்றிகரமான சோசலிசப் புரட்சி 1923 இல் சாத்தியமாக இருந்தபோதிலும் அது தோல்வியுற்றது. ஏனெனில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு திட்டமிட்ட புரட்சிகர எழுச்சியை நிறுத்தியது. வான் சீக்ட் இன் மூர்க்கமான ஒடுக்குமுறையானது ஹிட்லரை பலப்படுத்தியதுடன், அவர் நவம்பர் 8 இலும் 9 இலும் மூனிச் நகரில் தனது சதியை நடாத்தினார்.

ட்ரொட்ஸ்கி சரியாகக் குறிப்பிட்டது போல, இந்த நிகழ்வுகளிலிருந்து 1933 இல் ஹிட்லரின் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு நேரடி வழி வழிவகுத்தது. ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டுவந்த சக்திகளை வளர்த்து ஆதரித்த SPD, பின்னர் தேவையில்லாது போனதுடன் தடை செய்யப்பட்டது.

இந்த அனுபவத்திலிருந்து சமூக ஜனநாயகக் கட்சி எதையும் கற்றுக்கொள்ளவில்லை. கட்சி ஏபேர்ட்டினை தனது முன்மாதிரியாக காட்டிக்கொள்கின்றது, அத்துடன் ஜேர்மன் நகரங்களில் ஏராளமான வீதிகள் மற்றும் சதுரங்களுக்கு அவரின் பெயரிடப்பட்டன. சமூக ஜனநாயகக் கட்சி ஒரு காலத்தில் தொழிலாள வர்க்கத்துடன் கொண்டிருந்த எந்தவொரு தொடர்பையும் துண்டித்துவிட்டதுடன், இப்போது மற்ற முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து பிரித்தறிய முடியாத ஒன்றாகியுள்ளது. பசுமைவாதிகளுடனான ஏழு ஆண்டு கூட்டணியிலும், கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் மற்றும் கிறிஸ்தவ சமூக ஒன்றியத்துடனான 11 ஆண்டுகால கூட்டணியிலும், சமூக ஜனநாயகக் கட்சி சமூகச் செலவினங்களைக் குறைப்பதற்கும், இராணுவவாதத்தை ஊக்குவிப்பதற்கும் வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சியின் எழுச்சிக்கும் காரணமாக இருக்கின்றது.

அதிகரித்துவரும் வர்க்க பதட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் சர்வதேச பிளவுகளை எதிர்கொண்டு, ஆளும் உயரடுக்கு மீண்டும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களைத் தயாரிக்கிறது. கடந்த நூற்றாண்டின் போராட்டங்களின் வரலாற்று படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச சோசலிசக் கட்சியை ஸ்தாபிப்பதன் மூலமே எதிர் புரட்சிகர திருப்பங்களின் சங்கிலி உடைக்கப்பட முடியும். அந்தக் கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் அதன் தேசிய பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் ஆகும்.

**

Notes:

[1] Hans Mommsen, Aufstieg und Untergang der Weimarer Republik, Ullstein 2004, p. 112

[2] Heinrich Winkler, Der lange Weg nach Westen, Vol 1, München 2002, p. 409

[3] Cited according to Ian Kershaw, Hitler 1889 –1936, Stuttgart 1998, p. 166

[4] Hans Mommsen, op.cit., pp. 111–112

[5] Ibid., p. 113

[6] Oskar Hippe, … und unsere Fahnist rot, Hamburg 1979, pp. 45–46

[7] Oskar Hippe, op.cit., p. 47

[8] Heinrich Winkler, op.cit., p. 414

[9] Leon Trotsky, Porträt des Nationalsozialismus, Essen 1999, pp. 303–304

Loading