இலங்கையில் கொரோனா வைரஸ் நெருக்கடி: தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு வேலைத்திட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், COVID-19 தொற்றுநோயினால் உருவாக்கப்பட்ட பாரிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை மேம்படுத்தப் பயன்படுத்துகிறது. ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகள் என்று அழைக்கப்படுவனவற்றின் ஆதரவுடன், பொலிஸ்-இராணுவ ஆட்சியை மேலும் பலப்படுத்தவும், நெருக்கடியில் மூழ்கியுள்ள பெரும் வர்த்தகர்களுக்காக பாரிய நிதிகளைத் திருப்பிவிடவும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது எண்ணிலடங்கா துன்பத்தை திணிப்பதற்கும் இந்த நிலைமையைப் சுரண்டிக்கொள்கிறார்.

முன்னணைய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்த "எதிர் கட்சிகள்" பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்களன்று அழைப்புவிடுத்த சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்தின் இரக்கமற்ற நடவடிக்கைகளுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கின.

மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தவிர, ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் அதலிருந்து பிரிந்து போன அணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), அரசியல் கட்சிகளாகவும் செயல்படும் பெருந்தோட்டத் தொழிற்றசங்கங்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டன .

கடந்த வாரம், நாட்டின் வர்த்தக சபைகள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பாராட்டியதுடன், கூடுதல் நிதி மற்றும் சலுகைகளை கோரியது.

இலங்கையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை முதல் 100க்கு மேல் உயர்ந்துள்ளது. சந்தேகிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 300. சுமார் 12,000 பேர் குறிப்பிட்ட விசேட தனிமைப்படுத்தும் நிலையங்களில் அல்லது அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .

இதுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை என்றாலும், ஒரு பெரிய தொழிற்சங்கமான அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், 550 பேருக்கு நோய் தொற்றி இருக்கலாம் என்றும், மேலும் இது ஒரு தீவிர சமூக-தொற்று நிலைக்கு செல்லக்கூடும் என்றும் ஒப்புக் கொண்டுள்ளனர். நாட்டின் மக்கள் தொகை வெறும் 26 மில்லியனாக இருப்பதால் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாகும்.

சுமார் இரண்டு மாதங்களாக வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்ககையான நடவடிக்கைகளை எடுக்காது காலம் கடத்திவிட்டு, உலகெங்கிலும் உள்ள அதன் சகாக்களைப் போலவே, ராஜபக்ஷ அரசாங்கமும் சளாப்பல் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. கடந்தவாரம் முதல், நாடு காலவரையின்றி பூட்டப்பட்டுள்ளதுடன் பல மாவட்டங்களில் சிறு தளர்த்தல்களுடனான ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.

இலங்கையிலும், துணைக் கண்டத்திலும் ஒரு பெரிய சுகாதார நெருக்கடி உருவாகி வருகிறது, உலக சுகாதார அமைப்பு (WHO) 1.3 பில்லியன் மக்கள் வாழும் அண்டை நாடான இந்தியா வைரஸின் அடுத்த “மையமாக” மாறக்கூடும் என்று எச்சரித்துள்ளது. நேற்று வரை, இந்தியாவின் கொவிட்-19 இறப்புகள் 13 ஆக பதிவாகியுள்ளதுடன் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இந்தியா தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் பூட்டப்படும் என்று அறிவித்தது. இந்தியாவின் சிதைந்து போன சுகாதாரத் துறைக்கு 2 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இது முற்றிலும் போதாததாகும். ஆழ்ந்த வறுமைக்கு மத்தியில், பல கிராமப்புற மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களும் ஏழைகளும் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

பாக்கிஸ்தானில், எட்டு பேர் இறந்துள்ளதுடன் 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் குறைந்த எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களே இருப்பதாக காட்டப்படுவதற்கு காரணம், போதிய பரிசோதனை இல்லாமையின் விளைவே என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வியாழக்கிழமை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மொத்த பூட்டுதல், "பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும்" என்றும் "பீதியிலிருந்து" முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் கூறினார். அமெரிக்கா உட்பட ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது. அரசாங்கங்களின் பிரதான நோக்கம், மக்களின் வாழ்க்கையை விட, இலாபத்தை கறக்கும் முறைமையை பாதுகாப்பதே ஆகும்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுகுமுறை இதிலிருந்து வேறுபட்டதல்ல.

பூட்டுதலுக்கு மத்தியில், 14 சுதந்திர வர்த்தக வலயங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், பெரும்பாலும் சாதாரண ஊழியர்கள், நெரிசலான அறைகளில், சம்பளமும் உணவும் இல்லாமல் பல நாட்கள் சிக்கித் தவித்தனர். நேற்று அவர்கள் வெறுங்கையுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். பல தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதோடு நகரங்களுக்கு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான தோட்டப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் தினசரி ஊதியம் பெறுபவர்களாவர். மில்லியன் கணக்கான கிராமப்புற விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல மில்லியன் தொழிலாளர்கள் வியாபாரம் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் போன்ற அன்றாட வருமானம் வரும் சுயதொழில் செய்கிறார்கள்.

நாடு சமூக சமத்துவமின்மையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஏழ்மையான 20 சதவிகித மக்கள் தேசிய வருமானத்தில் 5 சதவிகிதத்தை மட்டுமே பெறுகின்ற அதே நேரம் பணக்கார 20 சதவிகிதம் பேர் 51 சதவிகிதத்தை கறந்துகொள்கின்றனர்.

பல பொது மருத்துவமனைகள் தொற்றுநோய் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் 500 தீவிர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மாத்திரமே உள்ளன. மருத்துவமனைகளில் அவசர அவசரமாக புதிய பிரிவுகள் கட்டியெழுப்பப்படுகின்றன. வெகுஜனங்களை சோதனையிடுவது பற்றி எந்த செய்தியும் கிடையாது.

பல தசாப்தங்களாக சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டதின் விளைவாக, மக்கள் சுகாதார அவசரநிலையை எதிர்கொள்கின்றனர். 1977 வரை சுகாதார துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமே ஒதுக்கப்பட்டது. உற்பத்தியின் பூகோளமயமாக்கல் நாட்டினை சர்வதேச மூலதனத்தின் சுரண்டலுக்கு திறந்துவிட்ட நிலையில், இந்த மிக்க குறைந்த ஒதுக்கீடும் சுமார் அரைவாசியாக குறைக்கப்பட்டது. 2009 இல் முடிவடைந்த 30 ஆண்டுகால தமிழர்-விரோத இனவாத போருக்கு நிதியளிப்பதற்காக சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய சமூக சேவைகளுக்கான நிதி வெட்டிக் குறைக்கப்பட்டன.

லாபம் ஈட்டும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களும் காளான்கள் போல் முளைத்துள்ளன. தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் உயர்தர சுகாதாரம் தொடர்பான கொழும்பின் கூச்சலை இந்த தொற்றுநோய் பரவல் சிதைத்துள்ளது.

அரசாங்கம் பூட்டுதல் மற்றும் சமூக விலகளை வலியுறுத்திடும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானொம் கெப்ரேயசஸ், ஒரு நடவடிக்கை மட்டும் போதுமானது அல்ல என்று சமீபத்தில் வலியுறுத்தினார். "தொற்றுவதை கண்டுபிடிப்பது மட்டும், தனிமைப்படுத்துவது மட்டும், சமூக விலகியிருத்தல் மட்டும் போதுமானவை அல்ல. இவை அனைத்தையும் செய்யுங்கள்," என்று அவர் கூறினார்.

வர்த்தக சபைகளின் வேண்டுகோளின் பேரில் தனியார் மருத்துவமனைகளில் பி.சி.ஆர். [Polymerase Chain Reaction] பரிசோதனையை செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளது. அவர்கள் 6,000 ரூபாய் (31 அமெரிக்க டாலர்) அல்லது ஒரு சாதாரண தொழிலாளியின் மாத ஊதியத்தில் பாதிக்கும் மேல் வசூலிக்கிறார்கள்.

ராஜபக்ஷ, முதலாளித்துவத்துக்கு முன்னுரி கொடுப்பது அவரது 'நிவாரணம் எனப்படுவதன் மூலம் அம்பலமாகிறது. அவர் வட்டி விகிதங்களைக் குறைத்து, சட்டரீதியான இருப்பு விகிதத்தைக் குறைத்து, வர்த்தகங்கம், தொழிதுறை மற்றும் பங்குச் சந்தை நிதியாளர்களுக்கு மலிவான கடன் வழங்குவதாக உறுதியளித்தார்.

"வளர்ந்து வரும் நிலைமையில்" இருந்து தோன்றும் எந்தவொரு தாக்கத்தையும் எதிர்கொள்ளத் தேவையான பணப்புழக்கத்தை வழங்குவதாக நிதிய சந்தைகளுக்கு இலங்கையின் மத்திய வங்கி உறுதியளித்தது. வர்த்தக சபைகள் கடந்த வாரம் வரிகளை குறைத்தல், தொழிலாளர்களை மேலதிக நேர வேலைக்கு அமர்த்துவதற்கான கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை வழங்க மூன்று மாதங்களுக்கு தடை விதித்தல் போன்று அதிக சலுகைகளை கோரின.

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் சமூக எதிர்ப்பைப் பற்றி கவலை கொண்டுள்ளன. இத்தகைய அமைதியின்மை அறிகுறிகள் ஏற்கனவே தெரியவந்துள்ளன. கொழும்பில் சேரி புறங்களில் வாழும் மக்கள் அரசாங்கத்தின் நிவாரணப் பொதி எனப்படுவது பற்றி உலகசோசிலசவலைத்தளத்துக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். அனுராதபுர சிறையில் சுமார் 700 கைதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நசுக்கப்பட்ட போது இரு கைதிகள் கொல்லப்பட்டனர்.

வர்க்கப் போராட்டங்களின் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாக, 2018 முதல் தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மூலம் சமூக அமைதியின்மை ஏற்கனவே அபிவிருத்தி கண்டுள்ளதன் உச்சத்திலேயே இந்த தொற்று நோய் நெருக்கடி வந்துள்ளது

."வலுவான அரசாங்கத்தை" அமைப்பதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு சிரேஷ்ட ராணுவ அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் தனது நிர்வாகத்தை இராணுவமயமாக்கத் தொடங்கினார். இந்த இராணுவமயமாக்கலை விரைவுபடுத்துவதற்கும் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை பலப்படுத்துவதற்கும் அவர் தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்துகிறார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ராஜபக்ஷ அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் கைப்பற்றியுள்ளார். அத்தியாவசிய பணிகளை ஒருங்கிணைப்பதாகே கூறி அவர் தனது சகோதரர் பெசில் ராஜபக்ஷவை கொவிட்-19 ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவராக நியமித்தார். மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவிகாலத்தில் பெசில் ராஜபக்ஷ தனது எதேச்சதிகார வழிமுறைகளுக்காக இழிபுகழ்பெற்ற அமைச்சராவார்.

ராஜபக்ஷவைச் சுற்றியுள்ள ஒரு குழுவால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் ஜெனரல்களால் நிரம்பிய ஜனாதிபதி சர்வாதிகாரம் ஒன்றே இப்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதிரடிப்படையினர் முன்னால் ஆற்றிய உரையில் அவர் இதை அறிவித்துள்ளார்: “இந்த நாட்டை நடத்துபவர் நானே. பொறுப்பான பதவிகளை வகிப்பவர்கள் நான் சொல்வது போல் செய்ய வேண்டும்.”

திரைசேறி பிணை முறிகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் விலக்கிக்கொள்ளப்படும் நிலையில், நாட்டின் டொலர் இருப்பு குறைந்து வரும் நிலையில், ரூபாய் ஒரு பெரும் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு வரை இலங்கை தனது வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்துகையாக ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டும். ராஜபக்ஷ நேற்று பிரதான நாடுகளுக்கும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்களுக்கும் கடன் தவனையை ஒத்தி வைக்குமாறு வேண்டுகோள்விடுத்தார்

இந்த தீவிரமான நெருக்கடியை எதிர்கொண்டு, ராஜபக்ஷ, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் திரும்பி, இராணுவ-பொலிஸ் வழிமுறைகளை கட்டவிழ்த்து விடுவார். ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் பிரிந்து, கிராமப்புற ஏழைகளுக்கு தலமை தாங்குவதற்கும் தனது அரசியல் பலத்தைத் திரட்டுவதற்கும் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வேலைத்திட்டத்துடன் தயாராக வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) பின்வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறது:

· சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கும், சகல வசதிகளும் கொண்ட பொருத்தமான மருத்துவமனைகளை உருவாக்குவதற்கும் பெருந்தொகை நிதி ஒதுக்க வேண்டும். அனைவருக்கும் இலவச பரிசோதனை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும்.

· சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.

· எந்த துறையிலும் தொழிலாளர்கள் வேலை இழக்கக் கூடாது. சுகாதாரம் மற்றும் உணவு உற்பத்திக்கு அத்தியாவசியமானவை தவிர, அனைத்து தொழில்துறைகளும் தொற்றுநோய் பரவுவதை தடுப்பதற்காக மூடப்பட வேண்டும். பூட்டுதலுக்குள் அகப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையான ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்படவேண்டும்.

· முறைசாரா துறையில் உள்ள அனைவருக்கும், சுயதொழில் செய்பவர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கும் முழு மற்றும் நிபந்தனையற்ற நிதி உதவி வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

· விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் இலவச உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விதைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட வேண்டும்.

· சேரி மக்களும் ஏழைகளும் சுகாதாரமற்ற மற்றும் நெரிசலான நிலையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே கட்டப்பட்ட பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் மற்றும் பொது கட்டிடங்களில் ஒழுக்கமான வாழ்விடங்கள் வழங்கப்பட வேண்டும்.

சிறந்த சுகாதாரம், ஒழுக்கமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வீட்டுவசதியும் வழங்க "பணம் இல்லை" என்று அரசாங்கமும் முதலாளித்துவ வர்க்கமும் கூறுவார்கள். அவர்கள் பெரும் இலாபங்களையும் தனிப்பட்ட செல்வத்தையும் குவிக்கின்ற நிலையில் ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தின் மந்திரமும் இதுவாகத்தான் உள்ளது. முதலாளித்துவ வர்க்க சொத்துக்கள் தேவையான பிரதான சேவைகளை வழங்க பயன்படுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு கடன்களை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

இந்த தேவையான நடவடிக்கைகளை முதலாளித்துவ வர்க்கம் எதிர்த்து, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராகத் திரும்பும். தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வேலைத் தளங்களிலும் சுற்றுப்புறங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைத்து தாங்களே முன்முயற்சியை எடுக்க வேண்டும். இது கிராமப்புற ஏழைகளதும் இளைஞர்களதும் ஆதரவை அணிதிரட்ட வழி வகுக்கும்.

இதன் அர்த்தம் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுவதும் வங்கிகள், பெருந்தோட்டங்கள், பெரும் வர்த்தகங்கள் மற்றும் தொழிற்சாலைகளையும் தொழிலாளர்களின் ஜனநாய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதும் ஆகும்.

1947-1948 இல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சதி மூலம் நிறுவப்பட்ட அரசுகளைக் கொண்ட தெற்காசியாவில் உள்ள ஆளும் வர்க்கங்களால் பந்துபட்ட மக்களின் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லை. தொழிலாள வர்க்கம் பல மில்லியன் கிராமப்புற ஏழைகளுக்கு தலைமைத்துவம் கொடுத்து தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்காகப் போராட வேண்டும்.

இது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டமாகும். நான்ககாம் அகிலத்தின் அனைத்துலக குழு விளக்கியுள்ளது போல்: "கொரோனா வைரஸிற்கான பதிலடியை தேசிய அளவில் ஒருங்கிணைக்க முடியாது... தீர்வு உலகளவிலானதாகவே இருக்க வேண்டும்."

அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியான இலங்கை சோ.ச.க. வலியுறுத்துவதாவது: “தற்போதைய நெருக்கடியானது முதலாளித்துவம் ஒரு காலாவதியான பொருளாதார அமைப்பு என்பதையும் மனித முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது என்பதையும் மீண்டும் நிரூபிக்கிறது. இந்த தொற்று நோய் மற்றும் பேரழிவு தாக்கங்கள் குறித்த உலகளாவிய எச்சரிக்கைகள், முதலாளித்துவ முறைமை உலக சோசலிசத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறது.”

இந்த வேலைத் திட்டத்திற்காகப் போராட சோ.ச.க.வில் இணைந்துகொள்ளுங்கள்.

Loading