முன்னோக்கு

COVID-19 இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கையில், ஆளும் வர்க்கம் காலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்ப விரைவுபடுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் COVID-19 வைரஸ் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானவர்கள் இவ்வாரம் உயிரிழக்கக்கூடுமென பொது சுகாதாரத்துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் எச்சரித்து வருகின்றனர். “இது பிராந்தியளவில் மட்டுப்பட்டதாக இருக்காது என்பதைத் தவிர, இது நமது பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) தருணமாகவும், நமது 9/11 தருணமாகவும் உள்ளது,” என்று மருத்துவப் பிரிவு தளபதி ஜெரோம் ஆதம்ஸ் Fox News Sunday க்கு தெரிவித்தார். “நிறைய உயிரிழப்புகள் இருக்கும்,” என்பதை சனிக்கிழமை டொனால்ட் ட்ரம்பும் சேர்த்துக் கொண்டார்.

இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் எங்கிலும் அந்நோய் தொடர்ந்து கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கையில், ஐரோப்பாவில் சனிக்கிழமை அண்மித்து 3,000 பேர் உயிரிழந்தனர். மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் அதீத வறுமையில் வாழும் ஆசியா, மத்தியக் கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் குறைந்த அபிவிருத்தி அடைந்த நாடுகளில், இறப்பு எண்ணிக்கை நிச்சயமாக நூறாயிரக் கணக்கில் இருக்கும்.

அமெரிக்கா இந்த தொற்றுநோயின் உலகளாவிய மையமாக உருவெடுத்துள்ளது. சனிக்கிழமை மட்டுமே 1,331 இறப்புகளுடன், அங்கே மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000 ஐ எட்டி வருகிறது. ஆனால் நியூயோர்க்டைம்ஸில் ஞாயிறன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின்படி, இந்த எண்ணிக்கை பாதிக்கப்பட்ட நிஜமான எண்ணிக்கையைக் குறைத்து கணக்கிட்டுள்ளது.

டைம்ஸ்குறிப்பிடுகிறது, “பல புறநகர் பகுதிகளில், கொரொனா தொற்றுள்ளவர்கள் அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்றும், அவர்கள் நோய் இருப்பதைக் கண்டறிய விரும்பதாகவும் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் மருத்துவர்கள் இப்போது, கொரொனா வைரஸ் தொற்று மட்டங்களை எட்டுவதற்கு முன்னர், பெப்ரவரி மற்றும் மார்ச் தொடக்கத்தில் சில மரணங்கள் சளிக் காய்ச்சலென தவறாக அடையாளம் காணப்பட்டிருக்கலாம் அல்லது வெறுமனே நிமோனியாவாக விவரிக்கப்பட்டிருக்கலாமென கருதுகின்றனர்.”

ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கான தேசிய ஆணைய இயக்குனர் Anthony Fauci, அவர் பங்கிற்கு கூறுகையில், COVID-19 ஐ "கட்டுப்பாட்டில்" வைத்திருப்பதாக அமெரிக்கா கூறுவது "பிழையான அறிக்கையாக" இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

வெளிப்படையாக கூறுவதானால், இது குறைத்துக் கூறுவதாகும். இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான சரியான விபரம் கூட இல்லை என்பது ஏறத்தாழ எந்த ஒரு விபரிப்பினையும் மறுத்துரைக்கும் ஒழுங்கின்மையினதும் மற்றும் குழுப்பமான ஒரு காட்சியின் அதிக விகாரமான உதாரணங்களில் ஒன்றாகும்.

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததைப் போல, சந்தேகத்திற்குரிய அனைத்து நோயாளிகளையும் பரிசோதிப்பதற்கும் தனிமைப்படுத்துவதற்கும் அமெரிக்காவிடம் இன்னமும் எந்த கொள்கையும் இல்லை. நாடெங்கிலுமான நகரங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றில் முன்முகப்பில் பணியாற்றுபவர்களுக்கும் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் முகக்கவசங்கள் உள்ளடங்கலாக மிகவும் அடிப்படை சாதனங்கள் கூட இல்லை. தொன்னூற்றி இரண்டு சதவீதத்தினருக்குப் போதுமான பரிசோதனை சாதனங்கள் இல்லை, 85 சதவீதத்தினருக்கு போதுமான சுவாசக் கருவிகள் இல்லை.

இதற்கிடையே மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் எதிர்வரும் நாட்களில் சுவாசக் கருவிகளின் பற்றாக்குறையை முகங்கொடுப்பதாக தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. லூசியானா ஆளுநர் ஜோன் பெல் எட்வார்ட்ஸ் கூறுகையில் திங்கட்கிழமை அளவில் அவர் மாநிலத்துக்கான சுவாசக் கருவிகளது வினியோகம் தீர்ந்துவிடுமென எதிர்பார்ப்பதாக கூறியுள்ள அதேவேளையில் நகரசபை தலைவர் பில் டு பிளேசியோ குறிப்பிடுகையில் நியூ யோர்க் நகரத்திற்கு செவ்வாய்கிழமை அல்லது புதன்கிழமை அளவில் உயிர்காக்கும் சாதனங்கள் இல்லாமல் போகக்கூடுமென அனுமானிப்பதாக எச்சரித்தார்.

அரசாங்கத்தின் ஒருமித்த அலட்சியம் மற்றும் திறமையின்மை, ட்ரம்பின் உருவில் வெளிப்படுகிறது, இவர் நீண்ட குழப்பமான அவரின் நாளாந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், இந்நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரது அனுதாபத்தை வெளிப்படுத்தக்கூட முடியாதவராக உள்ளார்.

இந்த பேரழிவில் உண்மையிலேயே ட்ரம்பைக் கிளறிவிட்டு கொண்டிருக்கும் ஏதேனும் அம்சம் உள்ளது என்றால், அது பெருநிறுவன அடித்தளத்தின் மீது இந்நோயின் தாக்கமாகும். COVID-19 பரவுவதை முற்றிலுமாக நிறுத்த முடியவில்லை என்றாலும், அத்தியாவசியமல்லாத அனைத்து தொழில்களையும் நிறுத்துவதன் மூலமும் பல மாதங்களுக்கு நீளக்கூடிய நாடுதழுவிய சமூக அடைப்பைப் பேணுவதன் மூலமாகவும் அதை கணிசமானளவுக்கு மெதுவாக்க முடியும் என்று Fauci தெரிவிக்கிறார்.

ஆனால் Fauci மற்றும் விஞ்ஞான சமூகத்தின் எச்சரிக்கைகளுக்கு அவ்வப்போது ட்ரம்ப் உதட்டளவில் பாவனை செய்கின்ற அதேவேளையில், அவரின் சனிக்கிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்ததைப் போல, அமெரிக்கர்கள் "வேலைக்குத் திரும்ப வேண்டும்" என்று மீண்டும் மீண்டும் இன்னும் அதிக உறுதியாக அறிவிக்கிறார்.

“அது குறித்து சிந்தியுங்கள்,” என்றார். “வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்காக நாம் சம்பளம் வழங்க முடியாது. அவ்வாறு எப்படி செய்ய முடியும்? அது எப்படி சரியாகும்?”

மனித உயிர்களை நோக்கிய ட்ரம்பின் அலட்சியத்தை வெறுமனே அவரின் தனிப்பட்ட சமூக-குணபிறழ்ச்சியாக பார்ப்பது தவறாக இருக்கும். ஆனால் ட்ரம்ப் ஆளும் உயரடுக்கிற்குள் பரந்த ஆதரவைக் கொண்டுள்ள ஒரு நிலைப்பாட்டை குரூரமாக வெளிப்படுத்துகிறார்.

முதலாளித்துவ ஊடகங்களோ, “குணப்படுத்தல் நோயை விட மோசமாக ஆகிவிடக் கூடாது,” என்ற கோஷத்தின் கீழ், வணிகங்கள் மற்றும் ஆலைகள் மூடப்பட்டதால் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சேதமானது, நீண்டகால போக்கில், தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்னரே வேலைக்கு வேகமாக திரும்புவதால் ஏற்படக்கூடிய மரணங்களை விட சமூகத்திற்கு மிகவும் கேடாக நிரூபணமாகிவிடும் என்று வாதிடத் தொடங்கின.

முழுமையாக வெறுப்பூட்டும் விதத்தில், ஊடகங்கள் தங்களை உழைக்கும் மக்களின் மற்றும் ஏழைகளின் பாதுகாவலனாக சித்தரித்துக் கொள்கின்றன. சான்றாக, பெருநிறுவனங்கள் அவற்றின் இலாபங்களை அதிகரிப்பதற்காக வேலைகளைக் குறைத்து கூலிகளை வெட்டிய போது ஒருபோதும் வாய் திறக்காத வோல்ஸ்ட்ரீட்ஜேர்னலின் ஆசிரியர் குழு, வெள்ளியன்று பிரசுரித்த ஒரு தலையங்க அறிக்கையில், வளர்ச்சிக் குறைவை "அமெரிக்கர்கள் மீது உளவியல்ரீதியாக ஏற்படும் தாங்கிக் கொள்ள முடியாத விலையை" குறித்து கவலைப்படுவதாக இப்போது பாசாங்குத்தனம் செய்கிறது.

இந்த தொற்றுநோய்க்கு முந்தைய பொருளாதாரத்தை சிறப்பானதாக வர்ணிக்கும் ஜேர்னல், “[மூடுவதால் ஏற்படும்] துயரம் மிகவும் மோசமாக இருக்கும் ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளில் அதிக ஆதாயமடைந்திருந்த குறைந்த தொழில்-திறமைசார் (low-skilled) தொழிலாளர்களும் உடலுழைப்பு தொழிலாளர்களுமே (blue-collar workers) பிரதானமாக பாதிக்கப்படுவார்கள்,” என்றது வலியுறுத்துகிறது.

அதிக ஆதாயம்! யாருடன் ஒப்பிடுகையில்? முதலீடுகளில் இருந்து கிடைத்த வருவாய்கள் மற்றும் கொடுப்பனவுகள் இல்லாமல், தலைமை செயலதிகாரிகள் மற்றும் ஏனைய பெருநிறுவன செயலதிகாரிகள் சராசரி தொழிலாளர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக சராசரி ஆண்டு சம்பளம் பெறுகிறார்கள்.

பாதுகாப்பற்ற வேலையிடங்களை நீண்டகாலத்திற்கு மூடுவதால் ஏற்படும் சுமைகளைக் குறித்த அதன் அனைத்து கவலைகளையும் பொறுத்த வரையில், பல கோடி பில்லியனர் பிற்போக்குவாதி ரூபேர்ட் முர்டோக்குக்கு சொந்தமாக இருக்கும் வோல்ஸ்ட்ரீட்ஜேர்னல், முன்கூட்டியே வேலைக்குத் திரும்புவதால் ஏற்படும் அதிகபட்ச இறப்பு விகிதங்களால் பாதிக்கக்கூடிய மக்களின் பிரிவுகளை அடையாளம் காணவில்லை.

வேன்றுமென்றே மறைக்கப்பட்ட திரைகள் அனைத்தையும் அகற்றிப்பார்த்தால், இக்கோரிக்கை உயிர்களைக் காப்பாற்றுவதை “பொருளாதாரத்திற்கு" எதிராக "சமன்படுத்தும்" முதலாளித்துவவாதிகளின் இலாப நலன்களுக்காக மனித உயிர்களைத் தியாகம் செய்வதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

உற்பத்தி மூலமாக வர்க்க சுரண்டல் நிகழ்வுப்போக்கு தொடர வேண்டும். உயிரிழப்பவர்களைப் பிரதியீடு செய்து கொள்ளலாம் என்பதே ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. நிதியியல் செல்வந்த தட்டுக்களைச் செல்வச் செழிபாக்குவதற்காக பங்குச் சந்தை மதிப்புகளை அதிகரிப்பது மற்றும் விரிவாக்குவதே ஒரே மேலோங்கிய அக்கறையாக உள்ளது.

வெள்ளிக்கிழமை மற்றொரு கட்டுரையில், Politico அறிவிக்கையில், “ஆமாம், நாம் பணத்திற்கு எதிராக உயிர்களை மதிப்பிட வேண்டியுள்ளது,” என்று அறிவித்தது.

அட்லாண்டிக் பெருங்கடலின் மறுபக்கத்திலும், இதே மாதிரியான வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டனில், எக்னோமிஸ்ட் பத்திரிகை வாதிடுகிறது, “COVID-19 ஒளிவு மறைவின்றி வாழ்வுக்கும், சாவுக்கும், பொருளாதாரத்திற்கும் இடையிலான விருப்பத்தெரிவுகளை முன்நிறுத்துகிறது.” அந்த வாரயிதழ் எழுதுகிறது, “இது மனம் மரத்து போனதாக இருந்தாலும் வாழ்வின் மீது சரியான மதிப்பீடாக உள்ளது, அல்லது குறைந்தபட்சம் ஏதோவொரு விதத்தில் அமைப்புரீதியில் சிந்திப்பதாக உள்ளது, வரவிருக்கும் பயங்கரமான மாதங்கள் நெடுகிலும் தலைவர்கள் அவர்களின் போக்கில் இதைத்தான் காண வேண்டியதாக இருக்கும். மருத்துவமனை சிகிச்சை அறைகளைப் போலவே, வர்த்தக பரிவர்த்தனைகளும் தவிர்க்க முடியாதவை.”

எக்னோமிஸ்ட் தொடர்ந்து எழுதுகிறது: “ஒரு குழந்தை கிணற்றில் விழுந்து விட்டால் தங்குதடையின்றி உதவ வேண்டுமென்ற விருப்பம் மேலோங்கி இருக்கும்—அதை செய்து தான் ஆக வேண்டும். ஆனால் ஒரு போரில் அல்லது ஒரு தொற்றுநோயின் போது, தலைவர்கள், ஒவ்வொரு நடவடிக்கையின் போக்கிலும் பரந்த சமூக மற்றும் பொருளாதார விலையைத் திணிக்க வேண்டியிருக்கும் என்ற உண்மையிலிருந்து தப்பிக்க முடியாது. பொறுப்பாக இருக்க வேண்டுமானால், ஒவ்வொருவரையும் மற்றவருக்கு எதிராக பணயம் வைக்க வேண்டியிருக்கும்,” என்று குறிப்பிட்டது.

“பணயத்தில்" வைப்பது என்பது எதை உள்ளடக்குகிறது? முதல் வரியில், இந்த தொற்றுநோய் அதிகரித்து வருகின்ற அதேவேளையில் விரைவாக வேலைக்குத் திரும்புவது என்றால் உயிரிழக்க கூடியவர்களின் எண்ணிகை மீது, ஒரு நாடு மாற்றி நாட்டில், ஓர் உலகளாவிய கணக்கு உள்ளது. இரண்டாவது வரியில், அங்கே மற்றொரு கணக்கு உள்ளது, ஒரு வங்கி மாற்றி வங்கியில் மற்றும் ஒரு பெருநிறுவனம் மாற்றி ஒரு பெருநிறுவனத்தில், பில்லியன் கணக்கான இலாபங்களை இழப்பது.

எக்னோமிஸ்ட் செய்தியின்படி, விருப்பத்தெரிவு தெளிவாக உள்ளது. ஆலை மூடல்கள் மற்றும் சமூக விலகலை நீண்டகாலம் கடைபிடிப்பதன் விளைவுகள், தெளிவான வணிக புத்தி கண்ணோட்டத்தில், மிகவும் கொடூரமாக சிந்திப்பதாக இருக்கும்: “சந்தைகள் சரிவடையும், முதலீடுகள் தாமதப்படும். புதிய கண்டுபிடிப்புகள் நின்று போய் திறமைகள் நலிவடையும் போது பொருளாதார சக்தி குறையும். இதன்விளைவாக, பலமக்கள்மரணித்துகொண்டிருக்கையிலும்கூட, விலகலுக்கானவிலைசலுகைகளைவிடஅதிகமாகஇருக்கும்” [அழுத்தம் சேர்க்கப்பட்டது]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மனம் மரத்து போன முதலாளித்துவ பொருளாதாரவாதியும் மனிதகுல வெறுப்பாளருமான தோமஸ் மால்தஸ் இன்னமும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் மனதில் முரசொலித்துக் கொண்டிருக்கிறார்.

உலகிற்கு அடோல்ப் ஹிட்லரை வழங்கிய ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் சார்பாக Der Spiegel எழுதுகையில், நாடுஎந்தவிதபயங்கரவிளைவுகளும்இல்லாமல்பலமாதங்களுக்கு அடைப்பில் பயணிக்க முடியும்" என்று நம்புவது "அபாயகரமான சிந்தனை" என்று அறிவிக்கிறது. ஆரம்பத்தில் "வைரஸ் ஆராய்ச்சி நிபுணர்களின் ஆலோசனையைப் பின்தொடர்ந்து கட்டுபடுத்தவியலா அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவது சரியாக இருந்தது. … ஆனால் வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில், நாம் இடைவிடாது இதை மறுமதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். அந்த தருணத்தில், பொருளாதாரத்தை மீண்டும் அதன் பாதையில் செலுத்துவதற்காக நாம் என்ன அபாயங்களை எடுக்க விரும்புகிறோம் என்பதன் மீது தீவிர முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும்,” என்று குறிப்பிடுகிறது.

முதலாளித்துவ அரசாங்கங்கள் தயாரிக்கவிருக்கும் "அபாயம்" தொழிலாள வர்க்கத்தின் உயிர்களில் இருந்து எடுக்கப்படவுள்ளது.

அரசியல் ஸ்தாபகத்தின் கணிசமான பிரிவுகளது பாகத்திலிருந்து வேலைக்குத் திரும்புவதற்கான கோரிக்கையானது, தொழிலாள வர்க்கத்திற்கும் நிதியியல் செல்வந்த தட்டுக்கும் இடையே ஒரு தெளிவான சமூக பிளவை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து சமூக மற்றும் பொருளாதார முடிவுகளும் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையின் தேவைகள் மற்றும் நலன்களின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்பதே ஆளும் வர்க்கத்தினதும் மற்றும் அதன் அனுதாபிகளினதும் கணக்கீட்டில் உள்ளது. இந்த அமைப்புமுறைக்குக் குழிபறிக்கும் அல்லது ஆளும் வர்க்கத்தின் செல்வவளத்தை அச்சுறுத்தும் எந்தவொரு கொள்கையோ அல்லது நடவடிக்கையோ சட்டவிரோதமானதாக ஆக்கப்படுகிறது.

ஆனால் புறநிலைரீதியாக முற்போக்கான மற்றும் புரட்சிகரமான சமூக சக்தியாக விளங்கும் தொழிலாள வர்க்கம் முற்றிலும் வேறுபட்ட முன்னுரிமைகள் மற்றும் நலன்களைக் கொண்டுள்ளது, இது அடிப்படையிலேயே முதலாளித்துவவாதிகளின் முன்னுரிமைகள் மற்றும் நலன்களுடன் பொருத்தமற்றது.

தொழிலாளர்களின் அதிகரித்து வந்த வெளிநடப்பு அலைக்கு இடையே, கடந்த மாதம் பிரதான டெட்ராய்ட் வாகன உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்த நிர்பந்திக்கப்பட்டனர். அமசன், இன்ஸ்டாகார்ட் மற்றும் வோல் ஃபுட்ஸ் நிறுவனங்களின் பணியாளர்கள் பாதுகாப்பான வேலையிட நிலைமைகளைக் கோரியும் மற்றும் அத்தியாவசியமல்லாத உற்பத்தியை மூடவும் கோரி வேலைநிறுத்தத்தில் இறங்கினர். செவிலியர்களும் மற்ற மருத்துவத்துறை தொழிலாளர்களும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பாதுகாப்பு சாதனங்களைக் கோரி போராட்டங்களைத் தொடுத்தனர்.

இந்த தொற்றுநோயில் ஒரேயொரு முன்னுரிமை தான் இருக்க முடியும்: அதாவது உயிர்களைக் காப்பாற்றுவது. போதுமான பரிசோதனை மற்றும் சுவடுகளைப் பின்தொடரும் நடைமுறைகள் ஏற்படுத்தப்படும் வரையில் அத்தியாவசியமல்லாத அனைத்து உற்பத்தியும் நிறுத்தப்பட வேண்டும். மருத்துவம், போக்குவரத்து, மற்றும் உணவு சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் உட்பட அனைத்து இன்றியமையா தொழிலாளர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டு, பாதுகாப்பான வேலையிட நிலைமைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

ஆம், பொருளாதார கடுமை சம்பந்தமான பிரச்சினையும் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான ஒன்று தான். தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளுக்கு பாதுகாப்பாக திரும்புவதை இந்நோய் சாத்தியமில்லாது செய்து வைத்திருக்கும் வரையில் அவர்களுக்கு முழுமையாக நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். இந்த பொருளாதார ஆதாரவளங்கள், பெருநிறுவனங்களின் பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பை இரத்து செய்வதில் இருந்து எடுக்கப்பட்டு, அந்த நிதிகளை உழைக்கு மக்களுக்கு உதவியாக மறுஒதுக்கீடு செய்வதன் மூலமாக கொண்டு வரப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்கான போராட்டமானது, பொருளாதார வாழ்வு மீதான தனியார் முதலாளித்துவ கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து, மிகப்பெரும் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளைத் தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி, அவ்விதத்தில் தனியார் இலாபத்தை உருவாக்குவதற்காக அல்லாமல், மாறாக உலகளவில் மனிதகுல நலன்களை அபிவிருத்தி செய்வதன் அடிப்படையில் ஒரு சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிக்கும் ஒரு பரந்த போராட்டத்தினுள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

உலகசோசலிசவலைத் தளம் கடந்த வாரம் எழுதியதைப் போல, “முதலாளித்துவ இலாப அமைப்புமுறையும் மரணமுமா அல்லது சோசலிசமும் உயிர்வாழ்வுமா என்பதையே மாற்றீடுகளாக முன்நிற்கின்றன.”

Loading