“இந்த அமைப்புமுறை மீதான எனது நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன்”

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆராய்ச்சியாளரான மவுரோ ஃபெராரி கோவிட்-19 குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயலற்ற தன்மையைக் கண்டிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம், ஏப்ரல் 7 அன்று, புகழ்பெற்ற nanomedicine ஆராய்ச்சியாளரான மவுரோ ஃபெராரி (Mauro Ferrari) ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுவின் (European Research Council-ERC) தலைவர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். அதாவது, கோவிட்-19 க்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) முழுவதிலுமான விஞ்ஞானிகளை அணிதிரட்டுவதற்கு அவர் எடுத்த முயற்சிகளை ERC இன் அறிவியல் குழு எதிர்த்தது.

ஃபெராரி வெளியேற்றப்படுவது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் தார்மீக திவால்நிலை சார்ந்த பேரழிவுகரமான குற்றச்சாட்டை முன்வைக்கிறது. ஃபெராரி தனது இராஜிநாமா கடிதத்தில், சீனாவிலும் தென்கொரியாவிலும் எடுக்கப்பட்ட நீண்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகளாலேயே இந்த நோய்தொற்று வெடிப்பு அங்கு கட்டுப்படுத்தப்பட்டது என்ற நிலையில், ஐரோப்பாவில் அண்மித்து ஒரு மில்லியன் நோயாளிகளை உருவாக்கியும், மேலும் 80,000 க்கும் மேற்பட்டோரை பலிகொண்டும் இன்னும் பரவி வரும் நோய்தொற்று குறித்து ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டே நடவடிக்கை ஏதும் எடுக்காது செயல்படுவதாகக் கண்டிக்கிறார். உலகளவில், ஏற்கனவே 1.8 மில்லியனுக்கும் மேலான கோவிட்-19 நோயாளிகள் இருப்பதுடன், 113,000 பேர் அதற்கு பலியாகியுள்ளனர்.

ஃபெராரி தனது கடிதத்தை, “தயவுசெய்து என்னை மன்னியுங்கள், நோய்தொற்றை தடுப்பதே இப்போது முன்னுரிமையானது என்று நான் நம்புகிறேன். அதாவது, மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதே முன்னுரிமையானது. … விஞ்ஞானம் என்பது சமூகத்திற்கு சேவையாற்றுவதற்குத்தான் என்று நான் நம்புகிறேன், அதிலும் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் உயிர்கள் பலியாகும் தற்போதைய சூழ்நிலையில் அது மிகவும் அவசியம். மேலும், தற்போது மிகஅதிக எண்ணிக்கையில் உயிர்பலி நிகழ்ந்து கொண்டிருக்கையில், கோவிட்-19 உம் மற்றும் அதன் தொடர்ச்சியான தொற்றுக்களும் விஞ்ஞானத்தின் மூலமாக மட்டுமே எப்போதும் தோற்கடிக்கப்படும்” என்று தொடங்குகிறார்.

Mauro Ferrari (center), appearing at a press conference at the 2020 World Economic Forum in Davos, Switzerland. (Image Credit Flickr/WorldEconomicForum)

மவுரோ ஃபெராரி (மத்தியில் இருப்பவர்), சுவிட்சர்லாந்தின், டாவோஸில் 2020 உலக பொருளாதார கருத்தரங்கில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தோன்றுகிறார் (Image Credit Flickr/WorldEconomicForum)

ஜனவரி 2020 இல் கோவிட்-19 நோய்தொற்று பரவ ஆரம்பித்த நேரத்தில் தான் அவர் ERC இன் தலைவரானார். இத்தாலியின் உடின் நகரத்தின் தொழிலாள வர்க்கப் பகுதியைச் சேர்ந்த ஃபெராரி இயந்திர பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் 1995 இல் அவரது முதல் மனைவி மரிலூயீசா திடீரென புற்றுநோயால் இறந்த பின்னர் உயிரியல் மருத்துவத்துறையில் நுழைந்து அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சென்ற ஆண்டு, ERC, “அமெரிக்காவில், ஆராய்ச்சித்துறையிலும் மற்றும் அதன் பயன்பாடுகளிலும் முற்றுமுழுதான மற்றும் பல்வேறுபட்ட பின்னணியுடன் கூடிய ஒரு திறமையான விஞ்ஞானியாகவும் தலைவராகவும் இருந்தார்” என்று ஃபெராரியைப் புகழ்ந்து, தலைவராக இவர் பரிந்துரைக்கப்படுவதை “முழுமனதுடன்” ஆதரித்ததாக தெரிவித்தது.

“ஐக்கிய ஐரோப்பாவின் இலட்சியம்மிக்க கனவுக்கான அர்ப்பணிப்புடனும், மற்றும் உலகின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தனது நம்பிக்கையுடனும்” ERC ஐ வழிநடத்தவே ஐரோப்பாவிற்கு தான் திரும்பியதாக தனது இராஜிநாமா கடிதத்தில் ஃபெராரி குறிப்பிடுகிறார்.

என்றாலும், “நான் பதவியேற்று முன்றே மாதங்களில் அந்த இலட்சியவாத உந்துதல்கள் மிகவும் வேறுபட்ட யதார்த்தத்தால் நசுக்கப்பட்டன. ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளைத் தூண்டுவது, எனது கற்பனைக்கு முற்றிலும் மாறான ஒரு உலகின் வலிமிகுந்த பனிக்கட்டி போன்ற, குளிர்ச்சியான அங்கீகாரங்களுக்கு வழிவகுத்தது. கோவிட்-19 நோய்தொற்று நான் எவ்வளவு தவறாக நடந்து கொண்டுள்ளேன் என்பதை கொடூரமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மேலும், அவசர காலங்களில் தான், மக்களும் நிறுவனங்களும், தங்களது ஆழ்ந்த இயல்புக்குத் திரும்பி உண்மையான தன்மையை வெளிப்படுத்துகின்றனர்” என்றும் சேர்த்துக் குறிப்பிட்டார்.

மில்லியன் கணக்கானவர்களின் தலைவிதியைக் கூட பொருட்படுத்தாமல், முதலாளித்துவ பிரபுத்துவத்தின் ஊழல்மிக்க கருவியாகவே ஐரோப்பிய ஒன்றியம் செயல்படுகிறது என்பதை கோவிட்-19 நோய்தொற்று அம்பலப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கி ஏனைய வங்கிகளுக்கு 750 பில்லியன் யூரோ பிணையெடுப்பு வழங்கியது, அதன் பின்னர் ஒவ்வொரு முக்கிய யூரோ மண்டல நாடும் பல நூறு பில்லியன் யூரோ பிணையெடுப்பு வழங்கியது என்றாலும், இந்த கொடிய நோய் பரவுவதை தடுத்து நிறுத்த மாட்டோம் என்றே ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்நிலையில் அதற்கு மாறாக, இங்கிலாந்து அதிகாரிகள் “கூட்டு எதிர்ப்புசக்தி (herd immunity)” என்றழைப்பதை தப்பி பிழைக்கும் பெரும்திரளான தொழிலாளர்கள் பெறுவார்கள் என்று நம்பிக்கை வைத்து, நோய்தொற்று மக்களை பாதிக்க அவர்கள் அனுமதிக்கக்கூடும். மனித வாழ்க்கை குறித்து அதிர்ச்சியூட்டும் வகையிலான அலட்சியத்துடன், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், 70-90 சதவிகித (அதாவது 56-72 மில்லியன் மக்கள்) ஜேர்மனியர்கள் நோய்வாய்ப்படுவார்கள் என்று அமைதியாக முன்கணித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம், பேர்லின் மற்றும் பாரிஸூடன் சேர்ந்து அண்டை நாட்டை பிச்சைக்காரனாக்குவதன் மூலம் தனது நாட்டு பிரச்சனையை தீர்த்துக்கொள்ளும் கொள்கைகளை ஏற்று கோவிட்-19 நோய்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான இத்தாலிக்கு முக்கிய மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்ய மறுத்துள்ளது. இது, கோவிட்-19 க்கு எதிரான ஒருங்கிணைந்த சர்வதேச போராட்டத்திற்காகவும் மற்றும் நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் வாதிட்ட விஞ்ஞானிகளுடன் மோதும் நிலைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தை தள்ளியது. மேலும் ஃபெராரி இவ்வாறு விளக்கமளிக்கிறார்:

இந்த நோய்தொற்று, முன்னொருபோதும் இல்லாதளவிலான விகிதாசாரங்களின் மோசமாக இருக்கக்கூடும் என்பது தெளிவாகத் தெரிந்தவுடன், ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழு கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடும் ஒரு சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று நான் முயற்சித்தேன். மரணம், துன்பம், சமூக மாற்றம் மற்றும் பொருளாதார பேரழிவு, குறிப்பாக குறைந்த அதிர்ஷ்டசாலிகளை, அதாவது உலக சமூகங்களில் மிக பலவீனமானவர்களை தாக்குவது ஆகிய எதிர்பார்க்கப்பட்ட சுமைகளால் இது நியாயமானது என்று நான் நம்பினேன். இதுபோன்றதொரு நேரத்தில், அரசியல் தலைவர்களிடையே பெரும்பாலும் நிலவுவதான முன் ஆயத்தமில்லாத உள்ளுணர்வுகளை மாற்றுவதற்கு, உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளுக்கு நோய்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கென புதிய மருந்துகள், புதிய தடுப்பூசிகள், புதிய நோய்கண்டறியும் கருவிகள், விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நடைமுறையிலான சக்திவாய்ந்த அணுகுமுறைகள் என்ற வகையில் மூலவளங்களும் வாய்ப்புக்களும் வழங்கப்பட வேண்டும் என்று நான் நினைத்தேன்.

ஃபெராரி, தனது திட்டங்கள், “ஐரோப்பிய ஆணைய நிர்வாகத்தின் வெவ்வேறு அடுக்குகளுக்கு அனுப்பப்பட்டது, அங்கு அவ்வடுக்குகளின் தாக்கத்தினால் அவை சிதைந்துபோயின என்றே நான் நம்புகிறேன். …அங்கத்துவ நாடுகளிடையே சுகாதார பாதுகாப்புக் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு முற்றிலும் இல்லாதிருந்தது, ஒருங்கிணைந்த நிதியுதவி முயற்சிகளுக்கு இருந்த தொடர்ச்சியான எதிர்ப்பு, பரவலான ஒரு-பக்க எல்லை மூடல்கள், மற்றும் குறுகிய அளவிலான ஒருங்கிணைந்த விஞ்ஞான முன்முயற்சிகள் என்ற வகையிலான கோவிட்-19 க்கான ஐரோப்பிய விடையிறுப்பை கண்டு நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்” என்று எழுதினார்.

கடந்த மூன்று மாதங்களின் கிடைத்த கசப்பான அனுபவங்களின் அடிப்படையில், ERC இன் தலைவரான போது ஃபெராரி கொண்டிருந்த நப்பாசைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று அவருக்கு வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளது என்பதே உண்மை.

“பொதுவான மற்றும் வெளிப்படையான முறையில் எனது மிகுந்த மன்சாட்சியுடன் கூடிய ஆலோசனையை தொடர்ந்து வழங்குவேன்” என்று உறுதியளித்தாலும், “விஞ்ஞானத்தின் ஆளுகை, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் நடவடிக்கைகள் இரண்டையும் போதுமானளவு நான் பார்த்திருக்கிறேன் என்பதால் நான் பயப்படுகிறேன். இந்த நீண்ட முன்று மாத காலத்தில், உண்மையில், ERC மற்றும் EC அமைப்புக்களின் வெவ்வெறு மட்டங்களிலான பல சிறந்த மற்றும் அர்பணிப்புமிக்க நபர்களை நான் சந்தித்தேன். என்றாலும், அமைப்புமுறை மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன்” என்று ஃபெராரி குறிப்பிடுகிறார்.

ஃபெராரி வெளியேற்றப்பட்டது பற்றி ERC இன் அறிக்கை ஆராய்வது அவரது விமர்சனங்களை நிரூபிக்கிறது. ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்ட ஆராய்ச்சிக்கு நிதியளிப்பதற்காக அவர் “ERC இன் இருப்பின் தேவைக்கு சிறிதும் அக்கறை காட்டவில்லை” என்று கூறி ஃபெராரியின் விஞ்ஞான சாதனையை முன்னர் அது பாராட்டியதிலிருந்து சரியாக 180பாகை திரும்புகிறது. அதே நேரத்தில், நோய்தொற்று பற்றி விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திற்காக “தனிப்பட்ட முயற்சிகளை” மேற்கொள்வது, மற்றும் “வெளி நிறுவனங்கள், சில கல்வி மற்றும் சில வணிக நிறுவனங்களை” சந்திப்பது குறித்து “அமெரிக்காவில் மிகநீண்ட காலத்தை” செலவழித்தார் என்று அவரைப் பற்றிய விமர்சனங்களை இது வெளியிடுகிறது.

கோவிட்-19 உட்பட “புதிய திட்டங்களை உருவாக்குவதில் ஏற்கனவே செயலூக்கத்துடன் இது ஈடுபட்டுள்ளதாக” கூறி தனது சொந்த பதிவை ERC அறிக்கையும் பாதுகாக்கிறது.

இது பரிதாபகரமான ஏமாற்றுவித்தையாக உள்ளது. ERC அறிக்கை, பல ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஆராய்ச்சிக்கு அது அளித்த நிதியுதவியின் “மொத்த மதிப்பு 100 மில்லியன் யூரோவை எட்டியுள்ளது” என்று மதிப்பிடுகிறது. இதன் பொருள் என்னவென்றால், கோவிட்-19 மில்லியன் கணக்கானவர்களை பலி கொள்வதற்கும் மற்றும் கோடிக்கணக்கானவர்களை வேலையிழக்கச் செய்வதற்கும் அச்சுறுத்தினாலும், அதை எதிர்த்துப் போராட ERC அதன் 100 பில்லியன் யூரோவை ஐரோப்பிய பிராந்தியத்திற்கான நிதியில் சுமார் 0.1 சதவிகிதத்தையே ஒதுக்கீடு செய்கிறது. இதற்கிடையில், எண்ணிலடங்கா நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை செல்வந்தர்களின் பைகளில் திணித்து வருகிறது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் இழிவான பல்கலைக்கழக சீர்திருத்தங்களின் முன்னணி ஆதரவாளரான சோர்போன் பல்கலைக்கழக தலைவர் ஜோன் சம்பாஸ் (Jean Chambaz), ஐரோப்பிய ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களின் குழுவின் (League of European Research Universities - LERU) தலைவராக ஃபெராரியை தாக்கி ஒரு கடிதம் எழுதினார். ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) மத்திய குழு உறுப்பினரின் மகனான சம்பாஸ் இந்த கடிதத்தில், “சுயாதீனமான கீழ்நிலை ஆராய்ச்சியின் முக்கியத்துவம்” மற்றும் “இந்த திறந்த மற்றும் இலவச ஆராய்ச்சியை” ஆதரிப்பதில் ERC இன் பங்கு தொடர்பாக ஃபெராரிக்கு விரிவுரை நடாத்துகின்றார்.

கோவிட்-19 குறித்த ERC இன் பதிவை பாதுகாக்கவும் மற்றும் ERC க்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகபட்ச நிதியுதவிக்கு விண்ணப்பிக்கவும் சம்பாஸ் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டார். “இது அதன் வெற்றிக்காக உலகளவில் போற்றப்பட்டது. தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளியேற ஐரோப்பிய ஒன்றியம் வடிவமைக்கும் முதலீட்டுத் திட்டத்தில் இது இன்னும் ஆதரிக்கப்பட வேண்டும்” என்றார்.

தற்போதுள்ள ஐரோப்பிய அமைப்புகளின் மூலமாக கோவிட்-19 க்கு எதிராக ஒரு பகுத்தறிவு மிக்க, விஞ்ஞானபூர்வ மற்றும் சர்வதேச ரீதியிலான கொள்கைக்காக போராட இயலாது என்பதற்கு ஃபெராரியின் வெளியேற்றம் சாட்சியமளிக்கிறது. ஐரோப்பாவில் நோய்தொற்றைத் தடுப்பதற்கு பொதுச் சுகாதார நடவடிக்கைகளை விதித்தது தொழிலாள வர்க்கம் தான். அதாவது, இத்தாலி மற்றும் பிரான்சில் ஆரம்பகட்ட வீட்டில் அடைந்திருக்கும் கொள்கைகளுக்கு தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட பெரும் திடீர் வேலைநிறுத்தங்களும் வெளிநடப்புக்களும்தான் வழிவகுத்தன. கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட அனைத்து சமூகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்துறை வளங்களையும் திரட்டுவதற்கு, அரசு அதிகாரத்திற்கான போராட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக ஐரோப்பா முழுவதிலுமான தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும்.

Loading