லெனின் பிறப்புக்குப் பின்னர் நூற்று ஐம்பது ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்ய நகரம் சிம்பேர்ஸ்க்கில் ஏப்ரல் 22, 1870 இல் விளாடிமீர் இலியிச் உல்யானொவ் (Vladimir Ilyich Ulyanov) பிறந்து 150 ஆம் நினைவுதினத்தை இன்று குறிக்கிறது. வரலாற்றில் லெனின் என்ற பெயரில் அறியப்பட்ட அவர் போல்ஷிவிக் கட்சியின் ஸ்தாபகரும், 1917 அக்டோபர் புரட்சியின் தலைவரும் ஆவார், ஐயத்திற்கிடமின்றி இருபதாம் நூற்றாண்டு அரசியல் மற்றும் புத்திஜீவித வரலாற்றில் அவர் ஒரு தலைசிறந்த பிரதிநிதியாக விளங்கினார்.

லெனினின் முழு வடிவமும் அக்டோபர் புரட்சியில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளதாக லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை எழுதினார். 1917 சம்பவங்களின் வரலாற்றைக் குறித்து ட்ரொட்ஸ்கி எழுதிய போது, தனது கருத்துக்களின் அர்த்தத்தை அவர் வெளிச்சமிட்டு காட்டினார்: “ஆலைகள், முகாம்கள்; கிராமங்கள், முன்னணி மற்றும் சோவியத்களுக்கு அப்பாற்பட்டு, அந்த புரட்சி இன்னொரு ஆய்வகத்தையும் கொண்டிருந்தது: அதுதான் லெனினின் மூளை.”

அந்த மூளை தசாப்தங்களாக புரட்சியின் பிரச்சினை குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தது. அக்டோபர் 1917 இல் ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியமை பின்வரும் இரண்டு உலக வரலாற்று நிகழ்வுபோக்குகள் ஒன்றோடொன்று சந்தித்ததைக் குறித்தது: 1) ரஷ்ய மற்றும் உலக முதலாளித்துவ முரண்பாடுகளின் அபிவிருத்தி; 2) மெய்யியல் சடவாதத்தை அடிப்படையாக கொண்ட, அதாவது, முதலாளித்துவத்தின் எல்லா அரசியல் முகமைகளிடமிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்தை ஸ்தாபித்து, தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியைக் கட்டமைப்பதற்காக புறநிலை சமூக-பொருளாதார நிலைமைகள் மீதான மார்க்சிச பகுப்பாய்வை அடிப்படையாக கொண்ட லெனினின் நீடித்த போராட்டம்.

லெனினின் மேதைமை பொருந்திய தனித்துவமான வரலாற்று பாத்திரத்தை மதிப்பிட முயன்றால், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸினை தவிர்த்து சோசலிச இயக்க வரலாற்றில் அங்கே வேறெந்த பிரதிநிதியும் இல்லை என்று கூறலாம். இயற்கை விஞ்ஞானத்தின் (மிகவும் குறிப்பாக பௌதீகத்தின்) சமீபத்திய அபிவிருத்திகளால் வளப்படுத்தப்பட்டிருக்கும் — மெய்யியல் சடவாதத்தை நனவுபூர்வமாக பயன்படுத்துவதற்கும் மற்றும் அரசியல் பகுப்பாய்வு மற்றும் புரட்சிகர மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இடையிலான உறவு அவரின் அரசியல் வேலைகளில் அந்தளவுக்கு வெளிப்படையாக, திட்டமிட்ட விதத்தில், உள்ளார்ந்து ஒருங்கிணைந்த வெளிப்பாட்டை எட்டியது.

Lenin speaking in 1919

லெனினின் தத்துவார்த்த-அரசியல் பணியின் மிகவும் மலைப்பூட்டும் தன்மை, தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவை உயர்த்தவும், அவ்விதத்ததில், புறநிலை சமூக-பொருளாதார தேவைக்கேற்ப அதன் நடைமுறைகளை ஒழுங்கமைக்க உதவவும், தசாப்தங்களுக்கு நீண்டிருந்த அதன் ஒன்றுதிரண்ட முயற்சியாக இருந்தது. முதலாளித்துவ தார்மீகவாதிகளும், எண்ணற்ற கல்வித்துறையாளர்களும், லெனினிசத்தின் மற்ற எதிரிகளும் தலைச்சிறந்த புரட்சியாளர்களின் "ஈவிரக்கமற்றத்தன்மையை" மீண்டும் மீண்டும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் அந்த வார்த்தையைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். லெனினின் "ஈவிரக்கமற்றத்தன்மை" இன் அரசியல் சாராம்சம், மீண்டும் ட்ரொட்ஸ்கியை மேற்கோளிடுவதானால், “புரட்சிகர நடவடிக்கை என்ற நிலைப்பாட்டில் இருந்து, யதார்த்தத்தை உயர்ந்தமட்டத்தில் அளவியல்ரீதியாகவும் பண்பியல்ரீதியாகவும் (qualitative and quantitative) மதிப்பீடு" செய்வதில் இருந்தது.

1894 இல் எழுதப்பட்டு அவரின் தேர்வு நூல் திரட்டுகளின் தொகுதி ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட "மக்களின் நண்பர்கள்" என்பவர் யார், அவர்கள் சமூக ஜனநாயகவாதிகளை எவ்வாறு எதிர்த்து போராடுகிறார்கள்" (What the “Friends of the People” Are and How they Fight the Social Democrats) என்று தலைப்பிட்ட லெனினின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்று மெய்யியல் சடவாதத்தின் உணர்வுபூர்வமான பாதுகாப்பாக இருந்தது என்பதைக் குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். அதில் அவர் வெகுஜன தத்துவார்த்தவாதி நிக்கோலைய் மிக்கைய்லொவ்ஸ்கியின் (Nikolai Mikhailovsky) "அகநிலை சமூகவியலை" (“subjective sociology”) எதிர்த்தார். “சிந்தனைகளின் போக்கு விடயங்களின் போக்கைச் சார்ந்துள்ளது" என்ற சடவாத நிலைப்பாடு "மட்டுமே விஞ்ஞானபூர்வ உளவியலுக்குப் பொருத்தமான ஒன்று" என்று லெனின் எழுதினார். லெனின் தொடர்ந்து குறிப்பிடுகையில்:

இதுநாள் வரையில், சமூகவியலாளர்கள் சமூக இயல்நிகழ்வின் சிக்கலான வலையமைப்பில் முக்கியமானதையும் முக்கியத்துவமற்றதையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவதை (இதுதான் சமூகவியல் அகநிலைவாதத்தின் வேர்) சிரமமாக கண்டனர், மேலும் அதுபோன்றவொரு வரையறைக்கான எந்தவொரு புறநிலையான காரணியையும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர். சடவாதம், “உற்பத்தி உறவுகளை" சமூக கட்டமைப்பாக எடுத்துக்காட்டியதன் மூலமாக, முற்றிலும் புறநிலை வரையறைகளை வழங்கியதுடன், அந்த உறவுகளுக்குப் பொருத்திப் பார்க்கக்கூடியதாகவும் அதை ஆக்கியது, மறுநிகழ்வு மீதான இந்த பொதுவான விஞ்ஞானபூர்வ காரணி சமூகவியலுக்குப் பொருந்துவதை அகநிலைவாதிகள் மறுத்தனர். [தேர்வு நூல் திரட்டு, தொகுதி 1, பக்கம் 140]

சடவாதத்தை லெனின் பாதுகாத்ததற்கு அடித்தளத்தில் தீர்க்கமான அரசியல் முன்னோக்கு மற்றும் மூலோபாய கேள்விகள் இருந்தன: சோசலிச இயக்கத்தின் பணி எந்த சமூக சக்தியை நோக்கி நோக்குநிலை கொண்டிருக்க வேண்டும்? விவசாயிகளையா அல்லது தொழிலாள வர்க்கத்தையா? என்பனவே அவையாகும்.

புறநிலை சமூக-பொருளாதார நிகழ்வுபோக்குகளின் மீதான ஒரு துல்லியமான பகுப்பாய்வுக்கான லெனினின் வலியுறுத்தல், அரசியல் செயலின்மையுடன் (political passivity) எதையும் பொதுவாக கொண்டிருக்கவில்லை, அதில் வரலாறு அதன் போக்கை எடுக்கும் வரையில் வெறுமனே சோசலிசவாதி காத்திருக்க வேண்டியிருக்கும். லெனின் சடவாதத்தையும் (materialism) புறநிலைவாதத்தையும் (objectivism) ஒன்றுக்கொன்று எதிரெதிராக நிறுத்தினார்:

புறநிலைவாதி ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுபோக்கின் அவசியத்தைக் குறித்து பேசுகிறார்; சடவாதியோ ஒரு குறிப்பிட்ட சமூக-பொருளாதார உருவாக்கம் மற்றும் அது மேல் எழுப்பும் எதிர்விரோத உறவுகளைக் குறித்து ஒரு துல்லியமான சித்திரத்தை வழங்குகிறார். குறிப்பிட்ட பல உண்மைகள் மீதான அவசியத்தை எடுத்துக்காட்டும் போது, புறநிலைவாதி எப்போதுமே இத்தகைய உண்மைகளுக்கு வக்காலத்து வாங்குபவராக மாறிவிடக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறார்: சடவாதியோ வர்க்க முரண்பாடுகளை வெளிப்படுத்திக் காட்டுவதுடன், அவ்வாறு செய்கையில் அவரின் நிலைப்பாட்டை வரையறுக்கிறார். புறநிலைவாதி "தீர்க்கவியலா வரலாற்று போக்குகளைக்" குறித்து பேசுகிறார்; சடவாதியோ மற்ற வர்க்கங்களின் எதிர்நடவடிக்கைகளை மேலெழுப்பும் மற்றும் அத்தகைய எதிர்நடவடிக்கைகளின் வடிவங்களை மேலெழுப்பும் ஒரு குறிப்பிட்ட பொருளாதார அமைப்புமுறையை "வழிநடத்தும்" வர்க்கத்தைக் குறித்து பேசுகிறார். இவ்விதத்தில், ஒருபுறம், சடவாதி புறநிலைவாதியை விட முரண்பாடின்றி மிகவும் தொடர்ச்சியான தன்மையைக் கொண்டிருப்பதுடன், அவரின் புறநிலைவாதத்திற்கு ஆழமான மற்றும் முழுமையான தாக்கத்தை கொடுக்கின்றார். அவர் ஒரு நிகழ்வுபோக்கின் அவசியத்தைக் குறித்து பேசுவதுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்வதில்லை, மாறாக அவர் எந்த சமூக-பொருளாதார உருவமைப்பு இந்த நிகழ்வுபோக்கிற்கு அதன் உள்ளடக்கத்தை வழங்குகிறது, துல்லியமாக எந்த வர்க்கம் இந்த அவசியத்தைத் தீர்மானிக்கிறது என்பதை நிலைநிறுத்துகிறார் … அதற்காக எடுத்துக் கூறுவதானால், சடவாதம் ஒருதலைபட்சமாக இருப்பதை உள்ளடக்கி உள்ளதுடன், சம்பவங்களின் எந்தவொரு மதிப்பீட்டிலும் ஒரு தீர்க்கமான சமூக குழுவின் நிலைப்பாட்டைப் பகிரங்கமாகவும் நேரடியாகவும் ஏற்பதையும் இணைத்துக்கொள்கின்றது. [தேர்வு நூல் திரட்டு, தொகுப்பு 1, பக்கம் 400-01]

இந்த பந்தி "சட்டபூர்வ மார்க்சிசவாதி"யும் பின்னர் ரஷ்ய முதலாளித்துவ தாராளவாதிகளின் எதிர்கால தலைவருமான Pyotr Struve க்கு விடையிறுப்பாக எழுதப்பட்டது என்றாலும், ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் மென்ஷிவிக் போக்குக்கு எதிரான லெனினின் போராட்டத்தை அது முன்கூட்டியே காட்டியது. எதிர்வரவிருந்த முதலாளித்துவ ஜனநாயக புரட்சியில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் தலைமையைத் தொழிலாள வர்க்கம் ஏற்றுக் கொள்வேண்டும் என்பதை மென்ஷிவிக் போக்கு கோரியிருந்தது.

ஜாரிச பொலிஸால் 1895 இல் கைது செய்யப்பட்ட லெனின், அதற்கடுத்த ஐந்தாண்டுகள் சிறையிலும் சைபீரிய நாடுகடத்தலிலும் செலவிடவேண்டி இருந்தது. இந்த ஆண்டுகள் ஆழ்ந்த அளப்பரிய தத்துவார்த்த பணிகளுக்கு மதிப்புடைய ஆண்டுகளாக இருந்தன. இதில் ஹெகலிய மெய்யியலை அவர் ஆய்வு செய்தமை மற்றும் இயங்கியலில் ஈடுபட்டு அதன் விளைவாக அதில் மேதைமை கொண்டதும் உள்ளடங்கும்.

லெனினின் நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை காலம் 1900 இல் நிறைவடைந்து, அவர் விரைவிலேயே மேற்கு ஐரோப்பா வந்தடைந்தார், அங்கே அவர், ஆரம்பத்தில் ஒரு சிரமமான எதிர்ப்புக்கு மத்தியிலும், “ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை" ஜி. வி. பிளெக்ஹானோவ் உடன் நெருக்கமாக ஒத்துழைக்க தொடங்கினார்.

அந்த நூற்றாண்டு திருப்பத்தின் போது, ஐரோப்பிய சமூக ஜனநாயக இயக்கம் எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் (Eduard Bernstein) தலைமையில் மார்க்சிசத்திற்கு ஒரு திரித்தல்வாத சவாலை எதிர்கொண்டது. அரசியல்ரீதியில், திரித்தல்வாதமானது சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை முதலாளித்துவ தொழிற்சங்கவாத சீர்திருத்தவாதத்தைக் கொண்டு பிரதியீடு செய்ய முயன்றது. தத்துவார்த்தரீதியில், அது இயங்கியல் சடவாடத்திற்கு எதிராக கல்வியாளர் நவ-கான்டியனிசத்தின் கருத்துவாத மெய்யியலை முன்னெடுத்தது.

1898 க்கும் மற்றும் 1914 இல் முதலாம் உலக போர் வெடிப்புக்கும் இடையில் ஐரோப்பிய சமூக ஜனநாயக இயக்கத்தின் அடுத்தடுத்த அபிவிருத்தியின் வெளிச்சத்தில், திரித்தல்வாதத்திற்கு எதிரான தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தில் ஜேர்மன் சோசலிச ஜனநாயகவாதிகள் அல்ல, மாறாக போலாந்து மார்க்சிஸ்ட் ரோசா லுக்செம்பேர்க், ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் (RSDLP) இரண்டு முக்கிய பிரதிநிதிகளான பிளெக்ஹானோவ் மற்றும் லெனினால் தான் மிக முக்கிய பங்களிப்புகள் வழங்கப்பட்டன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

லுக்செம்பேர்க்கின் சீர்திருத்தமா அல்லது புரட்சியா எழுத்துக்கள், பேர்ன்ஸ்டைன் திருத்தல்வாதத்தின் அரசியல் விளைவுகளின் அழிவுகளை வெளிப்படுத்திக் காட்டின. பேர்ன்ஸ்டைன் மற்றும் அவர் ஆதரவாளர்களின் நவ-கான்டிய திருத்தல்வாதம் மீதான பிளெக்ஹானோவின் விமர்சனம், இன்று வரையில், இயங்கியல் சடவாதத்தின் வரலாற்று அபிவிருத்தி மற்றும் தத்துவார்த்த அணுகுமுறையின் மிகவும் அறிவார்ந்த விளக்கங்களில் ஒன்றாக உள்ளது.

எவ்வாறிருப்பினும், திரித்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு “என்ன செய்ய வேண்டும்?” (What Is To Be Done?) என்ற பிரசுரம் லெனினின் பங்களிப்பாக இருந்தது. அது தத்துவார்த்தரீதியில் மிகவும் துல்லியமானதாகவும், அரசியல்ரீதியில் தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும் நிரூபணமானது. அவர் காலத்தில் காவுட்ஸ்கி உட்பட வேறெந்த மார்க்சவாதியையும் விட அதிக ஆழத்துடனும் நிலைப்புத்தன்மையுடனும் இருந்த லெனின், மார்க்சிச தத்துவத்தை குறைத்துமதிப்பிடும் அரசியல் உள்நோக்கங்கள் மற்றும் புறநிலை முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி விளக்கினார்.

அனைத்திற்கும் மேலாக, லெனின் சந்தர்ப்பவாதத்தின் தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியிலான அனைத்து வெவ்வேறு வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்திற்கும் புரட்சிகர கட்சியைக் கட்டமைப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதற்கும் இடையிலான பிரிக்கவியலாத இணைப்பை எடுத்துக்காட்டினார்.

சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்கான விளக்கமான போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துக்காட்டி, அதற்கு பதிலாக, தொழிலாள வர்க்கத்தின் நனவு மற்றும் நடைமுறையின் தன்னியல்பான அபிவிருத்தியைப் பெருமைப்படுத்திய அனைத்து சந்தர்ப்பவாத போக்குகளையும் கண்டித்து, லெனின் பின்வருமாறு எழுதினார்:

பெருந்திரளான உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுபோக்கில் அவர்களாலேயே நெறிப்படுத்தப்படும் ஒரு சுயாதீனமான சித்தாந்தம் குறித்து எதையும் பேசமுடியாது என்பதால், அங்குள்ள ஒரே விருப்பத்தேர்வு —முதலாளித்துவமா அல்லது சோசலிச சித்தாந்தமா என்பதாகவே உள்ளது. அங்கே இடைத்தேர்வு எதுவும் இல்லை (மனிதகுலம் ஒரு "மூன்றாவது" சித்தாந்தத்தை உருவாக்கி இருக்கவில்லை, அனைத்திற்கும் மேலாக, வர்க்க எதிர்விரோதங்களால் சிதைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் ஒருபோதும் வர்க்கமில்லாத அல்லது வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட சித்தாந்தம் இருக்க முடியாது). ஏதேனும் விதத்தில் சோசலிச சித்தாந்தத்தைக் குறைத்துக் காட்டுவது, அதிலிருந்து மிகச் சிறிய அளவிலேனும் ஓரமாக ஒதுக்கிவிடுவது, என்பது முதலாளித்துவ சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது. அங்கே தன்னியல்பைக் (spontaneity) குறித்து நிறைய பேசுகிறார்கள். ஆனால் தொழிலாள வர்க்க இயக்கத்தின் தன்னியல்பான (spontaneous) அபிவிருத்தி முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு அது கீழ்படிவதை நோக்கி இட்டுச் செல்கிறது. [தேர்வு நூல் திரட்டு, தொகுதி 5, பக்கம் 384]

அவர் தொழிலாள வர்க்கத்திற்கான முதலாளித்துவ சித்தாந்தமாக வரையறுக்கும் தொழிற்சங்கவாதத்திற்கும் சோசலிச நனவுக்கும் இடையே ஒரு கூர்மையான முரண்பாட்டை வரைந்து லெனின் எழுதினார்:

ஆகையால், நமது பணி, அதாவது சமூக ஜனநாயகத்தின் பணி, தன்னியல்பினை(spontaneity) எதிர்த்துப் போராடுவதாகும், முதலாளித்துவ அணியின் கீழ் வருவதற்காக முனைந்து கொண்டிருக்கும் இந்த தன்னியல்பான, தொழிற்சங்கவாதத்தில் இருந்து தொழிலாள வர்க்க இயக்கத்தை திசைதிருப்பி, அதை புரட்சிகர சமூ-ஜனநாயக அணியின் கீழ் கொண்டு வருவதாகும். [மேற்கூறிய அதே ஆதாரம், பக்கம் 384-85]

என்ன செய்ய வேண்டும்? 1902 இல் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அரசியல் தாக்கங்கள் மீதான லெனின் பகுப்பாய்வினது தொலைநோக்குப் பார்வை, 1903 இல் RSDLP இன் இரண்டாவது மாநாடு வரையில், ஊர்ஜிதம் செய்யப்படாமலேயே இருந்தது. இரண்டாம் மாநாட்டில் ஏற்பட்ட பிளவு, கட்சி அங்கத்துவம் மீதான வரையறை சம்பந்தமாக ஒரு "சிறிய" கருத்து வேறுபாடு என்று வெளிப்பார்வைக்குக் கூறப்பட்டாலும், போல்ஷிவிக் மற்றும் மென்ஷிவிக் கன்னைகளை வெளிப்படுத்திய அது, ஆரம்பத்தில் பல பிரதிநிதிகளாலும் கட்சி ஐக்கியத்திற்கு அவசியமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் விதமான நடவடிக்கையாக, லெனினின் அதீத கன்னைவாதத்தால் ஏற்படுத்தப்பட்டதாக பார்க்கப்பட்டது.

இரண்டாம் மாநாட்டின் நிகழ்வுகள் மீது ஒரு விரிவார்ந்த பகுப்பாய்வை மேற்கொள்வதே இந்த குற்றச்சாட்டுக்கு லெனினின் பதிலாக இருந்தது, இந்த மாநாடு மூன்று வாரத்தில் 37 அமர்வுகள் வரை நீண்டிருந்தது. ஓரடி முன்னே ஈரடி பின்னே (One Step Forward, Two Steps Back) என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட இந்த பகுப்பாய்வு, ரஷ்ய சோசலிச இயக்கத்திற்குள், மென்ஷிவிக் கன்னையானது, ஐரோப்பா எங்கிலும் சமூக ஜனநாயகக் கட்சிகளில் அபிவிருத்தி அடைந்திருந்த அரசியல்ரீதியில் சந்தர்ப்பவாத போக்குகளின் —முதலாளித்துவத்தின் தாராளவாத மற்றும் சீர்திருத்தவாத கட்சிகளுடன் சமரசத்தை நோக்கியும் இணக்கப்பாட்டை நோக்கியும் சாய்ந்த போக்குகளின் ஒரு வெளிப்பாடாக இருந்ததை எடுத்துக்காட்டியது.

அதற்கடுத்து, குறிப்பாக 1905 புரட்சியின் போதும் அதற்குப் பின்னரும், ரஷ்யாவில் நடந்த அபிவிருத்திகள் திரித்தல்வாத மற்றும் சந்தர்ப்பவாத போக்குகளின் ஜனநாயக-தாராளவாத நோக்குநிலையின் வர்க்க தன்மையைக் குறித்த லெனினின் பகுப்பாய்வை ஊர்ஜிதப்படுத்தின. இரண்டாம் மாநாட்டுக்குப் பிந்தைய ஆண்டுகளில் போல்ஷிவிக் மற்றும் மென்ஷிவிக் போக்குகளின் அரசியல் வேறுபாடுகளின் பரிணாமத்தினை மேலெழுந்தவாரியாக விவரிப்பதும் கூட, லெனின் வாழ்வின் இந்த நினைவுகூரலின் எல்லையை கடந்து சென்றுவிடும்.

ஆனாலும், சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக லெனினின் "உள்கட்சி போராட்டத்தினை" புரிந்துகொண்டது, அதன் அனைத்து வெவ்வேறு வடிவத்திலும், இரண்டாம் அகிலத்தினுள் பொதுவாக மேலோங்கி இருந்ததிலிருந்து ஆழமாக வேறுபட்டிருந்தது என்பதை வலியுறுத்தியே ஆக வேண்டும். தந்திரோபாயங்கள், ஒழுங்கமைப்பு மற்றும் வேலைத்திட்ட விடயங்கள் மீதான மோதல்களை, லெனின், சமூகத்திற்குள் நிலவும் புறநிலை பிளவுகளின் வெளிப்பாடுகளாகவும், அவை கட்சிகள் மற்றும் கன்னைகளுக்குள் வெளிபடுவதாகவும், இதுபோன்ற பிளவுகள் சோசலிச இயக்கத்தின் வர்க்கப் போராட்ட உறுதியிலிருந்து கவனத்தை சிதறடிப்பவையாக அல்ல, மாறாக அந்த போராட்டத்தின் இன்றியமையாத தவிர்க்கவியலாத கூறுபாடுகளாக பார்க்கப்பட வேண்டும் என்று பகுத்தாராய்ந்தார்.

வேறுபட்ட போக்குகளுக்கு இடையிலான போராட்டத்தின் அபிவிருத்திக்கு அடியிலிருக்கும் சமூக-பொருளாதார நிகழ்வுபோக்குகளை வெளிக்கொணரும் பெரும்முயற்சியில், லெனின், சந்தர்ப்பவாதத்தை, புரட்சிகர முன்னணிப்படை மீதான முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ நலன்கள் மற்றும் அழுத்தத்தின் வெளிப்பாடாக பார்த்தார். இதுபோன்ற அழுத்தத்திற்கு உரிய விடையிறுப்பு, அது தன்னை என்ன வடிவத்தில் வெளிப்படுத்தினாலும், அதனுடன் இணங்கிபோவதற்கோ அல்லது சமரசப்படுத்திக் கொள்ளவோ முயற்சிக்கக் கூடாது. லெனினின் பார்வையில், சந்தர்ப்பவாதம் என்பது தொழிலாளர் இயக்கத்தின் ஒரு சட்டபூர்வ பாகமாக இருக்கவில்லை, மாறாக உயிர்பிழைக்க முடியாத, நெறிபிறழ்ந்த, பிற்போக்குத்தனமான சக்தியான அது, சமூகப் புரட்சியின் வேலைத்திட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தைத் திசைதிருப்பவும் மற்றும் முதலாளித்துவத்திற்கு கீழ்படிய செய்வதை நோக்கியும் செயல்படுகிறது.

சந்தர்ப்பவாதத்தை நோக்கிய இந்த சமரசமற்ற எதிர்ப்பான அணுகுமுறைதான், முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன்னதாக இரண்டாம் அகிலத்திற்குள் இருந்த ஏனைய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் போக்குகளிடமிருந்து போல்ஷிவிசத்தை வித்தியாசப்படுத்தியது.

1914 இல், சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக லெனின் தொடுத்த போராட்டத்தின் உலக வரலாற்று முக்கியத்துவம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. ஏறத்தாழ ஒரே இரவில், இரண்டாம் அகிலத்தின் முன்னணி கட்சிகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை ஆதரிப்பதற்கு செய்திருந்த சூளுரைகளைக் கைவிட்டு, அவற்றின் நாடுகளில் ஆளும் வர்க்கங்களுக்கு அவை அடிபணிந்தன. இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்புக்கான லெனினின் எதிர்ப்பும், மூன்றாம் அகிலத்தைக் கட்டமைப்பதற்கான அவரின் அழைப்பும், அவரையும் போல்ஷிவிக் கட்சியையும் உலக சோசலிச இயக்கத்தின் முன்னணிக்கு உயர்த்தியது.

இரண்டாம் அகிலத்தின் பொறிவுக்கு லெனின் விடையிறுப்பில் இருந்த தலையாய அம்சங்களாக இருந்தவை, முதலில், ஆகஸ்ட் 1914 இன் காட்டிக்கொடுப்புக்கும் சமூக ஜனநாயகக் கட்சிகளில் முன்னரே பரவியிருந்த இருந்த திரித்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் அபிவிருத்திக்கும் இடையிலான தொடர்பை அவர் எடுத்துக்காட்டினார். இரண்டாவதாக, சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியைத் தனிநபர் துரோகம் என்ற அர்த்தத்தில் விவரிக்க கூடாது (அங்கு நிச்சயமாக அவ்வாறான துரோகமும் இருந்தாலும்), மாறாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் மற்றும் அரைவாசி காலகட்டத்ததிலும் ஏகாதிபத்தியத்தின் அபிவிருத்தியிலிருந்து மேலெழுந்த சக்தி வாய்ந்த சமூக-பொருளாதார போக்குகளின் அர்த்தத்தில் விளங்கப்படுத்த வேண்டும் என்பதை நிரூபித்துக் காட்டினார். பல அறிவார்ந்த தத்துவார்த்த படைப்புகளில் —அனைத்திற்கும் மேலாக ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் (Imperialism, the Highest Stage of Capitalism) என்ற நிலைபேறான படைப்பில் லெனின், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார சாராம்சம், முதலாளித்துவத்தின் வரலாற்றில் அதன் இடம், சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியில் அதன் இடம் மற்றும் இரண்டாம் அகிலத்துடன் இணைந்திருந்த தொழிலாளர் அமைப்புகளின் பொதுவான ஊழல், மற்றும் இறுதியில் உலக சோசலிச புரட்சியின் அபிவிருத்தியுடன் அது கொண்டிருந்த தொடர்பு குறித்து ஒரு விரிவான பகுப்பாய்வை வழங்கினார்.

ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் உடைவும் (Imperialism and the Split in Socialism) என்ற தலைப்பில், போரின் காரணங்கள் மற்றும் முக்கியத்துவம் மீதான அவரது ஆய்வின் ஒரு சுருக்கமான தொகுப்புரையில், லெனின் பின்வருமாறு எழுதினார்:

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் ஒரு தனித்துவமான வரலாற்று கட்டமாகும். அந்த தனித்தன்மையானது மும்மடங்கான தன்மையை கொண்டுள்ளது: ஏகாதிபத்தியம் ஏகபோக முதலாளித்துவமாகும்; ஒட்டுண்ணித்தனமான, அல்லது சீரழிந்த முதலாளித்துவமாகும்; மரணப்படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவமாகும். ஏகபோகத்தைக் கொண்டு சுதந்திர போட்டியைப் புறந்தள்ளுவதே, அதன் அடிப்படை பொருளாதார அம்சமும், ஏகாதிபத்தியத்தின் துல்லியமான சாராம்சமுமாகும் (quintessence). ஏகபோகம் தன்னை ஐந்து கோட்பாட்டு வடிவங்களில் வெளிப்படுத்துகிறது: (1) தொழில் கூட்டமைப்புகள் (cartels), வர்த்தகக் குழுக்கள் (Syndicates) மற்றும் அறக்கட்டளைகள் (trusts) — முதலாளித்துவவாதிகளின் இத்தகைய ஏகபோக அமைப்புகளை முன்னேற்றும் மட்டத்தை உற்பத்தி ஒருங்குவிப்பு எட்டியுள்ளன; (2) மிகப்பெரும் வங்கிகளின் ஏகபோக நிலைப்பாடு — மூன்று, நான்கு அல்லது ஐந்து மிகப்பெரும் வங்கிகள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனியின் ஒட்டுமொத்த பொருளாதார வாழ்வையும் தந்திரமாக கையாள்கின்றன; (3) அறக்கட்டளைகள் மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களால் மூலப் பொருட்களின் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன (நிதி மூலதனம் என்ற ஏகபோக தொழில்துறை மூலதனம் வங்கி மூலதனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது); (4) சர்வதேச தொழில் கூட்டமைப்புகளால் உலகின் (பொருளாதார) பங்கீடு தொடங்கியுள்ளது. ஏற்கனவே அங்கே இதுபோன்ற ஒரு நூறுக்கும் அதிகமான சர்வதேச தொழில் கூட்டமைப்புகள் உள்ளன, இவை ஒட்டுமொத்த உலக சந்தைக்கும் கட்டளையிடுவதுடன், அதை தங்களுக்குள் "சுமூகமாக" பங்கிட்டுக் கொள்கின்றன— போர் அதை மறுபங்கீடு செய்யும் வரையில். ஏகபோகம் அல்லாத முதலாளித்துவத்தின் கீழ் நடந்த பண்டங்களின் ஏற்றுமதியிலிருந்து வேறுவிதத்தில், மூலதனத்தின் ஏற்றுமதி பெரிதும் குறிப்பிடத்தக்க இயல்நிகழ்வாகும், அது உலகின் எல்லைசார் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவினையுடன் நெருக்கமாக தொடர்புபட்டுள்ளது; (5) உலகின் எல்லை பிரிவினை (காலனிகள்) முற்றுப்பெற்றுள்ளது. [தேர்வு நூல் திரட்டு, தொகுதி 23, பக்கம் 195]

லெனின் இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தின் பல முக்கிய அரசியல் தன்மைகள் மீது கவனத்தைக் குவிக்க அழைப்புவிடுத்தார்.

ஜனநாயக-குடியரசுக்கும் மற்றும் பிற்போக்குத்தன-முடியாட்சி ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கும் இடையிலான வித்தியாசம் அப்படியே துடைத்தழிக்கப்படுகின்றது. ஏனென்றால் இரண்டுமே உயிரோடு அழுகிக் கொண்டிருக்கின்றன … இரண்டாவது, முதலாளித்துவத்தின் சீரழிவு ஒரு மிகப்பெரும் வாடகைதாரர்களின் அடுக்கின் உருவாக்கத்தில் எடுத்துக்காட்டப்படுகிறது, முதலாளித்துவவாதிகள் “உறிஞ்சி எடுக்கப்பட்டு நிறுவன பங்குதாரர்களுக்கு கிடைக்கும் வெட்டுத்தொகையில்" வாழ்கிறார்கள். … மூன்றாவதாக, மூலதன ஏற்றுமதி ஒட்டுண்ணித்தனத்தை உயர் வேகத்தில் உயர்த்தியுள்ளது. நான்காவதாக, “நிதி மூலதனம், சுதந்திரத்திற்கு அல்ல, மேலாதிக்கத்திற்கு போராடுகிறது". அரசியல் பிற்போக்குத்தனம் எல்லாவற்றினோடும் சேர்ந்து அதன் வழியில் ஏகாதிபத்தியத்தின் தனிப்பெரும் அம்சமாக உள்ளது. ஊழல், மிகப்பெரியளவில் கையூட்டு, அனைத்து விதமான மோசடிகள். ஐந்தாவதாக, ஒடுக்கப்பட்ட தேசங்கள் மீதான சுரண்டல் —இது பிரிக்கவியலாதவாறு நாடுகளை இணைத்துக் கொள்வதுடன் தொடர்புபட்டுள்ளது—மற்றும் குறிப்பாக விரல்விட்டு எண்ணக்கூடிய "வல்லரசு" சக்திகளால் காலனி நாடுகள் மீதான சுரண்டல், அதிகரித்தளவில் "நாகரீக" உலகை நாகரீகமற்ற நாடுகளின் நூறு மில்லியன் கணக்கான உடல்களைச் சார்ந்திருக்கும் ஓர் ஒட்டுண்ணியாக மாற்றுகிறது. ரோமன் பாட்டாளி வார்க்கம் ஒரு சமூகத்தை விலையாக கொடுத்து உயிர் வாழ்ந்தது. நவீன சமூகம் நவீன பாட்டாளி வர்க்கத்தை விலையாக கொடுத்து உயிர் வாழ்கிறது. மார்க்ஸ் மிகவும் குறிப்பாக சிஸ்மொண்டியின் (Sismondi) இந்த ஆழ்ந்த கண்டுபிடிப்பை வலியுறுத்தினார். ஏகாதிபத்தியம் ஏதோவிதத்தில் நிலைமையை மாற்றுகிறது. ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் ஒரு தனியந்தஸ்து பெற்ற உயரடுக்கானது ஓரளவிற்கு நாகரீகமடையாத நாடுகளின் நூறு மில்லியன் கணக்கானவர்களை விலையாக கொடுத்து வாழ்கிறது. [மேலே குறிப்பிடப்பட்ட அதே குறிப்பு, பக்கம். 106-07]

கடந்த நூற்றாண்டின் உலகளாவிய பொருளாதார அபிவிருத்திகள் அனைத்திலும், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் குணாம்சங்கள் இரண்டின் மீதும் லெனினின் பகுப்பாய்வு அளப்பரிய விதத்தில் சமகாலத்திற்கும் ஒத்தத்தன்மையைக் கொண்டுள்ளன. தற்போதைய இந்த காலகட்டத்திற்கு மிகவும் பலமான சக்தியுடன் ஒலிக்கும் ஒரு பத்தி, சோசலிசவாதிகள் "நிஜமான பெருந்திரளான மக்களை நோக்கி இன்னும் அடிமட்டத்திற்குக் கீழே இன்னும் ஆழமாக செல்ல வேண்டும்; இது தான் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒட்டுமொத்த அர்த்தம், ஒட்டுமொத்த புலப்பாடு,” என்பதன் மீது அழைப்பு விடுக்கிறது. [மேலே குறிப்பிடப்பட்ட அதே குறிப்பு, பக்கம். 120]

ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் உடைவும் என்பது அக்டோபர் 1916 இல் எழுதப்பட்டது. லெனின் சூரிச் நகரில் இருந்தார், போருக்கு எதிர்ப்பின் புரட்சிகர சர்வதேசியவாத அரசியல் தலைமையை அவர் வழங்கும் விதத்தில் அவரின் அரசியல் தலைமையகமாக அது சேவையாற்றியது. 1905 புரட்சி வெடிப்பின் பன்னிரெண்டாவது நினைவுதின நிகழ்வு உரை ஒன்றை லெனின் ஜனவரி 1917 இல் வழங்கினார். அவர் கூறினார்:

ஐரோப்பாவின் இப்போதுள்ள மயான அமைதியால் நாம் ஏமாந்து விடக்கூடாது. ஐரோப்பா புரட்சியின் கருவைச் சுமந்து கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய போரின் கொடூரமான பயங்கரங்கள், ஒவ்வொரு இடத்திலும் அதிகளவில் உயிர்களை விலை கொடுத்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் துயரங்கள் ஒரு புரட்சிகர மனோபாவத்தைத் தோற்றுவித்துள்ளது; ஆளும் வர்க்கங்கள், முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் சேவகர்கள், அரசாங்கங்கள், இன்னும் கூடுதலாக முட்டுச்சந்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன, மாபெரும் கிளர்ச்சிகள் இல்லாமல் அதிலிருந்து அவர்களால் தங்களை ஒருபோதும் விடுவித்துக் கொள்ள முடியாது. [மேலே குறிப்பிடப்பட்ட அதே குறிப்பு, பக்கம். 253]

வெறும் ஆறு வாரங்களுக்குப் பின்னர், லெனின் எதிர்நோக்கிய புரட்சி, பெட்ரோகிராட் வீதிகளில் பிறந்தது. ஜாரிச ஆட்சி தொழிலாள வர்க்கத்தின் பாரிய மேலெழுச்சியால் தூக்கிவீசப்பட்டு, ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது மென்ஷிவிக் மற்றும் சமூக புரட்சிகர கட்சிகளால் ஆதரிக்கப்பட்டது. லெனின் சூரிச்சில் சிக்கியிருந்த நிலையில், ஏற்கனவே பெட்ரோகிராட்டில் இருந்த போல்ஷிவிக் தலைவர்கள், முக்கியமாக லெவ் காமெனெவ் மற்றும் ஜோசப் ஸ்ராலின், அந்த இடைக்கால அரசாங்கத்திற்கும் மற்றும் உலக போரில் ரஷ்யா தொடர்ந்து பங்கெடுப்பதற்கும் விமர்சனபூர்வ ஆதரவை வழங்கினர்.

லெனின் பெட்ரோகிராட்டிற்கு "தொலைதூரத்திலிருந்து கடிதங்களை" (Letters from Afar) அனுப்பினார். அதில் அவர் இடைக்கால அரசாங்கத்திற்கு அவரின் எதிர்ப்பைத் தெளிவுபடுத்தினார். ஆனால் ரஷ்யாவுக்குத் திரும்பும் வரையில், ஏப்ரலில் "அடைக்கப்பட் இரயில்" (stealed train) இல் ஏறும் வரையில், லெனினால் போல்ஷிவிக் கட்சியின் வேலைத்திட்டம் மற்றும் மூலோபாய நோக்குநிலையில் ஓர் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வந்த அரசியல் போராட்டத்தைத் தொடங்க முடியவில்லை என்பதோடு, அக்டோபர் 1917 இல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இட்டுச் சென்ற பாதையையும் அமைக்க முடியாமல் இருந்தது.

ரஷ்யாவுக்கு அவர் திரும்பிய உடனேயே, லெனின் தொடங்கிய போராட்டம் அரசியல்ரீதியில் அவர் வாழ்வின் மிகவும் விளைவார்ந்த போராட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது. லெனினின் "ஏப்ரல் ஆய்வுரைகள்" (April Theses), 1905 புரட்சிக்குப் பின்னர் இருந்து போல்ஷிவிக் கட்சியின் அரசியல் மூலோபாயம் மற்றும் நடைமுறையை வழிநடத்தி இருந்த "பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம்" வேலைத்திட்டத்தை மறுத்தளித்தது. அந்த வேலைத்திட்டம் ஜாரிச ஆட்சியை ஒரு முதலாளித்துவ ஜனநாயக புரட்சியைக் கொண்டு தூக்கியெறிவதற்கான போராட்டத்தை வரையறுத்தது. அந்த போல்ஷிவிக் சூத்திரமானது எதிர்வரவிருந்த புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் தலைமை பாத்திரத்தை வலியுறுத்தியதுடன், ஜாரிச ஆட்சியின் நிலப்பிரபுத்துவ மற்றும் ஜனநாயக-விரோத எச்சசொச்சங்களை அழிக்க விருப்பமுற்றது என்றாலும், போல்ஷிவிக்குகளின் வேலைத்திட்டம் ரஷ்ய முதலாளித்துவத்தைத் தூக்கியெறியவும் மற்றும் முதலாளித்துவ சொத்து உறவுகளை இல்லாதொழிக்கவும் அழைப்புவிடுக்கவில்லை.

அனைத்திற்கும் மேலாக, புதிய புரட்சிகர ஆட்சியை "பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரமாக" வரையறுத்த போல்ஷிவிக்குகளின் வேலைத்திட்ட சூத்திரமாக்கல், ஜாரிச ஆட்சியைத் தூக்கியெறிவதில் இருந்து எழ இருந்த அரசு அதிகாரத்தின் இயல்பை பற்றி கணிசமானளவுக்கு தெளிவற்றத்தன்மையைக் கொண்டிருந்தது.

1905 மற்றும் 1917 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், ஜனநாயக சர்வாதிகாரம் குறித்த போல்ஷிவிக் வேலைத்திட்டத்தின் மீதான மிகவும் விரிவான இடதுசாரி விமர்சனம் லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்டது. அவரின் நிரந்தரப் புரட்சி தத்துவம், ஜாரிசத்தை தூக்கி தொழிலாள வர்க்கம், அதிக வேகமாகவோ அல்லது குறைந்த வேகத்துடனோ, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இட்டுச் செல்லுமென முன்கணித்தது. ரஷ்யாவின் பொருளாதார பின்தங்கிய நிலைமை இருந்த போதினும், முதலாளித்துவத்தின் உலகளாவிய அபிவிருத்தியும் ஏகாதிபத்திய புவிசார் அரசியலும், மரபுரீதியாக மார்க்சிஸ்டுகளால் எதிர்நோக்கப்பட்டவாறு, பூர்ஷூவா ஜனநாயக மற்றும் முதலாளித்துவ போக்குகளின் வழியாக ரஷ்ய புரட்சி அபிவிருத்தி அடைவதற்கான சாத்தியக்கூறை இல்லாது செய்துள்ளது. ரஷ்ய புரட்சி முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து, அதிகாரத்தை அதன் சொந்த கரங்களில் எடுக்கும் பணியைத் தொழிலாள வர்க்கத்தின் முன்னால் நிறுத்தும். ரஷ்ய புரட்சியை உலக சோசலிச புரட்சிக்கான ஆரம்பமாக கண்ட ட்ரொட்ஸ்கி, ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் உயிர்பிழைப்பு முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், அனைத்திற்கும் மேலாக, ஜேர்மனியில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தைத் தூக்கிவீசுவதிலேயே தங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

1914 க்கு முன்னதாக, லெனின், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை "அபத்தமான இடது" என்று நிராகரித்தார். ஆனால் ஐயத்திற்கிடமின்றி விடயம் இவ்வாறு இருந்தது, உலக போர் வெடிப்பானது லெனினை பழைய போல்ஷிவிக் சூத்திரத்தை மறுமதிப்பீடு செய்யவும், ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டத்தை நோக்கி அவரின் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யவும் இட்டுச் சென்றது. இது அரசியல் கருத்துருவை திருடுவது சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கவில்லை. லெனின், முற்றிலும் ட்ரொட்ஸ்கியின் அதே கருத்தை எட்டவில்லை என்றாலும், உலக போரின் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் இயக்கவியல் குறித்த அவரின் சொந்த பகுப்பாய்வின் விளைவாக, ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களுக்கு மிகவும் நெருக்கமான தீர்மானங்களை வந்தடைந்தார். அரசியலை நோக்கிய அவரின் அணுகுமுறையில் அளப்பரிய விதத்தில் கோட்பாடுட்டுடன் இருந்த லெனின், கட்சி வேலைத்திட்டத்தை மாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். பல வாரங்கள் நீடித்த ஓர் அரசியல் போராட்டத்தின் போக்கில், அவரால் போல்ஷிவிக் கட்சியை மறுநோக்குநிலை கொள்ள செய்து, அக்டோபரில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இட்டுச் சென்ற ஒரு போக்கில் கொண்டு வர முடிந்தது.

அங்கே 1917 காட்சியில் இன்னுமொரு அத்தியாயமும் உள்ளது, அது லெனினின் படைப்பில் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலான அசாதாரண தொடர்புக்குச் சான்று பகிர்கிறது. ஜூலை நாட்களில் பெட்ரோகிராட் தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், எதிர்புரட்சியின் வெடிப்பு லெனினைத் தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளியது. மிகவும் சிக்கலான அரசியல் நிலைமைகளின் கீழ், அவர் வாழ்வே நிரந்தர அபாயத்தில் இருந்த நிலையில், லெனின் அரசும் புரட்சியும் என்பதை எழுதி அதிகாரத்திற்கான போராட்டத்தின் புத்துயிரூட்டலுக்குத் தயாரிப்பு செய்தார். மார்க்சிஸ்ட் கட்சியும் தொழிலாள வர்க்கமும் மாபெரும் அரசியல் பணிகளுக்குத் தன்னை எவ்வாறு தயாரிப்பு செய்திருந்தது என்பதன் மீதான லெனினின் கருத்துரு இந்த குறிப்பிடத்தக்க படைப்புக்கு அவர் எழுதிய முன்னுரையில் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைக் காண்கிறது, இதன் முக்கியத்துவம் ஒரு நூற்றாண்டு கடந்த பின்னரும் இன்னும் மறையவில்லை.

பொதுவாக பூர்ஷூவாவின் மேலாதிக்கத்திலிருந்து, குறிப்பாக ஏகாதிபத்திய பூர்ஷூவாவின் மேலாதிக்கத்திலிருந்து உழைக்கும் மக்களை விடுவிப்பதற்கான போராட்டம், “அரசு" சம்பந்தப்பட்ட சந்தர்ப்பவாத தப்பான அபிப்பிராயங்களுக்கு எதிரான ஒரு போராட்டம் இல்லாமல் சாத்தியமில்லை. …

ஆகவே அரசுடனான பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச புரட்சிக்குள்ள உறவு சம்பந்தப்பட்ட கேள்வி வெறுமனே நடைமுறை அரசியல் முக்கியத்துவத்தை மட்டும் பெறவில்லை, மாறாக மிக அவசரமான நாளாந்த பிரச்சினையின் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது, அதாவது முதலாளித்துவ சர்வாதிபத்தியத்திலிருந்து பெருந்திரளான மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ள நீண்டகாலத்திற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்தும் பிரச்சினையையும் கொண்டுள்ளது. [தேர்வு நூல் திரட்டு, தொகுதி 25, பக்கம் 388]

போல்ஷிவிக் கட்சி தலைமையில் ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியமை, அக்டோபர் 25-26 இல் நடந்தது. உலகை உலுக்கிய அந்த பத்து நாட்கள் (Ten Days that Shook the World) என்ற அவர் எழுத்துக்களில், ஜோன் ரீட் (John Reed) பெட்ரோகிராட் சோவியத்திற்குள் லெனினின் வெற்றிகரமான நுழைவுக்குச் சான்று கூறி, இந்த தலைசிறந்த புரட்சிகர தலைவரின் உணர்வுபூர்வமான விவரிப்பைக் குறித்து எழுதினார். “அவலட்சணமான ஆடை அணிந்து, அவரணிந்திருந்த கால்சட்டை மிகவும் நீளமாகவும், தோற்றத்தில் எடுப்பாக இல்லாமல், ஒரு கும்பலின் உருவகம் போல இருந்த அவர், நேர்மாறாக நேசிக்கப்பட்டார் அனேகமாக வரலாற்றில் ஒரு சில தலைவர்களுக்குத் தான் இது நடந்திருக்கும். முற்றிலும் புத்திஜீவித ஆற்றல் கொண்ட ஒரு தலைவர்; நிற அழகின்றி, நகைச்சுவை உணர்வின்றி, சமரசத்திற்கிடமின்றி, எதனுடனும் ஒட்டாமல், அழகுணர்ச்சிக்கான அடையாளம் எதுவுமின்றி, ஆனால் சாதாரண வார்த்தைகளில் ஆழமான கருத்துக்களை விவரிக்கும் சக்தியுடன், ஓர் உறுதியான நிலைமையைப் பகுத்தாராயும் சக்தியுடன் இருந்த ஒரு விசித்திரமான மக்கள் தலைவராக இருந்தார். அதில் புத்திசாலித்தனத்துடன், தலைசிறந்த புத்திஜீவித துணிவும் சேர்ந்திருந்தது.

லெனினை "நிறமற்றவர்" “நகைச்சுவை உணர்வற்றவர்" என்ற Reed இன் விவரிப்பை ஒருவர் நியாயமாக விவாதத்திற்கு இழுக்கலாம். லெனினின் தனிமனித பண்புகளுக்கு ஏராளமான ஆதாரங்களை வழங்கும் விதத்தில் பல விபரங்கள் உள்ளன. போல்ஷிவிக் கட்சித் தலைவர் முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிந்து புரட்சிகர அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலம் முழுமையாக உள்வாங்கப்பட்ட நாளில் ரீட் கவனிக்காத குணங்களுக்கு ஏராளமான சான்றுகளை வழங்கும் லெனினின் ஆளுமை பற்றிய பல சாட்சிகள் உள்ளன. ஆனால் "முற்றிலும் புத்திசாலித்தன நற்கூறுகள் நிறைந்த ஒரு தலைவராக" லெனினை Reed குணாம்சப்படுத்துவது, குறிப்பிட்டதளவில் ஒருதலைபட்சமாக இருப்பதற்கு அப்பாற்பட்டு, நியாயப்படுத்தக்கூடியதே. லெனின் ஒரு புதிய வகை அரசியல் தலைவரைப் பிரதிநிதித்துவம் செய்தார், அவரின் கட்சியின் வேலைத்திட்டம் மற்றும் நடைமுறையும் மற்றும் தொழிலாள வர்க்கமும், புறநிலை யதார்த்தத்தை விஞ்ஞானபூர்வமாக புரிந்து கொள்வதன் அடிப்படையில் இருக்க வேண்டுமென முயன்றார்.

தத்துவம் மற்றும் நடைமுறையை முறையாக ஒன்றிணைக்கும் பிரச்சினை தான் லெனினின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்வின் மத்திய முன்னீடுபாடாக இருந்தது. சடவாதமும் அனுபவவாத விமர்சனமும் படைப்பில் லெனினின் எழுதினார், “மனிதகுலத்தின் அதிஉயர்ந்த பணி" “இந்த பொருளாதார பரிணாமத்தின் (சமூக வாழ்வின் பரிணாமத்தின்) புறநிலை தர்க்கத்தை அதன் பொதுவான அடிப்படை அம்சங்களில் புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது, அவ்விதத்தில் தான் ஒருவரின் சமூக நனவும் மற்றும் எல்லா முதலாளித்துவ நாடுகளின் முன்னேறிய வர்க்கங்களின் நனவையும் தீர்க்கமான, தெளிவான மற்றும் அவசியமானதாக மாற்றியமைத்துக்கொள்வது சாத்தியமாகும்”. [தேர்வு நூல் திரட்டு, தொகுதி 14, பக்கம் 325]

Lenin, Leon Trotsky, Lev Kamenev motivate the troops to fight on the Soviet-Polish war. 1 May 1920

ஐம்பதாண்டுகளுக்கு முன்னர், 1970 இல், லெனின் பிறந்த நூற்றாண்டு நினைவு தினம் எண்ணற்ற கூட்டங்கள், கலந்தாய்வுகள், கருத்து விவாதங்கள், காட்சிப்படுத்தல்கள் மற்றும் பேரணிகளுக்கான சந்தர்ப்பமாக இருந்தது, அவற்றினூடாக அவர் வாழ்வு கொண்டாடப்பட்டது. ஆனால் அவற்றின் பெரும்பாலான பாகத்தில், அந்த நிகழ்வுகள் அவரின் அரசியல் வேலையைப் பொய்மைப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. அப்போது சோவியத் ஒன்றியம் இருந்தது, ஆளும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தேவைகளுக்குப் பொருந்திய விதத்தில் லெனின் வாழ்வின் ஒரு பதிப்பை ஊக்குவிப்பதற்காக ஆளும் அதிகாரத்துவம் பரந்த ஆதார வளங்களைச் செலவிட்டது. ட்ரொட்ஸ்கி உடன் அவருக்கு இருந்த நெருங்கிய கூட்டுழைப்பின் அனைத்து சுவடுகளும் இல்லாதொழிக்கப்பட்டிருந்தன. வாழ்நாள் நெடுகிலும் முதலாளித்துவத்திற்கு எதிராக போர் தொடுத்த லெனின் சோசலிசத்திற்காக நாடாளுமன்ற பாதையையும் வர்க்கங்களுக்கு இடையே சமாதான சகவாழ்வுக்கும் வக்காலத்து வாங்கியவராக மாற்றப்பட்டிருந்தார்.

ஒரு கல்லறை மாடத்தில் அவர் உடலைப் பதப்படுத்தி வைப்பதற்கு ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், கிரெம்ளின் வேஷதாரிகள் அந்த தலைச்சிறந்த புரட்சியாளரின் சட்டபூர்வ வாரிசுகளாக தங்களை காட்டிக் கொள்ள முயன்றனர். உண்மையில், அந்த நூற்றாண்டு நினைவுதினத்தைக் கொண்ட செஞ்சதுக்கத்தின் கல்லறை மாடத்தின் உச்சியில் நின்றிருந்த கிரெம்ளின் அதிகாரிகள், எதிர்புரட்சிகர குற்றவாளி ஸ்ராலினின் வாரிசுகள் என்பதோடு, அக்டோபர் புரட்சியின் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தைக் காட்டிக்கொடுத்ததில் இருந்து ஆதாயமடைந்தவர்களாவர்.

அரசும் புரட்சியும் என்பதன் ஆரம்ப அத்தியாயத்தில் லெனின் அவரின் சொந்த தலைவிதியை முன்அனுமானித்திருந்தார். “மாபெரும் புரட்சியாளர்களின் வாழ்க்கை காலத்தில்,” அவர் எழுதினார், “ஒடுக்கும் வர்க்கங்கள் அவர்களைத் தொடர்ந்து வேட்டையாடின; அவர்களின் தத்துவங்கள் மிகவும் காட்டுமிராண்டித்தனமான வன்மம், மிகவும் கொந்தளிப்பான வெறுப்புடன், பொய்கள் மற்றும் அவதூறுகளின் மிகவும் பழிக்கு அஞ்சாத பிரச்சாரங்களாக கருதப்பட்டன. அவர்களின் மரணத்திற்குப் பின்னர், அவர்களைத் தீங்கில்லாத அடையாளங்களாக மாற்றவும், அவர்களைத் புனிதமானவர்களாக ஆக்கவும், இன்னும் கூறுவதனால், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்காக பலிக்கடா ஆனவர்கள் என்ற விதத்தில் அவர்களின் பெயர்களை ஒரு குறிப்பிட்டளவுக்கு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கான 'ஆறுதலாக' பரிசுத்தப்படுத்தவும், அதேவேளையில் புரட்சிகர தத்துவத்திலிருந்து அதன் சாராம்சத்தைக் கொள்ளையடித்து, அதன் புரட்சிகர முனையை மழுங்கடித்து, அதை கொச்சைப்படுத்துவதற்கும் முயற்சிகள் செய்யப்படுகின்றன.” [தேர்வு நூல் திரட்டு, தொகுதி 25, பக்கம். 390]

ஆனால் இப்போதோ, லெனினின் 150 ஆம் பிறந்தநாளை நாம் நினைவு கூர்கையில், வரலாற்றின் முழுவட்டம் பூர்த்தியடைந்துள்ளது. முன்னொருபோதும் இல்லாத உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பாதுகாக்கப்பட்ட நிஜமான லெனினிச மரபியம் புரட்சிகர தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு புதிய தலைமுறையை மீண்டுமொருமுறை கல்வியூட்டும் மற்றும் உத்வேகப்படுத்தும்.

Loading