அமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சமீபத்திய நாட்களில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆளும் வட்டாரங்கள் COVID-19 தொற்றுநோய்க்கு சீனா தான் காரணம் என்ற கூற்றை ஊக்குவிக்கும் ஒரு மூர்க்கமான ஊடக பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இது சீனாவை இலக்காகக் கொண்ட ஒரு தொடர் வழக்குகளை தொடருவதுடன் கைகோர்த்துச் செல்கிறது. அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் சீனா டிரில்லியன் கணக்கான டாலர்களை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கோருவதோடு மற்றும் தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படைகளை நிலைநிறுத்துவதையும் புதுப்பித்துள்ளது.

இந்த தீயூட்டும் பிரச்சாரத்தின் மையத்தில், COVID-19 ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸ், தொற்றுநோய்களின் முதல் மையமான சீனாவின் வூஹானில் உள்ள ஒரு நுண்ணுயிர் ஆய்வகத்திலிருந்து தப்பித்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. COVID-19 என்பது சீன கிருமி-போர் (germ-warfare) திட்டங்களின் தயாரிப்பு என்று சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான வதந்திகளை இந்த பிரச்சாரம் நியாயப்படுத்துவதுடன் மற்றும் எரியூட்டுகின்றது. இந்த அறிக்கைகள் அனைத்தும் ஆதாரமற்றவையும், அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் உள்ள முன்னணி விஞ்ஞானிகளின் தொடர்ச்சியான அறிக்கைகளால் நிராகரிக்கப்படுகின்றன.

ஈராக்கில் 2003 ல் ஈராக் மீது சட்டவிரோதமாக படையெடுப்பதற்கு ஒரு சாக்குப்போக்காக வேவைசெய்த ஈராக்கில் "பேரழிவுகரமான ஆயுதங்கள்" இருந்தன என்று 2002 இல் அமெரிக்க பொய்கள் போல இவையும் வெட்கமில்லாத அரசியல் பொய்களாகும். COVID-19 ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் மரபணு வரைபடமாக்கப்பட்டு சீனா மற்றும் சர்வதேச அளவில் உயிரியலாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த வைரஸ் முன்னர் அறியப்படாத, இயற்கையாக தோன்றும் வெளவால்களில் உள்ள கொரோனா வைரஸ் என்பதை அவர்கள் நிறுவியுள்ளனர். இது முன்னர் எந்த ஆய்வுகூடத்திலும் இருக்கவில்லை.

ஆயினும்கூட, இடைவிடாத பிரச்சாரம் நடந்து வருகிறது. COVID-19 என்பது மோசமான சீன நடவடிக்கைகளின் விளைவாகும் என்று தெளிவற்றமுறையில் வலியுறுத்தப்படுகின்றது. கடந்த வார இறுதியில், அமெரிக்காவில் கோவிட் -19 தொற்று ஏற்பட்ட 730,000 பேரையும் மற்றும் இறப்புக்கள் 39,000 ஐயும் நெருங்கிய நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா வேண்டுமென்றே தொற்றுநோயைத் தூண்டிவிட்டதாக ஊகித்தார்: “இது தொடங்குவதற்கு முன்பே சீனாவில் நிறுத்தப்பட்டிருக்கலாம், அது செய்யப்படவில்லை. இதனால் முழு உலகமும் இன்று துன்பம் அனுபவிக்கின்றது. … அது ஒரு தவறு என்றால், ஒரு தவறு தவறுதான். ஆனால் அவர்கள் தெரிந்தே பொறுப்பாளர்களாக இருந்தால், ஆம் நான் அவ்வாறுதான் கருதுகின்றேன். அப்படியானால் கட்டாயம் அதற்கு பின்விளைவுகள் இருக்கும்.

COVID-19 க்கு சீனா “தெரிந்தே பொறுப்புள்ளதா” என்பது குறித்த ட்ரம்ப்பின் ஊகங்கள், ஜனநாயகக் கட்சி ஊடகங்களில் சீனாவைத் தாக்கி வூஹான் ஆய்வுகூடங்களை குற்றம்சாட்டி வெளியிட்ட கட்டுரைகளைத் தொடர்ந்து வந்தன. "பெரும்பாலான வல்லுநர்கள் சீனா வேண்டுமென்றே வைரஸை ஒரு ஆயுதமாக வடிவமைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார்கள்," என்று வாஷிங்டன் போஸ்ட் ஒரு தலையங்கத்தில் எழுதியது. அத்தகைய கூற்றுக்கள் "சதி பேச்சுக்கள்" என்று ஒப்புக் கொண்டது. சீன கிருமி யுத்தம் குறித்த சதி கோட்பாடுகளை “பெரும்பாலான” வல்லுநர்கள் எதிர்க்கிறார்கள் என்று கூறுவதே தவறானதாகும். உண்மையில்: அனைத்து விஞ்ஞானபூர்வ வல்லுனர்களும் இந்த ஆதாரமற்ற தீயூட்டும் கூற்றை நிராகரிக்கின்றனர்.

இன்னும் சிக்கலான விளக்கம் என்னவென்றால், கொரோனா வைரஸ், கவனக்குறைவாக வெளவால்களில் கொரோனா வைரஸ்கள் குறித்து ஆராய்ச்சி நடத்திய வூஹான் நுண்ணுயிர் ஆய்வகத்தில் இருந்து பரவியது” என போஸ்ட் தொடர்ந்தது. இது சீனாவை பின்வருமாறு கண்டித்தது, "சீன மாதிரியிலான ஏமாற்றுதல், மூடிமறைத்தல் மற்றும் வரலாற்றை மீண்டும் எழுதுதல் ஆகியவை பிரச்சினையின் ஒரு பகுதியாகும், தீர்வு அல்ல."

COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 கொரோனா வைரஸ் தொடர்பாக நிறுவப்பட்ட விஞ்ஞானபூர்வ ஆய்வு வெளியீடுகளின் முன்னால் இந்த பொய்கள் அனைத்தும் காற்றில் பறக்கின்றன. இது முன்னணி விஞ்ஞான வெளியீடுகளில் டஜன் கணக்கான கட்டுரைகளில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. அத்தகைய ஒரு கட்டுரையில், Nature இதழில், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து உயிரியலாளர்கள் குழு எழுதியது, “SARS-CoV-2 இன் ஆரம்ப மூலங்கள் குறித்து இதுவரை செய்த மரபணு தரவு ஒப்பீட்டு பகுப்பாய்விலிருந்து இங்கே நாங்கள் மறு ஆய்வு செய்கிறோம். SARS-CoV-2 மரபணுவின் குறிப்பிடத்தக்க அம்சங்களைப் பற்றிய ஒரு விளக்கத்தை நாங்கள் வழங்குவதுடன், மேலும் அவை உருவாகக்கூடிய சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்கிறோம். எங்கள் பகுப்பாய்வுகள் SARS-CoV-2 ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதோ அல்லது வேண்டுமென்றே திரிபுபடுத்துதல் செய்யப்பட்ட வைரஸ் அல்ல என்பதை தெளிவாகக் காட்டுகிறது”.

சீன விஞ்ஞானிகளால் முதலில் வழங்கப்பட்ட வைரஸின் மரபணு மற்றும் உள் கட்டமைப்பு பற்றிய விரிவான பகுப்பாய்வின் அடிப்படையில், ஆசிரியர்கள் zoonotic பரிமாற்றம் (அதாவது, இயற்கையாகவே விலங்குகளில் இருந்து ஒரு வைரஸை மனிதர்களுக்கு அனுப்புவது) SARS-CoV-2 தோன்றுவதற்கு வழிவகுத்தது என்று முடிவு செய்தனர். அவர்கள் எழுதினர், “மரபணு திரிபுபடுத்துதல் செய்யப்பட்டிருந்தால், பீட்டாகொரோனா வைரஸ்களுக்கு கிடைக்கக்கூடிய பல தலைகீழ்-மரபணு அமைப்புகளில் ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கும். இருப்பினும், SARS-CoV-2 இன் மரபணு தரவு முன்னர் பயன்படுத்தப்பட்ட வைரஸ் பிற்தகவலில் இருந்து பெறப்படவில்லை என்பதை நிராகரிக்கமுடியாதபடி காட்டுகின்றது. அதற்கு பதிலாக, SARS-CoV-2 இன் தோற்றத்திற்கான காரணத்தை நம்பக்கூடிய இரண்டு சந்தர்ப்பங்களை நாங்கள் முன்மொழிகிறோம்: (i) zoonotic பரிமாற்றத்திற்கு முன்னரே ஒரு தொற்றப்பட்ட விலங்கின் இயற்கைத்தேர்வு; மற்றும் (ii) zoonotic பரிமாற்றத்தைத் தொடர்ந்து மனிதர்களில் இயற்கைத்தேர்வு” என எழுதினர்.

மற்றைய விலங்கு காவிகளில் இருந்து மனிதர்களிடம் குதிக்கும் புதிய, கொடிய வைரஸ்கள் திடீரென பரவுவது ஒரு சீன நிகழ்வு அல்ல, ஆனால் நன்கு அறியப்பட்ட சர்வதேச நிகழ்வாகும். உயிர்வாழும் விலங்கு சந்தைகளில் மனிதர்களைப் பாதித்த வெளவால் வைரஸிலிருந்து COVID-19 தோற்றம், 2002 ஆம் ஆண்டில் சீனாவில் முதல் SARS நிமோனியா வைரஸ் தோன்றியதை நினைவுபடுத்துகிறது. இருப்பினும், 1981 ஆம் ஆண்டில் ஆபிரிக்காவில் எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் HIV வைரஸ் அல்லது 2003 இல் மனித human monkeypox அமெரிக்காவில் தோன்றியது அதே இயற்கை நிகழ்வுகளுக்கான உதாரணமாக உள்ளது.

முன்னர் அறியப்படாத COVID-19 வைரஸின் திடீர் பரவல் எவ்வாறு ஏற்படக்கூடும் என்பதை ஆராய்ந்து, “பண்டோராவின் பெட்டி தப்பியோடுகின்றது — மற்றொரு நவீன கொரோனா வைரஸ்” என்ற தலைப்பில், New England Journal of Medicine இல் அமெரிக்க மருத்துவர்கள் குழு எழுதிய கட்டுரையில் இந்த நோய்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்த வகை வைரஸ், அதன் RNA மரபணு பொருள் “மரபணுரீதியாக பிழை ஏற்படக்கூடியது”, இது மிக வேகமாக மாற்றமடையக்கூடியது மற்றும் திடீரென்று மனிதர்களில் தொற்றுநோயாக மாறக்கூடும் என்று அது விளக்கியது.

"SARS-CoV-2 ஒரு ஜாடியிலிருந்து தப்பவில்லை" என்று அவர்கள் எழுதினர். “RNA நிரலொழுங்குகள் (RNA sequences) சாதாரணமாக வெளவால்களில் பரவும் வைரஸ்களுடன் ஒத்திருக்கின்றன. மேலும் தொற்றுநோயியல் தகவல்கள் சீனாவின் உயிர்-விலங்கு சந்தைகளில் விற்கப்படும் அடையாளம் தெரியாத விலங்கு இனங்களை பாதிக்கும் ஒரு வெளவால்களில் தோன்றும் வைரஸைக் குறிக்கிறது. … மனித இனத்தின் மரபணு 1 விகிதம் பரிணாமம் அடைய 8 மில்லியன் ஆண்டுகள் எடுக்கின்றது. பல விலங்கு RNA வைரஸ்கள் ஒரு சில நாட்களில் 1 சதவீதத்திற்கும் அதிகமாக பரிணாமம் அடையலாம். zoonotic வைரஸ்கள் தோன்றுவதை நாம் ஏன் அதிகமாகக் காண்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல”.

ஆயினும்கூட, விஞ்ஞான ஆதாரங்களை முற்றாக அவமதிப்பதுடன், அமெரிக்க ஊடகங்களும் அதிகாரிகளும் வூஹான் வைரஸ் ஆய்வகத்தில் (Wuhan Institute of Virology - WIV) இருந்து வைரஸ் பரவுவதாக ஆதாரமற்ற, போலியான கூற்றுக்களை ஊக்குவித்து வருகின்றனர். இந்த நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் டெக்சாஸில் உள்ள அமெரிக்காவின் National Laboratory of Galveston மற்றும் பிரான்சின் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (INSERM) ஆகியவற்றுடன் இணைந்து மிகவும் ஆபத்தான நோய்க்கிருமிகளை ஆராய்ச்சிசெய்யும் P4 உயர் பாதுகாப்பு ஆய்வகமாக உருவாக்கப்பட்டது. வூஹானில் உள்ள மற்றொரு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகம் குறைந்த P2 தரத்தை கொண்டுள்ளது.

அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையாளரான பீட்டர் நவாரோ (Peter Navarro), தொற்றுநோய்க்கு பெரும்பாலும் ஆதாரம் WIV என்று கூறி, சீனா தனது ஆய்வகங்களில் COVID-19 வைரஸ் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். "இந்த வைரஸிற்கான ஆரம்பம் அந்த ஆய்வகத்திலிருந்து சில மைல்களுக்குள் இருந்தது என்பது எங்களுக்குத் தெரியும்" என்று Navarro கூறினார். "நீங்கள் ஒரு Occam’s razor அணுகுமுறையை பயன்படுத்தினால் இதுதான் எளிமையான விளக்கமாக அநேகமாக இருக்கலாம். அது அந்த ஆய்வகத்திலிருந்து அல்ல என்பதை நிரூபிப்பது சீனாவின் பொறுப்பாகும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

சீனாவைத் தாக்கி அதன் தலையங்கத்தை வெளியிடுவதற்கு முன்பு, வாஷிங்டன் போஸ்ட், Josh Rogin எழுதிய ஒரு கட்டுரையை எடுத்துக்காட்டி, வூஹான் ஆய்வகங்கள் தயாரிக்காதுவிட்டால், குறைந்தபட்சம் COVID-19 வைரஸை கசியவிட்டதாகக் கூறியது. "புதிய கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க சீன அரசாங்கம் இன்னும் மறுக்கிறது, அதே நேரத்தில் ஆய்வகமும் சம்பந்தப்பட்டதா என்பதை ஆராய்வதற்கான எந்தவொரு முயற்சியையும் அடக்குகிறது" என்று பெயரிடப்படாத அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி Rogin பின்வருமாறு கூறினார்: “இப்போதே, புத்தகத்தின் முதல் பக்கத்தில் ஆய்வகத்திலிருந்து கசியும் விபரங்கள் புள்ளிவாரியாக குறிப்பிடப்படுகின்றன. ஆனால் மறுபக்கத்தில் எதுவுமே இல்லை”.

வாஷிங்டன் 2002 இல், ஈராக்கை தன்னிடம் இல்லாத பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பதை நிரூபிக்க முடியாத நிலையில் வைத்தது போலவே, அமெரிக்க அதிகாரிகளும் சீனாவை எதிர்மறையாக நிரூபிக்க இயலாத நிலையில் வைக்கின்றனர். நோய்த்தொற்றுக்கு முன்னர் அதனிடம் வைரஸ் இல்லை. இந்த சூழலில் “முன்பக்கம்” வைரஸிற்கான சீன பொறுப்பை சுட்டிக்காட்டுகிறது என்ற போஸ்டின் கூற்று ஒரு பிற்போக்குத்தனமான மோசடியாகும். உண்மையில், அதிகமான விஞ்ஞான ஆதாரங்கள் இந்த நோய்த்தொற்றுக்கு முன் சீனாவிடம் வைரஸ் இல்லை மற்றும் இருக்கவும் முடியாது என்பதை காட்டுகின்றன.

தொற்றுநோய்க்கு முன்னர் COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் மாதிரிகள் தங்களிடம் இருப்பதாக WIV அதிகாரிகள் பலமுறை மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் WIV இடம் வைரஸ் இருப்பதாகக் கூறப்படுவதை கடுமையாக நிராகரித்துள்ளனர். ஆஸ்திரேலியா-நியூசிலாந்து விஞ்ஞான செய்தி தளமான Scimex, சிட்னி பல்கலைக்கழகத்தின் பரிணாம வைராலஜி பேராசிரியரான Edward Holmes உட்பட, SARS-CoV-2 வைரஸின் தோற்றம் குறித்து உயிரியலாளர்களிடமிருந்து கருத்துகளைக் கோரியது.

Holmes எழுதினார், “SARS-CoV-2 இன் நெருங்கிய உறவினர் RaTG13 என்ற வெளவால் வைரஸ் ஆகும். இது WIV இல் வைக்கப்பட்டது. இந்த வைரஸ் SARS-CoV-2 க்கான மூலம் என்று சில ஆதாரமற்ற ஊகங்கள் உள்ளன. இருப்பினும், (i) RATG13 சீனாவின் வேறு மாகாணத்திலிருந்து (யுன்னான்) COVID-19 முதன்முதலில் தோன்றிய இடத்திற்கு மாதிரி எடுக்கப்பட்டது; மற்றும் (ii) SARS-CoV-2 மற்றும் RaTG13 க்கு இடையிலான மரபணு வரிசை வேறுபாட்டின் அளவு பரிணாம மாற்றத்தின் சராசரியாக 50 ஆண்டுகள் (மற்றும் குறைந்தது 20 ஆண்டுகள்) க்கு சமம். எனவே SARS-CoV-2, RaTG13 இலிருந்து பெறப்படவில்லை.”

மற்றைய வைரஸ்களின் ஆய்வுகூட திரிபுபடுத்தல் SARS-CoV-2 வைரஸை உருவாக்கியிருக்கக்கூடும் என்ற கூற்றை விஞ்ஞானிகள் ஏன் நிராகரிக்கிறார்கள் என்பதையும் Nature ஆய்வு விளக்கியது. இந்த வைரஸின் முற்றிலும் புதிய அம்சங்களை இது சுட்டிக்காட்டியது, இதில் ஒரு பலஅடித்தளம் கொண்ட பிளவுத்தள பகுதியையும் (a polybasic cleavage) மற்றும் அதன் மேற்பரப்பில் O-linked glycans எனப்படும் மூலக்கூறும் அடங்கும். வைரஸை ஆபத்தானதாக மாற்றுவதில் இந்த அம்சங்கள் முக்கியமானவை என்று கருதப்படுகிறது: அவை ACE2 ஏற்பிகளுடன் பிணைக்க வைரஸ் பயன்படுத்தும் முட்களைப் பாதுகாக்கின்றன மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தால் கண்டறியப்படுற்கு முன்னரே மனித உயிரணுக்களுள் ஊடுருவுகின்றன. Nature இனது கட்டுரை ஒரு ஆய்வுகூடத்தில் இன்னொரு வைரஸ் திரிபுபடுத்தப்படுகையில் அத்தகைய தன்மைகள் தோன்றும் என்பது கூடியளவில் சாத்தியமற்றது என வலியுறுத்துகின்றது.

அவர்கள் எழுதினர், “கலங்களை வளர்ப்பதன் மூலம் அல்லது விலங்கினூடாக கடத்தப்படுவதன் மூலம் SARS-CoV-2 இன் ஒரு கற்பனையான உருவாக்கம் மிக உயர்ந்த மரபணு ஒற்றுமையுடன் அதற்கு ஒரு முன்னோடியான வைரஸை முன்கூட்டியே தனிமைப்படுத்த வேண்டியிருக்கும், இது விவரிக்கப்படவில்லை. ஒரு பலஅடித்தளம் கொண்ட பிளவுத்தளத்தின் அடுத்த தலைமுறை பின்னர் உயிரணுக் கலாச்சாரம் அல்லது மனிதர்களைப் போன்ற ACE2 ஏற்பிகளைக் கொண்ட விலங்குகளில் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இதுபோன்ற வேலைகளும் முன்னர் விவரிக்கப்படவில்லை. இறுதியாக, முன்கூறப்பட்ட O-linked glycans தலைமுறையும் கலங்களை வளர்ப்பதன் ஊடாக உருவாகலாம் என்பது சாத்தியமற்றதும், அவ்வாறு செய்வதற்கு ஒரு நோய் எதிர்ப்புசக்தி அமைப்பு முறையும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்” குறிப்பிட்டனர்.

எழுப்பப்பட வேண்டிய கேள்வி என்னவென்றால், ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் எந்தவொரு விஞ்ஞான அடிப்படையுமின்றி ஒரு பிரச்சாரத்தை ஏன் தொடங்குகின்றன?. சீன நகரமான வூஹான் தான் முதல் பாதிக்கப்பட்டபோதும் ஏன் சீனா உலகிற்கு விஷம் ஊட்ட முயன்றது என்று வலியுறுத்துகின்றனர்.

தற்போதைய சீன எதிர்ப்பு பிரச்சாரத்தைப் புரிந்து கொள்ள, 14 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவின் பிளேக் தொற்றுநோயை நினைவு கூர்வது பிரயோசனமானதாகும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் இருப்பதை அறியாத நேரத்தில், மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் புரிந்து கொள்ளவோ சிகிச்சையளிக்கவோ முடியாத ஒரு நோயால் இறந்தனர். பிளேக்கிற்கு எதிராக முற்றிலும் பாதுகாப்பற்றதாக இருந்த மக்களை பயமும் பீதியும் பற்றிக்கொண்டது. கிணறுகளுக்குள் யூதர்கள் விஷம் இட்டததால் இந்த நோய் ஏற்பட்டதாக வதந்திகள் பரவியதால், கிறிஸ்தவ மக்கள் கலகம் செய்து, மேற்கு ஐரோப்பாவின் நகரங்கள் அனைத்திலும் யூத மக்களுக்கு எதிராக இனரீதியான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை ஏற்பாடு செய்தனர்.

நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் உண்மையிலேயே வியக்க வைக்கும் சக்தியையும் ஆற்றலையும் கொண்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் பின்னரான மிகவும் ஆபத்தான தொற்றுநோய்களுக்கு மத்தியில் கூட, 700 ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் பாதிக்கப்பட்டவர்களை விட மனிதசமுதாயம் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையை எதிர்கொள்கிறது. அதனால் நோய்க்கிருமிகளை அடையாளம் காணலாம், அவற்றுக்கு பரிசோதனை செய்யலாம் மற்றும் COVID-19 போன்ற முன்னர் அறியப்படாத நோய்கள் கூட வெடித்த சில வாரங்களிலேயே அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் அல்லது தடுப்பூசிகளைப் பயன்படுத்த தொடங்கலாம். இது, தொற்றுத் தடமறிதல் மற்றும் நோய்த்தொற்றைக் குறைக்கக்கூடிய நோயுற்றவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளிக்க அனுமதிக்கிறது. உலகின் உழைக்கும் மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதியினரின் உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் உணவு மற்றும் மருந்து மூலம் மனித சமுதாயத்தை பராமரிக்க முடிகிறது. இதனால் பில்லியன் கணக்கானோர் வீட்டிலேயே தஞ்சமடைந்து, தொற்றுநோயின் முடிவு மற்றும் பயனுள்ள சிகிச்சையின் வளர்ச்சிக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாததற்கான காரணம் முதலாளித்துவத்தின் சமூக பின்தங்கிய நிலையாகும். பல தசாப்தங்களாக சிக்கன நடவடிக்கைகள் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகளை மூடிவிட்டதுடன், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கான நிதிகளை வெட்டி, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்து மற்றும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள அதிசெல்வந்த உயரடுக்குகளின் பைகளில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை திசை திருப்பியுள்ளன. உலகின் செல்வந்த நாடுகளில் அரசாங்கங்கள் கூட அடிப்படை தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பயன்படுத்தாததுடன் அல்லது முகமூடிகளை போதுமான அளவில் வழங்கவில்லை. அதற்கு பதிலாக, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஒரு சிறிய நிதி பிரபுத்துவம் வங்கி மற்றும் நிறுவனங்களின் பிணையெடுப்புகளில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை கையகப்படுத்திக் கொண்டது. அதே நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் வேலையின்மை, நிதி அழிவு மற்றும் COVID-19 இன் அச்சத்தினை விட மேலதிகமாக பசி மற்றும் பட்டினியையும் எதிர்கொள்கின்றனர்.

இன்று, ஆளும் வர்க்கம் வெகுஜனங்களை பின்னோக்கி, பலிகடாக்களுக்கான காட்டுமிராண்டித்தனமான வேட்டையில் தள்ள முயற்சிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவின் பாசிஸ்டுகளைப் போன்ற அரசியல் யூத-விரோதவாதிகள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மூலோபாயத்தில், பயம் மற்றும் இன வெறுப்புக்கான அழைப்புகளுடன் தொழிலாள வர்க்க நனவை சீரழிப்பதற்கு இது செயல்படுகிறது. சிக்கலான விஞ்ஞான கேள்விகள் மற்றும் சமூக முரண்பாடுகள் அனைத்தும் ஒரு எளிய, வெறித்தனமான மற்றும் முற்றிலும் தவறான முழக்கமான சீனாவை குற்றம் கூறுங்கள்! என்பதால் ஒதுக்கித்தள்ளப்படுகின்றன.

ஆளும் வர்க்கத்தில் உள்ள சீன எதிர்ப்பு பிரச்சாரத்திற்கும் இந்த நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும், வர்த்தக யுத்தம் மற்றும் இராணுவ மோதல் கொள்கையைத் தொடர்வதற்கும், வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இந்த தொற்றுநோய்க்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவை அச்சுறுத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

அமெரிக்க கடற்படை தென் சீனக் கடலுக்கு கப்பல்களை அனுப்பிய நிலையில், ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்கினர் சீனாவிடமிருந்து பாரிய, முற்றிலும் ஆதாரமற்ற நிதி அபராதங்களை கோருகின்றனர். COVID-19 தொடர்பாக பில்லியன் கணக்கான டாலர்கள் மீது சீனா மீது வழக்குத் தொடரும் ஒரு வர்க்க நடவடிக்கையான வழக்கு ஏற்கனவே புளோரிடாவில் நடந்து வருகிறது. மேலும் அமெரிக்க மாநிலமான மிசுசூரியும் சீனா மீது வழக்குத் தொடுப்பதாக அறிவித்துள்ளது. பிரிட்டனில், வலதுசாரி Henry Jackson Society சிந்தனைக்குழு வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கு இழப்பீடாக சீனா 6.3 ட்ரில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்று கோரியது. அதே நேரத்தில் ஜேர்மன் செய்தித்தாள் Bild ஆரம்பத்தில் பேர்லினுக்கு சீனாவிலிருந்து 127 பில்லியன் டாலர் முதல் 382 பில்லியன் டாலர் கோரியது. COVID-19 இனால் ஜேர்மன் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதத்தை அது மேற்கோள் காட்டியுள்ளது.

நூறாயிரக்கணக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய குடிமக்களின் இறப்புக்கு சீனா தான் காரணம் என்ற தீயூட்டும் அறிக்கைகள், சீனாவை திவாலாக்கும் பாரிய நிதி அபராதங்களுக்கான கோரிக்கைகளுடன், ஒரு தெளிவான அரசியல் தர்க்கத்தைக் கொண்டுள்ளன. ஈராக் போருக்கு ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின்னர், ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றை விட இன்னொரு பாரிய அழிவை நோக்கி கண்களை மூடிக்கொண்டு செல்கின்றன. அதாவது உலகப் பொருளாதாரத்தின் மையத்தில் அணு ஆயுத சக்தியான சீனாவுடனான மோதலுக்கு செல்கின்றன.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சீனாவுக்கு எதிரான இந்த பிற்போக்குத்தனமான மற்றும் ஆதாரமற்ற ஏகாதிபத்திய பிரச்சாரத்தை நிராகரிப்பது மிகவும் முக்கியமானது. COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நீண்ட மற்றும் கடுமையான முடக்கலை அனுபவித்த சீனத் தொழிலாளர்கள், மற்றும் உலகெங்கிலும் அனுப்பப்படும் மில்லியன் கணக்கான முகமூடிகள், சுவாசக் கருவிகள் மற்றும் பிற முக்கிய மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், பிற நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் எதிரிகள் அல்ல. ஏகாதிபத்திய யுத்தத்திற்கும் COVID-19 தொற்றுநோய்க்கும் எதிரான பொதுவான போராட்டத்தில் அவர்கள் வர்க்க சகோதர சகோதரிகளாவர்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சீனாவை கண்டிக்கும் அதிகாரிகள் மற்றும் ஊடகங்களைப் பொறுத்தவரை, பொய்களின் அடிப்படையில் தேசிய வெறுப்புகளைத் தூண்டும் ஒரு பாசிச பிரச்சாரத்தின் குற்றவாளிகளாக அவர்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள்.

Loading