இலங்கை ஜனாதிபதி தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையின் கீழ் ஒரு சதியைத் திட்டமிடுகின்றாரா?

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையின் சிறுபான்மை அரசாங்கமானது இராணுவத்துடன் இணைந்து கெடுதியான, எதேச்சதிகாரமான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை, ஒரு சதித்திட்டம் தீட்டப்படுதவற்கான சமிக்ஞை ஆகும்.

குறைந்த பட்சமேனும், கொவிட்-19 தொற்றுநோயை ஒரு அதிகார பறிப்பை முன்னெடுப்பதற்கான ஒரு சாக்குப் போக்காக பயன்படுத்துகின்ற அரசாங்கம், அரசை இயக்கும் நடவடிக்கையில் இராணுவத்தை இன்னும் முழுமையாக நுழைத்துவிடவும் —ஜனநாயக-அரசியலமைப்பு விதிமுறைகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறி— உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் செயற்படுகின்றது.

அவ்வாறு செய்வதன் மூலம், ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ மற்றும் அவரது பிரதமரும் சகோதரருமான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும், தங்களது முதலாளித்துவ எதிர்ப்பாளர்களின் செலவில் அதிக அதிகாரங்களைப் பற்றிக்கொள்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர்களின் உண்மையான மற்றும் பிரதானமான இலக்கு தொழிலாள வர்க்கமே ஆகும்.

தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உலகப் பொருளாதார சரிவுக்கு முன்பிருந்தே, இலங்கையின் பொருளாதாரம் ஆழ்ந்த நெருக்கடியில் இருந்தது. ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, கடந்த நவம்பர் தேர்தலில் பதவிக்கு வந்த பின்னர், உடனடியாகவே பதவி நீக்கிய முந்தைய ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) தலைமையிலான அரசாங்கத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி அது அமுல்படுத்திய கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த அலையை எதிர்கொண்டது.

திங்கள் கிழமை அதிகாலை, இராஜபக்ஷ அரசாங்கம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பல வார கால கொரோனா வைரஸ் ஊரடங்கை நீக்க முடிவெடுத்திருந்தது. எனினும் அதற்கு மாறாக, கிட்டத்தட்ட எந்த எச்சரிக்கையும் இல்லாமல், செவ்வாய் அதிகாலை 5 மணி வரை இன்னும் கடுமையான 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை தீவு முழுவதும் அமுல்படுத்தியது. கொடுக்கப்பட்ட காரணம், விடுமுறையில் இருந்த படை சிப்பாய்கள் அந்தந்த முகாம்களுக்கு திரும்புவதற்கு வசதி செய்துகொடுத்தல் என்பதாகும்.

ஊரடங்கு உத்தரவு அறிவிப்புக்கு முன்னர், பாதுகாப்பு செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மூன்று ஆயுதப்படைகளுக்கும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் விடுத்ததுடன் அனைத்து துருப்பினரும் தங்களது அதிகாரிகள் முன் சமூகமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இலங்கையில் இராணுவ நிலைப்படுத்தலுக்கு வசதி செய்வதற்காக தீவு முழுதும் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தமை இதற்கு முன்னர் நடந்திருக்கவில்லை. தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான இலங்கை அரசின் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின்போது கூட, இத்தகைய நடவடிக்கை எடுத்ததில்லை.

குணரத்னவின் அசல் கட்டளைக்கு வெளிப்படையான முரண்பாடுகளுடன், படையினர் அவர்களின் பொதுவான முகாம்களுக்கு திரும்புவதை விட அவர்களில் அநேகமானவர்கள் நாட்டின் தலைநகரான கொழும்புக்கு அழைக்கப்படனர் என்பது விரைவில் அம்பலமானது. நகரத்தின் மிகப்பெரிய ஐந்து பாடசாலைகள் உட்பட கல்லூரிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்.

இந்த நிலைப்படுத்தலுக்கான அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும், கடந்த வார ஆரம்பத்தில் நடத்திய ஒரு நேர்காணலில், கொழும்பில் இராணுவத்தை நிலைநிறுத்துவது பற்றி பேசிய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான "போர்க்கால" நடவடிக்கைகள் என்று அவர் கூறிக்கொண்டதன் பாகமே இது என்றார். இந்த தொற்றுநோயால் இதுவரை இலங்கையில் ஏழு பேர் மரணித்துள்ளதுடன் 600 இற்கும் மேற்பட்டோர் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு அசாதாரண நடவடிக்கையில், பாதுகாப்பு பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்கவின் படி, பாராளுமன்றத்தின் வெளிப்புற பாதுகாப்பை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. மே 4 வரை நடைமுறையில் இருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு பூட்டுதலை அமுல்படுத்துவதற்கு உதவுவதற்கு பொலிசார் தேவைப்படுவதனால், 120 பொலிசார் பாதுகாப்பு கடமையில் இருந்து நீக்கப்பட்டு, இராணுவத் துருப்புக்கள் பதிலீடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகம் கூறியுள்ளது.

இராஜபக்ஷ, கடந்த நவம்பரில், ஒரு பக்கம், ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை கணக்கிட்டு அதற்கு வாய்ச்சவடால் அழைப்பு விடுப்பதன் மூலமும், மறுபக்கம், வெறுக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய ஒரு சிங்கள-பௌத்த “பலம்வாய்ந்த மனிதனாக” தன்னைக் காட்டிக்கொள்வதன் ஊடாக பெரும் வர்த்தகர்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்வதன் மூலமும், தேர்தலில் வெற்றிபெற்றார்.

முன்னாள் கர்னலான இராஜபக்ஷ, இராணுவத்துடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டுள்ளவரும் ஈவிரக்கமின்மைக்கு பேர்போனவரும் ஆவார். அவர், 2009 இல், அரசு கட்டளையிட்ட இராணுவ படுகொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் இறுதி கட்டங்களில், தனது சகோதரரின் அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த காலகட்டத்தில், கொடூரமான அவசரகால விதிமுறைகள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், நாட்டின் பாதுகாப்புப் படைகள் தொழிலாளர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது அரச அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டன.

ஜனாதிபதி பதவியை வென்ற சில நாட்களுக்குள், ஐ.தே.க. அரசாங்கத்தை பதவி இறக்கிய கோடாபய இராஜபக்ஷ, தனது சகோதரரை பிரதமராக நியமித்தார். பின்னர் அவர் புதிய அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாததால், முன்கூட்டிய தேரத்லுக்கு அழைப்பு விடுப்பதற்கான அரசியலமைப்பு உரிமையை அவர் பெற்ற மார்ச் 2 வரை, பாராளுமன்றத்தை அநேக நாட்கள் இயக்காமலேயே வைத்திருந்தார்.

ஒரு புதிய மற்றும் இன்னும் கடுமையான சுற்று சிக்கன நடவடிக்கைகளை சுமத்த அவரது அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படுவதற்கு முன்னர், பொதுத் தேர்தல் மூலம் மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுவதே அவரது அறிவிக்கப்பட்ட நோக்கம் ஆகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில், அவர் பரந்த, எதேச்சதிகார அதிகாரங்களை தனக்கு கொடுக்கும் அரசியலமைப்பு மாற்றங்களை முன்னெடுக்க விரும்புகிறார்.

இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத பொறிமுறைகள், தொற்றுநோய் பரவலுடன் இன்னும் தெளிவாக புலப்பட்டுள்ளன.

தேர்தல் ஆரம்பத்தில் காலவரையின்றியும் இப்போது தற்காலிகமாக ஜூன் 20 க்கும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும், இராஜபக்ஷ இராணுவம் மற்றும் அவரது சகோதரர் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான காபந்து அரசாங்கத்தின் ஆதரவோடு, தனிச்சிறப்பான அதிகாரத்தை தானாகவே எடுத்துக்கொள்ளுமளவுக்கு தனது ஜனாதிபதி உரிமைகளைப் பயன்படுத்திக்கொண்டார்.

மார்ச் 20 முதல், மேல் மாகாணமும் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மற்றும் போரினால் நாசமாக்கப்பட்ட வடக்கில் யாழ்ப்பாண மாவட்டமும் முழுமையாக பூட்டப்பட்டுள்ளன, அல்லது, இலங்கையின் பேச்சுவழக்கில் "ஊரடங்கு உத்தரவின்" கீழ் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய பிரதேசங்களில் பூட்டுதல் / ஊரடங்கு உத்தரவு இடையிடையே தளர்த்தப்பட்டு வந்தது.

பூட்டுதல் முற்றிலும் சட்டவிரோதமானதாகும். இலங்கை சட்டத்திற்கு இணங்க, இது ஒரு வர்த்தமானி அறிவிப்பால் அல்லது அவசரகால சட்டங்களின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். வர்த்தமானி அறிவிப்பால் அமுல்படுத்தப்பட வேண்டுமெனில், அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதேபோல், அவசரகால அறிவிப்பும் பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

ஆனால், புதிய அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக தொற்றுநோயைப் பயன்படுத்திக் கொள்ளும் இராஜபக்ஷ, இந்த சட்டங்களை சாதாரணமாக புறக்கணித்துள்ளதுடன் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க் கட்சிகள் விடுக்கும் அழைப்பையும் முற்றிலுமாக நிராகரிக்கின்றார்.

சட்டவிரோதமாக விதிக்கப்பட்ட பூட்டுதலுக்கு கட்டுப்படத் தவறியதற்காக 40,000 க்கும் மேற்பட்டவர்களை பொலிஸ் கைது செய்துள்ளதுடன் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது. எதிர்க்கட்சிகளோ ஊடகங்களோ இந்த நடவடிக்கைகளை சவால் செய்யவில்லை.

அவர் தேர்வானதன் பின்னர், இராஜபக்ஷ பல முக்கிய பதவிகளை சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைக் கொண்டு நிரப்பினார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடித்ததைத் தொடர்ந்து, அவர் நிர்வாகத்தை மேலும் இராணுவமயமாக்கியுள்ளார். கோவிட்-19 தடுப்புக்கான தேசிய மையத்தின் தலைவராக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாண ஆளுநராக ஓய்வுபெற்ற ஏயர் மார்ஷல் ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேகமாக பரவக்கூடிய மற்றும் உயிர் ஆபத்தான கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதன் பெயரில், மக்கள் மீது புதிய அடக்குமுறை அதிகாரங்களை திணிக்கும் அதே வேளையில், இராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பற்றி படுமோசமான அலட்சியத்தை காட்டியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில், உலக சுகாதார அமைப்பு (WHO) அனைத்து நாடுகளுக்கும் பலமுறை வலியுறுத்தியது போல, வெகுஜன சோதனை எதுவும் நடத்தப்படவில்லை. சுகாதாரத் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததுடன் பெரும் வணிகங்களுக்கு பிணை வழங்குவதற்கு அரசாங்கம் பில்லியன் கணக்கான ரூபாய்களை ஒதுக்கியுள்ள அதேவேளை, பாழடைந்த சுகாதார சேவையை நவீனமயமாக்கவும் பலப்படுத்தவும் குறிப்பிடத்தக்க நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட பிற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான திட்டங்கள் எதுவும் இல்லாமல், அவசரமாக இந்த பூட்டிவைத்தல் அறிவிக்கப்பட்டது. இலட்சக்கணக்கான தினசரி கூலித் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதோடு இப்போது எந்தவிதமான ஆதரவும் இல்லாமல் விடப்பட்டுள்ளனர்.

இராஜபக்ஷ எதேச்சதிகார ஆட்சி வழிமுறைகளுக்குத் திரும்புவதற்குப் பின்னால், தொழிலாள வர்க்கத்துடனான ஒரு பதட்டமான மோதல் பற்றிய பீதியும் அதற்கான தயாரிப்புமே உள்ளன.

தொற்றுநோயால் தூண்டப்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடி இலங்கையின் ஆளும் உயரடுக்கின் பிரதான அந்நிய செலாவணி வருவாயை ஈட்டித் தரும் சுற்றுலா மற்றும் ஆடைத் தொழில்களை துண்டித்துள்ள அதேநேரம், வெளிநாட்டில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களிடமிருந்து கிடைத்த வருமானமும் சரிந்து போய்விட்டது.

பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கு முயலும் இராஜபக்ஷ அரசாங்கமும், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதன் சம தரப்பினரைப் போலவே, பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதை நோக்கி தீவிரமாக நகர்ந்துள்ளது. பதினான்கு சுதந்திர வர்த்தக வலயங்கள் ஏற்கனவே மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதே சமயம், வேலை, ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை வெட்டுவதற்கான பெரும் வணிகர்களின் கோரிக்கைகளுக்கு இராஜபக்ஷ அனுமதி அளித்துள்ளார். "ஒவ்வொரு [தனியார்] அமைப்பின் தலைவருக்கும் யார் வேலை செய்ய வேண்டும் என்பதையும் பணியாளர்களின் எண்ணிக்கையையும் தீர்மானிக்க சுதந்திரம் உள்ளது" என்று அவர் அறிவித்துள்ளார்.

தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "போர்க்காலம்" போன்ற நடவடிக்கைகளை சுமத்த கொழும்புக்கு துருப்புக்களை அனுப்புவது பற்றி இராஜபக்ஷ பேசியுள்ளார். "போரின்போது இருந்ததைப் போலவே நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யவும், மக்கள் ஒழுக்கமான முறையில் செயல்படுவதை உறுதி செய்யவும்… நான் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்," என்று அவர் பெருமையாகக் கூறினார். இன்று அவை ஏழைகளை அளவுமீறி தண்டிக்கும் ஒரு பூட்டுதலை விதிக்கும் வடிவத்தை எடுத்திருக்கக் கூடும், மறுநாள் அவர்களின் இராணுவ நிலைகொள்ளல் உழைக்கும் மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையிலான இழிந்த நிலைமைகளின் கீழ் வேலைக்குத் திரும்புவதை நடைமுறைப்படுத்த பயன்படும்.

அவரது சட்டவிரோத நடவடிக்கைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடியைத் தணிக்க பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் பல நேற்று ஜனாதிபதி இராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தன. சிறுபான்மை அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதற்கான எந்தவொரு முயற்சியையும் கைவிடுவதாக உறுதியளித்த அவர்கள், மேலும் அதற்கு "பொறுப்பான ஒத்துழைப்பை" வழங்கவும் முன்வந்தனர்.

இந்த வேண்டுகோளை முன்வைப்பதில் ஐ.தே.க., அதில் இருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்களின் கட்சிகளும் உள்ளடங்கி இருந்தன.

இந்த வேண்டுகோளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இணைந்துகொள்ளா விட்டாலும், அது மேற்கண்ட கட்சிகளுடன் சேர்ந்து, அனைத்துக் கட்சி கூட்டங்களிலும் இரண்டு முறை பங்கேற்றுள்ளதுடன், “கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும்” அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. இதன் மூலம் இராஜபக்ஷவையும் அவரது ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் பலப்படுத்தியுள்ளது.

இந்த கட்சிகளுக்கும் இராஜபக்ஷவின் ஆட்சிக்கும் சிறிய தந்திரோபாய வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. அவர்கள் எப்போதாவது ஜனநாயக உரிமைகள் பற்றி மோதிக்கொண்டாலும், அவர்கள் அனைவரும் பேரினவாதத்தில் மூழ்கிப் போனவர்களும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதில் உடன்பாடு கொண்டவர்களும், மற்றும் பெரும்பாலானவர்கள் இலங்கையையின் நான்கு புறத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சீன எதிர்ப்பு போர் உந்துதலுக்கு பின்னால் அணிதிரட்டுவதை வெளிப்படையாக ஆதரிப்பவர்கள் ஆவர்.

இலங்கையின் அபிவிருத்திகள் தீவில் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு கூர்மையான எச்சரிக்கையாக இருக்கும். கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளின் கீழ், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினர் ஜனநாயக உரிமைகளைத் தாக்கி, கொடூரமான அதிகாரங்களைக் கைப்பற்றிக்கொள்வதோடு சமூகத்தை இராணுவமயமாக்குகின்றனர்.

இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் அனைத்து போட்டி முதலாளித்துவ பிரிவுகளுக்கும் எதிராக இந்த நெருக்கடியில் சுயாதீனமாக தலையிட வேண்டும். அதன் மூலம் மட்டுமே அவர்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கவும், அவர்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் முடியும். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் தொழில்துறை வலிமையை அணிதிரட்டுவதற்கும், கிராமப்புற ஏழைகளை முதலாளித்துவ எதிர்வினைக்கு எதிராக அணிதிரட்டுவதற்கும், சோசலிச கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதற்காகன போராட்டத்தையும் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தையும் முன்னெடுக்க ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கை குழுக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

Loading