"மத்திய, மாநில அரசாங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு உண்மையில் மனித உயிர்கள் மீது அக்கறை இல்லை”

கொரோனா வைரஸ் குறித்த இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழ் நாடு வாகன தொழிலாளர்கள் கண்டனம் செய்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் அண்மையில் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒராகடம் தொழில்துறை மையத்தில் அமைந்துள்ள வாகன ஆலைகளில் பணிநிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்களுடன் பேசினர்.

தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பிய தொழிலாளர்கள், கொரோனா வைரஸ் (COVID-19) ஆல் அதிகரித்து வரும் வறுமை மற்றும் ஆபத்தான நிலைமைகள் பற்றியும், தொற்றுநோய் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் எடுத்து வரும் மிக மோசமாக பற்றாக்குறையான நடவடிக்கைகள் குறித்தும் எடுத்து பேசினர். அவர்கள் WSWS உடன் தொலைபேசியில் பேசினர்.

பிரதமர் நரேந்திர மோடியின் வலதுசாரி தேசிய அரசாங்கம் மார்ச் 24 அன்று மூன்று வார கொரோனா வைரஸ் முடக்கத்தை அறிவித்தது. ஏப்ரல் 14 அன்று, முடக்கம் அல்லது இந்தியாவில் ஊரடங்கு என அழைக்கப்படுவது மே 3 வரை நீட்டிக்கப்பட்டது, ஆனால் வெகுஜனங்களின் அடிப்படை தேவைகளை வழங்குவதற்கு எந்தவொரு தீவிர திட்டமும் இல்லாமல் அது செய்யப்பட்டது. கோடிக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக முறைசாரா துறையை சார்ந்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு உணவு மற்றும் பிற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு எந்த வருமானமும் இல்லாமல் விடப்பட்டனர்.

Sridhar Renault Nissan worker (Photo: WSWS)

ஸ்ரீதர், ரெனால்ட் நிசான் தொழிலாளி. அவர் தற்போது மைலாடுதுறை மாவட்டத்தில் காவலம்பேடு கிராமத்திற்கு திரும்பி வந்துள்ளார். அவர் மோடியின் மத்திய அரசையும் அத்துடன் சேர்த்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியையும் கண்டனம் செய்தார்.

"கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் வேகமாக அதிகரித்து வருகிறது, ஆனால் அதைக் கட்டுப்படுத்த எந்தவொரு அரசாங்கமும் எந்தவொரு பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கே எனது கிராமத்தில், மக்களுக்கு பாதுகாப்பு முக கவசங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை, இங்குள்ள மக்களின் நிலைமைகளை அறிய எந்த அரசியல் கட்சிகளும் இங்கு வரவில்லை. மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது, ஆனால் இதுவரை யாரும் இங்கு எங்களுக்கு எந்த உணவு பொருட்களையும் வழங்க வரவில்லை.

ஊரடங்கு உத்தரவின் போது குறிப்பிட்ட குறைந்த நேரத்திற்குள் கோயம்பேடு சந்தையில் [சென்னையில்] அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க மக்கள் விரைந்து செல்வதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். சந்தை நெரிசலாக இருந்தது, யாருமே சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்க தேவையான எந்த ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்யவில்லை, இதன் விளைவாக, சந்தைக்கு வந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

"பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்க தவறிய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை நான் இழிவாகத் தான் பார்க்கிறேன். இந்த வைரஸ் ஏழை மக்களை பாதிக்காது, பணக்காரர்களை மட்டும் தான் என்று [தமிழக முதல்வர்] எடப்பாடி கூறினார், ஆனால். எவ்வாறாயினும், இந்த வைரஸ் உலகெங்கிலும் உள்ள மக்களை பாதிக்கிறது என்பதை தான் நாம் பார்க்கிறோம்.

"எங்கள் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் நாங்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும், நான் அரசாங்கத்தை நம்பவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள ஏழைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மோடி கூறினார், ஆனால் இந்த மக்கள் அனைவரும் ஒரே நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்.

Motherson autoworkers protest in Tamil Nadu (Photo: WSWS)

“இந்த ஆட்சியாளர்களின் ’ ஜனநாயகத்தை’ நான் நம்பவில்லை - இது போலியானது. இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகிறார்கள், அன்றாடம் சாதாரண மக்கள் பட்டினியை எதிர்கொள்கின்றனர். சில பகுதிகளில் ஏழை உழைக்கும் மக்கள் பட்டினியால் இறந்துவிட்டனர், ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ”

பாலா, 44, மதர்சன் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி தொழிலாளி ஆவார், அவர் சமீபத்தில் ஆலையில் நான்கு மாதங்களுக்கும் மேலாக நீட்டித்த வேலைநிறுத்தத்தில் பங்கு வகித்த காரணத்தால் நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டவர். அவர் இவ்வாறு கூறினார்: “மைலாடுதுரையில் உள்ள எனது கிராமமான காவேரிபாக்கத்தில் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. கிராமத்தில் அனைவரும் பட்டினியை எதிர்கொள்கின்றனர். அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு கிடைத்த ஒரே உதவி ஒரு மாதத்திற்கு 1,000 ரூபாய் [13.25 அமெரிக்க டாலர்], மற்றும் சில அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டன. ”

சாம், யங்ஷின் தானியங்கி கம்பனி ஊழியர்.அவர் நாகப்பட்டினம் நகரத்தைச் சேர்ந்தவர், அவர் கூறினார்: “எனது தந்தை ஒரு திருமண மண்டபத்தில் பணிபுரிகிறார், அவருக்கு மாதம் 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. எனது நிறுவனத்தால் எனக்கு ஒரு மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டதால், முழு குடும்பமும் இப்போது எனது தந்தையின் வருமானத்தால் தக்கவைக்கப்பட்டுள்ளது, மேலும் பணிநிறுத்தம் காலத்திற்கு அவர்கள் எனக்கு பணம் கொடுப்பார்களா என்பது தெரியாது.”

இந்திய மற்றும் தமிழக அரசுகளை சாம் கண்டித்தார். ”ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மோடி அரசு கூறுகிறது, ஆனால் உழைக்கும் மக்களில் பெரும்பாலோர் அன்றாட தொழிலாளர்கள். மார்ச் 24 அன்று ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதிலிருந்து மாநில அரசு 1,000 ரூபாய் மற்றும் சில ரேஷன் பொருட்களை மட்டுமே வழங்கியுள்ளது. இது போதாது. கிராமங்களில் பல குடும்பங்கள் பசியுடன் வெற்று வயிற்றுடன் படுக்கைக்குச் செல்கின்றன. பெரும்பாலான உழைக்கும் மக்கள் சிறிய குடிசைகளில் வாழ்கிறார்கள், இந்த நிலைமைகளில் பாதுகாப்பாக இருக்க முடியாது. ”

Recent demonstration of Motherson autoworkers (Photo: WSWS)

பாண்டியன், கிளாஸ் டெக்கில் பணிபுரிபவர். அவர் கூறினார்: “நான் இப்போது ஜெயங்கொண்டத்தில் உள்ள எனது கிராமமான கல்லத்து என்ற இடத்தில் இருக்கிறேன். எனது நிறுவனத்தால் எனக்கு ஒரு மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது, நாங்கள் பணிநிறுத்தத்திற்கு முன்பு பணிபுரியும் போது எங்களுக்கு முகமூடிகளைக் கூட கொடுக்கவில்லை. நெரிசலான பஸ்ஸில் தான் நான் வீட்டிற்கு பயணிக்க வேண்டியிருந்தது.

“நான் எனது கிராமத்திற்குத் திரும்பிவிட்டேன், ஆனால் இங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் மக்களுக்கு முகமூடிகள் வழங்குவது குறித்து அக்கறை காட்டவில்லை, அடிப்படை மருத்துவ உள்கட்டமைப்பு எதுவும் இங்கு கிடையாது. நான் தற்போது எனது பெற்றோருடன் தங்கியிருக்கிறேன், அவர்கள் நெசவாளர்கள் மற்றும் தினசரி 300 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். எவ்வாறாயினும், ஊரடங்கு தொடங்கியதிலிருந்து அவர்களின் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன, எனவே எங்களுக்கு தற்தோது வருமானம் இல்லை.

“முன்னதாக, நான் விடுப்பில் கிராமத்திற்கு வந்தபோது, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் விவசாய வேலைகளைச் செய்ய முடியும். எனக்கு ஒரு நாளைக்கு 170 முதல் 200 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டது, ஆனால் இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளது.

“எங்களது மொத்தக் குடும்பமும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. காய் விலைகள் அதிகரிக்கின்றன. அவற்றின் விநியோகங்களும் குறைந்து வருகின்றன. எங்களது தினசரி தேவைகளுக்கு அவசியமான பொருட்களை வாங்குவதற்கு நாங்கள் வெளியே செல்லும் போதெல்லாம் காவல் துறையின் தொந்தரவுகளையும், தாக்குதல்களையும் கூட நாங்கள் அனுபவிக்கின்றோம்.”

ராஜா, 24, தாய் சமிட் வாகன உதிரி பாக ஆலை தொழிலாளி கூறினார்: “திருவண்ணாமலையில் உள்ள எனது கிராமத்தில் எனக்கு எந்த வேலையும் இல்லை. என் தந்தை ஒரு சிறிய விவசாயி, ஆனால் பாசனத்திற்கு மழை நீர் இல்லை என்பதால் எங்களால் எந்த பயிர்களையும் பயிரிட முடியவில்லை. எங்களிடம் ஒரு பசு மாடு உள்ளது, அதன் பாலை விற்பதன் மூலம் ஒரு மாதத்திற்கு சுமார் 3,000 ரூபாய் சம்பாதிக்க முடியும். இந்த சிறிய வருமானத்தில் நாங்கள் இப்போது முழு குடும்பத்தையும் நடத்த வேண்டியள்ளது."
அவரது சகோதரரும் சென்னையில் பணிபுரிந்தார், ஆனால் ஊரடங்கு அறிவிப்புக்கு பின்னர் நிறுவனம் மூடப்பட்டது, எனவே அவரும் கிராமத்திற்கு திரும்பியுள்ளார் என்று ராஜா விளக்கினார்.

"நாங்கள் சென்னையில் இருந்தபோது நாங்கள் ஒரு வாடகை அறையைப் பகிர்ந்துகொண்டோம், எங்கள் பெற்றோருக்கு கூடுதல் பணத்தை அனுப்ப முடிந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் ஊரடங்கு உத்தரவினால், கிராமத்தில் உள்ள அனைவரும் மிகவும் மோசமான பொருளாதார நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். யாராவது வைரஸால் பாதிக்கப்பட்டால் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஆனால் அங்கே போதுமான படுக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.”

அவர் தொடர்ந்து பேசினார்; “தமிழ்நாடு மாநில அரசு, கொரோனா வைரஸ் குறித்து மிக விரைவாக செயல்பட்டதாக பெருமை பேசியது. ஆனால் தினசரி நோய்தொற்று அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மோடி மிகக் குறைந்த பணத்தை ஒதுக்கியுள்ளார். மத்திய, மாநில அரசாங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உண்மையில் மனித உயிர்கள் குறித்து அக்கறை காட்டவில்லை. இப்படியான அரசியல்வாதிகள் அனைவரையும் நான் எதிர்க்கிறேன்.

"பெரும்பாலான கிராம மக்கள் உணவு மற்றும் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். சில இடங்களில், மக்களிடம் சோப்பு கிடையாது என்பது ஒருபுறம் இருக்க, தண்ணீர் வசதிகள் கூட இல்லை. கைகளை சுத்தமாக வைத்து சோப்புடன் கழுவுமாறு அரசாங்கங்கள் மக்களிடம் கூறுகின்றன. இது ஒரு இழிவான மோசடி பேச்சாகும்.

“மாநில சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒருபோதும் கடினமான காலங்களில் கிராமங்களுக்கு வருவதில்லை அல்லது மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. அவர்கள் தேர்தலின் போது மட்டுமே வருகிறார்கள். நான் இப்படியான அரசியல்வாதிகளை வெறுக்கிறேன்.” என்றார் அவர்.

அருள், யமஹா இந்தியா தொழிலாளி. துரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் இவ்வாறு கூறினார்: “எனது தந்தை ஒரு கட்டுமானத் தொழிலாளி, ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிக்கிறார். இருப்பினும், கடந்த ஐந்து மாதங்களாக, அவர் வேலை இல்லாமல் இருந்தார், எனவே எனது பெற்றோர் எனது வருமானத்தை நம்பியிருந்தார்கள், ஆனால் இப்போது நானும் வேலை இல்லாமல் இருக்கிறேன். நிறுவனம் எனக்கு ஒரு மாத சம்பளத்தை மட்டுமே கொடுத்தது.

வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருந்தபோதிலும், அவர்களுக்கு உணவு இல்லாததால், சிலர் இன்னும் விவசாய வேலைகளுக்கு செல்வது பற்றி தான் கவலைப்படுவதாக அருள் கூறினார். "தங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள், அது அவர்களின் மரணத்திற்கும் வழிவகுக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்," என்று அவர் கூறினார்.

Loading