ட்ரம்பின் பெரிய பொய், சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கு முன்னோடியாக கோவிட்-19 ஐ சீனா பரப்பியதாக குற்றம் சாட்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வரும் உரை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தால் மே 2 அன்று நடத்தப்பட்ட 2020 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியில் WSWS (ஆஸ்திரேலியா) இன் தேசிய ஆசிரியர் பீட்டர் சிமண்ட்ஸ் வழங்கியதாகும்.

இந்த இணையவழி மே தின கூட்டத்தில் உலகெங்கிலும் இருந்து பங்கெடுத்துள்ள ஒவ்வொருவருக்கும் ஆஸ்திரேலியாவில் இருந்து வாழ்த்துக்கள்.

உலகின் பரந்த பெருந்திரளான மக்கள்தொகையின் உயிர்கள், ஆரோக்கியத்தை விட மிகவும் செல்வசெழிப்பான ஒரு சிலரின் வெறுப்புமிக்க இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் முன்னேறிய, உள்ளார்ந்து அழுகிய நிலையை இந்த கோவிட்-19 தொற்றுநோய் எடுத்துக்காட்டி உள்ளது.

ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கானவர்கள் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிருக்கையில், விஞ்ஞானபூர்வ விபரங்களையும், மருத்துவ மற்றும் சுகாதார ஆதாரவளங்களையும் ஒழுங்குப்படுத்துவதற்கும் மற்றும் இந்த வைரஸ் மேற்கொண்டு பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான மற்றும் இறுதியில் தடுப்பதற்கான விஞ்ஞானபூர்வ சிறந்த வழிவகைகளைச் செயல்படுத்துவதிலும் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் மிகவும் அத்தியாவசியமாகும்.

ஆனால் இந்த முதலாளித்துவத்தின் காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறையோ உயிராபத்தான அந்த வைரஸை எதிர்த்து போராடுவதற்கான சர்வதேச ஒத்துழைப்புக்கு ஒரு தடையாக மட்டுமல்ல, மாறாக இந்த தொற்றுநோய் வெடிப்பதற்கு முன்னரே ஓர் உலகளாவிய போரை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்த புவிசார் அரசியல் போட்டிகள் அனைத்தும் புதிய வெறித்தனத்துடன் வெடித்து வருகின்றன என்பதையும் நிரூபித்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பாரிய இராணுவ எந்திரத்தைப் பிரயோகிப்பது உட்பட இருக்கும் ஒவ்வொரு வழிவகைகள் மூலமாகவும் பெரும்பிரயத்தனத்துடன் அதன் உலகளாவிய மேலாதிக்க அந்தஸ்தை உயர்த்துவதற்கு முயன்று வருகையில், உலக அரசியலில் மிகவும் நிலைகுலைக்கும் காரணியாகவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் விளங்குகிறது.

இந்த தொற்றுநோய்க்கு மத்தியில், ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினர் மற்றும் ஊடகங்களின் ஆதரவுடன் சேர்ந்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் பொய்களின் அடிப்படையில் இந்த கொரோனா வைரஸிற்காக சீனா மீது பழிசுமத்த ஒரு வக்கிரமான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

சீனா இந்த வெடிப்பை மூடிமறைக்க முயன்றது என்ற பொய்யான வாதத்தின் அடிப்படையில், இந்த நோயையும் மற்றும் ஏனைய நோய்களையும் எதிர்த்து போராடுவதற்காக உலகெங்கிலுமான நாடுகளுக்கு உதவும் மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்பான, உலக சுகாதார அமைப்புக்கு ட்ரம்ப் அமெரிக்காவால் வழங்கப்படும் நிதியுதவிகளை நிறுத்தினார்.

உண்மையில் சீன அதிகாரிகள் உரிய நேரத்தில் உலகை எச்சரிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர். ஜனவரி 3 இல் இருந்து அந்நோய் தீவிரமடைந்த விதத்தை WHO க்கு வழமையாக அறிவித்து வந்ததுடன், அந்த கிருமியை விரைவாக அடையாளம் கண்டிருந்தனர், ஜனவரி 11 இல் அந்த வைரஸின் உயிரணு வடிவத்தை WHO க்கு வழங்கினர். கூடுதலாக பரவாமல் தடுப்பதற்காக, ஜனவரி 23 இல், வூஹான் நகரம் அடைக்கப்பட்டது.

முன்னறியப்படாத ஒரு வைரஸைக் கையாள்வதில் சீன விடையிறுப்புக்கள் எந்தளவிற்கு மட்டுப்பட்டதாக இருந்தாலும், பத்தாயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்த நிலையில் அறியப்பட்ட ஆபத்துகளுக்கு விடையிறுப்பதில் வாரக்கணக்கில் எந்தவொரு நடவடிக்கையும் ட்ரம்ப் நிர்வாகம் எடுக்க தவறியதுடன் அவற்றை ஒப்பிட்டால் அவை ஒன்றுமில்லாமல் முக்கியத்துவமற்று போய் விடுகின்றன.

அனைத்திற்கும் மேலாக, அந்த வைரஸ் வூஹானின் ஒரு வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது என்றும், ஒருவேளை தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ அது வெளிப்பட்டிருக்கலாம் என்ற அதிவலது சதி தத்துவத்திற்கும் மதிப்பேற்றி உள்ளார். கொரோனா வைரஸ் "மனிதர்களால் உருவாக்கப்பட்டது இல்லை" என்று நம்புவதாக தேசிய உளவுத்துறை இயக்குனர் அலுவலகம் சமீபத்தில் அறிவித்துள்ள உண்மைக்கு மத்தியிலும் கூட, அந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவான ஆதாரங்களைக் கண்டிருப்பதாக இந்த வாரம் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த மிகப்பெரிய பொய்க்கு எதிர்முரணாக அந்த தொற்றுநோய் விலங்கிடமிருந்து மனிதருக்கு வந்திருக்கலாம் என்ற பெருவாரியான விஞ்ஞான ஆதாரங்கள் இருந்தாலும் கூட ட்ரம்பின் பாசிசவாத முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் பானனால் வளர்த்து விடப்பட்ட இந்த மிகப்பெரிய பொய் அமெரிக்க ஊடகங்கள் எங்கிலும் ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா போன்ற கூட்டாளிகளின் ஆதரவுடன் சீனாவைப் பலிக்கடா ஆக்குவதற்கான அமெரிக்க முயற்சிகள், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் எதிர்ப்பு மத்தியில் அதன் சொந்த குற்றகரமான அலட்சியத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு குரூர முயற்சியாகும். ஆனால் இதைவிடவும் நிறைய உள்ளது. சீனா மற்றும் ஏனைய போட்டியாளர்கள் உடனான போட்டியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நிலைமையை இந்த தொற்றுநோய் இன்னும் சரித்து விடுமோ என்று அமெரிக்க மூலோபாயவாதிகள் ஆழமாக அஞ்சுகின்றனர்.

முதலில் ஒபாமாவின் கீழும் இப்போது ட்ரம்பின் கீழும், அமெரிக்கா இராஜாங்கரீதியிலும் பொருளாதாரரீதியிலும் ஆக்ரோஷமாக சீனாவிற்குக் குழிபறிக்க முனைந்துள்ள அதேவேளையில் அது போருக்கான தயாரிப்பில் இந்தோ-பசிபிக் எங்கிலும் வேகமாக இராணுவ கட்டமைப்பிலும் ஈடுபட்டு வருகிறது. ட்ரம்பின் கீழ், பயங்கரவாம் மீதான போர் என்றழைக்கப்படுவது "வல்லரசு மோதல்" என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு எதிரான அவரின் பொருளாதாரப் போர் தவிர்க்கவியலாமல் இராணுவ மோதலுக்கும் போருக்கும் இட்டுச் செல்கிறது.

ட்ரம்ப் நிர்வாகம் இப்போது சீனாவுக்கு எதிராக பழிவாங்கும் பொருளாதார தடையாணைகள் மற்றும் இதர நடவடிக்கைகளை தீவிரமாக விவாதித்து வருகிறது. அதே நேரத்தில் அது தென் சீனக் கடலில் சீனாவுக்கு எதிரான அதன் கடற்படை ஆத்திரமூட்டல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் ஒரு கால் நூற்றாண்டாக மேலாதிக்கத்திற்கான குற்றகரமான அமெரிக்க போர்கள் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான பேரழிவுகரமான போர் முனைவாக மாறி வருகின்றன. மத்திய தூர ஏவுகணைகள் மீதான உடன்படிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் முறித்திருப்பது தற்செயலானதில்லை, இந்தாண்டு இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கு புதிய அணுஆயுதங்களின் அபிவிருத்திக்கு முதல் முன்னுரிமை வழங்குகிறது.

உலகெங்கிலுமான முதலாளித்துவ வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்க போர் மற்றும் அவர்களின் போட்டியாளர்களுக்கு எதிரான போருக்கு அப்பாற்பட்டு, ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு அவர்களிடம் எந்த தீர்வும் இல்லை என்பதை இந்த கோவிட்-19 தொற்றுநோய் அம்பலப்படுத்தி உள்ளது. மனிதகுலத்தின் உயிர்பிழைப்பானது, இந்த திவாலான இலாப நோக்கு அமைப்புமுறையையும் உலகின் எதிர்விரோத போட்டி தேசிய அரசுகளாக அதன் காலங்கடந்த பிரிவினையையும் முடிவுக்குக் கொண்டு வரும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தைச் சார்ந்துள்ளது.

இந்த ஆக்ரோஷமான அமெரிக்க இராணுவக் கட்டமைப்புக்கும் போர் முனைவுக்கும் பெய்ஜிங்கிடமும் எந்த முற்போக்கான பதிலும் இல்லை. ஒருபுறம் வாஷிங்டனை சமாதானப்படுத்துவதற்கான பயனற்ற முயற்சிக்கும் மறுபுறம் மனிதகுல பேரழிவில் மட்டுமே முடியக்கூடிய ஆயுத போட்டியில் ஈடுபடுவதற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்பது மட்டுமே அதன் விடையிறுப்பாக உள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை எதிர்ப்பது, அதன் பிற்போக்குத்தனமான சீன தேசியவாதத்தை நிராகரிப்பது, ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீடித்த போராட்ட படிப்பினைகளைக் கற்று, உலகெங்கிலுமான அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைவது மட்டுமே சீன தொழிலாள வர்க்கத்திற்கு முன்னிருக்கும் ஒரே பாதையாகும்.

இந்த மே தினத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அமெரிக்காவிலும், சீனா, ஐரோப்பா, ஆசியா மறும் உலகெங்கிலுமான நாடுகளின் தொழிலாளர்களும் இளைஞர்களும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதில் இணையுமாறு அழைப்பு விடுக்கிறது. சோசலிச நிலைபாடுகளில் இருந்து, அடி முதல் முடி வரை சமூகத்தை மறுக்கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே நோய் மற்றும் போரின் இன்னல்களை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

Loading