ஜேர்மனியில் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரம் மற்றும் தீவிர வலதுசாரிகளின் மீள் எழுச்சி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 2 அன்று உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின்அனைத்துலகக் குழுவும் நடத்திய 2020 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (ஜேர்மனி)பதில்தேசியசெயலர் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் பின்வரும் உரையை நிகழ்த்தினார்.

ICFI இன் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) சார்பாக இந்த சர்வதேச மே தினக் கூட்டத்திற்கு புரட்சிகர வாழ்த்துக்களை வழங்குகிறேன்.

ஜேர்மனியைத் தவிர வேறெந்த நாடும், வேலைக்குத் திரும்புவதை இந்தளவுக்கு பரந்தளவிலும் அமைப்புரீதியிலும் ஒழுங்கமைத்து இருக்காது. வியாழக்கிழமை, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் பொருளாதாரம் மீதான கட்டுப்பாட்டுகளை இன்னும் கூடுதலாக தளர்த்துவதாக அறிவித்தார், “வைரஸ் பரவுவதை நாம் குறைத்துள்ளோம்,” என்ற வார்த்தையைக் கொண்டு அதை நியாயப்படுத்தினார்.

The speech by Christoph Vandreier begins at 1:11:03 in the video.

இது முற்றிலும் பொய் தகவல். ஜேர்மனியிலும், நோய்தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து கொண்டிருக்கிறது. நேற்று அறிவிக்கப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6,700 க்கும் அதிகமாக அதிகரித்தது, நோய் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 164,000க்கும் அதிகமாக அதிகரித்தது.

மேர்க்கெலின் அந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு சற்று முன்னதாக, உத்தியோகபூர்வ Robert Koch பயிலகம் கூட இந்த புள்ளிவிவரங்கள் இன்னும் மிகக் குறைவு என்பதையும், வைரஸால் ஏற்படும் அதிகப்படியான இறப்பு முன்னர் பதிவுசெய்யப்பட்டதை விட மிக அதிகம் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது.

ஆனாலும் கூட, அனைத்து விஞ்ஞானபூர்வ எச்சரிக்கைகளுக்கும் எதிர்முரணாக, பள்ளிக்கூடங்களும் கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றன. கார் தொழில்துறை உற்பத்தி வேகப்படுத்தப்பட்டு வருகிறது. நூற்றுக் கணக்கான பணியாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களிலும் கூட, தொழிலாளர்கள் இப்போதும் பொருத்துமேடைகளில் வேலை செய்ய பலவந்தப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் சேர்ந்து, சமீபத்திய ஆண்டுகளின் குரூரமான வர்க்க அரசியலும் வெளிப்பட்டு வருவதுடன், தீவிரப்படுத்தப்பட்டும் வருகிறது.

ஜேர்மன் அரசாங்கம் மார்ச் மாதம் பெரிய வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் 600 பில்லியன் யூரோ அரசு நிதிகளை வழங்கிய அதேவேளையில், தொழிலாளர்களுக்கு ஒன்றும் வழங்கப்படவில்லை. பல நிறுவனங்களும் நீண்டகாலமாக அவை திட்டமிடப்பட்டு வந்த பாரியளவிலான பணிநீக்கங்களை முன்நகர்த்துவதற்கு இந்த நெருக்கடியைப் பயன்படுத்துகின்றன. வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கை 308,000 ஆக உயர்ந்து ஏப்ரலில் 2.6 மில்லியனை எட்டியது. இன்னும் கூடுதலாக பத்து மில்லியன் தொழிலாளர்கள் குறுகிய-கால வேலையில் உள்ளனர்.

அதன் குற்றகரமான வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்துடன் சேர்ந்து, ஜேர்மன் அரசாங்கம், செல்வந்தர்களின் இலாபங்களைக் காப்பாற்றி வைக்கவும் மற்றும் நிதியியல் சந்தைகளுக்கான வெகுமதிகளைத் தொடரவும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உயிரிழப்புகளை ஏற்றுக் கொள்கிறது.

அதேநேரத்தில், ஆளும் வர்க்கம் அதன் ஏகாதிபத்திய எதிர்விரோதிகளுக்கு எதிராக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி வருகிறது. சான்றாக, “நமக்கு இப்போது என்ன தேவை என்றால் இந்த நெருக்கடியிலிருந்து பலமாக எழும் ஓர் ஐரோப்பாவுக்கான நடைமுறைவாத மற்றும் இலக்கு கொண்ட நடவடிக்கைகளாகும்,” என்று ஜேர்மன் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் CDU நாடாளுமன்ற குழுவின் துணைத் தலைவர் தெரிவித்தார். ஜேர்மன் உயரடுக்குகள், தொழிலாளர்களின் உயிர்களை விலையாக கொடுத்து, உலக அரசியலில் அவற்றின் பொருளாதார நலன்களைப் பலப்படுத்துவதற்காக ஐரோப்பாவை மேலாதிக்கம் கொள்ள விரும்புகின்றன.

இந்த வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் தங்களின் உயிரையே அபாயத்திற்கு உட்படுத்தியுள்ள செவிலியர்களுக்கு 1,500 யூரோ அற்ப மேலதிக கொடுப்பனவு மறுக்கப்பட்ட அதேவேளையில், பாதுகாப்பு துறையோ இந்த தொற்றுநோய்க்கு இடையே மொத்தம் 20 பில்லியன் யூரோவில் 138 புதிய போர்விமானங்கள் வாங்க இருப்பதாக அறிவித்தது. இது ஜேர்மன் சுகாதார அமைச்சகத்தின் ஒட்டுமொத்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்டக்கணக்கை விட அதிகமாகும்.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதன் போர், ஆக்ரோஷமான ஏகாதிபத்தியம் மற்றும் அதிதீவிர இராணுவவாதம் ஆகியவற்றுடன் சேர்ந்து, ஜேர்மனியில் ஆளும் வர்க்கம் மீண்டுமொருமுறை நாஜி கொள்கைகளுடன் தன்னை இணைத்து வருகிறது.

ஹிட்லரின் "இயற்கையின் பிரபுத்துவக் கோட்பாட்டுடன்" முற்றிலும் இணங்கிய விதத்தில், முதியவர்கள் மற்றும் பலவீனமானவர்களின் தவிர்க்கக்கூடிய மரணம் என்பது பிரதான ஜேர்மன் பத்திரிகைகளில் மீண்டுமொருமுறை "இயற்கை நிகழ்வுபோக்கு", அது "புதிய உயிர்களுக்கு இடமளிக்கிறது,” என்பதாக பொருள் விளங்கப்படுத்தப்படுகிறது. “சமத்துவக் கோட்பாடு" அனைத்து மனித உயிர்களையும் காப்பாற்றுவதற்காக நிற்கிறது என்பதால் அது பகிரங்கமாக கண்டிக்கப்படுகிறது.

ஜேர்மன் அரசின் இரண்டாவது உயர்மட்ட அதிகாரியான ஜேர்மன் நாடாளுமன்ற கீழ் அவையின் தலைவர் வொல்ஃப்காங் சொய்பிள, அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட மனித கெளரவத்திற்கான உரிமை மீது தாக்குதலை செய்து, ஆனால் இதில் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளடக்கப்படவில்லை என்று அறிவித்தார்.

செல்வந்தர்களின் இலாபங்களைப் பாதுகாப்பதற்காக கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவசியமான செயற்கை சுவாசம் மறுக்கப்பட்டு இதனால் மோசமாக மூச்சுத்திணறல் துன்பத்திற்கு உட்பட்டால், பின்னர் நாஜிச குற்றங்களின் அனுபவ அடிப்படையில் அமைந்த அடிப்படை சட்டத்தின் ஷரத்து 1 இல் குறிப்பிடப்பட்ட இந்த உயிர் வாழ்வதற்கான உரிமை இல்லாதொழிக்கப்படுகிறது.

செல்வந்தர்களுக்காக மனித உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டுமென்ற சொய்பிளவின் பாசிசவாத கோரிக்கை ஜேர்மன் நாடாளுமன்ற கீழ் அவையில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளாலும் ஆதரிக்கப்பட்டது. மேலும் வேலைக்குத் திரும்ப செய்வது மற்றும் பெருநிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான வெகுமதிகள் ஆகியவை பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியில் இருந்து இடது கட்சி வரையில் அனைத்துக் கட்சி கூட்டணியால் ஆதரிக்கப்படுவதுடன், தொழிற்சங்கங்களாலும் மும்முரமாக ஊக்குவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் நாம் எடுத்துக் காட்டியுள்ளதைப் போல, ஆளும் வர்க்கங்கள் அவற்றின் பிற்போக்குத்தனமான திட்டநிரலை முன்நகர்த்துவதற்காக, நனவுபூர்வமாக, AfD மற்றும் Pegida போன்ற அதிதீவிர வலதுசாரி மற்றும் பாசிசவாத போக்குகளைக் கட்டமைத்து ஊக்குவித்து வருகின்றன.

இரண்டாம் உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர், பாசிசவாதம், நிர்மூலமாக்கும் போர் மற்றும் யூத இனப்படுகொலைக்கு இட்டுச் சென்ற முதலாளித்துவத்தின் அனைத்து தீர்க்கப்படாத பிரச்சினைகளும், உலகெங்கிலும் மீண்டும் தோன்றி வருகின்றன.

பாசிசம் என்றால் “மக்களின் அனைத்து சக்திகளையும் ஆதார வளங்களையும் ஏகாதிபத்திய நலன்களுக்காக பலவந்தமாக ஒன்று குவித்தல்" என்பதாகும் என்று ட்ரொட்ஸ்கி ஜூன் 1933 இல் "தேசிய சோசலிசம் என்றால் என்ன?” என்ற அவரின் தலைசிறந்த கட்டுரையில் அறிவித்தார்.

இன்றும் கூட ஏகாதிபத்திய மோதல்கள் அதிகரித்து வருகின்றன மற்றும் வல்லரசுகள் உலக போருக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன. அதன் மனிதாபிமானமற்ற பாரம்பரியங்களுக்கு திரும்பி வருவது ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் மட்டுமல்ல. அமெரிக்காவில் ட்ரம்ப், பிரான்சில் மக்ரோன், பிரேசிலில் போல்சொனாரோவும் எதேச்சதிகாரம் மற்றும் இறுதியில் பாசிசவாத அணுகுமுறைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஆனால் 1933 ஐ போல இல்லாமல், ஆளும் வர்க்கத்திடம் தன்னிடத்தே ஒரு பாரிய பாசிசவாத இயக்கத்தை கொண்டிருக்கவில்லை. அதற்கு எதிர்முரணாக, பரந்த பெரும்பான்மையினர் இராணுவவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மையின் அரசியலை நிராகரிக்கின்றனர் என்பதோடு, அத்துடன் ஒவ்வொரு இடத்திலும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்ற வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்தையும் நிராகரிக்கின்றனர்.

பெருவாரியான பெரும்பான்மையினர் தற்போதைய ஊரடக்கத்தை தளர்த்துவதை எதிர்க்கின்றனர் என்பதோடு செல்வந்தர்களுக்காக தங்கள் வாழ்வை ஆபத்திற்குட்படுத்த தயாராக இல்லை என்பதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. சமூக ஊடகங்களில், தொழிலாளர்கள் போதுமானளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததை எதிர்த்து வேலைநிறுத்தங்களையும், நாள்தோறும் நடந்து வரும் அகதிகளை மரணகதியில் அடைத்து வைப்பதற்கு எதிரான போராட்டங்களைக் குறித்தும் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

இன்று சர்வதேச அளவில் புறநிலைரீதியாக தொழிலாளர்களின் அனுபவங்கள் சமூகத்தை சோசலிச அடிப்படையில் மாற்றுவதற்கான அவசியத்தை உயர்த்துகிறது. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைக்காமல் மற்றும் தொழிலாளர்களின் அரசாங்கத்திற்காக போராடாமல், மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கான ஒரு புதிய சமூக-பொருளாதார மற்றும் சுகாதார பேரழிவைத் தடுக்க முடியாது.

இதனால் தான், சோசலிச புரட்சிக்கான உலக கட்சியான, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொழிலாளர்களிடையே அதிகரித்த ஆதரவைப் பெற்று வருகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் எண்ணிக்கை சமீபத்திய மாதங்களில் மிகப் பெரியளவில் அதிகரித்துள்ளது. இந்தாண்டு ஏற்கனவே மொத்தம் மூன்று மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வலைத் தளத்தை அணுகி உள்ளனர். ஜேர்மன் அரசாங்கத்தின் கொள்கைகளைக் கண்டிக்கும் மற்றும் நமது சோசலிச முன்னோக்கை அபிவிருத்தி செய்வதைக் குறித்த கட்டுரைகள் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்டுள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அனைத்துலகக் குழுவை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக கட்டமைப்பதும் மற்றும் உலக சோசலிச புரட்சியைக் கொண்டு முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை எதிர் கொள்வதும் மத்திய பணியாகும்.

Loading