முன்னோக்கு

வெனிசுவேலாவில் ட்ரம்பின் "பிக்ஸ் வளைகுடா" நடவடிக்கை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இவ்வார தொடக்கத்தில் வெனிசுவேலாவின் கடற்கரையில் அமெரிக்கா வழிநடத்தும் கூலிப்படையினரை ஆயுதங்களுடன் தரையிறக்குவதற்கான கருக்கலைக்கப்பட்ட ஒரு ஜோடி நடவடிக்கையானது, உலகளாவிய கொரொனா வைரஸ் தொற்றுநோயும், மரணங்களும், அமெரிக்க மக்கள் மீது அது உருவாக்கி உள்ள நாசங்களும் தென் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் புவிசார் மூலோபாய நலன்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் மற்றும் குற்றகரமான பின்தொடர்வைக் கடிவாளமிடுவதில் ஒன்றும் செய்துவிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

வெனிசுவேலாவில் கைப்பற்றப்பட்ட அமெரிக்க கூலிப்படையினர் Luke Denman (மேலே வட்டமிட்டிருப்பது) மற்றும் Airan Berry (கீழே).

வெனிசுவேலா தலைநகர் கராகஸில் இருந்து வெறும் அரை மணி நேர பயண தூரத்தில் உள்ள லா குவைரா மாநிலத்தின் மாப்டோவில் ஞாயிறன்று அதிகாலை அவ்விரு தரையிறக்கும் நடவடிக்கைகளில் ஒன்று நடத்தப்பட்டது. “Pantera” (சிறுத்தை) என்றறியப்படும் வெனிசுவேலா இராணுவத்தின் முன்னாள் தளபதியான அக்குழுவின் தலைவர் உட்பட தரையிறங்கிய ஆயுதமேந்திய நபர்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், எஞ்சிய நபர்கள் பிடிக்கப்பட்டனர்.

இரண்டாவது தரையிறக்கம், கராகஸின் மேற்கில், இதுவும் வெனிசுவேலாவின் கரீபியன் கடற்கரையில் அராகுவா மாநிலத்தின் Chuao தீபகற்பத்தில் திங்கட்கிழமை நடந்தது. இங்கே, ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களை உள்ளூர் மீனவர்கள் பார்த்து, பிடித்து வெனிசுவேலா பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைத்தனர்.

பல ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளில் முக்கிய நபராக இருந்தவரும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் வெனிசுவேலா பாதுகாப்பு அமைச்சரின் மகன் ஜோஸ்னார்ஸ் அடோல்ஃபோ பாதெல் (Josnars Adolfo Baduel) உம் பிடிபட்டவர்களில் உள்ளடங்கி இருந்தார். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு அமெரிக்க பிரஜைகளும் இருந்தனர், லூக் டென்மன் (34 வயது) மற்றும் அரைன் பெர்ரி (41 வயது) இவர்கள் இருவரும் அமெரிக்க சிறப்பு நடவடிக்கைகளில் இருந்த முன்னாள் துருப்புகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவ்விரு அமெரிக்கர்களும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு படைக்காக வேலை செய்திருப்பதைத் தன்னிடம் கூறியதாக Baduel வெனிசுவேலா அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அந்த கூலிப்படையினருடன் சேர்ந்து கைப்பற்றப்பட்ட ஆயுத தளவாடங்களின் புகைப்படங்களுடன் சேர்ந்து பிடிபட்ட இரண்டு அமெரிக்கர்களின் கடவுச்சீட்டுக்கள் மற்றும் இராணுவ அடையாள அட்டைகளை வெனிசுவேலா அதிகாரிகள் ஊடகங்களிடம் காட்டினர். Denman ஐ விசாரிக்கும் ஒரு காணொளியையும் அவர்கள் வெளியிட்டனர், வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்காக அவரை ஏற்றிச் செல்லும் விமானங்களைக் கைப்பற்றுவதற்காக கராகஸ் விமானம் நிலையம் மீது கட்டுப்பாட்டை எடுப்பதே திட்டமாக இருந்ததென அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கையை வழிநடத்துபவர் யார் என்று வினவிய போது, “ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்" என்று அவர் பதிலளித்தார்.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் Green Beret படைப்பிரிவின் முன்னாள் வீரர் Jordan Goudreau இந்த நடவடிக்கையின் முக்கிய நபராக இருந்தார். இவர் புளோரிடாவை மையமாக கொண்ட தனியார் பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனம் SilverCorp USA ஐ நடத்தி வருகிறார். அவரின் சொந்த தகவல்படி, ட்ரம்பின் நீண்டகால பாதுகாவலரும் ஓவல் அலுவலக நடவடிக்கைகளின் இயக்குனராகவும் சேவையாற்றிய Keith Schiller ஆல் Goudreau வெனிசுவேலாவின் வலதுடனும் மற்றும் அதன் அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளிலும் இணைக்கப்பட்டார். அப்போதிருந்தே Goudreau ட்ரம்ப் பேரணிகளில் பாதுகாப்புக்குப் பணியாற்றுவதைக் காட்டும் காணொளிகள் வெளியாகி உள்ளன.

வெனிசுவேலாவுக்குள் பாசாங்குத்தனமாக உதவிக்குழுக்களை அனுப்பும் CIA இன் ஒரு தோல்வியடைந்த Trojan Horse நடவடிக்கையின் பாகமாக, பெப்ரவரி 2019 இல் பிரிட்டிஷ் பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சனால் நிதி வழங்கப்பட்டு வெனிசுவேலா-கம்போடியா எல்லையில் ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக அவர் நியமிக்கப்பட்ட போதே அமெரிக்க உளவுத்துறை மற்றும் வெனிசுவேலா வலதுடன் இந்த இராணுவ ஒப்பந்ததாரரின் உறவுகள் அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தன.

இந்த சமீபத்திய நடவடிக்கைக்கு Goudreau பகிரங்கமாக பொறுப்பேற்று கொண்டார், அந்நடவடிக்கை இன்னமும் நடந்து வருகிறது என்றும் "மதுரோ அரசாங்கத்தைத் தூக்கி வீசுவதே" அதன் நோக்கம் என்றும் அவர் தெரித்தார். இந்த கடல்வழி ஊடுருவல் மானக்கேடாக தோல்வியடைந்தாலும், ஏனைய கூறுபாடுகள் வெனிசுவேலாவுக்குள் மும்முரமாக நடந்து வருகின்றன என்றும், அவை "தந்திரோபாய இலக்குகளைத் தாக்க தொடங்கும்", வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பயங்கரவாத அலையைத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கும் கூடுதலாக, கடந்தாண்டு ஜனவரியில் தன்னைத்தானே வெனிசுவேலாவின் "இடைக்கால ஜனாதிபதி" என்று அறிவித்து கொண்டவரும், உடனடியாக வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளால் வெனிசுவேலாவின் "சட்டப்பூர்வ அரசாங்கமாக" மரியாதை அளிக்கப்பட்டவருமான வலதுசாரி அரசியல்வாதியும் மதிப்பற்றவருமான Juan Guaidó க்கும் Goudreau க்கும் இடையே கையெழுத்தான இணையத்தில் பதிவிடப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் செல்லுபடித்தன்மையையும் Goudreau உறுதிப்படுத்தினார்.

Guaidó மற்றும் Goudreau க்கு இடையே ஆங்கிலத்தில் நடக்கும் பதிவு செய்யப்பட்ட ஓர் உரையாடலும் வெளியிடப்பட்டுள்ளது, அதில் அமெரிக்க அரசாங்கத்தால் வெனிசுவேலாவில் இருந்து திருடப்படும் எண்ணெய் ஆதாரவளங்களுக்குக் கட்டணத்தை உத்தரவாதப்படுத்தியும், அத்துடன் இந்த ஆயுதமேந்திய தலையீட்டை நடத்த அந்த அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரருக்கு 213 மில்லியன் டாலர் வழங்கவும் அந்த அமெரிக்க கைப்பாவை உடன்பட்டது.

வாக்குறுதி அளித்த தொகையை Guaidó கொடுக்க தவறிவிட்டதாக Goudreau வாதிட்டார். ஆனால் நிஜமான ஏற்பாடு என்னவாக இருந்தாலும், ஒரு கூலிப்படை இராணுவத்தை ஒழுங்கமைப்பதற்கும், வெனிசுவேலாவின் கடல்வழியில் அதை அனுப்புவதற்கும் யாரோவொருவர் பணம் செலுத்தி உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. அது கைப்பாவையா அல்லது அந்த கைப்பாவையின் எஜமானரா என்பதில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

ஓராண்டுக்கும் சற்று குறைவான காலத்திற்கு முன்னர் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தூண்டிவிட முயன்ற Guaidó சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்படவில்லை என்றால் அதற்கு காரணம் மதுரோவின் "பொலிவிய சோசலிச" பூர்ஷூவா அரசாங்கம், வெனிசுவேலிய முதலாளித்துவம் அழியாமல் காப்பாற்றுவதற்கும் அடிமட்டத்திலிருந்து ஒரு புரட்சிகர வெடிப்பைத் தடுப்பதற்கும் ஓர் உடன்படிக்கையைப் பின்தொடர்வதில் இன்னமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் பாரம்பரிய செல்வந்த தட்டுக்களுடனும் அவர் ஒரு இடைத்தரகராக செயல்பட முடியுமென்று காண்கிறது.

வெனிசுவேலா மீதான இந்த முயற்சிக்கப்பட்ட கடல்வழி ஊடுருவல் குறித்து ட்ரம்பிடம் வினவிய போது, அது குறித்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்றும் "அவர் அரசாங்கத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ புதன்கிழமை வெளியுறவுத்துறை பத்திரிகையாளர் சந்திப்பில் ஓரளவுக்கு அதிக சூசகமான பதிலை வழங்கினார், “இந்த நடவடிக்கையில் அமெரிக்க அரசாங்கம் நேரடியாக சம்பந்தப்படவில்லை,” என்று கூறிய அவர், “என்ன நடந்தது என்பதன் மீது அவர் அறிந்த தகவல்களை இதற்கு மேல் அதிகமாக பகிர அவர் தயாராக இல்லை" என்றார்.

இரண்டு பிடிபட்ட அமெரிக்க கூலிப்படையினரைப் பொறுத்த வரையில், பொம்பியோ குறிப்பிடுகையில், வாஷிங்டன் “அவர்களைத் திரும்ப பெறும் முயற்சியில் கையிலிருக்கும் ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்தும்" என்றார்.

அவர்களைத் திரும்ப அனுப்புமாறு அமெரிக்கா எந்த அடித்தளத்தில் கோரும் என்பதைக் குறித்து வெளியுறவுத்துறை செயலர் ஒன்றும் கூறவில்லை. டொனால்ட் ட்ரம்பைக் கடத்துவது அல்லது கொல்லும் நோக்கத்துடன் அமெரிக்காவுக்குள் ஊடுருவிய ஒரு ஜோடி வெளிநாட்டவர்கள் பிடிக்கப்பட்டால் அவர்களுக்குப் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆயுள் தண்டனையோ அல்லது அதை விட மோசமான தண்டனையோ வழங்கப்படும் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இருக்குமா?

வெனிசுவேலாவுக்கு எதிராக போர் நிலைக்கு நிகராக முடமாக்கும் தடையாணைகளின் “அதிகபட்ச அழுத்த” பிரச்சாரத்தின் உள்ளடக்கத்தில் தான் இந்த ஆயுதமேந்திய ஊடுருவல்கள் கட்டவிழ்ந்துள்ளன. இந்நாட்டுக்கு எதிராக நடைமுறைரீதியிலான தடையாணைகள் அதன் எண்ணெய் ஏற்றுமதிகளை வெட்டி உள்ளதுடன், அத்தியாவசியமான மருத்துவ மற்றும் மருந்து பொருட்களை அது இறக்குமதி செய்வதில் இருந்தும் அதை தடுத்துள்ளது, இது கொரொனா வைரஸ் தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்னரே கூட பத்தாயிரக் கணக்கானவர்களின் உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. அது வெடித்த பின்னர் இருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் வெனிசுவேலா மக்களை அடிபணிய நிர்பந்திப்பதற்கும் ஆட்சி மாற்றத்திற்கான அதன் முனைவை நிறைவேற்றுவதற்கும் இந்த நோயையும் உயிரிழப்புகளையும் ஓர் ஆயுதமாக பயன்படுத்தும் முயற்சியில் தடையாணைகளை இறுக்க மட்டுமே செய்துள்ளது.

அமெரிக்காவுக்குள் கடத்தி வரப்படும் பாரிய பெருமளவிலான போதை மருந்துகள் Bogota, Tegucigalpa மற்றும் Guatemala நகரில் உள்ள வாஷிங்டனின் வலதுசாரி கூட்டாளிகளால் பாதுகாக்கப்பட்ட மத்திய அமெரிக்கா வழியாக கொலம்பியா மற்றும் பசிபிக் பெருங்கடல் வழியாகவே அமெரிக்காவுக்குள் வருகின்றன என்ற போதினும் கூட, போதை மருந்து கடத்தலுக்கு எதிராக போராடுகிறோம் என்ற சாக்குபோக்கில், அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து பொருளாதாரம் சரிந்த போதும் கூட, ட்ரம்ப் வெனிசுவேலாவின் கரீபிய கடற்பகுதிக்கு அருகில் கப்பற்படையின் ஒரு செயற்படைப்பிரிவை அனுப்ப உத்தரவிட்டார். அந்த நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட நடுத்தர போர்க்கப்பல்களும் கடலோர போர்க்கப்பல்களும் போதை மருந்து கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்கு உரியவை அல்ல.

வெனிசுவேலா கடற்கரையில் நடந்த இந்த கீழ்தரமான சம்பவங்கள் இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால இராணுவ ஆக்கிரமிப்பு வரலாறு, அரைக்காலனித்துவ சுரண்டல் மற்றும் பொலிஸ் அரசு ஒடுக்குமுறையின் இருண்ட அத்தியாயங்களை நினைவூட்டுகின்றன. 1961 இல் பிக்ஸ் வளைகுடாவில் நடத்தப்பட்ட மோசமான ஊடுருவல் உட்பட அமெரிக்க ஏகாதிபத்திய தலையீடுகள் ஆரம்பத்தில் தோல்வியடைந்த போதும், வாஷிங்டன் அதிகாரிகள் அதில் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருந்ததை ஆரம்பத்தில் ஆணித்தரமாக மறுத்தார்கள். அதேபோல, 1980 களில் நிக்கரகுவாவுக்கு எதிராக "கொன்ட்ரா" பயங்கரவாத போருக்கு நிதியுதவி வழங்குவதற்கான சட்டவிரோத நடவடிக்கையில், கொன்ட்ரா கூலிப்படையினருக்கு விமானங்களில் ஆயுதங்களை அனுப்பிய சிஐஏ ஒப்பந்ததாரர் Eugene Hasenfus சுட்டுக் கொல்லப்படும் வரையில் வாஷிங்டன் அது சம்பந்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மறுத்து வந்தது.

பிக்ஸ் வளைகுடா மற்றும் ஈரான்-கொன்ட்ரா விவகாரம் என்றழைக்கப்படுவது இரண்டுமே வாஷிங்டனில் பெரிய அரசியல் நெருக்கடிகளைத் தூண்டியதுடன், அமெரிக்க ஊடகங்களால் ஆழமாக துருவி எடுக்கப்பட்டன. ஆனால் அமெரிக்கா முடுக்கிவிட்ட கருக்கலைக்கப்பட்ட ஒரு வெனிசுவேலா ஊடுருவல் மீதான செய்திகள் பெருநிறுவன ஊடகங்களால் மவுனத்திற்கு நெருக்கமாக கடந்து செல்லப்படுகின்றன, ஜனநாயகக் கட்சிக்குள் ட்ரம்ப் மீதான பாசாங்குத்தனமான அரசியல் எதிர்ப்பிடம் இருந்து அது ஒரு வார்த்தை விமர்சனத்தையும் கொண்டு வரவில்லை. பைடனில் இருந்து சாண்டர்ஸ் வரையில், அவர்கள் அனைவரும் வெனிசுவேலாவில் ஆட்சி மாற்ற நடவடிக்கைக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுக்களின் நலன்களுக்குச் சேவையாற்றும் இந்த நடவடிக்கையானது, பூமியிலேயே மிகப் பெரியளவில் அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்க எரிசக்தி நிறுவன ஜாம்பவான்களின் தங்குதடையற்ற கட்டுப்பாட்டை ஸ்தாபிக்கவும், நீண்டகாலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் "சொந்த கொல்லைப்புறமாக" கருதி வரும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவில் சீனா மற்றும் ரஷ்யாவின் அதிகரித்து வரும் செல்வாக்கைத் தலைகீழாக ஆக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை அச்சுறுத்தும் உலகளாவிய கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், அமெரிக்க ஏகாதிபத்தியம், பில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படக்கூடிய மற்றொரு உலக போரைத் தூண்டிவிட அச்சுறுத்தும் விதத்தில், இராணுவ ஆக்கிரமிப்பு வழிவகைகள் மூலமாக அதன் சூறையாடும் நலன்களைப் பின்தொடர்ந்து வருகிறது.

முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு கட்டும் ஒரு பொதுவான போராட்டத்தில் தேசிய எல்லைகளைக் கடந்து ஒன்றிணைந்து, தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே மனிதகுல உயிர்பிழைப்புக்கு முன்நிற்கும் உயிராபத்தான அச்சுறுத்தலுக்கு ஒரு மாற்றீட்டை வழங்க முடியும்.

Loading