கொரோனா பூட்டுதலினால் இலங்கையின் வடக்கு கிழக்கில் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் பூட்டுதல் மற்றும் ஊரடங்கினால் தென் பகுதியில் போலவே வடக்கு மற்றும் கிழக்கிலும் வாழும் ஏழை விவசாயிகள் தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளனர். இதனால் அவர்களது விளைச்சல்கள் அழிவடைந்து வருகின்றன.

மரக்கறி மற்றும் பழவகை உற்பத்தியாளர்களே இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். வட மாகாண விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பண்டங்களை தென்பகுதியில் உள்ள சந்தைகளுக்கு, குறிப்பாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஏற்றுமதி செய்வது வழமையாகும். சந்தைகள் மூடப்பட்டதாலும் போக்குவரத்து தடைப்பட்டதாலும் இந்த நடைமுறை முற்றாக முடங்கிப் போய்விட்டது. சில விவசாயிகள் ஏற்றுமதி செய்த மரக்கறிகளுக்கு பணம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலகளுக்கு எதிரான முப்பது ஆண்டு காலம் நீடித்த கொழும்பு அரசாங்கங்களின் இனவாத யுத்தம் 2009 இல் பெரும் படுகொலைகளுடன் முடிவுக்கு வந்த போது, வடக்கில் உட்கட்டமைப்பு உடப்ட தமிழ் மக்களின் முழு வாழ்வாதாரமும் நாசமாக்கப்பட்டன. பத்து ஆண்டுகளின் பின்னரும் பொருளாதார ரீதியில் தலை தூக்க போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு கொரோனா பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மரக்கறி மற்றும் பூ உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திகளை அருவடை செய்யாமல் உள்ளனர். உள்ளூர் விற்பனையில் விலை மிகவும் குறைவாக இருப்பதால் கிராமங்களில் விற்பனை செய்யவும் முடியாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அத்தோடு அடுத்த பயிர்ச்செய்கைக்கு உரம், மருந்து உட்பட பொருட்களுக்கு செலவிட முடியா நிலையில் இருப்பதாகவும் அரசாங்கம் அதற்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

இதே மாவட்டத்தில் மாந்தை மேற்கு பகுதியில் பல கிராமங்களில் கிட்டத்தட்ட நூறு ஏக்கர் காணிகளில் சுண்டங்காய் (சிறிய கத்தரி வகை) உற்பத்தி செய்துள்ள விவசாயிகள் அவற்றை சந்தைப்படுத்த முடியாமல் தவிப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். பல லட்ச ரூபா முதலீடு செய்துள்ள தமது உற்பத்திகளை தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் விவசாயிகள் தமது விளைச்சலை விற்பனை செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். சக்தி தொலைக் காட்சி செய்தியின் படி 135,000 கிலோவுக்கும் அதிகமான மரக்கறி மற்றும் 14,000 கிலோ பழவகைகள் விற்பனை செய்ய முடியாமல் நாசமாகின்றன. முன்னர் ஒரு கிலோ பப்பாளி 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்த உள்ளூர் வியாபாரிகள், தற்போது 5 ரூபாவுக்கு வாங்குகின்றார்கள். விவாசாயிகள் பழங்களை மரத்திலேயே அழுக விட்டுள்ளனர் அல்லது கால்நடைகளுக்கு தீவனமாக போட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கா. விமலநாதனின் படி, 93 மெட்ரிக் தொன் பூசனிக்காய் இன்னும் சந்தைப்படுத்த முடியாமல் உள்ளது. 5 மெட்ரிக் தொன் ஏனைய மரக்கறிகளும், 7 மெட்ரிக் தொன் பழவகைகளும் சந்தைப்படுத்த முடியாமல் இருக்கின்றன. முல்லைதீவு உடையார் கட்டுக் குளம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 1,225 ஏக்கர் நெல் வயல்களுக்கு இன்னமும் உரம் கிடைக்காமல் விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முணைப்பற்று பிரதேசத்தில் வெள்ளரிப்பழ உற்பத்தியாளர்கள், ஆயிரக்கணக்கான பழங்கள் அழுகிப் போவதாக கவலை தெரிவித்துள்ளனர். இதேபோல் வாழ்ச்சேனை பிரதேசத்தில் மரக்கறி உற்பத்தியாளர்களும் தங்களது உற்பத்திகளுக்கு விலை கிடைக்காமையினால் அருவடை செய்யவும் முடியாமல் பயிர்ச் செய்கையை முன்னெடுக்கவும் முடியாமல் உள்ளனர்.

கொரோனா தொற்று பற்றிய பீதி, ஊரடங்குச் சட்டம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தங்கள் போன்ற காரணங்களால் விவாயிகள் தங்கள் பயிர்ச் செய்கையை பராமரிக்க முடியாமல் முடங்கிப் போயுள்ளனர். தோட்டங்கள் மற்றும் வயல்கள் ஒழுங்கான தண்ணீர் பாய்சுதல் இல்லாத காரணத்தினால் பயிர்கள் வாடி வதங்கி அழிந்துவிட்டன.

விவசாயிகள் தங்களின் முதலீடுகளைக் கூட மீள எடுக்க முடியாமலும், அதற்காக பெற்றுக் கொண்ட கடன்களை அடைக்க முடியாமலும் இருப்பதுடன் பல விவசாயிகள் இனிமேல் எந்தப் பயிர்ச் செய்கையிலும் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்கள்.

ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், உணவு உட்பட எந்தவொரு அத்தியாவசியத் தேவைகளையும் மக்களுக்கு விநியோகிப்பதற்கு எந்தவித திட்டமிடலும் இன்றி நாட்டை கடந்த ஒன்றரை மாதங்களாக பூட்டி வைத்துள்ளது. ஒரு பக்கம் உணவுப் பொருட்கள் இன்றி மக்கள் பசியுடன் இருக்கும் போது, மரக்கறிகள் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடுவது பற்றிய செய்திகள் தொடர்ந்தும் ஊடகங்களில் வெளி வந்த போதும், அவற்றை கொள்வனவு செய்து விநியோகிப்பது பற்றி எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் வகுக்கவில்லை.

கொரோனாவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து வங்கிகளையும் கூட்டுத்தாபனங்களையும் பாதுகாப்பதற்காக நூற்றுக்கணக்கான கோடிகளை ஒதுக்கீடு செய்துள்ள ராஜபக்ஷ, பூட்டுதலால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக வழங்க முடிவெடுத்த ஒரு மாத நிவாரணம் 5,000 ரூபா அற்பத் தொகையாகும். அதைப் பெற்றுக்கொள்வதற்கும் பல்வேறு மட்டுப்பாடுகள் இருக்கும் அதே வேளை, நாட்டின் பல பாகங்களிலும் தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் தங்களுக்கு இந்த தொகை கொடுக்கப்படவில்லை என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வடக்கில் உள்ள ஏழைகளில் அநேகமானவர்களுக்கு இந்த தொகையும் கிடைத்திருக்காததோடு பிரதேச சபைகளில் நிவாரணம் வழங்குவதற்காக உள்ள நிதியையும் தேர்தலை காரணமாக காட்டி பிரதேச நிர்வாகங்கள் முடக்கி வைத்துள்ளன. ஒரு மாதம் கடந்தும் அரசாங்கம் வாழ்வாதார உதவிகள் தரவில்லை என அநேகமான விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமையில் நெருக்கடிக்குள் மூழ்கியுள்ள ராஜபக்ஷவின் பொலிஸ்-இராணுவ அரசாங்கத்துக்கான திட்டத்தை பலப்படுத்த அர்ப்பணித்துக்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் நிலைமைகளைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. ஏனைய தமிழ் தேசியவாத கட்சிகள் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதைப் பற்றி வாய்ச்சவடால் விடுப்பதோடு நின்றுகொள்கின்றன.

பாலசிங்கம் பாஸ்கரன், தனது கைவிடப்பட்ட தோட்டத்தில் -7 மே 2020

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்த பாலசிங்கம் பாஸ்கரன், 35, காய்கறிகளை அறுவடை செய்ய முடியாத நிலையில் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்துவிட்டதாக தெரிவித்தார். “ஊரடங்குச் சட்டம் எங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. பல எதிர்பார்ப்புக்களுடன் செய்கையை மேற்கொண்டோம். ஆனால் கிடைத்ததோ அழிவுதான். எனது தோட்டத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் ஒன்றரை லட்சம் ரூபா முதலீடு செய்து கறிமிளகாய் பயிரிட்டு, ஒரேயொரு முறைதான் அறுவடை செய்தேன். பின்னர் ஊரடங்குச் சட்டத்தால் அறுவடை செய்ய முடியவில்லை. சரியாக விற்பனை செய்திருந்தால் 9 லட்சம் ரூபா கிடைத்திருக்கும். அது ஒரு பெரிய இழப்பு. எட்டுப்பரப்பு தக்காளி தோட்டம் கைவிடப்பட்டுள்ளது. உள்ளூரில் 15 அல்லது 20 ரூபாவுக்கே வியாபாரிகள் கொள்வனவு செய்வதனால் எனது அரை ஏக்கர் மிளகாய் தோட்டத்தையும் கைவிட்டுவிட்டேன். வங்கியில் இரண்டு இலட்சம் ரூபா கடன்பட்டுள்ளேன். மொத்தமாக எனக்கு 25 லட்சத்துக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது. மனைவியின் நகைகளை 6 லட்சம் ரூபாவுக்கு அடைவு வைத்திருக்கின்றேன். அதையும் மீட்க கூட முடியாமல் போய்விட்டது. இந்த அரசாங்கம் எமக்கு நட்ட ஈடு தரும் என்று நம்பவில்லை. ஏற்கனவே அறுவடை செய்து வைத்திருக்கும் நெல் உணவுக்காக உள்ளது. சூழ்நிலை இப்படியே தொடர்ந்தால் நெல் முடிந்த பின்னர் என்ன செய்ய முடியும்?

ஏனைய விவசாயிகளின் நிலைமையையும் விளக்கிய பாஸ்கரன் தெரிவித்ததாவது: “கொரோனாவால் எல்லோருக்கும் கஸ்ட்டம்தான். தற்போது, வெங்காயம் விதைப்பதற்கு சிலர் தயார்படுத்தினார்கள். ஆனால், விதை வெங்காயம் விலை அதிகரித்துவிட்டது. ஒரு அந்தர் 15,000 ரூபா. அரை ஏக்கர் நிலத்துக்கு 12 அந்தர் விதை வேணும். சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும். நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும், ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையில் பெருந்தொகையை போட்டு விதைப்பதற்கு விவசாயிகள் பின்நிற்கின்றார்கள். ஏற்கனவே விதைத்தவை நட்டம் ஏற்படுத்தியிருப்பதால் முதலீட்டுக்கு எங்கே போவது என்று தெரியாமல் விவசாயிகள் உள்ளார்கள். நாங்கள் எமது பண்டங்களை விற்கும்போது அரசாங்கத்திக்கு வரி கட்டுகிறோம் ஆனால் எமக்கு அழிவு ஏற்பட்டால் அரசாங்கம் நட்ட ஈடு தராது. தீவனங்கள் விலை அதிகரித்துள்ளதால் கால்நடைகளை கூட வளர்க்க முடியாது. எனக்கு தெரிந்த 35 அல்லது 40 தோட்டக்காரர்கள் நட்டப்பட்டுள்ளார்கள். எல்லோரும் வங்கியில் கடன்பட்டுள்ளார்கள்.”

மகாலிங்கம் நித்தியராஜாவின் கைவிடப்பட்ட மிளகாய் தோட்டம்

சித்தங்கேணியைச் சேர்ந்த இன்னொரு மிளகாய் உற்பத்தியாளரான மகாலிங்கம் நித்தியராஜா, 42, கைவிடப்பட்ட தனது மிளகாய் தோட்டத்தினை மீளவும் பராமரித்துக் கொண்டிருக்கின்றார். “திடீர் ஊரடங்கால் கால் ஏக்கர் கத்தரிதோட்டம், வெண்டிக்காய் செடிகள் மற்றும் மிளகாய் தோட்டமும் அழிந்துவிட்டன. கைவிட்ட மிளகாய் தோட்டம் மீண்டும் துளிர் விட்டதனால் தண்ணீர் விடுகின்றேன். ஆனாலும் நிலைமை தொடர்ந்தால் இந்த மிளகாயையும் விற்க முடியாமல் போகும். இப்போது எங்களுக்கு வருமானம் இல்லை. உணவுக்கு கூட பிரச்சினைப்பட்டோம். சில தனியார் கொடுத்த உணவு பொருட்களைக் கொண்டே சமாளித்தோம். வருமானத்துக்காக சந்தையில் வியாபாரிகளுடன் உதவியாளராக கூலி வேலைக்கு போய்தான் சாப்பிடக் கூடியதாய் இருக்கின்றது. அரசாங்கம் எங்களைப் பாதுகாக்க தவறிவிட்டது,” என அவர் தெரிவித்தார்.

சமுர்த்தியில் தந்த 5,000 ரூபா போதாது எனக் கூறியர் அவர், “வீட்டு வாடகைக்கு மாதம் 2,000 ரூபா கட்ட வேண்டும். விவசாய மருந்துகளின் விலைகள் அதிகரித்துள்ளன. எங்களால் தொடர்ச்சியாக தோட்டம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார். “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போது கூட எமக்கு எதுவிதமான அரசாங்க உதவியும் கிடைக்கவில்லை. இந்த நோய் எப்போது முடியுமோ தெரியாது. எங்கள் கஸ்ட்டங்களும் தீராது. இந்த அழிவுக்காக எமக்கு அரசாங்கம் கட்டாயம் நிவாரணம் தரவேண்டும். தமிழ் அரசியல் வாதிகள் எவரும் எம்மை வந்து பார்க்கவில்லை.”

சங்கானையைச் சேர்ந்த 74 வயதான சி. நவரட்ணம், பட்ட கடனுக்காகவும் தன் பிழைப்புக்காகவும் கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். “நான் ஏழு பரப்பு கத்தரி பயிரிட்டேன். ஊரடங்குச் சட்டம் காரணமாக வந்து பார்க்கவில்லை. ஒட்டுண்ணிகள் பிடித்துவிட்டன. மற்றைய தோட்டங்களுக்கு பரவாமல் இருக்க மண்ணை உழுது உரமாக்கிவிட்டேன். அதனால் எனக்கு 50 ஆயிரத்துக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்திருந்தால் ஒரு லட்சம் ரூபா கிடைத்திருக்கும். கைமாற்றாக வாங்கித்தான் முதலீடு செய்தேன். திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் ஏனைய தோட்டக்காரர்களுக்கு கூலி வேலை செய்துவருகின்றேன். அத்தோடு, தோட்ட நிலத்துக்கு குத்தகையும் கொடுக்க வேண்டும். காலையில் 9 மணிக்கு வேலைக்குப் போனால் பகல் 1 மணி வரைக்கும் 800 ரூபாவுக்கு வேலை செய்ய வேண்டும். அதுவும் தினமும் கிடைக்காது. கடனையும் கொடுத்து எமது உணவுத் தேவைக்கும் போதாமல் நானும் எனது மனைவியும் திண்டாடுகின்றோம். வெளிநாட்டில் வாழும் சிலர் 5 கிலோ அரிசியும் 5 கிலோ மாவும், சீனியும் வழங்கினார்கள். இது எத்தனை நாளுக்குதான் போதுமானதாக இருக்கும்?” என அவர் கேட்டார்.

Loading