சென்னையில் உள்ள இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் WSWS உடன் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து பேசுகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சமீபத்தில் சென்னையில் குடியேறிய தொழிலாளர்கள் மற்றும் வீடற்ற மக்களுடன் கொரோனா வைரஸ் பெரும் தொற்றுநோயால் அவர்கள் எதிர்கொள்ளும் மோசமான சமூக நிலைமைகள் குறித்து பேசினர்.

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஆந்திரா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பல பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். குறைந்த ஊதியம் பெறும் இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அருகிலுள்ள தொழில்துறை மையங்களான ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒராகடம் போன்ற இடங்களில் அமைந்துள்ள கட்டுமான மற்றும் பூகோள உற்பத்தி ஆலைகளில் பணியாற்றுகின்றனர்.

மார்ச் 24 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திடீரென திணித்த தேசிய அளவிலான கொரோனா வைரஸ் முடக்கத்தின் போது சில தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப முடிந்தது. எவ்வாறாயினும், போக்குவரத்து நிறுத்தங்கள் காரணமாக பலர் வெளியேற முடியவில்லை மற்றும் சென்னையின் சில பகுதிகளில் ஆபத்தான நெரிசலான தங்குமிடங்களில் சிக்கியுள்ளனர்.

WSWS நிருபர்கள் அயனாவரம் மற்றும் பெரம்பூரில் ராஜீவ் காந்தி நகர் சேரியில் உள்ள தொழிலாளர்களுடன் பேசினர், அங்கு சுமார் 500 நெரிசலான சிறிய குடிசைகள் உள்ளன.

ஜான் சஹாஸ் என்ற அரசு சாரா அமைப்பின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் “பதிவு செய்யப்படவில்லை”. இதன் பொருள் அவர்களிடம் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் (BOCW) அட்டை இல்லை, அதனால் மருத்துவ பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் வீட்டுக் கடன்கள் போன்ற அற்ப நலத்திட்டங்களை அணுக முடியாது. சில தொழிலாளர்களிடம் ரேஷன் கார்டுகள் கூட இல்லை, அது இருந்தால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வாங்க முடியும்.

ரங்கநாதன்

ரங்கநாதன், 34 வயது, தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்,அவர் ஒரு நாட் கூலி கட்டுமானத் தொழிலாளி. ரயில்வே தொழிலாளர்களுக்கான குடியிருப்பு பகுதியான பனந்தோப்பு ரயில்வே காலனி அருகே, யாராவது ஒரு ஒப்பந்தக்காரர் ஏதாவது ஒரு வேலைக்காக அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தபோது WSWS நிருபர்களிடம் அவர் பேசினார்.

“நான் ஒரு நாளாந்த தொழிலாளியாக 100 ரூபாய் (1.3 அமெரிக்க டாலர்) சம்பாதிக்கிறேன். எங்கள் கிராமத்தில் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை, ஏனெனில் மழை இல்லை, எனவே ஏழு பேர் கொண்ட எங்கள் முழு குடும்பமும் - வேலை தேடி சென்னைக்கு குடிபெயர்ந்தனர். நாம் அனைவரும் கட்டுமானத் துறையில் வேலை செய்கிறோம், ஆனால் எங்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்காது.

“[கொரோனா வைரஸ்] ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதிலிருந்து, நாங்கள் எந்த வேலைக்கும் செல்லவில்லை, ஆனால் நாங்கள் 5,000 ரூபாய் மாத வாடகை செலுத்த வேண்டும். உணவு உட்பட எங்கள் உடனடி செலவுகளைச் சமாளிக்க எங்கள் நகைகளை அடகு வைக்க வேண்டியிருந்தது.

ஏப்ரல் 20 முதல் கட்டுமான மற்றும் ஓவியத் துறைகளில் ஊரடங்கு உத்தரவு விதிகளில் சில தளர்வு இருக்கும் என்று அரசாங்கம் கூறியது. நாங்கள் வழக்கம்போல ஒவ்வொரு நாளும் இங்கு வருகிறோம், ஆனால் எங்களுக்கு வேலை தர எந்த ஒப்பந்தக்காரர்களும் வரவில்லை."
சங்கர், 53 வயதானவர், அவரிடம் ஒரு BOCW அட்டை உள்ளது. ஆனால் அவருக்கு அரசாங்கத்தின் COVID-19, நிவாரண நிதியிலிருந்து வாக்குறுதியளிக்கப்பட்ட 1,000 ரூபாய் கிடைக்கவில்லை. இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உடன் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பான, இந்திய தொழிற்சங்கங்களுக்கான மையத்தை (சிஐடியு) அவர் விமர்சித்தார்.

“CITU தொழிலாளர்களின் நலன்களுக்காக நிற்கவில்லை. [தேசிய முடக்கத்தின் போது] வேலையின்மை காலத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள தகுதியான 1,000 ரூபாய் நலன்புரிப் பணத்தை பெற்றுத்தர அது போராடவில்லை, ”என்று அவர் கூறினார்.
மக்களுக்காக, மோடி அரசு ஒதுக்கியுள்ள கோவிட் -19 நிவாரண நிதி ஒரு சிறிய தொகை மட்டுமே. தமிழகத்தின் ஆளும் அதிமுக [அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்] மாநில அரசு, [மோடியின்] பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் கைப்பாவையாக செயல்படுகிறது. ”

சாய்ராஜ்

சாய்ராஜ், 25, ஒரு கட்டுமானத் தொழிலாளி. முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவரும் வேலைக்கு செல்லவில்லை. தொற்றுநோய்க்கு முன்பே அவரது வாழ்க்கை ஒரு போராட்டமாக இருந்தது என்று அவர் கூறினார்.

“நான் ஆந்திர பிரதேசத்தில் இருந்து வந்தேன். நான் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதித்தேன், ஆனால் மாத வாடகைக்கு 4,000 ரூபாய் செலுத்த வேண்டும், அதில் கழிப்பறை வசதி இல்லை. நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த தங்குமிடம் மிகவும் சிறியதாக உள்ளது. இந்த ராஜீவ் காந்தி நகர் சேரி பகுதியில், சில வீடுகளில் ஐந்து பேர் 2,000 ரூபாய் மாத வாடகை வீடுகளிலு வாழ்கின்றனர். பெரு நகராட்சி அதிகாரிகள் யாரும் இந்த பகுதிக்கு வருவதில்லை, மேலும் வைரஸிலிருந்து எங்களைப் பாதுகாக்க எங்களுக்கு முகமூடிகள் கூட இல்லை. ”

பார்த்தசாரதி

பார்த்தசாரதி, 50 வயதானவர், ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர், அவர் இவ்வாறு கூறினார்: “இந்த சேரியில் வசிக்கும் தொழிலாளர்களில் பெரும்பாலோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். என் பெற்றோர் எனது சம்பளத்தை சார்ந்து இருக்கிறார்கள், ஆனால் எனது சம்பளம் அனைத்தும் உணவு மற்றும் வாடகைக்கு செலவாகிறது. இந்த சேரி பகுதி அரசாங்கத்திற்கு சொந்தமானது (புறம் போக்கு நிலம்), ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகள், அவர்களில் பெரும்பாலோர் எதிர்க்கட்சியான திமுக [திராவிட முன்னேற்ற கழகம்] கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்த பகுதியை ஆக்கிரமித்து, ஏழை மக்களிடமிருந்து பணம் சம்பாதிக்க சிறிய வீடுகளைக் கட்டினர்.”

சாவித்திரி, 42 வயதான விதவை ஆவார், அவர் தனது சொந்த கிராமமான செய்யாறில், எந்த வேலையும் இல்லை என்றும், எனவே தான் அவரது குடும்பத்தினர் சென்னைக்கு புலம் பெயர்ந்ததாகவும் விளக்கினார். “எனது கிராமத்தில் மட்டுமல்ல, சென்னையிலும் கூட அனைத்து கட்சிகளும் ஊழலில் மூழ்கி இருப்பதை நான் காண்கிறேன். வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் எங்கள் சேரிகளுக்கு விஜயம் செய்து எங்கள் வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர். ” அவரிடம் ஒரு முகமூடி இல்லை, ஒன்றை வாங்க கூட அவரால் முடியவில்லை என்று கூறினார்.

WSWS நிருபர்கள் அயனாவரம் பஸ் முனையத்தின் தரையில் தூங்கிக்கொண்டிருக்கும் சில வீடற்ற தினசரி கூலி தொழிலாளர்களுடன் பேசினர். பஸ் முனையத்தில் உள்ள 15 குடும்பங்களில், 10 பேருக்கு மட்டுமே ரேஷன் கார்டுகள் உள்ளன, அவை அரசாங்கத்தின் அற்பமான நிதி உதவி கிடைக்க உதவுகின்றன. அருகிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளைப் பயன்படுத்த அவர்கள் பணம் செலுத்த வேண்டும்.

வீடற்ற இந்த குடும்பங்களின் பரிதாபகரமான வாழ்க்கை நிலைமைகள் தொற்றுநோயால் மேலும் அதிகரித்துள்ளன. முகமூடிகள் போன்ற அடிப்படை பாதுகாப்பு கருவிகளை கூட அவர்களால் வாங்க முடியாது, அரசாங்க அறிவுறுத்தலின்படி அடிக்கடி கை கழுவுதல் என்பது நடக்காத காரியம், ஏனெனில் அவர்களால் சோப்பு அல்லது கிருமி நாசினிகளை வாங்க முடியாது.

செல்வம், அயனாவரம் பஸ் முனையத்தில் வசிக்கும் ஒரு கட்டுமானத் தொழிலாளி. அவர் கூறினார்: “20 நாட்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுவதற்கு முன்பே எனக்கு எந்த வேலையும் கிடையாது.. எந்தவொரு அரசியல் கட்சிகளிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ எங்களுக்கு எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை. இங்கு வாழும் எவருக்கும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்யப்படவில்லை அல்லது பாதுகாப்பிற்காக முகமூடிகள் வழங்கப்படவில்லை…

"முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், நாங்கள் அனைவரும் திறந்தவெளி பேருந்து முனையத்தில் தங்கியிருக்கிறோம்- -ஆனால் 20 நாட்களுக்கு மேலாக எங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து நாங்கள் பயப்படுகிறோம். நாங்கள் தூங்குவதற்கு முன்பு இரவில் மட்டுமே சோறு சமைக்கிறோம், அதே திறந்த இடத்தில் தான் சமையலும் தூக்கமும். எங்களுக்கு யாராவது உணவு கொடுக்க மாட்டார்களா என்று ஒவ்வொரு நாளும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். சில சமயங்களில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எங்களுக்கு உணவை வழங்குகின்றன.

லலிதா, 30 வயதுள்ளவர் இவ்வாறு கூறினார்: “எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது, ஆனால் கணவன் இல்லை, அதனால் நான் என் குழந்தையுடன் தனியாக வசிக்கிறேன். நகராட்சியின் குளியலறை மற்றும் கழிப்பறையை நாங்கள் பணம் செலுத்தி பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்போது அவற்றைப் பயன்படுத்த எங்களுக்கு அனுமதி இல்லை. உணவு வாங்க எங்களிடம் பணம் இல்லை, நாங்கள் பட்டினி கிடக்கிறோம். ”

Loading