மருத்துவக் கவனிப்பு தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் பாதுகாப்பு உபகரண பற்றாக்குறையைப் பிரிட்டன் அரசாங்கம் மூடிமறைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போதுமான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (personal protective equipment - PPE) வழங்குவதில் அரசாங்கத்தின் தோல்வியைக் கண்டுபிடிக்காமல் இருக்க, கோவிட்-19 ஆல் ஏற்பட்ட தேசிய சுகாதாரச் சேவை (National Health Service - NHS) தொழிலாளர்களின் மரணங்கள் மீதான பிரேத பரிசோதனை விசாரணைகள் தடுக்கப்பட உள்ளன.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸிற்கான தலைமை பிரேத பரிசோதனையாளர் Mark Lucraft QC குறிப்பிடுகையில், “சுகாதார கவனிப்பு தொழிலாளர்களுக்கு PPE வழங்குவதற்குப் போதிய பொதுவான கொள்கைகளும் ஏற்பாடுகளும் நடைமுறையில் இருந்ததா என்பதை முடிவெடுப்பதில் பிரேத பரிசோதனை விசாரணை திருப்திகரமான வழிவகையாக இருக்காது,” என்று ஏப்ரல் இறுதியில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிட்டார்.

மே 5, 2020 செவ்வாய்க்கிழமை, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள Royal Papworth மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா வைரஸ் நோயாளிக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்த மருத்துவ ஊழியர்களின் உறுப்பினர்கள். (Neil Hall/Pool via AP)

“அந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு ஏதேனும் மனித தவறு பங்களிப்பு செய்ததாக சந்தேகப்படுவதற்கு காரணம்" இருந்தால், கொரோனா வைரஸால் இறந்த NHS மருத்துவத் தொழிலாளரின் மரணம் மீது பிரேத பரிசோதனை நடத்தலாம் என்று Lucraft தெரிவித்தார். அந்த மரணத்தைப் புலன்விசாரணை செய்யும் பிரேத பரிசோதகர் "ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட ஏதேனும் முன்னெச்சரிக்கை தோல்வியால், மரணித்தவருக்கு அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அது மரணத்தை ஏற்படுத்தியதா என்பதைப் பரிசீலிக்க வேண்டியிருக்கலாம்.”

ஆனால், “உயர்மட்ட அரசாங்க அல்லது பொது கொள்கையைக் குறித்து கவனிப்பதற்கு பிரேத பரிசோதனை சரியான களமாக இருக்காது,” என்றார்.

மருத்துவ மற்றும் சமூக பராமரிப்பு தொழிலாளர்களிடையே தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டிருக்கையிலும் கூட, NHS பணியாளர்களைப் போதுமானளவுக்கு அரசாங்கம் பாதுகாக்க தவறியதை அது மூடிமறைக்க முயல்கிறது என்பதையே உத்தியோகபூர்வ வழிமுறைகள் சுட்டிக்காட்டுகின்றன. Nursing Notes இன் தகவல்படி, மே 7 காலை 9 மணி வரையில், குறைந்தபட்சம் 195 மருத்துவ மற்றும் சமூக கவனிப்பு தொழிலாளர்கள் கோவிட்-19 ஆல் உயிரிழந்திருந்தனர்.

தனக்கும் தன் குழுவினருக்கும் PPE வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகத்தைக் கோரிய பின்னர் ஒரு சில வாரங்களிலேயே, கோவிட்-19 ஆல் உயிரிழந்த, மூளை நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் டாக்டர். பீட்டர் டன்னின் மரணம் குறித்து ஏற்கனவே ஒரு விசாரணை நடந்து வருகிறது. அவர் பிரிவில் இப்போதைக்கு உறுதி செய்யப்பட்ட அல்லது சந்தேகத்திற்குரிய கொரோனா வைரஸ் எதுவும் இல்லை என்பதற்காக, அவர் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. டாக்டர் டன் உயிரிழந்த அந்நேரத்தில் இருந்த PPE கையிருப்பு மீது விசாரணை நடத்தப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை.

உரிய பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக பல மருத்துவத்துறை பணியாளர்களும் தொடர்ந்து தெரிவித்து வரும் அதேவேளையில், மருத்துவமனை நிர்வாகமோ போதுமான PPE இருப்பதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளதுடன், தங்களின் வேலையிட நிலைமைகளுக்கு எதிராக போராடுபவர்களை மருத்துவமனை நிர்வாகம் தாக்கி உள்ளது.

ராயல் போர்ன்மவுத் மருத்துவமனையில் ஒரு முன்னிலை செவிலியர் அவர்கள் வேலையில் முகங்கொடுக்கும் அதிர்ச்சியூட்டும் நிலைமைகளை விவரித்து உலக சோசலிச வலைத் தளத்திற்கு கடிதம் எழுதிய பின்னர், மருத்துவமனை நிர்வாகமும் ராயல் செவிலியர் கல்லூரி சங்கமும் உள்ளூர் பத்திரிகையில் அந்த செவிலியரின் வாதங்களைத் தாக்கின. PPE பற்றாக்குறை இல்லை என்று குறிப்பிட்டும், PPE சார்ந்த இப்போதைய வழிமுறைகள் இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பின் வழிமுறைகளைப் (Public Health England - PHE) பூர்த்தி செய்கின்றன என்பதால் அவை உரிய விதத்தில் உள்ளன என்று குறிப்பிட்டும் Bournemouth Daily Echo பத்திரிகை அவர்களை மேற்கோளிட்டது.

அந்த முன்னிலை செவிலியர் விடையிறுத்தார், “ICU இல் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கும் மற்றும் AGP (Aerosol Generating Procedures) பிரச்சினை இருக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் போது மட்டுமே செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் முழுமையான PPE அவசியம் என்பதே PHE (Public Health England) இன் இப்போதைய வழிகாட்டி நெறிமுறையாகும். மருத்துவமனையில் வேறு இடங்களில் நாங்கள் கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் போது முழுமையான PPE அவசியமில்லை என்று அவை குறிப்பிடுகின்றன. நான் எழுதியவாறு, பிரிட்டன் அரசாங்கத்திடமிருந்து வரும் இத்தகைய நெறிமுறைகள் உலக சுகாதார அமைப்பு (World Health Organisation - WHO) வழிகாட்டி நெறிமுறைகளை மீறுகின்றன.”

மேற்கோளிடப்பட்ட ஒரு சான்று குறிப்பிட்டது, “கோவிட்-19 நோயாளிகளை நேரடியாக கவனிக்கும் போது மருத்துவத்துறை தொழிலாளர்கள் மருத்துவத்துறை முகக்கவசம், அங்கி, கையுறைகள் மற்றும் கண் பாதுகாப்பு உபகரணங்கள் (கண்ணாடி அல்லது முகமறைப்புக் கண்ணாடி) அணிந்திருக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. ஆனால் PHE வழிகாட்டி நெறிமுறையோ வலுவற்ற மேலுடைகளைக் கொண்டு அங்கியைப் பிரதியீடு செய்கின்றன, கண் பாதுகாப்பை அபாய மதிப்பீட்டின் அடிப்படையில் அணிந்தால் போதுமானது என்கிறது.”

துறைரீதியாக நிதிக் குறைப்பு, தனியார்மயமாக்கல் முயற்சிகள் மற்றும் "திறமையான சேமிப்பு" ஆகியவை கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஈடுகொடுக்க முடியாதவாறு NHS ஐ அபாயகரமாக போதுமான சாதனங்களின்றி விட்டு வைத்துள்ளன, அத்துடன் பல மருத்துவமனைகளில் மிகவும் அடிப்படை PPE பொருட்கள் கூட இல்லை. 2013 மற்றும் 2016 க்கு இடையே, NHSக்கான டோரிக்களின் வெட்டுக்கள் கையிருப்புக்களை 40 சதவீத அளவுக்கு குறைத்திருந்தன.

ஏப்ரல் இறுதியில் வெளியான “அரசாங்கம் NHS ஐ தோல்விக்கு உள்ளாக்கி உள்ளதா?” என்ற பிபிசி பனோரமா ஆவணப் படம் ஒன்று இந்த தொற்றுநோயை முகங்கொடுப்பதற்கான அரசாங்கத்தின் குற்றகரமான தயாரிப்பின்மையையும் மற்றும் இதை மூடிமறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளையும் அம்பலப்படுத்திய பின்னர், மருத்துவக் கவனிப்பு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதற்கான அரசாங்கத்தின் தோல்வி மீது பரந்த மக்கள் கோபம் அதிகரித்தது. WSWS பின்வருமாறு கருத்துரைத்தது:

“NHS வினியோக சங்கிலியின் உள்ஆவணங்களைப் பயன்படுத்தி, அந்த விசாரணையானது, மார்ச் மற்றும் ஏப்ரலில் 1 பில்லியன் PPE சாதனங்கள் வழங்கியதாக கூறப்படும் அமைச்சர்களின் வாதங்களை ஒன்றுமில்லாது ஆக்கியது. இந்த சாதனங்களில் பாதிக்கும் அதிகமானவை அறுவைச் சிகிச்சை கையுறைகள் ஆகும், இதில் ஒவ்வொரு கையுறையும் பெரும்பாலும் தனித்தனி PPE சாதனங்களாக கணக்கிடப்பட்டன. ஒரு விபத்து மற்றும் அவசரகால மருத்துவரால், 'உணவு பரிமாறும் பெண் அணியக்கூடியதாக கருதலாம் … அது எதற்கும் உபயோகமில்லை,” என்று விவரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மேல் அங்கிகள் தான் கையிருப்பு வைக்கப்பட்டதில் இரண்டாவது மிக அதிக எண்ணிக்கையிலான சாதனங்களாக இருந்தன. சுத்தப்படுத்தும் சாதனங்கள், கழிவு சேகரிப்பு பைகள், சுத்திகரிப்பான்கள் மற்றும் காகித துடைப்பான்களும் உத்தியோகபூர்வ கணக்கில் PPE ஆக கணக்கிடப்படுகின்றன.”

மருத்துவ தொழில் வல்லுனர்களில் சுமார் பாதிப் பேர் அவர்களின் தனிப்பட்ட அல்லது துறைசார்ந்த பயன்பாட்டுக்காக அவர்களின் சொந்த PPE ஐ அவர்களே வாங்க வேண்டியிருந்தது என்பதை பிரிட்டிஷ் மருத்துவ ஆணையத்தின் (British Medical Association - BMA) ஓர் ஆய்வு வெளிப்படுத்தியது. பொது மருத்துவப் பிரிவின் பயிற்சி மருத்துவர்களில் ஐம்பத்தி ஏழு சதவீதத்தினரும் மருத்துவமனை மருத்துவர்களில் 34 சதவீதத்தினரும் வேலையிடத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களே சொந்த சாதனங்களை வாங்க வேண்டியிருந்ததாக 16,000 மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று குறிப்பிட்டது.

மருத்துவர்களில் 65 சதவீதத்தினர் அவர்களின் வேலையிடத்தில் பகுதியாக மட்டுமே பாதுகாக்கப்பட்டிருந்ததாக அல்லது முற்றிலும் பாதுகாக்கப்படாமல் இருந்ததாக உணர்ந்ததை BMA ஆய்வு வெளிப்படுத்தியது. இது மருத்துவத்துறை தொழிலாளர்களின் மனோரீதியிலான ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. நான்கில் ஒருவர் மனஅழுத்தம், மனஉளைச்சல் மற்றும் மனஎரிச்சல் உட்பட மனோரீதியிலான அதிகரித்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருந்தனர்.

பிரேத பரிசோதனை அறக்கட்டளை அமைப்பின் இயக்குனர் Deborah Coles குறிப்பிடுகையில், PPE பற்றாக்குறைகளைப் பார்க்க வேண்டியதில்லை என்ற தலைமை பிரேத பரிசோதகரின் நெறிமுறைகளைக் கண்டித்தார். “தங்கள் அன்புக்குரியவர்களின் உயிரிழப்புகளில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படாதமை ஒரு பங்கு வகித்ததா என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சட்டபூர்வமாகவே கேட்கிறார்கள்,” என்றார்.

“பிரேத பரிசோதகர்கள், அவசியப்படும் இடத்தில், இந்த பிரச்சினையை ஆய்வு செய்ய வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. பிரேத பரிசோதனைகள் மீது பொது விசாரணை இல்லாதிருப்பது முன்னிலை தொழிலாளர்களின் பாதுகாப்பில் அமைப்புரீதியில் தவறுகள் இருப்பதை அடையாளம் காண்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும். இந்த முக்கிய படிப்பினைகளைப் பெறுவதிலும், எதிர்கால மரணங்களைத் தடுப்பதற்காக நபர்களைக் கணக்கில் கொண்டு வருவதற்கும் முக்கியமாகும்.”

மருத்துவக் கவனிப்பு தொழிலாளர்களின் உயிர்கள் மீது அரசாங்கத்தின் அலட்சியத்தை உறுதிப்படுத்தும் விதமாக, சுகாதாரம் மற்றும் சமூக கவனிப்பு (Department of Health and Social Care - DHSC) துறைக்கு அறிவுரை வழங்கும் வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்ட NHS தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான அரசு நஷ்டஈடு திட்டத்தில் "பொறுப்பு இல்லை" எனும் வகைமுறையை சேர்க்க பரிந்துரைத்துள்ளனர்.

ஏப்ரல் மாத இறுதியில், சுகாதார செயலர் Matt Hancock அறிவிக்கையில் கோவிட்-19 ஆல் உயிரிழந்த மருத்துவத் துறை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அற்ப தொகையான 60,000 பவுண்ட் வழங்கப்படும் என்று அறிவித்தார். இது அவர்களின் உறவினர்களுக்கு மிகப் பெரியளவில் ஏற்பட்டுள்ள உணர்வுபூர்வமான மற்றும் நிதிரீதியான இழப்பை ஈடுகட்ட ஒன்றும் செய்யப் போவதில்லை. இந்த அற்பதொகையானது தங்களின் அன்புக்குரியவர்களை இழந்துள்ள குடும்பங்களின் மவுனத்தையும் இணக்கத்தையும் விலைக்கு வாங்குவதற்கும் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்கால சட்டபூர்வ நடவடிக்கை இல்லாது ஆக்குவதற்குமான ஒரு முயற்சியாகும் என்பதை இந்த "பொறுப்பு இல்லை" வகைமுறையை உள்ளிணைப்பது தெளிவுபடுத்துகிறது. “உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது,” என்ற சட்டப்பூர்வ எச்சரிக்கையுடன் சேர்ந்தே எந்தவொரு தொகையும் வழங்கப்படுவதாக இருக்கும்.

சுவான்சி பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கவனிப்பு சட்டம் மற்றும் ஒழுக்கவியல் துறையின் விரிவுரையாளர் பௌல் ஜோசப், The Conversation இல் எழுதிய தகவல்படி, நஷ்டஈடு முறையீடுகளுக்கு ஒரு கணக்கு முடிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திடுவது அவசியமாக்கப்படலாம், அது தற்போதைய எந்தவொரு கோரிக்கைகளையும் தீர்க்கும் வார்த்தைகளைக் கொண்டிருக்கலாம், அல்லது DHSC இக்கு எதிராக கொண்டு வரப்படக்கூடிய எதிர்கால வாதங்கள் அனைத்தையும் தீர்க்கும் வார்த்தைகளைக் கொண்டிருக்கலாம். இவை தொகை கோருபவரால் கையெழுத்திடப்பட்ட ஆவணத்தின் இறுதியில் (பெரும்பாலும் 10 பக்கங்கள் வாக்கில்) ஏறக்குறைய ஒரு நீண்ட இணைப்பை உள்ளடக்கி உள்ளன.

எதிர்கால சட்ட நடவடிக்கை மேற்கொள்வதில் இருந்து இந்த 60,000 பவுண்ட் தொகையைப் பெறுபவர்களை தங்களின் "பொறுப்பு இல்லை" வகைமுறை வெளிப்படையாக தடுக்காது என்று அரசாங்கம் அறிவிக்கின்ற அதேவேளையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை அரசாங்கம் கையாண்ட விதம் மீது கவனக்குறைவுக்காக அதற்கு எதிராக கொண்டு வரப்படும் எந்தவொரு வழக்குகளுக்கு எதிராக போராடுவதற்கு இந்த சட்டபூர்வ எச்சரிக்கை அடித்தளம் அமைக்கின்றன.

"சேவையில் இருக்கையில் உயிரிழந்தால்" வழங்கப்படும் தொகை 10 மில்லியன் பவுண்டுக்கும் குறைவாகவே அரசுக்குத் செலவு ஏற்படுத்தக்கூடும் என்கின்ற நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக அதன் கவனக்குறைவுக்காக தொடுக்கப்படும் வழக்கில் ஜெயிக்கும் குடும்பங்களுக்கான தொகைகள் நூறு மில்லியன்களில் செல்லும். தங்களுக்கு உரிய சட்டக்கடப்பாடுகளைப் போராடி வெல்லும் செலவுகள் மட்டுமே ஏறக்குறைய அதிகபட்சமாக 100 மில்லியன் பவுண்டுக்கு இருக்கக்கூடும் என்று சட்ட வல்லுனர்கள் opendemocracy க்குத் தெரிவித்தனர்.

மற்றொரு பழிவாங்கும் நகர்வில், முன்னிலை NHS பணியாளர்களின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தானாக இந்த தொகைகள் சென்று சேராது மாறாக அவர்கள் அதற்கு விண்ணப்பித்து, அவர்கள் தகுதி வகைப்பாடுகளைப் பூர்த்தி செய்கிறார்களா என்பதை மதிப்பிடுதவற்காக NHS வணிக சேவை பிரிவால் (NHS Business Services Authority) நடத்தப்படும் "சரிபார்ப்பு நிகழ்முறைக்கு" சென்ற பின்னரே பெற முடியும். DHSC இன் தகவல்படி, “தொழில்துறை மற்றும் சூழ்நிலைசார்" சரிபார்ப்பு பூர்த்தி செய்யப்பட வேண்டும், கொரொனா வைரஸ் நோயாளிகளுக்கு அறிகுறிகள் தோன்றுவதற்கு 14 நாட்களுக்கு முன்னரே உயிரிழந்தவர் தொழிலாளர் அவர்களுக்காக பணியில் ஈடுபட்டிருந்தார் என்றும் அவர் மரணத்திற்கு கொரொனா வைரஸ் தான் காரணம் என்பதையும் உயிரிழந்தவரின் குடும்பங்கள் நிரூபிக்க வேண்டியிருக்கும்.

Loading