முன்னோக்கு

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பிந்தைய எழுபத்தியைந்து ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எழுபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில், ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. மே 7 காலை, வேர்மாக்ட் (Wehrmacht - நாஜி சகாப்த இராணுவம்) இன் கர்னல் ஜெனரல் ஆல்பர்ட் ஜோடல், பிரான்சின் ரான்ஸ் (Rhimes) நகரில், நிபந்தனையற்ற சரணடைவில் கையெழுத்திட்டார். அதற்கு ஒரு வாரம் முன்பாக, செம்படை முன்னேறி வந்த நிலைக்கு முகம்கொடுத்த அடோல்ஃப் ஹிட்லர் பேர்லினில் Führer பதுங்குகுழியில் தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டாம் உலகப் போர் மனித வரலாற்றின் மிகக் கொடூரமான மற்றும் இரத்தக்களரி நிறைந்த மோதலாக இருந்தது. மனிதகுலம் அதன் மோசமான கொடுங்கனவுகளில் கற்பனை செய்திருக்கக் கூடியதையெல்லாம் விஞ்சிய குற்றங்களும் கொடுமைகளும் நிகழ்த்தப்பட்டன.

மே 7, 1945 அன்று ரான்ஸில் நிபந்தனையற்ற சரணடைதலில் கையெழுத்திடல், ஜெனரல் ஜோடல் முன் இடது (Image: Musée de la reddition de Reims)

சுமார் 70 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் மூன்றில் இருபங்கினர் அப்பாவிக் குடிமக்கள், நிராயுதபாணியாய் இருந்த ஆண், பெண் மற்றும் குழந்தைகள் ஆகும். இது திட்டமிடப்படாத போரின் பக்க விளைவு அல்ல. மக்களின் பெரும்பகுதிகளை இல்லாதொழிப்பது தான் நாஜிக்களால் அறிவிக்கப்பட்ட அழித்தொழிப்புப் போரினால் வெளிப்படையான இலக்காக இருந்தது. 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டதில் இது அதன் இரத்தம்தோய்ந்த உச்சத்தை எட்டியது.

சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 27 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர், இவர்களில் பாதிப் பேர் அப்பாவிக் குடிமக்கள். இராணுவச் சீருடையினர் 13 மில்லியன் பேரில், 3.3 மில்லியன் பேர் ஜேர்மன் போர் கைதிகள் முகாம்களில் பனியால் உறைந்தோ அல்லது பட்டினியாலோ உயிரிழந்தனர், இது மட்டுமேயும் ஒரு அரக்கத்தனமான போர்க் குற்றத்திற்கு நிகரானதாய் இருந்தது. ஜேர்மனியர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், யூதர்கள் அல்லது கிளர்ச்சியாளர்கள் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்த பிராந்தியங்களும் பட்டினி போடப்பட்டன, எரிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன.

இந்த கொலைபாதக பயங்கரம் போர்முனையில் மட்டும் மட்டுப்பட்டதாய் இருக்கவில்லை. ஐரோப்பாவெங்கிலும் இருந்து அவுஸ்விற்ஸ் (Auschwitz) க்கு கொண்டுவரப்பட்டிருந்த யூதர்களுடன் சேர்த்து, நூறாயிரக்கணக்கிலான சிந்தி மற்றும் ரோமாக்கள், மற்ற சிறுபான்மையின அங்கத்தவர்கள், கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கைதிகளும் நாஜிக்களின் கரங்களில் தமது உயிரைத் தொலைத்தனர். கருணைக்கொலைத் திட்டத்தின் பகுதியாக உடல் ஊனப்பட்டிருந்த சுமார் 200,000 பேர் கொல்லப்பட்டனர். ஜேர்மன் இராணுவ நீதிமன்றங்கள் போர் முயற்சிக்கு இடையூறாக இருந்ததாக 1.5 மில்லியன் வேர்மாக்ட் (Wehrmacht - நாஜி சகாப்த இராணுவம்) படையினர்கள் மீது குற்றம் சாட்டி, அதில் 30,000 பேருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. குடிமக்கள் நீதி அமைப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை முழுமையாக பதிவுசெய்யப்படவில்லை. மக்கள் நீதிமன்றம் (People’s Court of Justice) மட்டுமே 5,200 மரண தண்டனைகளை அளித்திருந்தது.

நேச நாடுகள் அவற்றின் எதிரிகளுக்குத் தக்கபடி தமது வழிமுறைகளை தகவமைத்துக் கொண்டன. நவீன போர்முறையில் முதன்முறையாக, இரண்டு தரப்புகளுமே பெரும் நகரங்களது அப்பாவி மக்களை கொன்றன. நாஜி இராணுவத்தின் லெனின்கிராட் மீதான இரண்டாண்டு கால முற்றுகை 1 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காவுகொண்டது. ட்ரெஸ்டன், ஹம்பேர்க் மற்றும் பிற நகரங்களின் மீது நேசநாடுகள் வீசிய குண்டுகள் போர்முனையில் இருந்து வெகு தூரத்தில் வசித்த அப்பாவிமக்களை பத்தாயிரக்கணக்கில் கொன்றன. ஹிட்லரின் Führer பதுங்குகுழிக்கு 30 கிலோமீட்டருக்கும் குறைந்த தூரத்தில் போட்ஸ்டாம் நகரில் இருந்து,1945 ஏப்ரலில் அமெரிக்க ஜனாதிபதியான ஹாரி ட்ரூமென் ஜப்பான் மீது அணுகுண்டு வீசுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது இழைக்கப்பட்ட சொல்லமுடியாத குற்றங்கள் மற்றும் கொடுமைகளால் தூண்டப்பட்ட மன அதிர்ச்சி, கோபாவேசம் மற்றும் வெறுப்பானது ஜேர்மன் மற்றும் உலக மக்களின் பரந்த பிரிவுகளின் மத்தியில் “இனி பாசிசமும் வேண்டாம்! போரும் வேண்டாம்!” என்ற உறுதிப்பாட்டிற்கு நங்கூரமிட்டது. ஆயினும் போர் முடிந்து முக்கால் நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர், பாசிசமும் போரும் மறுபடியும் உடனடி உலக அபாயங்களாக எழுந்து நிற்கின்றன.

இந்த அபாயங்கள், உலகளாவிய COVID-19 பெருந்தொற்றுக்கு வெகுகாலம் முன்பிருந்தே நிலவி வருகின்றன, இந்த வைரஸ் அவற்றை துரிதப்படுத்த மட்டுமே செய்திருக்கிறது.

”சமூக நோயெதிர்ப்புசக்தி” மற்றும் “முன்னுரிமை தீர்மானிப்பு” (triage) போன்ற கருத்தாக்கங்கள் அன்றாட வார்த்தைபிரயோகங்களில் ஊடுருவியிருக்கின்றன. பொருளாதாரத்திற்காக அதாவது பங்குச்சந்தைகளில் ஊகவணிகம் செய்பவர்கள் மற்றும் பெருஞ்செல்வந்தர்களுக்காக எத்தனை மனித உயிர்கள் தியாகம் செய்யப்பட வேண்டும் என்பதைக் குறித்த விவாதத்தின் பகுதியாக அவை இருக்கின்றன. மருத்துவ நிபுணர்களிடம் இருந்தான அத்தனை அவசரமான எச்சரிக்கைகளையும் தாண்டி, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அமெரிக்கர்களை, மேலான நன்மைக்காக தமது வாழ்க்கையையே தியாகம் செய்யத் தயாராயுள்ள “போர்வீரர்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விவரித்திருக்கிறார்.

கூட்டரசாங்க நாடாளுமன்றத்தின் தலைவரான வொல்ஃவ்காங்க் சொய்பிள (Wolfgang Schäuble), “மற்ற எல்லாவற்றையும் விட, வாழ்க்கையும் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுவதே நிபந்தனையற்ற முன்னுரிமைக்கு உரியதாகும் என்று சொல்வது சரியல்ல” என்றார்.

மனித நாகரிகத்தின் முடிவாக அர்த்தப்படத்தக் கூடிய ஒரு மூன்றாம் உலகப் போருக்கான அச்சுறுத்தலானது இன்றிருப்பதைவிட வேறெப்போதும் இத்தனை பெரிதாக இருந்ததில்லை.

அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்காவில் உள்ள பாசிச ஆயுதக்குழுக்களிடமும் உலகெங்குமுள்ள வலது-சாரி சர்வாதிகாரிகளிடமும் வெளிப்படையாக அனுதாபத்தை வெளிப்படுத்துகிறார்; வெனிசுவேலா, ஈரான் மற்றும் அணு-ஆயுத வல்லமை கொண்ட சீனாவையும் கூட போரைக் கொண்டு மிரட்டுகிறார். எதிர்க்கட்சி ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு அவருக்கு இதில் உள்ளது. இந்த ஆண்டுக்கான அமெரிக்க பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீடான 738 பில்லியன் டாலர் தொகையுடன் ஒப்பிடுகையில் மூன்றாவது ரைய்ஹ்கின் இராணுவச் செலவை ஊதித்தள்ளி விடுகிறது. 1938 இல், போருக்கு முந்தைய ஆண்டில், ஹிட்லர் இராணுவத்தில் 17.5 பில்லியன் மார்க்குகள் முதலீடு செய்தார். இன்றைய பணத்தில், அத்தொகை சுமார் 78 பில்லியன் டாலருக்கு நிகரானதாகும்.

அத்தனை நாடுகளையும் காட்டிலும், ஜேர்மனி, போர் மற்றும் பாசிசத்தின் மறுநிவாரணத்திற்கான ஒரு விளைநிலமாக ஆகியிருக்கிறது. வேறெந்த ஐரோப்பிய நாடும் அதன் பாதுகாப்புத் துறை நிதி ஒதுக்கீட்டை இத்தனை துரிதமாக அதிகரித்துச் சென்றிருக்கவில்லை. 2019 இல் மட்டும் இந்த ஒதுக்கீடு பத்து சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலர்களைத் தொட்டது. அதன்மூலம் பிரிட்டனை முந்திய ஜேர்மனி இப்போது உலகின் மிகப்பெரும் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகளில் பிரான்சுக்குப் பிந்தைய ஏழாவது இடத்தில் இருக்கிறது.

ஜேர்மனியர்கள் “தமது அமைதிவாதத்தை தாண்டி முன்செல்ல” மே 8 ஐ பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பசுமைக் கட்சியின் ஜோஸ்க்கா ஃபிஷ்சர் விண்ணப்பித்ததில் ஆளும் உயரடுக்கின் முன்னோக்கு சுருங்கக் கூறப்பட்டதாய் இருக்கிறது. நாடு அதன் “அமைதிவாத உணர்வுகளில் இருந்து தப்பித்தாக வேண்டியுள்ளது” என்று அவர் Tagesspiegel இல் எழுதினார். அமெரிக்காவின் பாதுகாப்பு சக்தியின் ”மென்மையான அரவணைப்பு” முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையானது “ஐரோப்பா படிப்படியாக அதன் பாதுகாப்பை தானே சொந்தமாக பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை”க்கு நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறது. அது “ஜேர்மனி இல்லாமல் நடக்காது”. எமக்கான அமெரிக்க பாதுகாப்பின் பலவீனப்படலானது “1945 வசந்த காலத்திலிருந்து மற்றவர்கள் எங்களுக்காக பதிலளித்த அந்தக் கேள்விகளை ஜேர்மனியின் முன்னால் நிறுத்தியுள்ளது.” வேறு வார்த்தைகளில் சொல்வதானால்: 1945க்கு முந்தைய சகாப்தத்திற்குத் திரும்புவோம்!

ஜேர்மன் கூட்டரசாங்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதி-வலது ஜேர்மனிக்கான மாற்று (AfD) கட்சியின் கவுரவத் தலைவருமான அலெக்சாண்டர் கௌலாண்ட், மே 8 ஐ ஜேர்மனி அதன் “திட்டநிரல்-நிர்ணயிக்கும் திறனை” இழந்த ஒரு “முற்றுமுதல் தோல்வியின் தினம்” என்று விவரித்தார். மே 8 ஒரு தேசிய விடுமுறை நாளாக ஆக்கப்பட அழைப்புவிடுத்த, அவுஸ்விற்ஸ் இல் உயிர்பிழைத்தவரான எஸ்தர் பெஜரனோ தொடக்கிவைத்த ஒரு மனுவை நிராகரித்து அவர் இந்த கருத்துக்களை கூறினார். 1945 ஆம் ஆண்டை ஒரு “பேரழிவு” என்று சொய்பிள விவரித்ததை அடுத்து இது வருகிறது.

வலது-சாரி தீவிரவாத பேராசிரியரான ஜோர்க் பாபெர்ரோவ்ஸ்கி ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக ஹிட்லர் “கொடியவர் இல்லை” என்ற அவரது கருத்துடன் நாஜிக்களுக்கு மறுநிவாரணமளிக்கும் வேலையைத் தொடங்கினார். பல்கலைக்கழக நிர்வாகம், ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவரைப் பாதுகாத்த வேளையில், அவரை விமர்சனம் செய்த Sozialistische Gleichheitspartei (SGP - சோசலிச சமத்துவக் கட்சி), உளவு அமைப்பின் அரசியல்சட்டவிரோத அமைப்புகளின் பட்டியலில் வைக்கப்பட்டது. சக்சோனி மாநிலத்தின் Torgau இல் உள்ள நினைவிடத்தில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததன் நினைவாக நடத்தப்படவிருந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பாபெர்ரோவ்ஸ்கி பிரதான உரை வழங்கவிருந்தார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணத்தால் அந்த நிகழ்வு இரத்து செய்யப்படத் தள்ளப்பட்டதால் மட்டுமே அது நிகழாமல் தடுக்கப்பட்டது.

ஜேர்மனியிலும் சர்வதேச அளவிலும் மக்களின் மிகப்பெருவாரியானோர் இராணுவவாதத்திற்கும் பாசிசத்திற்கும் திரும்புவதை எதிர்க்கின்றனர். ஆயினும் இன்னுமொரு பேரழிவைத் தடுத்துநிறுத்த எதிர்ப்பு மட்டுமே போதுமானதல்ல. அவற்றின் காரணங்களைக் குறித்த ஒரு தெளிவான புரிதலும் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு அரசியல் முன்னோக்கும் அவசியமாகும். பாசிசத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டமானது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கவியலாதது என்பதையே இரண்டாம் உலகப் போரில் இருந்து பெறப்பட்ட படிப்பினைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு சர்வதேசத் தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட அது கோருகிறது.

நாஜிக்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரைக் குறித்த எண்ணிலடங்கா வரலாற்று, சமூகவியல் மற்றும் இலக்கியப் படைப்புகள் இருக்கின்றன. ஆயினும் மனித நாகரிகம் காட்டுமிராண்டித்தனத்திற்குள் மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வில் இருந்து பெறப்பட்ட படிப்பினைகள் சக்திவாய்ந்த அரசியல் மற்றும் சமூக நலன்களுடன் உடனடியாக மோதல்கண்டன.

ஜேர்மன் உயரடுக்கினர் பெருவணிகம், அரசாங்கம், உளவு சேவைகள், நீதித்துறை, போலிஸ், பல்கலைக்கழகங்கள் மற்றும் இராணுவத்தில் 1945க்குப் பின்னரும் தமது தொழில்வாழ்க்கைகளைத் தொடர்ந்தனர், திரும்பிப் பார்க்க அவர்களுக்கு ஆர்வமிருக்கவில்லை. அவர்கள் சேவை செய்திருந்த மற்றும் ஏற்றுக் கொண்டிருந்த ஹிட்லர், திடீரென்று அவர்களை மயக்கி ஏமாற்றியதாகவும் துஷ்பிரயோகம் செய்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் அந்த தலைவர் (Führer) தான் காரணம், இவர்கள் வெறுமனே உத்தரவுகளைப் பின்பற்றியவர்களாக மட்டுமே இருந்தார்கள், அல்லது இன்னும் இரகசியமாய் எதிர்த்து வந்த போராளிகளாகவும் கூட இருந்திருந்தார்கள். 1940 க்கும் 1945 க்கும் இடையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அழித்தொழிக்கப்பட்ட அவுஸ்விற்ஸ் இல் இருந்த SS காவலர்கள் மீது முதல் விசாரணை தொடங்கப்பட 18 ஆண்டுகள் பிடித்தது.

நூரெம்பேர்க் விசாரணைகளில் நாஜிக்களின் குற்றங்களை உலகுக்கு அம்பலப்படுத்திய அமெரிக்க அரசாங்கம், பனிப் போரில் நாஜி நிபுணர்கள் அவசியமானபோது துரிதமாக தனது பாதையை மாற்றிக் கொண்டது. மோசமான குற்றவாளிகளில் இரு டஜன் பேருக்கு மரண தண்டனையும், அதனினும் ஐந்து மடங்கு பேருக்கு சிறைத் தண்டனைகளும் வழங்கப்பட்டதற்குப் பின்னர் இந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டன.

சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் இருந்த ஸ்ராலினிச ஆட்சியாளர்கள் போர்க் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினார்கள் என்றாலும் வரலாற்றுக் கேள்விகளைத் தெளிவுபடுத்துவதில் அவர்களுக்கு ஆர்வமேதும் இருக்கவில்லை. அவ்வாறு செய்தால் இரண்டாம் உலகப் போரை அடுத்து பாசிசம் மற்றும் போருக்கு எதிரான வெகுஜன கம்யூனிஸ்ட் கட்சிகளது போராட்டங்களை ஸ்ராலினிச அதிகாரத்துவம் முடக்கியது மற்றும் ஒடுக்கியது ஆகிய அவர்களது சொந்த குற்றவியல் பாத்திரம் தவிர்க்கவியலாது வெளிப்பட்டு விட்டிருக்கும்.

ஜேர்மனியில், கம்யூனிஸ்ட் கட்சியானது (KPD) நாஜிக்களுக்கு எதிராக சமூக ஜனநாயகக் கட்சியுடன் (SPD) ஒரு ஐக்கிய முன்னணிக்கு அழைப்பு விட மறுத்தது. 1932 வரையிலும் இந்த இரண்டு தொழிலாளர்’ கட்சிகளுமே நாஜிக்களை விடவும் மிகவும் வலிமையுடன் இருந்தன. பிரான்சிலும் ஸ்பெயினிலும், ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்துடனான மக்கள் முன்னணிகளுக்கு கீழ்ப்படுத்தினர், புரட்சிகரத் தொழிலாளர்களைத் துன்புறுத்தினர் மற்றும் கொலைசெய்தனர், அதன்மூலமாக பிற்போக்குத்தனம் வெற்றிகாண்பதற்கு பாதை வகுத்தனர்.

ஒருவர் இரண்டாம் உலகப் போரையும் நாஜி சர்வாதிகாரத்தையும் புரிந்து கொள்ள விரும்புவாராயின், சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக மார்க்சிச மரபையும் ரஷ்யப் புரட்சியையும் பாதுகாத்து நின்றவரான லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் தான் இன்றும் கூட அதற்கான மிக முக்கியமான மூலவளமாய் விளங்குகின்றன.

முதலாம் உலகப் போருக்கான காரணங்களான, அதிகரித்தளவில் ஒருங்கிணைந்த ஒரு உலகத்தில் உலக மேலாதிக்கத்திற்காக பெரும் முதலாளித்துவ தேசிய-அரசுகளிடையே நடக்கின்ற போராட்டமும், உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவம் தன்னை அடித்தளமாகக் கொண்ட தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடு மற்றும் உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமையாக இருப்பதற்கும் சமூகமயப்பட்ட உற்பத்தி சக்திகளுக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகளுமே இரண்டாம் உலகப் போர் தூண்டப்படுவதற்கான காரணங்களாகவும் இருந்தன என்பதை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.

இரண்டாம் உலகப் போருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, 1934 கோடையிலேயே ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்:

நவீன முதலாளித்துவத்தில் இருந்து பிரிக்கவியலாத கடந்த ஏகாதிபத்தியப் போரை கொண்டுவந்த அதே காரணங்கள் தான் இப்போது 1914 இன் மத்தியைக் காட்டிலும் அளவுகடந்த பெரும் பதட்டங்களை அடைந்துள்ளன. ஒரு புதிய போரின் பின்விளைவுகள் குறித்த அச்சம் தான் ஏகாதிபத்தியத்தின் விருப்பத்தைக் கட்டிப் போட்டிருக்கும் ஒரே காரணியாக உள்ளது. ஆயினும் அந்த தளையின் செயல்திறன் வரம்புபட்டது. உள்முக முரண்பாடுகளின் அழுத்தமானது ஒருநாட்டிற்கு அடுத்து இன்னொன்றாய் பாசிசத்தின் பாதைக்குத் தள்ளுகிறது; பாசிசமும் தன் பங்காக, உள்முக வெடிப்புகளுக்குத் தயாரிப்பதை தவிர்த்த வேறுவழியில் அதிகாரத்தைப் பராமரிக்க முடியாது. அனைத்து அரசாங்கங்களும் போரைக் கண்டு அஞ்சுகின்றன, ஆயினும் எந்த அரசாங்கத்திற்கும் தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சி இல்லையென்றால், ஒரு புதிய உலகப் போர் தவிர்க்கவியலாதது.

ஹிட்லரின் தனிமனித இயல்பு நிகழ்வுகளின் பாதையின் மீது ஆதிக்கம் செலுத்தியதே தவிர, அது போருக்கான காரணமாக இருக்கவில்லை. வியன்னாவின் சந்து சாக்கடையில் இருந்து ஒரு யூத-விரோத மனவக்கிரக்காரர் ஜேர்மனியின் தலைவராக ஆக முடிந்தது எப்படி என்பது தான் உண்மையாக கேட்கப்பட வேண்டிய கேள்வியாக இருந்தது. இதற்கான பதில் தெளிவானது: தொழிலாள வர்க்கத்தின் சோசலிச உந்துதல்களுக்கு எதிரான ஒரு நசுக்கும் சாதனமாக சேவை செய்வதற்கும் ஒரு இரண்டாம் ஏகாதிபத்தியப் போருக்கு தயாரிப்பு செய்வதற்கும் ஆளும் உயரடுக்கிற்கு ஹிட்லரும் மற்றும் அவரது பாசிச இயக்கமும் தேவையாக இருந்தது.

”மண்டையோட்டில் ஒரு கணக்கிடும் எந்திரத்தையும் கைகளில் அளவற்ற அதிகாரத்தையும் கொண்டிருந்த இந்த ஜேர்மன் மூளைநோய்க்காரர் வானத்தில் இருந்து வந்து குதித்தவரல்ல, அல்லது நரகத்தில் இருந்து வெளிவந்தவரல்ல: அவர் ஏகாதிபத்தியத்தின் அழிவு சக்திகள் அத்தனையின் உருவடிவமின்றி வேறில்லை” என்று ஹிட்லர் குறித்து ட்ரொட்ஸ்கி 1940 இல் எழுதினார்.

பிரிட்டனும் அமெரிக்காவும், அவை கூறிக் கொண்டதைப் போல, பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு போரில் அவர்கள் ஈடுபட்டிருக்கவில்லை, மாறாக உலகத்தின் ஏகாதிபத்திய மறுபங்கீட்டிற்கான ஒரு போரில் ஈடுபட்டிருந்தன.

போரானது அதனைத் தூண்டியிருந்த பிரச்சினைகளில் எதுவொன்றையும் தீர்க்கவில்லை. அமெரிக்காவின் பொருளாதார சக்தி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை ஒடுக்கியதோடு பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் சக்திவாய்ந்த எதிர்ப்பு இயக்கங்களை நிராயுதபாணியாக்கிய ஸ்ராலினிசத்தின் அரசியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் ஒரு ஸ்திரமற்ற போர்நிறுத்தம் உண்டானது. கிழக்கு ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சிகள் ஏதும் நடக்கவில்லை. இடைத்தடை அரசுகள் என்பதாகச் சொல்லப்பட்டனவற்றில் முதலாளித்துவக் கூறுகள் மேற்கினை நோக்கி ஒரு மிக வலிமையான நோக்குநிலையை வளர்த்த போதுதான் அங்கிருந்த ஸ்ராலினிஸ்டுகள் பரவலான தேசியமயமாக்கங்களை செயல்ப்படுத்த நகர்ந்தனர். அதேநேரத்தில், 1953 இல் கிழக்கு ஜேர்மனியில் மற்றும் 1956 இல் ஹங்கேரியில் உள்ளிட தொழிலாளர் எழுச்சிகளை அவர்கள் ஒடுக்கினர்.

1968க்கும் 1975க்கும் இடையில் பிரான்ஸ், ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் மற்றும் அமெரிக்காவை உலுக்கிய பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் மாணவர் கிளர்ச்சிகள் ஆளும் உயரடுக்கினை ஒரு எதிர்த்தாக்குதலைத் தொடுப்பதற்கும் நிதிச் சந்தைகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கும் தூண்டின. உலக உற்பத்தியில் முன்கண்டிராத அளவுக்கு ஒரு ஒருங்கிணைப்பும் உலக மேலாதிக்கத்திற்கான போராட்டத்தின் ஒரு தீவிரப்படலும் இதன் விளைவுகளாய் இருந்தன.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது சோசலிசத்தின் முடிவைக் குறிக்கவில்லை, மாறாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தேசியவாத வேலைத்திட்டத்தின் பொறிவையே குறித்தது. அச்சமயத்தில் குறிப்பிட்டுக் காட்டிய ஒரெயொரு அரசியல் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கூறியவாறாய், இது ஏகாதிபத்திய மோதல்களிலான ஒரு புதிய கட்டத்திற்கும் போர்கள் மற்றும் புரட்சிகளது ஒரு புதிய சகாப்தத்திற்கும் கட்டியம் கூறியது.

முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த பகுப்பாய்வின் சரியான தன்மையானது கேள்விக்கிடமில்லாததாய் இருக்கிறது. உலக முதலாளித்துவம் இன்னுமொரு பேரழிவை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கும் அதேநேரத்தில், முன்னெப்போதினும் அதிக பெரியதாகவும் சர்வதேச அளவில் அதிகமாக பிணைப்பு கொண்டதாகவும் ஆகியிருக்கின்ற தொழிலாள வர்க்கமானது துரிதமாக தீவிரமயப்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு ஒரு சோசலிச அரசியல் நோக்குநிலையை வழங்குவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளையும் கட்டியெழுப்புவதே இப்போது முன்நிற்கும் தீர்மானகரமான கேள்வியாக உள்ளது. முதலாளித்துவத்தை தூக்கிவீசுவது மட்டுமே இரண்டாம் உலகப் போரின் அளவிலான இன்னுமொரு பேரழிவைத் தடுப்பதற்கு முடியும்.

Loading