முன்னோக்கு

எலோன் மஸ்க்கும் வர்க்க யுத்தத்தின் பொருளாதாரமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் திங்களன்று கலிபோர்னியாவிலுள்ள Palo Alto வாகனத் தயாரிப்பாளர், உள்நாட்டு சுகாதாரத்துறையினரால் COVID-19. இலிருந்து தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக மூடப்பட்டிருக்கும் என்ற உத்தரவை மீறி அதன் Fremont பொருத்தும் தொழிற்சாலையில் உற்பத்தியை மறுதொடக்கம் செய்வதாக அறிவித்தார்.

"டெஸ்லா இன்று Alameda நகர விதிகளுக்கு எதிராக உற்பத்தியை மறுதொடக்கம் செய்கின்றது" என்று மஸ்க் ட்விட்டரில் தெரிவித்தார். டெஸ்லா உற்பத்தி நிலையங்கள் வார இறுதியில் இருந்து இயங்கி வருவதாக San Francisco Chronicle பத்திரிகை தெரிவித்துள்ளது. முழு திறனுடன் இயங்குகையில், இந்த ஆலையில் 10,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதால் எந்தவிதமான கடுமையான விளைவுகளையும் அவர் சந்திக்க மாட்டார் என்பதை மஸ்க் நன்கு அறிவார். செவ்வாயன்று, உள்ளூர் அதிகாரிகள் டெஸ்லாவுக்கு தாம் திரும்பதிறக்கும் திட்டம் ஒன்றை கொண்டுவரும்வரையில் உற்பத்தியை நிறுத்துமாறு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இதன்படி மஸ்க் எதிர்கொள்ளக்கூடிய மிகப் பெரிய அபராதம் ஒரு நாளைக்கு 1,000 டாலர் வரை அல்லது 90 நாட்கள் வரை சிறைத்தண்டனையாகும். ஆனால், பிந்தையது மிகவும் சாத்தியமில்லை.

உலகளாவிய வாகனத் தொழில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உற்பத்தியை மறுதொடக்கம் செய்து வருகிறது. இதற்கு மாநில அரசாங்கங்கள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மிச்சிகன் ஆளுனர் கிரெட்சன் விட்மர் இந்த வாரம் மிச்சிகனில் உள்ள வாகன உற்பத்தியாளர்களை உற்பத்தியை மறுதொடக்கம் செய்ய அனுமதித்துள்ளார்.

தொழிலாளர்களை வேலைக்குத் தள்ளுவதற்கான இரு கட்சி பிரச்சாரம் தொற்றுநோயின் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்துகிறது. நேற்று அமெரிக்க செனட்டின் சுகாதாரக் குழுவின் முன் சாட்சியமளித்த Dr. Anthony Fauci பொருளாதாரத்தை முன்கூட்டியே மீண்டும் திறப்பதை எதிர்த்து எச்சரித்தார். போதுமான ஏற்பாடுகள் இல்லாமல் “நாங்கள் மீண்டும் எழுச்சி பெறும் அபாயத்தை இயக்குகிறோம்” என்று அவர் கூறினார்.

அமெரிக்கா முழுவதிலும் உள்ள கலிபோர்னியா, பாரியளவிலான சோதனைகளை மேற்கொள்ளவோ அல்லது வைரஸின் எந்தவொரு வெடிப்பை கட்டுப்படுத்த தேவையான தொடர்புத் தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தலைச் செயல்படுத்தவோ எங்கும் தயாராக இல்லை. மொத்தம் 40 மில்லியனில் 992,000 சோதனைகளை அரசு நடத்தியுள்ளது.

இறைச்சி பதனிடும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமை, டெஸ்லா போன்ற பணியிடங்களில் வைரஸ் பரவுவதற்கான உள்ளார்ந்த ஆபத்துக்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவை பொருத்தும் பட்டடைகளை உள்ளடக்கியுள்ளதுடன், அவை உற்பத்தியின் இறுதி நிலையை அடைவதற்கு முன்பு டஜன் கணக்கான தொழிலாளர்களின் கைகளின் மூலம் தயாரிப்புகளை நகர்த்துகின்றன. இந்தியானாவின் லோகன்ஸ்போர்ட்டில் உள்ள டைசன் இறைச்சி ஆலையில், கடந்த மாதம் கிட்டத்தட்ட 900 ஊழியர்கள் நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று பேர் இறந்துவிட்டனர்.

டெஸ்லாவை மீண்டும் திறப்பதன் மூலம், மஸ்க் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப அல்லது பொருளாதார வறுமையை எதிர்கொள்ளவோ கட்டாயப்படுத்துகிறார். ஒரு மின்னஞ்சலில், நிறுவனம் தொழிலாளர்களை பின்வருமாறு அச்சுறுத்தியது: "வேலைக்கு செல்லாதிருக்க தேர்வு செய்வதானது வேலையின்மைக்கான உதவி கிடைப்பதிலிருந்து உங்கள் தகுதியை அகற்றலாம் அல்லது குறைக்கலாம்."

4.5 மில்லியனுக்கும் அதிகமான கலிஃபோர்னியர்கள், அல்லது மாநிலத்தின் 23.5 சதவிகிதத்தினர், வேலையின்மைக்கான உதவிக்கு அதிகாரபூர்வமாக தாக்கல் செய்துள்ளனர். மார்ச் மாதத்தில் தாக்கல் செய்தவர்களில் எட்டு பேரில் ஒருவர் மட்டுமே தனது அதற்கான உரிமை வழங்கப்பட்டு, தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவதற்கு பெரும் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

டெஸ்லா ஊழியர்களின் பொருளாதார நலன்களுக்காக பேசுவதற்கான மஸ்கின் பாசாங்குத்தனமான கூற்றுக்கள் அவர்களின் உயிருக்கு ஆபத்தை மட்டும் விளைவிக்கவில்லை. தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் Fremont ஆலையை நிரந்தரமாக மூடி அதன் 10,000 ஊழியர்களின் வாழ்வாதாரங்களை அழித்துவிடுவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.

"டெஸ்லா இப்போது அதன் தலைமையகம் மற்றும் எதிர்கால திட்டங்களை உடனடியாக டெக்சாஸ் / நெவாடாவுக்கு நகர்த்தும்" என்று மஸ்க் கடந்த வாரம் எச்சரித்தார். "நாங்கள் ஃப்ரீமாண்ட் உற்பத்தி நடவடிக்கைகளை கூட தக்க வைத்துக் கொண்டாலும், அதுவும் எதிர்காலத்தில் டெஸ்லா எவ்வாறு நடத்தப்படும் என்பதைப் பொறுத்தே தங்கியுள்ளது. கலிஃபோர்னியாவில் எஞ்சியிருக்கும் கடைசி கார் தயாரிப்பாளர் டெஸ்லா ஆகும்.”

தனது வாழ்க்கை முழுவதும், மஸ்க் தன்னை ஒரு சிறந்த பொறியியலாளராகவும், சுயமாக உருவாகிய பில்லியனராகவும் தன்னைச் சுற்றி ஒரு தனிநபர்ஆளுமை வழிபாட்டை உருவாக்கியுள்ளார். உண்மையில், அவரது தந்தை சாம்பியாவில் ஒரு மரகத சுரங்கத்தை வைத்திருந்தார்.

2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடிக்குப் பின்னர், சொத்துக்களின் மதிப்புகள் பெருமளவில் அதிகரித்ததிலிருந்து, உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அவரின் வானளாவிய செல்வத்திற்கான அவரது ஏற்றம் பிரிக்க முடியாதது.

மஸ்க் என்பவர் கடன்களின் மட்டங்கள் அதிகரிப்பதில் தங்கியுள்ள ஒரு முதலாளித்துவ பொருளாதாரத்தால் உருவான ஆபத்தான மூலதன முதலீட்டு முதலாளித்துவ (venture capitalist) வகையின் உருவகம் ஆவார்.

டெஸ்லா கடந்த 10 ஆண்டுகளில் ஒன்பதில் பணத்தை இழந்துள்ளது. இதன்போது அது ஒரு எதிர்மறையான பங்குவிலை விகிதத்தை பராமரித்து வந்தது. இப்போது அதன் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு, டெஸ்லாவின் பங்கு விலை 200 டாலருக்கு கீழ் இருந்தது, ஆனால் அதன் மதிப்பீடு அதன் பின்னர் ஐந்து மடங்கு அதிகரித்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் $917 ஐ எட்டியது. இதன் விலை தற்போது 809 டாலரும், சந்தை மூலதனம் 150 பில்லியன் டாலர்களுமாகும்.

இது மஸ்க்கை அளவிட முடியாத பணக்காரராக்கியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, அவர் கூடுதலாக $12.6 பில்லியனை சேகரித்து, $40.1பில்லியனுடன் உலகின் 22வது பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றார். வரலாற்றில் மிகப் பெரிய அவரது நிர்வாக ஊதியத்தின் அளவு, டெஸ்லாவின் பங்கு மதிப்பின் உயர்வில் முற்றிலும் தங்கியுள்ளது.

இந்த சொத்து மலைபோன்ற கடனின் மீது உள்ளது. இது தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரி மதிப்பைப் பிரித்தெடுப்பதன் மூலம் மட்டுமே பெறப்படமுடியும்.

தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற மஸ்கின் கோரிக்கையை அமெரிக்க நிதி தன்னலக்குழுவின் கொள்ளையடிக்கும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டியுள்ளது முற்றாக பொருந்துகின்றது. “கலிபோர்னியா டெஸ்லாவையும் மஸ்க்கையும் தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என அவர் செவ்வாய்க்கிழமை டுவிட் செய்தார். மஸ்கின் நடவடிக்கைகள் ட்ரம்ப்பின் ஒரு விதிவிலக்கல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இவர் கற்பனையான மூலதனம், கடன் மற்றும் சமூக கொள்ளை ஆகியவற்றின் பரந்த விரிவாக்கத்தையே தமது செல்வத்திற்கு அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆளும் வர்க்கத்தை உருவகப்படுத்துகின்றார்.

அமெரிக்க பங்குச் சந்தையின் பாரிய Ponzi திட்டம் எனப்படும் ஒரு ஏமாற்று திட்டத்தில் வாங்கிய முதலீட்டாளர்களுக்கு மஸ்க் மற்றும் அவரைப் போன்ற நிர்வாகிகள் தொடர்ந்து தங்கள் இரக்கமற்ற தன்மையை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். எந்தவொரு விஷயத்திலும் உண்மையான ஒரே விஷயம் தொழிலாளர்களின் உழைப்பாகும். அதன் மிகப் பெரிய சுரண்டல், மஸ்க் மற்றும் அவரது சக தன்னலக்குழுக்களின் அற்புதமான செழுமையின் அடிப்படையாக அமைகிறது. இந்த சமூக இயக்கவியலே மஸ்கை தனது தொழிலாளர்களின் வாழ்க்கையை இலாபத்திற்காக தியாகம் செய்யக் கோருகிறது.

மஸ்க்கின் நடவடிக்கைகளுக்கு பொருத்தமான பதில், அவரது தொழிலாளர்கள் மற்றும் பிராந்திய மக்களின் மீதான குற்றவியல்மிக்க ஆபத்துக்காக அவரை குற்றஞ்சாட்டுவது, உலகெங்கிலும் டெஸ்லா ஆலைகளை பறித்தெடுத்து மற்றும் அவரது அலட்சியம் மற்றும் வேண்டுமென்றே ஏற்படுத்திய தவிர்க்க முடியாத உடல்நலம் மற்றும் சமூக விளைவுகளுக்கு பணம் செலுத்துவதற்காக அவரது செல்வத்தின் பெரும்பகுதியை கையகப்படுத்துத வேண்டும். அவரது தனிப்பட்ட நடவடிக்கைகள் சோசலிச சமத்துவக் கட்சியின் பின்வரும் பரந்த கோரிக்கையின் அவசியத்தை உறுதிப்படுத்துகின்றன. அது "அனைத்து பெரிய நிதிய மற்றும் பெருநிறுவனங்களையும் கையகப்படுத்தி, அவை ஜனநாயகரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட பொதுமக்கள் ஆலைகளாக மாற்றப்படுவதற்கும்" அழைப்பு விடுகிறது.

Loading