உலகளவில் இறப்பு மற்றும் உடல்நல குறைவுக்கு ஊட்டச்சத்து குறைபாடு தான் முக்கிய காரணமாக உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒன்பது பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உலகளவில் 820 மில்லியன் மக்கள் ஆரோக்கியமான உணவை அணுகவோ அல்லது வாங்கவோ கூட முடியாத நிலையில், நாள்பட்ட பசிக் கொடுமைக்கு ஆளாகியிருக்கின்றனர். எனவே, அகால மரணத்திற்கான முக்கிய காரணியாக இது உள்ளது.

உணவு விஞ்ஞானத்தின் இணையற்ற வளர்ச்சிக்கு மத்தியில், 21 ஆம் நூற்றாண்டில் இதுதான் நிலைமை என்ற மோசமான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், “உலக ஊட்டச்சத்து அறிக்கை 2020: ஊட்டச்சத்து குறைபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை” என்ற அறிக்கையும் அதையே குறிப்பிடுகிறது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை, பசி பரவலாக இருப்பதை மட்டுமல்லாது, உடல் பருமனும் மற்றும் உணவுமுறை தொடர்பான பிற தொற்றா நோய்களும் (non-communicable diseases - NCDS) கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து வருவதையும் கண்டறிந்துள்ளது. மூன்று பேருக்கு ஒருவர் அதிக எடையுள்ளவராக அல்லது உடல் பருமன் மிக்கவராக இருக்கிறார், அதேவேளை ஐந்து வயதிற்குட்பட்ட ஒட்டுமொத்த குழந்தைகளில் கால் பகுதியினர் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர்.

கென்யாவின் வடக்கு துர்கானா மாகாணத்தில் உள்ள லோட்வார் மாவட்ட மருத்துவமனையிலுள்ள குழுந்தைகள் பிரிவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் சிகிச்சை பெற்று குணமடைந்து வரும் தனது பதினோரு மாத மகள் எபுவுடனான தாய் நகிதேலா எபுரின் புகைப்படம் (சர்வதேச மேம்பாட்டுக்கான இங்கிலாந்து துறை)

ஒன்றாகப் பார்த்தால், இந்த பல்வேறு வடிவங்களிலான ஊட்டச்சத்து குறைபாடு உடல்நல குறைவு மற்றும் இறப்பிற்கான முக்கிய காரணமாக மாறிவிட்டுள்ளது. இன்னமும் பெரும்பாலான மக்கள் சுகாதார பாதுகாப்பையும் சிகிச்சையையும் அணுக முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில், உலகளவில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 5 வயதிற்குட்பட்ட 16.6 மில்லியன் குழந்தைகளில் வெறும் கால் பகுதியினர் மட்டுமே 2017 ஆம் ஆண்டில் சிகிச்சை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பல்வேறு வடிவங்களிலான ஊட்டச்சத்து குறைபாடு உணவு விநியோகம் மற்றும் சுகாதார பராமரிப்பு முறைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளின் விளைவால் ஏற்பட்டுள்ளன என்று அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இத்தகைய அறிக்கைகளின் வழமையான தன்மையைப் போல, இந்த பிரச்சினைகள் குறித்து அனைத்து தேசிய அரசாங்கங்களும் காட்டும் முற்றிலும் குற்றவியல்தனமான அலட்சியத்தன்மை பற்றி இது மேலோட்டமாகவே குறிப்பிடுகிறது.

2013 இல் நிர்ணயிக்கப்பட்ட 2025 உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளான பத்தையும் பூர்த்திசெய்ய ஒரு நாடு கூட முயற்சிக்கவில்லை. 194 நாடுகளில் 8 நாடுகள் மட்டுமே நான்கு இலக்குகளையாவது பூர்த்தி செய்யும் வாய்ப்புள்ளது, மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் 88 நாடுகள் 2025 ஆம் ஆண்டிற்குள் எந்த இலக்கையும் எட்டுவதற்கு திட்டமிடவில்லை. சுகாதாரப் பாதுகாப்பு குறித்த வரவு-செலவுத் திட்டத்தில் சிறு விகிதம் மட்டுமே ஊட்டச்சத்து பிரச்சினைகளைக் கையாளுவதற்கான நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுகின்றது என்ற நிலையில், இது மிகக் குறைந்த வகை செலவினமாக இருந்தாலும், சுகாதாரப் பாதுகாப்பிற்கான செலவினங்களை நீண்ட காலத்திற்கு குறைக்கிறது.

உலக பட்டினியை ஒழிப்பதற்கான செலவு ஆண்டுக்கு 7 பில்லியன் டாலர் முதல் 265 பில்லியன் டாலர் வரை மேற்கொள்ளப்படுவதாக பல்வேறு வகையில் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, உடல் பருமன் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ செலவுகளோ “திகைப்பூட்டுகின்றன,” அதாவது 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி ஆண்டுக்கு மொத்தம் 1.2 டிரில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் அதிகபட்ச செலவு செய்த நாடாக அமெரிக்கா உள்ளது.

இந்த அறிக்கை, “மோசமான உணவுமுறைகள் விளைவிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு என்பது வெறுமனே தனிப்பட்ட விருப்பத்திற்குரிய விடயமல்ல. ஏனென்றால், தரமான ஊட்டச்சத்து பராமரிப்பிற்கு தேவைப்படும் ஆரோக்கியமான உணவை பெரும்பாலானவர்களால் அணுகவோ அல்லது வாங்கவோ முடிவதில்லை” என்று வலியுறுத்துகிறது.

இது சுட்டிக்காட்டியது போல, புதிய பகுப்பாய்வு, ஊட்டச்சத்து குறைபாட்டின் உலகளாவிய மற்றும் தேசியளவிலான முறைகள் அதன் அனைத்து வடிவங்களிலும் நாடுகளுக்குள்ளும் மக்களுக்கிடையேயும் உள்ள பெரும் ஏற்றத்தாழ்வுகளை மூடிமறைக்கின்றன என்பதையே காட்டுகிறது.

மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்காவிலேயே சுமார் 30 மில்லியன் பேர் பசியால் துன்பப்படுகின்றனர்.

ஏழ்மையான நாடுகளில் முக்கியமாக மற்றும் தொடர்ந்து நிலவுக்கூடிய எடைகுறைவு பிரச்சினை, பெரும்பாலும் மிகவும் முன்னேறிய நாடுகளில் 10 மடங்கு அதிகமாக உள்ளது, அதேபோல அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினை ஏழ்மையான நாடுகளை காட்டிலும் முன்னேறிய நாடுகளில் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது என்ற நிலையில் நாடுகளுக்கு இடையிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

ஊட்டச்சத்து குறைபாடு என்பது இருப்பிடம், வயது மற்றும் கல்வி மற்றும் அனைத்திற்கும் மேலாக செல்வம் ஆகியவற்றில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுடன் இணைந்தே உருவெடுக்கிறது, என்றாலும் இது போர்கள் மற்றும் மோதல்கள், அத்துடன் பண்ணை பயிர்களுக்கு நிர்ணயிக்கப்படும் குறைவான விலை, உணவுக்கு நிர்ணயிக்கப்படும் அதிகபட்ச விலை, குறைவூதியங்கள் மற்றும் வேலையின்மை ஆகிய காரணங்களினாலும் ஏற்படுகிறது.

நேரடியாகவோ அல்லது தங்களது கூட்டாளிகள் மற்றும் பிரதிநிதிகளின் மூலமாகவோ இந்த மோதல்களை வளர்ப்பதில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் வகிக்கும் பங்கை இந்த அறிக்கை வேண்டுமென்றே புறக்கணிக்கிறது. மேலும் இவ்வறிக்கை, மேம்பட்ட மற்றும் “வளரும்” நாடுகளான இவற்றில் காலநிலை மாற்றம் மற்றும் மலிவு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகிய இரண்டிற்கும் பொறுப்பாளியாகவுள்ள இலாப நோக்கத்துடன் செயல்படும் அரித்து சிதைக்கும் சமூக விளைவுகளைப் பற்றி விமர்சிக்கவில்லை.

அதிக உற்பத்தி செலவு செய்யப்பட வேண்டிய மற்றும் வேகமான மற்றும் நம்பகமான போக்குவரத்து அமைப்புக்களை சார்ந்திருக்க வேண்டிய அழுகிப்போகும் தன்மை மிக்க புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகள் போன்ற பொருட்களை காட்டிலும், எளிதில் சேமித்து வைக்கக்கூடிய மற்றும் பிற இடங்களுக்கு கொண்டு செல்லக்கூடிய அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் போன்ற முக்கிய தானியங்களின் மிகுதியான வளத்தை மையமாகக் கொண்ட வணிக வேளாண் உற்பத்தி முறைகள் பற்றி உலக ஊட்டச்சத்து அறிக்கை 2020 வெறுமனே குறிப்பிடுகிறது. அதிக வருவாய் உள்ள நாடுகளில், அதிலும் தற்போது அதிகரித்தளவில் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் மலிவாகவும் தீவிரமாகவும் விற்பனை செய்யப்படும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் தான் உணவு நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.

கோவிட்-19 நோய்தொற்று தோன்றுவதற்கு முன்னரே இந்த அறிக்கை எழுதப்பட்டிருந்தாலும், ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம், அவசரகால நடவடிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றிற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில், தொற்றுநோயின் விளைவாக நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பட்டினிக்கு முகம்கொடுக்கிறார்கள் என்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அதனால் இறக்கக்கூடும் என்று எச்சரித்து சில வாரங்களுக்குப் பின்னரே இது வெளிவந்துள்ளது.

ஐ.நா. பொதுச் செயலாளரின் உணவு பாதுகாப்புக்கான சிறப்பு பிரதிநிதி டேவிட் நபாரோ (David Nabarro), இந்த அறிக்கை இப்போது “உயர்ந்தளவிலான முக்கியத்துவத்தை” கொண்டுள்ளது என்று கூறியதுடன், “ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மிகக் குறைந்த நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதால், அவர்கள் கொரொனா வைரஸால் அதிக ஆபத்துக்கு உள்ளாகலாம், அதேவேளை உடல் பருமன் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் கூட மிக மோசமான விளைவுகளை சந்திப்பவர்களாக உள்ளனர் என்பதால் நம் அனைவருக்கும் ஒரே அளவிலான பாதிப்பை கோவிட்-19 ஏற்படுத்தாது” என்று எச்சரித்தார்.

முன்னுரையில் குறிப்பிடுகையில், இந்த வைரஸ் “ஏற்கனவே மோசமான நிலையிலுள்ள நமது உணவு முறைகளின் பாதிப்பையும் பலவீனத்தையும்,” அம்பலப்படுத்தியுள்ளது, அதாவது உணவு முறைகள் காலநிலை உச்சங்கள் மற்றும் “கொடிய சுகாதார பாதுகாப்பு ஏற்றத்தாழ்வுகள்” ஆகியவற்றினால் பலவீனமடைந்துள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். என்றாலும், உலகளவில் அரசாங்கங்கள் இந்த பிரச்சினைகளை வேண்டுமென்றே புறக்கணிப்பதைப் பற்றி அவர் எதையும் குறிப்பிடவில்லை.

தூய்மையான நீர், சுகாதாரம், பாங்குடைய வீட்டு வசதி மற்றும் வாழ்க்கை நிலைமைகள், அதிக ஊதியங்கள் மற்றும் தடுப்பூசி திட்டங்கள் ஆகிய வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக உடல் நலம் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளதான கடந்த காலத்தில் முன்னேறிய நாடுகளில் இருந்த நிலைமையைப் போல, உடல் நலம் குறித்த முக்கிய முன்னேற்றங்கள் பரந்த பொது சுகாதார நடவடிக்கைகளை சார்ந்துள்ளனவே தவிர, தனிப்பட்ட “வாழ்க்கை முறை” தெரிவுகளைச் சார்ந்தவையல்ல.

இந்த அறிக்கையில் மேலோட்டமாக சுட்டிக்காட்டப்பட்ட அதிர்ச்சியூட்டும் நிலைமைகள் ஒருபுறம் இருந்தாலும், நிலைமையை சரிசெய்வதற்கான அதன் பரிந்துரைகள் அவற்றின் போதாமை மற்றும் ஸ்திரமற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிக்கலானவையாக உள்ளன. “ஊட்டச்சத்து குறைபாட்டை அதன் அனைத்து வடிவங்களிலும் சரிசெய்வதற்கான முயற்சிகளை முடுக்கிவிடவும் மற்றும் உணவு மற்றும் சுகாதார அமைப்பு முறைகளில் நிலவும் அநீதியை சமாளிக்கவும் தேவையான சூழ்நிலையை உருவாக்கவும் ஸ்திரப்படுத்தவும் அதிகபட்சளவில் செயலாற்றிய நிறுவனங்களான அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றிற்கு ஆசிரியர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

ஆசிரியர்கள் ஒப்புக்கொள்வது போல, பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான முதன்மை சமகாலத்திய காரணங்களாக பொருளாதார சமத்துவமின்மை, போர்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை உள்ளன. அரசாங்கங்களிடம் பரிதாபகரமான வேண்டுகோள்களை முன்வைப்பதால் மட்டும் உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்கமுடியாது, மாறாக, மிருகத்தனமான போட்டி, சுற்றுச்சூழல் சேதம், புவி வெப்பமயமாதல் மற்றும் போர்களை உருவாக்கும் தனியார் இலாபத்தை நோக்கமாக கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமாக மட்டுமே அது சாத்தியப்படும்.

தனியார் வேளாண் வணிக நிறுவனங்கள் ஏகபோக உரிமையை பெறுவதைக் காட்டிலும், உலகளவில் திட்டமிடப்பட்ட, சோசலிச பொருளாதாரத்தின் கீழ் தொழிலாளர்கள் சுதந்திரமாகவும் சமமாகவும் பணிபுரிந்தால் மட்டுமே விஞ்ஞான முன்னேற்றங்களினால் கிடைக்கக்கூடிய நலன்களைப் பற்றி அவர்களால் புரிந்துகொள்ள முடியும். உலகளவிலான ஊட்டச்சத்து அறிக்கை 2020 பரவலான ஊட்டச்சத்து குறைபாட்டின் மீது கவனம் செலுத்தக்கூடும், என்றாலும் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேசரீதியிலான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தால் மட்டுமே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Loading