முன்னோக்கு

"சமூக நோய் எதிர்ப்பு சக்தியின்" கொலைகார போலி விஞ்ஞானம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 12 அன்று, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகத்தின் முன்னணி பத்திரிகையான Foreign Affairs அமெரிக்கா மற்றும் உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் COVID-19 நோயால் பாதிக்கப்பட வேண்டும் என்று வாதிடும் ஒரு கட்டுரையை வெளியிட்டது. கட்டுரை 'சுவீடனின் கொரோனா வைரஸ் மூலோபாயம் விரைவில் உலகத்திற்குரியதாகும்: சமூக நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே யதார்த்தமான தேர்வு — எப்படி பாதுகாப்பாக அங்கு செல்வது என்பதே கேள்வி' என்ற தலைப்பில் உள்ளது.

Grave diggers wearing personal protective suits carry a coffin while burying a COVID-19 victim in the special purpose for coronavirus victims section of a cemetery in Kolpino, outside St.Petersburg, Russia, Sunday, May 10, 2020. (AP Photo/Dmitri Lovetsky)

இது பின்வரும் முடிவிற்கு வருகின்றது, 'வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பல நாடுகளில் தோல்வியடைந்துள்ளது, மற்றும் ஒரு பெரிய சதவீதமான மக்கள் இறுதியில் பாதிக்கப்படுவார்கள்.' 'தொற்றுநோயை தோற்கடிப்பதை விட தொற்றுநோயை சமாளிப்பதே ஒரேயொரு யதார்த்தமான வழியாகும்' என்று அது வலியுறுத்துகிறது.

'சமூகநோய் எதிர்ப்பு சக்திக்கான' ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதம் என்னவென்றால், அதிகளவான மக்கள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டால், ஒருவேளை மக்கள் தொகையில் 50-70 சதவிகிதம், தொற்று விகிதங்கள் இயற்கையாகவே குறையும் என்பதாகும்.

இதன் தர்க்கவியல் முடிவாக, சமூக நோய் எதிர்ப்பு சக்தியை (herd immunity) ஆதரிப்பவர்கள், தொற்றுநோயை பரப்புவதை தடுப்பதற்கான முயற்சிகளான பரிசோதனை, தொடர்பு தடமறிதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், அத்துடன் பள்ளிகள் மற்றும் வணிகங்களை மூடுவது போன்றவற்றைக் குறைப்பதற்கான முயற்சிகள் கைவிடப்பட்டு முடிந்தவரை நோயை பரவலாக பரவவிடவேண்டும் என்று கூறுகின்றனர்.

இந்த வாரம் இரண்டு நிகழ்வுகள் இந்த போலி விஞ்ஞான கோட்பாட்டை தவறான மற்றும் ஆபத்தானவை என்று அம்பலப்படுத்தியுள்ளன. செவ்வாயன்று காங்கிரசின் வழங்கிய சாட்சியத்தில் டாக்டர் ஆண்டனி ஃபௌஸி கோவிட் -19 நோய்த்தொற்று நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தி, கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பு (WHO) விடுத்த எச்சரிக்கையை சுட்டிக்காட்டினார்.

மேலும், உலகெங்கிலும் உள்ள நாடுகள் COVID-19 அந்நியபொருள்எதிர்ப்புச்சக்தி (antibodies) இருக்கின்றதா என்பது பற்றிய தங்கள் மக்கள்தொகையின் பெரிய அளவிலான சோதனைகளின் முடிவுகளைப் பற்றி அறிவிக்கத் தொடங்கியுள்ளன. உலகளாவியரீதியில், இந்த சோதனைகள் மிக மோசமான வெடிப்புகள் உள்ள பகுதிகளில் கூட, மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதியே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன.

இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஸ்பெயினின் மக்கள்தொகையில் வெறும் ஐந்து சதவீதத்தினரில்தான் COVID-19 அந்நியபொருள்எதிர்ப்புச்சக்தி இருப்பதைக் கண்டறிந்தனர். உலகின் எந்தவொரு பெரிய நாட்டிலும் மக்கள் தொகையின் விகிதத்தின் சார்பாக பார்க்கும்போது ஸ்பெயினில் அதிக எண்ணிக்கையிலான COVID-19 தொற்றுக்கள் உள்ளன.

நோய்த்தொற்றிலிருந்து மீள்வது நோய் எதிர்ப்பு சக்திக்கு உத்தரவாதம் அளித்தாலும், அது மீண்டும் தெளிவாக இல்லை. ஸ்பெயினின் ஐந்து சதவீத மக்களுக்கான கற்பனையான நோய் எதிர்ப்பு சக்தி 27,459 உயிர்களை காவுகொண்டது. இதன் பொருள் தொற்று குறைவதை காணத் தேவையான 50 சதவீத நோய்த்தொற்றுக்கு கால் மில்லியன் மனிதர்களின் தியாகம் தேவைப்படும்.

இதேபோன்ற புள்ளிவிவரங்களை அமெரிக்காவில், அதன் 330 மில்லியன் மக்களுடன் பொருத்திப்பார்த்தால், ஒரு கற்பனையான “சமூக நோய் எதிர்ப்பு சக்திக்கு” கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களின் தியாகம் தேவைப்படும்.

இந்த காரணத்திற்காகவே, WHO செய்தித் தொடர்பாளர் மைக் ரியான் இந்த வாரம் 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி' கொள்கை பற்றி கேட்டபோது வெறுப்புடன் பதிலளித்தார்.

'மனிதர்கள் மந்தைகள் அல்ல' என்று மூத்த ஐரிஷ் தொற்றுநோயியல் நிபுணர் கூறினார். இந்த சொல் கால்நடை வளர்ப்புத் துறைக்கு மட்டுமே பொருந்தும் என்று அவர் கூறினார். அதில் “அந்த அர்த்தத்தில் ஒரு தனிப்பட்ட விலங்கு, அந்த முடிவுகளின் மிருகத்தனமான பொருளாதாரத்தின் கண்ணோட்டத்தில் ஒரு பொருட்டல்ல.”

இந்த வார்த்தையின் பயன்பாடு, 'மிகவும் மிருகத்தனமான எண்கணித முறைக்கு வழிவகுக்கும். இது மக்களையும், வாழ்க்கையையும், துன்பத்தையும் அந்த சமன்பாட்டின் முக்கிய விடயமாக வைக்காது.

'இந்த கருத்து நோய்க்கான குறைவான நடவடிக்கைகள் மற்றும் எதையும் செய்யாத நாடுகள் திடீரென்று மந்திரக்கோலால் சமூகநோய் எதிர்ப்பு சக்தியை எட்ட முனைகின்றன. எனவே இந்த வழியில் ஒரு சில வயதானவர்களை நாம் இழந்தால் என்ன செய்வது. இது மிகவும் ஆபத்தான கணக்கீடு.”

இந்த 'ஆபத்தான கணக்கீட்டை' அவர்கள் பயன்படுத்துவதை நியாயப்படுத்த, Foreign Affairs கட்டுரையின் ஆசிரியர்கள் 'சுவீடன் மாதிரியை' மேற்கோள் காட்டுகிறார்கள். அவர்கள் பின்வருமாறு எழுதினர்:

சமூக எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான இலக்கை சுவீடிஷ் அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. பெரும்பாலான விஞ்ஞானிகள் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வைரஸைக் கொண்டிருக்கும்போது இதை அடையப்படுவார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அரசாங்கத்தின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என்பதில் சந்தேகமில்லை. அல்லது பள்ளிகள், உணவகங்கள் மற்றும் பெரும்பாலான வணிகங்களை திறந்த நிலையில் வைத்திருப்பதன் விளைவாக இருக்கலாம்.

அவர்கள் பின்வருமாறு தொடர்கின்றனர்:

ஒரு அடைப்பு அல்லது அவசரகால நிலையை அறிவிப்பதற்கு பதிலாக, சுவீடன் தனது குடிமக்களை பெரும்பாலும் தன்னார்வ அடிப்படையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கூறியது. சுவீடிஷ் அதிகாரிகள்… கடுமையான கட்டுப்பாடுகள், அபராதம் மற்றும் கண்காணிக்கப்படுவது ஆகியவற்றை தவிர்த்தனர். சுவீடன் மக்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொண்டனர். ஆனால் மற்ற மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் குடிமக்களைப் போல ஆழமாக அதை செய்யவில்லை. பல உணவகங்கள் திறந்த நிலையில் உள்ளன, இருப்பினும் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கவில்லை மற்றும் இளம் குழந்தைகள் இன்னும் பள்ளியில் இருக்கிறார்கள்.

எவ்வாறாயினும், COVID-19 தொற்றுநோய்க்கான சுவீடனின் அணுகுமுறை மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

டென்மார்க், மில்லியனுக்கு (93 பேர்), நோர்வே (43), பின்லாந்து (53) மற்றும் ஐஸ்லாந்து (29) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, சுவீடன் அதன் அண்டை நாடுகளை விட கணிசமாக மில்லியனுக்கு 361 பேருடன் அதிக கொடிய நோயின் வெடிப்பை சந்தித்துள்ளது என்பதை இந்த விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுவீடனின் பெருமளவில் பொறுப்பற்ற கொள்கைகள் சர்வதேச அளவில் தீவிர வலதுசாரிகளுக்கு வெடிமருந்துகளை வழங்கியுள்ளன. இது வணிகங்கள் மற்றும் பள்ளிகளை முன்கூட்டியே மீண்டும் திறக்க வாதிடுவதற்காக எடுத்துக்காட்டப்படுகின்றது.

'சமூக நோய் எதிர்ப்பு சக்தி' கொள்கையின் அனைத்து வக்காலத்துவாங்குபவர்களையும் போலவே, ஒரு அரசியல் விஞ்ஞானி, ஒரு சமூகவியலாளர் மற்றும் ஒரு பொருளாதார நிபுணர் ஆகியோரை உள்ளடக்கிய கட்டுரையின் ஆசிரியர்களும், தொற்றுநோயியல் நிபுணர்கள், COVID-19 வழக்கமான பொது சுகாதார நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் மற்றும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பொது சுகாதார வல்லுநர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய அறிக்கைகளுடன் தங்கள் கூற்றுக்களைக் குறைக்க முயற்சிக்கவில்லை.

கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களுக்கு மத்தியிலும், நோயைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை மற்றும் மக்களுக்கு நோய் தொற்றுவதில் இருந்து தடுக்க முடியாது என்று அவர்கள் வெறுமனே வலியுறுத்துகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் தொடர்பு தடமறிதல் ஆகியவற்றில் முதலீடு செய்த நாடுகள், தினசரி புதிய தொற்றுக்களின் எண்ணிக்கையை ஒற்றை அல்லது இரட்டை இலக்கங்களுக்கு கொண்டு வந்துள்ளன. வெடிப்பின் ஆரம்ப மையமான தென் கொரியாவில் 260 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இந்த நோய் தோன்றிய நாடான சீனா, இறப்பு விகிதம் அமெரிக்காவை விட கிட்டத்தட்ட 100 மடங்கு குறைவாக உள்ளது. மலேசியாவும் இதேபோல் குறைந்த எண்ணிக்கையைக் கண்டது.

இதற்கு நேர்மாறாக, வேறு எந்த நாட்டையும் விட ஐந்து மடங்கு அதிகமான தொற்றுக்களைக் கொண்ட அமெரிக்காவில் உள்ள COVID-19 தொற்றுநோயின் பேரழிவு எண்ணிக்கை, பல மாதங்களாக அமெரிக்கா தனது மக்கள்தொகை குறித்து எந்தவொரு பரவலான சோதனையையும் நடத்தத் தவறிவிட்டது என்பதோடு நேரடியாக தொடர்புடையது என்பது வெளியேற்றப்பட்ட சுகாதார அதிகாரி டாக்டர் ரிக் பிரைட்டின் வியாழக்கிழமை சாட்சியத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Foreign Affairs கட்டுரை 'பரிசோதனை' என்ற வார்த்தையை விலக்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஏனென்றால் அது முற்றிலும் நேர்மையற்றது. இது தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடைத்தல் நடவடிக்கைகளை ஒரு எதிர்வாதமாக பயன்படுத்துகிறது. அடைத்தல்களின் பொருளாதார மற்றும் சமூக இழப்புக்களை இந்த செயலற்ற தன்மைக்கான ஒரு வாதமாக காட்டுகின்றது.

உண்மையில், உலக சுகாதார அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது போல், அடைத்தல் என்பது சுகாதார அமைப்புகள் அதிகமாக சுமையேற்றப்படாமல் இருப்பதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே, மேலும் தொற்றுநோயைத் தடுக்க பொது சுகாதார உள்கட்டமைப்பை பெருமளவில் விரிவுபடுத்துவதற்கு தேவையான நேரத்தை வழங்க இதனை பயன்படுத்தப்பட வேண்டும்.

அவர்கள் “சமூக நோய் எதிர்ப்பு சக்தியை” பகிரங்கமாக ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதைப் கருத்திலெடுக்காவிட்டாலும், COVID-19 இனால் அதன் மக்கள் தொகையில் பரவலாக தொற்று ஏற்படாமல் தடுக்கும் திட்டத்தை வட அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் உள்ள எந்த நாடும் கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக அடைத்தல்கள் பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் தொடர்பு தடமறிதலுக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்தப்படவில்லை.

மாறாக, மாநிலங்களும் நாடுகளும் அவற்றின் தொற்று விகிதங்கள், பரிசோதனை அல்லது மருத்துவத்திறன் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஃபௌஸி மற்றும் பிரிக்ட் இன் எச்சரிக்கைகளுக்கு ஏற்ப, நோயின் பாரிய மீளெழுச்சி, அண்மைக் காலகட்டத்தில் அல்லது அடுத்த காய்ச்சலின் போது பருவம் அல்லது இரண்டிலுமோ நிகழும் என்பதற்கே உத்தரவாதமளிக்கின்றது.

முதலாளித்துவத்தின் 'மிருகத்தனமான பொருளாதாரத்திற்கு' ஏற்ப, COVID-19 தொற்றுநோயால் இழந்த உயிர்கள் வெறுமனே வணிகம் செய்வதற்கான செலவு ஆகும். நிதிச் சந்தைகளை முடுக்கிவிட டிரில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட்டிருந்தாலும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எந்தவொரு தீவிர முயற்சியும் எடுக்கப்படவில்லை. மேலும் வணிகங்களை மூடுவது உட்பட எந்தவொரு தணிப்பு நடவடிக்கைகளும் விரைவாக கைவிடப்படுகின்றன.

தொழிலாளர்களின் வாழ்க்கையை அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக நிறுத்தும் ஆளும் வர்க்கத்தின் முயற்சிகள் முற்றிலும் தவறான தேர்வாகும். COVID-19 மற்றும் பிற அனைத்து தொற்று நோய்களையும் நிறுத்தவும் அழிக்கவும் சமூக வளங்களை தேவையான ஒதுக்கீடு மூலம் இரண்டையும் பாதுகாக்க முடியும். இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எடுக்கும் வரை அத்தியாவசியமற்ற பணியிடங்கள் மூடப்பட வேண்டும்.

ஆனால் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு முதலாளித்துவ வர்க்கம் செய்ய விரும்பாத சமூக உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது தேவைப்படுகிறது. COVID-19 தொற்றுநோயானது மிக அடிப்படையான சமூக உரிமையான உயிர் வாழ்வதற்கான உரிமையை முதலாளித்துவ அமைப்பினால் முற்றிலும் பாதுகாக்க இயலாத தன்மையை தெளிவுபடுத்தியுள்ளது.

Loading