மரண எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வெள்ளை மாளிகை இந்த தொற்றுநோய்க்காக சீனாவைப் பலிக்கடா ஆக்கும் முயற்சிகளை அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிகளின் பல பேட்டிகளில், ட்ரம்ப்பின் உயர்மட்ட வர்த்தக ஆலோசகரும் சீன-விரோத போர்வெறியருமான பீட்டர் நவார்ரோ (Peter Navarro), இந்த உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோயை பெய்ஜிங் வேண்டுமென்றே தொடங்கியது என்று அறிவுறுத்தி, பெய்ஜிங் மீதான வெள்ளை மாளிகை தாக்குதலை அதிகரித்தார்.

இந்த வெடிப்புக்கு சீனாவைப் பலிக்கடா ஆக்குவதானது, அமெரிக்காவில் இந்த பயங்கரமான மரண எண்ணிக்கைக்கு ட்ரம்ப் நிர்வாகம் குற்றகரமாக பொறுப்பாவதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக மட்டும் சேவையாற்றவில்லை, மாறாக நவார்ரோ ஆக்ரோஷமாக வக்காலத்து வாங்கி வந்த சீன-விரோத வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கும் நேரடியாக ஊட்டமளிக்கிறது.

ABC News இல் "This Week” நிகழ்ச்சியில் பேசுகையில், நவார்ரோ வெளிநாட்டவர் விரோத அர்த்தத்தில் கோவிட்-19 ஐ "சீன வைரஸ்" என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார் — இது இந்த தொற்றுநோய்க்காக பெய்ஜிங் மீது பழிசுமத்துவதற்காக உத்தேசிக்கப்பட்ட ஓர் அப்பட்டமான விஞ்ஞானபூர்வ ஆதாரமற்ற வார்த்தையாகும். சீனா இந்த வைரஸை உலகின் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டதாக கூறவில்லை என்றவர் அறிவித்த அதேவேளையில், மறைமுகமாக அதைத்தான் அவர் துல்லியமாக குறிப்பிடுகிறார் என்பதையும் உடனடியாக தெளிவுபடுத்தினார்.

வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை, மே, 15, 2020 இல் வெள்ளை மாளிகையின் ரோஸ் தோட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார். [படம்: AP/Alex Brandon]

“உண்மைகளை" முன்வைப்பதாக கூறியவாறு நவார்ரோ குறிப்பிடுகையில், “அந்த வைரஸ் வூஹான் மாகாணத்தில் உருவக்கப்பபட்டது. நவம்பரில் முதல் நோயாளி உருவானார். உலக சுகாதார அமைப்பின் (WHO) கவசத்திற்குப் பின்னால் நிற்கும் சீனா இரண்டு மாதங்களாக உலகிலிருந்து அந்த வைரஸை மூடிமறைத்து வைத்திருந்தது, பின்னர் அதை உலகெங்கிலும் விதைக்க நூறாயிரக் கணக்கான சீனர்களை விமானம் மூலமாக மிலான், நியூ யோர்க் மற்றும் ஏனைய இடங்களுக்கும் அனுப்பியது,” என்றார்.

ஒட்டுமொத்த அமெரிக்க ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் சீன-விரோத பிரச்சாரத்தில் இணைந்துள்ளன என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டாக, ABC தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜோர்ஜ் ஸ்டீபனோபவுலஸ் இத்தகைய எந்தவொரு "உண்மைகள்" என்றழைக்கப்படும் விடயங்கள் மீதும் விவாதிக்கவே இல்லை. யதார்த்தத்தில், திடீரென உருவெடுத்த இந்த முன்னர் அறியப்பட்டிராத நோயுடன் சீனா போராடிக் கொண்டிருந்தது: அதை பரிசோதிப்பது மற்றும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிவகைகள் ஒருபுறம் இருக்கட்டும், அதன் காரணங்களைக் கண்டறிந்து முன்னெடுக்க வேண்டியிருந்தது.

அந்நோய் குறித்த விபரங்கள் கிடைத்த மாத்திரத்தில் சீன அதிகாரிகள் அதை அமெரிக்காவிலுள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centres for Disease Control and Prevention - CDC) உட்பட ஏனைய நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்புக்கும் (WHO) வழங்கி இருந்தார்கள் என்பதையே ஆவணங்கள் மீதான எந்தவொரு புறநிலையான ஆய்வும் எடுத்துக்காட்டுகிறது.

• முதல் நோயாளி நவம்பர் 17, 2019 இல் வூஹானில் அடையாளம் காணப்பட்டார், அதை தொடர்ந்து இரண்டாவது நோயாளி டிசம்பர் 1, 2019 இல் அடையாளம் காணப்பட்டார்.

• டிசம்பர் 21, 2019 இல் சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் "அறியப்படாத காரணங்களுடன் நிமோனியா" நோயாளிகள் சிலரைக் குறித்து அறிக்கையை வெளியிட்டது.

• ஜனவரி 3 வாக்கில், அந்த நோய் ஒரு புதிய கொரோனா வைரஸால் உண்டானது என்பதை சீன விஞ்ஞானிகள் தீர்மானித்தார்கள் இதை ஜனவரி 9 இல் WHO உறுதிப்படுத்தியது.

• ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களில் ஜனவரி 13 இல், சீன வைரஸ் ஆய்வுத்துறை நிபுணர்கள் அந்த வைரஸின் மரபணு வடிவத்தை வெளியிட்டனர்.

• ஜனவரி 21 வாக்கில், சீனாவின் பிரதான நகரங்களில் மொத்தம் 291 நோயாளிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது, சீனாவில் முதல் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தது மற்றும் சீனாவுக்கு வெளியிலும் நோயாளிகள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.

• ஜனவரி 24 இல், சீனத் தலைமை வூஹானை மட்டுமல்ல ஒட்டுமொத்த ஹூபே மாகாணத்தையும் சமூக அடைப்பின் கீழ் நிறுத்தியது.

சீன ஆட்சி "விமானங்கள் மூலமாக மிலான், நியூ யோர்க் மற்றும் உலகெங்கிலும் நூறாயிரக் கணக்கான சீனர்களை அனுப்பியது" என்று முடிவுக்கு வருவது, சீனாவுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தினது பிரச்சாரப் போரின் பாகமாக அதனால் ஊக்குவிக்கப்பட்ட மிகப்பெரும் பொய்களில் மற்றொன்றாகும். பெய்ஜிங் வேண்டுமென்றே ஒரு பேரழிவுகரமான உலகளாவிய தொற்றுநோயை "விதைத்தது" என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதற்காகவே இதுமாதிரியான வார்த்தைகள் தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அபாயங்களை ட்ரம்ப் நிர்வாகம் உதறித் தள்ளியதுடன் ஒப்பிடுகையில், சீனாவின் விடையிறுப்பில் என்னதான் குறைபாடுகள் இருந்ததாக அவர்கள் கூறினாலும் அவை முக்கியமற்றவை, பெருவாரியான விஞ்ஞானபூர்வ அறிவுரைகளுக்கு முன்னால் வாரக் கணக்கில் ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறி இருந்ததோடு அது தயாரிப்பின்றியும் இருந்தது மற்றும் நோய்க்கு ஒரு தீர்வாக உண்மையான மருத்துவ மதிப்பு இல்லாத மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம் என்று ஊக்குவித்தது.

ஆனால் நவார்ரோ சர்வசாதாரணமாக இந்த உண்மைகளை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு, “அதை அவர்கள் வூஹானிலேயே வைத்திருந்திருக்கலாம்… இதனால் தான் சீனர்கள் அமெரிக்கர்கள் மீது கொண்டு வந்தார்கள் என்றும், அவர்கள் தான் பொறுப்பு என்றும் நான் கூறுகிறேன்,” என்ற ட்ரம்பின் அதே தொனியை மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறார். யதார்த்தத்தில், ட்ரம்பும், நீண்டகாலமாக சீரழிக்கப்பட்ட அமெரிக்க சுகாதார அமைப்புமுறையும் தான், இப்போது 90,000 ஐ நெருங்கி வரும் கொடூரமான அமெரிக்க மரண எண்ணிக்கைக்குப் பொறுப்பாகின்றனர், இவ்வாறிருக்கையிலும் வெள்ளை மாளிகை பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலைக்குத் திரும்புவதற்கு அழுத்தமளித்து வருகிறது.

முன்னணி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை நீண்டகால "சீனாவின் நண்பர்" என்று முத்திரைக் குத்தியும், “அவர் மகன் சீனர்களிடம் இருந்து பில்லியன் கணக்கிலான டாலர்களைப் பெற்றுள்ளார்" என்று குறிப்பிட்டும் —இந்த வாதத்தை அவர் திரும்பப் பெற நிர்பந்திக்கப்பட்டார்— சீனாவை கடுமையாக விமர்சிப்பது ட்ரம்பை மீண்டும் தேர்வு செய்வதற்கான முயற்சியின் உள்ளார்ந்த பாகமாக ஆகப் போகிறது என்பதை நவார்ரோ தெளிவுபடுத்தினார். அவரின் பங்கிற்கு, பைடனும் ஜனநாயகக் கட்சியும் அதேயளவுக்கு வெளிநாட்டவர் விரோத போக்கின் அடிப்படையில் ட்ரம்ப் சீனா மீது போதுமானளவுக்கு கடுமையாக இல்லை என்பதாக அவரைத் தாக்கி வருகின்றனர்.

அமெரிக்காவின் தடுப்பூசி ஆய்வுகளை ஊடுருவி திருட முயல்வதாக குற்றஞ்சாட்டி, ஜனவரி 15 இல் கையெழுத்தான அமெரிக்கா உடனான அதன் வர்த்தக உடன்படிக்கையை மீறி விட்டதாகவும் சீனாவை நவார்ரோ தாக்கினார். ஊடுருவல் குறித்த வாதங்களை முன்வைத்த FBI மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை சீனாவின் மின்னணு உளவுவேலைகள் குறித்து எந்த ஆதாரமும் வழங்கவில்லை. “இலாபமீட்டுவதற்கும் உலகையே பிணையாளியாக பிடித்து வைப்பதற்கும்" சீனா தடுப்பூசி ஆராய்ச்சியை "திருடி வருகிறது" என்று அறிவிப்பதில் இருந்து அது நவார்ரோவைத் தடுக்கவும் இல்லை.

கோவிட்-19 தொற்றுநோய் சம்பந்தமாக பெய்ஜிங்கைப் பலிக்கடா ஆக்குவதை நவார்ரோ சீனாவுடனான வர்த்தகப் போருடனும் மற்றும் அவரின் பாதுகாப்புவாத திட்டநிரலுடனும் நேரடியாக தொடர்புபடுத்தினார். அவர் முட்டாள்த்தனமாக அறிவித்தார்: “இந்த ஜனாதிபதி, டொனால்ட் ஜெ. ட்ரம்ப், மூன்றரை ஆண்டுகளில் நவீன வரலாற்றில் மிகவும் அருமையான பொருளாதாரத்தை கட்டமைத்துள்ளார் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதை சுமார் 30 நாட்களில் சீனா பாழாக்கி விட்டது,” என்றார்.

உண்மையில், கோவிட்-19 தொற்றுநோய் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் விரைவுபடுத்தப்பட்டு மட்டுமே உள்ள அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று வீழ்ச்சி மற்றும் உள்அழுகலை அம்பலப்படுத்தி உள்ளது. ட்ரம்ப் நிஜமான பொருளாதாரத்தைக் கீழறுத்ததன் மூலமும் அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்தும் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் செல்வந்த தட்டுக்களினது வளர்ச்சிக்கு வெறும் ஆளுருவாக விளங்குகிறார்.

நவார்ரோ பாதுகாக்கும் வர்த்தகப் போர் நடவடிக்கைகளானது, பொருளாதார மற்றும் இராணுவ போர்முறைகள் உட்பட ஒவ்வொரு வழிவகைகள் மூலமாகவும் அதன் போட்டியாளர்களை, அனைத்திற்கும் மேலாக சீனாவுக்கு குழிபறிப்பதன் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தை பேணுவதற்கான பெரும்பிரயத்தன முயற்சியாகும். சீனாவுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் வெட்டுவதற்கும், இது இறக்குமதிகளில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் மிச்சப்படுத்தும் என்றும் கூட கடந்த வாரம் ட்ரம்ப் அச்சுறுத்தினார்.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு விடையிறுப்பதில் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு எதிராக தண்டிக்கும் வகையிலான நடவடிக்கைகளைத் தயாரித்து வருகிறது, இவற்றில் சில ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. அரசு ஓய்வூதிய நிதியில் உள்ள சீனப் பங்குகளை முடக்கியமை மற்றும் சீன மின்னணு ஹூவாய் பெருநிறுவனம் செமிகண்டக்டர்களைப் பெறுவதிலிருந்து தடுக்கும் விதமாக கடுமையான புதிய நடவடிக்கைகளை வடிவமைத்தமை ஆகியவை அதில் உள்ளடங்கும்.

இத்தகைய நடவடிக்கைகளுடன் சேர்ந்து சீனாவுடனான மோதலுக்கு தயாரிப்பு செய்வதில் இந்தோ-பசிபிக்கில் தொடர்ந்து நடந்து வரும் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பு மற்றும் அத்துடன் சீனப் பெருநிலத்திற்குப் பக்கவாட்டில் தென் சீனக் கடலில் கடற்படை ஆத்திரமூட்டல்களும் உள்ளன. 1930 களைப் போலவே, உலகளாவிய முதலாளித்துவத்தின் இப்போதைய இந்த பாரிய நெருக்கடியும் வர்த்தகப் போர் மற்றும் போருக்கு இட்டுச் செல்கின்றன. வரவிருக்கும் சீனப் போர்கள் (The Coming China Wars) என்ற நூலின் ஆசிரியரான நவார்ரோவுக்கு அவர் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய நாசகரமான விளைவுகளைக் குறித்து நன்றாகவே தெரியும்.

Loading