கோவிட்-19: பொடேமோஸ், சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக ஸ்பானிய பொலிஸை அனுப்பத் தயாராகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தப்பான பெயர்கொண்ட “முற்போக்கு” சோசலிஸ்ட் கட்சி (PSOE) - பொடேமோஸ் அராசாங்கம், கோவிட்-19 நோய்தொற்றுக்கு மத்தியில் ஸ்பெயினில் முடக்கத்தை முற்றிலும் நீக்கி, மக்களுக்கு விரோதமாக மீண்டும் வேலைக்குத் திரும்பும் கொள்கையைத் திணித்து வரும் நிலையில், பெரும் அடக்குமுறைக்கு தயாராகி வருகிறது. இது, “Delta Papa ஆணை 21/20: புதிய இயல்புநிலையை நோக்கிய மாற்றும் திட்டத்திற்கான கட்டமைப்பில் சிவில் காவலர் நடவடிக்கை,” என்ற 22 பக்கங்களைக் கொண்ட இரகசிய ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது, இந்த ஆவணம் லெப்டினன்ட் ஜெனரல் Fernando Santafe ஆல் கையெழுத்திடப்பட்டது, பின்னர் கடந்த செவ்வாயன்று El Periódico செய்தியிதழுக்கு இது பற்றி கசியவிடப்பட்டது. ஸ்பெயினின் துணை இராணுவ காவல் பிரிவின், சிவில் காவலர்களுக்கான செயல்பாட்டு கட்டளையகத்தின் தலைவராக (Chief of Operations Command of Civil Guard) Santafé உள்ளார்.

அதாவது, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் படிப்படியாக நீக்கப்பட்டு வரும் சமயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுசீரமைப்பதற்காக இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் கோவிட்-19 இன் புதிய வெடிப்புக்களைத் தூண்டும் என்பதை பொடேமோஸூம், PSOE உம் நன்கு அறிந்தே, தொழிலாள வர்க்கத்திடமிருந்து இலாபங்களை தொடர்ந்து பிழிந்தெடுப்பதற்காக மில்லியன் கணக்கான உயிர்களை தேவையின்றி ஆபத்தில் ஆழ்த்துகின்றன. இந்த ஆவணம், “முக்கியமான உள்கட்டமைப்புக்கு அல்லது அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்ட கட்டமைப்புக்களுக்கு எதிரான நாசவேலை நடவடிக்கைகள்” குறித்து எச்சரித்து, வரவிருக்கும் மாதங்களில் வளர்ந்து வரும் சமூக அமைதியின்மையின் “உச்சபட்ச நிகழ்தகவு” ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறது.

அடக்குமுறைக்கான இலக்காக தொழிலாள வர்க்கம் உள்ளது. மேலும் இந்த ஆவணம், சமூக அமைதியின்மை என்பது “மிகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய” பகுதிகளிலிருந்து, மற்றும் “ERTE [தற்காலிக பணிநீக்கம்] ஆல் அல்லது பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களிடமிருந்து, மற்றும் “தற்போதைய கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகளினால் தங்களுக்கு தீங்கு ஏற்படும் என்று கருதக்கூடிய உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளிடமிருந்து” தோன்றும் என்று தெரிவிக்கிறது. இது, “எச்சரிக்கை நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார கட்டுப்பாடுகள் ஸ்பெயினின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன என்பதையும், இது அவர்களது மிகவும் பின்தங்கிய குடிமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார நெருக்கடியை விளைவிக்கக்கூடும் என்பதுடன், அவர்கள் தமது அடிப்படைத் தேவைகளை கூட பெறமுடியாத நிலையை எதிர்கொள்ள நேரிடும்” என்பதையும் ஒப்புக்கொள்கிறது.

இந்த பொருளாதார சூழ்நிலை பேரழிவை ஏற்படுத்துகிறது. தொற்றுநோய் பரவ ஆரம்பித்தது முதல் உணவு பொருட்கள் விற்பனை நிலையங்களின் முன்பு வரிசைகள் அதிகரித்து வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.9 சதவிகிதமாக உயர்ந்து, 3.8 மில்லியன் தொழிலாளர்கள் அளவிற்கு எட்டியது. என்றாலும், உண்மையான நிலைமை தொழிற்சங்க ஆதரவு பெற்ற ERTE க்களால் மறைக்கப்பட்டது, இவை தற்காலிகமாக வேலையில்லாத தொழிலாளர்களுக்கு முதலாளிகள் ஊதியம் வழங்குவதை நிறுத்தச் செய்தன என்ற நிலையில், அதற்கு பதிலாக 30 சதவிகித ஊதியக் குறைப்புக்கான அரசு வேலையின்மை சலுகைகளை அவர்கள் பெறுகின்றனர். உண்மையாக நடப்பில் நிறுவனங்களை அரசு பிணையெடுப்பது தற்போது 3.5 பில்லியன் தொழிலாளர்களை பாதிக்கிறது. ஜூன் மாத இறுதியில் ERTE க்கள் வெளியேறும்போது மில்லியன் கணக்கானவர்கள் இல்லாவிட்டாலும், நூறாயிரக்கணக்கானவர்கள் தங்களது வேலைகளை இழக்க நேரிடும்.

தொழிலாள வர்க்க எதிர்ப்பு மற்றும் பிராந்திய பிரிவினைவாதம் பற்றிய ஸ்பானிய முதலாளித்துவத்தின் பாரம்பரிய அச்சங்களை வழமை போல் இணைத்து, இந்த ஆவணம், கட்டலான் மற்றும் பாஸ்க் பிரிவினைவாதிகள் பற்றி குறிப்பிட்டு, “அமைதியை குலைப்பதை நோக்கமாகக் கொண்ட அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தப்பட்ட அல்லது பிரிவினைவாத நடவடிக்கைகள்” பற்றியும் குறிப்பிடுகின்றது.

பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பால் பீதியடைந்த PSOE-பொடேமோஸ் அரசாங்கம் தீவிரமாக தயாரிப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆவணம், அனைத்தும் “தவறான தகவல்களின் [போலி செய்திகள்] கிளைக்கதைகளுக்கு” எதிரான போராட்டம் என்ற பெயரில், “மோதல் அல்லது சமூக எச்சரிக்கையை உருவாக்கும் அல்லது உருவாக்கக்கூடிய சாத்தியமுள்ள முன்முயற்சிகளை அல்லது நடவடிக்கைகளை தடுப்பதற்கான வழிமுறையை கண்டறிவதற்கு சமூக ஊடகங்களின் கண்காணிப்பை,” சிவில் காவல் பிரிவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது. அதாவது, PSOE-பொடேமோஸ் அரசாங்கம் பெரியளவில் இணையவழி தணிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இது, ஏப்ரலில் செய்தியாளர்கள் மாநாட்டில் விடுக்கப்பட்ட அறிக்கையை உறுதி செய்கிறது, மேலும் சிவில் காவலர் ஜெனரல் ஜோஸ் மானுவல் சாண்டியாகோவால் வாய்தவறி கூறப்பட்டதாக ஆரம்பத்தில் நிராகரித்து, “புரளிகளால் உருவாக்கப்பட்ட சமூக அழுத்தத்தை தடுக்கவும், மற்றும் அரசாங்கம் நெருக்கடியைக் கையாளுவதை எதிர்க்கும் [இணையவழி] சூழலை குறைக்கவும்” அழைப்புவிடுக்கிறது.

இந்த கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதலின் “ஒவ்வொரு கட்டம் குறித்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொதுவாக ஏற்றுக்கொள்வது” குறித்து PSOE-பொடேமோஸ் அரசாங்கத்தின் நிகழ்நேர தரவுகளை வழங்கவும், மேலும் “அந்த விதிகள் மீறப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ள பகுதிகள், வட்டாரங்கள் அல்லது சமூக குழுக்களை அடையாளம் காணவும்” நோக்கம் கொண்டுள்ளது.

இந்த ஆவணம் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு எச்சரிக்கையாகும். 1930 களில் இருந்தது போல, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கம், இந்த தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் தனது இராணுவத்தையும் பொலிஸ் அரசு இயந்திரத்தையும் தீவிரமாக கட்டமைத்து வருகின்றது, அதேவேளை உள்நாட்டிற்குள் பரந்த அடக்குமுறைக்கான மற்றும் வெளிநாடுகள் உடனான போருக்கான தயாரிப்பில் தீவிர தேசியவாதத்தைத் தூண்டி வருகின்றது. இன்னமும் உண்மையான வெகுஜன அடித்தளத்தைக் கொண்டிராத பாசிச இயக்கங்கள், தற்போதுள்ள கட்சிகளின் பிரிவுகளின் நிதியுதவியையும், மற்றும் பெரும் ஊடகங்களின் ஊக்குவிப்பையும் நம்பியுள்ளன.

1936 இல் பிரான்சிஸ்கோ ஃபிராங்கோ தலைமையில் ஸ்பானிய உள்நாட்டுப் போரைத் தூண்டிய பாசிச சதித்திட்டத்தை பெரிதும் ஆதரித்த சிவில் காவல் பிரிவுதான், 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கான ஸ்பானிய முதலாளித்துவத்தின் முக்கிய சக்திகளாக இருந்து வந்துள்ளன. “இடது ஜனரஞ்சகவாத” பொடேமோஸ், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதை மீண்டும் அனுப்ப தயாராக உள்ளது என்ற உண்மை, வசதியான நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இந்த கட்சியை தொழிலாளர்களிடமிருந்து பிரிக்கும் ஆழமான வர்க்க இடைவெளியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சர்வதேச அளவில், “இடது ஜனரஞ்சகவாத” கட்சிகள் அனைத்தும் இதேபோன்ற பிற்போக்குத்தனமான பாத்திரத்தை வகிக்க தயாராக உள்ளன. முடக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது பெரும் எண்ணிக்கையிலான இறப்புக்களை விளைவித்ததை ஒப்புக்கொள்ளும் அதேவேளை, “சமூக ஒத்திசைவுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும்” மற்றும் தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கு மெலோன்சோன் தனது சேவைகளை வழங்கி வருகிறார். ஜேர்மனியில், தொழிலாளர்களுக்கு எதிராக ஜேர்மனியின் வலதுசாரி பெரும் கூட்டணி அரசாங்கத்துடன் இடது கட்சி கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ளதுடன், ஜேர்மன் அரசாங்கம் வங்கிகள் மற்றும் பெருவணிகங்களை பல பில்லியன் யூரோக்களில் பிணையெடுப்பதை ஆதரித்து ஏகமனதாக வாக்களிக்கின்றது. இந்நிலையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கல் குறித்து அவர்கள் பீதியடைந்துள்ளனர்.

இது, அதன் பொதுச் செயலாளரான, துணை பிரதமர் பப்லோ இக்லெசியாஸை போல, மார்க்சிச எதிர்ப்பு “ஜனரஞ்சகவாத” பேராசிரியர்கள் மற்றும் பொடேமோஸின் செயற்பாட்டாளர்களிடம் காணப்படும் இழிந்த தன்மையையும், பாசாங்குத்தனத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வர்க்கப் போராட்டத்தை மறுத்து, “ஜனரஞ்சகவாதத்திற்கான” அழைப்புக்களின் அடிப்படையில் தொழிலாள வர்க்க அரசியலை அவர்கள் எதிர்த்தனர் என்ற நிலையில், பல தசாப்தங்களாக, ஆளும் வர்க்கம் அவர்களை “இடது”சாரிகளாக கட்டியெழுப்பியது. என்றாலும் இந்த மறுப்பு, அவர்களின் வர்க்க சலுகைகள் மற்றும் நிலைப்பாட்டைப் பாதுகாப்பதாக இருந்தது. இப்போது அதிகாரத்தில் இருந்துகொண்டு, வர்க்கப் போராட்டத்தின் இருப்பை தெளிவாக அவர்கள் அங்கீகரிப்பதுடன், அதை தங்களது ஆட்சிக்கான அச்சுறுத்தலாகக் கருதி நசுக்க ஆசைப்படுகிறார்கள்.

எச்சரிக்கை நிலைக்குப் பின்னர், PSOE-பொடேமோஸ் அரசாங்கம் எஃகுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களையும், Glovo மற்றும் UberEats நிறுவனங்களின் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களையும் நசுக்குவதற்கு ஸ்பானிய பொலிஸை அனுப்பியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் தான் ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை காட்டிலும் பொது சுகாதாரம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டு, மே தின ஆர்ப்பாட்டங்களை தடை செய்தது. மீறமுடியாத சிடுமூஞ்சித்தனத்துடன், அரசாங்கம் முன்கூட்டியே கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அகற்றிய நிலையில், இந்த தீர்ப்பின் தோல்வியால் மில்லியன் கணக்கானவர்கள் கோவிட்-19 இன் பாதிப்புக்குள்ளாகும் பெரும் அபாயம் உள்ளது.

மாட்ரிட்டின் வசதியான சலமான்கா மாவட்டத்தில் நடந்த சில நூறு பேர் கலந்துகொண்ட மிகவும் பரவலாக அறியப்பட்ட வலதுசாரி ஆர்ப்பாட்டங்கள் அதே அடக்குமுறையை எதிர்கொள்ளவில்லை. திங்கள்கிழமை முதல் ஒவ்வொரு நாளும், சட்டப்படி தேவைப்படும் பொலிஸ் அங்கீகாரம் இல்லாமலும், அரசு எச்சரிக்கையை மீறியும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொலிஸ் அவர்களைக் கலைப்பதற்கோ அல்லது அவர்களுக்கு அபராதம் விதிக்கவோ மறுத்ததோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து அவர்களை ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதித்து ஒதுங்கி நின்றனர். இதற்கிடையில், அதே நகரத்தில் வலேகாஸின் அண்டை தொழிலாள வர்க்கம் மாட்ரிட்டில் சராசரியைக் காட்டிலும் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக நான்கு மடங்கு அபராதம் விதித்துள்ளது.

நோய்தொற்று ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. தொழிலாளர்களின் உயிர்களை விலைகொடுத்தேனும் நிதி மூலதனத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் அனைவரும் ஒரே கொள்கையை ஏற்கின்றனர். வலதுசாரி பிரபலக் கட்சித் தலைவர் பப்லோ காசாடோ, “வைரஸால் புதிய வெடிப்புக்கள் ஏற்படுமானால், விதிவிலக்கான நடவடிக்கைகளுக்கு நாம் திரும்பிச் செல்ல முடியாது என்பதால், வைரஸூடன் நாம் வாழ்ந்தாக வேண்டும்” என்று கூறினார். இதேபோல, வல்லாடோலிடில் உள்ள ஒரு பெரிய வணிகச் சங்கம், “பொருளாதார கண்ணோட்டத்தில் உற்பத்தி செய்யாத குழுவினர்” என்று அவர்கள் கூறிய வயோதிபர்களை காப்பாற்றுவதற்காக படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று புலம்பியது.

பார்சிலோனாவின் பொடேமோஸ் ஆதரவு பெற்ற மேயர் அடா கோலாவ், “கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அதை நன்றாக செய்யவே நாங்கள் விரும்புகிறோம், நீண்ட நாட்கள் காத்திருக்க நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், அதன் கிரேக்க கூட்டாளியான சிரிசா அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைக்கான பொடேமோஸின் ஆதரவை பகுப்பாய்வு செய்து WSWS பின்வருமாறு எச்சரித்தது: “மோன்க்ளோவா அரண்மனையில் இருந்து கலகப்பிரிவு பொலிஸின் பல்வேறு பிரிவினர் ஊடாக மக்களை கவனித்து, சிப்ராஸ் அல்லது ஸ்பெயினின் தற்போதைய பிரதமர் மானுவல் ரஹோய் போன்றே பிரதமர் இக்லெசியாசும் தொழிலாளர்களைப் பார்த்து பயப்படுவார்.” இது பொடேமோஸை, “ஒழுங்கின் பாதுகாவலர் என்று வரையறுத்தது. 1991 இல் நிகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதில் இருந்து அவர்கள் எட்டிய முடிவு… முதலாளித்துவம் மட்டுமே சாத்தியமான வழி என்பதாகும். அவர்கள் நிதி மூலதனத்தின் கையூட்டு கருவிகளாக சேவையாற்ற அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான நிபந்தனைக்குட்பட்டுள்ளனர்.”

இந்த எச்சரிக்கை முற்றுமுழுதாக நிரூபணமாகியுள்ளது.

Loading