சந்தை மற்றும் இலாபங்கள் கோவிட்-19 தடுப்பு மருந்து முயற்சிக்கு தடையாக உள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஒரு பயனுள்ள கோவிட்-19 தடுப்பு மருந்துகளை உருவாக்க தீவிர போராட்டத்தில் உள்ளனர். Nature என்ற விஞ்ஞான இதழின் கூற்றுப்படி, 115 க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் அபிவிருத்தியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.

டிசம்பர் 31 ம் தேதி, உலக சுகாதார அமைப்புக்கு (WHO) சீனாவின் வூஹானில் இருந்து முன்னர் எங்கிருந்து வந்தது என்று அறியப்படாத நிமோனியா தொற்றுக்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 7 ஆம் தேதிக்குள், சீன விஞ்ஞானிகள் நோய்த்தொற்றின் மூலத்தை SARS-CoV-2 வைரஸ் என்று அடையாளம் காட்டினர். சில நாட்களுக்குப் பின்னர், ஜனவரி 11 அன்று, சர்வதேச விஞ்ஞான சமூகத்திற்கு வைரஸின் மரபணு கட்டமைப்பை சீன தேசிய சுகாதார ஆணையம் இணையத்தில் வெளியிட்டது.

வைரஸின் மரபணு கட்டமைப்பைக் கண்டுபிடித்தமையானது உலகத்தை நாசப்படுத்திய வைரஸ் வெடிப்பைக் கையாள்வதற்கான தடுப்பூசியின் வளர்ச்சியின் முதல் படியாகும். வெற்றிகரமாக இதனை யார் செய்வது என்பது, தடுப்பூசியிலிருந்து கிடைக்கும் இலாபத்தை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கான மூர்க்கமான போட்டிக்கான தொடக்கப்போட்டியாக இருக்கின்றது.

"மரபணு வரிசையுடன், நாங்கள் பந்தயங்களில் ஈடுபட்டோம்" என்று அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் தலைவர் டாக்டர் அந்தோனி பௌஸி கூறினார்.

இந்த வைரஸ் என்பது பொதுவாக ஜலதோஷத்தை உருவாக்கும், கடுமையான சுவாச நோய்குறி (SARS) மற்றும் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS) போன்றவை 2003 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தொற்றுநோய்களை ஏற்படுத்தியது போன்ற ஒரு வகை கொரோனா வைரஸ் என்பதை விஞ்ஞானிகளால் அடையாளம் காண முடிந்தது.

மனித கொரோனா வைரஸ் முதன்முதலில் 1960 களில் அடையாளம் காணப்பட்டதுடன் மற்றும் அதன் முழு மேற்பரப்பு முழுவதிலும் விரல் போன்ற முளைவிடும் அமைப்புகளை கொண்டிருப்பதால் மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது. இது சூரியனில் இருந்து வரும் இலத்திரன் துகள்களின் கதிர்களின் தோற்றத்தை அளிக்கிறது. அதன் மரபணு அமைப்பு ரிபோநியூக்ளிக் அமிலத்தின் (RNA) ஒற்றை இழைகளால் ஆனது, இது ஒரு புரத மென்படலத்தால் செய்யப்பட்ட கருவால் சூழப்பட்டுள்ளது. அதில் இருந்து ஸ்பைக் புரதங்கள், விரல் போன்ற கட்டமைப்புகள் நீண்டு செல்கின்றன.

கோவிட்-19 வைரஸ் மனிதனின் மேல்-சுவாசக் குழாய்களில் உள்ள கலங்களை முதலில் அதன் ஸ்பைக் புரதங்களைப் பயன்படுத்தி இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட நபரின் சுவாசக் குழாயில் ஒரு தொற்றுபவரின் கலத்தின் சவ்வுடன் இணைக்கவும் பின்னர் அதனுள் உருகவும் செய்கிறது. இந்த கட்டத்தில், வைரஸ் அதன் RNA மரபணு குறியீடுகளை கலங்களுக்குள் விடுவிக்க முடியும். இதன் மூலம் தொற்றுபவரின் மரபணு அமைப்பினுள் பெருமளவில் எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்ய முடியும்.

இந்த புதிய வைரசுகள் மீண்டும் கலங்களில் இடைவெளிகளில் வெளியிடப்பட்டு தொற்றியவரில் மேலும் பரவுகின்றன. அவை சுற்றுச்சூழலுக்குள் வெளியேற்றப்பட்டு, அங்கு அது மற்றவர்களுக்கு தொற்றை ஏற்படுத்துவதுடன் நோயை பரப்புகின்றது. வைரஸின் வாழ்க்கை வட்டம் தொற்றியவரின் கலங்களை இறுதியில் அழிக்கிறது. ஆனால் இது தொற்றியவரில் ஒரு தீவிர நோயெதிர்ப்பு பிரதிபலிப்பிற்கும் வழிவகுக்கிறது.

கோவிட்-19 வைரஸின் ஆபத்தான தன்மை என்னவெனில், தொற்றியவரின் நோயெதிர்ப்பு அமைப்பு இதற்கு ஒரு தீவிரமான பிரதிபலிப்புடன் பதிலளிப்பதாகும். இந்த பிரதிபலிப்பானது ஒரு சிறிதளவு புரிந்துகொள்ளப்பட்ட செயல்பாட்டில், சைட்டோகைன்கள் (cytokine) எனப்படும் இரசாயனங்களை சைட்டோகைன் புயல் என்று அழைக்கப்படும் அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்கிறது.

சைட்டோகைன்களின் உற்பத்தி உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு பிரதிபலிப்பின் ஒரு பகுதியாகும். இது படையெடுக்கும் வைரஸை அழிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இதுவரை அறியப்படாத ஒரு காரணத்தினால், கோவிட்-19 வைரஸுக்கு பதிலளிக்கும் விதமாக, சைட்டோகைன்கள் பாரியளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை நுரையீரலில் ஆபத்தான அளவிலான வீக்கத்தையும் சுவாசக் கோளாறுக்கு வழிவகுக்கும் சுவாச மண்டலத்தையும் பாதிக்கின்றது. சளிக்காய்ச்சல் மற்றும் பிற வைரஸ் தொற்றுக்கள் இத்தகைய உயர்ந்த நோயெதிர்ப்பு பிரதிபலிப்பை வெளிப்படுத்துகின்றன. இதன் கூடுதல் நோய் வெளிப்பாடுகளில் கடுமையான இருதய, இரைப்பை மற்றும் நரம்பியல் சேதம் போன்ற பல உறுப்பு செயலிழப்பினை ஒரு உபவிளைவாகவும் அல்லது தொற்றுபவரை கொல்லக்கூடிய பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகியவை அடங்கும்.

வைரஸ் இரத்த நாளங்களில் கடுமையான அழற்சியை ஏற்படுத்தக்கூடும், இரத்தம் உறைவதை ஏற்படுத்துவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்பதும் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது, பக்கவாதம், நுரையீரல் தக்கையடைப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறு குழந்தைகளில் கவசாகி போன்ற நோய் போன்ற வெளிப்பாடுகளுக்கு வழிவகுக்கும். SARS-CoV-2 பற்றி இன்னும் அதிகமானளவு அறியப்படவில்லை.

ஒரு தடுப்பு மருந்தை தயாரிப்பதில், விஞ்ஞானிகள் SARS-CoV-2 வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு கலங்களை உருவாக்க உடலின் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்ட முயற்சிக்கின்றனர். அதனூடாக தொற்றுநோயை தடுக்க அல்லது குறைக்க முனைகின்றார்கள். இந்த வேலையின் நோக்கம் மிகவும் பல்முகத்தன்மை கொண்டதாகும். இது தடுப்பூசி இலக்குகளுக்கான வைரஸை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும், தடுப்பூசியின் வடிவமைப்பு மற்றும் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை தீர்மானிக்க நெறிமுறைகள் தேவை. இவை வழக்கமாக விலங்குகளில் சோதனை செய்வதன் மூலம் தொடங்கப்படுகின்றன. அவை முன்கூட்டிய பரிசோதனைகள் என்றும் அழைக்கப்பட்டு, அங்கு ஆரம்பத்தில் எலிகள் போன்ற பொருத்தமான மாதிரிகளுக்கு தடுப்பூசி இடப்பட்டு வைரஸை எதிர்கொள்ள செய்யப்படுகின்றன.

இந்த ஆரம்ப விசாரணைகளில் வெற்றி பெற்ற பின்னர் 1 ஆவது கட்டமாக மனித பரிசோதனைகளை வடிவமைப்பதற்கு அதன் செயல்திறனை சரிபார்க்க மருந்து பாதுகாப்பானதா என்பதை தீர்மானிக்க ஆரோக்கியமான தன்னார்வத்துடன் முன்வருபவர்களுக்கு தடுப்பூசி அதிகரிக்கும் அளவுகளில் வழங்கப்படுகிறது. 2 ஆம் கட்ட மற்றும் 3 ஆம் கட்ட சோதனைகள் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை சரிபார்க்கும் பெரிய சோதனைகள் செய்யப்படும். ஒரு பரிசோதிக்கப்பட்டவரில் தடுப்பூசி வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், அது உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான உரிமம் பெற்று, மருந்துகளின் நீண்டகால விளைவுகளை மதிப்பிடுவதற்கு நீண்டகால 4 ஆம் கட்டத்திற்கு பிந்தைய சந்தைப்படுத்தல் கண்காணிப்பில் நுழைகிறது. அந்த நிகழ்முறையானது மிகவும் சிக்கலானதுடன், ஒரு சில தடுப்பூசிகளே அனுமதியை பெறுகின்றன.

அரசியல்வாதிகள் மற்றும் பல விஞ்ஞானிகள் 12 முதல் 18 மாதங்களுக்குள் ஒரு தடுப்பூசி தயாரிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் ஊகித்திருந்தாலும், இது ஒருபோதும் செய்யப்படவில்லை மற்றும் வெறும் தத்துவமாகவே உள்ளது. எவ்வாறாயினும், இதுபோன்ற அறிக்கைகள் ஃபாக்ஸ் நியூஸில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த வாதங்களை ஆதரிக்கின்றன: "இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்." என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நவீன விஞ்ஞானத்தின் சகாப்தத்தில் கூட அதன் சக்திவாய்ந்த விசாரணைக் கருவிகளைக் கொண்டுள்ளபோதும், இந்த அறிக்கைகள் ஒரு சுவாசநோய் தடுப்பூசியை தயாரிப்பதில் உள்ள புறநிலை சிக்கல்களை முற்றிலும் புறக்கணிக்கின்றன. பல தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஒருபோதும் உரிமம் பெறும் மற்றும் உற்பத்தி கட்டத்தைக்கூட எட்டாது. கூகைக்கட்டு (mumps) தடுப்பூசியே இதுவரை தயாரிக்கப்பட்டவற்றில் மிக விரைவானதாக இருந்தது. 1960 களில் உருவாக்கப்பட்ட இதற்கு நான்கு ஆண்டுகள் எடுத்தது.

தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை முறையாக பரிசோதிக்க கணிசமான நேரம் அவசியம். ஏனெனில் மனித உடல் நம்பமுடியாத சிக்கலான அமைப்பு மற்றும் பிரச்சினைகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகலாம். 2003 ஆம் ஆண்டில் SARS வெடித்தபோது, ஒரு தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டவர் மனித உடலில் நோய் ஆபத்தான முறையில் அதிகரித்ததன் விளைவாக அதனை அபிவிருத்திசெய்வதை கைவிட வேண்டியிருந்தது.

டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள பேலர் பல்கலைக்கழகத்தின் வெப்பமண்டல மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் பீட்டர் ஹோட்டெஸின் கூற்றுப்படி: “ஒரு வருடத்திலிருந்து 18 மாதங்கள் வரை என்று கூறுவது முன்னோடியில்லாததாக இருக்கும்… புதிய தொழில்நுட்பத்துடன், போதுமான பணத்தை இறைத்தால், அது நடக்கும். ஆனால் அந்த நேரகால மதிப்பீடுகளைப் பற்றி நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

Translational Research Institute (TRI) இன் தலைவரும், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இயன் ஃப்ரேசர், ஆஸ்திரேலிய ABC செய்திநிறுவனத்திடம் எந்தவொரு கொரோனா வைரஸுக்கும் ஒருபோதும் பயனுள்ள தடுப்பூசி தயாரிக்கப்படவில்லை. இது ஒரு “தந்திரமான” முயற்சியாக அமைந்தது என்று கூறினார். கர்ப்பப்பை, வாய் புற்றுநோயை தடுக்கும் மனித Papilloma தடுப்பூசியை இந்த நிறுவனம் இணைந்து கண்டுபிடித்தது.

கொரோனா வைரஸ் மேல்-சுவாசக் குழாயைத் தாக்குகிறது. அங்கு நோயெதிர்ப்பு அமைப்பு ஒப்பீட்டளவில் பலவீனமாக உள்ளது. தடுப்பு மருந்தை குறிவைப்பதற்கு இது ஒரு மிகவும் கடினமான இடமாகும்.

"நீங்கள் விரும்பினால் இது ஒரு தனி நோயெதிர்ப்பு அமைப்பு எனக்கூறலாம். இது தடுப்பூசி தொழில்நுட்பத்தால் எளிதில் அணுகமுடியாது ... இது உங்கள் தோலின் மேற்பரப்பில் ஒரு வைரஸைக் கொல்ல தடுப்பூசி பெற முயற்சிப்பது போன்றது" என்று ஃப்ரேசர் கூறினார்.

இந்த கடினமான இலக்கை அடைய, பல்வேறு ஆராய்ச்சி ஆய்வகங்களால் பல மூலபாயங்கள் பின்பற்றப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக, 115 ஆராய்ச்சி குழுக்கள் பலவிதமான நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு தடுப்பூசியைத் தேடுகின்றன. ஆய்வகங்களில் எழுபத்திரண்டு சதவீதம் தனியார் மருந்தியல் நிறுவனங்களுடன் பணிபுரிகின்றன. சிறுபகுதி மட்டுமே பல்கலைக்கழகம் அல்லது மருத்துவமனை ஆய்வகங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. முக்கிய மருந்து நிறுவனங்களான Janssen, Sanofi, Pfizer, GlaxoSmithKline ஆகியவை ஆராய்ச்சிக்கு நிதியளிக்கின்றன.

இது முற்றிலும் திறமையற்ற மற்றும் வீணான செயல்முறையாகும். அவை ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியுள்ளபோது பல்வேறு ஆய்வகங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன. இது விஞ்ஞானம் தொடர்பான ஒரு சந்தை அணுகுமுறையின் விளைவாகும். இது ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள ஒற்றுமையுடன் செயல்படுவதைத் தடுக்கிறது.

முக்கியமான விடயம் என்னவென்றால், உயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இலாப நோக்கம் உயிர் இழப்புக்கு வழிவகுக்கிறது. ஏனெனில் வெற்றிகரமான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் தாமதம் தொற்றுநோயினால் தொடர்ந்து பேரழிவிற்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக விஞ்ஞானிகள் மீதான போட்டி அழுத்தங்கள் மிகப் பெரியவை. அவை தோல்விகளுக்கு வழிவகுக்கும் அல்லது பாதுகாப்பில் சமரசம் செய்யக்கூடிய குறுக்குவழிகளை எடுக்க நிர்பந்திக்கப்படும்.

இந்த அழுத்தம் மிகவும் தீவிரமானது. மாசசூசெட்ஸ், கேம்பிரிட்ஜ் தளமாகக் கொண்ட Moderna Therapeutics விலங்கு சோதனை முடிவடைவதற்கு முன்பு, மார்ச் 16 அன்று 1 ஆவது கட்ட மனித சோதனைகளைத் தொடங்கியது. "இதை ஒரு விலங்கு மாதிரியில் நிரூபிப்பது ஒரு மருத்துவ சோதனைக்கு வருவதற்கான முக்கியமான பாதையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை" என்று Moderna தலைமை மருத்துவ அதிகாரி Tal Zaks கூறினார்.

பல ஆய்வகங்கள் 1 ஆவது கட்ட பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளன. இதில் சீனாவில் மூன்று மற்றும் ஒன்று அமெரிக்காவை தளமாகக் கொண்டது. சர்வதேச அளவில் பல்வேறு மூலோபாயங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்த நுட்பங்கள் பல மிகவும் ஊகமானது மற்றும் விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு தடுப்பூசியை வெற்றிகரமாக தயாரிக்கவில்லை.

அனைத்து தடுப்புமருந்துகளும் ஏதோ ஒரு வகையில் தொற்றுபவரின் மீது தாக்குதல் நடத்துவதற்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டவை. பழமையான தொழில்நுட்பங்களில் ஒன்றில், வைரஸை செயலற்றதாக்கிவிட்ட பின்னர் உடலில் செலுத்தப்படுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பு நோய்த்தொற்றுடைய நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்ட புரதங்களுக்கு பிரதிபலிப்பை காட்டி, நோயெதிர்ப்புகலங்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. ஷாங்காயை தளமாகக் கொண்ட சீன நிறுவனமான Sinopharm இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி மற்றும் 2 ஆம் கட்ட சோதனைகளுக்கு முன்னேற உரிமம் பெற்றுள்ளது.

முழு வைரஸையும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு புரதத்தைப் பயன்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை பெறமுடியும் என்பதை விஞ்ஞானிகள் மிக சமீபத்தில் உணர்ந்தனர். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி தடுப்பூசிகள் தயாரிப்பது எளிதானது மற்றும் தற்போதுள்ள பல தடுப்பூசிகளை தயாரிக்க இந்த முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு சீனாவில் தியான்ஜின் நகரைச் சேர்ந்த சீன நிறுவனமான CanSino, ஒரு 1 ஆவது கட்ட சோதனையைத் தொடங்கி, ஸ்பைக் புரதமான Ad5-nCoV ஐப் பயன்படுத்துகிறது. இப்புரதத்தை வைரஸ் தொற்றுக்குள்ளாவரின் கலத்தில் ஊடுருவ பயன்படுத்துகிறது. ஒரு பயனுள்ள தடுப்பூசியை தயாரிக்க நிறுவனம் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்ட ஒரு ஆராய்ச்சி குழு ஸ்பைக் புரதத்தைப் பயன்படுத்துவதுடன் மற்றும் 1 ஆம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

Moderna போன்ற நிறுவனங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்ட DNA அல்லது RNA இனை செலுத்துகின்றன. இந்த சோதனை தடுப்புமருந்து விலங்குகளில் நேர்மறையான பிரதிபலிப்பை காட்டுகின்றது, ஆனால் மனிதர்களில் பயனற்றது என்பதை நிரூபித்துள்ளது. விஞ்ஞானிகள் தொடர்ந்து இந்த நுட்பத்தைத் தொடர்கின்றனர், ஏனெனில் இதுபோன்ற தடுப்புமருந்துகள் தயாரிப்பது எளிதாக இருக்கும்.

பேய்லர் பல்கலைக்கழகத்தின் தேசிய வெப்பமண்டல மருத்துவப் பள்ளியின் இணை பேராசிரியர் Maria Elena Bottazzi கூறுகையில், “DNA தளத்தைப் பயன்படுத்தி எச்.ஐ.வி தடுப்பூசிகளுக்கு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் நீங்கள் பார்த்தால், DNA மூலக்கூறுகளை சரியான கலத்திற்குள் எவ்வாறு செலுத்தவேண்டும் என்பதற்கான சரியான சூத்திரத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ... இது கொஞ்சம் இருண்ட விஞ்ஞானம். அதனால்தான் அவை இன்னும் பரசோதனைக்குரியவையாக உள்ளன.”

பென்சில்வேனியாவின் Plymouth Meeting நகரிலுள்ள Inovio Pharmaceuticals இதேபோன்ற முறையின் அடிப்படையில் ஒரு தடுப்பூசியை உருவாக்கி, 1 ஆவது கட்ட பரிசோதனைகளில் உள்ளது.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், டச்சு குழுவான Viroclinics Xplore உடன் இணைந்து, “molecular clamp” என்று அழைக்கப்படும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. இது காமன்வெல்த் விஞ்ஞானம் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு (CSIRO) உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. நோயெதிர்ப்பு பதிலைத் தூண்டுவதற்கு molecular clamp தொழில்நுட்பத்திற்கு வைரஸின் செயற்கை பதிப்பைப் பயன்படுத்துகிறது.

இந்த molecular clamp தொழில்நுட்பம் காப்புரிமை பெற்றது. இது விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் வணிகமயமாக்கலை எடுத்துக்காட்டுகிறது

இதற்கு மாறாக, 1960 களில் போலியோ தடுப்பூசியை உருவாக்கிய சிறந்த விஞ்ஞானி ஜோனாஸ் சால்க் இடம், “காப்புரிமை யாருக்கு சொந்தமானது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு சால்க் பதிலளித்தார், “மக்களுக்கே சொந்தமானது என்று நான் சொல்வேன். காப்புரிமை இல்லை. நீங்கள் சூரியனுக்கு காப்புரிமை பெற முடியுமா?” என்றார்.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் ஒரு அரசாங்க நிறுவனம் என்றாலும், அது நிதி வறுமையில் உள்ளது. அது விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற வேண்டும், அது மனிதகுலத்தின் நலனுக்காக இருக்க வேண்டுமே தவிர இலாபத்திற்காக இருக்கக்கூடாது. காப்புரிமை போன்ற வணிக ஏற்பாடுகள் விஞ்ஞான ஆராய்ச்சியைத் தடுப்பதை விளைவாகக் கொண்டுள்ளன.

ஒரு வெற்றிகரமான தடுப்புமருந்து எப்போது தயாரிக்கப்படும் அல்லது தயாரிக்கப்படுமா என்பது யாருக்கும் தெரியாது. அது சர்வதேச அளவில் பயன்படுத்துவதற்கு வெளியிடப்பட வேண்டும். இது ஒரு சாதாரண செயல்முறையாக இருக்காது.

விகிதாசாரத்திற்கு பொருந்தாத முறையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட உலகம் முழுவதும் உள்ள வறிய மக்களுக்கு இந்த தடுப்பூசி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உலக மக்கள்தொகையை பாதுகாப்பதற்கு பில்லியன் கணக்கான அளவுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கப்படுவதற்கான கைமாறாக அரசியல் பிரதியுதவிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் பூகோளஅரசியல் கவனங்களும் ஒரு காரணியாக இருக்கலாம் என்பதையும் விவாதத்திற்கு எடுக்கலாம்.

மேலும், தடுப்புமருந்துகளுடன் தயாராக உள்ள நாடுகளுடன் உயிரியல் ஆயுதங்கள் இனி விஞ்ஞான புனைகதை எழுத்தாளர்களின் புத்தகங்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்காது.

புதிய தடுப்புமருந்து தொழில்நுட்பங்களுக்கு, பாரிய உற்பத்தி முறைகள் உருவாக்கப்பட வேண்டியிருக்கும். இது சிகிச்சையை விலை உயர்ந்ததாகவும், ஏழை மக்களுக்கு எட்டாததாகவும் இருக்கும்.

யார் தடுப்புமருந்து பெறுகிறார்கள் என்பதில் புவிசார் அரசியல் போட்டியும் நடைமுறைக்கு வரும். ஒரு தடுப்புமருந்தை ஆராய்ச்சி செய்யும் பெரும்பாலான வசதிகள் அமெரிக்காவில் உள்ளன. மார்ச் மாதத்தில், அது தயாரிக்கும் எவ்விதமான தடுப்புமருந்துகளினதும் தனி உரிமைக்காக அமெரிக்க அதிகாரிகள் ஜேர்மனிய மருந்து நிறுவனமான CureVac வாங்க முயற்சித்ததாக தகவல்கள் வெளிவந்தன.

"அமெரிக்கா அதிகமான தடுப்புமருந்தை அபிவிருத்தியை செய்து வருவதால், அவர்கள் எங்களை (ஆஸ்திரேலியாவை) வரிசையில் நிற்கவைக்கப் போகிறார்கள் ... அவர்கள் முதலில் தங்களை கவனிக்கப் போகிறார்கள்" என்று டாக்டர் கிரெய்க் ரெய்னர் கூறினார். இவர் மருந்தியல் நிறுவனங்களான Roche மற்றும் CSL இன் முன்னாள் நிர்வாகியும், இப்போது Certara வில் ஒருங்கிணைந்த மருந்து மேம்படுத்தல் தலைவருமாவார்.

ஒருவருக்கொருவர் போட்டியிடும் 115 ஆராய்ச்சி ஆய்வகங்கள் இருப்பது ஒரு பயனுள்ள தடுப்பூசியின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்காது. உண்மையில், விஞ்ஞானிகள் ஒரே முடிவுக்கு வருவதற்கு பல்வேறு முறைகளைப் பயன்படுத்துவதால், இது மிகவும் வீணானது.

ஆராய்ச்சி எவ்வாறு அணுகப்படுகிறது என்பது குறித்து ஒரு பகுத்தறிவான திட்டமும் தொழிற் பங்கீடும் இருக்க வேண்டும்.

ஆராய்ச்சி நிறுவனங்கள் மருந்தியல் பெருநிறுவனங்கள் மற்றும் சந்தையின் கட்டுப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டு பொது உரிமையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோர வேண்டும். இதனால் விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவுகள் மற்றும் அதன் விளைவாக வரும் தடுப்பூசிகள் உலக மக்களுக்கு இலவசமாகக் கிடைக்க கூடியதாக இருக்கும்.

Loading