தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்ற நிலையில் அரசாங்கம் தொழிலாளர்களை பணிக்கு திரும்பும்படி நெருக்குகின்றது

தமிழ் நாட்டின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.தி.மு.க.) அரசாங்கம், மே 18 இலிருந்து மாநில அரசாங்க ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும், தொழில் நிறுவனங்கள் செயல்படலாம் மற்றும் பேருந்துகள் இயங்கலாம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஒவ்வொரு நாளும் 700 பேருக்கும் அதிகமானோர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், வேலைக்குத் திரும்புவதற்கான இந்த அழைப்பானது மிகப் பாரதூரமான விளைவுகளுடன் தொற்று நோய் மாநிலம் முழுதும் பரவுவதற்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் மோடி அரசாங்கத்தின் ஊரடங்கு தளர்வு விதிகளுக்கு உட்பட்டதான இத்தகைய அறிவிப்புகள், இந்தியாவிலும் உலகம் முழுதும் உள்ள முதலாளித்துவ வர்க்கமும் அவற்றின் அரசாங்கங்களும், தொழிலாள வர்க்கத்தின் உயிர் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக வெளிப்படுத்திவரும் தொடர்ச்சியான குற்றவியல் அலட்சியத்தின் பாகமாகும்.

உழைக்கும் மக்களின் உயிர்வாழ்வானது, பெரும் வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் இலாபத் தேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற முதலாளித்துவ வர்க்கத்தின் வலியுறுத்தலில் இருந்தே எழுகின்றது.

மே 27 அன்று தமிழ் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளதுடன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேவேளை 133 பேர் மரணித்துள்ளனர்.

முதலாம் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 1,45,000 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு 4,337 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலைமையில், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனிக் கடைகள் என பல்வேறு வணிக நடவடிக்கைகளை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அரசாங்கம் அனுமதித்திருப்பது, வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லூநர்கள் எச்ரிக்கின்றார்கள்.

மோடியின் அரசாங்கமும் அதன் சார்பு ஊடகங்களும் தங்களது குற்றவியல் பொறுப்பை நியாயப்படுத்த, அமெரிக்காவில் 25 நாட்களுக்குள் ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் ஆனால் இந்தியாவில் 64 நாட்களுக்கு பிறகே ஒரு இலட்சத்தை தாண்டியதாகவும் பெருமையடித்துக் கொண்டிருக்கின்றன. இதைப் பின்பற்றிக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து, பின்னர்தான் குறையும் என கண்டறியப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டார்.

கோவிட்-19 வைரஸ் தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் பரவியுள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,645 ஆக உள்ளது. அதே வேளை 5,906 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 80 சதவீதமானோர் சென்னையை சேர்ந்தவர்களாவர்.

உண்மையில், மருத்துவ பரிசோதனைகள் தாமதமாகவும் குறைந்த எண்ணிக்கையிலுமே செய்யப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருந்தொகையில் அதிகரிக்கின்றமை, தொற்றுக்குள்ளான பிரமாண்டமான எண்ணிக்கையானவர்கள் சமூகத்தில் வைரஸை பரப்பிக்கொண்டிருக்கின்றனர் என்பதற்கான பாரதூரமான அறிகுறியாகும். இதுவரை சென்னையில் 10 இலட்சம் பேருக்கு 14,000 பேரே பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையில் பழனிசாமி சனிக்கிழமை சேலத்தில் வைத்து ஊடகங்களுக்கு உரையாற்றிய போது, சென்னையில் சமூகப் பரவல் இல்லை என கூறிக்கொண்டார். சென்னையில் சிறிய வீடுகளில் ஆறு ஏழு பேர் ஒரே வீட்டில் நெருக்கமாக வாழுகின்ற பகுதிகளில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறிய அவர், “அவர்கள் முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்த பரவல் ஏற்பட்டிருக்காது” என வஞ்சத்தனமாக குற்றம்சாட்டினார்.

இலட்சக்கணக்கான மக்கள் சேரிப்புறங்களில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் அற்ற இத்தகயை இழிநிலையிலான குடிசைகளில் வாழத் தள்ளப்பட்டுள்ளமைக்கு தசாப்த காலங்களாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த பழனிசாமியின் அ.தி.மு.க.வும் பொறுப்பாளியாகும்.

தமிழ்நாடு அரசாங்கம், மீண்டும் மீண்டும், போதுமான அளவு தனிப்பட்ட மருத்துவ பாதுகாப்பு கருவிகள் (PPE), மற்றும் என்95 முகக்கவசங்களை வைத்திருப்பதாகக் கூறி வருகின்ற போதிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், அரசாங்கத்தின் கூற்றுக்களை நிராகரித்துள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முதுகலை மருத்துவர்கள், வைரஸால் பாதிக்கப்பட்டு பின்னர் அதே பிபிஇ யை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததை வெளிப்படுத்தியிருப்பதாக www.newsclick.in ஊடக வலைத்தளம் குறிப்பிட்டிருக்கிறது.

கொரோனா நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அதிகாரிகள் என பலர் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் கோவிட்-19 வார்டுகளுக்கு செல்லும் மருத்துவர்கள் மட்டுமே பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்துவதாகவும், அதே கட்டிடத்தில் இருக்கும் மற்ற நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படுவதில்லை எனவும் newsclick.in ஊடகத்திற்கு கூறியிருக்கிறார்கள்.

அரசாங்கம் கடந்த அக்டோபரில் சிறந்த சம்பளம், பணிநிரந்தரம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண் மருத்துவர்கள் உட்பட 120 மருத்துவர்களை சென்னையை விட்டு வெகுதூரத்திற்கு பணிமாற்றம் செய்தது. இந்த இக்கட்டான நேரத்தில் மருத்துவர்களின் தேவையிருக்கும் பட்சத்திலாவது அரசாங்கம் அவர்களை மீண்டும் இங்கே சேர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் அரசு மருத்துவர்களை புகழ்வதுபோல் பேசினாலும் பின்னால் அவர்கள் நடத்திய போராட்டங்களுக்காக அவர்களை தண்டிப்பதில் உறுதியாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு தற்போதுவரை 68 ஆய்வுக்கூடங்கள் செயல்பட்டுவருகின்றன. அதில் 28 தனியார் மருத்துவமனை ஆய்வகங்களும் அடங்கும். பரிசோதனை கட்டணமான 4,500 ரூபாவை தனியார் மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்கு அரசாங்கம் செலுத்துவதாக கூறினாலும் அங்கு வரும் நோயாளிகளிடம் பதிவு கட்டணம் மற்றும் பரிசோதணை முடிவு வர இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டும் மற்றும் தனிப்பட்ட மருத்துவ கருவிகள் (PPE), பிற சோதணைகள் மற்றும் மருந்துகள் என குறைந்தது நாளொன்றுக்கு 60,000 ரூபாவுக்கும் அதிகமாக வசூலிக்கின்றனர். இந்த கட்டணம் பல்வேறு மருத்துவமனைகளில் சிறு அளவுகளில் வேறுபட்டாலும் பாதிக்கப்படும் ஏழைகளுக்கோ அல்லது உழைக்கும் மக்களுக்கோ இத்தகைய வசதிகளைப் பெறமுடியாது.

வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஏப்ரல் 24 அன்று திடீரென சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களில் 4 நாட்கள் தீவிர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்த உடன், அதிகமான மக்கள் எந்த சுகாதார பாதுகாப்பும் இன்றி காய்கறிகளை வாங்குவதற்கு கோயம்பேடு சந்தைக்கு வந்திருந்தார்கள். மே 5 சந்தை வளாகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட பின்னரே அந்த சந்தை முழுமையாக மூடப்பட்டது. இதற்கு வியாபாரிகள் மீது குற்றம்சாட்டிய பழனிச்சாமி, வியாபாரிகள் சங்கம் ஒத்துழைக்காததால்தான் கோயம்பேடு வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது, என்றார்.

இங்கு பணிபுரிந்த, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரியாத பல்வேறு மாவட்டங்களிலிருந்து வேலைக்கு வந்த ஏழைக் கூலித் தொழிலாளர்கள், தங்கள் ஊர்களுக்கு போகமுடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். அதன் பின் அங்கு வந்துபோன லாறிகளில் ஏறி ஊர்களுக்கு போய் சேர்ந்துள்ளார்கள். இதனால் தமிழ்நாட்டின் பாதி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசாங்கமும் தமிழ்நாட்டில் அதிமுக அரசாங்கமும் முன்கூட்டித் திட்டமிடாமல் விடுத்த அறிவிப்புகளாலேயே மக்கள் அதிகளவில் பொது இடங்களில் கூடுகின்ற நிலமை ஏற்பட்டிருந்தது.

கோயம்பேடு மொத்த சந்தை வளாகமானது ஆசியாவில் மிகப் பெரிய காய்கறி மொத்த வணிக வளாகங்களில் ஒன்றாகும். 295 ஏக்கர் அதன் நிலப்பரப்பில் 65 ஏக்கரில் 3,941 கடைகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் என அனைத்தும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கே வந்து சுகாதாரமற்ற நிலைமைகளின் கீழ் தொழில் செய்கின்றனர்.

பொதுவாக கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 நோய்தொற்று கண்டுபிடித்தால் அவரோடு தொடர்புடையவர்களை கண்டுபிடித்து 20 இலிருந்த 30 நபர்களை பரிசோதித்தால் போதும் என்று அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருந்த இடத்தில் தற்போது கோயம்பேடு சந்தையில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புபட்டவர்களாக 200 இலிருந்து 250 நபர்களாக இருப்பது பரிசோதனையில் மிகப் பெரும் சவாலாக இருக்கிறது என்று திஇந்து பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறது.

சென்னையில் தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியான வடசென்னையில் ராயபுரம், திருவிகநகர் போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பிரதேசங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாத அளவுக்கு ஒரு சதுரக் கிலோமீட்டரில் 55,000க்கும் அதிகமான மக்கள் மிக நெருக்கமாகவும் சுகாதார வசதிகளற்ற மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அங்கே குறுகலான சந்து, நெருக்கமான சிறிய அறைகளைப் போல உள்ள வீடுகளே அதிகம் காணப்படுகின்றன. அதைப் போன்று ஏழைகள் அதிகமாக செறிந்து வாழும் கண்ணகி நகரிலும் தற்போது கொவிட்-19 பரவிக்கொண்டிருக்கின்றது.

அதிகமான துப்புரவு பணியாளர்களும் இந்தப்பகுதிகளிலிருந்துதான் வேலைக்கு செல்கிறார்கள் என tamil.news18.com குறிப்பிட்டுள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பணி செய்வதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படவில்லை. மே 8 அன்று, ராயபுரம் பகுதியில் 58 வயதான மாநகராட்சி துப்புரவு பணியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். மே 26 அன்றைய நிலவரப்படி ராயபுரம் பகுதியில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000 ஐ கடந்து விட்டது.

பணிநிரந்தரம், சம்பள உயர்வு, பாதுகாப்புக் கருவிகள் வேண்டி அவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை. கொரோனா வைரஸ் பரவுகின்ற இந்த சமயத்தில் அவர்களின் பல நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிய தமிழக அரசு இனிமேல் அவர்களை துப்பரவு பணியாளர்கள் என்பதற்கு பதிலாக தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பழனிச்சாமி அரசாணை வெளியிட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை குப்பையில் போட்டுவிட்டார். சென்னையில் 64,000 க்கும் அதிகமான துப்புரவுப் பணியாளர்கள் பணியிலீடுபட்டிருக்கிறார்கள்.

ஒப்பந்த ஊழியர்களான இத்தகைய தொழிலாளர்களுக்கு மரணித்தால் அரசாங்கம் அறிவித்திருக்கும் சிறு உதவிகூட கிடைப்பதில்லை. துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்கள் தமிழகத்திலேயே அதிகம் நடப்பதாக தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி ஏற்கனவே துப்புரவு பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டமொன்றில் கூறியிருக்கிறார்.

இத்தகைய சூழ்நிலையில் துப்புரவுப் பணியை தனியார்மயப்படுத்தி வரும் அரசாங்கம், சென்னையில் பல பகுதிகளை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. கோரோனா பரவலைத் தடுப்பதில் முக்கிய பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை மதிப்பதைப் போல் வீடியோக்களை வெளியிட்டாலும், உண்மையில் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலும் மருத்துவ பாதுகாப்பு மற்றும் அவசியமான உபகரணங்கள் ஏதுமில்லாமலேயே வேலை செய்கிறார்கள்.

தமிழ்நாட்டு அரசாங்கம் பல ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளர்களை ஒப்பந்த தொழிலாளர்களாகவே வைத்திருப்பதால், கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட சிறியளவிலான சிறப்பூதியம் பெறுவதற்கும் முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அண்மையில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் துப்புரவுப் பணியாளர்கள் சிறப்பு ஊதியத்திற்காகவும், பணிநிரந்தரம் கோரியும் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

உயிரைக் கொல்லும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான வெகுஜனப் பரிசோதனை, தனிமைப்படுத்தல், தனிமனித இடைவெளி பேணுதல் மற்றும் கைகளை கிருமிநாசினிகொண்டு கழுவுதல் உட்பட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பத்தில் பசாங்குத்தனமாக செய்துவிட்டு, தற்போது 60 நாட்களை கடந்திருக்கும் நிலையில் அவற்றை அலட்சியம் செய்து மக்களை வணிக நலன்களுக்கு பலியாக விட்டிருக்கிறது.

நோய் தொற்று கண்டுபடிக்கப்பட்ட ஆரம்பத்தில் சமூக இடைவெளிமுறையை காவல்துறை, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைக்கொண்டு பராமரிப்பதாக கூறிய அரசாங்கம், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அந்தப் பகுதி முழுவதையும் தனிமைப்படுத்தாமல் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளை மட்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது. இது தொற்று நோய் பரவுவதற்கே வழிவகுக்கும்.

மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறிவருகிறது. சென்னை அரசு மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பிவழிவதால், சென்னை வர்த்தக மையம், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றையும் அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருப்பாதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் வெளியில் சென்று வருவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் கவனக்குறைவாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் 60க்கு மேற்பட்ட காவல்துறையினர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. அதனால் அதிகரித்துவரும் தனிமைப்படுத்தும் பகுதிகளை பாதுகாக்க காவல்துறையினர் பற்றாக்குறையாக இருக்கும்படசத்தில் காவல்துறையினர் மத்தியிலும் அச்சம் நிலவிவருகிறது.

கொரோனாவினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பினை சரிசெய்ய மத்திய அரசிடம் கேட்ட தொகையை பெறமுடியாத பட்சத்தில், ஏனைய பா.ஜ.க. ஆட்சிசெய்யும் மாநிலங்களைப் போல் அதிமுக அரசாங்கமும் மதுக் கடைகளை மே 7 அன்று திறந்துவிட்டு மக்களை கூட்டங்கூட்டமாக நெரிசலாக நிற்க அனுமதித்துள்ளது.

எதிர் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிகளும் மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிராக முன்னெடுக்கும் பிரச்சாரம் தேர்தலை இலக்காகக் கொண்டதாகும். தமிழ்நாட்டின் பல மது உற்பத்தி தொழிற்சாலைகள் திமுகவின் பெரும் பணக்கார அரசியல்வாதிகளின் ஆதரவுடனேயே செயல்பட்டுவருகின்றன.

புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சரியான சாப்பாடு இல்லை, பணமில்லை, பாதுகாப்பில்லை, வேலையில்லை போன்ற பிரச்சனைகளைக் கூறி, தங்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கூடங்குளத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை முன்வைத்து காவல்துறையினரைத் தாக்கும் அளவுக்கு புலம் பெயர் தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்துள்ளது.

“நாங்கள் தளர்வுகள் பற்றியும் புலம்பெயர்ந்தவர்களை திரும்ப அனுப்புவதை பற்றியும் பேசுகிறோம். ஆனால் அதைவிட முக்கியம் நாம் வைரஸுடன் வாழப் பழகவேண்டும்” என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியிருக்கின்றார். இது இராட்சத தொழில் நிறுவனங்களின் இலாப நலன்களுக்காக, மக்கள் வைரஸை உடலில் தாங்கிக்கொண்டு வேலைக்குச் செல்ல வேண்டும், முதலாளித்துவ இலாபத்துக்காக தொழிலாளர்கள் உயிரை கொடுக்கவும் தயாராக வேண்டும் என்று உலகம் பூராவும் ஆளும் வர்க்கங்களின் நிலைப்பாட்டை வலியுறுத்துவதாகும்.

இந்தியாவின் பிற மாநிலங்களைப்போல் தமிழ்நாட்டில் இவ்வாறான நிலைமகைளின்கீழ் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உணவுகளை வழங்காமல் அதிமுக அரசாங்கம் அவர்களை வறுமைக்குள் தள்ளுகிறது. தொழிலாளர்களை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்துவது கொடிய கொரோனா வைரஸ் பரவும் என்ற மருத்துவ நிபுணர்களின் கூற்றுக்களையும் மறுத்து செயல்படுவதானது பெரும்பான்மை மக்களின் உயிர்கள் மீதான அரசாங்கத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

Loading