அமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலும் நிகழ்ந்த கோவிட்-19 இறப்பு எண்ணிக்கைகளின் துல்லியத்தன்மை குறித்து அறிக்கைகள் கேள்வி எழுப்புகின்றன

By Bryan Dyne
29 May 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் நோய்தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையிலும் கூட, பிரேசில், இந்தியா, ரஷ்யா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட உலகெங்கிலுமுள்ள நாடுகள் தமது மக்களை மீண்டும் வேலைக்கு திரும்பும்படி தொடர்ந்து நிர்ப்பந்தித்து வரும் நிலையில், தொற்றுநோயின் காரணமாக இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கைகளை போல மும்மடங்கு வரை அதிகமாக இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.

People wearing protective gear, perform the last rituals as they cremate the body of a patient who died of COVID-19 in Jammu, India, Thursday, May 14, 2020. (Image Credit: AP Photo/Channi Anand)

கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றும் நிமோனியா நோயாளிகள் பற்றிய அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு (Centers for Disease Control and Prevention - CDC) மையங்களின் தரவுகள் மிகவும் வெளிப்படையானவை. நிமோனியா காய்ச்சல் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 30,000-60,000 வரையில் மக்களை பலி கொள்கிறது. என்றாலும், இந்த ஆண்டு பெப்ரவரி முதல் மே மாதம் மத்தி வரை நிமோனியாவின் காரணமாக 89,555 பேர் இறந்ததாக பதிவாகியுள்ளது. மோசமான நோயாளிகளைப் பொறுத்தவரை கொரோனா வைரஸின் தாக்கம் நிமோனியாவை பலவீனப்படுத்தக்கூடும் என்பதுடன், நிமோனியாவால் ஏற்படும் பல இறப்புக்கள் பெரும்பாலும் கோவிட்-19 உடன் தொடர்புபட்டுள்ளன.

இதேபோன்ற விளைவை தனிப்பட்ட மாநிலங்களின் இறப்பு எண்ணிக்கைகளிலும் காணலாம். இல்லினாய் மாநிலத்தில், கோவிட்-19 இறப்புக்கள் 4,856 என்றும், அதே நேரத்தில் நிமோனியா இறப்புக்கள் 2,149 என்றும் CDC பதிவு செய்துள்ளது, இது ஐந்தாண்டு சராசரியை போல ஐந்து மடங்குகள் அதிகமானது. ஓஹியோவில், கொரோனா வைரஸூக்கு 1,969 பேர் பலியாகியுள்ளனர் என்றும், நிமோனியாவுக்கு 2,327 பேர் பலியாகியுள்ளனர் என்றும் பதிவாகியுள்ளது, இது ஐந்தாண்டு சராசரியை காட்டிலும் 1,507 கூடுதலானது.

மேலும் ஃபுளோரிடாவில், கோவிட்-19 இறப்புக்கள் 1,762 ஆக உள்ளது, அதே நேரத்தில் நிமோனியா இறப்புக்கள் 5,185 ஆக உள்ளது, இம்மாநிலம் கொரோனா வைரஸ் கண்காணிப்பு தளத்தை உருவாக்கிய அரசு ஊழியர் ஒருவரை சமீபத்தில் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதே காலகட்டத்தை சேர்ந்த ஐந்தாண்டு சராசரி என்பது வெறும் 918 மட்டுமேயாகும். அதிகப்படியான நிமோனியா இறப்புக்கள் உண்மையிலேயே கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்புக்களாக இருக்குமானால், அமெரிக்காவில் கோவிட்-19 நோய்தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட விகிதத்தைக் காட்டிலும் குறைந்தது இரு மடங்காக இருப்பது தெரிய வருகிறது.

இந்த நோய்தொற்று நாட்டின் கிராமப்புறங்களிலும் பரவி வருகின்றது. நியூயோர்க் டைம்ஸ் செய்தியிதழின் படி, அர்கன்சாஸ் மாநிலத்திலுள்ள Fayetteville-Springdale நகரத்தில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு 6.2 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிறது. அதேபோல, ஜியோர்ஜியா மாநிலத்திலுள்ள Milledgeville நகரத்தில் இறப்பு எண்ணிக்கை ஒவ்வொரு 5.2 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிறது. இந்த நோய்தொற்று பரவலுக்கு மத்தியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று பதிவிட்ட ஒரு ட்வீட்டில், “100,000 [இறப்புக்கள்] … என்பது வெறும் எண்ணிக்கையாக மட்டுமே தோன்றுகிறது,” என்று வலியுறுத்தினார்.

பல்வேறு பிராந்தியங்களில் நிகழ்ந்துள்ள “அதிகப்படியான இறப்புக்கள்” பற்றிய புதுப்பிக்கப்பட்ட விசாரணைகளின் படி பிற நாடுகளிலும் இதேபோன்ற புள்ளிவிபரங்களைக் காணலாம். அதாவது, கார்டியன், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பைனான்சியல் டைம்ஸ், தி ஹிந்து, ஆக்சியோஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தியிதழ்கள், ஒரு மருத்துவமனையில் இறந்து கோவிட்-19 நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்களை காட்டிலும், உலகெங்கிலுமுள்ள நகரங்கள், பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் எந்தவொரு காரணத்தினாலும் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கைக்கு இடையிலான இடைவெளியைக் கண்டறிந்ததுடன், அந்த தரவை அந்தந்த பிராந்தியத்தின் குறிப்பட்ட காலகட்டத்தின் வரலாற்று சராசரியுடன் ஒப்பிடுகின்றன.

இந்த நுட்பம், தொற்றுநோயின் காரணமாக இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை, மற்றும் கொரோனா வைரஸ் நோயாளிகளால் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறைகள் நிரம்பி வழியாமல் இருந்திருக்குமானால், உயிர்பிழைத்திருக்கக்கூடிய விபத்துக்கள் மற்றும் மற்ற வியாதிகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை, இரண்டையும் கணக்கிட்டு தொற்றுநோயின் தாக்கம் பற்றிய மிக துல்லியமான புள்ளிவிபரத்தை பெறுவதற்கு உதவுகின்றது. தற்போதைய நிலவரப்படி, இந்த தொற்றுநோய் உலகளவில் 5.6 மில்லியனுக்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை உருவாக்கியுள்ளது, அதிலும் இரண்டே வாரங்களில் 1 மில்லியன் அளவிற்கு நோயாளிகளின் அதிகரிப்பையும், மற்றும் 350,000 இறப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை ஆய்வின்படி, ஏப்ரல் மாதத்தில் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நிகழ்ந்த அதிகப்படியான இறப்புக்களின் எண்ணிகை 2,073 ஆகும், அல்லது இரு நகரங்களின் கோவிட்-19 இறப்புக்களின் கூட்டு எண்ணிகையான 629 ஐ காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும். இந்த இறப்புக்கள் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டவையாக கருதப்பட்டால், அது நாட்டின் இறப்பு எண்ணிக்கையை 3,807 இல் இருந்து 5,880 வரை அதிகரிக்கச் செய்யும். மாறாக, மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை, கொரோனா வைரஸ் இறப்புக்களுக்கு அதிகப்படியான இறப்புக்கள் நிகழ்ந்துள்ள விகிதத்தை வைத்து பெருக்கி கணக்கில் எடுத்தோமானால், ரஷ்யாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,421 ஆக இருக்கும்.

கார்டியன் பத்திரிகையில் வெளிவந்த இதேபோன்ற அறிக்கை, “நகரத்தின் நோயினால் இறந்தோரின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையுடன், கொரோனா வைரஸ் நோயாளிகளில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்ததை ஒப்பிடுகையில் அது பொருந்தவில்லை, ஏனென்றால் பிரேத பரிசோதனை அவர்கள் பிற காரணங்களால் இறந்துவிட்டதாகக் காட்டியது” என்று குறிப்பிடுகிறது. இந்த அறிக்கை முறை மேற்கு ஐரோப்பாவிலும் மற்றும் அமெரிக்காவிலும் கூட பயன்படுத்தப்பட்டுள்ளது.

துருக்கியின் தலைநகரம் அங்காரவிலிருந்து பெறப்பட்ட தரவின் அடிப்படையில் FT மேற்கொண்ட இதேபோன்ற பகுப்பாய்வு, நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை காட்டிலும் 25 சதவிகிதம் கூடுதலானது. எர்டோகன் அரசாங்கம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அடைப்பு நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு பின்னர் ஏப்ரல் 20 அன்று தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு உத்தரவிட்டது. இந்த கொள்கையினால் ஏப்ரல் மாதத்தில் மட்டும் குறைந்தது 103 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், தொழிற்சாலை தொழிலாளர்களிடையேயான கோவிட்-19 நோயாளிகளின் விகிதம் நாட்டின் சராசரியை காட்டிலும் மும்மடங்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில், ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கொரோனா வைரஸ் இறப்புக்களின் எண்ணிக்கை, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை போல எட்டு மற்றும் பதினாறு மடங்குகளுக்கு இடையில் இருந்ததாக மதிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டில் இறப்பு எண்ணிக்கை இதுவரை மிகவும் குறைத்தே மதிப்பிடப்பட்டுள்ளது. சாவோ பாவ்லோவின் தரவுகளில் இது மிகவும் வெளிப்படையாக பிரதிபலிக்கிறது, காரணம் என்னவென்றால் அங்கு கொரோனா வைரஸ் பரிசோதனை பரவலாக மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், கொரோனா வைரஸ் இறப்புக்களில் 485 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது. நோயாளிகள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நோய்தொற்று என்பது “சிறிய காய்ச்சல்” தானே தவிர வேறொன்றும் இல்லை என்று பாசிசவாத ஜனாதிபதி ஜாய்ர் போல்சொனாரோ தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் கூட, பிரேசில் எந்தவொரு நாட்டின் சராசரி தனிநபர் விகிதத்திற்கும் குறைவாகவே இதுவரை பரிசோதனை செய்திருக்கிறது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்புக்களில் 40 சதவிகிதத்தை நோய்தொற்றால் ஏற்பட்டதாக கணக்கிடவில்லை, ஏனென்றால் இறந்தவர்களிடையே நாள்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களும் இருந்தனர். அதே நேரத்தில், மருத்துவமனைகளில் இறப்பு விகிதத்தில் கொரோனா வைரஸ் காரணமான உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 30 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக மீறினாலும் கூட, கோவிட்-19 நோய்தொற்றால் இறந்தவர்களைப் பொறுத்தவரை அவர்கள் உயிருடன் இருந்தபோது கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படாத பட்சத்தில், அவர்கள் இறந்த பின்னர் அவர்களை பரிசோதிக்க வேண்டாம் என்று மருத்துவமனைகளை தில்லி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்தியாவில் ஆண்டுதோறும் அண்ணளவாக 2.7 மில்லியன் மக்களைப் பாதிக்கும் காசநோய் போன்ற பிற நோய்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளையும் இந்த நோய்தொற்றுக்கான நடவடிக்கைகள் தடுப்பதற்கான அபாயமும் அதிகரித்து வருகின்றது.

பிரிட்டனில், தேசிய புள்ளிவிபர அலுவலகம், மே 15 ஆம் திகதிக்குள் நாட்டில் அண்ணளவாக 54,000 அதிகப்படியான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதை பதிவு செய்துள்ளது என்றும், அதில் கிட்டத்தட்ட 17,000 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் கொரோனா வைரஸ் நோய்தொற்றினால் நிகழ்ந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது. இந்த தரவுகள், இறப்புக்களை பொறுத்தவரையில் ஐரோப்பாவிலேயே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக பிரிட்டன் இருப்பதையும், மேலும் உலகிலேயே மிகவும் பேரழிவிற்குள்ளான நாடாக அது இருப்பதையும் மீள் உறுதிப்படுத்துகின்றன.