தெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

மே 2 அன்று உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் நடத்திய 2020 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) பொதுச் செயலாளர் விஜே டயஸ் பின்வரும் உரையை நிகழ்த்தினார்.

அன்புள்ள தோழர்களே, நண்பர்களே,

கொவிட்-19 தொற்றுநோய் இலங்கை முதலாளித்துவ உயரடுக்கின் ஆட்சியின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை தடுத்து நிறுத்த முடியாதளவு துரிதமாக சரித்துள்ளது. தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பே, உலகப் பொருளாதாரத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி மற்றும் உழைக்கும் மக்களின் வளர்ந்து வரும் போராட்டங்கள், உலகளவில் முதலாளித்துவ ஆட்சிகளின் மீது ஒடுக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்து வருவதற்கான முன்னறிவிப்பாக இருந்தன. கொவிட்-19 பேரழிவு குறைந்த பின்னரும் கூட அந்த நம்பிக்கையை மீண்டும் ஸ்தாபிக்க முடியாது.

இருப்பினும், தொழிலாளர்களும் இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் இருக்கும் தொழிலாள ஆதரவாளர்களும், அத்துடன் மனநிறைவடைந்து விட முடியாது. தனது கட்டுப்பாட்டில் இருந்து நழுவக் கூடிய அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, முதலாளித்துவ வர்க்கம் இராணுவ சதி உட்பட அனைத்து பிற்போக்கு நடவடிக்கைகளையும் எடுக்க முயற்சிக்கும் என்று இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எச்சரிக்கின்றன.

The speech by Wije Dias begins at 45:50 in the video.

இத்தகைய பிற்போக்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள தொழிலாள வர்க்கம் ஒரு மாற்று சோசலிச மூலோபாயத்துடன் ஆயுதபாணியாக வேண்டியது அவசியமாகும்.

மருத்துவ விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் அசாதாரண முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், முதலாளித்துவ அமைப்பானது இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நோயை அடையாளம் காணவும், சிகிச்சையைத் தொடங்கவும் மோசமாக தோல்வியடைந்ததுள்ளது.

ஆளும் உயரடுக்கின் முழு இயலாமையினால் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் திகிலுக்கு பிரதிபலித்த அரசாங்கங்கள், எல்லா நாடுகளிலும் வேலைத் தளங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை பூட்டுவதற்கு நெருக்கப்பட்டன.

ஆனால் ஏப்ரல் மாதமும் வைரஸ் தொடர்ந்து பரவி வந்த நிலையில், முதலாளித்துவம் அவசர அவசரமாக பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான ஒரு மோசமான பிரச்சாரத்தை மேற்கொண்டது. “நோயை விட சிகிச்சை மோசமானதாக இருக்க முடியாது” என்று அது கூறிக்கொண்டது. பிரதான வணிகர்கள் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் திறப்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தன. மீண்டும் வேலைக்குச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதறைப் பற்றி அலட்சியம் செய்த அவை, லாபத்தை ஈட்டுவதற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் தடுப்பதிலேயே அக்கறை காட்டின.

தெற்காசியாவில், முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ள அதே நேரம், இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம், முக்கியமாக தேவையான வெகுஜன பரிசோதனை புறக்கணிக்கப்பட்டுள்ளமையே ஆகும்.

இந்த கோரக் காட்சிகள் ஒருபுறம் இருக்க, பாசிச அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் நெருக்கமாக அணிவகுத்துள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், இன்றியமையாத தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு வருமாறு கட்டளையிடுகின்றன. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம், இந்தப் பிராந்தியத்தை வழிநடத்துவதோடு, ஏற்கனவே இந்திய இராணுவத்தை வடமேற்கில் பாகிஸ்தான் மற்றும் கிழக்கில் சீனா போன்ற தனது எதிரிகளுக்கு விரோதமாக இந்தியாவின் தேசபக்தி மீட்பராக தூக்கிப் பிடிக்கின்றது.

இலங்கை ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ, மோடியையும் விஞ்சி, தற்போதைய தொற்று நோய் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே இராணுவத்தை சிவில் நிர்வாகத்தின் தலைமையில் இறுத்தியுள்ளார். முப்பது ஆண்டுகால தமிழர் விரோதப் போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தமைக்காக நீதித்துறையில் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள இராணுவ அதிகாரிகள், போர் வீரர்களாக புகழப்படுகின்றார்கள். ஜனாதிபதி, தமிழீழ விடுதலைப் புலிகளைக் கையாண்டது போலவே, வைரஸைத் தோற்கடிப்பதற்கான மிகச் சிறந்த கருவியாக இராணுவத்தை ஊக்குவிக்கிறார்.

நாட்டின் இராணுவ ஆட்சியைத் தூய்மைப்படுத்துவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், தொற்றுநோய் தொடர்பான சிறப்புப் பணிகளைச் செய்ய ஏப்ரல் 24 ம் தேதி இராணுவத்தை அழைப்பதன் மூலம் அதைப் பின்பற்றியுள்ளார்.

பங்களாதேஷில், தனது ஆட்சிக்கு வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ள ஆயுதப்படைகளை பெரிதும் நம்பியுள்ள பிரதமர் ஷேக் ஹசினா, பர்மாவிலிருந்து ரோஹிங்கியா அகதிகள் வருகைதருவதை சாக்குப்போக்காகப் பயன்படுத்திக்கொண்டும் கொவிட்-19 உருவாக்கியுள்ள புதிய சூழ்நிலையையும் பற்றிக்கொண்டும் தனது நிர்வாகத்தில் இராணுவத்தின் பங்கை அதிகரிக்கச் செய்கிறார்.

அதே நேரம், இந்த அரசாங்கங்கள் அனைத்தும், ஆளும் உயரடுக்குள் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ளத் தவறி இருப்பதில் இருந்து கவனத்தை திருப்பவும் உழைக்கும் மக்களை திசைதிருப்பவும் இனவாதத்தைத் தூண்டிவிடுகின்றன.

இந்தியாவிலும் இலங்கையிலும், ஆளும் உயரடுக்கினர், இலங்கை முஸ்லீம் குடும்பங்களே "வைரஸ் பரவுவதற்கு பொறுப்பாக இருக்கின்றன" என்று கூறுவதன் மூலம் முஸ்லிம்-விரோத இனவெறியை ஊக்குவித்து வருகின்றன.

சீர்திருத்தவாதிகள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் போலி இடதுசாரிகளின் உதவியுடன் முதலாளித்துவம் மக்களை அடிமைத்தனத்தில் மூழ்கடிக்க ஊடகங்கள் இடைவிடாமல் பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உலகெங்கிலும் உள்ள அதன் சகோதரி கட்சிகளுடன் சேர்ந்து, தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு சோசலிச புரட்சிகர முன்னோக்கையும் தலைமைத்துவத்தையும் வழங்கும் வரலாற்றுப் பணியை மேற்கொள்ளத் தயாராக உள்ளது. எங்களது கோட்பாடு மற்றும் அரசியல் தயாரிப்புகளானவை கடந்த நூற்றாண்டு முழுவதும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்னெடுத்த போராட்டங்களின் வரலாற்று படிப்பினைகளை உறுதியான அடித்தளமாகக் கொண்டவை.

72 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் காலனிகளுக்கு போலி சுதந்திரம் வழங்கப்பட்டபோது, இந்திய போல்ஷிவிக்-லெனினிசக் கட்சியின் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், அதை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் உள்ளூர் முதலாளித்துவத்திற்கும் இடையிலான ஒரு போலி சுதந்திர ஒப்பந்தம் என்று சரியாகக் கண்டனம் செய்தனர். உலகளாவிய நிதி மூலதனத்தின் மறைமுக ஆட்சியாக மாறிய முதலாளித்துவ ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி கோட்பாட்டின் அடிப்படையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் மேற்கொண்ட பகுப்பாய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. நிதி மூலதனத்தின் அழுகிய நிறுவனமாக மட்டுமே இருக்கின்ற முதலாளித்துவ ஆட்சியின் கீழ், இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதோ அல்லது இனவாதத்திற்கு எதிராக உழைக்கும் மக்களை ஒன்றிணைப்பதோ சாத்தியமற்றது.

கடந்த தசாப்தங்களில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கட்டளைகளின் கீழ், அரச இலவச சுகாதார சேவைகள் முதலாளித்துவத்தால் வெட்டிக் குறைக்கப்பட்டு, பில்லியன் கணக்கான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தற்போதைய பேரழிவு தொற்றுநோயின் நிலைமைகளின் கீழ், இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோய், உலக முதலாளித்துவத்தின் திவாலான மற்றும் பிற்போக்கான வகிபாகத்தை அம்பலப்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளது. உலக சோசலிசத்தின் கீழ் மட்டுமே, வைரஸ்களை மட்டுமன்றி, இலாப அமைப்புமுறைமையின் ஒவ்வொரு அழிவுகரமான சூறையாடல்களையும் கட்டுப்படுத்துவதற்காக வளங்கள், அறிவு மற்றும் உழைக்கும் மக்களின் முயற்சிகளையும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைக்க முடியும்.

தொழிலாள வர்க்கம் வளர்ச்சிகண்டு வருகின்ற புரட்சிகர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், ஒரு சர்வதேச சோசலிச குடியரசு ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்கான மற்றும் அதன் பிரிக்கமுடியா பாகமாக தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்தையும் ஸ்தாபிப்பதற்கான போராட்டமானது, தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவமாக ஒவ்வொரு நாட்டிலும் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்புவதிலேயே தங்கியிருக்கின்றது. கூட்டத்தை கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரையும் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.

Loading