முன்னோக்கு

ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை வெறியை ட்ரம்ப் தூண்டுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா முழுவதும், ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிட்டத்தட்ட 100 நகரங்களில் திரண்ட நூறாயிரக்கணக்கான உழைக்கும் மக்களும் இளைஞர்களும் தேசிய காவல்படையினரின் ஆதரவுடன் பாரியளவில் ஆயுதமேந்திய காவல்துறையினரால் வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிராக நாடு தழுவிய வன்முறை, ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் உயிரைக் கொன்ற கொலைகாரத் தாக்குதலின் தொடர்ச்சியும் விரிவாக்கமும் ஆகும். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களை ட்ரம்ப் நிர்வாகம் ஆதரிக்கிறது என்பதை முழுமையாக அறிந்த காவல்துறை தண்டனைக்கு பயமின்றி செயல்படுகிறது.

மினியாபோலிஸில் ஃபுளோய்ட்டின் கொலை நிகழ்ந்தது தற்செயல் நிகழ்வு அல்ல. அங்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த அக்டோபரில் நூற்றுக்கணக்கான போலீசார் கலந்து கொண்ட பேரணியில் ஒரு பாசிச பிரச்சாரத்தை நிகழ்த்தினார். அதில் இவர் நகர மேயர் உட்பட “தீவிர இடது” மற்றும் “சோசலிச” அரசியல்வாதிகளை கண்டித்தார்.

2020 மே 30 வார இறுதியில் அமெரிக்கா முழுவதும் பொலிஸ் வன்முறைகள்

கடந்த வாரம் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து, ட்ரம்ப் பலமுறை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை, அவர் "கெட்டவர்களுக்கு எதிராக பெரும் சக்தியைப் பயன்படுத்த வேண்டும்" என்று ஒரு இடுகையை மறு-டுவீட் செய்தார். இது "கொள்ளை தொடங்கும்போது, சூடும் தொடங்குகிறது" என்ற அவரது முந்தைய அறிக்கையைத் தொடர்ந்து வந்தது. ட்ரம்ப் மாநில அரசுகள் தேசிய காவலற்படையை நிலைநிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளதுடன், மேலும் "கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர" இராணுவத்தை கட்டவிழ்த்துவிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.

எந்தவொரு உண்மையான அடிப்படையும் இல்லாமல், ட்ரம்ப் நிர்வாகம் இப்போது "தீவிர இடது" மற்றும் அராஜக குழுக்கள் வன்முறைக்கு காரணம் என்று அறிவித்து வருகிறது. ட்ரம்ப் மற்றும் அரச வழக்குத்தொடுனர் வில்லியம் பார் இருவரும் அரசியல்ரீதியாக முக்கியத்துவம் அற்ற மற்றும் சகல சாத்தியங்களுடன் பொலிஸ் முகவர்களால் பெரிதும் ஊடுருவப்பட்டு திரித்துகையாளப்படும் ஒரு அராஜகவாத குழுவான Antifa இனை ஒரு "உள்நாட்டு பயங்கரவாத அமைப்பு" என அறிவிக்க அச்சுறுத்துகின்றனர். அரசியலமைப்பு ரீதியாக இந்த சட்டவிரோத அச்சுறுத்தல் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான அனைத்து தொழிலாள வர்க்கம், இடதுசாரி மற்றும் சோசலிச எதிர்ப்பை குற்றவாளியாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த பல நாட்களாக காவல்துறையினரின் வெறி, அமெரிக்க வரலாற்றில் ஜனநாயக உரிமைகள் மீதான மிக வன்முறையான தாக்குதல்களில் ஒன்றாகும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 26 மாநிலங்களில் போராட்டங்களை அடக்குவதற்கு உதவ தேசிய காவல்படையினர் மற்றும் விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் அவசரகால நிலைகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஜனநாயகக் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக சுதந்திரமான பேச்சு மற்றும் ஒன்றுகூடும் உரிமை தடைசெய்யப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில், பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை குண்டாந்தடிகளால் அடித்து, கூட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகைகளை வீசினர். கென்டகியின் லூயிஸ்வில்லில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இரப்பர் தோட்டாக்கள், மிளகு குண்டுகள், இரப்பர்பைகள், மின்அதிர்ச்சி கருவிகள் மற்றும் பிற “மரணம் விளைவிக்காத” ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் முகங்களில் நேரடியாக கண்ணீர்ப்புகை மற்றும் மிளகு புகையை (mace and pepper spray) தெளித்தனர். அசோசியேட்டட் பிரஸ் வியாழக்கிழமையிலிருந்து 4,100 க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.

சனிக்கிழமை இரவு மினியாபோலிஸில் வசிப்பவர்களால் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, ஒரு தேசிய காவலர் கவசவாகனத்திற்கு பின்னால் அணிவகுத்துச் செல்லும் காவல்துறையினர் மக்களை உள்ளே செல்லுமாறு கத்துவதுடன் மற்றும் "அவர்களை சுடு" என்று கத்துவதை காட்டுகிறது. அத்துடன் அவர்களின் வீட்டின் முன்னால் நின்றுகொண்டிருந்த இளவயதினரை நோக்கி இரப்பர் குண்டுகளை சுடுவதையும் காட்டியது. நியூ யோர்க் பொலிஸ் திணைக்கள உறுப்பினர்கள் புரூக்ளினில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டத்தில் தங்கள் வாகனங்களால் மோதினர். சால்ட் லேக் சிட்டியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு தமது கவசவாகனங்ளை அவர்களை நோக்கி செலுத்திய கலகப்படை பொலிஸார் ஒரு கைத்தடியுடன் நடந்து செல்லும் ஒரு வயதான வெள்ளையின மனிதரை தரையில் வீழ்த்தினர்.

கலிபோர்னியாவின் சக்ரமெண்டோவில், கண்ணில் சுடப்பட்ட பின்னர் பெருமளவில் இரத்தப்போக்கை கொண்டிருந்த ஒரு கறுப்பின இளைஞன் சக வெள்ளையின ஆர்ப்பாட்டக்காரர்களால் பாதுகாப்பாக தூக்கிச்செல்லப்பட்டார். அட்லாண்டாவில் டஜன் கணக்கான கலகப் பிரிவு போலீஸார் ஒரு இளம் தம்பதியினரின் காரின் கண்ணாடியை உடைத்து சக்கரங்களை வெட்டிய பின்னர் மின்னதிர்ச்சி கொடுத்து இழுத்துச் சென்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் சனிக்கிழமை நடந்த போராட்டத்தின் போது ஒரு போலீஸ் அதிகாரி இரப்பர் தோட்டாக்களை சுட தயாராகிறார். (AP Photo/Ringo H.W. Chiu)

டெக்சாஸின் டல்லாஸில் ஒரு இளம் பெண், கடையில் இருந்து மளிகைப் பொருட்களுடன் வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தபோது, இரப்பர் தோட்டாவால் தலையில் சுடப்பட்டார். புகைப்படங்கள்அவரின் முகத்தில் இரத்தம் ஓடுவதைக் காட்டுகிறது. சியாட்டிலில் ஒரு இளம் குழந்தை முகத்தில் மிளகுப்புகை தெளிக்கப்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டவீடியோ அவள் வலியால் அலறுவதைக் காட்டுகிறது. அவளைச் சுற்றியுள்ளவர்கள் வலியைக் குறைக்க அவள் முகத்தை பாலால் துடைக்கிறார்கள். லாஸ் வேகாஸில் உள்ள பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்கினர். அவர்களை கண்டபடி தாக்கி, இரண்டு புகைப்பட செய்தியாளர்கள் உட்பட டஜன் கணக்கானவர்களைக் கைது செய்தனர்.

ஒரு சுதந்திர செய்தித்துறையின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் முதலாவது அரசியலமைப்பு சட்டத்தை நேரடியாக மீறும் வகையில், நாடு முழுவதும் உள்ள செய்தியாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்படுவதற்கும் கைது செய்வதற்கும் தெளிவாக குறிவைக்கப்பட்டனர். எம்.எஸ்.என்.பி.சி தொகுப்பாளர் அலி வெல்ஷி மினியாபோலிஸில் நேரடி ஒளிபரப்பினை செய்துகொண்டிருக்கும்போது இரப்பர் குண்டு மூலம் காலில் சுடப்பட்டார். லூயிஸ்வில்லில், உள்ளூர் தொலைக்காட்சி நிருபரும் அவரது புகைப்படகருவியாளரும் வெள்ளிக்கிழமை போராட்டத்தின் போது மிளகு பந்துகளால் குறிவைக்கப்பட்டு சுடப்பட்டனர். மினியாபோலிஸில் ஒரு சுதந்திர புகைபடத்துறை செய்தியாளர் பொலிஸால் இரப்பர் குண்டால் சுடப்பட்ட பின்னர் அவரது இடது கண் நிரந்தரமாக பார்வையிழந்தது.

ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞரான லூகாஸ் ஜாக்சன், சனிக்கிழமை பொலிஸ் இரப்பர் குண்டால் சுடப்பட்டார். முன்னர் ஃபேர்குசன் மற்றும் பால்டிமோர் ஆகியவற்றில் முந்தைய ஆர்ப்பாட்டங்களை பற்றி தகவல் சேர்த்துக் கொண்டிருந்த அவர் செய்தியாளர்கள் குறிவைக்கப்படுவது தெளிவாகத் தெரிந்தது என்று தனது செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். “வழக்கமாக நீங்கள் இதனால் தாக்கப்படுவது, நீங்கள் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இருப்பதால் தான். நீங்கள் நடுவில் இருப்பதன் மூலம் இந்த ஆபத்திற்குள்ளாகுகின்றீர்கள். இதன்போது அவர்கள் உண்மையில் எங்களை இலக்கு வைத்துள்ளனர்”, என்று ஜாக்சன் கூறினார்.

ட்ரம்ப் "மக்களின் எதிரி" என்று பலமுறை கண்டித்துள்ள ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டுவதில் வெள்ளை மாளிகையில் உள்ள செயற்பாட்டாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்பது மிகவும் சாத்தியமானதாகும்.

ட்ரம்ப் வேண்டுமென்றே பொலிஸ் வன்முறையைத் தூண்டுவது அவரது நிர்வாகம் முழுவதும் ஒரு பொதுவான கருப்பொருளாக இருந்து வருகிறது. ஒரு வெகுஜன பாசிச இயக்கம் இல்லாத நிலையில், ஒரு அரை சர்வாதிகார ஆட்சிக்கான சாத்தியமான அதிகார தளமாக ட்ரம்ப் காவல்துறையை கருதுகிறார். மினியாபோலிஸில் அக்டோபர் 2019 உரையைத் தொடர்ந்து சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு அளித்த எச்சரிக்கையை அவரது நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன:

பொலிஸ், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் இராணுவ பார்வையாளர்கள் முன் ட்ரம்ப் தோன்றியதும், அரசியல்ரீதியாக நோக்குநிலையற்ற மற்றும் பின்தங்கிய கூறுகளை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட அவரது கவனமாக நடத்தப்பட்ட வெகுஜன பேரணிகளும் அனைத்தும் தனக்கான ஒரு அரசியல் அடித்தளத்தை உருவாக்குவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாகும், அமெரிக்க அரசியலமைப்பின் பாரம்பரிய சட்ட எல்லைகள் அனைத்திற்கும் வெளியே அதனை அவர் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு அடிப்படையாகக் கொண்டு செயல்பட முடியும்.

ட்ரம்பின் பொய்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு ஜனநாயகக் கட்சியும் பெருநிறுவன ஊடகங்களும் உடந்தையாக இருப்பதுடன் தமது முதுகெலும்பின்மையுடனும் பதிலளித்து வருகின்றன. ஆர்ப்பாட்டங்கள் "வெளி கிளர்ச்சியாளர்களின்" வேலை என்று ட்ரம்பின் கதையை அவர்கள் எந்தவொரு ஆதாரமுமின்றி ஒப்புக் கொண்டுள்ளனர். இதனை மினசோட்டா ஆளுனர் டிம் வால்ஸ் மற்றும் மினியாபோலிஸ் மேயர் ஜாக்கோப் ஃப்ரே ஆகியோர் சனிக்கிழமை காலை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் மீண்டும் மீண்டும் கூறினர்.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், ஆர்ப்பாட்டங்களை "ரஷ்ய நடவடிக்கைகளில் இருந்து வெளிவந்தது" என்று கண்டித்து, உள்நாட்டு அமைதியின்மையை தூண்டுவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களே பொறுப்பு என்று அபத்தமாகக் கூறினார்.

ட்ரம்பின் பாசிச தூண்டுதல்களை எந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கண்டிக்கவில்லை. இப்போது ஜோ பைடனை உற்சாகமாக ஆதரிக்கும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் பேர்னி சாண்டர்ஸ், ஞாயிற்றுக்கிழமை மாலை ஆதரவாளர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் வெறியாட்டம் பற்றி எதுவும் கூறவில்லை, ட்ரம்பைக் கூட குறிப்பிடவில்லை.

ட்ரம்ப் மற்றும் அரசியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தையும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் ஜனநாயகக் கட்சியிடம் ஒப்படைப்பதை விட பெரிய மற்றும் ஆபத்தான அரசியல் தவறு எதுவும் இருக்க முடியாது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயகக் கட்சியினரை பயமுறுத்துவது ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இரு கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்தும் நிதிய தன்னலக்குழுவிற்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தின் வளர்ச்சியாகும்.

நாட்டைச் சுற்றிக் நடந்துகொண்டிருக்கும் பல்லின மற்றும் பன்முக ஆர்ப்பாட்டங்கள் பொலிஸ் வன்முறைக்கு எதிராக மட்டுமல்ல, சகிக்க முடியாத பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளுக்கும் எதிரான போராட்டமாகும். COVID-19 தொற்றுநோய் முதலாளித்துவத்தை இழிவுபடுத்துகிறது. ட்ரம்ப் ஆட்சி மற்றும் ஆளும் வர்க்கத்தின் குற்றவியல் அலட்சியத்தின் விளைவாக அமெரிக்காவில் ஏற்கனவே ஒரு லட்சம் பேர் இறந்துள்ளனர். குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினரால் ஆதரிக்கப்படும் படுகொலைக்கான வேலைக்குத் திரும்பும் பிரச்சாரம் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் வேலையின்மை மற்றும் அவநம்பிக்கையான சமூக நெருக்கடி ஆகியவற்றின் நிலை, அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களை அரசியல்ரீதியாக தீவிரமயப்படுத்துகின்றது.

ட்ரம்ப் நிர்வாகம் இந்த தீவிரமயப்படுத்தலை அறிந்துள்ளதுடன் மற்றும் அஞ்சுகிறது. அது முன்னைய இடதுசாரி வன்முறையின் பழைய கம்யூனிச-எதிர்ப்பு பூதத்தை காட்டும் வழிமுறையை பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கு ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்துகிறது.

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த அனைவரையும் மற்றும் பொலிஸ் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாக்க இப்போது முழு தொழிலாள வர்க்கமும் முன்வர வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சமூக போர்க்குணத்தின் அதிகரித்துவரும் மனநிலை காணப்படுகின்றது. தொற்றுநோய் வெடிப்பதற்கு முன்பு, வேலைநிறுத்த நடவடிக்கைகளின் நிலையான அதிகரிப்பு இருந்தது. சமீபத்திய வாரங்களில், தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிராக வெளிநடப்புகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களை, குறிப்பாக இளைஞர்களை, நேரடியாக வாகன ஆலைகள், தொழிற்சாலைகள், கிட்டங்கிகள், விநியோக மையங்கள், கட்டிடத் தளங்கள் என அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களின் ஆதரவைக்கோருமாறு கேட்டுக்கொள்கிறது. இத்தகைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படமாட்டாது.

சோசலிச சமத்துவக் கட்சி தனது அக்டோபர் 2019 அறிக்கையில் விளக்கியது போல்:

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தை சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம், சமூக திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழித்தல், வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதல், ஒரு முழு தலைமுறை இளைஞர்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான நிலைமைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொடூரமாக துன்புறுத்துதல், சுற்றுச்சூழலின் சீரழிவு, மற்றும் மனிதகுலம் அனைத்தையும் அச்சுறுத்தும் முடிவில்லாத மற்றும் விரிவடையும் போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்படவேண்டும். அமெரிக்காவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பை அவர்களைப்போல் ஒரே நலன்களைப் பகிர்ந்துகொண்டு, அதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் சமூகப் போராட்டங்கள் வெடிப்போடு இணைக்கப்பட வேண்டும்.

சமூகத்தின் செயல்பாடுகள் சார்ந்துள்ள தொழிலாள வர்க்கத்திற்கே ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை நிறுத்தவும், ட்ரம்பை அதிகாரத்திலிருந்து அகற்றவும், பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுவின் முதுகெலும்பை உடைக்கவும், பொருளாதார வாழ்க்கையை ஒரு சோசலிச அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதை தொடங்குவதற்குமான ஒரு பாரிய அரசியல் இயக்கத்தை உருவாக்கும் சக்தி உள்ளது.

மேலதிக வாசிப்பிற்கான கட்டுரை:

அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டனில் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்
[13 June 2017]

Loading