ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாத மற்றும் யூத எதிர்ப்பு வன்முறைகளில் கூர்மையான அதிகரிப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாத மற்றும் யூத எதிர்ப்பு வன்முறைச் செயல்களின் எண்ணிக்கை 2019 இல் கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி ஹோர்ஸ்ட் சீஹோபர் (CSU) மே 27 அன்று வழங்கிய அரசியல் குற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்களில் இது தெரிய வந்துள்ளது.

யூத-விரோத குற்றங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 13 சதவீதம் அதிகரித்து 2,032 ஆக அதிகரித்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு புள்ளிவிவரங்கள் தொகுக்கத் தொடங்கியதிலிருந்து யூத நம்பிக்கையுள்ள மக்கள் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை மிக உயர்ந்த நிலையை அடைந்தது. கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து முதல் ஆறு யூத எதிர்ப்பு குற்றங்கள் செய்யப்பட்டன. காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த குற்றங்களில் 93 சதவீதம் வலதுசாரிகளிலிருந்து வந்தவை. ஹால நகரத்தில் உள்ள யூதர் வழிபாட்டுத் தலம் மீதான பயங்கரவாத தாக்குதல் இந்த பனிப்பாறையின் முனை மட்டுமே.

மொத்தத்தில், கடந்த ஆண்டு 41,177 அரசியல் நோக்கத்துடனான குற்றங்களை காவல்துறை பதிவு செய்தது. இது 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர்களில் 22,342 பேர் வலதுசாரி முகாமிலிருந்தும், 9,849 பேர் இடதுசாரி முகாமிலிருந்தும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், அவை ஆரம்ப புள்ளிவிவரங்கள் என்று அழைக்கப்படுவதால் இந்த புள்ளிவிவரங்கள் வரையறுக்கப்பட்ட முக்கியத்துவத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன. குற்றவியல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டதா அல்லது நீதிமன்ற தண்டனை வழங்கப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆரம்ப சந்தேகம் எழுந்தாலே சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

மேலும், சம்பந்தப்பட்ட குற்றங்கள் மிகவும் வேறுபட்டவை. இதில் வெறும் பிரச்சாரக் குற்றங்கள் (எல்லா வழக்குகளிலும் 40 சதவீதம்) ஆர்ப்பாட்டங்களில் காவல்துறையினருக்கு எதிர்ப்பு, கொடூரமான கொலை வரை உள்ளடங்குகின்றன.

"வலது" மற்றும் "இடது" என வரையறை செய்வதும் காவல்துறைக்கே விடப்பட்டுள்ளது. காவல்துறையினரிடையே அதன் அணிகளில் தீவிர வலதுசாரிகளின் பல அனுதாபிகளும் அடங்குவர். நவ-நாஜிக்கள் அணிவகுத்துச் செல்லும்போது, காவல்துறையினர் பெரும்பாலும் இடதுசாரி எதிர்-ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மிருகத்தனமான நடவடிக்கை எடுப்பார்கள். இதன் விளைவாக இந்த வன்முறை புள்ளிவிவரங்களில் நவ-நாஜிக்கள் தோன்றுவதில்லை.

எவ்வாறாயினும், ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாதமும் யூத-விரோதமும் அதிகரித்து வருகின்றன என்பதில் புள்ளிவிவரங்கள் எவ்வித சந்தேகத்தையும் உருவாக்கவில்லை. வலதுசாரி தீவிரவாதத்தை இழிவான முறையில் அற்பமாக்கும் உள்துறை மந்திரி சீஹோபர் கூட இதை இனி மறுக்க முடியாது.

"எங்கள் நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தல் வலதுபுறத்தில் இருந்து வருகிறது," என்று அவர் அறிக்கையை வழங்கியபோது, மியூனிக், ஹால மற்றும் ஹனாவ் ஆகிய இடங்களில் நடந்த பயங்கரவாத நவ-நாஜி தேசிய சோசலிச ஒன்றியத்தின் (NSU) நடவடிக்கைகளிலிருந்து, காசலின் மாவட்டத் தலைவர் வால்டர் லுப்க ஒரு வலதுசாரி தீவிரவாதியால் கொல்லப்பட்டது வரையிலான வலதுசாரி தீவிரவாதத்தின் "நீண்ட இரத்த பாதை" பற்றி பேசினார்.

உள்துறை அமைச்சர்களின் மாநாட்டின் தலைவரான ஜியோர்க் மையர் (சமூக ஜனநாயகக் கட்சி - SPD), வலதுசாரி தீவிரவாதத் துறையில் கட்டமைப்புகள் உருவாகியுள்ளன, அவை நீண்ட காலமாக கண்டுகொள்ளப்படவில்லை அல்லது எதிர்த்துப் போராடவில்லை என்று கூறினார். துரிங்கியா மாநில உள்துறை மந்திரி தனது மாநிலத்தில் வலதுசாரி இசை நிகழ்ச்சிகளைப் பற்றி ஹிட்லர் வணக்கம் (Sieg Heil) வழங்கிய ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களை பற்றியும் அறிவித்தார்.

பெரும்பான்மையான மக்களால் உணரப்பட்ட வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிரான விரோதப் போக்கைக் கருத்தில் கொண்டு, சீஹோபர் மற்றும் மையர் ஆகியோர் தங்கள் தடங்களை மறைக்க முயற்சிக்கின்றனர். நவ-நாஜிக்கள் மற்றும் யூத-விரோதவாதிகள் எல்லாவற்றிற்கும் மேலாக வலுவாக இருப்பதாக உணர்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்குப் பின்னால் அரச எந்திரமும் ஆளும் வர்க்கத்தின் கட்சிகளும் உள்ளன. வலதுசாரி அச்சுறுத்தலுக்கு எதிராக இப்போது நடவடிக்கை எடுக்க விரும்புவதாக அதிகாரிகள் கூறும் பாசாங்குத்தனமான கூற்றுகள் கூட இதை மாற்றாது என்பதும் அவர்களுக்கு தெரியும்.

ஏன் அவர்கள் திரும்பி வருகிறார்கள்? என்ற புத்தகத்தில், சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) துணைத் தலைவர் கிறிஸ்டோஃப் வான்ட்ரியர், ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீட்டின் (AfD) எழுச்சிக்கான நிலைமைகள் மற்றும் அதன் பாசிச சுற்றுவட்டம் எவ்வாறு பல்கலைக்கழகங்களில், ஊடகங்களில், அரசியலில் மற்றும் அரசு எந்திரத்தில் உருவாக்கப்பட்டது பற்றி விரிவாகக் காட்டியுள்ளார்.

"1930 களில் பேரழிவுக்கு வழிவகுத்த எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை" என்று புத்தகத்தின் முன்னுரை கூறுகிறது. "சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகள் அனைத்தும் மீண்டும் முழு சக்தியுடன் வெடிக்கின்றன." ஜேர்மன் முதலாளித்துவம் போர் மற்றும் பாசிசத்தின் மூலம் தீர்க்க முயன்ற அதே பிரச்சினைகளை மீண்டும் எதிர்கொள்வதுடன், இப்போது அதே முறைகளுக்குத் திரும்புகிறது.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் மற்றும் நாஜி ஆட்சியின் குற்றங்களை ஹெர்பிரைட் முங்க்லர் மற்றும் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி போன்ற பேராசிரியர்களால் அற்பமாக காட்டுவதும், ஊடக விமர்சனங்கள் மற்றும் மாணவர் விமர்சனங்களுக்கு எதிரான உத்தியோகபூர்வ அரசியலால் அவர்கள் கடுமையாகப் பாதுகாப்பதுடன் இது தொடங்கியது. முன்னணி சமூக ஜனநாயகக் கட்சி பிரமுகர் திலோ சர்ராசின் இனவெறி கிளர்ச்சி எழுத்துக்கள் மற்றும் அகதிகளுக்கு எதிரான பெகிடா (Pegida) அமைப்பின் எதிர்ப்புக்கள் "அக்கறைகொண்ட குடிமக்களின்" ஆர்ப்பாட்டங்கள் என குறைத்துக்காட்டப்படுவதுடனும் "தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்" என்பதுடன் இது தொடர்ந்தது.

அகதிகளுக்கு எதிரான அனைத்து ஸ்தாபகக் கட்சிகள் மற்றும் ஊடகங்களால் பகிரங்கமாக ஆதரிக்கப்பட்ட பிரச்சாரம், யூத-விரோதத்தின் ஆபத்து வலதிலிருந்து வரவில்லை, ஆனால் முஸ்லீம் நம்பிக்கைகொண்ட அகதிகளிடமிருந்தும் மற்றும் இடதுசாரிகளிடம் இருந்து வந்தது என்ற கூற்றுடன் இணைந்திருந்தது.

Yad Vashem ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னத்தில் இஸ்ரேலிய பிரதம மந்திரி, வலதுசாரி தீவிரவாதிகளான மத்தேயோ சால்வினி, விக்டர் ஆர்பன் மற்றும் ரோட்ரிகோ டூர்ட்டே ஆகியோரை வரவேற்றபோது இடதுசாரி புத்திஜீவிகள், கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் யூத எதிர்ப்பாளர்கள் என்று கண்டிக்கப்பட்டனர். சமீபத்தில் தான், கமரூனிய வரலாற்றாசிரியரும் தத்துவஞானியுமான Achille Mbembe அத்தகைய பிரச்சாரத்தின் பொருளாகிவிட்டார். ஆனால் புள்ளிவிவரங்கள், யூத எதிர்ப்பு, பாசிச வலதுகளிமிருந்து வந்தது என்பதை முழுமையாக உறுதிப்படுத்துகிறது.

அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களால் AfD மரியாதைக்குரியதாகியுள்ளதுடன் மற்றும் பாராளுமன்றத்தில் உள்ள முக்கியமான குழுக்களின் தலைவர் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. ஹான்ஸ்-ஜோர்க் மாஸன், இரகசிய சேவையின் தலைவராக இருந்தபோது, தீவிர வலதுசாரிக் கட்சிக்கு அறிவுரை வழங்கினார் மற்றும் அதன் நிலைப்பாடுகளுக்கு வெளிப்படையாக அனுதாபம் தெரிவித்தார். சமீபத்தில் தான், துரிங்கியா மாநில பிரதமர் போடோ ராமலோ (இடது கட்சி) தனது வாக்களிப்பால் மாநில நாடாளுமன்றத்தில் துணைத் தலைவர் பதவியைப் பெற AfD க்கு தனிப்பட்ட முறையில் உதவினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வலதுசாரி தீவிரவாத கட்டமைப்புகளை உருவாக்குவதில் அரசு எந்திரம் முக்கிய பங்கு வகித்துள்ளது. NSU பயங்கரவாதிகள் மற்றும் காசெல் மாவட்டத் தலைவர் வால்டர் லுப்கவின் கொலைகாரன் வெளிவந்த பாசிச வலையமைப்பு, இரகசிய சேவை மற்றும் குற்றவியல் புலனாய்வுத் துறைகளில் இருந்து டஜன் கணக்கான இரகசிய தகவல் வழங்குபவர்களை கொண்டுள்ளது. அவர்கள் அவ்வமைப்பை நிதியளித்து கட்டியெழுப்பினர். அவர்களில் ஒருவர் கூட நீதிக்கு முன் கொண்டு வரப்படவில்லை, மேலும் அவ்வமைப்பு தொடர்புடைய கோப்புகள் இன்றுவரை பூட்டிவைக்கப்பட்டு உள்ளன.

“Hannibal” வலைப்பின்னல் என்று அழைக்கப்படுவது பற்றி ஏராளமான கட்டுரைகள் மற்றும் தொலைக்காட்சி ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் விஷேட அதிரடிப்படையான KSK அமைப்பின் அங்கத்தவர்கள், சிறப்பு காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் இரகசிய சேவை அதிகாரிகள் உள்ளனர். இது அரசியல் எதிரிகளின் கொலைப்பட்டியல்களை வைத்திருக்கிறது, ஆயுதங்களை வைத்திருக்கிறது மற்றும் இராணுவ பயிற்சிகளை நடத்துகிறது. இதுபற்றி அரசியல் பொறுப்புள்ள எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த வலைப்பின்னலின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நபர்களும் சுதந்திரமாக திரிகின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு பெரிய ஆயுதக் களஞசியம் மற்றும் நாஜி நினைவுச்சின்னங்கள் ஒரு KSK சிப்பாய்க்கு சொந்தமானவை எனக் கண்டறியப்பட்டபோது, KSK தளபதி Markus Kreitmayr தனது படையினருக்கு கவலைப்பட்டு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஏன் “எங்கள் சமூகத்தின் மத்தியில், வலதுசாரி பிரிவினர் என்று அழைக்கப்படும் முக்கியமாக தனிநபர்கள் இன்னும் இருக்கிறார்கள்”. தீவிரவாதிகள் அகற்றப்படுவார்கள் என்று அவர் மிரட்டி, பின்னர் அவர்களுடைய விருப்பப்படி இராணுவத்தை விட்டுவெளியேறுமாறு கேட்டார்.

மே மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட இந்த சிப்பாய், KSK யில் 20 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதும், ஒரு பிரிவுத் தளபதி ஓய்வுபெற்று போகும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வலதுசாரி ராக் இசை நிகழ்ச்சி, ஹிட்லர் வணக்கம் மற்றும் விபச்சாரிகளுடன் கொண்டாடியபோது அங்கு இருந்தார் என்பதும் Kreitmayr நன்றாகத் தெரியும்.

அகதியாக தன்னை பதிவுசெய்து ஒரு தவறான அடையாளத்தைப் பெற்றிருந்த பிராங்கோ ஏ தொடர்பான தகவல்கள் வெளிப்பட்டதிலிருந்து, குறைந்தது பிப்ரவரி 2017 முதல், இராணுவத்தில் வலதுசாரி தீவிரவாத வலையமைப்புகள் இருப்பது ஒரு இரகசியமாக இருக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு அமைச்சகம், இராணுவ தலைமை மற்றும் இராணுவ எதிர்-புலனாய்வு சேவை ஆகியவை முறையாக அவற்றைக் காப்பாற்றியதுடன், தொடர்ந்தும் அதைச் செய்யும்.

வலதுசாரி தீவிரவாத மற்றும் யூத-விரோத குற்றங்களின் அதிகரிப்பு ஒரு எச்சரிக்கையாகும். 1930 களில் இருந்து ஆழ்ந்த சர்வதேச பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆளும் வர்க்கம் மீண்டும் சர்வாதிகாரத்திற்கும் போருக்கும் தயாராகி வருகிறது.

Loading