முன்னோக்கு

ட்ரம்பின் அரசியல் சதியை ஜனநாயகக் கட்சியினர் மூடிமறைக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பொலிஸ் வன்முறைக்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்களை நசுக்குவதற்காக இராணுவத்தை நிலைநிறுத்த இருப்பதாக ட்ரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு முரணான அரசியல் சதியை மூடிமறைக்கவும் குறைத்துக் காட்டவும் செயல்பட்டு வருகின்றனர்.

ட்ரம்ப் அவரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வாஷிங்டன் டிசி இல், பாரியளவிலான இராணுவ நிலைநிறுத்தல் மூலமாக, இராணுவம் மற்றும் பொலிஸை அடிப்படையாக கொண்டு, ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார். மாநிலங்கள் போதுமானளவுக்கு ஆக்ரோஷமாக விடையிறுக்கவில்லை என்றால் இராணுவம் அனுப்பப்படுமென திங்களன்று அவர் அச்சுறுத்திய பின்னர், ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு மாநிலங்கள் மீதான அழுத்தத்தையும் அவர் தீவிரப்படுத்தி வருகிறார்.

கடந்த செவ்வாய்கிழமை இரவு, ட்ரம்ப் நியூயோர்க் நகரை சுட்டிக்காட்டி, அவர் ட்வீட்டரில் எழுதினார், “நியூயோர்க்கின் சிறப்பு, அவர்களின் வித்தையை நடத்த அனுமதிப்பதில்லை மாறாக என்னவாக இருந்தாலும், தீவிர இடது மற்றும் ஏனையவர்களின் உத்வேகத்தையும் சேர்த்து கட்டமைப்பதை அனுமதிப்பதற்கு அவர்களுக்கு கூடுதல் உதவி தேவைப்படும்" — அதாவது, ஜனாதிபதி கட்டுப்பாட்டின் கீழ் இராணுவத்தை நிலைநிறுத்துவது.

ஜூன் 1, 2020, திங்கட்கிழமை வெள்ளை மாளிகைக்கு அருகே செயின்ட் ஜோன்ஸ் தேவாலயத்திற்கு வெளியே ஜனாதிபதியின் திங்கட்கிழமை பத்திரிகையாளர் நிகழ்வுக்காக கண்ணீர் புகைக்குண்டைப் பயன்படுத்தி அவ்விடத்தைவிட்டு அனைவரையும் அகற்றியபின், Lafayette பூங்காவில் கலகம் ஒடுக்கும் பொலிஸார் புடைசூழந்து நிற்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடந்து வருகிறார். (படம்: AP Photo/Patrick Semansky)

எண்ணற்ற பொது அறிக்கைகளில், ட்ரம்ப் நடவடிக்கைகளைக் குறித்து கருத்துரைக்கும் ஜனநாயக கட்சியின் காங்கிரஸ் சபை உறுப்பினர்களும், ஆளுநர்களும், நகரசபை தலைவர்களும் ட்ரம்ப் நடவடிக்கைகளில் உள்ள பாசிசவாத மற்றும் எதேச்சதிகார தன்மையை புறக்கணித்து விட்டு, அதற்கு மாறாக ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் "உதவியாக" இல்லை என்ற கருத்துக்கள் மீது ஒருமுகப்பட்டுள்ளனர்.

“மிதமிஞ்சி நடந்து கொள்ள வேண்டாம்,” என்று கூறிய ஜனநாயக கட்சியின் சிகாகோ நகரசபை தலைவர் Lori Lightfoot, ட்ரம்பின் அறிக்கைகளை "உளறல்கள்" என்றார், இராணுவத் தலையீடு கோரப்படுமா என்ற கேள்விக்கு மிச்சிகன் ஆளுநர் Gretchen Whitmer விடையிறுக்கையில், “அவர்கள் [ட்ரம்ப் நிர்வாகம்] எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் இன்னும் நிறையவே தூபமிட்டுள்ளதால்" இது தேவைப்படலாம் என்று பதிலளித்தார்.

ட்ரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்த்து தங்களை வெளிப்படுத்தி காட்டியிருந்த பத்தாயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் வீரத்திற்கு எதிர்முரணாக, ஜனநாயகக் கட்சியினரோ அவர்களின் குறிப்பிடத்தக்க பொறுப்பின்மை, கோழைத்தனம் மற்றும் உடந்தைத்தனத்தைக் காட்டி விடையிறுக்கின்றனர்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடென் செவ்வாய்கிழமை முழுவதுமாக தார்மீக இரங்கலுடன் 30 நிமிட உரை வழங்கினார். ட்ரம்ப் பைபிளை வாசித்திருந்தால் "அதிலிருந்து ஏதாவது படித்திருப்பார்" என்று தனது விருப்பத்தை வெளியிட்ட பைடென், “பயம் மற்றும் பிளவை" தூண்டிவிடுவதற்காக அவரை விமர்சித்தார்.

பைடென் நடைமுறையளவில், ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கைகளைப் பாசிசவாத ஜனாதிபதியின் நடவடிக்கைகளுடனும் அவர் தூண்டிவிட்டுள்ள பொலிஸ் வெறிச்செயல்களுடன் சமப்படுத்தினார். “இங்கே வன்முறைக்கு இடமில்லை,” என்று கூறிய பைடென், “கொள்ளையடிப்பதற்கு அல்லது சொத்துக்களைச் சேதப்படுத்துவதற்கு அல்லது தேவாலயங்களை எரிப்பதற்கு, அல்லது வணிகங்களை நாசப்படுத்துவதற்கு இது இடமில்லை. … அல்லது மக்கள் அனைவரையும் பாதுகாக்கவும் அனைவருக்கும் சேவையாற்றவும் பதவி பிரமாணம் ஏற்றுள்ள நமது பொலிஸ், பதட்டங்களைத் தூண்டிவிடுவதை அல்லது அதீத வன்முறையில் ஈடுபடுவதைப் பொறுத்துக் கொண்டிருக்காது,” என்றார்.

பைடென் ஜனாதிபதி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதுடன் அமெரிக்காவின் அரசியலமைப்பைத் தூக்கியெறிய முயன்று வருகிறார் என்ற முக்கிய அரசியல் பிரச்சினையைத் தவிர்த்துவிட்டார்.

பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியும் செனட் சபையின் பெரும்பான்மையினர் தலைவர் சார்ல்ஸ் சூமரும் ட்ரம்பின் ரோஸ் பூங்கா உரை குறித்து சம்பிரதாயமாக நான்கு பத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார், அதில் "இராணுவம்" என்ற வார்த்தையே இருக்கவில்லை.

“நம் நாடு ஒற்றுமைக்காக கதறிக் கொண்டிருக்கின்ற ஒரு தருணத்தில், இந்த ஜனாதிபதி, பிளவைப் பெரிதாக்கி வருகிறார்,” என்றவர்கள் குறிப்பிட்டனர். “அமெரிக்கர்கள் அனைவரது கண்ணியத்தையும் உரிமையையும் மதிக்குமாறு நாங்கள் ஜனாதிபதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.”

வாஷிங்டனில் அவரின் உரைக்குப் பின்னர் ட்ரம்ப் புகைப்படத்திற்குத் தோன்றிய அதே தோரணையைப் பிரதிபலிக்கும் விதத்தில், பெலோசியும் செவ்வாய்கிழமை காலை கேமராக்களின் முன்னாள் ஒரு பைபிளைப் பிடித்தவாறு இரண்டு நிமிடம் உரையாற்றினார். “அமெரிக்காவின் ஜனாதிபதி நெருப்பை இன்னும் அதிகமாக விசிறி விடுபவராக இல்லாமல், பிரச்சினையைத் தீர்க்கும் தலைவராக இருக்க, அவருக்கு முன்பிருந்த பல ஜனாதிபதிகளின் வழியைப் பின்தொடர்வார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று பொலோசி நிறைவு செய்தார்.

வெறும் நான்கு மாதங்களுக்கு முன்னர் தான், பிரதிநிதிகள் சபையில் ட்ரம்ப் மீதான ஜனநாயகக் கட்சியின் பதவிநீக்க குற்றவிசாரணை நடவடிக்கை நிறைவடைந்தது, அதற்கு பெலோசி தான் தலைமை தாங்கியிருந்தார். அந்த சபை, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனுக்கான இராணுவ உதவிகளை ட்ரம்ப் நிறுத்தி விட்டார் என்ற குற்றச்சாட்டுகள் மீதும், உக்ரேனிய ஜனாதிபதி உடனான ஒரு தொலைபேசி அழைப்பின் மீதும் மையமிட்டிருந்த "உயர் குற்றங்கள் மற்றும் சிறு பிழைகளுக்காக" ட்ரம்புக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளுக்கு ஒப்புதல் வழங்கியது. இறுதியில் ட்ரம்ப் குடியரசு கட்சியினர் கட்டுப்பாட்டில் இருந்த செனட் சபையில் காப்பாற்றப்பட்டார்.

ஜனநாயகக் கட்சியினர் உக்ரேனிய அழைப்பை ஜனாதிபதியை நீக்குவதற்கான ஓர் அடித்தளமாக கருதிய அதேவேளையில், உள்நாட்டு போராட்டங்களுக்கு எதிராக அமெரிக்க மண்ணில் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியைக் குறித்து அவர்கள் மவுனமாக கடந்து போனார்கள். பெலோசியும் சரி ஏனைய எந்தவொரு ஜனநாயகக் கட்சியாளரும் சரி பிரதிநிதிகள் சபையை மீண்டும் கூட்டுவதற்கோ, பதவியிலிருந்து ட்ரம்பை நீக்குவதற்கான ஒரு புதிய தீர்மானத்தை அறிமுகம் செய்வதற்கோ அழைப்பு விடுக்கவில்லை.

பணியிலுள்ள இராணுவச் சிப்பாய்களை நிலைநிறுத்துவதன் மூலமாக அவர் அரசாங்கத்திற்கான எதிர்ப்பை "நசுக்குவதற்கான" ட்ரம்பின் கோரிக்கைகள் அப்பட்டமாக சட்டவிரோதமானவையாகும். யேல் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் புரூஸ் அக்கெர்மன் கடந்தாண்டு கருத்துரைத்தவாறு:

ஸ்தாபித்ததில் இருந்தே, அமெரிக்க அரசியலமைப்பின் பாரம்பரியம் ஜனாதிபதி உள்நாட்டு சட்ட அமுலாக்கத்திற்காக இராணுவத்தைப் பயன்படுத்துவதை ஆழமாக எதிர்க்கிறது. 1878 சட்ட சாசனத்தில் வேரூன்றிய மற்றும் 1956 சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஒரு முக்கிய வழிவகையானது, “அரசியலமைப்பால் அல்லது காங்கிரஸ் நடைமுறை மூலமாக நேரடி ஒப்புதல் அளிப்பட்டால்" ஒழிய, உள்நாட்டில் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்காக "ஆயுதப்படை அல்லது விமானப் படையின் எந்தவொரு பிரிவையும் உத்தேசித்து பயன்படுத்துவது" யாராக இருந்தாலும் "இந்த தலைப்பின் கீழ் அபராதம் விதிக்கப்படுவார் அல்லது இரண்டாண்டுகளுக்கு அதிகமான காலத்திற்கு சிறையில் அடைக்கப்படுவார்," என்று அறிவிக்கிறது.

WSWS மீண்டும் மீண்டும் குறிப்பிட்டவாறு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக ட்ரம்புக்கு எதிரான ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பில் அவர்களது நோக்கம் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நிறைவேற்றுவதாக இருந்தது. அவர் நிர்வாகத்தின் தொடக்கத்தில் இருந்தே, ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்பின் பாசிசவாத கொள்கைகளுக்கு எதிரான பரந்த பெருந்திரளான மக்கள் எதிர்ப்பை ஒடுக்கவும் மற்றும் தடம் புரளச் செய்யவும், அதை அவர்களின் சொந்த பிற்போக்குத்தனமான ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்குப் பின்னால் திருப்பி விடவும் செயல்பட்டு வந்துள்ளனர்.

இப்போது ட்ரம்புக்கு எதிராக ஒரு பாரிய மக்கள் இயக்கம் இருக்கின்ற போது, ஜனநாயகக் கட்சியினர் நிலைமையை அமைதிப்படுத்துவதற்கான பயனற்ற முயற்சிக்குத் தங்களை அர்பணித்துள்ளனர். “நெருப்பை விசிறி விடுவதாக" ட்ரம்பை அவர்கள் விமர்சிக்கின்ற போது, அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சமூக வெடிப்பைக் குறித்த அவர்களின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக, ஜனநாயகக் கட்சியினர் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் உள்நாட்டு கொள்கை மீதான இன்றியமையாத அம்சங்களில் ட்ரம்புடன் இணைந்து செயல்பட்டுள்ளனர். பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு இடையே, அவர்கள் வோல் ஸ்ட்ரீட்டுக்கு பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பு வழங்க ஏகமனதாக ஒப்புதல் வழங்கியதுடன், ட்ரம்ப் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்தை நடைமுறைப்படுத்தவும் உதவி வருகின்றனர்.

கேள்விக்கிடமின்றி ஜனநாயகக் கட்சியிடமிருந்து எந்த நல்லெண்ணமும் வராது. அது வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு கட்சியாக இராணுவ-உளவுத்துறை முகமைகளின் ஒரு கட்சியாக உள்ளது. அக்கட்சி, பொலிஸ் வன்முறைக்கு எதிராக பரவி வரும் பாரிய போராட்டங்களில் வெளிப்படும் உணர்வுகளுக்கும் மற்றும் அவற்றுக்குப் பின்னால் தொழிலாளர்களிடையே நிலவும் பரந்த சமூக கோபத்திற்கும் முற்றிலும் விரோதமாக உள்ளது.

ட்ரம்ப் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை, ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினரை எதிர்த்து, பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் ஒட்டுமொத்த அரசியல் எந்திரத்தையும் எதிர்த்து, தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே முன்னெடுக்க முடியும். பொலிஸ் வன்முறைக்கு எதிரான மற்றும் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய ட்ரம்பின் நகர்வுகளுக்கு எதிரான போராட்டமானது, சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading