எகிப்து: எல்-சிசி இராணுவ சர்வாதிகாரத்திற்கான சட்ட கட்டமைப்பை அங்கீகரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளை முன்னனுமானித்து, எகிப்தின் இரத்தக் கறை படிந்த சர்வாதிகாரியான ஜெனரல் அப்தெல் பத்தா எல்-சிசி, தனக்கும் ஆயுதப்படைகளுக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் அவசரகால சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை அங்கீகரித்துள்ளார்.

எல்-சிசியின் தலைமையின் கீழ், அரபு உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் இராணுவ சர்வாதிகாரத்திற்கான சட்ட கட்டமைப்பை இந்த விதிகள் வழங்குகின்றன. பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் மீது பெருநிறுவன, நிதி மற்றும் இராணுவ உயரடுக்கு கொண்டுள்ள ஆதிக்கத்திற்கு எதிரான அனைத்து அரசியல் எதிர்ப்பையும் அவர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தடை செய்வார்கள்.

கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறையாக இந்த நடவடிக்கைகளை முன்வைக்கும் அதேவேளை, உலகளாவிய பொருளாதார மந்தநிலையும், அடைப்புக்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளும் நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நிலையிலும் மற்றும் அதன் வறிய மக்களை மேலும் பஞ்சத்தில் ஆழ்த்தும் நிலையிலும், 2013 இல் ஒரு இராணுவ சதித்திட்டத்தை பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய எல்-சிசி, சமூக அதிருப்தியை நசுக்குவதற்கு தயாராகி வருகிறார்.

பெப்ரவரி ஆரம்பத்திலேயே ஆபிரிக்க நாடுகளில் மிகவும் ஆபத்திலுள்ள ஒரு நாடாக எகிப்து அடையாளம் காணப்பட்டிருந்தாலும், நாட்டின் 102 மில்லியன் மக்கள் எதிர்கொள்ளும் நம்பிக்கையிழந்த நிலைமைகளை அலட்சியப்படுத்தும் விதமாக, அரசாங்கம் தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராவதற்கு எதையும் செய்யவில்லை. அதாவது, மார்ச் மத்தியில் தெற்கு நகரமான லக்சரில், ஒரு நைல் பயணக் கப்பலில் டசின் கணக்கான தொழிலாளர்களுக்கு கோவிட்-19 நோய்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அந்நாட்டில் வெறும் பயணத் தடைகளும் மற்றும் அடைப்பு நடவடிக்கைகளும் திணிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute), உலக வர்த்தகத்தின் வீழ்ச்சியின் விளைவாக சூயஸ் கால்வாய் வருவாய்களும் வீழ்ச்சியடையும் காரணத்தால், குறிப்பாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, பணம் செலுத்தல்கள் மற்றும் சுற்றுலா ஆகிய வகைகளில் எகிப்து மாதத்திற்கு 2.3 முதல் 2.6 பில்லியன் டாலர் வரையிலுமான இழப்பை சந்திக்கக்கூடும் என்ற நிலையில், அது ஏழை மக்களை கடுமையாக தாக்கும். தொற்றுநோய் பரவுவதற்கு முன்னர், மூன்று எகிப்தியருக்கு ஒருவர் வீதம் 1.40 டாலருக்கும் குறைவான வருமானத்தில் தங்களது வாழ்க்கையை நடத்தினர் என்ற நிலையில், உலக வங்கியின் கூற்று “எகிப்தின் மக்கள்தொகையில் தோராயமாக 60 சதவிகிதத்தினர் ஏழைகளாகவோ அல்லது பாதிக்கப்படக்கூடியவர்களாவோ உள்ளனர்” என்று மதிப்பிட்டுள்ளது.

ஆறு மில்லியன் வேலைகளுக்கும் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பொறுப்பாளியாகவுள்ள அரசாங்கம் தான் அங்கு ஒரே முக்கிய வேலை வழங்குநராக உள்ள நிலைமைகளின் கீழ், பெரும்பாலானவர்கள் தினக்கூலித் தொழிலாளர்களாகவும், வீதிகளில் சுற்றித் திரிந்து வியாபாரம் செய்பவர்களாகவும் முறைசாரா துறையில் வேலை செய்கிறார்கள் என்பது, காலனித்துவ சக்திகளிடமிருந்து பெரளவிலான சுதந்திரத்தைப் பெற்ற பின்னர் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதிலுள்ள தேசிய முதலாளித்துவத்தின் மொத்த இயலாமையை நிரூபிக்கின்றது. இந்த தொழிலாளர்கள் பின்வரும் தெரிவுகள் இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்: வேலைக்குச் சென்று நோய்தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தை எதிர்கொள்வது அல்லது வேலைக்குச் செல்லாமல் பட்டினியால் வாடும் ஆபத்தை எதிர்கொள்வது.

முதலாளிகளை ஆதரிப்பதற்காக அரசாங்கம், 5.6 பில்லியன் டாலர் தொகை மதிப்பிலான பெருமளவிலான நடவடிக்கைகளுக்கு, முக்கியமாக மலிவான கடன்களை வழங்குவதற்கு அறிவித்துள்ளது, இதில் தொழிலாள வர்க்கத்திற்கு வருமானத்தை ஆதரிப்பதற்கு சிறிதளவேனும் வழங்கவில்லை.

உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை 25,000 ஐ நெருங்குகிறது என்பதுடன், இறப்புக்களின் எண்ணிக்கை அண்ணளவாக 1,000 ஐ எட்டியுள்ளது. ஆனால் இந்த புள்ளிவிபரங்கள் மொத்தமாக குறைத்து மதிப்பிடப்பட்டவை என்று பரவலாக நம்பப்படுகிறது, ஏனென்றால், அங்கு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது, வைரஸ் தொற்றின் காரணமாக மருத்துவமனைகளுக்கு வெளியே இறக்கும் நோயாளிகளைப் பற்றி தெரிவிப்பதில் உள்ள பின்னடைவு, நெருக்கடியின் அளவு பற்றியும், நோய்தொற்று பரவுவதில் தான் கொண்டிருந்த பங்கையும் மறைக்க அரசாங்கம் விரும்புவது போன்றவையே அதற்கு காரணம். மேலும், தரவுகள் பற்றி கேள்விகள் எழுப்பியதற்காக கார்டியன் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகைகளின் நிரூபர்களை எகிப்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

எகிப்தின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை இந்த நெருக்கடிக்கு திறம்பட பதிலிறுக்க முடியாத அதன் இயலாமையை நிரூபித்துள்ளது. இந்த நோயால் 19 மருத்துவர்கள் இறந்துவிட்டதாகவும், மேலும் 350 க்கும் மேற்பட்டவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் எகிப்திய மருத்துவ கூட்டமைப்பு (Egyptian Medical Syndicate) தெரிவித்துள்ளது. கோவிட்-19 நெருக்கடியை கையாள்வதில் சுகாதார அமைச்சகம் அலட்சியம் காட்டுவதாக இது குற்றம் சாட்டியதுடன், முன்னணி ஊழியர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும் மற்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதியுள்ள மருத்துவப் பிரவில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும் தவறிய நிலையில் மருத்துவர்களின் இறப்புக்கு இதுவே காரணம் என்றும் கூறியுள்ளது. மேலும், சுகாதார அமைப்பு “சீர்குலைந்துவிடும்” என்றும் இது எச்சரித்தது. இந்த எச்சரிக்கை, தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் படுக்கை வசதியுடன் சிகிச்சை பெற முடியாமல் 32 வயதான மருத்துவர் ஒருவர் இறந்து போனதன் பின்னர் வெளி வந்தது. இவரது மரணம், கெய்ரோவின் அல் முனிரா மருத்துவமனையின் மருத்துவர்களை முகநூல் ஊடாக வெகுஜன இராஜிநாமா கடிதத்தை வெளியிடுவதற்குத் தூண்டியது.

இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூட, இரண்டு வாரங்களுக்கு முன்பாக, புதிய நோயாளிகள் உருவாவதில் புதுப்பிக்கப்பட்ட எழுச்சி நிகழ்வதற்கான அச்சத்தைத் தூண்டும் வகையில், பொது போக்குவரத்தை மீண்டும் இயக்கத் தொடங்குவது, கடைகள் மற்றும் வணிகங்களை மீண்டும் திறப்பது, உணவு விடுதிகள் மற்றும் விருந்தோம்பல் துறையும் உள்நாட்டு சந்தையை இயக்க அனுமதிப்பது, போன்ற வழிகளில் பொருளாதாரத்தை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், விமானம் மற்றும் பயணத் தடை நாட்டின் சுற்றுலாத் துறையை முடக்கியது. இத்துறையின் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 12 முதல் 15 சதவிகிதமாகும், மேலும் இது மாதத்திற்கு 1 பில்லியன் டாலர் வெளிநாட்டு நாணயத்தை உள்கொண்டு வரும் துறையாகும் என்பதுடன், ஒரு முக்கிய வேலை வழங்குநராகவும் இது உள்ளது.

ஏப்ரலில், சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund-IMF), அதன் World Economic Outlook பத்திரிகையில், 2020 இல் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்க பொருளாதாரங்கள் 3.3 சதவிகிதமாக சுருங்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது. இந்த தொற்றுநோய் பிராந்தியத்தின் வேலையின்மை பிரச்சினையை அதிகப்படுத்தும் என்பதுடன், ஏற்கனவேயுள்ள அதிகளவிலான பொது மற்றும் வெளிநாட்டு கடன்களை இன்னும் மோசமாக்கும். சமூக பதட்டங்களை கூர்மையாக அறிந்துகொண்டு, தொற்றுநோய் வெடித்து பரவும் சூழலை தவறாக கையாளுவது என்பது, உள்நாட்டு அரசாங்கங்கள் மீதான அவநம்பிக்கையை அதிகரிக்கக்கூடும், மேலதிக சமூக அமைதியின்மைக்கு விதை விதைக்கக்கூடும் என்பதுடன், பிராந்திய நிச்சயமற்ற தன்மையையும் அதிகரிக்கச் செய்யும்” என்றும் இது சேர்த்துக் கூறுகிறது.

எகிப்துக்காக 2.8 பில்லியன் டாலர் புதிய அவசரகால நிதியுதவிக்கு சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே ஒப்புதலளித்துள்ளது என்றாலும் கூட, 5 பில்லியன் டாலருக்கு கூடுதலான மற்றொரு கடனை வழங்கவும் அது பரசீலித்து வருகின்றது. இது, குறிப்பாக ஏழைகளை பாதித்த எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்புபட்ட மானியங்களில் வெட்டுக்களை ஏற்படுத்தியது உள்ளிட்ட கடும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழிவகுத்ததான, 2016 இல் பேச்சுவார்த்தைகள் நடத்தி பெறப்பட்ட 12 பில்லியன் டாலர் சர்வதேச நாணய நிதியப் பொதி தொடர்புபட்ட வழிமுறைகளை பின்பற்றுகிறது. இந்நிலையில், கடந்த மாதம், பொதுத் துறை ஊதியங்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை குறைப்பதற்கு வகை செய்யும் வரைவு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதலளித்தது.

2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான சிறு கால இடைவெளிகள் தவிர கடந்த நான்கு தசாப்தங்களில் எகிப்தில் பெரும்பாலும் அவசரகால நிலை அமலில் உள்ளது என்ற உண்மை ஒருபுறமிருக்க, நிரந்தரமான பெரும் சர்வாதிகார அதிகாரங்களை எல்-சிசி பெறுவதற்கு பின்னால் பெரிதுபடுத்தப்பட்ட சமூக பதட்டங்களே காரணங்களாக உள்ளன.

எல்-சிசி தான் ஆட்சியிலுள்ள ஏழு ஆண்டுகளில், மதச்சார்பற்ற மற்றும் முஸ்லீம் சகோதரத்துவ அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் ஆகியோர் உட்பட, 60,000 அரசியல் ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களை எகிப்தின் கடுமையான நெரிசல் மிக்க மற்றும் அழுக்கடைந்த சிறைகளில் தள்ளியுள்ளார், அங்கு அவர்கள் பெரும்பாலும் எவ்வித விசாரணையுமின்றி பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்படுகிறார்கள். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch-HRW) கருத்துப்படி, மருத்துவ சிகிச்சை அவர்களுக்கு மறுக்கப்பட்டதாலும் மற்றும் அங்கு நிலவும் கொடூரமான நிலைமைகளினாலும் நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்புக் காவலில் இருந்தபோதே இறந்துள்ளனர்.

ஆட்சியை விமர்சிக்கத் துணிந்த ஊடகவியலாளர்கள் மற்றும் இணைய பதிவர்களை சிறையிலிடும் முன்னணி நாடுகளில் எகிப்தும் முதலிடம் வகிக்கின்றது. குறைந்தது 15 எதிர்ப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலாச்சார பிரமுகர்களின் உறவினர்களை சிசி கைது செய்துள்ளார், இவர்கள் நாடுகடத்தலின் போது தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்த சமூக ஊடகத் தளங்களை பயன்படுத்தியவர்களாவர். பாதுகாப்பு சேவைகள் 500 க்கும் மேற்பட்ட வலைத் தளங்களை முடக்கியுள்ளன, தொலைக்காட்சி வலைப்பின்னல் அமைப்புக்களில் பங்குகளை வாங்கியுள்ளன, மற்றும் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களின் கையெழுத்துப்படிவங்களை தணிக்கை செய்துள்ளன.

மத்திய கிழக்கு ஜனநாயகம் குறித்த திட்டம் (Project on Middle East Democracy-POMED) மற்றும் சர்வதேச கொள்கை மையம் (Center for International Policy-CIP) ஆகிய வாஷிங்டனை தளமாகக் கொண்ட இரண்டு சிந்தனைக் குழாம்களும், “சிசியின் ஆட்சி, வீதிகளில் அமைதியாக போராடுபவர்களை சுட்டு வீழ்த்துவது முதல் ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான அரசியல் எதிரிகளை சிறையில் அடைப்பது வரை மொத்த மனித உரிமை மீறல்களுக்கான திட்டமிட்ட வழிமுறைக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது” என்று கூறுகின்றன.

மேலும் இது, “சிசி அரசாங்கம், சுயாதீனமான அரசுசாரா நிறுவனங்களின் (non-governmental organizations-NGOs) செல்படும் திறனை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது, அனைத்துமே ஊடக சுதந்திரத்தை அகற்றின என்பதுடன், முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையிலான பதட்டங்களை ஸ்திரப்படுத்தின.

இவையனைத்தும் அடுத்தடுத்த அமெரிக்க நிர்வாகங்கள் மற்றும் முக்கிய ஐரோப்பிய சக்திகளின் மறைமுக ஆதரவுடன் தொடர்ந்து நடக்கின்றன. தற்போது புதிய சட்டம் உளவுத்துறை மற்றும் இராணுவப் படைகளுக்கு, கைது செய்தல், குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துதல், “சந்தேகத்திற்குரிய நபர்களை” தடுத்து வைத்தல் மற்றும் நீதித்துறை பரிசீலனை இல்லாமல் சொத்து பறிமுதல் செய்தல் உள்ளிட்ட பல பரந்தளவிலான சட்ட அமலாக்க அதிகாரங்களை வழங்குகிறது.

இது, அவசரகால சட்டத்தை மீறுவதாகக் கருதப்படும் குற்றங்கள் குறித்து பூர்வாங்க விசாரணைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் வழக்குகளை நடத்துவதற்கும் இராணுவத்திற்கு உத்தரவிடும் அதிகாரத்தை ஜனாதிபதியாக எல்-சிசிக்கு வழங்குகிறது.

பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவது, பொது மற்றும் தனியார் துறை அமைப்புக்களை முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ மூடுவது, விலைப்பட்டியல்களுக்கு பணம் செலுத்துவதை ஒத்திவைப்பது மற்றும் வெளிநாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு திரும்பும் எகிப்தியர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட பிற அதிகாரங்களையும் வழங்குகிறது. முக்கியமாக, அவற்றில் பல்வேறு வகையான பொது மற்றும் தனியார் கூட்டங்களை கட்டுப்படுத்துவது, சில பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதிப்பது மற்றும் பள்ளிகள் மற்றும் இளைஞர் மையங்களை மருத்துவமனைகளாக மாற்றுவது ஆகியவை அடங்கும்.

இந்த திருத்தங்கள் “‘பொது ஒழுங்கு’ என்ற பெயரில் உரிமைகளை கட்டுப்படுத்தக்கூடிய “புதிய அடக்குமுறை அதிகாரங்களை மூடிமறைக்க” வழி செய்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிடுகின்றது. மேலும் இது, “முன்மொழியப்பட்ட 18 திருத்தங்களில் ஐந்து மட்டுமே பொது சுகாதார மேம்பாடுகளுடன் தெளிவாக தொடர்புபட்டுள்ளன. அவசரகால சட்டத்தின் ஒரு பகுதியாக அவற்றை மாற்றுவது என்பது, பொது சுகாதார அவசரநிலை உள்ளதா என்பது பற்றி பொருட்படுத்தாமல், அவசரகால நிலை அறிவிக்கப்படும் போதெல்லாம் அதிகாரிகள் நடவடிக்கைகளை செயல்படுத்த முடியும் என்பதாகும்” என்றும் சுட்டிக்காட்டியது.

Loading