ட்ரம்ப் நிர்வாகம் அடையாளம் குறிப்பிடப்படாத துணை இராணுவப் பிரிவுகளை வாஷிங்டன் டி.சி. இல் பணியில் ஈடுபடுத்துகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூன் 3, புதன்கிழமை, வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கவசங்கள் மற்றும் “மரணம் விளைவிக்காத” ஆயுதங்கள் உள்ளிட்ட தந்திரோபாய கலகக் கவசங்களைக் கொண்ட மர்மமான நபர்களை எதிர்கொண்டனர். தேசிய பாதுகாப்புப் படையினருடன் தோன்றிய இந்த துணை இராணுவப் பிரிவுகள் அடையாளம் காணும் பட்டிகள் அல்லது அடையாளமுத்திரைகள் எதுவும் இல்லாமல் இருந்தன.

அமைதியாக ஒன்று கூடுவதற்கான ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக காவல்துறையினர் வன்முறைத் தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே ஜூன் 1 திங்கட்கிழமை ஒரு பாசிச கோபத்தில், ட்ரம்ப் தனது நிர்வாகம் அரசியலமைப்பை மிதித்து ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவ தயாராகி வருவதாக தெளிவுபடுத்தினார். இந்த அடையாளம் குறிக்கப்படாத துணை இராணுவ பிரிவுகள் அங்கு காணப்பட்டது அந்த திசையில் ஒரு முக்கிய படியாக கருதப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டக்காரர்களாலும் மற்றும் செய்தியாளர்களாலும் அடையாளம் காட்டும்படி கேட்டபோது, அந்த நபர்கள் அமைதியாக இருந்தனர், அல்லது "நீதித்துறையினர் [DOJ]" என்று வெறுமனே கூறினர்.

வெள்ளைமாளிகையை சுற்றிநின்ற அடையாளமற்ற படையினர் (Twitter/@GarrettHaake)

அடையாளங்கள் அல்லது சின்னங்களை அணிந்த சிலருக்கு, இவை பெரும்பாலும் தெளிவற்றவையாக இருந்தது. இதுவரை அடையாளம் காணப்பட்டவர்கள் கூட்டாட்சி சிறைச்சாலை (BOP) மற்றும் BOP இன் சிறப்பு செயல்பாட்டு நடவடிக்கைகுழு (SORT), BOPஇற்குள் பெரிதும் இராணுவமயமாக்கப்பட்ட தந்திரோபாய பிரிவுகள், சட்ட அமுலாக்க சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் (SWAT) பிரிவுகளைப் போன்றவையாக இருந்தன. விக்கிபீடியாவின்படி, BOP SORT கள் பொதுவாக “கலவரம், ஊழியர்கள் அல்லது கைதிகள் மீது தாக்குதல், தப்பித்தல் அல்லது தப்பிக்க முயற்சித்தல், பணயக்கைதிகள் சூழ்நிலைகள், மற்றும் அமெரிக்காவினுள் பயங்கரவாத அல்லது இராணுவத்தாக்குதலுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாகும்.

"மூத்த நீதித்துறை அதிகாரி" ஒன்றை மேற்கோள் காட்டி, ஜூன் 1 ம் தேதி ஒரு NPR அறிக்கை, அமெரிக்க அரச வழக்குத்தொடுனர் வில்லியம் பார் "கலவர தடுப்புக் குழுக்களை நாட்டின் தலைநகருக்கும் மியாமிக்கும் அனுப்புமாறு அங்குள்ள சிறைச்சாலைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.” என்று குறிப்பிட்டது.

பார் உடனான ஒரு செய்தியாளர் கூட்டத்தில், BOP இயக்குனர் மைக்கேல் கார்வஜால், இந்த அடையாளம் தெரியாத பிரிவுகளின் பிரசன்னம் பற்றி ஒரு நிருபரின் கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்தார். “முதலில், எந்தவொரு குறிப்பிட்ட சிறைச்சாலை [sic] பணியாளர்களைப் தங்களை அடையாளம் காண வேண்டாம் என்று கூறப்பட்டடது பற்றி எனக்குத் தெரியாது ".

"நான் பொதுவாக எங்கள் அமைப்பின் எல்லைக்குள் செயல்படுகிறோம் என்பதே இதற்கு காரணம். அதனால் நாங்கள் நம்மை அடையாளம் காட்டத்தேவையில்லை. எங்கள் அடையாளங்களில் பெரும்பாலானவை எமது அமைப்பு சார்ந்தவை, மேலும் டி.சி.யில் உள்ளவர்களுக்கு இது பற்றி எந்தவித அர்த்தமும் தெரிந்திருக்கவும் சாத்தியமில்லை ” என்றார்.

இதற்கு மாறாக, டி.சி.யில் உள்ள ஆர்ப்பாட்டக்கார்கள் அவர்களை யார் தடியால் அடித்து, மிளகு தூள் தெளித்து, இரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் சுட்டார்கள் என்பதை எவ்விதத்திலும் அறிய விரும்பினார்கள். அடையாளம் தெரியாத கூட்டாட்சி மற்றும் பொலிஸ் பணியாளர்களின் பிரசன்னமானது, பாசிச தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்கள் உட்பட பிற குழுக்களுக்கும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிரான வன்முறையில் சுதந்திரமாக பங்கேற்க ஒரு மறைப்பை உருவாக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இராணுவத்தினரால் அணியப்பட்டதைப் போன்ற கலகக் கருவிகளை பல வலைத் தளங்கள் பொதுமக்களுக்கு வழங்குகின்றன. இதில் "பொலிஸ்" என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட கலகக் கவசங்கள் அடங்கும்.

BOP பணியாளர்களைத் தவிர, FBI, போதைப்பொருள் அமுலாக்க நிறுவனம் (DEA), மதுபான, புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருள் பணியகம் (ATF) மற்றும் அமெரிக்க மார்ஷல்ஸ் சேவை ஆகியவற்றின் முகவர்களையும் நீதித்துறை பணியில் அமர்த்தியுள்ளது. நீதித் துறைக்கு வெளியே உள்ள பிற அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு சேவை (FPS), சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (CBP), இரகசிய சேவை மற்றும் யு.எஸ். பார்க் காவல்துறை ஆகியவையும் இதில் அடங்கும்.

பல்வேறு அமைப்புகளும் எந்த அளவிற்கு ஈடுபட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், BuzzFeed இல் ஒரு கட்டுரை, “இரகசிய கண்காணிப்பை நடத்துவதற்கும்” எதிர்ப்பாளர்கள் மீது உளவுத்துறை விவரங்கள் சேகரிப்பதற்கும் DEA க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. போராட்டக்காரர்களை புகை குண்டுகள் மற்றும் மிளகு பந்துகளுடன் தாக்க, பார்க் காவல்துறை உதவியுள்ளது.

CBP யின் ஈடுபாடு குறிப்பாக குறிப்பிடத்தக்கது. மே 29 அன்று, மினசோட்டாவின் மினியாபோலிஸ் எதிர்ப்புக்களைத் தொடர்ந்து ஒரு பிரிடேட்டர் ட்ரோனை (Reaper என்றும் அழைக்கப்படுகிறது) அந்த அமைப்பு பறந்தது. இது WSWS இன் பகுப்பாய்வை நிரூபிக்கிறது, இது CBP மற்றும் ICE போன்ற முகாமைகள் வெளிப்புற "அச்சுறுத்தல்களை" நோக்கி வெளிப்படையாக இயக்கப்பட்டாலும், உண்மையில் இந்த முகமைகளின் கட்டமைப்பானது இறுதியில் அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவே இயக்கப்படுகிறது.

Loading