முன்னோக்கு

தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அழைப்பு! ட்ரம்பின் ஆட்சி சதியை தடுப்போம்!

 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளை மாளிகை இப்போது, ஓர் இராணுவ சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும், அரசியலமைப்பை அகற்றுவதற்கும், ஜனநாயக உரிமைகளை ஒழித்து, அமெரிக்கா எங்கிலும் பரவி உள்ள பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டங்களை வன்முறையாக ஒடுக்குவதற்குமான ஓர் அரசியல் சதியாலோசனை மையமாக ஆகி உள்ளது.

ஜோர்ஜ் ஃப்ளோய்ட்டின் மரணம் தொடர்பாக 2020 ஜூன் 3 புதன்கிழமை லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்ற சதுக்கத்தில் எதிர்ப்பாளர்கள் (AP Photo/Matt Dunham)

திங்கட்கிழமை இரவு டொனால்ட் ட்ரம்ப் அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்க உத்தரவிட்டு, 1807 கிளர்ச்சி சட்டத்தைக் கையிலெடுக்கவும் மற்றும் இராணுவச் சட்டத்தை அமலாக்குவதற்காக மாநிலங்களுக்குள் பெடரல் துருப்புகளை நிலைநிறுத்த அச்சுறுத்திய போது, கட்டவிழ்ந்த அரசியல் நெருக்கடி வேகமாக தீவிரமடைந்து வருகிறது.

அமெரிக்காவின் ஜனநாயகம் பொறிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஓர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நடத்துவதற்கான ட்ரம்பின் முயற்சியும் அதேநேரத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நடந்துள்ள தொடர்ச்சியான சம்பவங்களை விளங்கப்படுத்த வேறு வழி எதுவுமில்லை. தொடர்ச்சியாக பல அசாதாரணமான பொது அறிக்கையில், உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ பிரமுகர்கள், ட்ரம்ப் ஓர் இராணுவ சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க முயன்று வருவதை அவர்கள் நம்புகிறார்கள் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை.

பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பெர் குறிப்பிடுகையில், கிளர்ச்சி சட்டத்தைக் கையிலெடுப்பதற்கும் மற்றும் நாடெங்கிலும் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்குமான ட்ரம்பின் அச்சுறுத்தலை அவர் எதிர்ப்பதாக ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அமெரிக்க நகரங்களில் ரோந்து செல்வதற்குப் பணியிலுள்ள சிப்பாய்களைப் பயன்படுத்துவது என்பது "மிகவும் அவசரமான மற்றும் மோசமான நிலைமைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய கடைசி முயற்சியாக" இருக்க வேண்டும். நாம் இப்போது அத்தகைய நிலைமைகளில் ஒன்றில் இல்லை,” என்று எஸ்பெர் தெரிவித்தார். நியூ யோர்க் டைம்ஸிடம் பேசிய ஓர் அதிகாரியின் தகவல்படி, ட்ரம்ப் "திரு. எஸ்பெரின் கருத்துக்களால் கோபமடைந்து, அவரை பின்னர் வெள்ளை மாளிகைக்கு அழைத்து கடுமையாக சாடியுள்ளார்...” வெள்ளை மாளிகையின் பத்திரிகை தொடர்பு செயலர் Kayleigh McEnany, எஸ்பெர் விரைவிலேயே ஜனாதிபதியின் மந்திரிசபையில் இருந்து நீக்கப்படக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு விடையிறுக்கும் வகையில், எஸ்பெர் பின்வாங்கியதுடன் தற்போது வாஷிங்டன் டிசி இல் உள்ள 82 ஆவது படைப்பிரிவின் 750 சிப்பாய்களை முன்னர் அறிவித்திருந்தவாறு ப்ராக் கோட்டை (Fort Bragg) க்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

எஸ்பெரின் கருத்துக்களைப் பின்தொடர்ந்து, ட்ரம்பின் முதல் பாதுகாப்பு செயலரான முன்னாள் கப்பற்படை தளபதி ஜேம்ஸ் மாட்டீஸிடம் இருந்து ட்ரம்ப் மீது ஓர் அசாதாரண கண்டனம் வந்தது. நாம் இங்கே மாட்டீஸின் கருத்துக்களைச் சற்றே விபரமாக மேற்கோளிடுகிறோம், இது ஏனென்றால் 2003 ஈராக் படையெடுப்பில் முன்னணி பாத்திரம் வகித்த இந்த "போர் வெறியர் மாட்டீஸ்" (mad dog Mattis) க்கு எந்தவொரு அரசியல் ஆதரவும் வழங்குகிறோம் என்பதற்காக அல்ல, மாறாக இராணுவத்திற்குள் என்ன நடந்து வருகிறதோ அதனுடன் நன்கு நெருக்கமான அறிவைக் கொண்ட ஒருவராக, அவர் அப்பட்டமான மதிப்பீட்டை வழங்குகிறார் என்பதனால் ஆகும்.

ட்ரம்ப் அரசியலமைப்பைத் தூக்கியெறிவதற்கு முயன்று வருவதாக மாட்டீஸ் குற்றஞ்சாட்டினார். “சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர், நான் இராணுவத்தில் சேர்ந்த போது,” அவர் எழுதுகிறார், “நான் அரசியலமைப்பை ஆதரிப்பேன், பாதுகாப்பேன் என்று பதவி பிரமாணம் எடுத்தேன். அதே உறுதிமொழிகளை எடுத்த துருப்புகள் ஏதேனுமொரு சூழலில் அவர்களின் சக குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதற்காக உத்தரவிடப்படுவார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை — இராணுவத் தலைமை பக்கவாட்டில் நிற்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு முரணான ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதைக் குறித்தும் நினைத்து பார்க்கவில்லை.”

மாட்டீஸ் தொடர்ந்து குறிப்பிட்டார்:

நமது நகரங்களை, எந்த விதத்திலும், நம் ஒழுங்கமைந்த இராணுவம் "ஆதிக்கம்" செலுத்துவதற்காக அழைக்கப்படும் ஒரு "போர்க்களமாக" சிந்திப்பதை நாம் நிராகரிக்க வேண்டும். உள்நாட்டில், மிகவும் அரிய சந்தர்ப்பங்களில், மாநில ஆளுநர்களால் நமது இராணுவத்தைப் பயன்படுத்துமாறு கேட்கப்பட்டால் மட்டுமே நாம் அவ்வாறு செய்ய வேண்டும். வாஷிங்டன் டிசி இல் நாம் பார்த்ததைப் போல, நமது விடையிறுப்பை இராணுவமயப்படுத்துவது, இராணுவத்திற்கும் மக்கள் சமூகத்திற்கும் இடையே ஒரு மோதலை —ஒரு தவறான மோதலை—ஏற்படுத்திவிடும். அது சீருடையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் அவர்கள் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துள்ள சமூகத்திற்கும், அவர்களே கூட இதன் பாகமாக இருக்கின்ற நிலையில், இதற்கு இடையே நிலவும் நம்பிக்கை பிணைப்பை உறுதி செய்யும் தார்மீக அடித்தளத்தை அழித்துவிடும். பொது ஒழுங்கைப் பேணுவது என்பது சிவில் மாநில அரசுகளின் மீதும் மற்றும் தங்களின் சமூகங்களைச் சரிவர புரிந்து வைத்து அவற்றுக்குப் பதிலளிக்கக்கூடிய உள்ளூர் தலைவர்களின் மீதும் தங்கியுள்ளது.

மாட்டீஸ் மறைமுகமாக ட்ரம்பின் இராணுவக் கருத்துருவை நாஜி ஆட்சியின் கருத்துருவுடன் ஒப்பிட்டு அவர் அறிக்கையை நிறைவு செய்திருந்தார்.

முப்படைகளின் தலைமைத் தளபதிகளின் ஓய்வு பெற்ற துணை தலைவர் அட்மிரல் Sandy Winnefeld நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட ஒரு மின்னஞ்சலில் எழுதினார்: “பொதுமக்களுக்கும் இராணுவத்திற்குமான உறவுகளில், நான் எனது வாழ்நாளில் காணும், மிகவும் அபாயகரமான தருணத்தில் நாம் உள்ளோம். உண்மையில் தேசத்தின் உயிர்பிழைப்பையே அச்சறுத்தும் மிகவும் பயங்கரமான சூழ்நிலையில் மட்டுந்தான் பெடரல் படைகளைப் பயன்படுத்த வைத்திருக்க வேண்டும் என்பது இன்றியமையாத விதத்தில் முக்கியமாகும். நமது மூத்த உயர்மட்ட இராணுவத் தலைவர்கள், இத்தகைய விடயங்களை அவர்களின் அரசியல் கட்டளை சங்கிலி புரிந்து வைத்திருப்பதை, உறுதிப்படுத்தி வைப்பது அவசியமாகும்,” என்றார்.

இத்தகைய இராணுவப் பிரமுகர்களில் எவருமே ஜனநாயகத்தினை பின்பற்றுவதற்காக அர்பணித்திருக்கவில்லை. இவர்களின் அறிக்கைகள், ட்ரம்பின் நடவடிக்கைகள் பாரிய மக்கள் எதிர்ப்புடன், நாசகரமான அரசியல் விளைவுகளைச் சந்திக்கும் என்ற அச்சத்தால் உந்தப்படுகின்றன.

டைம்ஸ் குறிப்பிடுகிறது, “மூத்த பென்டகன் தலைவர்கள் பொதுமக்கள் ஆதரவை இழந்து வருவதைக் குறித்து மிகவும் கவலைக் கொண்டுள்ளனர் —இராணுவப் பணியில் உள்ளவர்கள் மற்றும் இராணுவப் பட்டியலில் இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் கருப்பின மக்கள்—முப்படைகளின் தலைமை தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் ஏ. மில்லெ புதன்கிழமை உயர்மட்ட இராணுவத் தளபதிகளுக்கு அனுப்பிய ஒரு சேதியில், ஆயுதப் படைகளின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசியலமைப்பைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துள்ளார் என்பதை வலியுறுத்தினார், அவர் கூறுகையில், இது 'அமெரிக்கர்களுக்கு பேச்சு சுதந்திர உரிமையை மற்றும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமையை வழங்குகிறது.'”

இப்போதிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகள் அனைவராலும் —ஒபாமா, கிளிண்டன், புஷ் மற்றும் கார்டர்— அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இந்த அறிக்கைகள் மிகவும் எச்சரிக்கையோடு இருந்ததுடன், ஆட்சி சதியைக் குறித்து எந்த வெளிப்படையான எச்சரிக்கையும் விடுக்கவில்லை. அவர்கள் ட்ரம்புக்கு எதிராக எந்த குறிப்பிட்ட நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அது ட்ரம்பை ஆதரிப்பதைக் குறித்து இராணுவத் தலைவர்களுக்கு அறிவுறுத்தும் ஓர் எச்சரிக்கை முயற்சி என்பதை விட மக்களுக்கு குறைந்த ஒரு முறையீடே இருந்தது.

ட்ரம்பைச் சுற்றி உள்ள பாசிச பரிவாரங்களின் தரப்பில் இருந்து, டைம்ஸ், “துருப்புகளை அனுப்புங்கள்,” என்று தலைப்பிட்டு செனட்டர் டோம் காட்டனின் கருத்துரையைப் பிரசுரித்தது. இந்த அரசியல் சதிகாரர் அறிவித்தார், “அனைத்திற்கும் மேலாக எதையும் விட ஒரு விடயம் நமது வீதிகளில் ஒழுங்கை மீட்டுக் கொண்டு வரும்: அதுவாவது, சட்டத்தை முறிப்பவர்களைக் கலைத்து, கைது செய்து, இறுதியில் அதைரியப்படுத்த பெருவாரியாக படையை காட்சிப்படுத்த வேண்டும். காட்டன் எழுதுகிறார், என்ன அவசியமோ அதை செய்ய "மூளை குழம்பிய அரசியல்வாதிகள்" மறுத்து வருவதால், “'கிளர்ச்சியின் போது, அல்லது சட்டங்களுக்கு முட்டுக்கட்டைகள் ஏற்படும்போது, 'ஜனாதிபதி இராணுவத்தையோ' அல்லது ‘ஏதேனும் பிற வழிவகைகளையோ' பயன்படுத்த அங்கீகாரம் வழங்கும் கிளர்ச்சி சட்டத்தை ட்ரம்ப் கையிலெடுப்பது அவசியமாகும்.”

அரசியல் நிலைமை கத்தி முனையில் நிற்கிறது. அமெரிக்காவின் வரலாற்றில் அந்நாடு ஒருபோதும் இராணுவ கையகப்படுத்துதலுக்கு இந்தளவுக்கு நெருக்கமாக இருந்ததில்லை. இராணுவ நிலைநிறுத்தல்களுக்கான அச்சுறுத்தல்கள் இன்னமும் நடந்து வருகின்றன. புதன்கிழமை இரவு டைம்ஸ் அறிவித்தது: “மூத்த பென்டகன் தலைவர்களிடம் இருந்து அமைதியாக இருக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், புதன்கிழமை இரவு வாஷிங்டனின் மண்ணில் துருப்புகள் அதிக இராணுவமயப்பட்ட பலத்தைக் காட்ட தயாராகியது போலத் தோன்றியது. வெள்ளை மாளிகைக்கு அருகே நிச்சயமாக பொலிஸிற்கு முன்னால் தேசிய பாதுகாப்புப் படைகள் முன்நகர்த்தப்பட்டன, ஏறத்தாழ பாதுகாப்பு பிரசன்னத்தில் பகிரங்க முகமாக அது ஆகியிருந்தது. அவர்கள் இராணுவப் போக்குவரத்து டிரக்குகளைக் கொண்டு வீதிகளை முடக்கி இருந்ததுடன், போராட்டக்காரர்களுக்கு எதிராக சுற்றளவை விரிவாக்கி இருந்தனர்.”

கட்டவிழ்ந்து வரும் இந்த அரசியல் சதிக்கு முன்னால், ஜனநாயகக் கட்சி கோழைத்தனம் மற்றும் உடந்தைத்தனத்தின் அதன் பழக்கப்பட்ட கலவையோடு செயல்பட்டு வருகிறது. ஒரேயொரு பிரதான ஜனநாயகக் கட்சி அரசியல்வாதியும் கூட ட்ரம்ப் நிர்வாகத்தின் சர்வாதிகார நடவடிக்கைகளைப் பகிரங்கமாக கண்டிக்கவில்லை. அவர்கள் அரசுக்குள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் மோதலைப் பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைத்து வைக்க அவர்களால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர். ட்ரம்பின் "வாய்சவடால்" “உதவிகரமாக இல்லை" என்பதுடன், அது "நிலைமையைக் கிளறி விடவே" சேவையாற்றி வருகிறது என்பதே முன்னணி ஜனநாயகக் கட்சியினரின் தொனியாக உள்ளது. இந்த நெருக்கடிக்கு மிகவும் அனுதாபமான விடையிறுப்புகளில் ஒன்று செனட்டர் பேர்ணி சாண்டர்ஸிடம் இருந்து வந்துள்ளது, அவர் “சுவாரஸ்யமாக படிக்கக்கூடியது,” என்ற வாசகத்தை இணைத்து வெறுமனே மாட்டீஸ் அறிக்கையை மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.

ஜனவரியில் நடத்தப்பட்ட வெகு நாட்களாக மறந்துவிடப்பட்டுள்ள பதவிநீக்க குற்றவிசாரணையின் போது, ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்துகையில், ட்ரம்பை உடனடியாக நீக்குவது அவசியமாகும் ஏனென்றால் அவர் ரஷ்யாவுடனான உக்ரேனின் மோதலில் உக்ரேனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தி விட்டதாக கூறியிருந்தார் என்று வலியுறுத்தினர். ரஷ்யாவுடனான அவரின் உறவுகளில் ட்ரம்ப் போதுமானளவுக்கு ஆக்ரோஷமாக இல்லை என்பதற்காக அவரை நீக்க வேண்டுமென அவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் இப்போதோ, ட்ரம்ப் ஓர் இராணுவ ஆட்சி சதியை நடத்தவும் மற்றும் அமெரிக்காவின் அரசியலமைப்பு ஆட்சியைத் தூக்கியெறியவும் முயன்று வருகையில், ஜனநாயகக் கட்சியினர் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் இருக்கட்டும், ட்ரம்புக்கு எந்த விதமான தீவிர எதிர்ப்பைக் கூட காட்டவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களைத் தாங்கிப் பிடிக்கும் விடயம் என்று வருகையில், ஜனநாயகக் கட்சியினர் முழுவதும் நெருப்பு கந்தகமாக கொதிக்கின்றனர். ஆனால் நேரடியான சர்வாதிகார அச்சுறுத்தலை எதிர்கொள்கையில், அவர்கள் சாந்தமானவர்களாக பணிவடக்கமாக நடந்து கொள்கிறார்கள்.

அவர்களின் கோழைத்தனத்திற்கு அடியில் அடிப்படை வர்க்க நலன்கள் உள்ளன. ட்ரம்புடன் அவர்களின் தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சியினர் அதே வர்க்க நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர். வேறெதையும் விட அவர்கள் அதிகமாக, ட்ரம்புக்கான எதிர்ப்பு முதலாளித்துவ நிதியியல்-பெருநிறுவன செல்வந்த தட்டுக்களின் நலன்களை அச்சுறுத்தும் புரட்சிகர பரிமாணங்களை எடுத்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

வெள்ளை மாளிகை சதியின் இலக்கு தொழிலாள வர்க்கமாகும். பொலிஸ் வன்முறைக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களின் வெடிப்பானது, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு மற்றும் வேலைக்குத் திரும்ப செய்வதற்கான ஆட்கொலை பிரச்சாரம் ஆகியவற்றின் விளைவாக மிகப் பெரியளவில் தீவிரமடைந்துள்ள சமூக சமத்துவமின்மை மீது தொழிலாளர்களிடையே நிலவும் அளப்பரிய சமூக கோபத்துடன் குறுக்கிட்டு விடுமோ என்று பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்கள் பீதியுற்றுள்ளன.

இந்த நெருக்கடி கடந்து சென்று விடும் என்று நினைப்பதை விட மிகவும் அபாயகரமானது வேறெதுவும் இருக்காது. மாறாக இது ஆரம்பமாகி உள்ளது. முன்நிகழ்ந்திராத இந்த நெருக்கடியில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமான சமூக மற்றும் அரசியல் சக்தியாக தலையீடு செய்ய வேண்டும். அது வர்க்க போராட்ட உத்திகள் மற்றும் சோசலிச புரட்சிக்கான அணுகுமுறைகள் மூலமாக வெள்ளை மாளிகை சதியை எதிர்க்க வேண்டும்.

கடந்த வாரங்களின் போது நடந்துள்ள ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கிய சம்பவங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு பிராந்தியத்திலும் மாநிலத்திலும், நூறாயிரக் கணக்கான உழைக்கும் மக்களும் இளைஞர்களும், பல-இன மற்றும் பல-வம்சாவழியினரின் ஒற்றுமையை நல்லிணக்கத்தை அசாதாரணமான விதத்தில் காட்டி, அமைப்புமயப்படுத்தப்பட்ட இனவாதம் மற்றும் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்க்க வீதிகளில் இறங்கி உள்ளனர். சதிக் கும்பல், ஜிம் குரோவ் சட்டங்கள் (Jim Crow laws) மற்றும் கும்பலாக கொலை செய்தல் ஆகியவற்றின் பழைய கோட்டையாக விளங்கும் தெற்கு பகுதி சில மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களின் காட்சியாக உள்ளது. போராட்டக்காரர்கள், பதினெட்டாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த அமெரிக்க புரட்சி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு உள்நாட்டு போர் ஆகியவற்றின் மகத்தான பாரம்பரியமாக விளங்கும் ஆழமாக வேரூன்றிய ஜனநாயக மற்றும் சமத்துவவாத உணர்வுகளுக்குக் குரல் கொடுத்து வருகின்றனர்.

ட்ரம்ப், பென்ஸ் மற்றும் பதிவியிலுள்ள அவர்களின் சதிகாரர்களை நீக்குவதற்கான கோரிக்கையை உயர்த்துவதே வெள்ளை மாளிகையில் கருகொண்டுள்ள குற்றகரமான சதிக்கு ஒரே நம்பகமான பதிலாக இருக்கும்.

தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டின் மூலமாக மட்டுமே இது அடையப்பட முடியும், அது இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஒட்டுமொத்தமாக இணைந்து ஒரு நாடு-தழுவிய அரசியல் வேலைநிறுத்தத்தை தொடங்க வேண்டும்.

சர்வாதிகாரம் வேண்டாம்!

ட்ரம்ப் மற்றும் பென்ஸ் பதவி விலகு!

இந்த போராட்டத்தில் செயலூக்கத்துடன் இணையுமாறு சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்களுக்கும் அழைப்பு விடுகின்றன.

Loading