ஜேர்மன் இடது கட்சித் தலைவர் சாஹ்ரா வாகன்கினெக்ட் பூகோளமயமாக்கலை மீளப்பெற அழைப்பு விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தேசியவாதம் என்ற சடலத்திலிருந்து எடுத்த நஞ்சுக்கிருமியினால் தடுப்பூசி போடுவதன் மூலம் பொருளாதார உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் பாசிசத்தின் பெயரை தாங்கும் இரத்தத்தினை விஷமாக்குவதில் சென்றுமுடிகின்றது.

லியோன் ட்ரொஸ்கியின் "தேசியவாதமும் பொருளாதார வாழ்வும்" ஏப்பிரல் 1934

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு இடது கட்சித் தலைவர் சாஹ்ரா வாகன்கினெக்ட்டின் பதில் பூகோளமயமாக்கலை மீளப்பெறுதலுக்கு அழைப்பு விடுப்பதாகும். மே 20 அன்று, வலதுசாரி வார இதழான Focus க்கு அவர் தொடர்ந்து எழுதும் கட்டுரையில் தனது கருத்துக்களை கோடிட்டுக் காட்டினார்.

"நடுத்தர வர்க்கத்தின் செல்வத்தை காப்பாற்ற ஜேர்மனிக்கு இப்போது என்ன தேவை" என்ற தலைப்பில், "தொழிலாளர்கள் மற்றும் உள்நாட்டு விநியோகஸ்தகளை மலிவான இறக்குமதி மற்றும் விரோதமாக கையகப்படுத்துதல்களிலிருந்து பாதுகாப்பது தேசியவாதமல்ல, ஜனநாயகக் கடமையாகும்." தொழில்துறை மதிப்பின் உருவாக்கத்தை நாம் ஐரோப்பாவிற்கு திரும்பக் கொண்டுவந்து, டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகளில் ஏனையோரை நாம் சார்ந்திருப்பதைக் கடக்கவேண்டும்” என அவர் எழுதினார்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஜேர்மனியும் அமெரிக்காவும் தங்கள் தொழில்துறை பின்தங்கிய நிலையை "உயர் சுங்கவரி கட்டணங்களை பாதுகாப்பதன் பின்னால்" முறியடித்தன என்று வாதிடுவதன் மூலம் "உள்நாட்டு பொருளாதாரத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்" என்ற தனது அழைப்பை வாகன்கினெக்ட் நியாயப்படுத்துகிறார். அவர் தொடர்கிறார்: "இது சுதந்திர வர்த்தகம் அல்ல, ஆனால் பாதுகாப்புவாதம் இரு நாடுகளையும் செல்வச்செழிப்புள்ளதாக ஆக்கியது."

மிக சமீபத்திய பூகோளமயமாக்கலால் பயனடைபவர்கள், “மேற்கத்தைய விளையாட்டின் விதிகளான சுதந்திர வர்த்தகம், மூலதனத்தின் சுதந்திர இயக்கம், பொருளாதாரத்திலிருந்து அரசை திரும்பப் பெறுதல் ஆகியவற்றால் இல்லாமல் தங்கள் சொந்த விதிகளின்படி நடந்த நாடுகள் மட்டுமே” என்று அவர் வலியுறுத்துகிறார். சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா "தேசிய தொழில்துறை துறைகளை சர்வதேச போட்டியில் உயிர்வாழ தம்மால் நிற்கக்கூடியதாக இருந்தபோது மட்டுமே மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் திறந்துவிட்டன."

"பூகோளமயமாக்கலின் வெற்றியாளர்கள்" மீதான தாக்குதல்களுடன் பாதுகாப்புவாதத்திற்கான அழைப்பை வாகன்கினெக்ட் இணைக்கிறார். இந்த வெற்றியாளர்களில் அவர் "ஆங்கிலோ-சாக்சன் நிதி முதலீட்டாளர்கள்", "பில்லியனர்களின் சர்வதேச குழு" மற்றும் "மேற்கத்திய பெருநகரங்களின் நவநாகரீக உள்-நகர வட்டங்களில் வாழும் புதிய மேற்தட்டு கல்வியாளர்களை" உள்ளடக்குகின்றார்.

"யாருடைய வாழ்க்கை கடினமாகவும், நிச்சயமற்றதாகவும் மாறிவிட்டதோ" அவர்களை இதற்கு எதிராக அவர் முன்வைக்கின்றார். பூகோளமயமாக்கலின் "தோல்வியுற்றவர்களில்" பல கல்வியாளர்கள் உள்ளனர். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக "பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்கள் மற்றும் ஒரு திடமான வேலை மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கடந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியை விட இன்று மிகக் குறைவாக உள்ளது."

சுங்கவரித்தடைகள் மற்றும் பிற பாதுகாப்புவாத நடவடிக்கைகள் சமூக ரீதியாக பின்தங்கியவர்களைப் பாதுகாக்க உதவுகின்றன என்ற கூற்று தவறானதும் மற்றும் அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமானது. இது சோசலிசத்தின் பாரம்பரியத்தில் அல்ல, மாறாக பாசிசத்தின் பாரம்பரியத்தில் நிற்கிறது. இது தேசியவாதத்தைத் தூண்டுவதற்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும், வர்த்தகப் போர் மற்றும் இராணுவப் போருக்குத் தயாராவதற்கும் உதவுகிறது.

முசோலினி மற்றும் ஹிட்லர் இருவரும் 1930 களின் ஆழ்ந்த பொருளாதார மந்தநிலைக்கு உலகப் பொருளாதாரத்தை குற்றஞ்சாட்டி, தேசியவாத பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றினர். லெனினுடன் ரஷ்ய அக்டோபர் புரட்சியின் மிக முக்கியமான தலைவரும், நான்காம் அகிலத்தின் நிறுவனருமான லியோன் ட்ரொட்ஸ்கி, ஏப்ரல் 1934 இல் “தேசியவாதமும் பொருளாதார வாழ்க்கையும்” என்ற கட்டுரையை எழுதினார், அதில் இருந்து மேற்கண்ட மேற்கோள் எடுக்கப்பட்டுள்ளது.

அதில், ட்ரொட்ஸ்கி பொருளாதார தேசியவாதத்தின் முரண்பாடான, ஆழ்ந்த பிற்போக்குத்தனமான உள்ளடக்கத்தை விளக்குவது மட்டுமல்லாமல், இரண்டாம் உலகப் போருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் “மோசமான பாசிச தேசியவாத எரிமலை வெடிப்புகள் மற்றும் பெரும் மோதல்களுக்கே தயாரிப்பு செய்கின்றது. இது உலக அரங்கில் அழிவைத் தவிர வேறொன்றையும் தரவில்லை” என்றும் அவர் கணித்துள்ளார். கடந்த 25 அல்லது 30 ஆண்டுகளில் இந்த அனுபவங்கள் அனைத்தும் வரவிருக்கும் நரகத்தின் இசையுடன் ஒப்பிடும்போது ஒரு முட்டாள்தனமான வெளிப்பாடாக மட்டுமே தோன்றும்”.

ட்ரொட்ஸ்கியின் மதிப்பீடானது வரலாற்றைப் பற்றிய மார்க்சிச புரிதலை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது மனித முன்னேற்றத்தின் உந்து சக்தியாகும். 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், முதலாளித்துவ புரட்சிகள் மத்தியகால பிரத்தியேகவாதத்தை முறியடித்து, முதலாளித்துவ பொருளாதாரம் அபிவிருத்தியடையக்கூடிய நவீன தேசிய அரசுகளை உருவாக்கியது.

ஆனால் தேசிய கட்டமைப்பிற்குள் பொருளாதார வளர்ச்சி நிறுத்தப்படவில்லை. உலக வர்த்தகம் வளர்ச்சியடைந்து அதன் கவனம் உள்சந்தைகளில் இருந்து வெளிச்சந்தைக்கு மாறியது.

"19 ஆம் நூற்றாண்டு, நாட்டின் தலைவிதியை அதன் பொருளாதார வாழ்க்கையின் தலைவிதியுடன் இணைப்பதால் அடையாளப்படுத்தப்பட்டது; ஆனால் நமது நூற்றாண்டின் அடிப்படை போக்கு, தேசத்துக்கும் பொருளாதார வாழ்க்கைக்கும் இடையே வளர்ந்து வரும் முரண்பாடாகும்” என ட்ரொட்ஸ்கி விளக்குகிறார். "தற்போதைய நெருக்கடியானது கடந்த காலத்தின் அனைத்து முதலாளித்துவ நெருக்கடிகளும் தொகுக்கப்பட்டுள்ள விதத்தில் எல்லாவற்றிற்றும் மேலாக தேசிய பொருளாதார வாழ்க்கையின் அனைத்து நெருக்கடியையும் குறிக்கிறது."

ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் போட்டியாளர்களின் இழப்பில், வன்முறை விரிவாக்கத்தால், இந்த நெருக்கடியை "தீர்க்க" முயன்றன. இரண்டு உலகப் போர்களுக்கு இதுவே முக்கிய காரணம். “[முதல்] உலகப் போரின் முக்கிய காரணங்களில் ஒன்று, ஜேர்மன் மூலதனம் ஒரு பரந்த அரங்கிற்குள் உடைத்துக்கொண்டு நுழைய முயற்சித்தது. ஹிட்லர் 1914-1918ல் ஒரு படைத் தலைவனாக ஜேர்மன் தேசத்தை ஒன்றிணைக்க அல்ல, மாறாக ஒரு அதீத-தேசியவாத ஏகாதிபத்திய திட்டத்திற்காகவே போராடினார்.” என ட்ரொட்ஸ்கி எழுதினார்.

ஆனால் போர் எந்த தீர்வையும் கொண்டு வரவில்லை. எனவே, 1933 இல், ஆளும் உயரடுக்கினர் ஹிட்லரை சான்சிலராக நியமித்து அவருக்கு சர்வாதிகார அதிகாரங்களையும் வழங்கினர். தொழிலாளர்கள் இயக்கத்தை அடித்து நொருக்கி தேசிய பொருளாதாரத்தை ஒன்றுகுவிப்பதன் மூலம் இரண்டாம் ஏகாதிபத்திய உலகப் போருக்குத் தயாராவதற்கு நாஜிக்கள் பயன்படுத்தப்பட்டனர்.

ஏறக்குறைய 90 ஆண்டுகள் பழமையானது என்றாலும், ட்ரொட்ஸ்கியின் கட்டுரை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானது. உலகப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைப்பு முன்னோடியில்லாத அளவை எட்டியுள்ளது. வர்த்தகம் மட்டுமல்ல, உற்பத்திச் சங்கிலிகளும் இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளன. உலக மக்கள் தொகை 1933 இல் இருந்ததை விட நான்கு மடங்கு பெரிதாகி, கிட்டத்தட்ட 8 பில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.

"பொருளாதாரத்தை காலாவதியான தேசிய அரசுக்கு அடிபணியச் செய்வதற்கான" முயற்சியானது, அன்றையதை விட இன்று பேரழிவு தரக்கூடிய விளைவுகளைக் கொண்டுள்ளது. இது மனிதகுலத்தின் உயிர்வாழ்வை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஆயினும்கூட, அமெரிக்காவிலிருந்து தொடங்கி, பொருளாதார தேசியவாதம் மற்றும் வர்த்தகப் போர் ஆகியவை காட்டுத்தீ போல் பரவுகின்றன. ட்ரொட்ஸ்கியை மீண்டும் மேற்கோள் காட்டுவதானால், "நவீன தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ற பெரிய அரங்கைத் உருவாக்குவதற்கு பதிலாக, ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தின் உயிருள்ள அமைப்பை துண்டித்து வெட்டுகிறார்கள்."

ஜேர்மனி உட்பட அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் பாரிய மீள் ஆயுதமயமாக்கலில் ஈடுபட்டுள்ளன. அணு ஆயுதங்களை புதுப்பிக்க பில்லியன்கள் செலவிடப்படுகின்றன. குறிப்பாக சீனாவிற்கு எதிரான போருக்கான ஏற்பாடுகள் நன்கு முன்னேறியுள்ளன. எல்லா இடங்களிலும், வலதுசாரி மற்றும் பாசிச சக்திகள் தமது தலையை உயர்த்துகின்றன.

முனைவர் பட்டம் பெற்ற பொருளாதார வல்லுநராக, அமைதியான வழிமுறைகளால் பொருளாதாரத்தை பல தசாப்தங்கள் அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைக்கு மீண்டும் கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதை வாகன்கினெக்ட் இயல்பாகவே அறிவார். ஜேர்மனி போன்ற பொருளாதாரரீதியாக மிகவும் வளர்ந்த நாடு, சர்வதேச தொழிற்பங்கீட்டை ஏனையவர்களைவிட அதிகமாக சார்ந்துள்ளது. இந்த கருத்தானது அபத்தமானது.

பாதுகாப்புவாதத்திற்கான அவரது ஆதரவு, ஒரு வேறுபட்ட இலக்கைப் பின்தொடர்கிறது. அவ்வாறு செய்யும்போது, சீனாவுக்கு எதிரான எதிர்கால வர்த்தகப் போர்கள் மற்றும் இராணுவப் போர்கள் மற்றும் குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிராக ஜேர்மன் முதலாளித்துவத்தை அவர் ஆதரிக்கிறார். சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைப்பதை எதிர்க்கும் சக்திகளை அவர் அணிதிரட்ட முயல்கிறார். முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, உலகப் பொருளாதாரத்தை அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காக ஒழுங்கமைக்கும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமே.

தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் புகழை மீண்டும் மீண்டும் பெற்ற, வாகென்கினெக்ட்டின் அகதிகளுக்கு எதிரான கிளர்ச்சி ஒரு விபத்து அல்ல. அவர் தனது அரசியல் வாழ்க்கையில் பல அல்லாடல்களை செய்துள்ளார். ஆனால் எப்போதும் மாறாமல் உள்ள ஒன்று அருடைய தேசியவாதமாகும்.

1991 ல் ஜேர்மன் மீண்டும் ஒன்றிணைந்த பின்னர், 20 வயதான அவர் ஜனநாயக சோசலிசக் கட்சியில் (PDS) கம்யூனிஸ்ட் தளத்திற்கு ஒரு இளைமையான முன்னணி நபராக பணியாற்றினார். ஜனநாயக சோசலிசக் கட்சி, ஸ்ராலினிசத்தையும் அதன் தேசியவாத "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற கோட்பாட்டுடன் ஒட்டிக்கொண்டிருந்து வயதான கிழக்கு ஜேர்மன் செயல்பாட்டாளர்களின் குழுவைத் தவிர வேறில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், போருக்குப் பிந்தைய ஜேர்மன் சான்சிலர் அடிநொவர் சகாப்தத்தையும் அதன் பொருளாதார வல்லுனர்களையும் புகழ்ந்து பாடத் தொடங்கினார். அவர் இனி மார்க்ஸை மேற்கோள்களை காட்டாது மாறாக, அதற்கு பதிலாக, சோசலிசம் உண்மையில் போட்டி, தகுதி மற்றும் தனிப்பட்ட பொறுப்புடன் நிலையான தாராளமயத்தை குறிக்கிறது என்ற கருத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.

ஜேர்மன் பொருளாதாரத்தை "சீன ஏற்றுமதி குப்பைமேடு" மற்றும் "வெளிநாட்டு கையகப்படுத்துதல்" ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும், "செயல்திறனுக்கான உண்மையான போட்டியை" உறுதிப்படுத்தவும் இப்போது வலுவான அரசுக்கு அவர் வணிக ஏடான Capital இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு மாறாக, அவர் ஒரு "அரச பொருளாதாரத்தை" வெளிப்படையாக நிராகரிக்கிறார். "நிரந்தர அடிப்படையில் நிறுவனங்களை நிர்வகிப்பது அரசின் பணி அல்ல" என்று அவர் அறிவிக்கிறார்.

கடந்த நவம்பரில் வாகென்கினெக்ட் இடது கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற போதிலும், அவர் தொடர்ந்து கட்சியின் முன்னணி பிரதிநிதிகளில் ஒருவராக இருக்கிறார். பேச்சு நிகழ்ச்சிகளிலும் ஊடகங்களிலும் இடது கட்சியை அவர் அடிக்கடி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பின்னால் தடையின்றி நிற்கும் ஒரு கட்சியை அவர் அடையாளப்படுத்தி, ஜேர்மன் முதலாளித்துவத்தின் நலன்களை உள்நாட்டில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வெளிப்புற போட்டியாளர்களுக்கும் எதிராக அனைத்து வகையிலும் பாதுகாக்க தயாராக இருக்கிறார்.

Loading