முன்னோக்கு

பொலிஸ் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள்: முன்னோக்கிய பாதை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மினெயாபொலிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலையின் நினைவாஞ்சலி தினத்திற்குப் பிந்தைய மூன்று வாரங்கள் அமெரிக்காவிலும் ஒவ்வொரு கண்டத்தின் நாடுகளிலும் பாரிய போராட்ட ஆர்ப்பாட்டங்களின் வெடிப்பைக் கண்டுள்ளன.

இந்த பாரிய இயக்கம் இன்னமும் அதன் ஆரம்பக் கட்டங்களில் தான் உள்ளது. அது, அரசியல் அர்த்தத்திலும் சரி வேலைத்திட்ட அர்த்தத்திலும் சரி, இன்னும் தனித்துவமான தொழிலாள வர்க்க மற்றும் சோசலிச தன்மையைப் பெறவில்லை. இந்த கட்டத்தில், அது எழுப்பும் கோஷங்கள் பொலிஸ் காட்டுமிராண்டித்தனப் பிரச்சினையை மையமாக கொண்ட ஒரு பரந்த ஜனநாயகத் தன்மையைக் கொண்டுள்ளது.

Protesters in front of the White House in Washington, DC. (Image Credit: Ted Eytan/Flickr)

இப்போது மேலாதிக்கத்திலுள்ள அரசியல் சக்திகள், நடுத்தர வர்க்கத்தின் மிகவும் செல்வச் செழிப்பான பிரிவுகளில் இருந்தும் அத்துடன் அரசியல் ஸ்தாபகத்துடன் நெருக்கமாக தொடர்புகளைக் கொண்டுள்ள ஆளும் உயரடுக்கிலிருந்தும் வருகின்றன. அவை போராட்டங்கள் மீது ஓர் இனவாத கட்டுக்கதையையும் நோக்குநிலையையும் திணிக்க முயல்கின்றன என்பதோடு, அவ்விதத்தில் இந்த பரந்த சமூக கோபம் மற்றும் எதிர்ப்புக்கு அடித்தளத்திலிருக்கும் முக்கிய வர்க்க பிரச்சினைகள் மேலெழுந்து விடாமல் தடுக்கின்றன. இப்பிரச்சனைகள் மேலெழுந்தால், இந்த முதலாளித்துவ அமைப்புக்கே ஒரு தீவிர அச்சுறுத்தலை முன்னிறுத்திவிடும்.

இருந்தபோதினும், இந்த இயக்கம் அளப்பரிய புறநிலை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது நீண்டகால அரசியல் பிற்போக்குத்தனத்தின் காலகட்டம் முடிந்துவிட்டதைக் குறிக்கிறது. கடந்த நான்கு தசாப்தங்களாக, ஆளும் வர்க்கம் இடைவிடாது வர்க்கப் போர்முறைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த அட்டூழியத்தை தடுப்பதற்காக அமெரிக்காவுக்குள்ளும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் முயற்சிகள், பழைய ஸ்ராலினிச, சமூக ஜனநாயகத்தின் காட்டிக்கொடுப்பாலும், மற்றும் பகிரங்கமாகவே முதலாளித்துவ சார்பு தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் மற்றும் அவற்றின் தேசியவாத சீர்திருத்த வேலைத்திட்டங்களின் திவால்நிலைமையால் கீழறுக்கப்பட்டன.

1980 களின் நாட்களில் இருந்தே பிற்போக்குத்தனமான ஆளும் வர்க்க தாக்குதல், 1989 மற்றும் 1991 க்கு இடையே சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் கிழக்கு ஐரோப்பா எங்கிலும் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் தீவிரப்படுத்தப்பட்டது. ஆளும் உயரடுக்குகள் இத்தகைய நிகழ்வுகளை முதலாளித்துவத்தின் முடிவான திரும்பப் பெறவியலாத வெற்றியாக புகழ்ந்து கொண்டன. முதலாளித்துவத்திற்கு ஒரு சோசலிச மாற்றீடு என்ற பேராபத்து இறுதியில் வென்று அடக்கப்பட்டு விட்டதாக அது பிரகடனப்படுத்தியது.

1990-91 வளைகுடா போரின் தொடக்கம், மூன்று தசாப்த கால கட்டுப்பாடற்ற ஏகாதிபத்திய நவ-காலனித்துவம் மற்றும் இராணுவவாதத்தின் தொடக்கத்தைக் குறித்தது. 2001 இல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பிரகடனத்திற்குப் பின்னர் இருந்து, அங்கே அமெரிக்கா போரில் ஈடுபடாத ஒரேயொரு நாள் கூட இருக்கவில்லை.

உள்நாட்டில், கடந்த மூன்று தசாப்தங்களின் பிரதான அம்சம் மலைப்பூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பில் அமைந்துள்ளது. சமூக திட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளன, கூலிகள் குறைக்கபட்டுள்ளன, ஒட்டுமொத்த தொழில்துறைகளும் பங்குச் சந்தைகளின் இடைவிடாத அதிகரிப்புக்கு எரியூட்ட இல்லாதொழிக்கப்பட்டு விடப்பட்டுள்ளன. மூன்று மிகப்பெரிய பணக்கார அமெரிக்கர்கள் தேசத்தின் மொத்த மக்கள்தொகையில் அடிமட்ட பாதிப் பேரை விட அதிகமாக செல்வ வளத்தைக் குவித்து வைத்துள்ளனர். இதுவுமே கூட ஓர் உலகளாவிய நிகழ்ச்சிப்போக்கின் பாகமாக உள்ளது. இவ்வுலகின் பில்லியனர்கள் இந்த புவியிலுள்ள மிகவும் வறிய 4.6 பில்லியன் ஏழைகளை விட அதிக செல்வ வளத்தை உடைமையாக்கி கொண்டுள்ளனர்.

ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவானது சமூக சமத்துவமின்மையின் தவிர்க்கவியலாத துணைவிளைவாக உள்ளது. செல்வ வளம் பாரியளவில் ஒரே தரப்பில் ஒருங்குவிந்திருப்பது பாரம்பரிய ஜனநாயக வழிவகைகள் மூலமாக இணங்குவிக்க முடியாத சமூக பதட்டங்களை உருவாக்கி வருகிறது. தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக —குறிப்பாக, அதன் வறிய மற்றும் மிகவும் நலிந்த பிரிவுகள் மீது— முதலாளித்துவ அரசு பிரயோகித்த வன்முறை முன்பினும் அதிக மூர்க்கமான வடிவம் எடுக்கிறது. பொலிஸின் மனிதப்படுகொலை நடைமுறைகள் வெறுமனே வர்க்க வன்முறையின் மிகவும் அப்பட்டமான வெளிபாடுகளாகும். ஜோர்ஜ் ஃபுளோய்டை பொதுவெளியில் பகிரங்கமாக குரல்வளையை நெரித்து படுகொலை செய்த நடவடிக்கை, அதன் மொத்த கொடூரங்களில், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் வீதிகளில் பொலிஸ் நடத்திய ஆயிரமாயிர படுகொலைகளில் வெறும் ஒன்றே ஒன்று தான்.

சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஒரு நீண்ட காலகட்டம், சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகளை வலுக்கட்டாயமாகவும் செயற்கையாகவும் அடக்குவதைக் குறிக்கிறது. இத்தகைய முரண்பாடுகள் எந்தளவுக்கு அடக்கப்படுகின்றதோ அதுவும் பின்தொடர்ந்து வரும் வெடிப்புகளின் தீவிரத்தன்மையை தீர்மானிக்கிறது. அமெரிக்காவுக்குள்ளும் மற்றும் உலகெங்களிலுமான ஆர்ப்பாட்டங்கள், பெருந்திரளான மக்களிடையே திரண்டு வரும் கோபத்தின் ஆரம்ப அறிகுறிகள் மட்டுந்தான்.

இந்த ஆர்ப்பாட்டங்களின் தன்மையும் அளவும் கொதித்துக் கொண்டிருக்கும் மக்கள் கோபத்தை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அது இந்த நவீன சமூகத்தின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அடித்தளங்களின் புறநிலை அபிவிருத்திகளது தாக்கத்தையும் பிரதிபலிக்கிறது. அரசியல் பிற்போக்குத்தனத்திற்கு பின்னணியில், பொருளாதார பூகோளமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கும், இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வடிவங்களின் வளர்ச்சியும் நீண்டகால புரட்சிகர தாக்கங்களைக் கொண்டுள்ளன.

இத்தகைய ஒன்றோடொன்று தொடர்புபட்ட நிகழ்ச்சிப்போக்குகள் தேசிய அரசுகளின் இந்த சிதைந்த அமைப்புமுறைக்கும் உலகளாவிய பொருளாதாரத்தின் யதார்த்தத்திற்கும் இடையிலான இன்றியமையா முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. அனைத்திற்கும் மேலாக, இந்த பூகோளமயமாக்கல் நிகழ்வுப்போக்கானது முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச இயக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்கி உள்ளது. தொழிலாள வர்க்கம் உலகளவில் ஐக்கியப்படுவதற்கான சாத்தியக்கூறு ஒரு கற்பனாவாத கண்ணோட்டம் அல்ல. அதை உறுதியாக நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்பது பூகோள முதலாளித்துவ உற்பத்தியின் தற்போதைய நிலைமைகளில் இருந்து எழுகிறது.

ஏறத்தாழ 1988 ஆரம்பத்திலேயே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இதை எதிர்பார்த்திருந்தது. உலக முதலாளித்துவ நெருக்கடியும், நான்காம் அகிலத்தின் பணிகளும் என்ற அறிக்கையில் அது பின்வருமாறு எழுதியது:

வர்க்கப் போராட்டம் அதன் வடிவத்தில் மட்டுமே தேசிய அளவிலானது, ஆயினும் சாரத்தில் அது ஒரு சர்வதேசியப் போராட்டமே என்பது மார்க்சிசத்தின் அடிப்படை முன்மொழிவாக நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. ஆயினும், முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைக் கொண்டு பார்க்கையில், வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேச தன்மையைப் பெற்றாக வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் மிக ஆரம்பநிலைப் போராட்டங்களும் கூட அதன் நடவடிக்கைகளை ஒரு சர்வதேசிய அளவில் ஒருங்கிணைப்பதற்கான அவசியத்தை முன்நிறுத்துகின்றன.

பொலிஸ் வன்முறைக்கு எதிரான இந்த இயக்கம் பல தேசியம் சார்ந்த, பன்முக இனம் சார்ந்த, பல வம்சாவழி சார்ந்த ஓர் இயக்கமாக உள்ளது. இதை முன்நகர்த்திக் கொண்டிருக்கும் முரண்பாடுகள் அடிப்படையில் சர்வதேச தன்மையிலானவை என்பதால் அது உலகளாவிய அளவில் எழுந்துள்ளது.

ஆளும் வர்க்கம் இந்த விளைவுகளைக் குறித்து பீதியடைந்துள்ளது. ஏகாதிபத்தியத்தின் முன்னணி சிந்தனைக் குழாமான மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) இந்தாண்டு தொடக்கத்தில் பின்வருமாறு எச்சரித்தது: “அளவிலும், அதிர்விலும், பரவலிலும் வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாத உலகளாவிய பாரிய போராட்டங்களின் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... குடிமக்கள் தற்போதைய தலைவர்கள், உயரடுக்குள் மற்றும் அமைப்புகளின் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள், அவர்கள் விரக்தியிலும் பெரும்பாலும் வெறுப்புடனும் வீதிகளில் இறங்கி வருகிறார்கள்.”

பொலிஸ் வன்முறை மீதான இந்த போராட்டங்களின் தன்மை இவ்விதத்தில் தான் உள்ளது. எப்போதும் போலவே, ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் இந்த இயக்கத்தை மீண்டும் பாதுகாப்பான வழித்தடத்தில் திருப்பி விடவும், அடைத்து விடவும் முயல்கிறார்கள்.

காவல்துறை என்பது முதலாளித்துவ அரசின் மற்றும் வர்க்க ஆட்சியின் முன்முகப்பு பாதுகாவலர்களது ஒரு கருவி என்பதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதே இனப் பிரிவினைவாதிகளின் நோக்கமாகும். அனைத்திற்கும் மேலாக, ஆர்ப்பாட்டங்கள் மீதான ஓர் இனவாத சொல்லாடலைத் திணிப்பதற்கான அவர்களின் முயற்சிகள், வெளிப்படையாகவே பல இனம் சார்ந்த, பல வம்சாவழி சார்ந்த மற்றும் பல தேசிய சார்ந்த தன்மையால் மறுத்தளிக்கபடுகின்றன. மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் ஒரு சமூகவியலாளர் நடத்திய ஓர் ஆய்வு, நியூ யோர்க் போராட்டக்காரர்களில் 61 சதவீதத்தினர் வெள்ளை இனத்தவர், வாஷிங்டன் போராட்டக்காரர்களில் 65 சதவீதத்தினர், லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டக்காரர்களில் 53 சதவீதத்தினர் வெள்ளை இனத்தவர் என்பதைக் கண்டறிந்தது. அனைத்திற்கும் மேலாக பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கு எல்லா இன அமெரிக்கர்களிடையேயும் பெருவாரியான ஆதரவு இருப்பதைக் கருத்துக்கணிப்புகள் பதிவு செய்துள்ளன.

பொலிஸ் வன்முறைக்கான எதிர்ப்பை பரந்த வர்க்க பிரச்சினைகளில் இருந்து பிரித்து வைக்க முடியாது. ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலையை எதிர்க்கும் இந்த ஆர்ப்பாட்டங்கள், பெருநிறுவன நிதியியல் உயரடுக்கையும் தொழிலாள வர்க்கத்தையும் பிளவுபடுத்தும் சமூக இடைவெளியை அம்பலப்படுத்தி உள்ள கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் நடந்து வருகிறது. இது, கடந்த மூன்று மாதங்களில் கொரொனா வைரஸால் 115,000 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற உண்மையின் மீது கவனம் கொடுப்பதற்கான அழைப்பிலிருந்து, ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலையால் தூண்டிவிடப்பட்ட கோபத்தைத் திசைதிருப்பி விடவில்லை. இந்த கோடை கால இறுதிக்குள் இந்த தொற்றுநோய்க்கு 200,000 பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளால் இப்போது பகிரங்கமாக குறிப்பிடப்பட்டு வருகிறது. நிஜமான மரண எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகமாக இருக்கும் என்பதற்கான சாத்தியக்கூறும் அதிகமாக உள்ளது.

இந்த மரண எண்ணிக்கையானது, கடந்த 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் முன்கணித்து வந்துள்ள ஒரு தொற்றுநோய்க்கு ட்ரம்ப் நிர்வாகமும் அதற்கு முன்பிருந்த நிர்வாகங்களும் தயாரிப்பு செய்ய தவறியதன் நேரடி விளைவாகும். உரிய ஆதாரவளங்களை ஒதுக்க மறுத்தமை இன்னும் கூடுதலாக இலாப நோக்க கணக்கீடுகளின் விளைவாக இருந்தது. இதை விட மோசமாக, இந்த தொற்றுநோய் பரவிக் கொண்டிருந்த போதே, பெருநிறுவனங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் நிதியியல் நலன்களுக்கு இன்னும் கூடுதலாக பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பை முடுக்கி விடுவதற்காக இந்த மருத்துவ அவசரநிலையைச் சுரண்டுவதே ஆளும் வர்க்கத்தின் பிரதான அக்கறையாக இருந்தது. மார்ச் மாத இறுதியில் CARES சட்டம் நிறைவேற்றப்பட்டதும், அரசாங்கம் வைரஸைக் கட்டுப்படுத்தும் அதன் குறைந்தபட்ச முயற்சியைக் கூட கைவிட்டது.

அதற்கு பதிலாக, அரசியல் ஸ்தாபகம் —ஜனநாயகக் கட்சியும் குடியரசு கட்சியும் ஒருசேர— பொருளாதாரத்தை வேகமாக "மீண்டும் திறந்து" விடுவதற்கான கோரிக்கையை கையிலெடுத்தன.

முழு அளவிலான பொருளாதார மற்றும் சமூக பேரழிவு அமெரிக்காவை மூழ்கடித்து வருகிறது. 20 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வேலையின்றி உள்ளனர், ஆனால் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளது வாழ்க்கை மீதான இந்த நாசகரமான விளைவுக்கு எதிர்நடவடிக்கையாக எந்த சமூக திட்டங்களும் தயாரிக்கப்படவில்லை. உண்மையில், வறுமையின் பேராபத்து வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான நகர்வைத் தீவிரப்படுத்துவதற்காக சாதகமாக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பின்மை சலுகைகளில் மாதத்திற்கு 600 டாலர் இணைப்பை நீடிப்பதை அவர்கள் எதிர்ப்பதாக ட்ரம்ப் நிர்வாகமும் காங்கிரஸ் சபை உறுப்பினர்களும் அறிவித்து வருகின்றனர் ஏனென்றால் அதுபோன்று உதவிப்பணம் வழங்குவது பாதுகாப்பற்ற ஆலைகளுக்கும் ஏனைய உற்பத்தி ஆலைகளுக்கும் தொழிலாளர்களைத் திரும்ப செய்வதை "தடுத்துநிறுத்த" செய்யுமாம்.

தொழிலாள வர்க்கத்தில் கோபம் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகளுக்கு எதிரான போராட்டம் ட்ரம்ப் நிர்வாகத்துடனும், பிற்போக்குத்தனமான பெருநிறுவன-ஆதிக்க இருகட்சி ஆட்சிமுறை மற்றும் முதலாளித்துவத்துடனும் ஓர் அரசியல் மோதலுக்கு இட்டுச் செல்லும் என்பது அதிகரித்தளவில் வெளிப்படையாக ஆகி வருகிறது.

இந்த போராட்ட இயக்கம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதற்கு முன்னதாக இதை நசுக்க வேண்டியிருப்பதைக் குறித்து ட்ரம்ப் பேசும் போதும், அரசியலமைப்பை அவர் இராணுவம் கொண்டு தூக்கியெறிய முயலும் போதும், அவர், பொருளாதார முடக்கம் ஏற்படுத்தும் மற்றும் அவர் நிர்வாகம் தொடர்ந்து செயல்படுவதைச் சாத்தியமில்லாது செய்யும், மற்றும் அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திடம் மாற்றும் பிரச்சினையை மேலெழுப்பும் வேலைநிறுத்தங்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தினது பாரிய நடவடிக்கை வெடிப்பதற்கான மிகவும் நிஜமான சாத்தியக்கூறை அவர் மனதில் கொண்டிருந்திருப்பார்.

சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அதன் சக அரசியல் சிந்தனையாளர்களுடன் சேர்ந்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை வளர்ப்பதிலும், முதலாளித்துவத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இத்தகைய கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதிலும், அதன் நடவடிக்கைகளை ஒரு வர்க்கமாக சம்பவங்களின் புறநிலை தர்க்கத்துடன் ஓரணியில்கொண்டுவந்து, ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலையின் அநீதிக்கும் மற்றும் இதே போன்ற பொலிஸ் காட்டுமிராண்டித்தன சம்பவங்களுக்கும் எதிரான போராட்டங்களைத் தொழிலாள வர்க்க தலைமையில் சோசலிசத்திற்கான ஒரு பாரிய இயக்கத்திற்குள் வழி நடத்துவதையும் நோக்கி தனது நடவடிக்கைகளைக் கொண்டு செல்லும்.

Loading