முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் அமைப்பு ஸ்பெயினின் பொடெமோஸ்-சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்பெயினில் 2014 இல் பொடெமோஸ் கட்சியை ஸ்தாபிக்க உதவிய ஒரு குட்டி-முதலாளித்துவ அரசியல் போக்கான முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் (Anticapitalistas) அமைப்பு, சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் பொடெமோஸ் கூட்டு அரசாங்கத்திலிருந்து அது வெளியேற இருப்பதாக கடந்த மாதம் அறிவித்தது.

சோசலிஸ்ட் கட்சி-பொடெமோஸ் அரசாங்கத்திற்கு எதிராகவும், கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் மீண்டும் வேலைக்குத் திரும்ப செய்யும் கொள்கைகள் மற்றும் அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாரிய கோபம் கட்டமைந்து வருகிறது. கிரீஸில் சிக்கன நடவடிக்கைகளுக்குச் சார்பான சிரிசா அரசாங்கத்தின் (“தீவிர இடது கூட்டணி") துரோகத்தைத் தொடர்ந்து "இடது ஜனரஞ்சக" கட்சிகள் என்று அழைக்கப்படுவனவற்றுடனான தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்ட மற்றொரு கசப்பான அனுபவத்தை பொடெமோஸின் பாத்திரம் குறிக்கிறது.

பாஸ்க் மாநிலத்தில் சோசலிஸ்ட் கட்சி-பொடெமோஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான ஒரு வேலைநிறுத்தம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஸ்பானிய விவசாயிகளின் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் ஆகியவற்றுக்குப் பின்னர் இந்த குளிர்காலத்தில் முதலாளித்துவ எதிர்ப்பு அமைப்பு அந்த அரசாங்கத்திலிருந்து வெளியேற வாக்களித்தது.

இறுதியில் அரசாங்கத்தில் அது வெளியேறுவதை அறிவித்த முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் மே 14 அறிக்கை, பொடெமோஸில் இருந்தும் வெளியேற அதன் உறுப்பினர்களில் 89 சதவீதத்தினர் உள்வாக்கெடுப்பில் முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. “எதிர்காலத்திற்கு ஒரு திறந்த பாதையை எதிர்நோக்க அனுமதிக்கும் விதத்தில், விதமான போராட்டங்கள் மற்றும் அனுபவங்களுக்கும் திறந்திருக்கும் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு இயக்கத்தை" முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் கட்டமைப்பார்கள் என்றது வாதிட்டது.

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளுடன் கூட்டு சேர்ந்துள்ள அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA), அடிபணியா பிரான்ஸ் (LFI) மற்றும் ஜேர்மன் இடது கட்சி போன்ற "இடது ஜனரஞ்சகவாத" கட்சிகளும் மற்றும் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளும் (Anticapitalistas) தொழிலாள வர்க்க போராட்டங்களில் வகிக்க இருக்கும் பிற்போக்குத்தனமான பாத்திரம் குறித்து சாத்தியமானளவுக்குப் பலமான எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டியுள்ளது. அரசியல் இழிந்ததன்மையின் மிதமிஞ்சிய துர்நாற்றம், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் சூழ்ச்சிகளை சுற்றி வீசுகின்றது.

பொடெமோஸின் முக்கிய கொள்கைகளான: இந்த தொற்றுநோய்க்கு இடையே வேலைக்குத் திரும்ப செய்வதற்கான அதன் உத்தரவு, அதன் சிக்கன நடவடிக்கை கொள்கைகள், ஸ்பானிய உளவுத்துறை மற்றும் படை அதிகாரிகளுடனான அதன் உறவுகள் அல்லது கட்டலான்-தேசியவாத அரசியல் கைதிகளை அது சிறையில் அடைத்தமை என இவற்றின் மீதான எந்தவித எதிர்ப்புக்காகவும் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் பொடெமோஸில் இருந்து வெளியேறவில்லை. உண்மையில் அதன் அறிக்கை சோசலிஸ்ட் கட்சி-பொடெமோஸ் அரசாங்கத்தின் கட்டமைப்பைப் பாராட்டி, “நிச்சயமாக, இந்த கட்டமைப்புக்குள் கிடைத்த எல்லா ஆதாயங்களையும் நாங்கள் ஆதரிக்கிறோம், தீவிர வலதுக்கு எதிராக நாங்கள் ஒருங்கிணைந்து போராடுவோம்,” என்று அறிவிக்கிறது. “பொடெமோஸ் ஆட்களுடன் பல பொதுவான போராட்டங்களில் நாமும் இருப்போம் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை,” என்பதையும் அது சேர்த்துக் கொள்கிறது.

அந்த அமைப்பின் பெயர் "முதலாளித்துவ-எதிர்ப்பு" என்பதை பிரகடனப்படுத்துவதாக உள்ளது என்றபோதிலும், அது அவ்விதமான ஒரு அமைப்பு அல்ல. அது, பொடெமோஸிற்கு விரோதமான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களிலும் சமூக ஊடகங்களிலும் தலையீடு செய்து அவற்றை உளவு பார்க்கவும் மற்றும் அவற்றின் குரல்வளையை நெரிக்கவும், ஸ்பானிய முதலாளித்துவ அரசின் விலைக்கு வாங்கப்பட்ட முகவராக சேவையாற்றவே பொடெமோஸில் இருந்து வெளியே வருகிறது. இந்த கோவிட்-19 தொற்றுநோயின் போது மக்களை ஆளும் உயரடுக்கு அவலமான முறையில் அலட்சியப்படுத்தியதற்கு மத்தியில் சர்வதேச அளவில் வெடிப்பார்ந்த வர்க்கப் போராட்டங்கள் தயாராகி வருவதால், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் போன்ற ஏகாதிபத்திய-சார்பு குட்டி-முதலாளித்துவ குழுக்களைச் சமரசத்திற்கிடமின்றி எதிர்க்கும் ஓர் அரசியல் தலைமை தொழிலாள வர்க்கத்தில் கட்டமைக்கப்பட வேண்டும்.

பொடெமோஸில் இருந்து முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் வெளியேறுவது நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு, கவனமாக நடத்தப்படும் அரசு நடவடிக்கையாகும். பெப்ரவரியில் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் அறிவிக்கையில், அது பொடெமோஸின் முக்கிய தலைமை அமைப்பான அதன் மூன்றாம் மக்கள் அரசவைக்கு (Third State Citizens Assembly) மார்ச் 21 இல் அதன் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்தது. இது பொடெமோஸில் இருந்து அது வெளியேற இருப்பதற்கான ஓர் அறிகுறியாக பரவலாக பேசப்பட்டது. பின்னர் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் தலைவி தெரெசா ரோட்ரிகேஸ் (Teresa Rodríguez) மற்றும் பொடெமோஸின் பொது செயலாளரும் துணை பிரதம மந்திரியுமான பப்லோ இக்லெஸியாஸ் இருவரும் இணைந்து கூட்டாக ஒரு காணொளி வெளியிட்டனர்.

ரோட்ரிகேஸ் அந்த காணொளியில், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் பொடெமோஸில் இருந்து வெளியேறும் ஆனால் அரசியல்ரீதியில் அதனுடன் நெருக்கமாக இருக்கும் என்று பெண்ணிய மொழியில் சமிக்ஞை செய்தார்: “வாழ்க்கையில் போலவே அரசியலிலும், அங்கே வெவ்வேறு விதமாக ஆக்ரோஷமான, வன்முறையான, ஆணாதிக்க பாதைகள் உள்ளன, பின்னர் அங்கே நாகரீகமான, மதிப்பளிக்கும், கருணைமிக்க, அன்புக்குரிய பாதைகளும் உள்ளன, இவை ஆரோக்கியமானவை, இவற்றைக் கட்டமைக்கலாம், இது அரசியலிலும் சாத்தியம் என்றே நான் நம்புகிறேன். இது தான் இன்று நாங்கள் வழங்கும் சேதியின் முக்கியத்துவம்,” என்றார்.

“விடயங்களை எவ்வாறு சரியாக செய்வது என்பதற்கு எடுத்துக்காட்டு" வழங்கியதற்காக இக்லெஸியாஸ் ரோட்ரிகேஸைப் பாராட்டியும், “அங்கே முற்றாக விடைபெறுதல் கிடையாது, மீண்டும் சந்திப்போம் என்பது மட்டுமே உள்ளது,” என்பதை மீண்டும் கூறியும் விடையிறுத்தார்.

அதை தொடர்ந்து வந்த மாதங்களில், பொடெமோஸ் அதன் உள்ளாட்சி, பிரதேச, தேசிய மற்றும் ஐரோப்பிய பொடெமோஸ் பிரதிநிதிகள் மூலமாக அரசு மானியங்கள் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளுக்கு செல்ல அனுமதித்தது. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மிகைல் ஊர்பான் மற்றும் காடிஸ் நகரசபை தலைவர் ஜோசே மரியா கொன்ஸாலஸ் ஆகியோர் போலவே பொடெமோஸில் இருந்த முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களின் பதவிகளில் இருந்தனர்.

அன்டலுசியா பிரதேசத்தில் (Andalucia) பொடெமோஸ், ஸ்ராலினிச ஐக்கிய இடது மற்றும் அன்டலுசியன் தேசியவாதிகளுக்கு இடையிலான ஒரு பிரதேச தேர்தல் கூட்டணியான Forward Andalucia அமைப்பையும் மற்றும் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளையும் இரண்டையுமே ரோட்ரிகேஸ் தான் வழிநடத்துகிறார். இந்த எல்லா அமைப்புகளும் ஒரே தேர்தல் களத்தில் தொடர்ந்து அருகருகே இருந்து செயல்படுவதால், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் முறையாக பொடெமோஸில் இருந்து வெளியேறிய பின்னரும் அந்த அமைப்பைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதற்கு அப்பெண்மணி அனுமதிக்கப்பட்டுள்ளார். இது, முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் அதன் செயல்பாடுகளுக்கு நிதி வழங்க ஆண்டுக்கு மானியமாக 1.7 மில்லியன் யூரோவை அது கட்டுப்பாட்டில் கொண்டிருக்க அனுமதிக்கிறது.

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் தொடர்ந்து உள்ளாட்சி மட்டங்களிலும் பிராந்திய மட்டங்களிலும் பொடெமோஸுடன் இதேபோன்ற பல தேர்தல் கூட்டணிகளில் இணைந்து செயலாற்றும் மற்றும் அவற்றிலிருந்து இருந்து நிதிகளைப் பெறும்.

இந்த அரசியல் செயல்பாட்டுக்கு ஓர் "இடது" மூடுமறைப்பை வழங்கும் முயற்சியில், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் பாசிசவாத எதிர்ப்பு போராட்டத்தின் பாகமாக பொடெமோஸில் இருந்து அது வெளியேறுவதாக காட்டிக் கொள்கிறது. ரோட்ரிகேஸ் அவரது அமைப்பின் இணைய வழி சஞ்சிகை Viento Sur இல் பின்வருமாறு குறிப்பிட்டார்: “எல்லா முட்டைகளையும் [PSOE] உடனான கூட்டு அரசாங்க கூடையில் இடுவது எதிர்ப்பை வலதுசாரி சக்திகளிடம் ஒப்படைப்பதாக இருக்கும்... மற்ற ஐரோப்பிய நாடுகளில், சமூக ஜனநாயகத்துடனான கூட்டணி அரசாங்கங்களின் இருண்ட பக்கம் தீவிர வலதின் வளர்ச்சியாக ஆகி உள்ளது. நாம் எதிர்ப்புக்களத்தை தீவிரவலதிடம் விட்டுவிடும் போது, நமது களம் சுருங்கி அவர்கள் வளர்வதற்கு நாம் விடுகிறோம் என்பதால் நாம் சிக்கலுக்கு உள்ளாகிறோம்,” என்றார்.

அது அதிவலதுக்கு எதிராக போராடி வருகிறது என்ற முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் வாதம் ஒரு பொய், அது பொடெமோஸிடம் பிரமை நீங்கிய இடதுசாரி இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் திட்டநிரலை ஆதரிப்பதே அவர்களின் கடமை என்று நம்ப வைக்க நோக்கம் கொண்டது.

உண்மையில், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை இடைவிடாது தடுக்க முயன்றதுடன், அது அரசாங்கத்தில் இருந்தபோது அதிவலது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்வது உட்பட சோசலிஸ்ட் கட்சி வசம் தொழிலாளர்களைப் பிணைத்து வைக்கவும் முயன்றது. பொடெமோஸ் எதிர்ப்பை அதிவலதிடம் விட்டு விடுகிறது என்ற ரோட்ரிகேஸின் கருத்து, சர்வசாதாரணமாக, முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் ஓர் எதிர்ப்பு போக்காக சேவையாற்றி இருக்கவில்லை மற்றும் சேவையாற்றவில்லை என்பதையே அடிக்கோடிடுகிறது. இது இதுபோன்ற போலி-இடது குழுக்களைக் குறித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) செய்த எச்சரிக்கைகளை ஊர்ஜிதப்படுத்துகிறது.

அதிவலதுடன் "இடது வெகுஜனவாத" கட்சிகளின் உண்மையான உறவு மிகத் தெளிவாக கிரீஸில் எடுத்துக்காட்டப்பட்டது. பொடெமோஸின் கிரேக்க கூட்டாளி சிரிசா 2015 தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஓர் அதிவலது கட்சியான சுதந்திரக் கிரேக்கர் கட்சி (ANEL) உடன் சேர்ந்து அதன் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. அப்போது முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் யூரோ மண்டல பிரதிநிதியும் போடெமோஸின் இணை நிறுவனருமான மிகைல் ஊர்பான், அதை, "இந்த நெருக்கடிக்குப் பின்னர் ஐரோப்பாவில் மதிப்புடைய அரசாங்கமாக அழைக்கப்படக் கூடிய முதல் அரசாங்கம், இது மட்டுமே மக்கள் நலன்களைப் பாதுகாக்கும் ஒரே அரசாங்கம்... இதனால் தான் இதை நமது சொந்த அரசாங்கமாக நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது,” என்று பாராட்டி இருந்தார்.

ஜூன் 2015 இல் இந்த அறிக்கைக்கு வெளியிடப்பட்ட பின்னர் மிக விரைவிலேயே, சிரிசா நவீன வரலாற்றில் வேறெந்த அரசாங்கத்தையும் விட கடுமையான பல சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து, ஐரோப்பாவில் மிகவும் கொடூரமான அகதிகள்-விரோத கொள்கையை முன்னெடுத்தது, அதேவேளையில் யேமனில் சவூதி முடியாட்சியின் மனிதப்படுகொலை போருக்கு அதனிடம் ஆயுதங்களை விற்பனை செய்தது. வெறுத்துப் போன வறுமையில் வீழ்ந்த வாக்காளர்கள் கடந்தாண்டு தான் சிரிசாவைத் தூக்கியெறிந்தார்கள்.

இதுவொரு மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை இல்லை, மாறாக முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் போன்ற போக்குகளை அரசின் அரசியல் முகவர்கள் என்று அழைப்பது முற்றிலும் நியாயப்படுத்தப்பட்ட ஒரு எச்சரிக்கையாகும். பொடெமோஸிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் குறித்து ரோட்ரிகேஸ் "அன்புக்குரிய" அறிக்கைகளை வழங்கும் போது, அப்பெண்மணி ஒரு கட்சியிடம் பேசுகிறார், இதன் தலைவர், துணை பிரதம மந்திரி பப்லோ இக்லெஸியாஸ், இடதுசாரி எதிர்ப்பை நசுக்குவதற்காக 1972 இல் பாசிசவாத சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோ அமைத்த தேசிய உளவு அமைப்பின் (CNI) முன்னணி குழுவில் அமர்ந்துள்ளார்.

ஏனைய முன்னனி பொடெமோஸ் உறுப்பினர்களில், முன்னாள் நீதிபதிகளும் பொலிஸ் அதிகாரிகளும் மற்றும் லிபியாவில் 30,000 பேர் கொல்லப்பட்ட இரத்தக்களரியான 2011 நேட்டோ போரில் ஸ்பானிய பங்கெடுப்புக்குத் தலைமை வகித்த ஆயுதப் படைகளது தளபதிகளின் முன்னாள் தலைவர் ஜெனரல் ஜூலியோ ரோட்ரிகேஸூம் உள்ளடங்குவர். பொடெமோஸுடன் சேர்ந்து கூட்டாக ரோட்ரிகேஸ் ஒழுங்கமைக்கும் "பொதுவான போராட்டங்களின்" இலக்கு நிதியியல் பிரபுத்துவம் கிடையாது, மாறாக தொழிலாள வர்க்கமாகும்.

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின்"பரந்த இடது கட்சிகள்" தத்துவமும், பொடெமோஸின் ஸ்தாபிதமும்

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் பரிணாமும், 2014 இல் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து பொடெமோஸின் பரிணாமும் ஏதோ ஒரு தந்திரோபாய பிழையின் விளைவல்ல. பொலிஸ் அரசு எந்திரத்தினுள் அவை ஒருங்கிணைந்தமை, செல்வ செழிப்பான கல்வித்துறை அடுக்குகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் சடரீதியிலான நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவற்றின் பிற்போக்குத்தனமான வர்க்க நோக்குநிலையின் தவிர்க்கவியலாத விளைவாகும், அது ஓர் அரசியல் இயக்கத்தைக் கட்டமைக்கும் அவற்றின் கருத்துருவில் தத்துவார்த்த வெளிப்பாட்டைக் காண்கிறது. வரலாற்று அடித்தளம், சர்வதேச மற்றும் மார்க்சிச முன்னோக்கை நிராகரித்து, அவை தேசிய அரசியல் கட்டமைப்புக்குள் கோட்பாடற்ற கூட்டணி உபாயங்களை மேற்கொள்ள முயல்கின்றன. ஓர் உயிராபத்தான தொற்றுநோய்க்கு மத்தியில் மருத்துவக் கவனிப்பு முறைகளும் மருத்துவ எச்சரிக்கையும் பேரழிவுகரமாக முறிந்து போவதற்கு இட்டுச் சென்றுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கூட, உண்மையில் அவை வலதுசாரி கொள்கைகளுக்கு கோட்பாட்டுரீதியிலான எதிர்ப்பைக் காட்ட திராணியற்று உள்ளன.

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் மற்றும் சர்வதேச அளவில் அதனுடன் இணைந்துள்ள அமைப்புகள் முன்னெடுத்த "பரந்த இடது கட்சிகளை" கட்டமைப்பதற்கான அழைப்புகளில் அவர்களின் கருத்துரு நெறிப்படுத்தப்படுகிறது. அவற்றுடன் இணைந்துள்ள பிரெஞ்சு அமைப்பான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) அனேகமாக இந்த முன்னோக்கிற்கும் ட்ரொட்ஸ்கிசத்தை அது நிராகரிப்பதைக் குறித்தும் மிகத் தெளிவான அறிக்கையை வழங்கியது. 2009ல் அது குறிப்பிட்டது:

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ட்ரொட்ஸ்கிசத்துடன் எந்த குறிப்பிட்ட உறவையும் கோரவில்லை, ஆனால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த அமைப்புமுறையை அதன் வழியில் எதிர்கொண்டுள்ளவர்களுடன் தொடர்பைப் பேணுகிறது. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஜனநாயகக் கட்சியாகும். அதில் சமூக இயக்கத்தின் பல்வேறு கூறுபாடுகளில் இருந்து வந்த தோழர்களும் பங்கெடுக்கின்றனர், பூகோளமயமாக்கல் எதிர்ப்பு இடதிலிருந்து வந்தவர்கள், அரசியல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் இருந்து வந்த தோழர்களும், [ஒரு முதலாளித்துவ வர்க்க அரசாங்க கட்சியான சோசலிஸ்ட் கட்சி] PS மற்றும் [அதன் பிரதான கூட்டணி பங்காளியான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி] PCF இல் இருந்து வந்த தோழர்கள், அராஜகவாத இயக்கத்திலிருந்து வந்தவர்களும், புரட்சிகர இடதிலிருந்து வந்த தோழர்களும் அதில் பங்குபற்றி உள்ளனர்.

அதாவது, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் முதலாளித்துவ மீட்சியை ஆதரித்த ஸ்ராலினிச கட்சிகளுடனும், தசாப்த காலமாக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போரின் முன்வரலாறு கொண்ட முதலாளித்துவ வர்க்க கட்சிகளுடனும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது.

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் மற்றும் பொடெமோஸ் நடைமுறையளவில் ஒவ்வொரு விடயத்திலும் இந்த நோக்குநிலையை பின்தொடர்ந்தன. இந்த கட்சியின் பெயர்களை பிரெஞ்சிலிருந்து ஸ்பானிய மொழிக்கு மாற்ற வேண்டியிருக்கும் அவ்வளவு தான். NPA இன் பிரான்சுவா சபடோ வலியுறுத்துகையில், “பரந்த இடது" கட்சி "புரட்சியாளர்களின் ஐக்கியமாக சுருங்காது" என்றார், அனேகமாக இத்தகைய கட்சிகளின் இயல்பைக் குறித்த தெளிவான அறிக்கை NPA இன் டென்மார்க் அமைப்பான சிவப்பு-பசுமை கூட்டணியிடமிருந்து (RGA) வந்தது.

2010 இல் பிரசுரிக்கப்பட்ட "பரந்த இடது" முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சிகள் பற்றிய ஒரு கட்டுரையில், முன்னணி RGA உறுப்பினர் பேர்ரில் வீடெட் (Bertil Videt) எழுதினார்: “அரசியல் கட்சிகள் நிச்சயமாக இலக்குகளை நோக்கி நகர்கின்றன, அவற்றைக் கைப்பற்றுவதோ வகைப்படுத்துவதோ சிரமமானது... ஆப்கானிஸ்தானில் இத்தாலிய இராணுவத் தலையீடு மற்றும் இத்தாலியில் அமெரிக்க இராணுவத் தளங்களை ஆதரித்த இத்தாலிய கம்யூனிஸ்ட் மறுஸ்தாபக கட்சி செய்ததைப் போல, முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி அதிகார ருசிக்கு ஆளாகி பிரதான கோட்பாடுகளை கைவிடாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை,” என்றார்.

பகிரங்கமாக அது வலியுறுத்தும் "பிரதான கோட்பாடுகளை" அது காட்டிக்கொடுக்க விரும்புவதாக அறிவிக்கும் இதுபோன்றவொரு அரசியல் அமைப்பு, ஏகாதிபத்தியத்தை நோக்கி நோக்குநிலை கொண்டிருக்கும் அதேவேளையில் "இடது" என்று பிற்போக்குத்தனமாக மோசடியாக காட்டிக் கொள்கிறது. இந்த மதிப்பீடு சிரிசாவின் போக்கிலும், லிபியா மற்றும் சிரியாவில் ஏகாதிபத்திய போர்களுக்கான NPA இன் ஆதரவிலும் ஊர்ஜிதப்படுத்திக் காட்டப்பட்டது.

இறுதியாக, பொடெமோஸிலிருந்து வெளிவருவதற்கான முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் கோட்பாட்டுரீதியான காரணம் என்று கூறப்படுவதை ரோட்ரிகேஸ் இப்போது பாசிசவாத-எதிர்ப்பாக முன்வைப்பதும் இத்தகைய கட்சிகள் காட்டிக்கொடுத்த "பிரதான கோட்பாடுகளில்" ஒன்றாகும். 2014 ஆரம்பத்தில், பொடெமோஸ் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னதாக, புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) “Right Sector இயக்கத்திற்குள் இடது பிரிவை" கட்டமைக்கப்போவதாக கூறி, உக்ரேனில் பாசிசவாத Right Sector கிளர்ச்சியாளர்கள் குழு தலைமையிலான சிஐஏ-பதவிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தது.

இத்தகைய முற்றிலும் அழுகிப் போன அரசியல் அடித்தளங்கள் மீதுதான் நடுத்தர வர்க்க ஊடக செயல்பாட்டாளர்கள், அரசியல் விஞ்ஞான பேராசிரியர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் ஒரு கூட்டம் பொடெமோஸைக் கட்டமைத்தது.

2011 இல் எகிப்தில் புரட்சிகரமான தொழிலாள வர்க்க போராட்டங்கள் வெடித்த பின்னர் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளுக்கு எதிராக போராடி வந்த இளைஞர்களுக்கான ஓர் அரசியல் பொறியாக 2014 இல் பொடெமோஸ் நிறுவப்பட்டது. கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தை ஆக்கிரமித்த நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பின்பற்றிக்கொண்டு, ஆயிரக்கணக்கான நகர்புற இளைஞர்கள் மாட்ரீட், பார்சிலோனா மற்றும் ஸ்பெயின் எங்கிலுமான நகரங்களின் சதுக்கங்களை ஆக்கிரமித்தனர். 2011 இல் தன்னை Anticapitalist Left (IA) என குறிப்பிட்டு வந்த முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் உடன் நெருக்கமாக செயல்பட்ட Youth Without Future மற்றும் Real Democracy Now போன்ற அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டு, மே 15, 2011 இல் மாட்ரிட்டின் Puerta del Sol இல் போராட்டங்களுடன் 15M, அல்லது indignados இயக்கம் தொடங்கப்பட்டது.

Anticapitalist Left (IA), தொழிலாள வர்க்கத்தை நிராகரித்து பின்-நவீனத்துவ வாய்சவடால்களை முன்வைத்ததுடன், 15M இயக்கத்திலிருந்த நிறைய குட்டி-முதலாளித்துவ அடுக்குகளுக்குள் தன்னை சந்தைப்படுத்துவதற்காகவும் மற்றும் அதன் பொடெமோஸ் "பரந்த இடது கட்சி" நடவடிக்கைக்கு ஆதரவை வென்றெடுப்பதற்காகவும் கோட்பாடற்ற கூட்டணிகளுக்கு அது திறந்திருப்பதாகவும் சுட்டிக் காட்டியது.

பொடெமோஸ் "IA இன் முன்னெடுப்பை போன்றது அல்ல. மாறாக அதன் ஒரு பகுதி தலைமையினால் முன்னெடுக்கப்பட்டதால் உருவானதாகும். இதற்கு CEPS அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் Youth Without Future அமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து நடத்தப்பட்ட சில கருத்துக்கணிப்புகளுக்குத்தான் நன்றி கூற வேண்டும்,” என்று IA ஆதாரநபர்கள் El Diario க்கு தெரிவித்தார்கள். இந்த CEPS என்பது (Centro de Estudios Políticos y Sociales) வெனிசுவேலா மற்றும் ஈக்வடோரின் முதலாளித்துவ தேசியவாத அரசாங்கங்களிடம் இருந்து ஆலோசனை சேவைகளுக்காக பெருத்த சம்பள காசோலைகளைப் பெறுவதற்காக பப்லோ இக்லெஸியாஸ் போன்ற ஸ்ராலினிச பேராசிரியர்களுக்கான ஒரு வாகனமாகும்.

சோசலிஸ்ட் கட்சிக்கும் அதன் தசாப்தகால சிக்கன நடவடிக்கை மற்றும் போர் முன்வரலாறுக்கும், அத்துடன் அதன் கூட்டாளி ஸ்ராலினிச ஐக்கிய இடதுக்கும் (IU) தொழிலாளர்களிடையே அதிகரித்து வந்த எதிர்ப்புத்தான் பொடெமோஸை நிறுவுவதில் IA க்கு முக்கிய கவலையாக இருந்தது. பொடெமோஸை நிறுவுவதில் முக்கிய காரணியே "பல பிரபலயமான நபர்களின் பிரசன்னத்தை வைத்து அதன் செயல்திட்டத்திற்கு ஒரு வெளிப்படையான முகத்தை வழங்குவதற்காக ஊடகத்தில் பிரசன்னம் செய்வதாகும், இது பாரம்பரிய அமைப்புகளில் அதிருப்தி அடைந்த இடதுசாரி மக்களின் பிரிவுகளுடன் இணைவதை சாத்தியமாக்குகிறது” என்று IA இன் சஞ்சிகை வலியுறுத்தியது.

“சோசலிஸ்ட் கட்சியுடன் முன்பினும் அதிக பகிரங்கமாக ஓர் 'இடது' அரசாங்கத்திற்குத் தயாரிப்பு செய்து வரும் IU இன் வலது நோக்கிய திருப்பத்தை" குறித்து அந்த ஆவணம் புலம்பியது.

IA இன் வாதங்கள் ஓர் அரசியல் மோசடியாக இருந்தன. அது பெருவணிக சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டணி மேற்கொள்வதற்காக IU ஐ குறைகூறியது என்றாலும், இளைஞர்களையும் தொழிலாளர்களையும் சமூக ஜனநாயகம் மற்றும் ஏகாதிபத்தியத்துடன் இணைத்து விட அது செயல்பட்டது. இந்த முன்னோக்கை மட்டுந்தான், அப்போது WSWS எச்சரித்தவாறு, பொடெமோஸ் அதன் ஸ்தாபகத்திற்குப் பின்னர் முன்பினும் அதிக தீவிரமாக பின்தொடர்ந்தது. முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் பொடெமோஸ் செயல்திட்டம், WSWS குறிப்பிட்டது, “சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு கிளர்ச்சியைத் தடுப்பதையும், அதிருப்தியை தீவிர கொள்கை உடைய ஆனால் முதலாளித்துவ ஆதரவிலான உருவாக்கங்களுக்குப் பின்னால் திருப்பி விடுவதை" நோக்கமாக கொண்டிருந்தது.

தொழிலாள வர்க்கத்தை இழிவாக கருதுவதில் எந்த ஒளிவுமறைவும் வைக்காத ஒரு ஸ்ராலினிச பேராசிரியரும் கூலிக்கு மாரடிக்கும் ஊடக பிரபலமுமான பப்லோ இக்லெஸியாஸில், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் அதன் செயல்பாடுகளுக்கான ஒரு தலைவரைக் கண்டது. அவர், ஸ்ராலினிச ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PCE) நீண்டகால தலைவரான சாந்தியாகோ கர்றியோ (Santiago Carrillo) இனது முதற்பெயரால் அழைக்கப்பட்டார். 1936-39 ஸ்பானிய உள்நாட்டு போரின் போது ஸ்ராலினிச சரணடைவுக்கும், ட்ரொட்ஸ்கிஸ்டுகளைப் படுகொலை செய்வதற்கும், மத்தியவாத கட்சியான மார்க்சிச ஒருங்கிணைப்புக்கான தொழிலாளர் கட்சியின் (Workers Party of Marxist Unification – POUM) தலைவர் அந்திரேஸ் நீன் (Andrés Nin) இன் படுகொலைக்கும் உதவியவரும் துணை போனவரும், மற்றும் பின்னர் பாசிசவாத பிராங்கோயிச அதிகாரிகளுடன் இணைந்து ஸ்பெயினின் 1978 அரசியலமைப்பை எழுதியவருமான கர்றியோ க்கு 2012 இல் இதே பப்லோ இக்லெஸியாஸ் ஓர் அனுதாபகரமான இரங்கலை எழுதினார்.

“எல்லாவற்றுக்கு மத்தியிலும், சந்தியாகோ நம்மில் ஒருவராக இருந்தார். இப்போதும் எப்போதும் இருப்பார்,” என்பதே ஸ்பானிய புரட்சியின் அந்த கொலைகாரருக்கான இக்லெஸியாஸின் இரங்கலுக்குத் தலைப்பாக இருந்தது.

2013 இல், பொடெமோஸ் ஸ்தாபிக்கப்படுவதற்குச் சற்று முன்னதாக, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரித்து இக்லெஸியாஸ் Público இல் ஒரு கட்டுரை எழுதினார். “நீண்ட காலமாக, ஐரோப்பாவில், தொழிலாள வர்க்கம் உழைக்கும் மக்களின் மிகப்பெரும் பெரும்பான்மை மக்களாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது,” என்று எழுதிய அவர், இந்த காலகட்டத்தில் அது "முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு விடயத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது" என்பதையும் சேர்த்துக் கொண்டார், பின்னர் அவர், “ஆனால் வேலைவாய்ப்பு மாறியுள்ளது,” என்று எழுதினார்.

அவர் வாதிட்டார், இப்போது “இன்று பொருளாதார கட்டமைப்பின் அடியில் இருப்பவர்களை ஒரேயொரு அடையாள பிரிவாக குறைத்து விட முடியாது,” மற்றும் "குறுகிய பார்வை கொண்ட ஒரு சில இடது மட்டுமே அவர்கள் அனைவரையும் தொழிலாளர்கள் என்ற முத்திரையின் கீழ் குழுவாக்க வலியுறுத்துகிறது,” என்றார்.

இக்லெஸியாஸும் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளும் உயர்மட்ட அரசு பிரமுகர்களாக பிணைந்திருப்பதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய அவர்களின் விரோதமும், அவர்களின் கட்சியை ஸ்தாபித்த பின்னர் வெடித்த இந்த நெருக்கடியில் அவர்கள் ஒரு பிற்போக்குத்தனமான பாத்திரம் வகிக்க அவர்களை நிர்பந்தித்தது.

பிராங்கோவாத ஆட்சி முடிந்ததற்குப் பின்னர் இருந்து ஸ்பானிய வாக்காளர், அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் வலதுசாரி மக்கள் கட்சிக்கு (PP) இடையிலான இருகட்சி ஏகபோகம் டிசம்பர் 2015 இல் பொறிந்தது. 2015 தேர்தல்கள் ஒரு தொங்கு நாடாளுமன்றத்தை உருவாக்கியதுடன், மக்கள் கட்சி, சோசலிஸ்ட் கட்சி, பொடெமோஸ் மற்றும் வலதுசாரி குடிமக்கள் கட்சி (Citizens Party) க்கு இடையே வாக்குகள் பிளவுபட்டன. ஜூன் 2016, ஏப்ரல் 2019 மற்றும் நவம்பர் 2019 இல் அடுத்தடுத்து முடிவு தெளிவில்லாத தேர்தல்களுக்கு மத்தியில், சோசலிஸ்ட் கட்சி உடன் எவ்வாறு ஓர் கூட்டணி அரசாங்கம் அமைப்பது என்பதே பொடெமோஸிற்குள் நடந்த விவாதத்தில் விடாப்பிடியாக ஒருங்குவிந்திருந்தது.

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள், பொடெமோஸ் மற்றும் பாசிசவாத அரசியலைச் சட்டபூர்வமாக்குதல்

பொடெமோஸில் இருந்து முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் வெளியேறுவதை, ரோட்ரிகேஸ், அதிவலதை எதிர்க்கும் ஒரு சோசலிஸட் கட்சி நடவடிக்கையாக சித்தரிக்கின்ற அதேவேளையில், அப்பெண்மணியின் போக்குகளில் மிகக் கவனமாக திட்டமிடப்பட்டிருக்கும் அரசாங்கத்திற்குள் நுழைவது மற்றும் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான திட்டமே வேறொரு நோக்கத்திற்குச் சேவையாற்றுகிறது. இத்தகைய நகர்வுகள் பாசிசவாத கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் சமூகக் கோபம் பொடெமோஸ் மற்றும் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் இவற்றுக்கே எதிராக வெடிப்பதிலிருந்து தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. பொடெமோஸை “சமூக அணித்திரள்வு"களுக்குள் "புத்துயிரூட்ட" முடியும் என்ற பிரமைகளை முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் முடுக்கி விடுகின்ற அதேவேளையில், உண்மையில், பொடெமோஸோ ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் பொலிஸ் அரசு கொள்கைகளுடன் தன்னை இணக்கப்படுத்தி உள்ளது மற்றும் அவற்றை ஆதரிக்கிறது.

கடுமையான ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளை எவ்வாறு திணிப்பது என்பதன் மீது பார்சிலோனாவில் பிராந்திய கட்டலான் நிர்வாகங்களுக்கும் மாட்ரிட்டுக்கும் இடையே அதிகரித்த மோதலுக்கு மத்தியில், 2017 இல், ஸ்பானிய முதலாளித்துவ வர்க்கம் அதன் முந்தைய இருகட்சி அமைப்புமுறையின் பொறிவால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தீர்க்க முயன்றது. அக்டோபர் 2017 கட்டலான் சுதந்திரம் மீதான வெகுஜன வாக்கெடுப்பைச் சாதகமாக்கி, அது பிராங்கோயிசத்தைப் பகிரங்கமாக மீள-சட்டபூர்வமாக்கவும் மற்றும் ஒரு பொலிஸ் அரசு ஆட்சியை அமைக்கவும் முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பை வலதை நோக்கி வெகு தூரத்திற்கு மாற்ற முயன்றது.

அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக, இறுதியில் ஜூன் 2016 தேர்தல்களில் இருந்து உருவாக இருந்த சிறுபான்மை மக்கள் கட்சி அரசாங்கம் ஆயிரக் கணக்கான பொலிஸை அணித்திரட்டியது, கட்டலான் நிர்வாகிகளைக் கைது செய்தது, நூற்றுக் கணக்கான வலைத் தளங்களை நிறுத்தியது, மில்லியன் கணக்கான போஸ்டர்கள் மற்றும் துண்டறிக்கைகளைக் கைப்பற்றியது, அச்சுக்கூடங்களை அடைத்து கூட்டங்களுக்குத் தடை விதித்தது. அந்த வெகுஜன வாக்கெடுப்பு நடந்த அன்றைய தினம், மக்கள் கட்சி அமைதியான வாக்காளர்கள் மீது கலகம் ஒடுக்கும் பொலிஸை வன்முறையாக கட்டவிழ்த்து விட்டபோது சோசலிஸ்ட் கட்சி பகிரங்கமாக அதை ஆதரித்தது. 1,000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர், ஊர்க்காவல் படையால் (Guardia Civil) வயதானவர்களும் பெண்களும் இரத்தம் கொட்டும் அளவுக்கு அடிக்கப்பட்டதும் அதில் உள்ளடங்கும்.

ஸ்பானிய ஆளும் வர்க்கம் வெறித்தனமாக பொலிஸ் அரசையும் பாசிசவாத கொள்கைகளையும் சட்டபூர்வமாக்க செயல்பட்டபோது, கட்டலோனியாவில் மக்கள் கட்சியின் தாக்குதலை சோசலிஸ்ட் கட்சி ஆதரித்தது. டஜன் கணக்கான கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகள் கிளர்ச்சி மற்றும் பிரிவினை மீதான ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். பிராங்கோயிச ஆதரவு வோக்ஸ் கட்சி (Vox), முன்னர் கவனிப்பாரற்ற சக்தியாக இருந்த இது, முதலாளித்துவ வர்க்கம் கட்டலான்-விரோத விஷமப் பிரச்சாரம் மற்றும் ஸ்பானிய தேசியவாதத்தை முடுக்கி விட்டதும் ஒன்றுவிடாமல் கவனிப்பைப் பெற்றது. பார்சிலோனாவை தாக்க கவசம் தரித்த ஸ்பானிய துணை இராணுவப் படை சிப்பாய்களை அணித்திரட்ட தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன மற்றும் ஊடகங்களில் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டன.

மக்கள் கட்சி கட்டவிழ்த்து விட்ட தாக்குதலுக்குப் பொடெமோஸும் சரி அதன் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் அணியும் சரி இத்தகைய பாசிசவாத கொள்கைகளை எதிர்த்ததன் மூலமாக விடையிறுக்கவில்லை. அதற்கு பதிலாக, கட்டலோனியாவில் மக்கள் கட்சியின் கடுந்தாக்குதலை சோசலிஸ்ட் கட்சி ஆதரித்த போதினும், அவை பெருவணிக சோசலிஸ்ட் கட்சியுடன் ஒரு கூட்டணிக்கு அழுத்தமளிப்பதைத் தீவிரப்படுத்தின. PSOE தலைவர் பெட்ரோ சான்ஞ்சேஸிற்கு முறையிடுகையில் இக்லெஸியாஸ் குறிப்பிட்டார்: “மக்கள் கட்சியின் பிற்போக்குத்தனம் மற்றும் எதேச்சதிகாரத்திலிருந்து விலகி, தனது சொந்த வழியைக் காணும் ஒரு சோசலிஸ்ட் கட்சி நமக்கு வேண்டும். தோழர் சான்ஞ்சேஸ், மக்கள் கட்சியுடன் ஒரு பொதுவான கூட்டணியின் பொறியில் விழாதீர்!” என்றார்.

2018 இல், கட்டலோனியாவில் மக்கள் கட்சி மற்றும் அதன் கடுமையான கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பு மேலோங்கி இருந்ததற்கு மத்தியில், மக்கள் கட்சியை வெளியேற்றி ஒரு சிறுபான்மை சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தைக் கொண்டு அதை பிரதியீடு செய்ய, பொடெமோஸ் ஒரு நாடாளுமன்ற உபாயத்தை ஒழுங்கமைத்தது. முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் இதை வரவேற்றது, சோசலிஸ்ட் கட்சி “ஒரு நிஜமான மாற்றீடு இல்லை" என்பதை ஒப்புக் கொண்டது என்றாலும், பொடெமோஸிடம் இருந்து "அமைப்புகளிலும் வீதிகளிலும் பலமான அழுத்தத்திற்கு" அது உள்ளாக்கப்படும் என்று வாதிட்டது.

பொடெமோஸ் ஆதரித்த சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மக்கள் கட்சியின் சிக்கன வரவு-செலவு திட்டக்கணக்கைத் தொடர்ந்ததுடன், ஆயுதப் படைகளுக்கு பில்லியன் கணக்கிலான யூரோக்களைப் பொழிந்தது, புலம்பெயர்ந்தோரைத் தாக்கியது மற்றும் பாசிசவாத கட்டலான்-விரோத பிரச்சாரத்தைத் தொடர்ந்தது. இது, அமைதியான 2017 வெகுஜன வாக்கெடுப்பை ஒழுங்கமைத்ததற்காக வன்முறை கிளர்ச்சி மீதான போலி குற்றச்சாட்டுக்களின் பேரில் கட்டலான் நிர்வாகிகளைத் தொல்லைப்படுத்துவதில் அதன் பொதுவான இன்னல்படுத்துபவராக Vox உத்தியோகபூர்வமாக இணைவதற்கு அனுமதித்தது. ஜூனில் உச்ச நீதிமன்றம் "பெருந்தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோ" ஐ கௌரவப்படுத்தி ஓர் அசாதாரண தீர்ப்பை வழங்கியது, ஸ்பானிய உள்நாட்டு போரைத் தூண்டிவிட்ட அவரின் 1936 பாசிசவாத ஆட்சிக் கவிழ்ப்பு சதி, அவரின் அக்டோபர் 1, 1936 பிரகடனத்துடன் தொடங்கி அவரை ஸ்பெயினின் "சட்டப்பூர்வ" ஆட்சியாளராக ஆக்கியிருந்ததாக அந்த நீதிமன்றம் அறிவித்தது.

இந்த காலகட்டம் நெடுகிலும், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் நடவடிக்கைகள் ஆளும் வர்க்கத்தின் பாசிசவாத போக்குக்கு எதிர்ப்பை ஒழுங்கமைப்பதை நோக்கி திரும்பி இருக்கவில்லை, மாறாக ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய நிதியியல் மூலதனத்தின் இன்றியமையா மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதில் இருந்தது. இவை தொழிலாள வர்க்கத்தை இலக்கில் வைத்த சிக்கன நடவடிக்கைகளைப் பின்தொடர்வதை மட்டும் உள்ளடக்கி இருக்கவில்லை, மாறாக அனைத்திற்கும் மேலாக முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் அதிவலது கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு பிற்போக்குத்தனமான போக்காக மிகவும் பட்டவர்த்தனமாக அம்பலப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளையும் உள்ளடக்கி இருந்தன.

கட்டலான் தேசியவாதக் கட்சிகள் 2019 இன் தொடக்கத்தில் வரவு-செலவுத் திட்டக்கணக்கை எதிர்ப்பதற்கு அச்சுறுத்திய போது, சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அதன் ஆதரவை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஆனால் பெரும் முயற்சியெடுத்தும் இறுதியில் தோல்வியில் முடிந்த புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தது. ஏப்ரல் 2019 தேர்தல்களுக்குப் பின்னர், இது மற்றொரு தொங்கு நாடாளுமன்றத்தை உருவாக்கிய நிலையில், எவ்வாறு அரசாங்கம் அமைப்பது என்பதன் மீது ஸ்பானிய ஆளும் வர்க்கத்தில் ஒரு கடுமையான விவாதம் எழுந்தது. கட்டலான் தேசியவாத கைதிகள் மீதான கண்துடைப்பு வழக்கு விசாரணைக்குப் பின்னர், அக்டோபர் 2019 இல், வோக்ஸ் போன்ற பாசிசவாத சக்திகளின் கோரிக்கைகளுக்கு இணங்கிய விதத்தில், சோசலிஸ்ட் கட்சி கடுமையான தண்டனை வழங்க தீர்மானித்தது.

பொடெமோஸின் கன்னைகள் அந்த கோடையில் சோசலிஸ்ட் கட்சியுடன் நேரடியாக அரசாங்கத்திற்குள் நுழைய வாதிட்ட அதேவேளையில், அந்த விவாதத்தில் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் தான் இறுதியில் வென்றது. பொடெமோஸிற்குக் காத்திருக்குமாறும் மற்றும் உடனடியாக சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்குள் நுழைய வேண்டாமென்றும் ஆலோசனை வழங்கி, அது எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொண்டது. சோசலிஸ்ட் கட்சி மற்றும் Vox க்குள் பொடெமோஸ் இணைந்துபோவதை ஆதரிக்க அது விரும்பியது என்றாலும், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் தம்மால் அவ்வாறு செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று வலியுறுத்தியது.

இந்த வாதம் முன்னணி முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் உறுப்பினரான பேராசிரியர் Jaime Pastor ஆல் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டது, அதுவும் அரசாங்கம் அமைப்பது மீது சோசலிஸ்ட் கட்சியுடனான பொடெமோஸின் பேச்சுவார்த்தைகள் முறிந்து, நவம்பர் 2019 தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர் இது வந்தது. 2019 முடிவதற்கு முன்னதாக சோசலிஸ்ட் கட்சி உடனான ஓர் அரசாங்கத்தில் பொடெமோஸ் பங்குபற்றுவதை அவர் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை Viento Sur இல் அவர் பின்வருமாறு விவரித்தார்: “அரசாங்கத்திற்குள் இருந்து பொடெமோஸ் இடதுசாரிக் கொள்கைகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்று சிந்திப்பதே கடினமாக இருந்தது, மறுபுறம், மவுனமாக இருந்ததன் மூலமாக அது பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் மீதான வலதுசாரி கொள்கைகளுக்கும் கட்டலோனியாவில் ஒடுக்குமுறை கொள்கைகளுக்கும் அது உடந்தையாக இருந்தது என்பதையும் அது ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும்,” என்றார்.

சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்குள் நுழைவதையோ மற்றும் வலதுசாரி கொள்கைகளில் உடந்தையாய் இருப்பதையோ Pastor எதிர்க்கவில்லை, உண்மையில் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் இதைதான் செய்தார்கள். அதற்கு பதிலாக, முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் மற்றும் பொடெமோஸ் புதிய தேர்தல்களுக்குப் பின்னரும், மற்றும் கட்டலான் அரசியல் கைதிகளை சிறையிலிடுவதற்கு எதிராக கட்டலோனியாவில் நிச்சயமாக வெடிக்கவிருந்த பாரிய போராட்டங்களை சோசலிஸ்ட் கட்சி ஒடுக்கிய பின்னரும் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்றவர் வலியுறுத்தினார். இது கட்டலோனியாவில் சோசலிஸ்ட் கட்சி இன் பாசிசவாத ஒடுக்குமுறையுடன் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் பகிரங்கமாக இணைந்திருப்பதைத் தவிர்க்கும். பின்னர் அது, அதன் இடது பிரிவில் இருந்து கட்டுப்படுத்தவியலாத எதிர்ப்பு எழுவதைத் தடுக்கும் நம்பிக்கையில், "டிஜிட்டல் தாக்குதல் செய்யும்" தணிக்கைச் சட்டம் போன்ற ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் இராணுவவாதம், சிக்கன நடவடிக்கை கொள்கைகளில் இணைந்து கொள்ள முடியும்.

பாஸ்டர் குறிப்பிட்டவாறு, இது "குறைந்தபட்ச உடன்படிக்கை புள்ளிளுக்குப் பொதுவான கடமைப்பாடுகளை ஏற்குமாறு சோசலிஸ்ட் கட்சி தலைமையை நிர்பந்திக்க நம்மை அனுமதிக்கிறது... அதேவேளையில் எப்போதேனும் அவசியமானால் இந்த கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளில் இருந்தும் வெளியேற அல்லது எதிர்ப்பதற்காக நம்மைநாமே வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ளும் விதத்தில், நாடாளுமன்றத்திற்குள் இருந்தே மற்றும் மக்கள் இயக்கத்திற்குள் இருந்தே உறுதியான எதிர்ப்பை அபிவிருத்தி செய்ய நமது அரசியல் சுதந்திரத்திற்கும் உத்தரவாதமளிக்கிறது.”

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் பின்பற்றிய கொள்கைகளில் "அரசியல் சுதந்திரம்" அல்லது "உறுதியான எதிர்ப்பு" சம்பந்தமான எந்த அறிகுறியும் நிச்சயமாக அங்கே இருக்கவில்லை. ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கட்டலான் தேசியவாதிகள் சிறையில் அடைக்கப்பட்டதும், இது தூண்டிவிட்ட பாரிய போராட்டங்கள் உயிரிழந்ததும், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் மகிழ்ச்சியோடு நவம்பர் 12, 2019 இல் அந்த புதிய அரசாங்கத்தில் இணைந்தது. சோசலிஸ்ட் கட்சி-பொடெமோஸ் உடன்படிக்கை எட்டப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் உறுப்பினர் ரௌல் கமார்கோ (Raul Camargo) Europapress க்கு கூறுகையில், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் "கவனமாக" இருக்கும் மற்றும் அரசாங்கத்தை "அதன் நடவடிக்கைகளுக்காக" மதிப்பிட்டு கொண்டே இருக்கும் என்றார்.

தொடர்ந்து நடந்து வந்த சர்வதேச வர்க்க போராட்ட மேலெழுச்சி ஸ்பெயினுக்குப் பரவிய ஒரு சில மாதங்களுக்குப் பின்னர்தான் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் இறுதியில் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதென முடிவெடுத்தது. சர்வதேச அளவில், அமெரிக்கா மற்றும் மெக்சிகன் வாகனத் தொழில்துறைகளிலும், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் இந்தியாவில் முஸ்லீம்-விரோத சட்டங்களுக்கு எதிராகவும் வேலைநிறுத்தங்கள் வெடித்திருந்தது. ஸ்பெயினில், “வேலைகள், ஓய்வூதியங்கள் மற்றும் கண்ணியமான வாழ்க்கை" என்ற முழக்கத்தின் கீழ் பாஸ்க் பிரதேசத்தின் பொது வேலைநிறுத்தம் அப்பிரதேசத்தையே முடக்கியது, மேலும் அதைத் தொடர்ந்து சோசலிஸ்ட் கட்சி-பொடெமோஸ் அரசாங்கத்தைக் கண்டித்து விவசாயிகளின் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

எப்போதும் அம்பலப்பட்டு விடுமோ என்ற பயத்துடன், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் விரைவிலேயே அது அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. அது அவ்வாறு செய்வதற்கு, பொடெமோஸ் அதுவே பங்குபற்றியிருந்த அரசாங்கத்தை அது எதிர்க்கவில்லை என்ற அர்த்தமற்ற விமர்சனத்துடன், ஒரு காரணத்தை இட்டுக்கட்ட முயன்றது: “சோசலிஸ்ட் கட்சியை [அதிகாரத்தில்] அமர்த்தி, பின்னர் ஓர் பாராளுமன்ற பெரும்பான்மையை நிறுவுவதை கட்டமைப்பதற்கான ஒரு திட்டத்திற்கு தொடர்ந்து போராடுவதில் எதிர்ப்புக்கு செல்ல வேண்டும் என்ற எங்களின் முன்மொழிவை பொடெமோஸின் தற்போதைய இந்த தலைமை கைவிட்டுவிட்டது,” என்றது. “வீதிகளை சுத்தமாக்குவதைத் தவிர்க்கும் ஒரு புதிய சுற்று போராட்டங்களை ஊக்குவிக்க முயலும்" அதேவேளையில் பொடெமோஸில் அதன் உறுப்பினர்களிடையிலான உள்விவாதம் ஒன்றை அது நடத்தவிருப்பதாக அறிவித்தது.

கோவிட்-19 தொற்றுநோய் அதன் திட்டங்களை தொந்தரவுக்கு உள்ளாக்கியபோது முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் வெளியேறுவதற்கு தயாராகி இருந்தது. வெளியேறுவதன் மீது மார்ச் 28 இல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, ஆனால் மே 14 வரையில் அது வெளியேறுவது குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. அதன் அறிக்கையின்படி, “இந்த முடிவைப் பகிரங்கமாக இன்று அறிவிக்கும் வரையில் நாங்கள் காத்திருந்தோம்; நம் நாட்டைக் கடுமையாக தாக்கி வரும் மற்றும் மக்களிடையிலான வர்க்கங்களில் மிகவும் நலிந்த பிரிவுகளைப் பாதித்து வரும் இந்த கோவிட்-19 தொற்றுநோயைக் கவனத்தில் கொள்வது எங்களின் முன்னுரிமையாக இருந்தது,” என்றது குறிப்பிட்டது.

ஆனால் நோயாளிகளைக் கவனித்துக் கொள்வது ஸ்பானிய அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமையாக இருக்கவில்லை. சோசலிஸ்ட் கட்சி-பொடெமோஸ் அரசாங்கம் மற்றும் சர்வதேச அளவில் அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கை வெட்டுக்கள் மருத்துவத்துறையை சமாளிக்கமுடியாத நிலையில் வைத்ததுடன், அவை வங்கிகள் மற்றும் மிகப்பெரும் பெருநிறுவனங்களுக்கு பிணையெடுப்புகள் வழங்கிய அதேவேளையில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் வேலைக்குத் திரும்பச் செய்ய தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்பட்டதால், அவற்றை இந்த தொற்றுநோய் அம்பலப்படுத்தி உள்ளது.

தனிமைப்படுத்தும் நடைமுறைகளை நீக்குவது ஆயிரமாயிரம் உயிர்களைப் பறித்து புதிய வெடிப்புகளைத் தூண்டும் என்று தெரிந்துமே கூட, சோசலிஸ்ட் கட்சி-பொடெமோஸ் அரசாங்கம், மே மாத ஆரம்பத்திலிருந்தே, தனிமைப்படுத்தும் நடைமுறைகளை நீக்கி இருந்தன. பொடெமோஸ் திணித்த சிக்கன நடவடிக்கைகள் உள்ளடங்கலாக சிக்கன நடவடிக்கையால் நிதியாதாரத்திற்கு போராடி கொண்டிருந்த மருத்துவமனைகள் கோவிட்-19 க்குப் பலியானவர்களால் நிரம்பி வழிந்த நிலையில், ஸ்பெயினில் இந்த உயிர்கொல்லி நோய்க்கு அண்மித்து கூடுதலாக 50,000 உயிரிழப்புகளாவது ஏற்பட்டிருந்தது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் ஏன் ஏழு வாரங்கள் காத்திருந்தது? அது எந்த தெளிவான விளக்கமும் வழங்கவில்லை. ஆனால் பொடெமோஸ் மற்றும் அதன் முன்வரலாறைக் கண்டித்து இந்த தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலேயே அது அரசாங்கத்திலிருந்து வெளியேறி இருந்தால், அது அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் இந்த தொற்றுநோய்க்கு அதன் நாசகரமான செயல்பாடுகளுக்கும் ஓர் எதிர்ப்பு அறிக்கையாக பார்க்கப்பட்டிருக்கும் என்பது முற்றிலும் வெளிப்படையாக உள்ளது. பொடெமோஸுடன் "அன்பார்ந்த" முறிவுக்கான திட்டத்தின் பாகமாக அது இருக்கவில்லை. ஆகவே, இந்த தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து போதுமானளவுக்கு நீண்டகாலம் காத்திருந்த பின்னரே, அது நழுவியது.

இதுவே சரியான தருணம் என்ற முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் கருதும்போது, அது, முற்றிலும் மோசடியாக, சமீபத்தில் அது விட்டு வெளியேறி வந்த அரசாங்கத்திற்கு "எதிர்ப்பு" சக்தியாக தன்னை காட்டிக் கொள்ளத் தொடங்கும்.

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் எங்கே செல்கின்றனர்?

ஏற்கனவே இந்த கோவிட்-19 தொற்றுநோய், 1930 களின் பெருமந்தநிலைக்குப் பிந்தைய மிகப் பெரிய வேலையிழப்புகள் மற்றும் பொருளாதார பொறிவை தூண்டிவிட்டுள்ளது. உலகெங்கிலும் நூறு மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் வேலைகளை இழந்துள்ளனர். அரசாங்கங்களாலும் மத்திய வங்கிகளாலும் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் யூரோக்கள் வங்கிகளுக்கும் பிரதான பெருநிறுவனங்களுக்கும் பாய்ச்சப்படுகின்ற அதேவேளையில் பாரியளவில் சமூக தாக்குதல்களுக்குத் தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. ஸ்பெயினின் மத்திய வங்கியின் தகவல்படி, அந்நாடு அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 60 பில்லியன் யூரோ, அல்லது ஒவ்வொரு ஆண்டும் 6 பில்லியன் யூரோவுக்கு மூர்க்கமான சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க வேண்டும்.

இந்த தொற்றுநோயைக் குறித்து, காமார்கோ வலியுறுத்துகையில், முன்னர் குறிப்பிட்டதைப் போலவே, அனைத்து விதமான பிற்போக்குத்தனமான முதலாளித்துவ வர்க்க அமைப்புகள் அல்லது குட்டி-முதலாளித்துவ வர்க்க அமைப்புகளுடன் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் பரந்த கூட்டணிகளை ஊக்குவிக்கவில்லை: “என்ன வரவிருக்கிறதோ, எம்முன்னே என்ன இருக்கிறதோ, அதைக் கையாள மிகவும் பரந்த சமூக அணியை உருவாக்குவதே நமது அடிப்படையான விடயம்... இது மிகவும் கடுமையாக இருக்கப் போகிறது. இந்த உள்ளடக்கத்தில், சந்தேகத்திற்கிடமின்றி நடக்கவிருக்கும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு விடையிறுக்கும் விதமாக ஒரு பன்முக சமூக அணியை ஏற்படுத்துவதே மிக முக்கிய விடயமாகும்,” என்றார்.

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் அதன் பாகமாக இருக்கும் போதே சோசலிஸ்ட் கட்சி-பொடெமோஸ் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய கொள்கைகள், தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் ஆதரிக்க தயாராக உள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றன. பாதுகாப்பற்ற வேலையிட நிலைமைகளுக்கு எதிராக Glovo வினியோக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் எஃகு உருக்காலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களுக்குக் கலகம் ஒடுக்கும் பொலிஸைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலமாக சோசலிஸ்ட் கட்சி-பொடெமோஸ் அரசாங்கம் விடையிறுத்தது. இந்த தொற்றுநோய்க்கு மத்தியிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப செய்த அதேவேளையில் போராடுவதற்கான உரிமையை விட மருத்துவநல அக்கறைகளே முக்கியமானதென எரிச்சலூட்டும் விதத்தில் வாதிட்டு அது போராட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் தடை விதித்தது. பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகள் சமூக ஊடகங்களைக் கண்காணித்து வருவதுடன், பாரிய மின்னணு தணிக்கையை அதிகரிக்கின்றன என்றால், அதற்கு அதன் "டிஜிட்டல் தாக்குதல்" சட்டத்திற்குத் தான் நன்றி கூற வேண்டியிருக்கும்.

காமார்கோ அவர் பேட்டியில், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் இந்த முன்வரலாறை எதிர்க்கவில்லை என்பதை சமிக்ஞை செய்தார். “பொடெமோஸின் நிஜமான கோட்பாடுகளை" இக்லெஸியாஸ் காட்டுகொடுத்துவிட்டதாக அவர் நம்புகிறாரா என்று முகத்திற்கு நேராக ஒளிவுமறைவின்றி கேட்கப்பட்ட போது, கமார்கோ மழுப்பலாக பின்வருமாறு பதிலளித்தார்: “நான் அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டேன். தற்போதைய பொடெமோஸ் நிஜமான பொடெமோஸ் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள், பொடெமோஸ் மற்றும் ஸ்பெயினில் அவர்களின் அரசாங்கத்தின் முன்வரலாறானது, "இடது ஜனரஞ்சக" கட்சிகள் தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமாக இருப்பதற்கு மறுக்கவியலாத ஆதாரத்தை வழங்குகிறது. இத்தகைய அமைப்புகள் ஸ்ராலினிச கட்சிகளுடனான அவற்றின் தொடர்புகளைப் பயன்படுத்தி அவை அக்டோபர் புரட்சி அல்லது மார்க்சிசத்துடன் இணைந்திருப்பதாக மோசடியாக காட்டிக் கொண்ட காலம் நீண்டகாலத்திற்கு முன்னரே முடிந்துவிட்டது. அவர்களின் வரம்பற்ற நம்பிக்கைதுரோகம் முதலாளித்துவ அரசை அவர்கள் பாதுகாப்பதுடன் பிணைந்துள்ளது—அதாவது மார்க்சிசத்திற்கு அவர்களின் வர்க்க எதிர்ப்புடன் பிணைந்துள்ளது என்பது முன்பினும் அதிக வெளிப்படையாக உள்ளது.

அவர்களின் தத்துவவாதிகள் வெளிப்படையாகவே சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்டத்தை மறுக்கிறார்கள். ஓர் இடது ஜனரஞ்சகவாதத்திற்காக (For a Left Populism) என்ற அவரின் 2018 பிரசுரத்தில், பின்நவீனத்துவ எழுத்தாளலும் சிரிசா மற்றும் பொடெமோஸுடன் இணைந்திருப்பவருமான சாந்தால் மூஃப் (Chantal Mouffe) அறிவித்தார்: “என்ன அவசரமாக தேவைப்படுகிறது என்றால் இன்னும் அதிக ஜனநாயக ஆதிக்க அமைப்பை நிறுவுவதற்காக ஜனநாயகத்திற்குப் பிந்தைய பல்வேறு ஜனநாயக எதிர்ப்புகளை ஒருங்கிணைத்து, 'மக்களை' கட்டமைக்கும் நோக்கில் ஒரு இடது ஜனரஞ்சகவாத மூலோபாயம் ஆகும்... இதற்காக தாராளவாத ஜனநாயக ஆட்சியுடன் 'புரட்சிகரமாக' முறித்துக் கொள்ள வேண்டியதில்லை என்றே நான் வாதிடுகிறேன்,” என்றார்.

உண்மையில், இந்த தொற்றுநோய், ஏகாதிபத்திய போர்கள், பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளால் தோற்றுவிக்கப்பட்ட வெறுப்பூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மை மட்டங்கள் என இவை இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் திவால்நிலைமை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மைக்கு ஆதாரமாகும். முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் முன்னெடுக்கும் தேசியவாத முன்னோக்கு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முட்டுச்சந்து என்பதற்கும் அவை மறுக்க முடியாத ஆதாரமாகும். பூகோளமயப்பட்ட தொழில்துறை மற்றும் நிதியியல் சந்தைகள் மீதான கட்டுப்பாடு, இந்த தொற்றுநோய், போர், சமூக சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் என ஒவ்வொரு பிரச்சினையும் தன்னை ஒரு சர்வதேச பிரச்சினையாக முன்னிறுத்தும் நிலைமைகளின் கீழ், முற்றிலும் தேசிய முதலாளித்துவ அரசாங்கங்களுக்குள் நுழைய நோக்குநிலை கொண்ட இதுபோன்ற அமைப்புகளிடம் எடுத்துக் கூறுவற்கு ஒன்றும் இருப்பதில்லை.

“பின்நவீன-மார்க்சிஸ்டுகளாக" (post-Marxists) முந்தைய அவர்களின் கூற்றுகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களது மார்க்சிச பாரம்பரியத்தை தொடர்வதற்கான ஒரு முயற்சியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக அவற்றைக் கைவிடுவதைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பதை மட்டுமே இன்று "இடது ஜனரஞ்சகவாத" முத்திரை தரித்த இத்தகைய கட்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.

பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்திற்கான போராட்டம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தின் அடிப்படையில் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) எதிர்ப்பு கன்னைவாத பிரச்சினையோ அல்லது தந்திரோபாய பிரச்சினையோ சம்பந்தப்பட்டதல்ல. மாறாக, மார்க்சிசத்தின் வரலாற்று மரபியத்தைப் பாதுகாத்து, முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனமான குட்டி-முதலாளித்துவ பாதுகாவலர்களுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர தலைமையை வழங்கும் முயற்சியில், ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பின் கோட்பாட்டுரீதியிலான எதிர்ப்பை அது பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த போக்கைத் தான், பிற்போக்குத்தனமான "இடது ஜனரஞ்சகவாத" அமைப்புகளுக்கு எதிராக போராடுவதற்காக தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்க ஸ்பெயினிலும் உலகெங்கிலும் கட்டமைக்க வேண்டியுள்ளது.

ICFI சமரசத்திற்கு இடமின்றி முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளை மட்டும் எதிர்க்கவில்லை, மாறாக பொடெமோஸுடன் இணைய ஒரு வழி காணத்தவறி ஆனால் இப்போது முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளுடன் ஒரு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பைத் தணிக்க இந்த சந்தர்ப்பதத்தில் குதித்தெழும் ஏனைய குட்டி-முதலாளித்துவ ஜனரஞ்சகவாத போக்குகளையும் எதிர்க்கிறது.

பொடெமோஸில் இருந்து முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் வெளியேறுவது மோரெனோ வாத அமைப்பான ஆண்கள் பெண்கள் தொழிலாளர்களின் புரட்சிகர போக்கு (Corriente Revolucionaria de Trabajadores y Trabajadoras – CRT), அதன் துணைக் கட்சியான ஆர்ஜென்டினா சோசலிச தொழிலாளர் கட்சி (PTS) போன்ற குழுக்களையும் அம்பலப்படுத்தி உள்ளது. பப்லோவாத முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் அதன் அறிக்கையை பிரசுரித்த அதே நாளில், CRT, “ஸ்பானிய அரசின் புரட்சிகர இடதுக்கு ஒரு கடிதம்: புரட்சிகர இடது, தொழிலாள வர்க்கம், பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஓர் ஒருங்கிணைந்த கட்சியை நோக்கி நாம் முன்நகர்வோம்,” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பிரசுரித்தது.

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் முதலாளித்துவத்துடன் முறித்துக் கொள்ளும் என்று முட்டாள்த்தனமாக ஊகித்து, CRT அதை புகழ்ந்தது. முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள், CRT, கட்டலான் மற்றும் பாஸ்க் தேசியவாத அமைப்புகளை மறுகுழுவாக்கம் செய்து ஒரு புரட்சிகர "துருவத்தை" உருவாக்குமாறு அதற்கு அது முறையிட்டது. “நாங்கள் கட்டமைக்க முன்மொழிவதைப் போன்ற ஒரு புரட்சிகர துருவம், முதலாளித்துவ அரசு நிர்வாகத்துடன் நிச்சயமாக முறித்துக் கொள்ளவும் மற்றும் இடது ஜனரஞ்சகவாதத்துடன் ஐக்கியத்தைக் கோருவதற்கான திட்டங்களை வகுக்கவும், முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் நமது தோழர்களைப் போல, ஏனைய நவ-சீர்திருத்தவாத இடது அமைப்புகளைச் சமாதானப்படுத்தி நம் பக்கம் இழுப்பதையும் சாத்தியமாக்கும்,” என்று CRT வாதிட்டது.

இது அர்த்தமற்றது. முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் ஓர் இடதுசாரி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முயலவில்லை என்பதோடு, அதைவிட மேலாக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்தும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூட விரும்பவில்லை. அது வாழ்க்கை தரங்களைக் குறைக்க, கூலிகள் மீது போர் தொடுக்க, ஜனநாயக உரிமைகளைத் தாக்க மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் பாசிசவாத திட்டநிரலுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் தடுக்க செயல்படுகின்ற ஒரு முதலாளித்துவ அரசு கட்சியாகும். CRT போன்ற மோசமான பாசாங்குக்காரர்கள் உட்பட கட்சிகளது ஒரு கூட்டணியில் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் இணைகிறதோ இல்லையோ, ஆனால் அது முதலாளித்துவத்தின் உறுதியான பாதுகாவலராக இருக்கும். உண்மையில் முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளை “தோழர்கள்" என்று குறிப்பிடும் CRT இன் குறிப்பு, CRT அதுவே கூட பொடெமோஸ் மற்றும் முதலாளித்துவ அரசின் வெறும் ஒரு மறைமுக பிரிவு என்பதை அடிக்கோடிடுகிறது.

ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் கோவிட்-19 தொற்றுநோய், சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகள், போர் மற்றும் இராணுவ-பொலிஸ் ஒடுக்குமுறையின் பாதிப்புகளுக்கு எதிராக போராட முயலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் தீர்க்கமான பிரச்சினையே, இத்தகைய நடுத்தர வர்க்க சக்திகளிடமிருந்து அவர்களின் அரசியல் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி வைப்பதாகும். பலவீனமான தேசியவாத முன்னோக்குடன் தொழிலாளர்களைக் குழப்புவதன் மூலமாகவும் நெறிபிறழச் செய்வதன் மூலமாகவும், உளவுத்துறை மற்றும் பொலிஸ் வட்டாரங்களுடன் நேரடியாக தொடர்புபட்ட இக்லெஸியாஸ் போன்ற அதிகாரிகளுக்குத் தகவல்களைக் கையளிப்பதன் மூலமாகவும், அவர்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் குரல்வளையை நெரித்து, நெறிபிறழச் செய்ய செயல்படுகிறார்கள்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI) தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக கட்டமைப்பதே இன்று தீர்க்கமான மூலோபாய பிரச்சினை என்பதை முதலாளித்துவ எதிர்ப்புவாதிகளின் (Anticapitalistas) பிற்போக்குத்தனமான முன்வரலாறு எடுத்துக்காட்டுகிறது. இதற்கு, முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் போன்ற குழுக்களுக்கு எதிரான ஒரு சமரசமற்ற போராட்டத்தைத் தொடுக்க, ICFI இன் வரலாற்றில் உள்பொதிந்துள்ள நிகரற்ற அரசியல் அனுபவங்களின் அடிப்படையில், ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் ICFI இன் பிரிவுகளைக் கட்டமைப்பது அவசியமாகும்.

கட்டுரையாசிரியர்கள் பரிந்துரைக்கும் ஏனைய ஆவணங்கள்:

Anticapitalistas prepare to leave Spain’s Podemos-Socialist Party government
[13 February 2020]

Spain: Podemos Labour Ministry accepts that hundreds of thousands will die from COVID-19
[25 April 2020]

Loading