ட்ரம்பிற்கு செய்தி அனுப்புவதற்காக தொடர்பு அலுவலகத்தை வட கொரியா தகர்க்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரிய தீபகற்ப பகுதியில் நிலவும் கூர்மையான பதட்டங்களின் அளவீடுகளை எடுத்துக் காண்பிக்கும் விதத்தில், வட கொரிய ஆட்சி நேற்று தென் கொரியாவுடனான அதன் கூட்டு தொடர்பு அலுவலகத்தை பெரும் பரபரப்புடன் இடித்து தகர்த்தது. பெயரளவில் சியோலை குறிவைக்கும் நடவடிக்கையாக இது இருந்தாலும், வட கொரியாவின் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்தவித அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுக்கும் ட்ரம்ப் நிர்வாகம் முன்வரத் தவறியது குறித்த அதன் ஆழ்ந்த விரக்தியையே பியோங்யாங்கின் நடவடிக்கை வெளிப்படுத்தியது.

ஜூன் 2018 இல், வட கொரியாவை நிர்மூலமாக்குவதற்கென போரைத் தூண்டும் வகையில், தான் முன்னர் விடுத்த அச்சுறுத்தல்களை ட்ரம்ப் திடீரென மாற்றிக் கொண்டதுடன், முன்நிகழ்ந்திராத வகையில் சிங்கப்பூரில் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் உடன் ஒரு உச்சி மாநாட்டையும் நடத்தினார், இந்நிகழ்வு வட கொரியா அதன் அணுசக்தி திட்டங்களை நிறுத்துவதற்கு பதிலீடாக அதன் மீதான பொருளாதாரத் தடைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எட்டப்படலாம் என்பது பற்றி தெளிவற்ற வகையில் கோடிட்டுக் காட்டியது.

வட கொரிய நகரமான கேசோங்கில் அமைந்துள்ள இந்த தொடர்பு அலுவலகம், கிம் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இடையே நடந்த உச்சிமாநாடுகளைத் தொடர்ந்து அவர்களிடையே நிலவும் நல்லிணக்கத்தின் அடையாளமாக செப்டம்பர் 2018 இல் ஸ்தாபிக்கப்பட்டது. கோவிட்-19 நோய்தொற்றிலிருந்து நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியில் வட கொரியா அதன் எல்லைகளை மூடிவிட்டதன் பின்னர் ஜனவரி மாதத்திலிருந்து இந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

வட கொரியா அதன் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை முற்றிலும் அகற்றுவதற்கு முன்னர் அதற்கு எந்தவொரு பொருளாதார நிவாரணத்தையும் வழங்க அமெரிக்க மறுத்துவிட்டது குறித்து பெப்ரவரி 2019 இல் வியட்நாமில் ட்ரம்பிற்கும் கிம்மிற்கும் இடையே நடக்கவிருந்த இரண்டாவது உச்சி மாநாடு முறிந்து போனதன் பின்னர் இரண்டு கொரியாக்களுக்கு இடையிலான உறவுகள் விரைந்து மோசமடையத் தொடங்கின.

மூன் நிர்வாகம் ஒரு மத்தியஸ்த பாத்திரம் வகிக்கவில்லை, மாறாக “ஒரு ஆட்டக்காரராக இருந்ததே தவிர, ஒரு மத்தியஸ்தராக அது இல்லை” ஏனென்றால் அது ஒரு அமெரிக்க இராணுவ நட்பு நாடாகவே இருந்தது என்று அறிவித்து மார்ச் 2019 இல் மூன் நிர்வாகத்தை வட கொரியா கடுமையாக சாடியது. இரு கொரியாக்களுக்கு மத்தியிலான சிறந்த உறவுகளுக்கான வாய்ப்பை வழங்கினாலும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான முயற்சி எதையும் மூன் மேற்கொள்ளவில்லை. தென் கொரிய வணிகங்கள் வட கொரிய தொழிலாளர்களின் உழைப்பை மலிவு விலையில் சுரண்டிய கேசோங் நகரில் உள்ள கூட்டு தொழில்துறை வளாகம் இன்னமும் மூடப்பட்டுள்ளது.

அணுவாயுதங்கள் மற்றும் தொலைதூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் செய்வதை வட கொரியா முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர், அதற்கு பதிலீடாக எதையும் வழங்காமல் வெறுமனே வட கொரியாவை ட்ரம்ப் தாக்கியுள்ளார். இரு கொரியாக்களையும் பிரிக்கும் இராணுவமகற்றப்பட்ட மண்டலத்தில் கடந்த ஜூன் மாதம் குறுகிய நேரத்திற்கு கிம் ஐ ட்ரம்ப் சந்தித்தார், என்றாலும் சுவீடனில் நடந்த பணி நிமித்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. ட்ரம்ப் நிர்வாகம் வெறுமனே புறக்கணித்ததான அமெரிக்காவுடன் எட்டப்படவிருந்த ஒரு ஒப்பந்தத்திற்கு பியோங்யாங் கடந்த ஆண்டு இறுதிக் காலக்கெடுவை நிர்ணயித்தது.

தொடர்பு அலுவலகத்தை இடித்து தகர்ப்பது மற்றும் தென் கொரியாவை விமர்சிப்பது போன்ற நடவடிக்கைகளை நேரடியாக என்றல்லாமல் மறைமுகமாக வாஷிங்டனுக்கு ஒரு செய்தியை அனுப்புவதற்கான வழிமுறையாக வட கொரியா தேர்வு செய்துள்ளது. தென் கொரிய பகுப்பாய்வாளரான லீ சியோங்-ஹியோன் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தது போல: “இது [வட கொரியா] அதன் விரக்தியையும் உள்நாட்டு அதிருப்தி நிலையையும் வெளிப்படுத்த வேண்டியிருந்தது, என்றாலும் இது அமெரிக்காவை நேரடியாகத் தூண்டிவிட்டால் அது பதிலடி கொடுக்கும் என்று அஞ்சியது. அதாவது, ‘நீங்கள் உங்கள் அயலவர்களை வெறுக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களது நாயை உதைப்பீர்கள்’ என்று கொரியர்கள் கூறுவது போல இது உள்ளது.”

நோய்தொற்றின் காரணமாக வட கொரியா அதன் எல்லைகளை மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட பின்னரே அதன் பொருளாதாரம் மேலும் படுமோசமாக பலவீனமடைந்ததை லீ சுட்டிக்காட்டினார். தாதுக்கள் ஏற்றுமதியையும் மற்றும் மிகவும் அத்தியாவசியமான பெட்ரோலிய பொருட்கள் உட்பட பல பொருட்களின் இறக்குமதியையும் தடை செய்வதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் அதன் வெளிநாட்டு வர்த்தகத்தின் பெரும்பகுதி குறைக்கப்பட்டு அமெரிக்க தலைமையிலான பொருளாதார நிவாரணங்கள் ஏற்கனவே முடங்கிப் போன நிலையில், அது வட கொரிய பொருளாதாரத்தின் மீது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

வட கொரியா அதன் முதன்மை வர்த்தக பங்காளியான சீனாவுடனான அதன் எல்லையை மூடிக் கொண்டதன் பின்னர், அந்நிய செலாவணி மற்றும் முக்கிய பொருட்களின் வரத்து இல்லாமல் பாதிக்கப்படைந்துள்ளது. 2020 ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வட கொரியா உடனான வர்த்தகத்தில் 24 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சீன சுங்கத்துறை தெரிவிக்கிறது. சீனாவின் ஏற்றுமதிகள் 198 மில்லியன் டாலர் அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளதுடன், வட கொரியாவிலிருந்து இறக்குமதி வெறும் 10 மில்லியன் டாலராக குறைந்துள்ளது, இது 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 74 சதவிகித வீழ்ச்சியாகும்.

2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக, வட கொரியா அதன் வரவு- செலவுத் திட்டத்தில் விழுந்த பெரிய ஓட்டையை அடைப்பதற்கு பத்திரங்களை பயன்படுத்துவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்தில் 60 சதவிகிதத்தை ஈடுகட்ட பத்திரங்கள் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. பெரும்பான்மையான பத்திரங்கள் அரசு நிறுவனங்களுக்கு விற்கப்படும் என்றாலும், சுமார் 40 சதவிகித பத்திரங்கள் தனியார் தொழில்முனைவோர் அல்லது ஆட்சியால் ஊக்கப்படுத்தப்பட்ட டோன்ஜூவுக்கு (donju) விற்கப்படும். நிவாரணத்திற்கான நம்பிக்கையை இழந்து, தொற்றுநோய் குறித்த உதவிக்காக ஐக்கிய நாடுகள் சபை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சில நாடுகளிடம் பியோங்யாங் உதவி கோரியுள்ளது.

அதே நேரத்தில், வலதுசாரி குழுக்கள் எல்லைப்பகுதி முழுவதும் மீண்டும் பலூன் மூலமாக கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களை அனுப்பத் தொடங்கியதன் பின்னர், தென் கொரியா உடனான பதட்டங்கள் கூர்மையாகிவிட்டன. மூன் நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றினாலும், வட கொரிய தலைவரின் சகோதரியும் கூட்டாளியுமான கிம் யோ ஜோங் சனிக்கிழமை, “வெகு காலத்திற்கு முன்பே, பயனற்றதான வடக்கு-தெற்கு கூட்டு தொடர்பு அலுவலகம் முற்றிலுமாக தகர்ந்து விழும் சோகமான காட்சி காணப்படும்” என்று அறிவித்திருந்தார்.

தொடர்பு அலுவலகம் அழிக்கப்பட்டதானது தென் கொரியாவின் இராணுவம், இராஜதந்திரிகள் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகிய மிக முக்கியமான தகவல் தொடர்பு வழிகளை வட கொரியா துண்டித்து கொண்டுவிட்டது என்பதையும் சேர்த்து தெரிவிக்கிறது. மேலும், கொரியாக்களுக்கு இடையில் நிலவிய சிறந்த உறவுகளுக்கு அடையாளமாக முன்னர் அகற்றப்பட்டிருந்ததான DMZ க்கு நெருக்கமான பகுதிகளுக்கு துருப்புக்களை திருப்பியனுப்பவிருப்பதாக பியோங்யாங் அறிவித்துள்ளது.

பியோங்யாங்கிற்கு எந்தவொரு சலுகையும் வழங்க ட்ரம்ப் நிர்வாகம் மறுப்பது உலகின் மிக ஆபத்தான வெடிப்பு புள்ளிகளில் ஒன்றாக மீண்டும் அதை எரியூட்டுவதற்கு அச்சுறுத்துகிறது. மார்ச் மாதத்தில் வட கொரியா குறுகிய தூர ஏவுகணைகளை சோதனை செய்த அதேவேளை, தொலைதூர ஏவுகணைகள் அல்லது அணுவாயுதங்களை சோதனை செய்வதிலிருந்து விலகிக்கொண்டது. அவ்வாறு செய்வது வாஷிங்டனுடனான ஒரு ஒப்பந்தத்திற்கான சாத்தியத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, ட்ரம்பின் முந்தைய போர்க்குணமிக்க அச்சுறுத்தல்களுக்கு திரும்பவும் வழிவகுக்கும்.

வட கொரியா “மேலதிக எதிர்ப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்” என்ற கோரிக்கையும், மற்றும் சமாதான உறவுகளைப் பேணுவதற்கான சியோலின் முயற்சிகளை அது “முழுமையாக ஆதரிக்கிறது” என்று அறிவித்தும், தொடர்பு அலுவலகம் இடிக்கப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று பதிலிறுத்தது. என்றாலும், அது மாறக்கூடும்.

கோவிட்-19 நோய்தொற்றுக்கான பலிக்கடாவாக சீனாவை மாற்ற முயற்சிப்பது, அத்துடன் அதன் மீது பொருளாதார அபராதங்களை விதிப்பது மற்றும் இந்த பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ கட்டமைப்பை விஸ்தரிப்பது என ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம் சீனவுடனான தீவிரமான மோதலில் ஈடுபட்டுள்ளது. மேலும், அணுவாயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு போரைத் தூண்டுவதற்கு அச்சுறுத்தும் வகையில், தனது மூலோபாய பங்காளியான இந்தியா சீனாவுடனான தனது பதட்டம் நிறைந்த எல்லையில் போரை நிகழ்த்த பொறுப்பற்ற வகையில் ஊக்குவித்து வருகிறது.

வாரியங்களை மீறி சீனாவுக்கு எதிராக சவால் விடும் அவரது உறுதியில், தென் சீனக் கடலில் ஆத்திரமூட்டும் வகையில் அமெரிக்க “கடல்வழி சுதந்திர” நடவடிக்கைகளை ட்ரம்ப் அதிகரித்துள்ளதுடன், சீனாவின் இறையாண்மை பகுதியாக பெய்ஜிங் கருதும் தைவான் உடனான உறவுகளையும் அதிகரித்துள்ளார். இந்த சூழலில், புவிசார் அரசியல் போட்டிக்கான மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலுக்கான மற்றொரு அரங்கமாக கொரிய தீபகற்பம் விரைந்து மாறக்கூடும்.

Loading