இலங்கை படையினர் யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞனை கொன்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

கடந்த சனிக்கிழமை மாலை, பளை அருகே முகமாலையில், 24 வயது தமிழ் இளைஞரான திரவியம் ராமலிங்கத்தை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள போரினால் நாசமாக்கப்பட்ட வடக்கில் யாழ்ப்பாணத்திற்கு தெற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த கொலை நடந்துள்ளது.

கிளாலியைச் சேர்ந்த இந்த இளைஞன், பளை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. "குறைந்தது 45 நிமிடங்கள்" வரை ராமலிங்கத்திற்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவர் அனுப்பப்படவில்லை என்று சாட்சிகள் கூறியதாக தமிழ் கார்டியன் தெரிவித்துள்ளது.

கோபமடைந்த பிரதேசவாசிகள் மருத்துவமனைக்கு வெளியே கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 நெடுஞ்சாலையைத் தடுத்து, கீழே அமர்ந்து போராட்டமொன்றை நடத்தினர். இந்த கொலையின் போது படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியபோது, அவர்களுக்கு ஒரு வீடியோவைக் காட்டிய பொலிசார், இளைஞர்கள் தங்கள் காவலில் இருப்பதாக மக்களை நம்ப வைக்க முயன்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கவும், மற்றவர்களை போராட்டத்தில் சேரவிடாமல் தடுக்கவும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை கமாண்டோக்களும் நிறுத்தப்பட்டனர்.

கொலை குறித்து பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன. ஜூன் 21 அன்று சண்டே டைம்ஸ்பத்திரிகை, பொலிஸ் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, "நிறுத்துமாறு விடுத்த உத்தரவை மீறியதால் படையினரின் துப்பாக்கிச் சூட்டை அடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொல்லப்பட்டார்.." என்று தெரிவித்தது. “அவர் தங்களை இடித்துத்தள்ள வருவதாக உணர்ந்த சிப்பாய்கள், அவரை நிறுத்தும்படி கட்டளையிட்டார்கள். அவர் தப்பி ஓட முயன்றபோது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்,” என அந்த பத்திரிகை குறிப்பிட்டது.

பளை பிரதேச பொலிஸை மேற்கோள் காட்டிய லங்கதீபபத்திரிகை, ஜூன் 21 அன்று ஒரு வித்தியாசமான கதையை வெளியிட்டது. முஹமாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குழுவினர் மீது படையினர் பாய்ந்த போது ஒரு மோதல் உருவானதாக அது தெரிவித்தது. இந்த மோதலின் விளைவாக ஒரு சிப்பாய் “சட்டவிரோத மணல் வியாபாரியை” சுட்டார்.

அந்த நபர்கள் வாகனத்தை படையினர் மீது ஏற்றிவிட்டு, வாகனங்களில் தப்பி ஓட முயன்றதாகவும், மற்றொரு குழு படையினரைத் தாக்கி அவர்களின் துப்பாக்கிகளைப் அபகரிக்க முயன்றதாகவும் அந்த பத்திரிகை கூறியது. இது இந்தக் கொலையை நியாயப்படுத்த பொலிசாரோ அல்லது இராணுவத்தினரோ அவிழ்த்துவிட்ட கட்டுக்கதையாகவே தெரிகின்றது.

நேற்று, யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட உதயன் செய்தித்தாள், கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் ராமலிங்கத்தின் பிரேத பரிசோதனையில் சாட்சியங்களை வழங்கியதாக செய்தி வெளியிட்டுள்ளது. படையினர் நிறுத்துமாறு கோரியபோது தாங்கள் மரணித்தவருடன் ஒரு வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்ததாக அவர்கள் கூறினர். அவர்கள் வாகனத்தை நிறுத்தி, கைகளை உயர்த்தி படையினரை நோக்கி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பீதியடைந்து ஓட முயன்றபோது, ஒரு சிப்பாய் அவரை சுட்டுக் கொன்றார்.

பிரேத பரிசோதனையின்படி, இளைஞனின் உடலில் காயங்கள் இருந்துள்ளன. ஒரு காயம் தொடையில் ஏற்பட்டிருந்ததோடு ஒரு குண்டு பின்னால் இருந்து அவரது நுரையீரலை துளைத்து வெளியேறி இருந்தது. இதனால் அவர் இறந்தார்.

ராமலிங்கத்தின் இறுதிச் சடங்குகள் நேற்று கடுமையான பாதுகாப்புக்கு இடையே நடைபெற்றது. ராமலிங்கத்தின் சொந்த கிராமத்திற்கு அருகில் உள்ள கொடிகாமம் பொலிசார், இப்பகுதியில் அனைத்து போராட்டங்களையும் தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றனர். பிரதேசவாசிகளின் கோபத்தைத் திசைதிருப்ப, வடக்கு மாகாண ஆளுநர் எம்.எஸ். சார்ல்ஸ் நேற்று துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை அறிக்கை ஒன்றைக் கோரினார்.

அனைத்து முந்தைய உத்தியோகபூர்வ விசாரணைகளையும் போலவே, இந்த அறிக்கையும் அந்த இளைஞனின் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிக்கப் போவதில்லை, மாறாக, இது நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் கொழும்பு முன்னெடுக்கும் தற்போதைய இராணுவ ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த மரணத்தை மூடிமறைத்து நியாயப்படுத்தும்.

இலங்கை பொலிசும் இராணுவமும் தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் கதைகளை புனைவதில் பேர்போனவை. ராமலிங்கம் "சட்டவிரோத மணல் அகழ்வில்" ஈடுபட்டாரா இல்லையா என்பதற்கு அப்பால், அவர் ஒரு சிப்பாயால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதானது ஆக்கிரமிப்புப இராணுவ படைகளால் செய்யப்பட்ட எண்ணிலடங்கா கொலைகளில் ஒன்றாகும்.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, நாட்டில் இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்திவருகின்ற நிலமையின் கீழும், கொழும்பு அரசாங்கத்தாலும் ஊடகங்களாலும் திட்டமிட்டு தமிழர்-விரோத இனவெறி பிரச்சாரம் ஊக்கிவிக்கப்படுகின்ற நிலைமைகளின் கீழுமே இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. இராஜபக்ஷ இராணுவத்திற்கு சுதந்திரம் கொடுத்திருப்பதுடன், அதன் அடக்குமுறை நடவடிக்கைகளை ஊக்குவித்து வருவதுடன், எந்தவொரு போர்க்குற்ற குற்றச்சாட்டுகளிலிருந்தும் இராணுவத்திற்கு தண்டனையில் இருந்து விலக்களிப்பு வழங்கப்பட வேண்டும் என்று பலமுறையும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் தொடர்ச்சியான பொலிஸ் மற்றும் இராணுவ துன்புறுத்தல்கள், கண்காணிப்பு மற்றும் தமிழர்-விரோத பேரினவாத வசைமொழிகளையும் எதிர்கொள்கையில், கோடாபய இராஜபக்ஷவின் கீழ் இத்தகைய சர்வாதிகார நிலைமைகள் மோசமடைந்துள்ளன.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் கிட்டத்தட்ட 30 ஆண்டுகால போர், 2009 மே மாதம் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களின் மரணங்களுடனும் சரணடைந்த நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதுடனும் முடிவுக்கு வந்தது. இந்த இரத்தக்களரி தாக்குதல்களை நாட்டின் பாதுகாப்பு செயலாளராக இருந்து இராஜபக்ஷ மேற்பார்வையிட்டார்.

புலிகளின் தோல்வியின் பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகும், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது. கொழும்பு ஸ்தாபனமும் ஊடகங்களும் இன்னும் கூடுதலான அடக்குமுறை நடவடிக்கைகளை திணிப்பதற்காக "பயங்கரவாதமும்" விடுதலைப் புலிகளும் மீண்டும் தலைதூக்குவதாக பிரச்சாரம் செய்கின்றன.

ஜூன் 12 அன்று, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் யாழ்ப்பாணத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வல்லைவெளி இராணுவ முகாமுக்கு அருகே பொம்மையுடன் ஒரு பொதியை கைவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வீதியில் நடந்து சென்ற இரண்டு சிப்பாய்களும் ஒரு இராணுவ அதிகாரியும் அந்தப் பொதியை எடுத்தார்கள், அது வெடித்ததால், அதைத் திறக்க முயன்ற படையினரில் ஒருவர் காயமடைந்தார். ஜூன் 17 அன்று, கோபாய் பொலிசார் 25 வயது சந்தேக நபரை முந்தைய நாள் தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து கைது செய்ததாக ஊடகங்கள் கூறிக்கொண்டன.

ஜூன் 15 அன்று, கிளிநொச்சியின் கண்டாவலையில் உள்ள இராணுவ படைப்பிரிவு தலைமையகத்திற்கு அருகே வெடிபொருட்கள் அடங்கிய ஒரு பொதி கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளதாக அரசாங்க சார்பு ஹிரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

"நாசவேலை செய்யும் நோக்கத்திற்காக யாரோ ஒருவர் பொதியை முகாமுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்," என அந்த தொலைக்காட்சி சேவை தெரிவித்தது. திவயினபத்திரிகை, அது "இலங்கையில் தயாரிக்கப்பட்ட பெரிய குண்டு" என்று கூறியது. ஒரு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அவ்வளவு பெரிய குண்டை எவ்வாறு வைப்பது என்று அந்த ஊடகம் விளக்கவில்லை.

எவ்வாறாயினும், பொலிஸ் மற்றும் இராணுவ வன்முறைகள் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்தபின், தனது நிர்வாகத்தை விரைவாக இராணுவமயமாக்கத் தொடங்கிய இராஜபக்ஷ, சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற ஜெனரல்களை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமித்தார்.

இந்த ஆண்டு அவர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான படையினரை அணிதிரட்டுவதற்காக கொவிட்-19 தொற்றுநோயைக் பற்றிக்கொண்டார். இந்த மாத தொடக்கத்தில், இராஜபக்ஷ 13 உறுப்பினர்களைக் கொண்ட பாரதூரமான அதிகாரங்களுடன் கூடிய ஒரு ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்தார். அது அவருக்கு மட்டுமே பதிலளிக்கக் கடமைப்பட்டதாக உள்ளதோடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அதன் தலைவராவார்.

பாதாள உலகத்தையும் போதை மருந்து மாஃபியாவையும் அடக்குவது என்ற பெயரில், குறிப்பிட்ட பகுதிகளை குறிவைத்து பொலிஸ் கமாண்டோக்களை சோதனைகளில் ஈடுபடுத்துவதையும் அரசாங்கம் புதுப்பித்துள்ளதுடன், இலங்கையில் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட “சந்தேக நபர்களை” சட்டத்துக்குப் புறம்பாக படுகொலை செய்வதும் அதனுடன் பிணைந்துள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கம் அதிகரித்து வரும் வெளிநாட்டுக் கடன், வளர்ந்து வரும் வேலையின்மை மற்றும் கொவிட்-19 தொற்றுநோயால் தீவிரமடைந்து வரும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. அனைத்து இன மற்றும் மத வேறுபாடுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தால் ஒருங்கிணைந்த அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் வெடிக்கும் என்று அது பீதியடைந்துள்ளது.

இராணுவ அடிப்படையிலான சர்வாதிகாரத்தை நோக்கிய இராஜபக்ஷவின் நகர்வுகளும் மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அரசு வன்முறைகளும், ஆளும் உயரடுக்கு எவ்வாறு எதிர்வரவுள்ள கசப்பான வர்க்கப் போராட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன என்பதற்கான தெளிவான எச்சரிக்கைகள் ஆகும்.

Loading