இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அதன் முதல் தேர்தல் கூட்டத்தை இணையவழியாக ஜூன் 28 அன்று நடத்தவுள்ளது

By the Socialist Equality Party (Sri Lanka)
26 June 2020

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான முதல் இணையவழி பொதுக் கூட்டத்தை ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை, உள்ளூர் நேரம் மாலை 3 மணிக்கு முகநூலில் நேரடியாக ஒளிபரப்பவுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தல், ஆகஸ்ட் 5 அன்று நடைபெற உள்ளது.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான முதல் இணையவழி பொதுக் கூட்டம்

தலைநகர் கொழும்பு, மத்திய பெருந்தோட்டப் பகுதியான நுவரெலியா மற்றும் போரினால் நாசமாக்கப்பட்ட தீவின் வடக்கில் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 43 சோ.ச.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றது.

கூர்மையான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) "வலுவான மற்றும் நிலையான" அரசாங்கத்தை ஸ்தாபிக்க பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு பிரச்சாரம் செய்வதாக அறிவித்துள்ளனர். உலகளாவிய தொற்றுநோயால் தீவிரமடைந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்காக ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கு ஏற்ப அரசியலமைப்பை மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.), ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயல்திட்டத்தைப் பற்றி எந்த அடிப்படை வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை. முதலாளித்துவ தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு "நிபந்தனையுடனான ஆதரவை" வழங்கியுள்ளது.

போலி இடது நவ சம சமாஜ கட்சி (ந.ச.ச.க.) வலதுசாரி ஐ.தே.க.வுடன் தேர்தலில் போட்டியிடுகிறது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் பெயரில், ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சி போன்ற பிற போலி இடது குழுக்களும், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையும் தடுப்பதற்கு, முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணியை நாடுகின்றன.

சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், மோசமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை, சர்வாதிகார அச்சுறுத்தல் மற்றும் ஏகாதிபத்திய போருக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே.

கொவிட்-19 தொற்றுநோய் உலகளாவிய முதலாளித்துவ அமைப்பின் ஆழ்ந்த நெருக்கடியை அம்பலப்படுத்தியுள்ளதுடன் தீவிரப்படுத்தியுமுள்ளதோடு, புரட்சிகர போராட்டங்களை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளது. இன்றியமையாத புரட்சிகர தலைமையாக சோ.ச.க.வையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவையும் கட்டியெழுப்புவதே தீர்க்கமான பணியாகும்.

சோ.ச.க.வின் இனையவழி கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஜே டயஸ் மற்றும் முன்னணி வேட்பாளர்களும் உரையாற்றுவர். இந்த முக்கியமான கலந்துரையாடலில் தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.