வேலை செய்யும் வயதிலுள்ள அமெரிக்கர்களில் அதியுயர்ந்த அளவாக 47.2 சதவீதம் வேலையின்றி உள்ளனர்

By Shannon Jones
3 July 2020

Record 47.2 percent of working-age Americans without jobs

வேலை செய்யும் வயதிலுள்ள அமெரிக்கர்களில் அதியுயர்ந்த அளவாக 47.2 சதவீதம் வேலையின்றி உள்ளனர்

By Shannon Jones
1 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சமீபத்தில் வெளியிடப்பட்ட தொழிலாளர் புள்ளிவிபர ஆணையத்தின் (BLS) புள்ளிவிபரங்களின்படி, வேலை செய்யும் வயதிலுள்ள அமெரிக்கர்களில் 47.2 சதவீதத்தினர் மே மாதம் வேலையின்றி இருந்தனர், இது இரண்டாம் உலக போர் முடிவுக்குப் பின்னர் அதியுயர்ந்த அளவாகும்.

இந்த எண்ணிக்கைகள் BLS இன் வேலைவாய்ப்பு-மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில் உள்ளன, அதாவது இது உண்மையில் வேலை செய்யும் மொத்த தொழிலாளர்களின் விகிதத்தைக் குறிப்பிடுகிறது. பெரும் பிரயத்தனத்துடன் வேலை தேடுவோரின் எண்ணிக்கையை மட்டுமே வழங்கும் மாதாந்தர வேலைவாய்ப்பின்மை அறிக்கையை விட இது வேலையின்மையை மிகவும் துல்லியமாக அளவிடுகிறது.

மே மாத இறுதியில் வேலைவாய்ப்பு-மக்கள்தொகை விகிதம் 52.8 சதவீதத்தில் இருந்தது; அதுவே இந்தாண்டு தொடக்கத்தில் 61.2 சதவீதத்தில் இருந்தது. வேலைவாய்ப்பு-மக்கள்தொகை விகிதம் போருக்குப் பிந்தைய அதிகபட்ச எண்ணிக்கையாக 2000 ஆம் ஆண்டு அண்மித்து 65 சதவீதத்தை எட்டியது.

Deutsche வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் Torsten Slok ஐ மேற்கோளிட்டு CNBC குறிப்பிடுகையில், வேலைவாய்ப்பு-மக்கள்தொகை விகிதத்தை மீண்டும் ஜனவரி மட்டத்திற்குக் கொண்டு வர அது கூடுதலாக 30 மில்லியன் வேலைகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தது.

இந்த அறிக்கை இவ்வார இறுதியில் ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வேலையின்மை புள்ளிவிபரங்கள் வெளியிட இருப்பதற்கு முன்னதாக வருகிறது. மே மாதம் 13.3 சதவீதமாக இருந்த அதிகாரபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூனில் 12.4 சதவீதமாக ஓரளவுக்கு சரிவைப் பிரதிபலிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாத புள்ளிவிபரங்கள் முன்னர் மே மற்றும் ஏப்ரல் மாதத்தில் குறைவாக காட்டபட்ட எண்ணிக்கைகளை திருத்திக் காட்டுமா என்பது தெரியவில்லை, அவற்றில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டிருந்தனர். இதனால் அதிகாரப்பூர்வ வேலையின்மை சதவீதத்தில் மே மாதம் சுமார் 3 சதவீதமும், ஜூனில் 5 சதவீதமும் குறைந்து போயிருந்தது.

A pregnant woman waits in line for groceries with hundreds during a food pantry, sponsored by Healthy Waltham for those in need due to the COVID-19 virus outbreak, at St. Mary's Church in Waltham, Mass. (AP Photo/Charles Krupa)

கோவிட்-19 வைரஸ் வெடிப்பின் காரணமாக தேவைப்படுவோருக்கு உதவுவதற்காக, மாஸ், வால்தமின் செயிண்ட் மேரி தேவாலயத்தில், Healthy Waltham அமைப்பு வழங்கிய உணவு வினியோக நிகழ்வில், நூற்றுக் கணக்கானவர்களுடன் சேர்ந்து மளிகை சாமான்களுக்காக ஒரு கர்ப்பிணி பெண்ணும் வரிசையில் காத்திருக்கிறார். (படம்: அசோசியெடெட் பிரஸ்/ சார்லஸ் க்ரூப்பா)

பல மாநிலங்களிலும் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் பெருமந்த நிலைமை மட்டங்களில் உள்ளது. சூது விளையாட்டு தொழில்துறை அடைக்கப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நெவாடாவில் ஓராண்டுக்கு முன்னர் 4 சதவீதத்தில் இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் அது 25.3 சதவீதமாக இருந்தது. ஓராண்டுக்கு முன்னர் வெறும் 2.7 சதவீதத்தில் இருந்த ஹவாய் மே மாதம் 22.6 சதவீதத்தில் இருந்தது, அதேவேளையில் மிச்சிகன் மே 2019 இன் 4.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 21.2 சதவீதத்தைக் கண்டது. கலிபோர்னியா மற்றும் மாசசூசெட்ஸில், வேலைவாய்ப்பின்மை மே மாதம் 16.3 சதவீதத்தில் நின்றது.

பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் துறையில் வேலையின்மை 35.9 சதவீதமாக மிக அதிகபட்சமாக உள்ளது, சில்லறை வணிகத்தில் 15.1 சதவீதம், கட்டுமானத்துறை 12.7 சதவீதம் மற்றும் உற்பத்தித்துறையில் 11.6 சதவீதம் உள்ளது. 16-19 வயது இளைஞர்கள் மத்தியில், 29.9 சதவீதத்தினர் வேலைவாய்ப்பின்றி உள்ளது, 20-24 வயது தொழிலாளர்களில் 23.2 சதவீதத்தினருக்கு வேலை இல்லை.

ஜூன் மாதத்தில் மாநில பொருளாதாரங்களைப் பொறுப்பின்றி முன்கூட்டியே மீண்டும் திறந்துவிட்டதற்கு மத்தியிலும், வேலைவாய்ப்பின்மை சலுகைக்காக ஒவ்வொரு வாரமும் சுமார் 1.5 மில்லியன் புதிய விண்ணப்பங்கள் இருந்தன. பல தொழிலாளர்களுக்கு மீண்டும் திரும்பி வருவதற்குரிய வேலையே இல்லை. இது குறிப்பாக அடைப்பின் போது உயிர்பிழைக்க முடியாமல் போன உணவு விடுதிகள் போன்ற சிறுவியாபாரங்களில் பணி புரிந்தவர்களின் நிலைமையாக உள்ளது. பெரிய நிறுவனங்களின் திவால்நிலைமை மீதான கூடுதல் அலையும் எதிர்பார்க்கப்படுகிறது.

CARES சட்டமசோதாவில் உள்ளடக்கப்பட்ட வாரந்தோரும் வேலைவாய்ப்பின்மை சலுகைகளில் 600 டாலரைத் தற்காலிகமாக அதிகரித்து வழங்கிய தொகையை நிறுத்தும் போது ஜூலை முடிவில் பொருளாதார பொறிவின் முழு பாதிப்பும் வெளிப்படும். ஜூலை 25 இல் முடியும் வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள அந்த வெட்டு, 20 மில்லியன் தொழிலாளர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினரின் வருவாயைக் குறைத்து, பட்டினி மற்றும் வீட்டைவிட்டு வெளியேற்றல்களின் அதிகரிப்புக்கு இட்டுச் செல்லும்.

துணை உதவித்தொகை வழங்கியதற்கு மத்தியிலும், தனிநபர் வருமானம் மே மாதம் 4.2 சதவீதம் சரிந்தது. வழமையான வேலைவாய்ப்பின்மை சலுகைகள் வாராந்தரம் வழங்கப்படும் தொகையில் பாதியை அல்லது அதற்கு குறைவானதையே கொண்டிருக்கும் என்பதால், அந்த வெட்டு குறிப்பாக குறைவூதிய தொழிலாளர்களுக்கு நாசகரமாக இருக்கும்.

CARES சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மத்திய அரசின் மானிய வீட்டுவசதி திட்டத்திலிருந்து வீட்டு கடனை திருப்பி செலுத்தவதை இடைநிறுத்திவைத்திருந்த காலமும் ஜூலை முடிவில் காலாவதி ஆக உள்ளது, இதன் அர்த்தம் மில்லியன் கணக்கான குடும்பங்கள் விரைவிலேயே வீதிகளில் விடப்படுவதற்கான சாத்தியக்கூறை எதிர்கொள்ளக்கூடும். அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணைய குடும்ப விபர ஆய்வின்படி, வாடகையில் குடியிருக்கும் 30 சதவீதத்தினர் அடுத்த மாதத்திற்கு வீட்டு வாடகையைச் செலுத்தக் கூடிய நிலையில் இல்லை அல்லது அதில் நம்பிக்கையின்றி உள்ளனர்.

தற்காலிகமாக வீட்டைவிட்டு வெளியேற்றல்களை நிறுத்தி வைப்பதற்கான மாநில மற்றும் உள்ளாட்சிகளின் ஒட்டுப்போடும் வேலை முடிவுக்கு வருகின்றன அல்லது நில உரிமையாளர் அமைப்புகளால் சவால்விடுக்கப்பட்டு வருகின்றன. மாநில அளவில் வீட்டைவிட்டு வெளியேற்றல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் புளோரிடாவில் ஜூலை 1 அன்று நிறைவடைந்தது, கடைசி நொடியில் ஆளுநரால் அது தடுக்கப்பட்டு நீடிக்கப்பட்டது. மாநில அளவில் தடை விதிக்கப்பட்டிருந்த வேர்ஜினியாவில் ஜூன் 29 இல் அது நிறைவடைந்தது. சான் பிரான்சிஸ்கோவில், நகர அளவிலான தடை நீதிமன்றத்தில் சவால் விடுக்கப்பட்டு வருகிறது. வீட்டைவிட்டு வெளியேற்றல்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நியூ யோர்க்கில் அது இம்மாத ஆரம்பத்தில் நிறைவடைவதால், விரைவிலேயே 50-60,000 வீட்டைவிட்டு வெளியேற்றல் வழக்குகளாவது வீட்டுவசதித்துறை நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படும் எச்சரிக்கைகளுக்கு இட்டுச் செல்கிறது.

இருகட்சிகளது கொள்கை மையத்தின் Andy Winkler, 600 டாலர் வேலைவாய்ப்பின்மை கூடுதல் உதவித்தொகை திட்டம் முடிவடைந்ததும் வீட்டைவிட்டு வெளியேற்றல்களின் ஒரு "சுனாமி" குறித்து தெரிவித்த ஓர் எச்சரிக்கையை Politico வெளியிடப்பட்டது.

பெரும் எண்ணிக்கையிலான வேலைகளை நிரந்தரமாக நீக்குதல் உட்பட ஒரு மிகப்பெரிய சீரமைப்பை நடத்துவதற்காக பெருநிறுவனங்கள் இந்த தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பயன்படுத்தி வருகின்றன என்பது தெளிவாக தெரிகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்படி, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எட்டு சதவீதம் வீழ்ச்சி அடைவதுடன் சேர்ந்து உலக பொருளாதாரம் 2020 இல் ஐந்து சதவீதம் சுருங்கும். மெக்சிகோ மற்றும் ஐரோப்பாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியோ 10 சதவீதம் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது, அதேவேளையில் சீனாவினது எந்த வளர்ச்சியும் காட்டாது. அமெரிக்காவில் இரண்டாவது காலாண்டு இரண்டாம் உலக போர் முடிந்ததற்குப் பின்னர் அதன் மிகப்பெரிய காலாண்டு சுருக்கத்தைக் காட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன வரவிருக்கிறது என்பதற்கான ஓர் அறிகுறியாக, ஏர்பஸ் நிறுவனம் உலகளவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைப்பு செய்து வருவதால் 2021க்குள் உலகளவில் அது 15,000 வேலைகளை வெட்ட இருப்பதாக, 11 சதவீத குறைப்பை, அறிவித்தது. ஜேர்மனி மற்றும் பிரான்சில் மட்டும் பத்தாயிரக் கணக்கான வேலை இழப்புகள் ஏற்பட உள்ளது.

Graph showing the sharp fall in the employment-population ratio

இந்த வரைபடம் வேலைவாய்ப்பு-மக்கள்தொகை விகிதத்தின் கூர்மையான வீழ்ச்சியைக் காட்டுகிறது

சமீபத்திய ஆண்டுகளில், ஆளும் வர்க்கத்தின் பேச்சாளர்கள் முன்கண்டிராத வேலைவாய்ப்பு குறைவு "இறுக்கமான தொழிலாளர் சந்தைகள்" மற்றும் கூலிகளை அதிகரிக்க கோரும் கோரிக்கைகளை உருவாக்கி இருப்பதாக கடுமையாக குறைபட்டுக் கொள்கிறார்கள். பத்து மில்லியன் கணக்கான வேலைகளின் அழிப்பானது, தொழிலாளர்களிடமிருந்து கூலிகள் மற்றும் சலுகைகளை வெட்டும் ஒரு புதிய அலையைக் கோருவதற்காக பெருநிறுவனங்களால் இப்போது ஒரு தாக்குதல் கருவியாக பயன்படுத்தப்படும். ஏற்கனவே இது விமானச் சேவைத்துறையிலும் பொதுத்துறை தொழிலாளர்கள் மத்தியில் காணக்கிடைக்கிறது.

இந்த சீரழிவுக்கு மத்தியில் ஜூனில் முடிந்த அமெரிக்க பங்குச்சந்தையோ வரலாற்றிலேயே சிறந்த காலாண்டு அதிகரிப்புகளில் ஒன்றுடன் நிறைவடைந்தது. செவ்வாய்கிழமை டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 216 புள்ளிகள் உயர்ந்தன. டோவ் ஜோன்சின் இரண்டாம் காலாண்டு, 2020 இன் முதலாம் காலாண்டு இழப்புகளில் பெரும்பான்மையை துடைத்தழித்து, 16 சதவீதம் அதிகரித்தது. ஆப்பிள், ஹோம் டெபொட், டோவ் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் பலமான ஆதாயமடைந்த நிறுவனங்களில் இருந்தன. எஸ்&பி 500 குறியீடு இந்த காலாண்டில் 19.1 சதவீத அதிகரிப்பைக் காட்டிய அதேவேளையில் நாஸ்டாக் இந்தாண்டு 11 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து முயற்சிகளும் கைவிடப்பட்டதை பின்தொடர்ந்து, புதிய தொற்றுகளின் முன்கண்டிராத எண்ணிக்கைகளுடன் சேர்ந்து, அமெரிக்காவில் கோவிட்-19 நோயாளிகள் அதிகரித்து வருகின்ற நிலையில் சந்தைகளின் இந்த அதிகரிப்பு வருகிறது. பங்குகளின் இந்த அதிகரிப்பு நிஜமான பொருளாதார முன்னேற்றத்தால் எரியூட்டப்படவில்லை மாறாக அமெரிக்க பெடரல் ரிசர்வால் வரம்பின்றி பணம் பாய்ச்சப்பட்டதால் உண்டானதாகும். போதை மருந்துக்கு அடிமையானதைப் போல சந்தைகள் அவற்றின் ஊதிப்பெருத்த மட்டங்களைத் தக்க வைப்பதற்காக இன்னும் இன்னும் அதிகமாக பணத்தைப் பாய்ச்சுவதைச் சார்ந்துள்ளன. இதற்கிடையே பெருநிறுவன செல்வந்த தட்டுக்கள் தொழிலாளர்களின் தோலை உரித்து பணத்தைத் திரும்ப சுரண்டி எடுக்க முயல்கின்ற நிலையில் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீது முன்பினும் அதிக வெறித்தனமாக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு முதலாளித்துவ நிர்வாகிகளின் குற்றகரமான மற்றும் மடத்தனமான விடையிறுப்புக்கான பொருளாதார சுமையைத் தொழிலாளர் தாங்க வேண்டும் என்பதை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. நிதியியல் சந்தைகளுக்குச் செல்லும் பாரிய ஆதாரவளங்கள் அத்தியாவசிய மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திருப்பி விடப்பட வேண்டும். இந்த வைரஸ் பரவலாலும் மற்றும் அவசியமான மருத்துவ நடவடிக்கைகளாலும் வேலையின்றி விடப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு அவர்களின் வருமானங்களும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு ஒரு சர்வதேசியவாத சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணித்திரட்ட வேண்டியது அவசியமாகும்.