சமத்துவமின்மையின் தொற்றுநோய்: அமெரிக்க முதலாளித்துவம் எவ்வாறு உயிர்களை விட இலாபங்களை முன்நிறுத்துகிறது

4 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம், ஒலி வடிவை இங்கே கேட்கலாம்.

அமெரிக்கா, கோவிட்-19 தொற்றுநோயின் பேரழிவு தரும் மீளெழுச்சிக்கு மத்தியில் உள்ளது. செவ்வாய்கிழமை, முன்பில்லாதளவில் அதிகபட்ச ஒருநாள் மொத்த எண்ணிக்கையாக, பரிசோதனையில் முன்கண்டிராதளவில் 50,701 பேருக்குக் கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. அமெரிக்கா தொடர்ந்து ஏழு நாட்களில் 40,000 க்கும் அதிகமான புதிய நோயாளிகளைக் கண்டது, இவ்வாரத்தின் ஒருநாள் நோயாளிகளின் எண்ணிக்கை இம்மாதத்தின் தொடக்கத்தில் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகி உள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை இப்போது 130,000 ஆக உள்ளது. இது, முதலாம் உலக போர், வியட்நாம் போர் மற்றும் கொரியப் போரில் அமெரிக்க போர்களத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு ஏறத்தாழ சமமாகும். அதன் தற்போதைய வேகத்தில் இந்நோய் பரவினால், இம்மாத இறுதி வாக்கில் அமெரிக்கா நாளொன்றுக்கு 100,000 நோயாளிகளை எட்டும். கோடை நிறைவடையும் போது, கால் மில்லியன் மக்கள் உயிரிழந்திருக்கக்கூடும்.

இந்த தொற்றுநோய்க்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள மணிக்கணக்கிலான தொலைக்காட்சி கருத்துரைகள் மற்றும் எண்ணற்ற பத்திரிகை கட்டுரைகளில், இந்த பேரழிவுக்கு அடியிலிருக்கும் பொருளாதார நலன்கள் மீது எந்த ஆய்வும் இருப்பதில்லை.

ஜூன் 26, 2020 இல் Kensington Capital Acquisition Corp.செயலதிகாரிகள் NYSE இன் நிறைவு மணி ஒலிக்கிறார்கள் (படம்: நியூ யோர்க் பங்குச் சந்தை/ அசோசியேடெட் பிரஸ்)

இந்த தொற்றுநோயின் மீளெழுச்சியானது, ட்ரம்ப் நிர்வாகத்தின் தலைமையில் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தால் ஆதரிக்கப்பட்டு, சமூகத்தின் தேவைகளை நிதியியல் செல்வந்த தட்டுக்களின் பொருளாதார நலன்களுக்காக அடிபணிய செய்விக்கும் ஒரு நனவான கொள்கையின் விளைவாக உள்ளது என்பதே உண்மையாகும்.

கடந்த மூன்று மாதங்களில், கோவிட்-19 ஆல் 115,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர், முன்கண்டிராத மருத்துவ, சமூக மற்றும் பொருளாதார சீரழிவுக்கு மத்தியில் 45.5 மில்லியன் பேர் வேலைவாய்ப்பற்றவர்களாக மாறி உள்ளனர்.

ஆனால் இந்த கதை பங்குச் சந்தை மற்றும் அமெரிக்க நிதியியல் செல்வந்த தட்டுக்களைப் பொறுத்த வரையில் மிகவும் வேறு விதமாக உள்ளது. ஒரு நூற்றாண்டில் மிக மோசமான அமைதி கால பொருளாதார நெருக்கடி என்று பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி அமைப்பு குறிப்பிடும் ஒரு நிகழ்வுக்கு மத்தியில், டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியோ மூன்று தசாப்தங்களில் அதன் மிகப்பெரிய அதிகரிப்பை அரங்கேற்றி உள்ளது.

டோவ் சந்தை 1987 க்குப் பின்னர் அதன் மிகப்பெரிய காலாண்டு அதிகரிப்பாக இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் 18 சதவீதம் அதிகரித்தது. நாஸ்டாக் குறியீடு இன்னும் வேகமாக அதிகரித்தது, அது 30.6 சதவீதம் அதிகரித்து, இந்தாண்டின் தொடக்கத்திலிருந்து குறியீட்டை 12 சதவீத அளவுக்கு உயர்த்தியது.

பங்கு விலைகளின் பாரிய அதிகரிப்பு அமெரிக்காவின் நிதியியல் செல்வந்த தட்டுக்களது செல்வவளம் விரிவடைவதற்கு இட்டுச் சென்றுள்ளது. கொள்கை ஆய்வுகளுக்கான பயிலகத்தின் தகவல்படி, மார்ச் 18 க்குப் பின்னர், அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளம் 20 சதவீதம் அளவுக்கு, அல்லது 484 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. மார்ச் 18 மற்றும் ஜூன் 17 க்கு இடையே, 640 க்கும் அதிகமான அமெரிக்க பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு 2.948 ட்ரில்லியனில் இருந்து 3.531 ட்ரில்லியனுக்கு உயர்ந்துள்ளது.

பங்குச் சந்தைகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெஃப் பெஸோஸ், பில் கேட்ஸ், மார்க் சக்கர்பேர்க், வாரென் பஃபெட் மற்றும் லாரி எலிசன் என அமெரிக்காவின் ஐந்து மிகப் பெரிய செல்வந்தர்களின் செல்வவளம் 101.7 பில்லியன் டாலர்கள், அல்லது 26 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

உலகில் மிக அதிக சம்பளம் பெறும் தலைமை செயலதிகாரியான டெஸ்லாவின் தலைமை செயலதிகாரி Elon Musk இன் தனிப்பட்ட சொத்துக்கள் கடந்த ஆண்டின் போக்கில் இரண்டு மடங்கானது.

சந்தை மதிப்புகளின் அடிப்படையில், இந்த வாரம், டெஸ்லா உலகின் மிகவும் மதிப்பு மிக்க கார் உற்பத்தி நிறுவனமாக டொயோட்டாவை விஞ்சியது. கடந்த 12 மாதங்களில் டெஸ்லாவின் பங்குகள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது, இந்த வாரம் அது 230 டாலரில் இருந்து 1,100 டாலராக உயர்ந்தது.

இந்த அதிகரிப்பு குறித்து கருத்துரைத்து, பைனான்சியல் டைம்ஸ் எழுதியது:

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வணிகத்திற்கு எந்த இழப்பும் இல்லை என்றால் கூட, தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளில் சிவப்பு நிறத்தில் இல்லாதது இதுவே முதல்முறையாகும்.

டொயோட்டாவின் வருவாய்களை 16 மடங்கு அதிகமாக்கி அதன் வணிக மதிப்பை பல மடங்கு அதிகரித்து காட்டும் விதத்தில் டொயோட்டாவின் பங்குகள் வர்த்தகமாகின்ற நிலையில், டெஸ்லாவின் பங்கு வர்த்தகமோ அந்நிறுவனத்தின் இலாபங்களை விட ஏறத்தாழ 220 மடங்கு அதிகமாக உள்ளது, இது வேறெந்த வாகனத்துறை நிறுவனத்தையும் விட மிக மிக அதிகம் என்பதுடன், அமசன் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் காணப்படும் பல மடங்குகளை விட இரண்டு பங்கிற்கு நெருக்கமாக உள்ளது.

இந்தளவிற்கு வெறுப்பூட்டும் அளவிலான பங்கு மதிப்புகள் நிதியியல் சந்தைகளுக்குள் பாரியளவில் அரசு தலையீடு செய்ததன் விளைவாகும், அது நிஜமான பொருளாதாரம் பொறிந்து வருகின்ற போதும் பங்கு விலைகளை விண்ணை முட்டும் உயரங்களுக்குத் தள்ளியுள்ளது.

கோவிட்-19 இன் முதல் வெடிப்பிலிருந்து தொடங்கி, அமெரிக்க அரசு எடுத்துள்ள ஒவ்வொரு நடவடிக்கையும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வவளத்தைப் பாதுகாப்பதற்கும் விரிவாக்குவதையும் நோக்கமாக கொண்டிருந்தது. ஜனவரி மற்றும் பெப்ரவரியில், பொது சுகாதார வல்லுனர்கள் அரசுக்கு உள்ளிருந்தவர்களும் வெளியில் இருந்தவர்களும் இரண்டு தரப்பினருமே எச்சரிக்கை ஒலி எழுப்ப முயன்ற போது, ட்ரம்ப் நிர்வாகமோ அந்த தொற்றுநோய் முன்னிறுத்திய அபாயங்களைக் குறைத்துக் காட்டினார், அதேவேளையில் ஊடகங்கள் சர்வசாதாரணமாக அதைப் புறக்கணித்தன.

மார்ச்சில், பெரும் எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் அந்த தொற்றுநோயைச் சர்வசாதாரணமாக உதறிவிடுவது சாத்தியமில்லை என்றபோது, ஆளும் வர்க்கம் பொது சுகாதார செலவினங்களை அதிகரித்ததன் மூலமாக விடையிறுக்கவில்லை, மாறாக நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு பாரியளவில் பிணை வழங்கி விடையிறுத்தது.

காங்கிரஸில் அண்மித்து ஒருமனதான நடவடிக்கையாக CARES சட்டம் என்பதை நிறைவேற்றியதுடன் சேர்ந்து, வங்கிகள் மற்றும் மிகப்பெரும் நிதியியல் அமைப்புகளுக்குப் பெடரல் ரிசர்வ் ஏறக்குறைய 4 ட்ரில்லியன் டாலர் அவசர கடன் வழங்கியதன் மூலமாக, இந்த தொற்றுநோயால் தூண்டிவிடப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அது விடையிறுத்தது.

Foreign Affairs இல் வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டவாறு: “மார்ச்சிலும் ஏப்ரலின் முதல் பாதியிலும், பொருளாதாரத்திற்குள் பெடரல் 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைப் பாய்ச்சியது, இது லெஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சிக்கு ஆறு வாரங்களுக்குப் பின்னர் அது வழங்கியதை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு தீவிரமாக இருந்தது. இதற்கிடையே, 2008 இல் இருந்து 2015 வரையில் அதன் மொத்த கொள்முதல்களையே விஞ்சிவிடும் அளவுக்கு, 2021 இறுதிக்குள்ளாக மத்திய வங்கி 5 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையில் கூடுதல் கடன்களைப் பெறும் என்று சந்தை பொருளாதாரவாதிகள் கணிக்கின்றனர்.”

அதே பிரச்சினை சம்பந்தமாக மற்றொரு கட்டுரை குறிப்பிட்டவாறு: “இந்தளவிலான செலவுகள் வரலாற்றில் —சமீப காலத்திலும் கூட— முன்னொருபோதும் நடந்ததில்லை. போர்க்காலத்திலும் இல்லை. அமைதிக்காலத்திலும் இல்லை. ஒருபோதும் இல்லை.”

வோல் ஸ்ட்ரீட்டின் பிணையெடுப்பு பெறப்பட்டதும், ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகமும் வேலைக்குத் திரும்ப செய்வதற்கான கோரிக்கைக்குத் திரும்பின. கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக வணிகங்களை மூடி "குணப்படுத்துவது" “நோயை விட மோசமானது" என்று நியூ யோர்க் டைம்ஸின் கட்டுரையாளர் தோமஸ் ஃபிரீட்மனின் அறிவிப்பு அரசு கொள்கையாக ஆனதுடன், ட்ரம்பால் முன்னெடுக்கப்பட்டு நாடெங்கிலும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினரால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து பிரத்யேக நடவடிக்கைகளும் கைவிடப்பட்டுள்ளன, தொழிலாளர்கள் ஒவ்வொரு தொழில்துறையிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் நோயின் விளைநிலமாக உள்ள வேலையிடங்களில் வேலைக்குத் திரும்புமாறும் அல்லது வேலைவாய்ப்பின்மை சலுகைகளைப் பெறச் செல்லுமாறும் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கை காலத்தில், சுகாதார கவனிப்பு உள்கட்டமைப்பைக் கட்டமைக்க ஒன்றும் செய்யப்படவில்லை. இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக அறியப்பட்ட ஒரே நடவடிக்கையான, பரிசோதனை மற்றும் தொடர்பைப் பின்தொடர்வதற்கான பெடரல் நிதி ஒதுக்கீடு இந்த தொற்றுநோய் விடையிறுப்புக்கான பெடரலின் மொத்த செலவுகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக நிற்கிறது. முடிவுகள் அதை எடுத்துக் காட்டுகின்றன. தேசியளவில், நோய் தொடர்பைப் பின்தொடர்ந்து ஆராய்பவர்கள் அங்கே வெறும் 28,000 பேர் மட்டுமே உள்ளனர், இது நோய் கட்டுப்பாட்டு மையத்தின் முன்னாள் இயக்குனர் ரொம் பிரீடென் அழைப்பு விடுத்த எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகும்.

பரிசோதனை நிலைமையோ இன்னும் மோசமாக உள்ளது. தேசிய பொது வானொலி மற்றும் ஹார்வார்ட் நடத்திய ஒரு ஆய்வின்படி, இந்த தொற்றுநோயை நெருங்க விடாமல் வைப்பதற்காக மட்டுமே கூட நாட்டுக்கு அதன் தற்போதைய பரிசோதனை தகைமையை விட இரண்டு மடங்கு அதிகமாகவும், நோயைக் குறைத்து ஒழிப்பதற்கு எட்டு மடங்கிற்கும் கூடுதலான பரிசோதனை வசதிகளும் அவசியப்படுகின்றன.

பெருநிறுவனங்கள் கோவிட்-19 வெடிப்புகளைத் தொழிலாளர்களிடமிருந்தும் பெடரல் மருத்துவ அதிகாரிகளிடமும் ஒருபோல மறைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன, அதேவேளையில் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் ஆயிரக் கணக்கான புகார்களைப் பெற்றுள்ளதற்கு மத்தியிலும், கோவிட்-19 சம்பந்தமாக ஒரேயொரு வேலையிட வழிகாட்டுதலை மட்டுமே வெளியிட்டுள்ளது.

விடயங்களை இன்னும் மோசமாக்கும் விதத்தில், இன்னும் வெறும் மூன்று வாரங்களில், பத்து மில்லியன் கணக்கான வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்களை ஒரேயிரவில் வறுமைக்குள் தள்ளிவிடும் விதத்தில், CARES சட்டத்தின் பாகமாக நிறைவேற்றப்பட்ட வாரத்திற்கு 600 டாலர் பெடரல் வேலைவாய்ப்பின்மை கூடுதல் உதவித்தொகை முடிவுக்கு வர உள்ளது.

சமீபத்திய வாரங்களில் இனவாத பிளவுகளை முடிவின்றி ஊக்குவிப்பதால் ஊடகங்கள் நிரம்பி உள்ளன. ஜனநாயக கட்சியினரின் ஆதரவுடன் ட்ரம்ப் நிர்வாகம் சீனா மீது பழிசுமத்துவதில் ஒருமுனைப்பட்டுள்ள அதேவேளையில், ஜனநாயகக் கட்சியினர் ரஷ்யாவுக்கு எதிரான அவர்களின் இராணுவவாத வாய்வீச்சைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் நிஜ உலகில் சமூக கொள்கையானது வர்க்க நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது. கோவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா தவறுவது என்பது, எல்லா கொள்கைகளையும் தங்களின் நலன்களுக்காக அடிபணிய செய்யும் நிதியியல் செல்வந்த தட்டுக்களால் அது ஆளப்படுகிறது என்ற உண்மையின் நேரடி விளைவாகும்.

இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளும் கடுமை குறையாத தொற்றுநோய் பரவலும் மேலோங்கியிருந்த அதேவேளையில், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த கோரிக்கைகளுடன் இந்நெருக்கடிக்கு விடையிறுக்க தொடங்கி வருகிறது என்பதற்கான பல அறிகுறிகளும் உள்ளன.

டெட்ராய்டில் உள்ள பியட் கிறைஸ்லர் தொழிலாளர்கள் வேலை இடைநிறுத்தம் செய்துள்ளதுடன், அவர்களின் நலன்களைப் பாதுகாக்க சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்புக் குழுவை அமைத்துள்ளனர், அதேவேளையில் கலிபோர்னியாவின் ரிவர்சைடில் நூற்றுக் கணக்கான செவிலியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். வேலையிட பாதுகாப்புக் கோரி ஜேர்மனியில் அமசன் தொழிலாளர்களும், வாழ்வதற்குரிய கூலி கோரி சிம்பாவே செவிலியர்களும், வேலைவாய்ப்பின்மை சலுகைகள் மீதான எர்டோகன் அரசின் தாக்குதலை எதிர்த்து துருக்கி தொழிலாளர்களும் அவர்களுடன் இணைந்துள்ளனர்.

இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது வெறுமனே மருத்துவ முகப்பில் மட்டுமல்ல, மாறாக அரசியல் முகப்பிலும் தொடுக்கப்பட வேண்டும். அதிகரித்து வரும் உலகளாவிய தொழிலாள வர்க்க போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு சோசலிச அடித்தளத்தில் சமூகத்தை மறுஒழுங்கமைப்பு செய்யும் அரசியல் வேலைத்திட்டம் கொண்டு அது ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

Andre Damon