தென்னிந்திய நகரில் பொலிஸ் சித்திரவதை கொலைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்கள்

By Arun Kumar
6 July 2020

தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில், சாத்தான்குளம் நகரில், இரண்டு சிறு கடைக்காரர்களான ஜெயராஜ், 60 மற்றும் அவரது மகன் பெனிக்ஸ், 31 ஆகியோரை பொலிஸ் சித்திரவதை கொலை செய்ததிற்கு எதிராக வெகுஜன போராட்டங்கள் வளர்ச்சி கண்டன. ஜூன் 23 அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாத்தான்குளம் நகரில், கூடினர். அவர்கள் பொலிஸ் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாத்தான்குளம் துணை இன்ஸ்பெக்டர்கள், பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேஷ் உள்ளிட்ட கொடூரமான சித்திரவதைகளை செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்யும்படியும் அவர்களை பணிநீக்கம் செய்யும்படியும் கோரிக்கைகள் எழுப்பினர்.

ஜெயராஜ், 60 மற்றும் அவரது மகன் பெனிக்ஸ், 31

பலியானவர்களின் உறவினர்களுக்கு 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபாய் இழப்பீடு வழங்கவும், கொலைகளில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழகத்தில் வர்த்தகர்கள் சங்கம் கோரியுள்ளது. மேலும் பொலிஸ் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 24 அன்று வர்த்தகர்கள் அனைத்து வணிக நிறுவனங்களையும் மாநில அளவில் மூடினர்.

ஜூன் 19, வெள்ளிக்கிழமை இரவு சப் இன்ஸ்பெக்டர் (SI) பாலகிருஷ்ணன் தலைமையிலான ஒரு ரோந்து போலீஸ் குழு, அனுமதிக்கப்பட்ட இரவு 8 மணிக்கு மேல் 15 நிமிடங்கள் கூடுதலான நேரம் தங்கள் மொபைல் கடையை திறந்து வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸிடம் கடையை மூடும்படி கூறினார். அதற்கு ஜெயராஜ் ஒப்புக்கொண்டார். இருப்பினும், மறுநாள் ஜூன் 20 மாலை SI பாலகிருஷ்ணன் அதே கடைக்கு மறுபடியும் வந்து, முந்தைய இரவு சம்பவத்திற்கு பின்னர் ஜெயராஜ் தனக்கு எதிராக சில மோசமான வார்த்தைகளை பேசியது பற்றி தான் அறிந்ததாகக் கூறினார். ஆனால் ஜெயராஜ் அதற்கு மறுப்பு தெரிவித்து அவ்வாறாக அவருக்கு எதிராக ஒருபோதும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என வலியுறுத்தினார். ஆனால் SI பாலகிருஷ்ணன் தொடர்ந்து மிரட்டும் பாணியிலும் கெட்ட வார்த்தைகளிலும் அவரை திட்டினார். பின்னர் ஜெயராஜ் காலரை பிடித்து இழுத்து, தரதரவென்று போலீஸ் வாகனத்திற்கு இழுத்துச் சென்று காவல் நிலையத்திற்கு விரைந்தார்.

பதட்டத்தில் அவரது மகன் பென்னிக்ஸ், அவரது நண்பர்களுடன் ஸ்டேஷனுக்கு விரைந்து சென்றார், அங்கே அந்த SI அவரது தந்தையை கொடூரமாக தாக்குவதை கண்டு பதறினார், உள்ளே சென்று தனது தந்தைக்கு எதிரான கடுமையான தாக்குதல்களை தடுக்க முயன்றார். அப்போது காவல்துறையினர் அவருக்கு எதிராகவும் திரும்பி மிருகத்தனமாக தாக்கினர். அவரது நண்பர்கள் அல்லது அவர்களுக்காக கூட வந்த வழக்கறிஞர்கள் எவருமே காவல் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை, கதவு மூடப்பட்டது. நிலையத்தில் இருந்த காவல்துறையினரால் தந்தை மற்றும் மகன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர், அந்த தாக்குதலில் அவர்களுடன் பொலிஸின் நண்பர்கள் என்றழைக்கப்படுபவர்களும் சேர்ந்து கொண்டனர்.

அதே இரவில் பொலிஸ் கொடூரங்களை நியாயப்படுத்தும் வகையில் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சட்டப்படி அவர்கள் கைது செய்யப்பட்ட அடுத்த நாளில் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட இருந்தனர். அவர்கள் மஜிஸ்ட்ரேட் முன்பு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாக உடற்தகுதி சான்றிதழ்களைப் பெற அவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே, போலிச் சான்றிதழ்களை வழங்க மருத்துவர் மறுத்தார், ஆனால் காவல்துறையினரின் மிரட்டலுக்கு பின்னர் மருத்துவர் சான்றிதழ்களை வழங்கினார்.

பொலிஸ் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது தந்தை மற்றும் மகன் இருவரும் இரத்தப்போக்கு மற்றும் மயக்க நிலையில் இருந்ததை கண்ணால் பார்த்த பல சாட்சிகள் இருந்தனர். Thelede.in இல் வெளியிடப்பட்ட ஒரு விவரத்தின்படி: “பென்னிக்ஸ் தனது தந்தை தாக்கப்படுவதை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளே சென்று SI பாலகிருஷ்ணன் அடிப்பதை தடுக்கும் முயற்சியில் அவரது கையைத் தள்ளிவிட்டார். அப்போது போலீசாரின் மீது கைவைக்க எவ்வளவு தைரியம் என்று கூறி அவரையும் அடிக்கும்படி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் பொலிசாரிடம் கூறினார். எங்கள் அனைவரையும் வெளியே செல்லும்படி இன்ஸ்பெக்டர் கூறினார், பின்னர் காவல் நிலையத்தின் கதவுகள் மூடப்பட்டது.

"ஒரு கண்ணாடி சுவர் வழியாக உள்ளே என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்க்க முடிந்தது. இன்ஸ்பெக்டர், பொலிஸின் நண்பர்களை கூப்பிட்டு அவர்களில் இரண்டு பேர் பென்னிக்ஸின் கைகளைப் பிடிக்கும்படியும் இரண்டு பேர் சுவருக்கு எதிராக அவரது கால்களை விரித்துப் பிரிக்கும்படியும் கூறி அவரை கடுமையாக அடிக்கத் தொடங்கினர். அவர்கள் ஜெயராஜை தரையில் உட்கார வைத்தார்கள். அவரின் முழங்காலின் மேல் நிற்கும்படி சில பொலிஸின் நண்பர்களிடம் இன்ஸ்பெக்டர் கூறினார், மற்றவர்கள் அவரின் கால் பாதத்தில் அடித்தார்கள்.

“இது இரவு 10 மணி வரை தொடர்ந்தது. பின்னர் SI ரகு கனேஷ் உள்ளே வந்து SI பாலகிருஷ்ணனிடமிருந்து பொறுப்பெடுத்து தனது முறைக்கு அடிக்கத் தொடங்கினார்.

"மருத்துவரை மிரட்டி போலி உடற் தகுதி சான்றிதழ்களைப் பெற்ற பின்னர், இரத்தப்போக்குடன் தந்தை மற்றும் மகன் இருவரையும் நீதிமன்ற காவலில் வைப்பதற்காக சாத்தான்குளத்தில் உள்ள நீதித்துறை மாஜிஸ்திரேட்டுக்கு முன்னால் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

”நாங்கள் உங்களை அடித்தது குறித்து நீதிபதியிடம் நீங்கள் கூறினால் உங்கள் மீது எல்லா வகையான வழக்குகளையும் நாங்கள் போடுவோம்" என்று கூறியதை கண்ணால் பார்த்த சாட்சி கூறினார், மறுநாள் நீதிமன்ற வளாகத்தில் அவர் நேரில் பார்த்தது பற்றி தொடர்ந்து கூறினார்: “அவர்கள் இருவரும் படுகாயமடைந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர்களை வாகனத்திலிருந்து வெளியே எடுக்கவில்லை. காவல்துறையினர் தங்களை அடிக்கவில்லை என்று அவர்கள் மாஜிஸ்திரேட்டுக்கு தெரிவித்தனர். மாஜிஸ்திரேட் அவர்களை சரியாக பார்க்காமலே அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இரத்தப்போக்கு காரணமாக அவர்களை எங்கள் காரிலேயே கோவில்பட்டி துணை சிறைக்குக்கு அழைத்து வருமாறு காவல்துறை கூறியது. தொடர்ச்சியான இரத்தப்போக்கு காரணமாக அவர்களுக்கு மூன்று லுங்கிகளை நாங்கள் மாற்ற வேண்டியிருந்தது, மலக்குடலில் இருந்து பெருமளவில் இரத்தம் பாய்ந்தது. சிறை அதிகாரிகள் கூட அவர்களின் உடல்நிலை குறித்து சரியாக பார்க்கவில்லை”.

ஜூன் 22 அன்று அவர்களால் மலம் அல்லது சிறுநீர் போக முடியவில்லை. அவர்களின் வயிறு வீங்க ஆரம்பித்தது. அவர்களால் சாப்பிட முடியவில்லை. பின்னர் சிறை அதிகாரிகள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அன்று இரவு 8.30 மணியளவில் பென்னிக்ஸ் தனது கடைசி மூச்சை விட்டார். அவரது தந்தை ஜெயராஜ் ஜூன் 23 காலை 8 மணிக்கு இறந்தார்.

இறந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக மாஜிஸ்திரேட்டுடன் கூடச் சென்ற ஜெயராஜின் மைத்துனர் டி.தவீத், இந்தியா டுடே க்கு அளித்த முதல் விவரம் தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு காவல்துறையினரால் நடத்தப்பட்ட கொடூரமான சித்திரவதைகள் தான் காரணம் என்பதை மேலும் வெளிப்படுத்தியது.

“பென்னிக்ஸ் உடல் முதலில் பரிசோதிக்கப்பட்டது. அவரது காலில் ஏற்பட்ட காயங்களை முதலில் பார்த்தபோது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரது கால் பாதத்தில் காயங்கள் இருந்தன, மேலும் உடம்பு பகுதியை பார்வையிட்ட போது எல்லா இடங்களிலும் காயங்கள் இருந்தன, புட்டம் பகுதியில் தோல் இல்லை. மற்றும் ஆசனவாய் அருகே காயங்கள். வலது மற்றும் இடது கைகளில் தழும்புகள் இருந்தன. அவரின் மலக்குடலில் காயமிருப்பதாக நாங்கள் தெரிவித்தபோது, அவர்கள் அவரது கால்களை விரித்து, ஆசனவாய் அருகே இரண்டு பெரிய காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.”

தனது தந்தையையும் சகோதரரையும் காவல்துறை சித்திரவதை செய்து கொன்றது குறித்து ஆத்திரமடைந்திருந்த ஜெயராஜின் மகள் பெர்சி ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது: “எனது தந்தையையும் சகோதரரையும் காவல்துறையினர் அடித்து கொன்றனர் ... இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் சம்பந்தப்பட்ட அந்த அனைத்து காவல்துறை நபர்களும் கைது செய்யப்பட வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே இறந்த உடல்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அத்துடன் மிருகத்தனமான தாக்குதல் தொடர்பாக பாராமுகமாக இருந்த மருத்துவர், நீதிபதி மற்றும் சிறை வார்டன் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்”.

காவல்துறையினருக்கும் வலதுசாரி அதிமுக தலைமையிலான மாநில அரசாங்கத்திற்கும் எதிரான எந்தவிதமான எதிர்ப்பையும் பயமுறுத்துவதாகவும் அடக்குவதற்குமான நோக்கத்துடன் ஊரடங்கு விதிகளை கண்டிப்பாக அமல்படுத்தும் போர்வையில் மாநில பொலிஸின் கொடூரங்கள் அதிகரித்து வருகின்றன. பிரதம மந்திரி நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கத்தின் வழியில் மாநில அரசாங்கம் வேலைக்கு திரும்புவதற்கான கொள்கைக்கு அழுத்தம் கொடுத்து முன்தள்ளும் அதேவேளையில் கோவிட்-19 தொடர்பாக பரந்தளவில் பரிசோதனைகள் மற்றும் பிற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ள நிலையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொற்று ஏற்பட்டவர்கள் 1,07,001 ஆகவும் இறப்புகள் 1,450 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஆசிய மனித உரிமைகளுக்கான மைய அறிக்கை, இந்தியா: சித்திரவதை 2018 ஆண்டு அறிக்கையின் படி 2017 ஏப்ரல் முதல் 2018 பிப்ரவரி வரையிலான காலப்பகுதியில் தமிழ் நாடு மாநிலத்தில் 76 பேர் பொலிஸ் காவலில் இறந்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு சிறு கடைக்காரர்களை கொடூரமாக பொலிஸ் கொன்றது தொடர்பாக கோபம் பெருகி வரும் நிலையில், மாநில அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஜூன் 29 அன்று, சாத்தான்குளம் காவல் நிலையத்தின் முழு பொலிசாரும் வேறு பல்வேறு நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர், மேலும் 27 புதிய பொலிசார் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டனர். இதற்கிடையில் இரண்டு துணை ஆய்வாளர்கள் மற்றும் நிலைய இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இருப்பினும், பரந்த சீற்றத்தை தணிக்கத் தவறியதால், மாநில அதிகாரிகள் மேலும் சில நடவடிக்கைகளை குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்க வேண்டியிருந்தது. ஜூலை 1 ம் தேதி, SI ரகுகணேஷ் மாநில அரசின் CBCID இனால் கைது செய்யப்பட்டார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், SI பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஜூலை 2 இல் கைது செய்யப்பட்டனர் மேலும் தலைமறைவாக இருந்த கான்ஸ்டபிள் முத்துராஜ் ஜூலை 3 இரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்கள். அவர்கள் 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தியாவில் இவ்வாறான பொலிஸ் படுகொலைகள் இழிவான பதிவுகளை கொண்டுள்ளன, இந்நிலையில் அந்த பொலிசார் இறுதியில் கொலை குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டனை பெறுவார்களா என்ற கேள்வி உள்ளது.

வளர்ந்து வரும் மக்கள் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு, ஜூன் 24 அன்று, தமிழக முதல்வர் கே.பழனிசாமி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு மற்றும் ஒவ்வொரு உறவினரின் குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்தார். பொலிசாரின் படுகொலையை மூடிமறைக்கும் விதமாக முதலமைச்சர் அவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் பிற மருத்துவ நிலைமைகளால் இறந்ததாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கு மத்திய புலனாய்வு பிரிவிடம் (CBI) ஒப்படைக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார், அதாவது அந்த அமைப்பு பாரபட்சமற்றதாக செயல்பட்டு நீதி வழங்கும் என்றவாறாக கூறினார். அப்போதிருக்கும் இந்திய மத்திய அரசாங்கத்தின் செல்வாக்கின் கீழ், CBI செயல்படும் என்பது பரவலாக அறியப்பட்ட உண்மை.

பொலிஸ் சித்திரவதை மற்றும் காவல் நிலைய படுகொலைகள் இந்தியாவில் புதிதல்ல, இது பரவலாக அறியப்பட்ட உண்மை மற்றும் இந்திய காவல்துறை இதற்கு இழிபுகழ் பெற்றது. எவ்வாறாயினும், சமீபத்திய காலகட்டத்தில் வர்க்கப் போராட்டங்கள் தீவிரமடைவதால் பொலிஸ் கொடூரங்கள் அதிகரித்து வருகின்றன. ஒடுக்குமுறை அரசு இயந்திரத்தின் ஒரு பகுதி தான் பொலிஸ். பிரெடெரிக் ஏங்கெல்ஸ் கூறியது போல் ஆயுதமேந்திய அமைப்பினர், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் சொத்து மற்றும் செல்வத்தை பாதுகாப்பதற்காக இருக்கின்றன.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்ததைப் போல, ஜோர்ஜ் ஃபுளோய்ட் பொலிசாரால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக, நிறம், இனம் மற்றும் மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அந்த சம்பவம் குறித்து ஆளும் உயரடுக்கின் ஒரு பகுதியினர் வேண்டுமென்றே பரப்பிய ஒரு இனவெறி கதைக்கு எதிராக பொலிஸ் கொலைக்கு எதிராக வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

ஃபுளோய்ட் படுகொலை செய்யப்பட்டதைப் போலவே, இந்தியாவில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கொடூரமாக கொன்றதானது, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான முதலாளித்துவ அடக்குமுறை அரசு எந்திரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக காவல்துறையின் தன்மையை வெளிப்படுத்துகிறது.