சோ.ச.க. வேட்பாளர்களுக்கு எதிரான இராணுவ தொந்தரவை நிறுத்துமாறு கடிதங்கள் இலங்கை பாதுகாப்பு செயலாளரை கோருகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களுக்கு எதிரான இராணுவத் தொந்தரவுகளை நிறுத்துமாறு கோரி, பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதிகள் சோ.ச.க.வுக்கு கிடைத்துள்ளன.

ஜூன் 30 அன்று "இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீது கை வைக்காதே: யாழ்ப்பாணத்தில் தனது தேர்தல் வேட்பாளர்களை இராணுவம் அச்சுறுத்துவதை நிறுத்துமாறு சோ.ச.க. கோருகிறது" என்ற தலைப்பில் சோ.ச.க. விடுத்த அழைப்புக்கு பிரதிபலிப்பாக இந்த கடிதங்களை இலங்கையிலும், சர்வதேச அளவிலும் உள்ள உலக சோசலிச வலைத்தள வாசகர்களிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டவை ஆகும்.

இராணுவ புலனாய்வு அதிகாரிகள், சோ.ச.க. வேட்பாளர்களான ஊர்காவற்துறையில் ராசேந்திரம் சுதர்சன், காரைநகரில் பரமு திருஞானசம்பந்தர் மற்றும் யாழ்ப்பாணத்தில் ராஜரத்தினம் ராஜவேல் ஆகியோரின் வீடுகளுக்கு முறையே மே 28, ஜூன் 16 மற்றும் 23 ஆகிய திகதிகளில் வருகைதந்து, அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப விவரங்களை கோரினர். திருஞான சம்பந்தர், யாழ்ப்பாண மாவட்டத்திற்கான சோ.ச.க. வேட்பாளர்களின் தலைவர் ஆவார். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று வேட்பாளர்கள் சுட்டிக்காட்டிய போது, சிரேஷ்ட அதிகாரிகளே தங்களை அனுப்பி வைத்ததாக இராணுவ அதிகாரிகள் கூறினர்.

ஜூன் 20 அன்று, சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், கட்சியின் வேட்பாளர்களை இராணுவம் தொந்தரவு செய்வதை நிறுத்துமாறு கோரி பாதுகாப்புச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். இது கட்சியின் ஜனநாயக உரிமைகளை மீறுகின்ற நடவடிக்கை ஆகும், மற்றும் சோ.ச.க. வேட்பாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலுமாகும் என்று அதில் அவர் சுட்டிக்காட்டினார்.

ராசேந்திரன் சுதர்சன் சோ.ச.க. கூட்டமொன்றில் உரையாற்றுகின்றார்

பாதுகாப்பு செயலாளர் குணரத்ன, டயஸின் கடிதத்திற்கு பதிலளிக்காமல், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தினதும் அவமதிப்பான அணுகுமுறையை குறித்துக் காட்டியுள்ளார். அதற்கு பதிலாக, இராணுவமும் காவல்துறையும் சோ.ச.க. வேட்பாளர்களை தொந்தரவு செய்வதை தீவிரப்படுத்தியுள்ளன.

ஜூலை 1, மாலை 6.30 மணிக்கு, ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் பொலிஸ் உளவுத்துறை அதிகாரிகள், பூனகரியின் கிராஞ்சியில் (யாழ்ப்பாணத்திலிருந்து 36 கி.மீ) உள்ள சோ.ச.க. வேட்பாளர் ராஜரத்தினம் திருஞானவேலின் வீட்டிற்குச் சென்றனர். அவரது தேசிய அடையாள அட்டை எண் மற்றும் அவரது கை தொலைபேசி எண்ணையும் அவர்கள் கோரினர்.

பரமு திருஞானசம்பந்தர்

ஒரு வாரத்திற்கு முன்பு, பொலிஸ் அதிகாரிகள் அதே வீட்டிற்குச் சென்று, சோ.ச.க. வேட்பாளர் ராஜரத்தினம் பாலகௌரியைத் தேடி, அவரது விபரங்களைக் கோரினர். அவளுடைய தம்பியான திருஞானவேல், அவள் வீட்டில் இல்லை என்று கூறிய பின்னர், வந்தால் பொலிஸ் நிலையத்திற்கு வரச்சொல்லுமாறு அவர்கள் கட்டளையிட்டுச் சென்றனர். எனினும் பாலகௌரி அங்கு செல்ல மறுத்துவிட்டார்.

இலங்கை பொலிசானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் பணியாற்றுவதுடன், இராணுவ மற்றும் பொலிஸ் உளவுத்துறை அதிகாரிகள் தங்களுக்கிடையில் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு டயஸ் எழுதிய கடிதத்திற்கு பதிலிறுப்பாக, அதன் யாழ்ப்பாண அலுவலகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், ஜூலை 2 அன்று திருஞானசம்பந்தரின் வீட்டுக்கும், ஜூலை 3 அன்று ராஜவேல் மற்றும் சுதர்சனின் வீடுகளுக்கும் சென்றிருந்தனர். அவர்கள் சோ.ச.க. வேட்பாளர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். சோ.ச.க. வேட்பாளர்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவது குறித்து அவர்கள் உண்மையில் இராணுவ அதிகாரிகளை விசாரித்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

திங்களன்று, யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் கூட்டிய முன்னணி வேட்பாளர்களின் கூட்டத்தில், சோ.ச.க. வேட்பாளர் திருஞானசம்பந்தர், தற்போது நடந்து வரும் இராணுவ மிரட்டல் குறித்து கேள்விகளை எழுப்பினார். தேர்தல் அலுவலக அதிகாரிகள் சோ.ச.க. வேட்பாளர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதவு செய்ததை சுட்டிக் காட்டிய அவர், அவற்றைக் கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றும் கேட்டார். கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு ஒரு அறிக்கையை அனுப்புவோம் என்று மட்டுமே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தலில் போட்டியிடும் இரண்டு சுயாதீன குழுக்களின் தலைவர்களும், பிரச்சாரம் செய்யும் போது படையினரின் மிரட்டலுக்கு ஆளானதாகக் கூறினர். இராணுவம் தங்கள் உடமைகளை சோதனை செய்வதாகவும், பிரச்சாரத்தின்போது அவர்கள் என்ன சொன்னார்கள் என்று மக்களிடம் கேட்பதாகவும் அவர்கள் விளக்கினர்.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய ஸ்தாபன முதலாளித்துவக் கட்சிகளின் மாவட்டத் தலைவர்கள், இராணுவத் துன்புறுத்தல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் மௌனம், ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான அவர்களது அலட்சியத்தையும் இராணுவ தொந்தரவுகளை ஆதரிப்பதையும் குறிக்கிறது.

இலங்கை இராணுவமும் பொலிசும் வடக்கில் "பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு" எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் சாக்குப்போக்கில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கில், அரசியல் எதிரிகள் மற்றும் வாக்காளர்களுக்கும் எதிரான வன்முறையைப் பயன்படுத்த இராஜபக்ஷ அரசாங்கம் தயாராகி வருகிறது.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பு மற்றும் கொவிட்-19 தொற்றுநோயையும் எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ, ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதோடு, மேலும் தனது அதிகாரங்களை வலுப்படுத்திக்கொள்ள அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்காக தேர்தலைப் பயன்படுத்த விரும்புகிறார்.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இனப் பாகுபாடுகளைக் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான அதன் சளைக்காத போராட்டத்தின் காரணமாகவே, சோ.ச.க. இலக்கு வைக்கப்பட்டுள்ளது. கொடூரமான இனவாத யுத்தத்தை எதிர்த்தும் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இலங்கை இராணுவப் படைகளைத் திரும்பப் பெறக் கோரியும் போராடி வருகின்ற, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்காக தொடர்ந்து போராடி வருகின்ற ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே.

ஜூலை 4, கொழும்பை தளமாகக் கொண்ட, ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரர், ட்ரொட்ஸ்கிச வேட்பாளர்கள் மீதான இராணுவ துன்புறுத்தல் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. "யாழ்ப்பாணத்தில் மூன்று சோ.ச.க. வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்" என்ற தலைப்பிலான அந்த செய்தி, பொதுத் தேர்தல்களில் கட்சியின் தலையீட்டை அறிவிப்பதற்காக முந்தைய நாள் கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், இராணுவ மிரட்டல் குறித்து சோ.ச.க. பொதுச் செயலாளர் டயஸின் கருத்துக்களை மேற்கோள் காட்டியிருந்தது. இலங்கையின் பிரதான தமிழ் செய்தித்தாள்களான வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகையின் யாழ்ப்பாண வெளியீடு மற்றும் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் தயன் மற்றும் தமிழ்வின்வலைத்தளமும் சோ.ச.க. வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டதை பற்றி செய்தி வெளியிட்டிருந்தன.

சோ.ச.க. வேட்பாளர்கள் தொந்தரவு செய்யப்பட்டதைப் பற்றிய டெயிலி மிரர் செய்தி

சோ.ச.க.வுக்கு எதிரான இராணுவத்தின் தொடர்ச்சியான அடக்குமுறை நடவடிக்கைகளை கண்டிக்கவும், சர்வாதிகாரத்திற்கு எதிரான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து உழைக்கும் மக்களினதும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் கட்சியின் பாதுகாப்பு பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை ஆதரிக்கும் அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கண்டன கடிதங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கும் அதே வேளை, பிரதிகளை தேர்தல் திணைக்களத்தின் தலைவருக்கும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் அனுப்பி வையுங்கள்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

மின்னஞ்சல்: secdefence@defence.lk தொலைநகல்: +94 11 2541529

தேர்தல் ஆணையாளர்

மின்னஞ்சல்: chairman@elections.gov.lk

தொலைநகல்: +94 11 2868426

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை)

மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk

தொலைநகல்: +94 11 2869239

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கண்டன கடிதங்களை இங்குபிரசுரிக்கின்றோம்:

LG: இலங்கை கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்:

சோசலிச சமத்துவக் கட்சி என்பது யாழ்ப்பாண மாவட்டத்திலும் இலங்கையிலும் பொது அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நீண்டகால மற்றும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும். தேர்தல் சட்டங்களின்படி வேட்பாளர்கள் பட்டியலை சமர்ப்பிப்பதன் மூலம் கட்சி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், அவர்களின் கொள்கை ரீதியான அரசியல் சேவையின் காரணமாக, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல், இலங்கையின் பிற பகுதிகளிலும் அதற்கு அப்பாலும் மிகவும் மதிப்பிற்குரிய நபர்கள் ஆவர். தகவல்களைத் திரட்டுவதற்கு இராணுவத்தை அவர்களது வீடுகளுக்கு அனுப்புவதற்கோ அல்லது புகைப்படம் எடுப்பதற்கோ எந்தவொரு சட்டபூர்வமான அல்லது நியாயமான காரணமும் கிடையாது.

இவை அனைத்தும் சோ.ச.க. உறுப்பினர்களது மட்டுமன்றி, யாழ்ப்பாண வாக்காளர்களதும் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும். வேட்பாளர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கும், இந்தச் செயலுக்கு சாட்சியாக இருப்பவர்களை, அதாவது யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்துவதற்கும் இது மேற்கொள்ளப்படுகின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது. இலங்கையர்களும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களும், இராணுவம் வீட்டுக்கு வந்து யாரையாவது விசாரிப்பதில் உள்ள அச்சுறுத்தலை நன்கு அறிவார்கள்.

இந்த செயலை நான் திட்டவட்டமாக கண்டிக்கிறேன். இந்த துன்புறுத்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தலுக்கு முந்தைய நடவடிக்கைகளை தடையின்றி நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் நான் கோருகிறேன்.

WR: இலங்கை பத்திரிகையாளரும் பாராட்டுபெற்ற எழுத்தாளரும்.

2020 நாடாளுமன்றத் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களான ராசேந்திரம் சுதர்சன், பரமு திருஞானசம்பந்தர் மற்றும் ராஜரத்தினம் ராஜவேல் ஆகியோரின் அடிப்படை உரிமைகள், அவர்களது வீடுகளுக்கு சென்று அவர்களது தனிப்பட்ட தகவல்களைக் கோரியதன் மூலம், இலங்கை இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் கடுமையாக மீறப்பட்டுள்ளன. ஜனநாயகம் என்று ஏதாவது இருந்தால், எந்தவொரு குடிமகனும் ஒரு தேர்தலில் வாக்காளராகவோ அல்லது வேட்பாளராகவோ இருக்க உரிமை உண்டு. இது ஒரு அடிப்படை மனித உரிமை ஆகும். தற்போதைய இராஜபக்ஷ அரசாங்கம் இராணுவமயமாக்கலின் திசையை நோக்கி வேகமாக திரும்பிக்கொண்டிருப்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது. இந்த செயலுக்கு எதிராக எனது வலுவான கண்டனத்தை வெளிப்படுத்துகிறேன்.

DP: ஒரு பிலிப்பீனியர்

ஐயாமார்களே, அம்மணிகளே,

சோசலிச சமத்துவக் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிளுக்கு, குறிப்பாக திரு. ராசேந்திராம் சுதர்சன், திரு. பரமு திருஞானசம்பந்தர் மற்றும் திரு. ராஜரத்தினம் ராஜவேல் ஆகியோருக்க எதிரான இலங்கை இராணுவ உளவுத்துறையின் தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல்கள் சம்பந்தமாக எனது எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்.

சோ.ச.க. தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், இலங்கைத் தேர்தலில் பங்கேற்கவும் துன்பம், கொடூரமான சுரண்டல், தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை மக்கள் மீது இனவாத வன்முறை மற்றும் யுத்தத்தையும் கொண்டுவருகின்ற, முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முடிவு கட்டுவதை நோக்கமாகக் கொண்ட, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களுக்கு முன்வைக்கவும் தங்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை பயன்படுத்துகின்றனர்.

சோ.ச.க.வின் ஜனநாயக உரிமைகளை இராணுவம் அப்பட்டமாக மீறுவதை நான் கண்டிக்கிறேன், மேலும் சோ.ச.க. வேட்பாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தக் கோருகின்றேன்.

SL: அமெரிக்கா

நான் நியூயோர்க் நகரில் ஒரு கல்வியாளர் ஆவேன். இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியின் மூன்று வேட்பாளர்கள் இலங்கை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வீடுதேடி வருவதன் மூலம் அச்சுறுத்தப்பட்ட செய்தி உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு அவதூறு ஆகும். ஏனென்றால், முதலில், சோ.ச.க. மற்றும் அதன் உறுப்பினர்கள் சர்வதேச அளவில் அவர்களின் ஒருமைப்பாட்டிற்காக சோசலிஸ்டுகள் மத்தியில் பிரசித்திபெற்றவர்கள், அத்துடன் அவர்கள் இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்துவதற்காக முன்நிற்கின்றனர்.

இரண்டாவதாக உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் இனவாத தாக்குதல்களுக்கும் மற்றும் பொலிஸ் தாக்குதல்களுக்கும் எதிராக இனபாகுபாடுகளைக் கடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதானது, ஜனநாயக உரிமைகளைக் காக்க தொழிலாள வர்க்கம் சர்தவேச ரீதியில் ஐக்கியப்படுவது இன்றியமையாதது என்பதையும் அவ்வாறு ஐக்கியப்படும் என்பதையும் பொதுவில் புரிந்துகொள்ள வைத்துள்ளது.

உள்நாட்டிலோ அல்லது சர்வதேச ரீதியாகவோ இருந்தாலும், அரசியலில் இராணுவமயமாக்கல், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் கிடையாது என்பதற்கும், சர்வாதிகார அரசாங்கத்தை நோக்கி அல்லது போர் அல்லது இரண்டையும் நோக்கிய முன்நகர்வுக்கான ஒரு தெளிவான அறிகுறியுமாகும்.

சோ.ச.க. தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக ஒரு வேலைத்திட்டத்தை வழங்குகிறது. அதன் உரிமைகளை அச்சுறுத்துவதற்கோ அல்லது மறுப்பதற்கோ முயற்சிக்காமல் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதற்கு வாக்களிப்பதற்கு உள்ள ஜனநாயக உரிமையை அனுமதிக்க வேண்டும். அதிகாரிகளால் வேட்பாளர்களை விசாரிப்பது உட்பட எந்தவொரு துன்புறுத்தலும் நிறுத்தப்பட வேண்டும்.

சர்வதேச அளவில் தொழிலாளர்களிடமிருந்து சோ.ச.க.வுக்கு மேலும் ஆதரவு கிடைக்கவிருக்கின்றது.

Loading