முன்னோக்கு

சாண்டர்ஸ்-பைடென் பணிக்குழுக்களும், சாண்டர்ஸ் "அரசியல் புரட்சியின்" அழிவும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2020 ஜனநாயகக் கட்சி தளத்திற்கான பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் ஜோ பைடெனின் "கூட்டுப் பணிக்குழு" திட்டங்களை வெளியிட்டு, சாண்டர்ஸ் அவரின் "அரசியல் புரட்சி" என்றழைக்கப்படுவதன் சவப்பெட்டியில் கடைசி ஆணியை ஆடித்துள்ளார்.

ஏப்ரல் மாத மத்தியில் சாண்டர்ஸ் பைடெனை ஆமோதித்த போதுதான் இந்த கூட்டுப் பணிக்குழு முன்முயற்சி முதலில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் இரண்டு உறுப்பினர்களான அலெக்சாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் மற்றும் விமானச் சிப்பந்திகளின் அமைப்பான CWA இன் தலைவர் சாரா நெல்சன் ஆகியோர் உள்ளடங்கலாக சாண்டர்ஸ் மற்றும் பைடென் பிரச்சாரக் குழுவின் முன்னணி உறுப்பினர்கள் அந்த பணிக்குழுயில் இடம் பெற்றுள்ளனர். இந்த முன்முயற்சி, வரவிருக்கும் தேர்தலில் "கட்சி ஒற்றுமையை" ஊக்குவிப்பதற்காக செய்யப்படுகிறதாம்.

பைடென்-சாண்டர்ஸுக்கு இடையிலான ஒத்துழைப்பின் விளைவு என்னவென்றால், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய சமூக மற்றும் பொருளாதார பேரழிவுக்கு மத்தியில் சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் எல்லா மத்திய தூண்களையும் முற்றிலுமாக கைத்துறப்பதற்குக் குறைவின்றி வேறொன்றுமில்லை.

அந்த முன்மொழிவுகளில் சாண்டர்ஸின் தனித்தன்மையான "அனைவருக்கும் மருத்துவக் கவனிப்பு" திட்டம் இடம்பெறவில்லை என்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும், "கட்டுப்படியாகிய செலவில் CARE சட்ட சந்தையிடங்களை மீண்டும் திறப்பதற்கும்" மற்றும் பொதுக் கருத்தை வழங்குவதற்குமான அழைப்புகளைக் கொண்டு அது பிரதியீடு செய்யப்பட்டுள்ளது. மெடிக்கேர் திட்டத்திற்கான வயது தகுதியை 65 இல் இருந்து 60 குறைத்தமை மருத்துவச் சிகிச்சை மீது பைடெனின் "முற்போக்கான" மூடிமறைப்பைக்குச் சேவையாற்றுவதற்காக உள்ளது. வெறும் நான்காண்டுகளுக்கு முன்னர், ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரம் மெடிக்கேர் வயது தகுதியை 50 ஆக குறைக்க அழைப்பு விடுத்திருந்தது.

மத்திய அரசின் வேலை உத்தரவாதம், பசுமை பாதுகாப்பிற்கான புதிய உடன்படிக்கை, கட்டணமில்லா இலவசக் கல்லூரி கல்வி, புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்கத்துறையை (ICE) நீக்குவது ஆகியவை சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் மையத்திலிருந்த ஆனால் கைவிடப்பட்ட பிற கொள்கைகளில் உள்ளடங்குகின்றன.

இதற்கு பதிலாக, ஜனநாயகக் கட்சிக்கான நிபந்தனைக்குட்படாத பரிந்துரைகளில் அனைத்து அமெரிக்கர்களுக்கும் "சமத்துவத்தை" உறுதிப்படுத்துவது மற்றும் நடைமுறைப்படுத்த ஜனநாயகக் கட்சிக்கு எந்த உத்தேசமும் இல்லாத மிகச் சிறிய கொள்கை சீர்திருத்தங்கள் ஆகியவைக் வெற்றுரைகள் இடம் பெற்றுள்ளன.

ஜனநாயகக் கட்சியின் தேர்தல் களம் எப்படி பார்த்தாலும் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை. சாண்டர்ஸ் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவை அறிவித்த போது, அப்பெண்மணியும் கட்சியும் "வரலாற்றில் மிகவும் முற்போக்கான கட்சி களத்தை" ஏற்றிருப்பதாக அவர் அறிவித்ததை, பல தொழிலாளர்களும் இளைஞர்களும் நினைவுகூர்வார்கள்.

ஜனநாயகக் கட்சியின் நிகழ்காலத்திற்கான மிகவும் உணர்ச்சிமிக்க பேச்சாளராக நிரூபித்து காட்டி வரும் சாண்டர்ஸ், 2020 தேர்தல்களுக்கு முன்னதாக மீண்டுமொருமுறை அவரின் தனித்துவ அடையாளங்களைக் கைவிட்டு வருகிறார். பணிக்குழு முன்மொழிவுகளின் அறிவிப்புகளைத் தொடர்ந்து, பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்க்குப் பின்னர் பைடென் தான் "மிகவும் முற்போக்கான ஜனாதிபதி" ஆக இருப்பார் என்று சாண்டர்ஸ் முன்கணிக்கும் அளவுக்குச் சென்றார்.

யாரை அவர் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்? ஆளும் வர்க்கத்தின் கட்டளை நிறைவேற்றுவதில் பைடெனுக்கு அண்மித்து 50 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. ஈராக் போரை ஆதரித்த அவர், நிதியியல் ஊகவணிகம் மீதான Glass–Steagall கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதையும் ஆதரித்தார். மக்களின் மிகவும் ஒடுக்கப்படும் மற்றும் வறிய அடுக்குகளைப் பாரியளவில் சிறைப்படுத்துவதற்கு இட்டுச் சென்ற சட்டமசோதாவை நிறைவேற்றுவதற்கு அவர் உதவினார். “ஐக்கிய" முன்முயற்சியில் சம்பந்தப்பட்டுள்ள பலரின் பங்களிப்புடன் பைடென் நிர்வாகம் தேர்வானால், அது சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது, ஜனநாயக உரிமைகள் மீது கூடுதலாக தாக்குதல் நடத்துவது, போர் மற்றும் இராணுவவாதத்தை விரிவாக்குவதற்கு அது தலைமை வகிக்கும்.

பைடென் பிரச்சாரத்தில் சாண்டர்ஸின் சரணடைவு முற்றிலும் அனுமானிக்கத்தக்கதாக இருந்ததுடன், அது அவர் பிரச்சார இயல்பின் அதே போக்கில் இருந்தது. சோசலிசத்தின் அவசியத்தை யதார்த்தம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளதைப் போல, சாண்டர்ஸின் விடையிறுப்பு முன்பினும் கூடுதலாக வலதுக்கு நகர்வதாக இருந்தது.

குறிப்பாக கடந்த நான்கு மாத கால சம்பவங்கள் மீளாய்வு செய்ய மதிப்புடையவையாக உள்ளன.

சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் முந்தைய கடைசி நடவடிக்கையாக, மார்ச் 25 இல் 2.2 ட்ரில்லியன் டாலர் CARES சட்டத்திற்கு அந்த செனட்டர் வாக்களித்தார். அந்த சட்டமசோதாவிற்கு "ஆம்" என்று வாக்களிப்பதற்கு முன்னதாக, சாண்டர்ஸ் அதை தொழிலாளர்களுக்கான வரப்பிரசாதம் என்பதாக செனட் தளத்தில் புகழ்ந்துரைத்தார். யதார்த்தத்தில், அந்த சட்டமசோதா பெருநிறுவன அமெரிக்காவுக்கான வீண்விரயமாக இருந்தது, அது பங்குச் சந்தையை மிதக்கச் செய்யவும் பிரதான பெருநிறுவனங்களுக்கு ஏற்பட்ட எந்தவொரு இழப்புகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்பாக 6 ட்ரில்லியன் டாலரைப் பாய்ச்ச அனுமதித்தது.

ஏப்ரல் 8 இல், அமெரிக்காவில் கொரொனா வைரஸ் நோயாளிகள் அவர்களின் முதல் உச்சத்தை எட்டி வந்த நிலையில் மற்றும் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்த போது, சாண்டர்ஸ் அவர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன், ஏப்ரல் 13 இல் அவர் பணிவடக்கத்துடன் பைடென் உடன் விவாதம் நடத்தினார்.

பைடெனிடம் அவர் சரணடைந்த பின்னர் அசோசியேடெட் பிரஸிற்கு அவர் அளித்த ஒரு பேட்டியில், அவர் ஆதரவாளர்களில் யாரேனும் பைடெனுக்காக பிரச்சாரம் செய்ய தவறியிருந்தால் அவர்கள் "பொறுப்பற்றவர்கள்" என்று பழித்துரைத்தார்.

அதன் பின்னர் விரைவிலேயே, சாண்டர் பிரச்சாரக் குழுவிற்கான முன்னாள் உயர்மட்ட ஆலோசகர்கள், ஆதாரவளங்களை பைடென் தேர்வாவதை நோக்கி திருப்பி விடுவதற்காக “நம்பிக்கைக்குரிய எதிர்காலம்" (Future to Believe In) என்ற ஒரு புதிய சிறப்பு PAC ஐ தொடங்க அதன் அமைப்புரீதியிலான கட்டமைப்பை அணித்திரட்டினர்.

மே 23 இல், அமெரிக்க கோவிட்-19 மரண எண்ணிக்கை 100,000 ஐ நெருங்கி கொண்டிருந்த போது மற்றும் பெரும் செல்வந்தர்களின் செல்வவளம் அதிகரித்து கொண்டிருந்த நிலையில், சாண்டர்ஸின் அரசியல் குழு அவர் பிரதிநிதிகளுக்கு ஓர் அச்சுறுத்தல் விடுத்தது: பைடெனையோ அல்லது ஏனைய ஜனநாயகக் கட்சி தலைவர்களையோ விமர்சித்தால், பதவியிலிருந்து அவர்கள் நீக்கப்படுவார்கள் என்றது.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொடூரமாக பொலிஸால் படுகொலை செய்யப்பட்டார், அது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக பல இனத்தவரின் மற்றும் பல வம்சாவழியைச் சேர்ந்தவர்களின் பாரிய போராட்டங்களைத் தூண்டிவிட்டது. இந்த போராட்டங்களுக்கு விடையிறுப்பதில், ட்ரம்ப் அந்த போராட்டங்களைக் கலைக்கவும் மற்றும் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும் பணியில் உள்ள துருப்புகளை அணித்திரட்டி ஓர் ஆட்சி சதியை நடத்த முயன்றார்.

இத்தகைய அபிவிருத்திகளுக்கு விடையிறுப்பாக, சாண்டர்ஸ் மௌனமாக இருந்தார். இறுதியில் இந்த சூழ்நிலைகளைக் குறித்து பேச வேண்டி வந்தபோது, அவர் பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

இப்போது, இருக்கட்சிகளது அரசு கொள்கைகளின் நேரடி விளைவாக, இந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் அமெரிக்காவில் 375,000 கொரொனா வைரஸ் நோயாளிகள் அறிவிக்கப்பட்டனர், இது பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்தில் ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாகும். பரிசோதனை மேற்கொள்வதற்காக மட்டுமே புளோரிடா மற்றும் அரிசோனா போன்ற மாநிலங்களில் ஐந்து மணி நேரங்களுக்கும் அதிகமாக தொழிலாளர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். பல மாநிலங்களில் அண்மித்து ICU படுக்கை வசதி நிரம்பி வருகின்றன. கடந்த வாரம் முதல் முறையாக வேலைவாய்ப்பின்மைக்காக 1.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்தார்கள், தொடர்ந்து 15 வாரமாக புதிய வேலைவாய்ப்பின்மைக்கான விண்ணப்பங்கள் 1 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளன, கடந்தாண்டு முதல் வாரத்தில் புதிதாக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை விட இது ஆறு மடங்கு அதிகமாகும். இதற்கும் மேலாக, இந்த இலையுதிர்காலத்தில் பள்ளிகளை மீண்டும் பொறுப்பின்றி திறப்பதற்காக அதிகரித்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது, இதற்கு தொழில்துறை தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பிரிவுகளிடையே பாரிய எதிர்ப்பு உருவாகி வருகிறது.

இத்தகைய நிலைமைகளின் கீழ் தான் சாண்டர்ஸ் அவரின் "ஐக்கிய" முன்மொழிவுகள் என்றழைக்கப்படுவதை வெளியிடுவதைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

சாண்டர்ஸின் நடவடிக்கைகள், சமூக எதிர்ப்பை ஜனநாயகக் கட்சியின் கட்டமைப்புக்குள் வைப்பதற்கான அவரின் அரசியல் செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன. பெப்ரவரி 2016 இல் WSWS எழுதியதைப் போல: “சாண்டர்ஸ் அவர் பிரச்சார உரைகளில் வலியுறுத்துவைத் போல, 'புரட்சியை' உருவாக்குவது அவரின் நோக்கம் இல்லை, மாறாக அதை தடுப்பதே அவரின் நோக்கமாக உள்ளது.”

ஜனநாயகக் கட்சியைச் சுற்றியும், உள்ளேயும் அங்கே எண்ணற்ற குழுக்கள் இருந்தன, மிகவும் குறிப்பிடத்தக்கது அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட்கள் (DSA), இவர்கள் கடந்த ஐந்தாண்டுகளாக சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் மீது பிரமைகளை ஊக்குவிப்பதற்காக செலவிட்டுள்ளனர். அவர் பிரச்சாரத்தை முடித்துக் கொள்கையில், DSA, தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஜனநாயகக் கட்சியிலிருந்து வெளியேற வேண்டாமென வலியுறுத்துவதற்காக டஜன் கணக்கான "அழைப்பு" கூட்டங்களை நடத்தி உள்ளது. “முடிவாக" அவர்கள் விவரிக்கையில், அதுபோன்றவொரு முறிவு தேவைப்படும், “ஆனால் இப்போது அல்ல.” சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் திவால்நிலைமையில் அவர்கள் அவர்களின் சொந்த திவால்நிலையையும் அம்பலப்படுத்தினார்கள்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் சாண்டர்ஸ் அனுபவதிலிருந்து அவசியமான படிப்பினைகளைப் பெற வேண்டியுள்ளது. அதன் அடித்தளத்தில், சாண்டர்ஸின் திவால்நிலையை ஒரு தனிநபரின் திவால்நிலையாக நிரூபிக்கும் பிரச்சினை இல்லை, மாறாக மிகவும் அடிப்படையாக, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் முன்னோக்கின், ஒருவித சீர்திருத்தவாதத்தின் திவால்நிலையாகும். ஒவ்வொரு முன்னேறிய முதலாளித்துவ நாடும் அதன் சொந்த சாண்டர்ஸ் வகைப்பாட்டைக் கொண்டுள்ளது. பிரிட்டனில் அங்கே கோர்பினிசம் உள்ளது, கிரீஸில் சிரிசாவினதும், ஸ்பெயினில் பொடெமோஸினதும் அனுபவம் உள்ளது.

சாண்டர்ஸ் பிரச்சாரம் மற்றும் உலகெங்கிலுமான அதன் சொந்தபந்தங்களையும் நோக்கிய SEP இன் மனோபாவம் அரசியல் போக்குகளோ அல்லது தனிநபர்களோ அவர்கள் தங்களைக் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதிலிருந்து தொடங்குவதில்லை, மாறாக விஞ்ஞானபூர்வ, வரலாற்றுரீதியில் அடித்தளமிட்ட மார்க்சிச பகுப்பாய்வின் அடிப்படையில் அவர்களின் வரலாறு மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க நலன்கள் மற்றும் வேலைத்திட்டத்திலிருந்து தொடங்குகின்றன.

ஜனநாயகக் கட்சியை ஊக்குவிக்கும் ஓர் "அரசியல் புரட்சி" மூலமாக அல்ல, மாறாக முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கான ஒரு சோசலிச புரட்சி மூலமாக ஒரு நிஜமான புரட்சிகர கொள்கையின் அடிப்படையில் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் முன்னோக்கிய பாதை உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்கும் துணை ஜனாதிபதி பதவிக்கும் ஜோசப் கிஷோர் மற்றும் நோரிஸ்சா சான்டா குரூஸைத் தேர்ந்தெடுக்க அதன் சொந்த ஜனாதிபதி பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. நாங்கள் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் சாத்தியமானளவுக்கு பரந்த எண்ணிக்கையில் உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் எங்களின் வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச முன்னோக்கிற்குக் கொண்டு வர எங்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறோம். எங்களின் இந்த பிரச்சாரத்தில் இணையுமாறும், இந்த போராட்டத்தை ஆதரிக்குமாறும் நாங்கள் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

Loading