தொழிலாளர் பாதுகாப்பு குழு உடனடியாக ஆலையை மூடக் கோருகிறது

டொலிடொ ஜீப் ஆலையில் கோவிட்-19 கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது

By Jerry White
17 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Ford/GM/Chrysler Rank-and-File Safety Committee Networkஎன்ற புதிய பேஸ்புக் குழுவில் இணையுங்கள். உங்கள் ஆலையில் ஒரு சாமானிய தொழிலாளர் பாதுகாப்பு குழுவைத் தொடங்க உதவுவதற்கும், கூடுதல் தகவல்களை அறிவதற்கும் WSWS வாகனத் தொழிலாளர் செய்தியிதழின் autoworkers@wsws.orgமுகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

வடமேற்கு ஓஹியோவின் பியட் கிறைஸ்லர் டொலெடொ உற்பத்தி வளாகம் நோய்தொற்றின் குவிமையமாக மாறி வருகின்ற நிலையில், அமெரிக்கா எங்கிலுமான வாகனத்துறை ஆலைகளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் (UAW) அப்பகுதி கிளை அதிகாரிகள் அங்கே டொலெடொ ஆலையில் 40 நோயாளிகள் உறுதி செய்யப்பட்டிருப்பதாக இவ்வாரம் ஒப்புக் கொண்டனர், ஆனால் சாமானிய தொழிலாளர்களோ அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமென நம்புகின்றனர்.

“இங்கே அது தாறுமாறாக அதிகரித்துள்ளது,” ஓர் இளம் டொலிடொ ஜீப் உற்பத்தித்துறை தொழிலாளி WSWS க்குத் தெரிவித்தார். “நோய்தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர் எவரிடமிருந்தாவது ஒவ்வொருவரும் நோய்தொற்றுக்கு உள்ளாகிறார்கள். உங்களுக்கு அது இருக்கிறதென கூறினால், நீங்கள் சில காலத்திற்கு சம்பளமின்றி வெளியேற வேண்டியிருக்கும். எனக்கு மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள், ஆகவே என்னால் அந்த வைரஸிற்கு வாய்ப்பளிக்க முடியாது.” நிறுவனமும் சரி UAW உம் சரி தொழிலாளர்களுக்கு எதையும் கூறுவதில்லை, என்றார். “நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பேஸ்புக்கில் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் எங்களுக்குள் அதை செய்து வருகிறோம்,” என்றார்.

டொலிடொ ஜீப் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் (ஆதாரம்: FCA Media)

அவர் தொடர்ந்து கூறினார், “ஆலைகளைப் பாதுகாப்பாக திறப்பதற்காக அவர்கள் அனைத்தும் செய்யவிருப்பதாக தெரிவித்தார்கள், ஆனால் அவர்கள் அதை அனுசரிக்கவில்லை. அனைவரையும் திரும்ப கொண்டு வருவதாகவே அவர்கள் தெரிவித்தார்கள். அதே நேரத்தில், அவர்கள் மிகவும் அற்பத்தனமாக இருக்கிறார்கள். முகக்கவசத்தினால் உங்கள் பாதுகாப்பு கண்கண்ணாடி கீழே விழுந்து உடைந்துவிட்டால், அதற்கான விலையை உங்கள் கணக்கில் எழுதிவிடுவார்கள். நீங்கள் பாதுகாப்பு குறித்து ஏதேனும் கேள்விகள் எழுப்பினால், அவர்கள் ஏதாவதொன்றில் உங்களைச் சிக்க வைப்பார்கள். நிச்சயமாக அவர்கள் பழிவாங்குகிறார்கள். முகக்கவசம் அணிவது எவ்வளவு கடுமையானது என்பதை கற்பனை செய்து பாருங்கள். அங்கே 90 டிகிரிக்கு மேல் இருக்கும், எங்களுக்கு வியர்த்து கொட்டிக் கொண்டிருக்கும்.”

அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் பொறுப்பற்ற முன்நகர்வின் ஒரு முக்கிய அம்சமாக, வட அமெரிக்க வாகனத்துறை தொழில்துறை மே 18 இல் மீண்டும் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. முன்கண்டிராத அளவில் நாளாந்த நோயாளிகளின் அதிகரிப்பு மற்றும் கடந்த இரண்டு மாதங்களில் 1.5 மில்லியனில் இருந்து 3.6 மில்லியனுக்கு மொத்த நோய்தொற்று எண்ணிக்கையின் அதிகரிப்பு மற்றும் 90,000 இல் இருந்து 140,000 க்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றால் உயிராபத்தான விளைவுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினாலும் ஒருசேர ஆதரிக்கப்பட்டு, வாகனத் தொழில்துறை ஆலைகள் மீண்டும் தொடங்கப்பட்டதால் இது அமெரிக்கா எங்கிலுமான ஆலைகளில் நோய்தொற்று வெடிப்புகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. அடைப்புக்கான உத்தரவுகளை மறுத்து தலைமை செயலதிகாரி Elon Musk ஆல் மீண்டும் திறக்கப்பட்ட கலிபோர்னியாவின் ஃபிரீமொன்ட் அலையில் 130 நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். அந்த ஆலை மீண்டும் திறக்கப்பட்டதால் டெஸ்லாவின் பங்கு விலைகள் அதிகரித்துள்ளன, இது முஸ்கின் தனிப்பட்ட சொத்துவளத்தில் 30 பில்லியன் டாலரைச் சேர்த்துள்ளது. டெஸ்லாவின் உள்அலுவலக சுற்றறிக்கைகளின்படி, அந்த ஆலையிலுள்ள 10,000 பணியாளர்களில் 1,550 பேர் கோவிட்-19 ஆல் "பாதிக்கப்பட்டு" உள்ளனர், அதாவது அவர்கள் நோய்தொற்றை பரப்பி உள்ளனர் அல்லது நோய்தொற்று இருந்த எவருடனோ தொடர்பில் இருந்துள்ளனர்.

மிசோரி, டெக்சாஸ், இண்டியானா மற்றும் மிச்சிகனின் ஜிஎம் ஆலைகளிலும் நோய்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. புதன்கிழமை Detroit Free Press செய்தியின்படி, வைரஸ் குறித்த கவலைகளால் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் விடுப்பு எடுத்துள்ளனர் அல்லது ஆலைக்கு வராமல் இருந்துள்ளனர் என்பதால் ஜிஎம் நிறுவனம் அதன் ஆலைகள் பலவற்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை பணியிட மாற்றம் செய்து வருகிறது.

இண்டியானா, ஃபோர்ட் வாய்ன் ஜிம் உற்பத்தி ஆலையில், 4,100 தொழிலாளர்களில் அண்மித்து 1,000 தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களுக்காகவும், ஏறத்தாழ 200 தொழிலாளர்கள் கோவிட்-19 சம்பந்தமான காரணங்களுக்காகவும் பணிக்கு வரவில்லை. ஃப்ளிண்ட் உற்பத்தி ஆலையில், 600 தொழிலாளர்கள் ஏதோவித விடுப்பில் வராமல் இருந்துள்ளனர், மேலும் 100 பேர் "கோவிட்-விடுப்பு" எடுத்துள்ளனர். இரண்டாவதாக கூறப்பட்டவர்களில், "நோய்எதிர்ப்பு சக்தி ஒழுங்கின்மை மற்றும் வேலை செய்யவியலாத நிலைமை, அல்லது கோவிட்-19 பரிசோதனையில் நோய்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட யாருடனோ தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும், அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட யாரையேனும் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும்" தொழிலாளர்கள் உள்ளடங்குவதாக Free Press எழுதியது.

ஃபோர்ட் வாய்ன் மற்றும் ஃபிளிண்ட் ஆலைகளுடன் சேர்ந்து ஜிஎம் நிறுவனத்திற்கு இலாபமீட்டும் சரக்கு கையாளும் டிரக்குகளை உருவாக்கும், மெக்சிகோவின் சிலோ உற்பத்தி வளாகத்தில் உள்ள தொழிலாளர்கள், கோவிட்-19 ஆல் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், நிறைய பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

புதன்கிழமை, மிச்சிகனின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் கிரெட்சென் விட்மர் (Gretchen Whitmer) கூறுகையில், வைரஸ் பரவல் காரணமாக வாகனத்துறை ஆலைகள் மீண்டும் மூடப்படலாம் என்று எச்சரித்தார். ஆனால் மே மாத ஆரம்பத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட ஆலைகளை மீண்டும் திறந்ததே பரவலைத் தீவிரப்படுத்தி உள்ளது என்பதை அப்பெண்மணி ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக அவர், வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியவில்லை என்று பழியைத் தனிநபர்கள் மீது சுமத்தினார். “பொதுவிடங்களுக்குச் செல்லும் போது மிச்சிகன்வாசிகள் முகக்கவசம் அணியாவிட்டால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், ஆயிரக் கணக்கானவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள வாகனத்துறை உற்பத்தி ஆலைகள் உட்பட இன்னும் அதிக நமது வணிகங்களை மூடுவதற்கு நாம் நிர்பந்திக்கப்படலாம்,” என்றார்.

நோய்தொற்று பரவும் அளவை மூடிமறைக்க முனைந்துள்ள வாகன உற்பத்தி நிறுவனங்களும் UAW உம், உற்பத்தியில் எந்தவித தொந்தரவும் ஏற்படுவதைத் தடுக்க நோய்வாய்பட்ட தொழிலாளர்களை உடனடியாக மாற்றிவிடுகின்றன. ஆனால் விடயங்களைத் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த கரங்களில் எடுக்க தொடங்கியுள்ளனர். கடந்த ஜூனில் டெட்ராய்ட் பகுதியில் ஜெஃபர்சன் நோர்த் மற்றும் ஸ்டெர்லிங் ஹைட்ஸ் ஆகிய இரண்டு உற்பத்தி ஆலைகளில் தன்னிச்சையான வேலை முடக்கங்களை நடத்திய பியட் கிறைஸ்லர் (FCA) தொழிலாளர்கள், UAW இல் இருந்து சுயாதீனமாக அவர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்கினர். இது இதேபோன்று டொலிடொவில் குழு உருவாக்கப்பட்டதை தொடர்ந்து நடந்தது.

புதன்கிழமை அறிக்கையில் டொலிடொ ஜீப் உற்பத்தி ஆலையின் தொழிலாளர் பாதுகாப்பு குழு, “கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்ட தொழிலாளர்கள் குறித்த முக்கிய விபரங்களை வேண்டுமென்ற வெளியிட மறுப்பதற்காக" FCA நிர்வாகத்தையும் மற்றும் UAW கிளை 12 ஐயும் கண்டித்தது மற்றும் "இத்தகைய பாதுகாப்பற்ற மற்றும் அபாயகரமான வேலையிட நிலைமைகளுக்கு எதிராக எதிர்த்து நிற்குமாறு" அழைப்பு விடுத்தது.

“டொலிடொ உற்பத்தி வளாகம் மூடப்பட வேண்டும். பரிசோதிக்கவிரும்பும் எல்லா தொழிலாளர்களுக்கும் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பரிசோதனை முடிவுகளும் வரும் வரையில் யாரும் வேலைக்குத் திரும்பக் கூடாது. 'சாத்தியமிருக்கலாம்' என்பவர்களை மட்டும் பரிசோதிப்பது பாதுகாப்பற்றது, அது மற்றவர்களின் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது,” என்று கோரிக்கை உள்ளடங்கலாக, அந்த குழு பல கோரிக்கைகளைப் பட்டியலிட்டது.

ஏனைய கோரிக்கைகளில் உள்ளடங்குபவை:

கோவிட்-19 இல் பாதிக்கப்பட்ட எல்லா நோயாளிகளையும், உற்பத்தி பிரிவு, பணி நேரம் மற்றும் குழு எண்ணிக்கையுடன் HUB முகப்பு பக்கத்தில் பட்டியலிட வேண்டுமென நாங்கள் கோருகிறோம்.

கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் இடத்தைத் தற்காலிக தொழிலாளர்களை கொண்டு நிரப்பும் துஷ்பிரயோகத்தை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் கோருகிறோம். அவர்களும் மனிதர்கள், உயிர்பலி கொடுக்கும் பகடைக்காய்கள் இல்லை.

கோவிட்-19 நோயாளி உறுதி செய்யப்பட்டதும், குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு உற்பத்தி நிறுத்தப்பட்டு, பயிற்சி பெற்ற மற்றும் உரிமம் பெற்ற நிறுவனத்தால் அந்த ஆலை முழுவதும் ஆழமான தூய்மை பணி செய்யப்பட வேண்டும்.

தொழிலாளர்கள் முகக்கவசத்துடன் வேலை செய்ய வேண்டியிருந்தால், முகக்கவசமின்றி காற்றை சுவாசிக்கவும், தண்ணீர் பருகவும் மற்றும் உடலைக் குளிர்வித்துக் கொள்ளவும் எங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடங்கள் வேலைநிறுத்த நேரம் வேண்டும்.

பணிநேரங்களுக்கு இடையே எல்லா கருவிகளையும், ஓய்வறைகளையும், கழிவறைகள் மற்றும் நீர்நிலை இடங்களையும் ஒரு பயிற்சி பெற்ற மற்றும் உரிமம் பெற்ற நிறுவனம் சுத்தப்படுத்துவதற்காக 8 மணி நேர வேலைநேரத்தைக் குறைக்க வேண்டும். பணிநேரம் தொடங்கி 30 நிமிடங்களுக்குப் பின்னரும், மதிய உணவு முடிந்தும், அன்றாட பணிநேரம் முடிந்த பின்னரும் எல்லா நடைபாதை வழிதடுப்புகளும் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

தொழிலாளர்கள் இலக்கு வைக்கப்படக் கூடாது, நிந்திக்கபடக்கூடாது, வேலைநீக்கம் செய்யப்படக்கூடாது, அல்லது பரிசோதனைக்காக அல்லது பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கையில் மற்ற வழிகளில் ஒழுங்குப்படுத்தவோ அல்லது அலைக்கழிக்கவோ கூடாது.

பரிசோதனைக்கு நேரம் எடுத்துக் கொண்டதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்ட எந்தவொரு பணியாளர்களும் எல்லா பணியாளர்களும் நிலுவை சம்பளத்துடன் மீண்டும் பணியமர்த்தப்பட்டு, அவர்களின் பணிமுதிர்வு கால அடிப்படையில் உரிய நேரம் வழங்கப்பட வேண்டும்.

உரிமம் பெற்ற மருத்துவர் பரிந்துரைத்த மருத்துவரீதியில் ஒப்புதல் பெற்ற முகக்கவச மாற்றீடுகளுக்கான எல்லா தடைகளையும் நீக்கு.

அந்த அறிக்கையின் தீர்மானம் அறிவித்தது: “டொலிடோ ஜீப் உற்பத்தியாலை தொழிலாளர் பாதுகாப்பு குழுவான நாங்கள், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலான வாகனத்தொழில்துறை எங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட்டு நிற்கிறோம், மேலும் எங்களின் உயிர்களுக்கு என்ன விலையாக இருந்தாலும் கவலையின்றி உற்பத்தியைச் செயல்படுத்துவதற்கு நிற்கும் வாகனத்துறை நிறுவனங்கள் மற்றும் UAW இன் முயற்சிகளுக்கு எதிராக எங்களுடன் இணைந்து நிற்குமாறு உங்கள் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிறோம். JNAP மற்றும் SHAP இரண்டிலும் உள்ள தொழிலாளர் குழுக்களின் எங்கள் சகோதர சகோதரிகளுடன் நாங்கள் ஐக்கியப்பட்டு நிற்கிறோம்! நம் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் ஆபத்திற்குட்படுத்தும் பெருநிறுவன பேராசையை அனுமதிக்காமல் இருப்பதற்குமான நேரமிது!”

டொலிடொவில் நோயாளிகள் பரவுவது ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்களை எச்சரிக்கையூட்டி உள்ளது, மற்றவர்களும் தொழிலாளர் பாதுகாப்பு குழுக்களுக்கான அழைப்பை முன்னெடுத்து வருகிறார்கள். “ஸ்டெர்லிங் ஹைட்ஸ் ஸ்டாம்பிங்கில் இங்கே மூன்று பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று WSWS வாகனத்துறை தொழிலாளர் செய்தியிதழுக்கு ஒரு தொழிலாளி தெரிவித்தார். “டொலிடொவில் அது எப்படி ஆரம்பித்தது என்பது எனக்கு உறுதியாக தெரியும், இப்போது அது கட்டுப்பாட்டை மீறி உள்ளது. எதுவும் செய்யவில்லை என்றால் இங்கேயும் அதே தான் நடக்கும்,” என்றார்.

“டொலிடொ, SHAP மற்றும் ஜெஃபர்சன் போலவே இங்கேயும் ஒரு குழுவை அமைக்க நாங்கள் பேசி வருகிறோம். UAW மற்றும் நிர்வாகமும் ஆக்கபூர்வமான எதையும் செய்வதாக இல்லை. உடல் வெப்பத்தை சோதிப்பதன் மூலம் அறிகுறி இல்லாதவர்களைக் கண்டறிய முடியாது. அவர்கள் NBA விளையாட்டு வீரர்களைப் பரிசோதிப்பது போல, அவர்களால் ஏன் எப்போதும் எங்களைப் பரிசோதிக்க முடியவில்லை? ஆளுநர் விட்மர் எங்களைப் பாதுகாக்கவில்லை, ஜனாதிபதியும் செய்யவில்லை என்பது உங்களுக்கே தெரியும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தைப் [CDC] பொறுத்த வரையில், நோயாளி உறுதி செய்யப்பட்டதும் முற்றிலும் சுத்தப்படுத்துவதற்காக ஆலையை மூடுவதற்கான வழிமுறைகளை நிறுவனம் புறக்கணித்து வருகிறது, வழிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பதற்கான எல்லா ஓட்டைகளையும் CDC நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.

“நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள தொழிலிடங்களில் உள்ள பணியாளர்கள் தான் முடியும். நிர்வாகங்கள் அவற்றின் இலாபங்களுக்காக உற்பத்தியை நாம் நிறுத்தக் கூடாதென விரும்புகின்றன. மொத்தமாக இலஞ்சமும் ஊழலும் நிறைந்த UAW இன் உயர்மட்டத்திலிருந்தும் அது கிடைக்கப் போவதில்லை. கோவிட் நிஜமானது என்றோ அல்லது கவலைப்படக்கூடியது என்றோ அவர் கருதவில்லையென நமது தொழிற்சங்க பிரதிநிதியே பலரிடம் கூறியுள்ளார், இப்படிப்பட்ட மனிதர் தான் நமது பாதுகாப்பைப் பேணுவதாக கூறிக்கொள்கிறார்.

“JNAP மற்றும் SHAP, கொலொராடோவில் இறைச்சி பதப்படுத்தும் ஆலை தொழிலாளர்களைப் போலவே தொழிலாளர்கள் தான் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கும். டொலிடொவைப் போலவே தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆலையிலும் குழுக்களை அமைக்காத வரையில் அது நிற்கப் போவதில்லை,” என்றார்.