ஜேர்மன் இராணுவத்தினுள்ளும் மற்றும் காவல்துறையினுள்ளும் மிகப்பெரிய நவ-நாஜி ஊடுருவல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம், ஒலி வடிவில் இங்கே கேட்கலாம்.

நியூ யோர்க் டைம்ஸ் ஜூலை 3ல் வெளியான ஒரு நீண்டகட்டுரை, "நாள் X" (“Day X.”) அன்று வன்முறை எழுச்சியை நடத்த ஜேர்மன் இராணுவம், உளவு அமைப்புகள் மற்றும் காவல்துறையின் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு வலதுசாரி தீவிரவாத சதித்திட்டத்தை விரிவாக ஆவணப்படுத்தியது. ஒரு வருட கால விசாரணையை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை, இராணுவம் மற்றும் காவல்துறையினுள் பரந்த அளவிலான தீவிர வலதுசாரி வலையமைப்புகள், பாசிசவாதிகள் சிறப்புப் பயிற்சி பெற்ற படைப் பிரிவினுள் (KSK) ஊடுருவல் மற்றும் ஜேர்மனிக்கான மாற்று (AfD) போன்ற வலதுசாரி தீவிரவாத அரசியல் சக்திகளின் வளர்ந்து வரும் செல்வாக்கு ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.

"நவ-நாஜிகள் இராணுவ அணிகளில் ஊடுருவுகையில், ஜேர்மனி ஒரு எதிரியை தன்னுள்ளே எதிர்கொள்கிறது" என்ற தலைப்பில், தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கும், ஆயுதங்களை சேமிப்பதற்கும் நிழல் வலைப்பின்னல்கள் எவ்வாறு அதனுள் பொறுத்துக்கொள்ளப்படுகின்றன மற்றும் பல ஆண்டுகளாக இராணுவத் தளபதிகளால் ஆதரிக்கப்படுகின்றன என்பது பற்றி விபரமாக எழுதுகின்றது. ஒரு முன்னாள் KSK தளபதி, ஜெனரல் ரெய்ன்ஹார்ட் குன்செல் (Reinhard Günzel) ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் அவர் KSK இனை நாஜிகளின் Waffen-SS உடன் ஒப்பிட்டார். பாரிய இனஅழிப்பு படுகொலைகளின் (Holocaust) போது ஏராளமான யூதர்களை பாரிய மரணதண்டனைகுள்ளாக்கியதில் இந்த நாஜி அதிரடிப்படையினர் இழிபெயர் பெற்றவர்களாவர்.

டைம்ஸ் இன் கருத்துப்படி மே மாதம் ஒரு KSK சிப்பாயின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், விசாரணையாளர்கள் “இரண்டு கிலோகிராம் PETN பிளாஸ்டிக் வெடிபொருட்கள், ஒரு டெட்டனேட்டர், ஒரு தடுப்புருகி, ஏ.கே.47, ஒரு சைலன்சர், இரண்டு கத்திகள், ஒரு குறுக்கு வில் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்று வெடிமருந்துகளை கண்டுபிடித்தனர். ஹனிபால் என்ற புனைபெயரில் மற்றொரு முன்னாள் KSK உறுப்பினர் ஒரு வலைத் தள உரையாடல் குழுவை நடத்தினார். அதில் பயங்கரவாத தாக்குதல்களின் சதி பற்றி விவாதிக்கப்பட்டது. இக்குழுவின் பல உறுப்பினர்கள் விசாரணையில் உள்ளனர், மேலும் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். டைம்ஸ் நேர்காணல் செய்த, "ஹனிபால்" தனது குழுவை "எங்கள் மண்ணில் எதிரி துருப்புக்கள்" என்று குறிப்பிடப்படும் "வன்முறைகும்பல்கள், இஸ்லாமியவாதிகள் மற்றும் பாசிச எதிர்ப்புக்குழுக்கள்" ஆகியவற்றிற்கு எதிரான "போர் விளையாட்டு" பற்றி விவரித்தார்.

வலதுசாரி தீவிரவாதிகளுக்கு ஒரு மையமாக KSK வெளிவந்ததன் காரணமாக, அதன் ஒரு பகுதியை கலைப்பது உட்பட, அதனை மறுகட்டமைக்கப்போவதாக அறிவிக்க பாதுகாப்பு அமைச்சர் அன்னகிரேட் கிராம்ப் காரென்பவர் (Annegret Kramp-Karrenbauer) நிர்ப்பந்திக்கபட்ட ஒரு சில நாட்களின் பின்னர் அந்த டைம்ஸ் கட்டுரை வெளிவந்தது. ஹிட்லரின் பாசிசத்தின் வீழ்ச்சிக்கு 75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜேர்மனிய அரசு எந்திரதினுள்ளும் பாதுகாப்புப் படையினரிடையேயும் நவ-நாஜிக்கள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை இந்த அசாதாரண நிகழ்வு விளக்குகின்றது. இது பல வருடங்களாக டைம்ஸ் மற்றும் சர்வதேச அளவில் பல செய்தித்தாள்கள் தாம் புறக்கணிக்க முயன்ற ஒரு யதார்த்தத்தைப் பற்றி தகவலளிக்க கட்டாயப்படுத்தியது.

முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து வைய்மார் குடியரசின் போது ஏற்பட்ட அரசியல் நிலைமைகளை நினைவு கூர்ந்த டைம்ஸ் கட்டுரை, பெயரளவிலான ஜனநாயக அரசு அனைத்து பக்கங்களிலும் இருந்து தீவிர வலதுசாரி சதித்திட்டங்களை எதிர்கொள்கிறது, அதிலும் எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளிருந்து எதிர்கொள்கின்றது. மற்றும் வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்கள் "ஆயுதங்களை பதுக்கி வைப்பது, பாதுகாப்பான வீடுகளை பராமரிப்பது மற்றும் சில சந்தர்ப்பங்களில் கொலை செய்வதற்கு அரசியல் எதிரிகளின் பட்டியலை வைத்திருக்கின்றன" என்று டைம்ஸ் குறிப்பிட்டது. KSK இற்குள் மட்டும் 48,000 வெடிமருந்து உபகரணங்கள் மற்றும் 62 கிலோகிராம் வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளன.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச்சில் உள்ள இரண்டு மசூதிகளில் பாரிய துப்பாக்கிச் சூட்டில் டஜன் கணக்கான முஸ்லீம் வழிபாட்டாளர்களை சுட்டுக் கொன்ற தீவிர வலதுசாரி பயங்கரவாதியான ப்ரெண்டன் டாரண்டின் கருத்துக்களை டைம்ஸ் கட்டுரை சுட்டிக்காட்டியது. ஐரோப்பாவின் இராணுவத்தினுள் “நூறாயிரக்கணக்கான” வீரர்கள் பாசிச மற்றும் வலதுசாரி தேசியவாத கருத்துக்களை வைத்திருக்கின்றனர் என்று அவர் கூறியிருந்தார். அது தொடர்ந்தது, “ஜேர்மனியின் இராணுவத்தின் எதிர்புலனாய்வு அமைப்பு (military counterintelligence agency) இப்போது இராணுவத்தில் உள்ள 184,000 பேரில் தீவிர வலதுசாரி தீவிரவாதத்திற்காக 600க்கும் மேற்பட்ட படையினரை விசாரித்து வருகிறது. அவர்களில் 20 பேர் KSK யில் உள்ளனர். இது மற்றைய பிரிவுகளில் இருப்பதிலும் பார்க்க ஐந்து மடங்கு அதிகமாகும்.

"ஆனால் ஜேர்மனிய அதிகாரிகள் பிரச்சினை மிகப் பெரியதாக இருக்கக்கூடும் என்றும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் ஊடுருவப்பட்டுள்ளன என்றும் கவலை கொண்டுள்ளனர். கடந்த 13 மாதங்களில், தீவிர வலதுசாரி பயங்கரவாதிகள் ஒரு அரசியல்வாதியை படுகொலை செய்தனர், ஒரு யூதவழிபாட்டுத் தலத்தை தாக்கியதுடன் இன்னும் ஒன்பது குடியேறியவர்களையும், குடியேறியவர்களின் ஜேர்மன் சந்ததியினரையும் சுட்டுக் கொன்றனர்”.

தீவிர வலதுசாரி ஊடுருவலின் உண்மையான அளவு தெளிவாக இல்லை என டைம்ஸ் தொடர்ந்தது. ஏனென்றால் புலனாய்வு அமைப்புகளின் பிரிவுகளும் வலதுசாரி தீவிரவாதிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. மே மாதத்தில் ஒரு தேடுதல் சோதனை பற்றி ஒரு இராணுவ எதிர்புலனாய்வு முகமையான MAD இனால் KSK படையினருக்கு முற்கூட்டியே தகவல் வழங்கப்பட்ட ஒரு குறிப்பை டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. மேலும் அது “நாங்கள் எம்முள் உள்ள ஒரு எதிரியை கையாள்கிறோம்." என தூரிங்கியா மாநிலத்தில் உள்ள உள்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவரான ஸ்டீபன் கிராமரை மேற்கோள் காட்டுகின்றது.

இக்கட்டுரையின் ஆசிரியர், காத்ரின் பென்போல்ட், "இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள்" மற்றும் "தீவிர வலதுசாரி உறுப்பினர்கள்" தன்னிடம் "தற்போதைய மற்றும் முன்னாள் வீரர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் நாடு தழுவிய தீவிர வலதுசாரிகளுடன் தொடர்புபட்ட வலையமைப்புகள்" பற்றி அவரிடம் கூறியதாக குறிப்பிட்டார். சில ஊடகங்கள் இதை ஒரு "நிழல் இராணுவம்" என்று வர்ணித்து, வைய்மார் குடியரசின் போது இராணுவத்திற்குள் தீவிர வலதுசாரி சக்திகளால் முதலாளித்துவ ஜனநாயகத்தை முறியடிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட படுகொலைகள், சதித்திட்டங்கள் மற்றும் சதித்திட்டங்களின் பிரச்சாரத்தை நினைவுபடுத்துகின்றன.

"பல சந்தர்ப்பங்களில், ஜேர்மனியின் ஜனநாயக ஒழுங்கு வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்த்து படையினர் வலைப்பின்னல்களை அதற்கு தயாரிக்க பயன்படுத்தினர்," என்று டைம்ஸ் தொடர்ந்தது. ஒருவேளை அதன் மிகவும் திடுக்கிடும் வெளிப்பாட்டில். "அவர்கள் அதை Day X. என்று அழைக்கிறார்கள். இது உண்மையில் பயங்கரவாத செயல்களைத் தூண்டுவதற்கான அல்லது ஒரு சதியை முன்னெடுப்பதற்கான ஒரு சாக்குப்போக்கு என்று அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள்".

பல டைம்ஸின் வாசகர்களுக்கு, 1945 இல் நாஜிசம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பாவின் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாக ஜேர்மனியை ஆளும் வட்டாரங்களால் காட்டப்பட்ட நிலையில், தீவிர வலதுசாரிகளின் இராணுவ சதித்திட்டத்தின் உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கும். எவ்வாறாயினும், யதார்த்தம் என்னவென்றால், தமக்கு விரோதமான தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால் 1933 ஜனவரியில் ஜேர்மன் முதலாளித்துவம் ஹிட்லரை அதிபராக நியமிப்பதற்கு தள்ளப்பட்ட அதே புறநிலை முரண்பாடுகள் இன்று அதன் வாரிசுகளை தீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளின் ஆதரவை நாடத் தூண்டுகின்றன. ஒருபுறம், ஜேர்மன் ஏகாதிபத்தியம் உலகெங்கிலும் அதன் கொள்ளையடிக்கும் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களை இன்னும் இரக்கமின்றி முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை எதிர்கொள்கிறது. மறுபுறம், அதன் சிக்கன நடவடிக்கை மற்றும் போர் கொள்கைகளுக்கு உழைக்கும் மக்களிடையே ஆழ்ந்த எதிர்ப்பை அது எதிர்கொள்கிறது.

உலக அரங்கில் ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களை உறுதிப்படுத்த மிகவும் ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்கும் முயற்சி வலதுசாரி தீவிரவாத கருத்துகளுக்கு புத்துயிர்ப்பு கொடுப்பதுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்று ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியினதும் (SGP) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஜேர்மன் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்தனர். போருக்கு எதிரான ஒரு சிறப்பு மாநாட்டில் 2014 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் SGP பின்வருமாறு அறிவித்தது, “ஜேர்மனி நாஜிக்களின் கொடூரமான குற்றங்களிலிருந்து கற்றுக்கொண்டது, 'மேற்கு நோக்கி வந்துவிட்டது' என்று ஒரு சமாதானமான அமைதியான வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டது மற்றும் ஒரு ஸ்திரமான ஜனநாயகமாக வளர்ந்ததுள்ளது என்ற போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பிரச்சாரம் அனைத்தும் பொய்களாக அம்பலப்படுத்தப்படுகிறது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் வரலாற்றுரீதியாக எவ்வாறு எழுந்ததோ அதேபோல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதனது மூர்க்கத்தனத்துடன் மீண்டும் அதன் உண்மையான தன்மையைக் காட்டுகிறது”.

ஜேர்மன் ஜனாதிபதி ஜோகிம் ஹவுக், வெளியுறவு மந்திரி ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் ஆகியோரின் அறிக்கைகளுக்கு எதிராக இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரும் 2014 மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் இராணுவ கட்டுப்பாட்டின் சகாப்தம் முடிந்துவிட்டதாக அறிவித்தனர். வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளில் ஆயுதப்படைகளின் மிகவும் தீர்க்கமான மற்றும் கணிசமான தலையீட்டிற்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர், "ஒதுங்கியிருந்த நிலையிலிருந்து" உலக அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு ஜேர்மனி மிகப்பெரியது "என்று ஸ்ரைன்மையர் வாதிட்டார்.

ஹவுக், ஸ்ரைன்மையர் மற்றும் வொன் டெர் லெயன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்த அதே மாதத்தில், பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் கிழக்கு ஐரோப்பிய வரலாற்றின் பேராசிரியரான ஜோர்க் பாபெரோவ்ஸ்கி Der Spiegel பத்திரிகைக்கு, “ஹிட்லர் ஒரு மனநோயாளி அல்ல, அவர் தீயவர் அல்ல. தனது மேசையில் யூதர்களை அழிப்பது குறித்து பேச விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

வரலாற்றின் மொத்த பொய்ப்படுத்தலுக்கு எதிராக கல்வியாளர்களிடமிருந்தோ அல்லது அரசியல் ஸ்தாபகத்திலிருந்தோ ஒரு குரல் கூட எழுப்பப்படவில்லை. அவர் போருக்குப் பிந்தைய ஜேர்மனியில் மிகவும் பிரபலமான நாஜி சார்பு வரலாற்றாசிரியரான ஏர்ன்ஸ்ட் நோல்ட க்கு தனது ஆதரவை அறிவித்தார். மாறாக, பாபெரோவ்ஸ்கியும் அவரது இணை சிந்தனையாளர்களும் ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டனர். இது அவர் மீது "ஊடகங்களில் தாக்குதல்கள்" "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அறிவித்தது. இந்த ஆதரவு ஜேர்மனிக்கு அப்பாலும் நீட்டிக்கப்பட்டது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் பாபெரோவ்ஸ்கிக்கு சர்வாதிகாரம் பற்றிய அவரது ஆய்விற்காக 300,000 டாலர்கள் ஆராய்ச்சி மானியத்தை வழங்கியது. இப்பேராசிரியர், ஜனநாயக ஆட்சி முறைகளுக்கு சட்டபூர்வமான மற்றும் பிரபலமான "மாற்று அரசியல் ஒழுங்காக" சர்வாதிகாரத்தை கருதுகின்றார். ஒரு மூடிய கதவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாபெரோவ்ஸ்கி 2019 வசந்த காலத்தில் பிரின்ஸ்டனுக்குச் சென்றபோது, அவருடன் அவரது ஆராய்ச்சி உதவியாளர் ஃபாபியான் தூனமானும் இருந்தார். தூனமான் 1998 இல் ஹனோவர் நகரில் ஒரு நவ-நாஜி ஆர்ப்பாட்டத்தில் முன்னணி பங்கேற்பாளராக அடையாளம் காணப்பட்டார். (See: Why did Princeton University provide funding for the German right-wing extremist Jörg Baberowski?)

பாபெரோவ்ஸ்கி வரலாற்றை மீண்டும் எழுதுவது ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து அனுதாப ஆதரவைப் பெற்றிருந்தாலும், SGP உம் மற்றும் அதன் மாணவர் அமைப்பும் ஒரு மோசமான ஊடக பிரச்சாரத்திற்கு உட்படுத்தப்பட்டன. 2018 ஆம் ஆண்டில், SGP "இடதுசாரி தீவிரவாதி" என்பதாக வரையறுக்கப்பட்டு இரகசிய சேவையால் ஒரு கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில், அந்த நேரத்தில் AfD அனுதாபியான ஹான்ஸ்-ஜோர்க் மாஸன் தலைமையிலான உளவுத்துறை, “ஒரு ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமுதாயத்திற்கான போராட்டமும்” மற்றும் “‘ஏகாதிபத்தியம்’, ‘இராணுவவாதம்’ ஆகியவற்றுக்கு எதிரான கிளர்ச்சியும் அரசியலமைப்புக்கு எதிரானது, அதாவது சட்டவிரோதமானது” எனக் குறிப்பிட்டது.

இந்த கடுமையான பிரதிபலிப்பிற்கான காரணம், பாபெரோவ்ஸ்கிக்கு SGP இன் எதிர்ப்பு, நாஜிக்களின் குற்றங்களை குறைத்துக்காட்டுதல் மற்றும் ஜேர்மன் இராணுவவாதத்தின் மறுமலர்ச்சி ஆகியவை ஆளும் உயரடுக்கின் அரசியலை கூர்மையாக வலதிற்கு மாற்றுவதற்கான சதித்திட்டத்தை இடையறுத்ததாலாகும். நவ-பாசிச AfD 2013 இல் நிறுவப்பட்டதிலிருந்து திட்டமிட்டு கட்டியமைக்கப்படுகின்றது. இது 2017 கூட்டாட்சி தேர்தலில் 12.6 சதவிகித வாக்குகளைப் பெற்று, 1945 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல்தடவையாக கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட முதல் பாசிசக் கட்சியாக மாறிய பின்னர், அப்போது ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த ஸ்ரைன்மையர், AfD இன் தலைவர்களைச் சந்தித்ததுடன், மற்ற கட்சிகளை AfD இனை சுற்றியுள்ள "சமாதானப்படுத்தமுடியாத சுவர்களை" அகற்றுமாறு வலியுறுத்தி மற்றும் "ஜேர்மன் தேசபக்திக்கு" பாடுபடுங்கள் என்றார். பல மாதங்களுக்குப் பின்னர், கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் ஒரு புதிய மாபெரும் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முடிவு செய்தனர். இது பாராளுமன்றத்தில் AfD இனை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக மாற்றுவதில் சென்று முடிந்தது.

பெரும் கூட்டணியின் கொள்கையின் பெரும்பகுதியை, குறிப்பாக குடியேற்றம் மற்றும் அகதிகள் போன்ற கொள்கைகளில் AfD கட்டளையிட முடிந்தது. பாராளுமன்றக் கட்சிகள் அனைத்தும் தீவிர வலதுசாரிக் கட்சியால் நிரப்பப்படுவதற்காக முக்கியமான நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப் பதவிகளை நிரப்பப்படாது வைத்திருப்பதை உறுதி செய்தன.

பெப்ரவரியில், தாராளவாத சுதந்திர ஜனநாயகவாதிகளும் (FDP) மற்றும் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளும் துரிங்கியா மாநிலத்தில் அதன் அடுத்த தந்திரோபாயரீதியான நடவடிக்கைக்கு AfD உடன் இந்த ஒத்துழைப்பை எடுத்துக் கொண்டனர். அங்கு அவர்கள் நவ-பாசிசவாதிகளின் வாக்குகளில் தங்கியிருந்து போருக்குப் பிந்தைய ஜேர்மனிய மாநிலத்தில் முதலமைச்சராக தாராளவாத சுதந்திர ஜனநாயக் கட்சியின் தோமஸ் கெம்மெரிக் ஒரு பாசிசக் கட்சியின் வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிரான பரவலான மக்கள் சீற்றம் கெம்மெரிக்கை விரைவில் இராஜினாமா செய்ய நிர்பந்தித்தது. (See: Sound the alarm! Political conspiracy and the resurgence of fascism in Germany)

இந்த பிற்போக்குத்தனமான வலதுசாரி அரசியல் சூழலுக்குள் தான், இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகளில் பாசிச பயங்கரவாதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சதித் திட்டக்காரர்களின் நடவடிக்கைகள் செழித்துள்ளன.

1930 களில் இருந்து முன்னோடியில்லாத வகையில் உலக முதலாளித்துவ முறிவின் நிலைமைகளின் கீழ் வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்களின் ஆபத்து குறித்து டைம்ஸ் இப்போது வெளிப்படையாக அறிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது முதலாளித்துவ ஆட்சியின் ஆழமான நெருக்கடியைப் பேசுகிறது. சமூக சமத்துவமின்மையின் வெளிப்படையான நிலைகள், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளின் மீள் எழுச்சி மற்றும் ஜனநாயக ஆட்சியின் அரிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டு, எல்லா இடங்களிலும் ஆளும் உயரடுக்கினர் தங்கள் நலன்களைப் பாதுகாக்க சர்வாதிகார மற்றும் வலதுசாரி தீவிரவாத சக்திகளை நோக்கி வருகிறார்கள். ட்ரொட்ஸ்கி 1929 இல் எழுதியது போல, ஐரோப்பாவில் சர்வாதிகாரத்திற்கான வளர்ந்து வரும் போக்கையும் பாசிச சக்திகளின் வலுப்படுத்துதலையும் பகுப்பாய்வு செய்து, “சர்வதேச போராட்டத்தின் அதிகப்படியான பதற்றம் மற்றும் வர்க்கப் போராட்டம் சர்வாதிகாரத்தின் குறுகிய சுற்றுக்கு வழிவகுக்கிறது, ஜனநாயகத்தின் உருகிகளை வெடிக்கச் செய்கிறது மற்றொன்றுக்குப் பிறகு".

அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவுடன், பாசிச சக்திகளால், ஜேர்மன் இராணுவம் மற்றும் அரசு எந்திரத்தின் ஊடுருவல், இந்த செயல்முறையின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றாலும், மற்ற முன்னணி முதலாளித்துவ நாடுகளில் குறைவான ஆபத்தான முன்னேற்றங்கள் நடைபெறவில்லை.

அண்டை நாடான பிரான்சில், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஒரு தேசிய வீரன் என நாஜி ஒத்துழைப்பாளரான பிலிப் பெத்தனின் பாரம்பரியத்தை பாராட்டியதோடு, மஞ்சள் சீருடை எதிர்ப்பாளர்கள் மீது மிருகத்தனமான இராணுவ பாணியிலான ஒடுக்குமுறைக்கு உத்தரவிட்டார். இதன் விளைவாக மரணங்கள் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில், ட்ரம்ப் தீவிர வலதுசாரி மற்றும் பாசிச அடுக்குகளிடையே ஒரு ஆதரவை தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருக்கிறார். இது மிக சமீபத்தில் தனது ஆதரவாளர்களில் ஒருவர் "வெள்ளை சக்தி" என்று கூச்சலிடுவதைக் காட்டும் வீடியோவை மறு ட்வீட் செய்வதன் மூலம் காட்டப்பட்டுள்ளது. ஜூன் தொடக்கத்தில் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிரான வெகுஜன, பல்லின ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி தனது தனிப்பட்ட கட்டளையின் கீழ் ஒரு சர்வாதிகார ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு இராணுவ சதியைத் தொடங்கினார்.

தொழிலாள வர்க்கப் போராட்டங்களை அச்சுறுத்துவதற்கும் மற்றும் கலைப்பதற்கும் கனடாவிலும் தீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. ஜேர்மனியில் தீவிர வலதுசாரிகளை டைம்ஸ் அம்பலப்படுத்துவதற்கு ஒரு நாள் முன்னதாக, வலதுசாரி தீவிரவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்ட ஒரு இராணுவ சேமப்படையினை சேர்ந்தவர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக தோல்வியுற்ற படுகொலை முயற்சியை செய்திருந்தார்.

பாசிச தீவிர வலதுசாரிகளின் அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிடுவதுபோல் குற்றவியல் ரீதியான இலகுவாக எடுத்துக்கொள்ளும் எண்ணம் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால் 1920 கள் மற்றும் 1930 களைப் போலல்லாமல், ஜேர்மனியிலும் பிற இடங்களிலும் தீவிர வலதுசாரிகள் இன்னும் வெகுஜன ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில், AfD உம் அதன் ஆதரவாளர்களும் பரவலான மக்களிடையே பரவலாக வெறுக்கப்படுகிறார்கள். இம்மக்கள் ஐரோப்பா முழுவதும் நாஜிகள் செய்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக பாரிய யூதப்படுகொலைகளையும் மறந்துவிடவில்லை. தீவிர வலதுசாரிகளின் வெளிப்படையான வலிமை ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரச எந்திரத்திற்குள் இது சக்திவாய்ந்த கூட்டாளிகளைக் கொண்டுள்ளது என்பதிலிருந்தே பிரத்தியேகமாக வருகிறது.

ஜேர்மனி மற்றும் பிற நாடுகளில் ஆளும் உயரடுக்கின் தீவிர வலதுசாரி சதித்திட்டங்கள் வெற்றிபெறாமல் தடுக்க, வலதுசாரி தீவிரவாதம் மீதான பரந்துபட்ட தொழிலாள வர்க்கத்தின் வெறுப்பு பாசிசம் மற்றும் இராணுவவாதத்தின் மறுமலர்ச்சிக்கு எதிராகவும் இலாபநோக்கு முறையில் வேரூன்றியுள்ள அழுகிய முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான ஒரு நனவான அரசியல் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவை கட்டியெழுப்புவது அவசியமாகின்றது.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரை:

German defence minister plans more effective organization of army’s far-right elite force
[4 July 2020]

Loading