சோ.ச.க. பாதுகாப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவு விரிவடையும் நிலையில்

இலங்கை இராணுவத் தளபதி வடக்கில் வேட்பாளர்களை இராணுவம் மிரட்டுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் "பொய்யானவை" எனக் கூறுகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இலங்கையின் வடக்கில் போட்டியிடும் வேட்பாளர்களை இராணுவம் மிரட்டுவது குறித்து புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, அதற்குப் பிரதிபலித்த இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அந்த குற்றச்சாட்டுகள் “பொய்யானவை” என்று வலியுறுத்திய போதிலும், தனது கூற்றை உறுதிப்படுத்தும் சிறு ஆதாரங்களைக் கூட அவர் வழங்கத் தவறிவிட்டார்.

சில்வாவின் கருத்து, ஜூலை 8 அன்று லங்காசுடர்என்ற தமிழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டதுடன் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட பிரதான தமிழ் நாளிதழ்களிலும் அது மேற்கோள் காட்டப்பட்டது. தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் "எந்த ஆதாரமும் இல்லாமல் படையினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்" என்று சில்வா அறிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ராசேந்திரம் சுதர்சன், பரமு திருஞானசம்பந்தர், ராஜரத்தினம் ராஜவேல் ஆகிய சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர்களின் வீடுகளுக்கு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியமை சம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்தே, இராணுவத் தளபதியின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான சோ.ச.க. வேட்பாளர்களுக்கு சம்பந்தர் தலைமை வகிக்கின்றார்.

புலனாய்வு அதிகாரிகள் பின்னர் மேலும் இரண்டு சோ.ச.க. உறுப்பினர்களின் வீட்டிற்கு சென்றனர்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் சோ.ச.க. மற்றும் ஏனைய சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களும் ஜூலை 6 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பிராந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இராணுவத் தொந்தரவு குறித்து புகார் கூறினர்.

சில்வா தனது ஆதாரமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அதேவேளை, இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, சோ.ச.க. வேட்பாளர்களை இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தொந்தரவு செய்தமை பற்றி ஜூன் 20 அன்று சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கவில்லை.

சோ.ச.க. வேட்பாளர்களை விசாரிக்க வந்த இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கூறிய சில பெயர்கள் மற்றும் திகதிகள், நேரங்கள் உட்பட இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை டயஸின் கடிதம் வழங்கியிருக்கின்றது.

தனது ஊடக அறிக்கையில், இராணுவத் தளபதி சில்வா, “தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும், ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள்" என்று வஞ்சத்தனமாக அறிவித்தார். சோ.ச.க. வழங்கிய விரிவான ஆதாரங்களை ஒப்புக் கொள்ள சில்வா மறுத்ததும், தமிழ் அரசியல்வாதிகள் “பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்ற அவரது கோரிக்கையும் வடக்கில் உள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் எதிரான ஒரு மறைமுக அச்சுறுத்தலாகும்.

கொவிட் -19 தொற்றுநோயால் மேலும் ஆழமடைந்த பொருளாதார நெருக்கடியையும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் அதிகரித்து வரும் அரசாங்க-விரோத உணர்வையும் எதிர்கொள்ளும் இராஜபக்ஷ ஆட்சி, ஜனாதிபதி சர்வாதிகாரத்தின் மூலம் தனது அதிகாரத்தை பலப்படுத்த முயற்சிக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கில் மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதாக கூறிக்கொண்டு, இந்த பிராந்தியங்களில் உள்ள கட்சிகளின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் தாக்குகிறது.

வடக்கு மற்றும் கிழக்கின் தற்போதைய இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக முன்னெடுத்துவரும் சமரசமற்ற போராட்டத்தினாலும், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்கான போராட்டத்தில் இன பாகுபாடின்றி அனைத்து தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதற்கு கட்சி முன்னெடுத்து வரும் கொள்கை ரீதியான போராட்டத்தின் காரணமாகவுமே சோ.ச.க. இராணுவத்தால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து உழைக்கும் மக்களினதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, இராணுவ தொந்தரவுகளுக்கு எதிரான சோ.ச.க.வின் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

உங்கள் கண்டன கடிதங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைப்பதோடு, பிரதிகளை தேர்தல் ஆணையாளருக்கும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் அனுப்பி வையுங்கள்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

மின்னஞ்சல்: secdefence@defence.lk

தொலைநகல்: +94 11 2541529

தேர்தல் ஆணைக்குழு தலைவர்

மின்னஞ்சல்: chairman@elections.gov.lk

தொலைநகல்: +94 11 2868426

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை)

மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk

தொலைநகல்: +94 11 2869239

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கண்டனக் கடிதங்களை கீழே வெளியிடுகிறோம்:

SP: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளி

உண்மையான சோசலிசத்திற்காக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை சோ.ச.க. முன்னெடுக்கும் கொள்கை ரீதியான போராட்டத்தை ஆதரித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளி நான்.

சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட தேர்தல் கட்சியாக இருக்கும் சோ.ச.க. உறுப்பினர்களின் மீதான உங்கள் ராணுவ சிப்பாய்களின் தொந்தரவுகள் மற்றும் மிரட்டல்களை நிறுத்துவதோடு தோழர் டயஸ் உங்களுக்கு அனுப்பிய முதல் கடிதத்தில் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று நான் கோருகிறேன். ஜனநாயக தேர்தல்களில் தலையிடுவதற்கு இராணுவத்திற்கு அதிகாரமில்லை.

இந்த பிரச்சாரம் உலகம் முழுவதும் பரவலாக முன்னெடுக்கப்படுகிறது. கை வைக்காதே!!

LM: அமெரிக்கா

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் திரு. ராசேந்திரம் சுதர்சன், திரு. பரமு திருஞானசம்பந்தர் மற்றும் திரு. ராஜரத்தினம் ராஜவேல் மற்றும் ஏனைய சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மீதான இலங்கை இராணுவ உளவுத்துறையின் தொந்தரவுகள் மற்றும் அச்சுறுத்தலை எதிர்த்து நான் இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன்.

இலங்கை தேர்தல்களில் பங்கேற்கவும், சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்திற்கும், இலங்கையில் உள்ள ஏழைகளுக்கும் சர்வதேச சோசலிசத்தை பரிந்துரைப்பதற்குமான ஜனநாயக உரிமை சோ.ச.க.வுக்கு உண்டு.

சோ.ச.க.வின் ஜனநாயக உரிமைகளை இராணுவம் அப்பட்டமாக மீறுவதானது கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும். சோ.ச.க. வேட்பாளர்களின் மீதான தொந்தரவுகளை நான் கண்டிப்பதுடன், இலங்கையிலும் உலகெங்கிலும் அதை நிறுத்தக் கோருபவர்களுடன் நானும் இனைந்துகொள்கிறேன்.

RP: இலங்கை

அண்மையில் வடக்கு மாகாணத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் மூன்று சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் எந்தவொரு சரியான அடிப்படையுமின்றி இராணுவத்தின் உளவுத்துறையைச் சேர்ந்த ராணுவ சிப்பாய்களால் விசாரிக்கப்பட்டுள்ளனர். இது பிரஜைகளின் சுதந்திரத்திற்கு எதிரான ஒரு கொடூரமான செயலும் தங்களது பாதுகாப்பிற்காக மக்கள் கொண்டிருக்க வேண்டிய மனித உரிமைகளை மீறுவதுமாகும்.

நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் கொழும்பு, நுவரெலியா, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகின்றது.

இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும் பதவியில் இருந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட சமூக அநீதிகளுக்கு எதிராக வெடித்த மக்களின் இயக்கங்களை நசுக்குவதற்கு இந்த வகையான ஜனநாயக விரோத மற்றும் ஆத்திரமூட்டும் துன்புறுத்தல்களையும் ஏனைய தூண்டுதல்களையும் நாங்கள் அனுபவித்திருக்கிறோம்….

இந்த வழிமுறைகள் மூலம் பிரஜைகளை அச்சுறுத்துவது ஒரு மோசமான முடிவைத் தரும் அதே வேளை, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதன் பிரித்து ஆளும் மூலோபாயத்தை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் இதை செய்ய விரும்புகிறது என்று நாங்கள் உணர்கிறோம். ஒரு சர்வாதிகாரத்திற்கான பாதையைத் துப்புரவு செய்துகொண்டிருக்கும் ஆளும் வர்க்கம், வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு எங்களை அச்சுறுத்துகிறது. இந்த நாட்டின் தொழிலாள வர்க்கம் இது குறித்து சரியான கவனம் செலுத்துவதோடு, அது கொடூராமன ஆபத்தை எதிர்கொள்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

MM: ஐக்கிய இராச்சியம்

நடைபெறவிருக்கும் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களான ராசேந்திரம் சுதர்சன், பரமு திருஞான சம்பந்தர் மற்றும் ராஜரத்தினம் ராஜவேல் ஆகியோரின் துன்புறுத்தலுக்கு எதிராக, எனது கண்டனத்தைப் பதிவு செய்ய நான் இங்கிலாந்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து எழுதுகிறேன்.

உளவுத்துறை அதிகாரிகள் வந்து அவர்களை விசாரித்து ஒளிப்படம் எடுப்பதற்கும் முயற்சித்தமை அவர்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதாகும். தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை, இனவாத/வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒன்றிணைப்பதற்கான நீண்டகால போராட்ட வரலாற்றைக் கொண்ட அவர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் மிரட்டுவதற்கும் மௌனமாக்குவதற்குமான ஒரு முயற்சியே இது.

சோசலிச சமத்துவக் கட்சி என்பது உலக சோசலிசத்திற்கான சர்வதேச போராட்டத்தில் அதனது வகிபாகத்திற்காக இலங்கையிலும் உலகெங்கிலும் நன்கு மதிக்கப்படும் கட்சியாகும். இதன் விளைவாக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தொழிலாள வர்க்கம் இலங்கையில் நிகழ்வுகளை நெருக்கமாக அவதானித்து வருகின்றது.

ஆகவே, குறிப்பாக 2007 இல் இரண்டு சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் காணாமல் போனமை, ஒருபோதும் தீர்க்கப்படாத குற்றமாகும். அதைத் தொடர்ந்து, சுதர்சன், பரமு திருஞானசம்பந்தர், ராஜவேல் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன் என்று கூறும்போது, நான் எனக்காக மட்டும் பேசிக்கொள்ளவில்லை. இப்போது மட்டுமல்ல. சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் இதற்கு முன்னரும் இராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த துன்புறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

KK: இலங்கையின் சாமிமலையில், கிளனூஜி தோட்டத் தொழிலாளர் வழிநடத்தல் குழு

வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களான பரமு திஞானசம்பந்தர், ராசேந்திரம் சுதர்சன், ராஜரத்தினம் ராஜவேல் ஆகியோரின் வீடுகளுக்கு இரண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வந்து அவர்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப விவரங்களைக் கேட்டுள்ளனர். இவை ஜனநாயக விரோத சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகும். இதை நாங்கள் கடுமையாக கண்டிப்பதோடு, உடனடியாக இந்த துன்புறுத்தலை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக இனம் மற்றும் மதம் ஆகியவற்றிற்கு அப்பால் தொடர்ந்து போராடுகின்றி ஒரு உலகக் கட்சியின் பகுதியாகும். சோ.ச.க. மீதான தாக்குதலை தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிரான தாக்குதலாக நாங்கள் கருதுகிறோம்.

FJ: ஐக்கிய இராச்சியத்தில் ஒரு விஞ்ஞானி

வரவிருக்கும் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை மிரட்ட உங்கள் இலங்கை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிக்கு எனது கோபத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். நான் பிரிட்டனில் ஒரு விஞ்ஞானி ஆவேன். இலங்கையில் உள்ள தொழிலாளர்களை, அத்துடன் சர்வதேச அளவில் அவர்களது சக தொழிலாளர்களையும் இன மற்றும் மதப் பிளவுகளுக்கு எதிராக ஒன்றிணைப்பதில் இந்த மதிப்புமிக்க தோழர்கள் ஆற்றும் பணி காரணமாக, உலகம் முழுவதும் அவர்கள் மரியாதை மற்றும் ஆதரவைப் பெற்றுள்ளனர் என்பதை உங்களுக்குச் சொல்ல முடியும்.

ஒரு ஜனநாயகத்தில், தனிப்பட்ட தகவல்களைக் கோருவதும், மறைமுகமாக அச்சுறுத்தல்களை விடுப்பதும் ஒருபுறம் இருக்க. எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தலுக்காக நிற்கும் வேட்பாளர்களை விசாரிக்க இராணுவத்திற்கு உரிமை இல்லை. சோ.ச.க.வின் தோழர்கள் அனுபவித்த துன்புறுத்தலானது, இராணுவமும் அது சேவையாற்றும் வர்க்க நலன்களும், ஒரு ஐக்கியப்பட்ட மற்றும் சுயாதீனமான தொழிலாள வர்க்கம் பயன்படுத்தக்கூடிய சக்தியைக் கண்டு அச்சமடைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது.

தேர்தலில் இராணுவத்தின் தலையீடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்தவும், அவர்களது நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சிக்காக முன்நிற்கவும் அனுமதிக்கப்பட வேண்டும்.

SK: சவூதி அரேபியாவிலிருந்து புலம்பெயர் இலங்கை தொழிலாளி

கடந்த சில வாரங்களில், இராணுவத்தைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) மூன்று முன்னணி உறுப்பினர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக உலக சோசலிச வலைத்தளத்தின் மூலம் நான் அறிந்து கொண்டேன்.

திரு. சம்பந்தர், திரு. சுதர்சன், திரு. ராஜவேல் ஆகியோரே விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று சோ.ச.க. உறுப்பினர்கள் ஆவர். இந்த தோழர்கள் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை இனப் பிரிவினைக்கு எதிரானக ஐக்கியப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், சோ.ச.க.வின் முன்னோக்குகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காகப் போராடுகின்றனர் என்பதையும் நாம் அறிவோம். இராணுவத்தின் நடவடிக்கைகள் வடக்கில் வாழும் சோ.ச.க தோழர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும், சட்டப்பூர்வமான அரசியல் கட்சியான சோ.ச.க.வின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் நாங்கள் கருதுகிறோம்.

சோ.ச.க.வுக்கு எதிராக இராணுவத்தால் தொடங்கப்பட்ட துன்புறுத்தல்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன், இதுபோன்ற துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோருகிறேன்.

Loading