“ஒவ்வொரு அடுக்கு படுக்கையையும் நான்கு தொழிலாளர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்”

பெமெக்ஸ் (PEMEX) நிறுவனத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மெக்சிகன் எண்ணெய் தொழிலாளர்கள் கோவிட்-19 நோய்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மெக்சிகன் நாட்டிற்குச் சொந்தமான பெமெக்ஸ் (PEMEX) எண்ணெய் நிறுவனம், உலகின் எந்தவொரு நிறுவனத்தைக் காட்டிலும் மிகஅதிக கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. சமீபத்திய உத்தியோகபூர்வ எண்ணிக்கையின்படி, அந்நிறுவனத்தில் 202 பணியிலுள்ள தொழிலாளர்களும், 5 ஒப்பந்தக்காரர்களும் வைரஸ் நோய்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

நியூ யோர்க்கில் உள்ள பெருநகர போக்குவரத்து ஆணையத்தில் (Metropolitan Transport Authority) மட்டும் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 131 ஐ நெருங்குகிறது, அதேவேளை பெமெக்ஸ் நிறுவனத்தைப் போல நான்கு மடங்கிற்கு கூடுதலாக தொழிலாளர்களைக் கொண்ட ஒட்டுமொத்த அமெரிக்க இறைச்சி மற்றும் கோழிப் பண்ணைத் தொழிலில் 132 இறப்புக்களே பதிவாகியுள்ளன என்று Blookberg News உறுதிப்படுத்தியது.

பெமெக்ஸ், தனது 125,745 பணியிலுள்ள ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு என மருத்துவமனைகளின் சொந்த வலையமைப்பை நிர்வகிக்கிறது, இது மொத்தம் 750,000 பேரை உள்ளடக்கியது. இது பெமெக்ஸூம் கூட, கோவிட்-19 நோய்தொற்றினால் 234 குடும்ப உறுப்பினர்களும் மற்றும் 310 ஓய்வு பெற்றவர்களும் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கும் நிலைக்கு இட்டுச்சென்றது.

கடந்த ஆண்டு சனிக்கிழமை மெக்சிக்கோவின் ஹிடல்கோ மாநிலத்தின் த்லாஹூயுலில்பானில் எண்ணெய் குழாய் வெடித்த பகுதியில் பெமெக்ஸ் தொழிலாளர்கள் (AP Photo/Claudio Cruz)

மோசமான நோய்தொற்று பரவலுக்கு மத்தியில், உலகெங்கிலுமான அனைத்து அரசாங்கங்களும் இரக்கமற்ற வகையில் “மீண்டும் வேலைக்குத் திரும்பும்” உத்தரவுகளை திணிக்கின்ற நிலையில், பெமெக்ஸின் தரவு, பணியிடங்களில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளால் தொழிலாள வர்க்க குடும்பங்களிடையே ஏற்பட்டுள்ள அதிகபட்ச இறப்பு எண்ணிக்கைக்கான மோசமான ஆதாரங்களை வழங்குகிறது.

என்றாலும், இந்த எண்ணிக்கைகள் இன்னமும் பெரிதும் குறைத்து மதிப்பிடப்பட்டவையே. இந்நிறுவனம் 7,192 பேருக்கு அல்லது அதன் ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களில் 1 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கோவிட்-19 பரிசோதனை செய்துள்ளது. இதில் அண்ணளவாக 60 சதவிகிதம் பேருக்கு, அல்லது 4,204 பேருக்கு நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, என்றாலும் பெமெக்ஸால் சுவாச பிரச்சினை அறிகுறிகள் கண்டறியப்பட்ட 7,000 க்கும் மேற்பட்டவர்கள் ஒருபோதும் பரிசோதிக்கப்படவில்லை.

மேலும், ஒட்டுமொத்த நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் கூடுதலாக மருத்துவ ஊழியர்கள் மத்தியில் ஏற்படுவதாக தேசியளவிலான தரவுகள் தெரிவிக்கின்ற போதிலும், பெமெக்ஸ் மருத்துவ ஊழியர்கள் பற்றிய நிலை கோவிட்-19 தரவிற்குள் உட்படுத்தப்படவில்லை. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காததை எதிர்த்து மெக்சிக்கோ முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் போராடிய ஆயிரக்கணக்கான மருத்துவ ஊழியர்களில் பெமெக்ஸ் செவிலியர்களும் அடங்குவர்.

அதே நேரத்தில், மருத்துவ நிலைப்பாட்டில் இருந்து, பெமெக்ஸ் வழங்கிய தரவு கிட்டத்தட்ட பயனற்றது, ஏனென்றால் கோவிட்-19 நோயாளிகளின் பணியிடங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ விபரங்களை இது உள்ளடக்கவில்லை.

வளர்ந்து வரும் சீற்றத்திற்கு பதிலிறுக்கும் விதமாக, பெருநிறுவனம் தனது சமீபத்திய செய்தி அறிக்கையில், “கோவிட்-19 க்கு எதிரான அதன் ஒருங்கிணைந்த தடுப்பு உத்தி தொழிலாளர்கள் மத்தியில் நோய்தொற்று பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது” என்று கூறியது.

தென்கிழக்கு சியுடாட் டெல் கார்மென் (Ciudad del Carmen), காம்பீச் (Campeche) நகரங்களிலிருந்து மூத்த பெமெக்ஸ் பொறியாளர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திடம், 7 இறப்புக்கள் உட்பட, கடல் எண்ணெய் கப்பல்களில் முதன்முதலில் 84 தொழிலாளர்களிடையே நோய்தொற்று வெடிப்பு ஏற்பட்டது ஏப்ரல் 13 அன்று பதிவானது முதல் தினசரி கோவிட்-19 அறிக்கைகளை வழங்கும்படி நிறுவனம் கட்டாயப்படுத்தப்பட்டது என்று தெரிவித்தார். வைரஸ் பரவுவதை “கட்டுப்படுத்துவதற்கு” மாறாக, தீவிரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் வாதிட்டார்.

மேலும் அவர், “மெக்சிகன் குடியரசின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் [எண்ணெய் கப்பலில்] ஒவ்வொரு மாற்றுப் பணி நேரமும் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், சுகாதார கட்டுப்பாடுகள் எதுவும் அங்கு பராமரிக்கப்படவில்லை, அவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தாலும் வேலைக்குச் செல்லும்படி நடைமுறையில் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்” என்று விவரித்தார்.

“அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில்லை என்பதுடன், தூங்குவதற்கு ஒவ்வொரு அடுக்கு படுக்கையையும் நான்கு தொழிலாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். சில நேரங்களில், ஒரு தொழிலாளி வேலைக்குச் சென்றிருக்கையில் மற்றொரு தொழிலாளி படுக்கையை பயன்படுத்தும் வகையில், அவர்கள் ‘அவசர படுக்கைகளை,’ தயார் செய்கிறார்கள். பெரும்பாலான நோய்தொற்றுக்கள் அடுக்கு படுக்கைகள் மூலமாக பரவுகின்றன. இந்நிலையில், தொழிலாளர்கள் தங்களது மாற்றுப்பணியில் இருந்து விடுபடும் சமயம், தங்களது சொந்த ஊருக்குத் திரும்புகையில் அங்கும் வைரஸை பரப்புகிறார்கள்.”

நாள்பட்ட மருத்துவ நிலைமைகளைக் கொண்ட தொழிலாளர்கள், நோய்தொற்று பரவும் நேரத்தில் தாம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவது குறித்து பெமெக்ஸையும் மற்றும் STPRM தொழிற்சங்கத்தையும் கண்டிக்குமாறு இந்த விவகாரத்தை சமூக ஊடகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். என்றாலும், “நல்லது, அவர்கள் உங்களது ஊதியத்தை பறிப்பதாக அச்சுறுத்தினால், உங்களால் எப்படி அதை மறுக்க முடியும்” என்று ஒருவர் எழுதினார்.

சமூக ஊடகங்களைச் சேர்ந்த மற்றவர்கள், எண்ணெய் கப்பல்கள், கப்பல்கள் மற்றும் சேமிப்பு வசதிகளில் நிலவும் கடுமையான நெருக்கடி நிலைமைகள் குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெமெக்ஸ் தொழிலாளி ஒருவர், ட்ரக் ஓட்டுநர்கள் பலர் எண்ணெய் நிலையங்களில் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பதால் அவர்களுக்கு கொரொனா வைரஸ் நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் Indigo வுக்கு தெரிவித்தார். மேலும் மற்றொருவர், “தற்போதிருப்பதைப் போல அவர்கள் எங்களை இந்தளவிற்கு ஒருபோதும் ஆபத்தில் ஆழ்த்தியதில்லை, என்றாலும் இந்த நற்பண்பாளர்கள் அவர்களது சிக்கன நடவடிக்கைகளுடன் வந்து சேர்ந்ததால், எங்களது தோழர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அதுதான் என்னை கோபப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

காம்பீச்சில் உள்ள தொழிலாளி ஒருவர், நோய்தொற்று பாதிப்புள்ள தொழிலாளர்கள் சிலரைப் பற்றி தனக்கு தெரியும் என்றும், “விதவைகளுக்கு மற்றும்/அல்லது குடும்பத்தினருக்கு இழப்பீடு எதுவும் கிடைக்கவில்லை. மேலும், அவர்களின் பிரேத பரிசோதனை [காப்பீட்டை] செலுத்த தொழிற்சங்கம் விரும்பவில்லை. அவர்கள் காப்பீட்டை செலுத்த வழமையாக பல மாதங்கள், வருடங்கள் தாமதப்படுத்துகிறார்கள், மேலும் சில நேரங்களில் ஒருபோதும் பணம் செலுத்துவதில்லை” என்றும் விளக்கினார்.

மேலும், ஓய்வு பெற்றவர்களிடையே நிலவும் அதிக இறப்பு எண்ணிக்கை குறித்து, “அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புக்கள் இருப்பதால் பாதிக்கப்படக்கூடியவர்களாக அவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு முறையான தடுப்பு சிகிச்சை வழங்கப்படவில்லை. சில பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற சக ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்படவில்லை, எனவே அவர்கள் பிற மருத்துவமனைகளில் தங்களது சொந்த செலவில் சிகிச்சையை பெறுகிறார்கள் என்ற நிலையில் பின்னர் இறந்துவிடுகின்றனர். ஏனென்றால் அந்த மருத்துவமனைகள் முழுமையாக இயங்கவில்லை என்பதுடன், பல ஆண்டுகளாகவே அங்கு மருந்துகளும் மருத்துவ நிபுணர்களும் கிடையாது” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.

மேலும் அவர், “தொழிற்சங்கத் தலைவர்கள் தாங்கள் வராததால் பொலிவுடன் இருக்கின்றனர். அவர்கள் தங்களது பண்ணை வீடுகளிலோ அல்லது கடற்கரை வீடுகளிலோ அடைந்து கிடக்கின்றனர். அவர்கள் உறுப்பினர்களுக்கு தங்களது முகத்தை கூட காட்டுவதில்லை அல்லது ஆதரவளிப்பதில்லை. இதற்கிடையில், பெமெக்ஸ் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசாங்கம் எந்தவித சிறப்பு கவனமும் செலுத்தவில்லை” என்று கூறி நிறைவு செய்தார்

ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடோரின் (AMLO என்றழைக்கப்படுபவர்) அரசாங்கமும் புதன்கிழமை அன்று பெமெக்ஸின் இயக்குநரான ஓக்டேவியோ ரோமெரோ ஒரோபீஸாவுடன் (Octavio Romero Oropeza) ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி விமர்சனங்களை பரப்ப முயன்றது. guachicoleros என்ற எண்ணெய் திருடும் குழுக்களை எதிர்ப்பது குறித்தும் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் ரோமெரோவை அவர் பாராட்டினார், அதேவேளை கோவிட்-19 விளைவால் ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான இறப்புக்கள் குறித்த அறிக்கைகளை அவர் முற்றிலும் புறக்கணித்தார்.

நோய்தொற்று நெருக்கடியின் காரணமாக எண்ணெய் நுகர்விலும் விலைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டாலும், “தேசியளவிலான அபிவிருத்தி” மற்றும் “தன்னிறைவை” பெறுவதற்கு, பெமெக்ஸின் உற்பத்தி, மேலும் குறிப்பாக அதன் சுத்திகரிப்புத் திறன், வெளிநாட்டு மூலதனம் மற்றும் இறக்குமதிகளை சார்ந்திருப்பதன் மூலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விவாதித்தார்.

உண்மை என்னவென்றால், El Pais தினசரியிதழ் சமீபத்தில் விவரித்தபடி, “மெக்சிகன் எண்ணெய் நிறுவனம் தனது மிக உயர்ந்தபட்ச தனியார் கடன்களை வழங்கியதால்,” “சர்வதேச கடன் நிறுவனங்களின் அனுமதியைப் பெற்று நடைமுறையில் இது இயக்கப்படுகிறது… இது முதலீட்டாளர்களை தங்களது இலாபத்தை பெருக்க அனுமதிக்கிறது.”

மேலும், மெக்சிகன் ஆளும் வர்க்கம், எண்ணெய் துறையை மேலும் தனியார்மயமாக்குவதற்கும், பெமெக்ஸிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தனியார் முதலீட்டாளர்களுக்கு பாய்ச்சுவதற்கும் நோய்தொற்றை சுரண்டுவதற்கு முற்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, AMLO நிர்வாகமும் மொரேனா (Morena) கட்சியும் ஏற்கனவே சிக்கன நடவடிக்கைகளை இரட்டிப்பாக்கியுள்ளன, இது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான நிலைமைகளை வழங்க எந்தவித வாய்ப்பையும் வழங்கவில்லை.

ஏப்ரல் மத்தியில் நடந்த ஒரு மாநாட்டின் போது, முன்னணி எண்ணெய் உற்பத்தி செய்யும் மாநிலமான தபாஸ்கோவில் (Tabasco) மொரேனா அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்திக்கான துணைச் செயலரான ஜோஸ் ஃபிரீட்ரிச் (Jose Friedrich), “மெக்சிக்கோ பாதிக்கப்படக்கூடிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து உறுதியாக வெளிவருவதற்கு… இந்த முதலீடுகளை தூண்டுவதற்கு தனியார் நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள், கூட்டணிகள், ஒப்பந்தங்கள், கூட்டு பங்காண்மைகளை நாம் ஏற்படுத்திக் கொள்வது அவசியமானால், சரியான நேரத்தில் நாம் அவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். இது மிகுந்த மூலோபாய பிரச்சினையாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்” என்று அமெரிக்க முதலீட்டாளர்களிடம் தெரிவித்தார்.

மெக்சிக்கோவின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தியை AMLO வெளிப்படையாக பாதுகாப்பது என்பது, கடந்த தசாப்தத்தில் AMLO இன் இடது நற்சான்றிதழ்களின் முக்கிய விடயமாக இருந்து வந்துள்ளது. அவர் தான் வழிநடத்திய புரட்சிகர ஜனநாயகக் கட்சியை (Revolutionary Democratic Part-PRD) விட்டு தான் விலக வேண்டும் என்று அவர் கூறுகிறார், ஏனென்றால் இது மெக்சிக்கோவுக்கான 2012 ஒப்பந்தத்தை ஆதரிக்கத் திட்டமிட்டிருந்தது, அதாவது இந்த ஒப்பந்தம் எண்ணெய் தொழில்துறையை திறம்பட தனியார்மயமாக்குவதை மையமாகக் கொண்ட பிற்போக்குத்தனமான கொள்கைகளின் ஒரு தொகுப்பாகும். இந்த தனியார்மயமாக்கலின் விளைவாக எரிபொருள் விலைகள் கடுமையாக அதிகரித்தமையால் 2017 இல் மெக்சிக்கோ முழுவதிலுமாக பரந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது, இதை தொழிற்சங்கங்களும் மற்றும் AMLO இன் மொரேனா கட்சியும் AMLO இன் 2018 தேர்தலின் பின்னால் திருப்பிவிட்டது.

தற்போது கூட, AMLO தனது முன்னோடிகளின் செலவுக் குறைப்பு மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளை தொடர்கின்ற நிலையில், மெக்சிக்கோவின் எண்ணெய் துறையிலிருந்து இலாபமீட்டும் நிதிய ஊக வணிகர்களின் உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களும் பெமெக்ஸில் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், பெமெக்ஸ் மற்றும் மெக்சிக்கோ முழுவதிலுமுள்ள அனைத்து தொழிலாளர்களும், நோய்தொற்றுக்கு பதிலிறுக்கும் பொறுப்பை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதன் மூலமாகவும், மற்றும் அனைத்து முதலாளித்துவ சார்பு மற்றும் தேசியவாத தொழிற்சங்கங்களையும் மற்றும் மொரேனா உள்ளிட்ட கட்சிகளையும் எதிர்ப்பதனாலும் மட்டுமே, வோல் ஸ்ட்ரீட் மற்றும் அதன் மெக்சிகன் கூட்டாளர்களின் நலன்களுக்கு தங்களது பாதுகாப்பும் வாழ்க்கையும் அடிபணிய வைக்கப்படுவதை எதிர்கொள்ள முடியும்.

இதன் அர்த்தம் என்னவென்றால், தொழிலாளர்களது உயிர்களையும் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க ஒவ்வொரு பணியிடத்திலும் மற்றும் அருகாமை பகுதிகளிலும் சாமானிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்களை (rank-and-file safety committees) அமைப்பதாகும். இந்த முயற்சிகள், மிக்சிகன் மற்றும் ஒஹியோவில் உள்ள ஃபியட் கிறைஸ்லர் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட சாமானிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்கள் உட்பட, உடனடியாக சர்வதேச அளவிலான தொழிலாளர்களுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

Loading