முன்னோக்கு

வைரஸ் ஆராய்ச்சிகளை இணையவழியில் ரஷ்யா திருடுவதாக இட்டுக்கட்டப்பட்ட வாதங்களை அமெரிக்கா முன்நகர்த்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளாவிய கோவிட்-19 பேரழிவு, அனைத்து பிரதான முதலாளித்துவ நாடுகளினது வேலைக்குத் திரும்ப செய்வதற்கான ஆட்கொலை முனைவால் எரியூட்டப்பட்டு, ஒவ்வொரு மணிநேரமும் மோசமடைந்து வருகிறது. தொற்று விகிதம் அதிகரித்து, வேகமாக 14 மில்லியனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை விரைவிலேயே 600,000 ஐ எட்டும். இந்த தொற்றுநோயின் குவிமையமான அமெரிக்காவில், நோய்தொற்றுகள் அண்மித்து நாளாந்த அடிப்படையில் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன, மரணங்களும் கூர்மையாக அதிகரித்து வருகின்றன, பரிசோதனை முறிந்து போயுள்ளதுடன், பல பிராந்தியங்களில் மருத்துவமனைகள் கொள்ளளவை மீறி உள்ளன.

ஆனால் நியூ யோர்க் டைம்ஸோ வெள்ளிக்கிழமை அதன் முதல் பக்கத்தில், கொரோனா வைரஸ் தடுப்பூசி சம்பந்தமான அமெரிக்க, பிரிட்டன் மற்றும் கனேடிய ஆராய்ச்சியை "திருட திட்டமிடுவதாக" ரஷ்ய உளவுத்துறையைக் குற்றஞ்சாட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டது. கோவிட்-19 தடுப்பூசி மீதான முன்னேற்றங்களில் சம்பந்தபட்டுள்ள மேற்கத்திய நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் அரசு முகமைகளின் கணினி அமைப்புமுறையை, அவர்கள் APT29 என்று குறிப்பிடும் ஒரு நிழலுலக நிறுவனம் ஊடுருவ முற்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அந்த மூன்று நாடுகளின் உளவுத்துறை முகமைகளும் கூட்டாக வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை நியூ யோர்க் டைம்ஸின் கட்டுரை விமர்சனமின்றி அறிவிக்கிறது.

“தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் ஒரு சர்வதேச ஆயுத போட்டியாக மாறியுள்ளன,” என்று குறிப்பிட்டு, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலும் அதேபோன்று விமர்சனமின்றி அமெரிக்க-பிரிட்டிஷ்-கனேடிய வாதங்களையே ஊக்குவித்து வெள்ளிக்கிழமை அதன் பதிப்பை வெளியிட்டது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் செய்தியாளர்களுக்கு அறிவிக்கையில், “ரஷ்யாவுக்கும் இந்த முயற்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்றார்.

2016 அமெரிக்க தேர்தலில் மாஸ்கோவின் சூழ்ச்சியாக கூறப்பட்ட விடயம் மற்றும் அமெரிக்க துருப்புகளைக் கொல்ல தாலிபான்களுக்கு ரஷ்யா கைக்கூலி கொடுத்தது மீதான மிக சமீபத்திய நியூ யோர்க் டைம்ஸ் இட்டுக்கட்டல் உட்பட, முந்தைய ரஷ்ய-விரோத பூசிமொழுகல்கள் போலவே, இதற்கும் உளவுத்துறை முகமைகளோ, டைம்ஸோ அல்லது மிகப் பரந்தளவில் ஊடகங்களோ அந்த ஆரவாரமான வாதங்களுக்கு ஆதரவாக எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இருப்பினும் மீண்டுமொருமுறை பெருநிறுவன ஊடகங்களால், உளவுத்துறையின் அறிக்கைகளே சவாலுக்கிடமற்ற உண்மையாக உடனடியாக சித்தரிக்கப்பட்டன.

ரஷ்ய இணையவழி ஊடுருவல் என்று குற்றஞ்சாட்டப்படுவதன் மீது டைம்ஸின் முதல்பக்க கட்டுரை இவ்வாரம் ட்வீட்டர் தாக்குதலுக்கான அதன் விடையிறுப்புடன் முரண்படுகிறது. பராக் ஒபாமா, ஜோ பைடென் மற்றும் ஆப்பிள் உட்பட உலகின் மிகவும் உயர்மட்ட பிரமுகர்கள் மற்றும் நிறுவனங்கள் சிலர் அவர்களின் ட்வீட்டர் கணக்குகளை சமரசம் செய்துள்ளனர் என அறிவிப்பதன் மூலம், செய்தியின் மீது அந்த பத்திரிகை வேண்டுமென்றே சத்தமில்லாத தொனியில் பேசுகிறது.

பல்வேறு காரணங்களுக்காக, பயனர் கணக்குகளில் மோசடி செய்வதற்குத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இருக்கும் அதிகாரம் குறித்து அந்த ட்வீட்டர் தாக்குதல் எழுப்பும் அசௌகரியமான கேள்விகள் உட்பட, டைம்ஸ் இந்த பாரியளவிலான இணைய ஊடுருவல் மீது சிறிது விட்டுக்கொடுப்பை வழங்குகிறது, அதாவது குறிப்பிட்டு இலக்கு வைத்தோ குறிப்பிட்ட நேரத்திலோ நடத்தப்படவில்லை என்று கூறப்படும் மற்றொரு விடயத்தின் மீது மட்டுமே ஒருமுனைப்படுகிறது. ரஷ்யா இணையவழியில் ஊடுருவியதாக குற்றஞ்சாட்டும் அந்த கட்டுரை ட்வீட்டர் ஊடுருவல் குறித்து குறிப்பிடவே இல்லை, ஏனென்றால் அவ்வாறு செய்வது வெற்றிகரமாக இணைய தாக்குதலை நடத்துவதற்காக ஒரு தேசிய அரசைக் கணக்கில் கொண்டு வர முடியாது என்ற வெளிப்படையான தீர்மானத்திற்கு இட்டுச் செல்லும் என்பதால் ஆகும்.

டைம்ஸ், வழக்கம் போல, “Cozy Bear" என்று அழைக்கப்படும் இந்த குற்றஞ்சாட்டப்படும் APT29 இன் நடவடிக்கைகளை விவரிக்கையில் பெரும்பாலான இடங்களில் பெயர் குறிப்பிட விரும்பாத "அதிகாரிகளை" மேற்கோளிடுகிறது. அரசு அதிகாரிகள் "ஊடுருவலுக்கு ஆளானவர்களை அடையாளம் காண முடியாது,” என்றது குறிப்பிடுகிறது. ஊடுருவல் நடந்த தேதியோ அல்லது குறிப்பிட்ட சம்பவங்களோ வழங்கப்படவில்லை. ஆனால் அந்த பத்திரிகை பிரிட்டிஷ் உளவுத்துறை முகமையான GCHQ இன் முன்னாள் தலைவர் ரோபர்ட் ஹனிகனை மேற்கோளிடுகிறது, ஒரு தடுப்பூசி மீது கூட்டாக செயல்பட்டு வரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ்-சுவீடிஷ் நிறுவனமான AstraZeneca "வெளிப்படையான" பிரதான இலக்காக அவர் பெயரிடுகிறார்.

குற்றஞ்சாட்டப்படும் இணைய ஊடுருவல்காரர்களால் உண்மையில் தகவல்கள் திருடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும், எந்த தகவலும் விட்டுக்கொடுக்கப்படவில்லை என்பதையும் அமெரிக்க ஊடக செய்திகள் ஒப்புக் கொள்கின்றன. ஊடுருவல்காரர்கள் தடுப்பூசி உற்பத்தியைத் தொந்தரவுக்கு உள்ளாக்க முனையவில்லை என்று ஹனிகன் கூறியதாக டைம்ஸ் அவரை மேற்கோளிடுகிறது.

வியாழக்கிழமை அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை வெளியிட்ட ஒரு வழிகாட்டி நெறிமுறை (“APT29 கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தியை இலக்கு வைக்கிறது") என்பது இன்னும் மேலோட்டமாக உள்ளது. வெறும் மூன்றரை பக்க வரிகளில், அது எந்த ஆதாரமும் வழங்காமல் அறிவிக்கையில், APT29 “ஏறத்தாழ நிச்சயமாக" ரஷ்ய உளவுத்துறையின் பாகமாக உள்ளது. பின்னர் அது வாதிடுகையில், அக்குழு "2020 நெடுகிலும்" அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவில் தடுப்பூசி உருவாக்குவதில் சம்பந்தப்பட்ட அமைப்புகளை இலக்கு வைத்துள்ளதாகவும், இலக்கு வைக்கப்பட்ட கணினி அமைப்புகளில் "உள்நுழைவு செய்ய" இரகசிய மென்நிரல்களைப் பயன்படுத்த முயல்வதாகவும் குறிப்பிடுகிறது. ஆனால் அவ்வாறு செய்வதில் அது வெற்றி அடைந்ததா என்பதைக் குறித்து அது வாய்திறக்கவில்லை.

தடுப்பூசி ஆராய்ச்சி மீதான ஊடுருவல் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் ரஷ்யாவுடன் நின்றுவிடவில்லை. கடந்த வாரம் FBI இயக்குனர் கிறிஸ்தோபர் வேரே குறிப்பிடுகையில், சீனா கோவிட்-19 ஆராய்ச்சி செய்யும் "அமெரிக்க மருத்துவத்துறை அமைப்புகளைப் பலவீனப்படுத்த செயல்பட்டு" வருவதாக தெரிவித்தார், இந்த குற்றச்சாட்டு வியாழக்கிழமை மிச்சிகனில் பேசிய அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் ஆல் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான இத்தகைய இட்டுக்கட்டப்பட்ட ஜோடிப்புகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?

கொரொனா வைரஸிற்கான ஒரு தடுப்பூசி மீது முதலில் காப்புரிமை பெறுவதற்காக போட்டியிட்டு வரும் பெருநிறுவனங்களுக்கும் தேசங்களுக்கும் இடையிலான ஒரு வெறிப்பிடித்த உலகளாவிய போராட்டம் நிலவுகிறது. பெருநிறுவன தலைமை செயலதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் வங்கியாளர்களுக்குப் பில்லியன் கணக்கிலான டாலர்களும், தடுப்பூசி சூதாட்டத்தில் ஜெயிக்கும் நாட்டுக்குக் கிடைக்கும் ஓர் அளப்பரிய புவிசார் அரசியல் ஆதாயமும் இதில் பணயத்தில் உள்ளன.

“தடுப்பூசி தேசியவாதம்" என்றழைக்கப்படும் மே 27 கட்டுரையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியது:

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வரவிருக்கும் கொரொனா வைரஸ் தடுப்பூசிகள் மீது ஏற்றுமதிகளைத் தடுக்கவும் மற்றும் வெவ்வேறு கண்டங்களில் உற்பத்தி பரவுவதைத் தடுக்கவும் வரிந்து கட்டி கொண்டிருக்கின்றன, மிகப் பெரியளவில் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை வழங்கக்கூடிய ஒரு விஞ்ஞானபூர்வ கண்டுபிடிப்புக்கான வினியோகங்களை பாதுகாக்க மிகப்பெரியளவில் பணயத்தில் உள்ள புவிசார்அரசியல் வேட்கையின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளன...

ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியானது, தேவையான அளவுக்கு அதை உற்பத்தி செய்யக்கூடிய முதல் நாட்டுக்கு ஒரு சிறப்புமிக்க வெகுமதியாக இருக்கும், மனித நாகரீகத்தின் வெற்றியான அது நிலவில் இறங்கியதுடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கும். அது மற்ற நாடுகளை விட பல மாதங்களுக்கு முன்னரே அதன் பொருளாதாரத்தை மீளமைத்து வெற்றியாளராக ஆக அனுமதிக்கும், பின்னர் அதன் மருத்துவ உற்பத்தியைப் பொறுத்து உலகளாவிய மீட்சியை மையப்படுத்தி அடுத்து எந்த கூட்டாளிகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென அதை தேர்ந்தெடுக்க அனுமதிக்கும்.

தடுப்பூசியை உயிர்களைப் பாதுகாப்பதற்கான கருவியாக அல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மையநலன்களுக்கு குறுக்கில் நிற்கும் நாடுகளுக்கு எதிராக ஓர் ஆயுதமாக பயன்படுத்தவும் மற்றும் அமெரிக்க செல்வந்த தட்டுக்களைச் செழிப்பாக்கும் நோக்கிலும், அமெரிக்கா, மிகவும் பட்டவர்த்தனமாக ஒரு தேசியவாத போக்கைப் பின்பற்றி வருகிறது. பட்டியலின் முதலில், சீனாவும் ரஷ்யாவும் உள்ளன என்றாலும், ஈரான், வெனிசுவேலா, வட கொரியா, கியூபா மற்றும் ஏனைய நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன. இதை விட, அமெரிக்க ஆளும் உயரடுக்கு அதன் ஐரோப்பிய "கூட்டாளிகள்" அதுவும் குறிப்பாக ஜேர்மனிக்கு எதிராக மேலோங்கிய பலத்தைப் பெறுவதற்காக ஒரு தடுப்பூசியைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளது.

வாஷிங்டன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் முனைவுக்கு குறுக்கே நிற்பதாக கருதும் நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்காமல் நிறுத்தி வைக்கும் என்பதுடன், போர் மற்றும் ஆக்கிரமிப்புக்கான அதன் திட்டங்களுக்கு பின்னால் அணிதிரளும் நாடுகளுக்கு அந்த உயிர்காக்கும் மருந்தை வெகுமதியாக வழங்கக்கூடும்.

மே மாதம் Science ஆய்விதழ் எழுதுகையில், தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் "பெரும்பிரயத்தன வேகம்", “சர்வதேச கூட்டுறவை —சீனாவிடமிருந்து எந்தவொரு தடுப்பூசியும் வருவதை— தவிர்ப்பதை" அடிப்படையாக கொண்டிருப்பதுடன், “அமெரிக்கர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட" தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

அமெரிக்க ஆளும் வர்க்கம் தடுப்பூசி கண்டுபிடிப்பு போட்டியில் தோற்று வருகிறோமோ என்று அதிகரித்தளவில் கவலை கொண்டுள்ளது. 160க்கும் அதிகமான தடுப்பூசிகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாகவும், 23 தடுப்பூசிகள் மனிதர்களிம் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. ரஷ்யா 26 தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது, அவற்றில் இரண்டு மருத்துவ பரிசோதனை கட்டத்தில் உள்ளன. தடுப்பூசிகளாக இருக்கக்கூடிய எட்டு பல்வேறு கட்ட மனித பரிசோதனையில் வேறெந்த நாட்டையும் விட முக்கியமாக சீனாவில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சீன அரசு நிறுவனமான Sinopharm மற்றும் மற்றொரு சீன நிறுவனம் ஏற்கனவே அவை இறுதி கட்ட பரிசோதையில் நுழைந்திருப்பதாக அறிவித்துள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவின் ரஷ்ய-விரோத கூட்டு அறிக்கை வெளியிடப்பட்ட அதேநாளில், வியாழக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் பிரசுரித்த ஒரு கட்டுரை, சீனாவின் தடுப்பூசி திட்டம் எந்தளவுக்கு முன்னேறி உள்ளது என்பதை விவரிக்கிறது. முன்னதாக டைம்ஸ் சீனா குறித்து பிரசுரித்த ஒரு கட்டுரையில், “ஏதோவொரு விதத்தில், அது போட்டியில் முன்னே சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே நான்கு நிறுவனங்கள் அவற்றின் தடுப்பூசிகளை மனித உடலில் பரிசோதித்து வருகின்றன,” என்று குறிப்பிட்டது.

ரஷ்யா உள்நாட்டில் இந்தாண்டு பரிசோதனைக்குரிய 30 மில்லியன் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை உற்பத்தி செய்ய திட்டமிடுகிறது, மேற்கொண்டு 170 மில்லியன் வெளிநாடுகளில் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக ராய்டர்ஸ் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது. “தற்போதைய முடிவுகளின் அடிப்படையில் ரஷ்யாவில் ஆகஸ்டிலும் மற்ற சில நாடுகளில் செப்டம்பரிலும் ஒப்புதல் வழங்கப்படலாமென நம்புகிறேன்... இதுவே அனேகமாக உலகிலேயே ஒப்புதல் அளிக்கப்பட்ட முதல் தடுப்பூசியாக இருக்கக்கூடும்,” என்று ரஷ்யாவின் அரசு கருவூலத்துறை தலைவர் Kirill Dmitriev குறிப்பிட்டதாக ராய்டர்ஸ் அவரை மேற்கோளிட்டு தெரிவித்தது.

கோவிட்-19 தடுப்பூசிக்கான உலகளாவிய சந்தையில் ரஷ்யாவோ அல்லது சீனாவோ மேலாதிக்கம் செலுத்துவதை அமெரிக்க ஏகாதிபத்தியம் எந்தவொரு நிலைமையிலும் அனுமதிக்க தயாராக இல்லை. அது முன்கூட்டியே அவற்றின் முயற்சிகளைக் குற்றகரமாக்க முயன்று வருவதுடன், அனேகமாக அதுபோன்றவொரு தடுப்பூசியை அமெரிக்காவுக்குள்ளும், பிரிட்டன் மற்றும் கனடா போன்று சக்தி குறைந்த அதை சார்ந்துள்ள நாடுகளுக்குள்ளேயும் இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கும் இது முன்னறிவிப்பாக ஆகக்கூடும்.

கொரொனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பது சம்பந்தமாக, உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus கடந்த மாதம் செய்தியாளர்களுக்குக் கூறுகையில், “அங்கே, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே ஒரு பிளவு இருக்கக்கூடாது,” என்றார். ஆனால் உலகில் மேலாதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் வர்க்க நலன்களால் தீர்மானிக்கப்படும் உண்மையான நிலைமையோ துல்லியமாக இதற்கு எதிர்விதமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, கோவிட்-19 தடுப்பூசி மீதான கட்டுப்பாட்டை ஓர் ஆயுதமாக பயன்படுத்த முயன்று வருகிறது.

அமெரிக்க நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு மனித உயிர்களைக் குறித்து எந்த கவலையும் இல்லை. அது அமெரிக்க பெருநிறுவனங்களின் இலாபங்களையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தையும் குறித்து மட்டுமே கவலை கொண்டுள்ளன.

ஒரு பகுத்தறிவார்ந்த மனித சமூகத்தில், அனைத்திற்கும் மேலாக ஓர் உயிராபத்தான தொற்றுநோய்க்கு மத்தியில், ஓர் உயிர்காக்கும் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் இரகசியத்தைக் காக்கும் பிரச்சினை என்பது ஒருபோதும் முன்னுக்கு வராது. தனிப்பட்ட இலாபம் அல்லது தேசிய ஆதாயம் சம்பந்தப்பட்ட எல்லா கேள்விகளும், ஒவ்வொரு நாட்டின் வல்லுனர்களினது அறிவையும் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் புரட்சிகரமான வெற்றிகளையும் பயன்படுத்தி, அந்த வைரஸைக் கட்டுப்படுத்தவும் மற்றும் இறுதியில் இல்லாதொழிக்கவும், சரீரரீதியிலும் பொருளாதாரரீதியிலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவசியமான மருத்துவ சேவை மற்றும் சமூக உதவிகளை வழங்கவும், ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த முயற்சியைப் பின்தொடர்வதற்காகவே முற்றிலுமாக அடிபணியச் செய்யப்பட்டிருக்கும்.

ஆனால் இது முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் சாத்தியமில்லை. பெருநிறுவன பேராசைக்கும் புவிசார் அரசியல் மேலாதிக்கத்திற்கான முனைவிலும் அது அடிபணிந்திருப்பதன் விளைவாக ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கும் அதை கிடைக்குமாறு செய்வதற்குமான நெறிப்பிறழ்ந்த அருவருப்பூட்டும் முயற்சி முதலாளித்துவத்தின் திவால்நிலைமையை அம்பலப்படுத்துகிறது. பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் தனிச்சொத்து திரட்சி மற்றும் எதிர்விரோத தேசிய அரசுகளுக்குள் உலகம் பிளவுபட்டிருப்பது ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட ஓர் அமைப்புமுறையுடன் மனித முன்னேற்றமும் உயிர்வாழ்வுமே கூட பொருந்துவதாக இல்லை.

இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவ ஒட்டுண்ணிகளின் சொத்துக்களை அபகரித்து, அவர்களைத் தூக்கிவீசி, உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கு, சர்வதேச தொழிலாள வர்க்கம் தலைமையிலான போராட்டமாகும்.

Loading