முன்னோக்கு

ஒரேகன் போர்ட்லாந்தில் ட்ரம்பின் பொலிஸ்-அரசு தாக்குதல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரேகன் போர்ட்லாந்து நகரில் வன்முறை தாக்குதலில் பொலிஸ் படுகொலை மற்றும் மத்திய உளவுத்துறை முகவர்களால் கடத்தப்படுதல் ஆகியவற்றுக்கு எதிராக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்கு வைத்து, அந்நகரில் ட்ரம்ப் நிர்வாகம் ஓர் அசாதாரண தலையீட்டைச் செய்து வருகிறது. சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையம் (CBP) மற்றும் ஏனைய பெடரல் முகமைகளின் ஆயுதமேந்திய குண்டர்கள் CS கண்ணீர் புகைக்குண்டு மற்றும் இரப்பர் தோட்டாக்கள் மற்றும் நிரந்தரமாக உடலை ஊனமாக்கும் சோனிக் ஆயுதங்களுடன் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். குறைந்தபட்சம் ஒரு போராட்டக்காரர் பெடரல் மார்ஷல் நடத்திய "வெடிகுண்டு தாக்குதலில்" கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

ஃபெடரல் முகவர்கள் தங்கள் வாகனங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களின் குழுக்களை அணுகி, மக்களைப் பிடித்து, குறிக்கப்படாத வேன்களில் எறிந்தனர், விசாரணைக்காக இடந்தெரியாத இடங்களுக்கு அனுப்பி உள்ளனர். பொதுவாக முகவர்களின் பெயர்கள் அல்லது முகமைகளை அடையாளம் காட்டும் சீருடை அணியாமல், அந்த முகவர்களில் பலரும் சீருடைகளுக்குப் பதிலாக உருமறைப்பு உடை அணிந்திருந்தனர். அவர்களின் உடையின் சில இடங்களில் "பொலிஸ்" என்று மட்டும் குறிக்கப்பட்ட பேட்ஜ்களை அணிந்து, இராணுவ சீருடையிலிருந்தவர்களால் பிடிக்கப்பட்ட ஒரு போராட்டக்காரர், உண்மையில் அவர்கள் பொலிஸ்காரர்களா அல்லது பொலிஸூடன் இணைந்து செயலாற்றும் அதிதீவிர வலது தீவிரவாதிகளா என்பதே தெரியவில்லை என்றார். “இது பாசிசமாக தெரிகிறது,” என்றார்.

ஜோர்ஜ் ஃபுளோய்ட் பொலிஸ் படுகொலை தொடர்பாக எழுந்த பாரிய போராட்டங்களுக்கு எதிராக ஜூன் 1 இல் அவர் கிளர்ச்சி சட்டம் 1807 ஐ கையிலெடுக்க அச்சுறுத்திய போதும் மற்றும் வாஷிங்டன் டிசி வீதிகளில் ஆயிரக் கணக்கான பெடரல் முகவர்களையும் தேசிய பாதுகாப்புத்துறை துருப்புகளையும் இறக்க உத்தரவிட்ட போதும் அவர் முன்னெடுக்க இருப்பதாக சூளுரைத்த ஒரு வகை நடைமுறையின் ஒரு பரிசோதனை முயற்சிக்கு, போர்ட்லாந்து இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

போர்ட்லாந்தில் பெடரல் முகவர்கள் மிளகுப்பொடி தூவி, ஒரு போராட்டக்காரரைத் தாக்குகின்றனர். (படம்: ஜேன் ஸ்பார்லிங் காணொளியிலிருந்து ஒரு காட்சி)

போர்ட்லாந்து நகரின் சில பிரதான பகுதிகளில் ஒப்பீட்டளவில் நடந்த சிறியளவிலான போராட்டங்கள் உயிருக்கோ அல்லது சொத்துக்களுக்கோ எந்தவித அச்சுறுத்தலையும் முன்நிறுத்தவில்லை, அது பெரும்பாலும் ஸ்ப்ரே பெயிண்ட் கொண்டு கிறுக்கி வைத்தல், பட்டாசு வெடித்தல் மற்றும் கலைந்து செல்வதற்கான உள்ளூர் பொலிஸ் உத்தரவுகளை மறுத்தமை ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கி இருந்தது. உள்ளூர் பொலிஸிற்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தும், வன்முறை மற்றும் ஒடுக்குமுறைக்கு இழிபெயரெடுத்த போர்ட்லாந்து பொலிஸ் துறையில் ஏனைய சீர்திருத்தங்கள் கோரியும் கடந்து ஏழு வாரங்களாக ஒவ்வொரு இரவும் வழக்கமாக ஒரு சில நூறு பேர் கூடியிருந்தார்கள்.

ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலுள்ள இந்த நகரம் மற்றும் மாநிலத்தில், மூர்க்கமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளைப் பரிசோதித்து பார்ப்பதற்காக, ட்ரம்ப் வேண்டுமென்றே இந்த போராட்டங்களைச் சாதகமாக்கிக் கொண்டார். போர்ட்லாந்தில் தலையீடு செய்யுமாறு இடைக்கால உள்நாட்டு பாதுகாப்பு செயலர் சாட் வோல்ஃபிடம் கடந்த வாரம் அவர் வலியுறுத்தினார். ஆத்திரமான தாக்குதல்களை மேற்பார்வையிடவும் மற்றும் "வன்முறையான அராஜகவாதிகளை" கண்டித்து அறிவிக்கை விடுக்கவும், “இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தொடர்ந்து விதைத்து வரும் சூழ்நிலையைப் ஆதரித்து கொண்டிருப்பதாக" உள்ளாட்சி அதிகாரிகளைக் குற்றஞ்சாட்டவும், வோல்ஃப் ஜூலை 16 இல் அந்நகருக்கு விஜயம் செய்தார்.

அந்த இரவுநேர போராட்டங்கள் ஒருமுனைப்பட்டிருந்த உள்ளாட்சி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள நகரப் பகுதிகளில் இரண்டு பெடரல் கட்டிடங்களில் பெடரல் முகவர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். அமெரிக்க எல்லைக்கு மிக அருகாமையிலிருந்து போர்ட்லாந்து 400 மைல் தூரத்தில் உள்ள போதும் கூட, சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புதுறை நிலைநிறுத்தும் SWAT படைப்பிரிவு பாணியிலான BORTAC தான் அந்த பெடரல் தாக்குதலில் முன்னிலையில் உள்ளது. BORTAC க்கு அப்பாற்பட்டு, புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்கத்துறை, போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம், அமெரிக்க மார்ஷல் சேவை, கடல் ரோந்துப்படை, மற்றும் பெடரல் கட்டிடங்களைப் பாதுகாக்கும் பெடரல் பாதுகாப்பு சேவை ஆகியவையும் படைகளை வழங்கி இருந்தன.

“கண்ணீர் புகைக்குண்டு, இரப்பர் தோட்டாக்கள் மற்றும் ஒலிசார் ஆயுதங்களைத் தாறுமாறாக பயன்படுத்தியதற்காக", அமெரிக்க குடியுரிமை சுதந்திரத்திற்கான சங்கம் DHS இக்கு எதிராகவும், மார்ஷல் சேவைக்கு எதிராகவும் ஒரேகனில் சட்டவழக்கு தொடுத்துள்ளது. ACLU இன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “அடையாளமில்லாத கார்களில் யாரேனும் வீதிகளில் பலவந்தமாக இழுத்துச் செல்வதைப் பொதுவாக நாம் பார்க்கையில், நாம் அதை ஆள்கடத்தல் என்று கூறுவோம். இராணுவமயப்பட்ட பெடரல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகள் முற்றிலும் அரசியலமைப்புக்குப் புறம்பானது என்பதுடன், பதில் கூறப்படாமல் போகாது,” என்றார்.

பெடரல் படைகள் உள்ளூர் போராட்டக்கார்களின் அரசியலமைப்பு உரிமைகளை மட்டும் மீறவில்லை, அவை நடைமுறையளவில் உள்ளாட்சி மற்றும் மாநில அரசாங்கங்கள் இரண்டினது அதிகாரத்தையும் பறிக்கின்றன. பெடரல் தலையீடு "நமது அரசியலமைப்பின் கீழ் ஏற்புடையதல்ல" என்று குறிப்பிட்டு ஆரேகானில் இருந்து இரண்டு செனட்டர்களும் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் ஒரு கடிதம் எழுதி இருந்தனர். “எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல் வீதிகளில் இருந்து மக்களைப் பிடித்திழுத்துச் செல்வது" “அதிகளவில் ஒரு சர்வாதிகாரி தலைமையிலான அரசாங்கத்தின் தந்திரோபாயத்தை பிரதிபலிக்கும்..." நடவடிக்கையாகும் என்றவர்கள் குறிப்பிட்டனர்.

ஒரேகன் அட்டார்னி ஜெனரல் Ellen Rosenblum, கூடுதல் கைது நடவடிக்கைகளைத் தற்காலிகமாக தடுக்க கோரி ஒரு வழக்கு தொடுத்துள்ளார், அதேவேளையில் ஆளுநர் கேட் பிரௌன் போர்ட்லாந்தில் இருந்து எல்லா பெடரல் படைகளையும் திரும்ப பெறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்நகரின் நகரசபை தலைவர் டெட் வீலர் ஞாயிறன்று கூறுகையில், “உண்மையில் இங்கே அவர்கள் இருப்பது கூடுதலாக வன்முறைக்கும் கூடுதலாக நாசவேலைக்கும் இட்டுச் செல்கிறது. மொத்தத்தில் அது நிலைமைக்கு உதவுவதாக இல்லை. அவர்கள் இங்கே தேவையில்லை,” என்றார்.

வீலரின் கருத்துகளில் இருந்து தெளிவாவதைப் போல, பெடரல் முகவர்களின் தலையீடு நிலைமையை வெடித்து சிதறடிக்கும் என்பதே ஜனநாயகக் கட்சியினரின் பெரும் பயமாக உள்ளது, அதை அவர்கள் உள்ளாட்சி பொலிஸ் ஒடுக்குமுறையைக் கொண்டு கையாளவே விரும்புவார்கள். அந்நகரில் ஒடுக்குமுறையின் பிரதான முகவர்களான போர்ட்லாந்து காவலர்களுக்கு பிரதியீடாக பெடரல் அதிகாரிகள் அனுப்பப்படும் வரையில், பல கோடி மில்லியனரான வீலர் "கண்ணீர் புகைக்குண்டு டெட்" என்று தான் கண்டிக்கப்பட்டு வந்தார்.

ஒரு போராட்ட அமைப்பால் கொண்டு வரப்பட்ட வழக்கின் மீது கருத்துரைத்து பெடரல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி Marco Hernández குறிப்பிட்ட கருத்தின்படி, அங்கே "அமைதியான போராட்டக்காரர்களின் அரசியலமைப்பு உரிமைகளை அதிகாரிகள் மீறியுள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள்" இருந்தன, மேலும் எவ்வாறிருப்பினும் போர்ட்லாந்து பொலிஸ்துறை உத்தரவுகளுக்குக் கீழ்படிந்திருந்த குறைந்தபட்சம் ஒரு போராட்டக்காரர் "இரப்பர் குண்டுகள், கண்ணீர் புகைக்குண்டுகள், மற்றும் மிக நெருக்கத்திலிருந்து வீசப்பட்ட கையெறி குண்டு தாக்குதலுக்கு உள்ளானார்.”

ட்ரம்ப், போர்ட்லாந்து நிலைமையை ஏனைய நகரங்களிலும் அதேபோன்ற நடவடிக்கைகளுக்கான ஒரு முன்மாதிரியாக பயன்படுத்த நோக்கம் கொண்டுள்ளார். நியூ யோர்க் டைம்ஸால் பெறப்பட்ட உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் உள்அலுவலக அறிக்கைகள் "வரவிருக்கும் நாட்களில் ஏனைய நகரங்களில் (பெடரல் முகவர்கள்) போராட்டக்காரர்களுடன் எதிர்கொள்ள" தயாராக இருக்க வேண்டிய அவசியத்தை மேற்கோளிடுகிறது.

ட்ரம்ப் மற்றும் அவரின் உயர்மட்ட ஆலோசகர்களில் ஒருவரான புலம்பெயர்ந்தோர் விரோத வெறிபிடித்த ஸ்டீபன் மில்லர் இருவரும் அந்நாட்டின் மூன்று மிகப் பெரிய நகரங்களான சிகாகோ, நியூ யோர்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலுள்ள பல நகரங்களில் சட்ட ஒழுங்கை உடைப்பதற்காக என்று கருதப்படும் பெடரல் தலையீட்டை அச்சுறுத்தி கடந்த வாரம் அறிக்கைகள் வெளியிட்டனர். ஏறத்தாழ பிரமாண்டமான ஒரு பொய்யாக, ட்ரம்ப் Fox News Sunday க்குக் கூறுகையில், பெடரல் தலையீட்டுடன் அவர் முன்நகர்ந்திரா விட்டால் "நாம் போர்ட்லாந்தை இழந்திருப்போம்" என்றார்.

அவர் தாக்குதலுக்கு முன்னிலை சிப்பாய்களாக CBP மற்றும் BORTAC ஐ ட்ரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது தற்செயலானதல்ல. ஜூன் மாதம் போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவ தலையீட்டுக்கான அவர் அழைப்பு தோல்வி அடைந்தது என்றால், அது ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பால் அல்ல —அப்படி எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை—மாறாக அத்தகைய ஒரு நடவடிக்கைக்கு அரசியல்ரீதியில் தயாரிப்பு இல்லை என்றும், இராணுவத்திற்கு எதிராக பாரியளவில் அரசியல் பின்விளைவுகளின் ஆபத்தை முன்னிறுத்தி சக்திக்கு மீறிய அபாயம் இருந்ததாகவும் பென்டகன் உணர்ந்ததால் ஏற்பட்டதாகும்.

ஆனால் ஆயிரக் கணக்கான CBP அதிகாரிகளின் இனவாத மற்றும் ஜனநாயக விரோத சேதிகளைப் பகிர்ந்து கொள்ளும் உள்ளார்ந்த பேஸ்புக் குழுக்களின் அறிக்கைகள் எடுத்துக்காட்டுவதைப் போல, CBP இல், பகிரங்கமாகவே பாசிசவாத "கலாச்சாரம்" கொண்ட ஒரு முகமையை ட்ரம்ப் கொண்டுள்ளார். இத்தகைய குழுக்களில் பங்குபற்றியதற்காக, பிரதானமாக உயர்மட்ட அதிகாரிகள் உட்பட 9,000 உறுப்பினர்களைக் கொண்ட "காவலில் இருக்கும் வேற்றுகிரகவாசிகள்" என்ற குறிச்சொல்லுடன் “I’m 10–15” என்ற குழுவில் பங்குபற்றியதற்காக, கடந்த வாரம் CBP நான்கு பணியாளர்களைப் பதவியிலிருந்து நீக்க வேண்டியிருந்தது மற்றும் டஜன் கணக்கான ஏனையவர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டியிருந்தது.

ட்ரம்ப் மீண்டும் மீண்டும் இனவாதம், புலம்பெயர்ந்தோர்-விரோத பேரினவாதம் மற்றும் கம்யூனிச-விரோதத்தின் அடிப்படையில் பொலிஸ், உள்ளாட்சி, மாநிலம் மற்றும் பெடரலில் உள்ள ஆதரவுக்கு முறையிட முயன்றுள்ளார். உள்ளாட்சி காவலர்களே படைகளாக மாறியிருந்த ஒரு பேரணியை நடத்துவதற்காக கடந்த இலையுதிர் காலத்தில் மினெயாபொலிஸ் சென்றிருந்த அவர், “தீவிரக் கொள்கை இடது" என்றவர் குறிப்பிடுவதற்கு எதிராக அங்கே சோசலிச-விரோத வசைபாடலை வழங்கினார். எட்டு மாதங்களுக்குப் பின்னர், மினெயாபொலிஸ் காவலர் Derek Chauvin கால் முட்டியால் கழுத்தை நெரித்து ஜோர்ஜ் ஃபுளோய்டை படுகொலை செய்து, ட்ரம்பின் விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

கொரொனா வைரஸ் தொற்றுநோயில் அதன் மொத்த அலட்சியம் மற்றும் வேண்டுமென்றே தவறான நடைமுறைகளாலும், வேலைவாய்ப்பின்மை மந்தநிலைமை மட்டங்களுக்கு திடீரென அதிகரித்திருப்பதிலும், ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலையை தொடர்ந்து பொலிஸ் வன்முறைக்கு எதிரான பாரிய போராட்டங்களாலும் அவர் நிர்வாகம் ஆழமடைந்து வரும் அரசியல் நெருக்கடிக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்ற நிலையில், ட்ரம்ப் அதிகரித்தளவில் மிகவும் கடுமையாக ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் தஞ்சமடைய தள்ளப்படுகிறார்.

குடியரசுக் கட்சிக்கும் தனிப்பட்டரீதியில் அவருக்கும் ஆதரவு பொறிந்து போயிருப்பதைக் கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்ற நிலையில், Fox News Sunday இல் அவரது பேட்டியில் ட்ரம்ப் மீண்டும் நவம்பர் 3 தேர்தல் முடிவுகளை அவர் ஏற்பாரா என்பதைக் கூற மறுத்துவிட்டார். போர்ட்லாந்தில் மூர்க்கமான படைகளிடம் தஞ்சமடைந்தமை, அதிகாரத்தில் அவர் பிடியை வைத்திருக்கவும் மற்றும் அவரின் பிரதான எதிரியான அமெரிக்க தொழிலாள வர்க்கத்தைத் திருப்பி தாக்கவும் ட்ரம்ப தயாரிப்பு செய்து வரும் அணுகுமுறைகளுக்கு ஓர் எச்சரிக்கையாகும்.

Loading