தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை ஜனாதிபதியின் எதேச்சதிகார ஆட்சிக்கு ஆதரவளிக்கிறது

இந்த கட்டுரையின் ஆசிரியர், யாழ்ப்பாண மாவட்ட சோ... வேட்பாளர் ஆவார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரான், ஜூன் 16 அன்று ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ “தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒரு அரசியலமைப்பு மாற்றத்தை செய்யத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது” என்று அறிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் உயரடுக்கின் நலன்களை முன்னேற்றுவதற்காக கொழும்பு அரசாங்கங்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதில் நீண்ட இழிவான வரலாற்றைக் கொண்டுள்ளது. தமிழ் உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகள் மற்றும் சமூகத் தேவைகள் குறித்து அதற்கு எந்த அக்கறையும் கிடையாது.

"அரசியலமைப்பு மாற்றங்களுக்கான" சுமந்திரனின் வேண்டுகோளானது, தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கிற்கான மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நீண்டகால கோரிக்கையை குறிக்கிறது. மாகாண சபைகளுக்கு எந்தவொரு அதிகாரப் பகிர்வையும் அல்லது தமிழ் உயரடுக்கிற்கு எந்வொரு சலுகையையும் வழங்குவதை இராஜபக்ஷ கடுமையாக எதிர்ப்பதால், இந்த வேண்டுகோள் குறிப்பாக வஞ்சத்தனமானதோடு இழிவானதும் ஆகும்.

ஆகஸ்ட் 5 நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கான தற்போதைய பிரச்சாரத்தின் மத்தியில், இராஜபக்ஷ உண்மையில் அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள முயற்சிக்கின்றார் - ஆனால் அது வேறுபட்ட பண்பைக் கொண்டதாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் ஏற்கனவே உள்ள பாரதூரமான அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பை திருத்துவதன் பேரில் மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை வெல்வதற்கு அவர் முயல்கிறார்.

விலைபோகும் தமிழ் உயரடுக்கின் நலன்களுக்கு சலுகைகளை வழங்கினால், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சி முறைகளுக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கின்றது. அவ்வாறு செய்வதன் மூலம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத போரின் போது, 2009ல் நடத்தப்பட்ட இறுதித் தாக்குதல்களில் பாதுகாப்புச் செயலாளராக இருந்து, பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நேரடியாக பொறுப்பாளியான ஒருவருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உடன்பாட்டை நாடுகிறது.

கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷவுக்கு தமிழர்கள் மத்தியில் இருந்த விரோதப் போக்கின் விளைவாக, வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, அவரை "குறைந்த தீமை" கொண்டவர் என்று பொய்யாக சித்தரித்தது. எவ்வாறாயினும், இராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர், கட்சி திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.

உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை பெரிதும் துரிதப்படுத்தியுள்ளதால், இலங்கையின் அரசியல் நெருக்கடி இன்னும் ஆழமடைந்துள்ளது. இராஜபக்ஷ தனது நிர்வாகத்தை இராணுவமயமாக்கி, சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்கின்ற நிலையில், முழு அரசியல் ஸ்தாபகமும் அவருக்குப் பின்னால் ஒன்றிணைந்துள்ளது.

ஏப்ரல் 27 அன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏனைய பிரதான எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, ஜனாதிபதி மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்டினால் எந்த நிபந்தனைகளும் இன்றி "பொறுப்பான ஒத்துழைப்பை" தருவதாக உறுதியளித்தது. தனது பதவியை வலுப்படுத்தும் ஜனநாயக விரோத நடவடிக்கையில் இறங்கிய இராஜபக்ஷ, தனது கட்சி சிறுபான்மையாக இருந்த பாராளுமன்றத்தை கலைத்துவிட்டார்.

மே 4 அன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் ஜனாதிபதியின் சகோதரர் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுடன் மூடிய கதவுகளுக்குள் ஒரு சந்திப்பை நடத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் பேசிய சுமந்திரன், "எல்லோரும் ஒத்துழைத்து அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும்" என்று அறிவித்தார்.

தொழில், ஊதியங்கள் ஏனைய நிலைமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்ப்பு வளர்ச்சியடைந்து வருகின்ற அதேவேளை, கடுமையான வாழ்க்கைச் சிரமங்கள் காரணமாக கிராமப்புற மக்கள் மத்தியிலும் அமைதியின்மை வளர்ந்து வருகின்றது. தெற்கில் உள்ள தங்கள் சகாக்களைப் போலவே, தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் வளர்ந்து வரும் சர்வதேச வர்க்கப் போராட்டங்களுக்கு மத்தியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் பெருகி வரும் போராட்டங்களையிட்டு பெரும் அச்சத்தில் உள்ளன.

நாங்கள் தொழிலாளர்களை எச்சரிக்கிறோம்: வளர்ந்து வரும் தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வாதிகாரத்தை நோக்கி விரைவாக முன்னேறிக்கொண்டிருக்கும் இராஜபக்ஷவுக்கே, தமிழ் கூட்டமைப்பு ஆதரவளிக்க விரும்புகிறது. இவ்வாறு, தமிழ் தேசியவாதிகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கொழும்பில் உள்ள சிங்கள பேரினவாத அரசியல் ஸ்தாபகத்துடன் தங்கள் வர்க்க ஒற்றுமையைக் காட்டியுள்ளனர்.

ஜூன் 21 அன்று, வீரகேசரி பத்திரிகைக்கு கொடுத்த ஒரு நீண்ட நேர்காணலில், தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் கடந்த காலத்தில் மேற்கொண்ட மோசமான பேச்சுவார்த்தைகள் மற்றும் உடன்பாடுகளை மேற்கோள் காட்டி, இராஜபக்ஷ அரசாங்கத்துடனான கட்சியின் அழுகிப்போன ஒத்துழைப்பை நியாயப்படுத்த தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் முயன்றார். கட்சியானது "அதிகாரத்தில் இருப்பவர்களுடன் ஒரு தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும்," என்று அவர் அறிவித்தார்.

எஸ்.ஜே.வி. செல்வநாயகம்

சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் கீழ், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் வரலாற்றை விவரித்தார். அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த இராஜபக்ஷ, போரின் போது ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 300,000 தமிழ் மக்களை சிறையில் அடைத்தமைக்கு தனது சகோதரர் கோடாபயவுடன் சேர்ந்து தலைமை தாங்கியவராவார். அவருடன், 2009ல் இனவாத யுத்தம் முடிவடைந்த பின்னர், தமிழ் கூட்டமைப்பு 18 கலந்துரையாடல்களை நடத்தியதை கூட சம்பந்தன் பெருமையாகக் கூறினார்.

கொழும்பில் உள்ள பிற்போக்கு சிங்கள ஆளும் உயரடுக்கினருடன் இணைந்து தமிழ் முதலாளித்துவம் ஆற்றிய துரோகப் பாத்திரத்தின் வரலாற்றையே இந்த பதிவு அம்பலப்படுத்துகிறது. இந்த பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு "முன்னேற்றத்தை" கொண்டு வந்தன என்பது ஒரு அப்பட்டமான பொய் ஆகும். மாறாக, இதன் விளைவு, தீவின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு பேரழிவாக இருந்த 30 ஆண்டுகால யுத்தம் உட்பட ஒன்றன்பின் ஒன்றாக வந்த பேரழிவுகளே ஆகும்.

1948இல் பிரித்தானியாவிடம் இருந்து உத்தியோகபூர்வர்மாக சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கை முதலாளித்துவக் கட்சிகளும் அவற்றின் அரசாங்கங்களும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் தமது ஆட்சிக்கு ஒரு சமூக அடித்தளத்தை அமைப்பதற்கும் சிங்கள மேலாதிக்கத்தையும் தமிழர்-விரோத பேரினவாதத்தையும் சுரண்டிக்கொண்டுள்ளன. இவற்றுக்கு பிரதிபலித்த தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், தமிழ் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவில்லை, மாறாக செல்வந்த தமிழ் உயரடுக்கின் நலன்களுக்காக கொழும்பு அரசியல் ஸ்தாபனத்திற்குள் சூழ்ச்சிகளைக் கையாளவே முயற்சித்து வந்துள்ளன.

சுதந்திரம் கிடைந்த உடன் அதன் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக ஐ.தே.க. அரசாங்கம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்து இலட்சம் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை பறித்ததை தொடர்ந்து, 1949ம் ஆண்டிலயே தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி இந்த அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்ததோடு, ஐ.தே.க. அரசாங்கத்தில் பங்காளியாக இருந்து அந்த சட்டத்தை ஆதரித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்தது.

ஆரம்பத்தில் இருந்தே, தமிழரசுக் கட்சியானது தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பிரதானமாக தமிழ் பகுதிகளுக்குள் தமிழ் முதலாளித்துவத்திற்கு குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் இருக்கக் கூடியவாறான ஒரு கூட்டாட்சி அமைப்பையே கோரி வந்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதற்கு உதவும் வகையில் சிங்கள ஆளும் உயரடுக்கினருடனான ஒரு அணிதிரள்வுக்கே அது முயற்சித்தது.

அரசியல் பின்னடைவு இருந்த போதிலும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை சூழ சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடி வந்த லங்கா சம சமாஜ கட்சியை, ஐக்கிய தேசிய கட்சி போலவே தமிழரசுக் கட்சியும் எப்போதும் கடுமையாக எதிர்த்து வந்தது.

தமிழரசுக் கட்சியின் வரலாறு குறித்த தனது மதிப்பீட்டில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், பிராந்திய சபைகள் வழியாக தமிழர்களுக்கு வரையறுக்கப்பட்ட சுயாட்சியை வழங்குவதற்காக தமிழரசுக் கட்சி தலைவர் S.J.V. செல்வநாயகத்துக்கும் பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்கவுக்கும் இடையில் கைச்சாத்தான ஒப்பந்தத்தை அங்கீகரித்து மேற்கோள் காட்டி வந்துள்ளார்.

பண்டாரநாயக்கவும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.), 1956 தேர்தலில், சிங்களத்தை மட்டும் நாட்டின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனப்படுத்துவதாக அறிவித்து, அப்பட்டமான தமிழர்-விரோத திட்டத்தை முன்வைத்தே ஆட்சிக்கு வந்தன. தமிழரசுக் கட்சி, இந்த சிங்களம்-மட்டும் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தமிழ் சுயாட்சிக்கான கோரிக்கை என்ற முட்டுச் சந்துக்குள் திசைதிருப்பியது.

ஒப்பந்தம் ஒன்றுமில்லாமல் போனது. 1956 தேர்தலுக்கு தான் அடித்தளமாகக் கொண்டிருந்த அதே சிங்கள பேரினவாதிகள் அந்த ஒப்பந்தத்தை ஒரு காட்டிக்கொடுப்பு என்று கண்டித்து, தமிழர்-விரோத போராட்டங்களை ஆரம்பித்ததை அடுத்து, பண்டாரநாயக்க தாமே அந்த ஒப்பந்தத்தை பகிரங்கமாக கிழித்து எறிந்தார். 1959 இல் பண்டாரநாயக்க ஒரு சிங்கள தீவிரவாதியால் படுகொலை செய்யப்பட்டார். ஒப்பந்தம் கிழிக்கப்பட்ட பின்னர், இனவெறி குண்டர்கள் தங்கள் தாக்குதல்களை தமிழர்கள் மீது திருப்பினர்.

ட்ரொட்ஸ்கிச கட்சி என்று இன்னமும் கூறிக்கொண்டிருந்த ல.ச.ச.க., சிங்கள-மட்டும் கொள்கையை எதிர்த்த போதிலும், பெருகிய முறையில் ஸ்ரீ.ல.சு.க.வின் சிங்கள ஜனரஞ்சகவாதத்திற்கு அடிபணிந்து போனது. 1964இல், தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் பெரும் எழுச்சிக்கு மத்தியில், ல.ச.ச.க., முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்குள் நுழைந்தது. அதன் வரலாற்று காட்டிக்கொடுப்பின் ஆழமான விளைவுகளாக, "ஆயுதப் போராட்டத்தை" ஆதரிக்கும் குட்டி முதலாளித்துவ தீவிர போக்குகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது -சிங்கள இளைஞர்கள் மத்தியில் மக்கள் விடுதலை முன்னியும் (ஜே.வி.பி.), தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் உட்பட பிரிவினைவாத குழுக்களும் தலைதூக்கின.

இரா.சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், செல்வநாயகத்துக்கும் ஐ.தே.க. தலைவர் டட்லி சேனநாயக்கவுக்கும் இடையே 1965 இல் எட்டப்பட்ட மற்றொரு சமமான பேரழிவு உடன்படிக்கையை பாராட்டுகிறார். பண்டாரநாயக்க கூட்டணி சரிந்த பின்னர், அரசாங்கமொன்றை உருவாக்க சேனநாயக்கவுக்கு தமிழரசுக் கட்சி உதவியது. சிங்களம் மட்டும் கொள்கையை மாற்றியமைத்து, தமிழர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நில மானியங்களை வழங்குவதற்கான உடன்படிக்கையும் ல.ச.ச.க., ஸ்ரீ.ல.சு.க. மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சிபி) ஆகியவற்றின் பேரினவாத எதிர்ப்பால் குழம்பிப் போனது. ஆயினும்கூட, ஐ.தே.க. அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க-விரோத கொள்கைகளுக்கு தமிழரசுக் கட்சி தொடர்ந்து ஆதரவளித்தது.

லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு, 1970 தேர்தலுக்குப் பின்னரான இரண்டாவது ஸ்ரீ.ல.சு.க. கூட்டணி அரசாங்கத்தின் ஸ்தாபிதத்துடன் இனவாத பிளவுகளை ஆழப்படுத்தியது. லங்கா சம சமாஜ கட்சி தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வா, பௌத்த மதத்தை அரச மதமாகவும், சிங்களத்தை அரச கரும மொழியாகவும் ஸ்தாபித்த 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு நேரடி பொறுப்பாளியாவார்.

தமிழ் இளைஞர்கள் மத்தியிலான வெகுஜன எதிர்ப்பின் மத்தியில், தமிழரசுக் கட்சி இந்த அரசியலமைப்பை உத்தியோகபூர்வமாக எதிர்த்து, பாராளுமன்றத்தில் அமர மறுத்துவிட்டது — இந்த நிலைப்பாட்டை சில வாரங்களுக்குள் அது கைவிட்டது. அது 1972 இல் தமிழர் ஐக்கிய முன்னணி (TUF) என்ற அமைப்பை உருவாக்கி, 1976 ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) என பெயர் மாற்றியதோடு, மே மாதம் நடந்த வட்டுக்கோட்டை மாநாட்டில், தனித் தமிழீழ அரசைக் கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியானது எதிர் கட்சியான ஐ.தே.க.வுக்கு ஆதரவளித்ததுடன், அதன் வலதுசாரி, தொழிலாள வர்க்க விரோத தலைவரான ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான எதிர்கால அரசாங்கத்திற்கு ஆதரவை உறுதியளித்தது. 1977 இல் ஜெயவர்த்தனா ஆட்சிக்கு வருவதற்கு உதவிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஒரு புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான குழுக்களில் பங்கேற்றது. தமிழர்களின் உரிமைகள் உட்பட ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு நேரெதிராக, 1978 அரசியலமைப்பு பாரதூரமான அதிகாரங்களைக் கொண்ட ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நிறுவியது.

இலங்கையை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு மலிவு உழைப்புத் தளமாக மாற்றுவதற்கான தனது சந்தை-சார்பு செயற்திட்டமானது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை தூண்டிவிடுமென விழிப்படைந்திருந்த ஜெயவர்த்தனா, அதை அடக்குவதற்கு எதேச்சதிகார அதிகாரங்களை ஸ்தாபிக்க முயன்றார். எதிர்ப்பு தலைதூக்கியவுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அந்த அரசியலமைப்பிற்கு பெயரளவு எதிர்ப்பை வெளிப்படுத்திய போதிலும், அரசாங்கத்தின் சிக்கன செயற்திட்டத்தை எதிர்க்கவில்லை.

தொழிலாளர்கள் மத்தியில் ஆழ்ந்த எதிர்ப்பை சந்தித்த ஜெயவர்த்தனா, பிரிவினையை ஏற்படுத்தும் தமிழர்-விரோத பேரினவாதத்தையும் ஆத்திரமூட்டல்களையும் தூண்டிவிட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற தந்திரோபாயங்களால் விரக்தியடைந்த தமிழ் இளைஞர்கள், எதிர்த்துப் போராடுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதமேந்திய, பிரிவினைவாத குழுக்களின் பக்கம் திரும்பினர். 1983 இல் ஐ.தே.க. நேரடியாக பங்குகொண்டிருந்த கொடூரமான தமிழர்-விரோத படுகொலைகள், மூன்று தசாப்தங்களாக நீடித்த ஒரு இரத்தக் களரி உள்நாட்டு யுத்தத்துக்கு வழியமைத்தது.

தமிழ் தலைவர்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மற்றொரு சாதகமான விளைவாக, புலிகளை நிராயுதபாணியாக்க இந்திய துருப்புக்கள் வட இலங்கைக்குள் நுழைவதற்கு வழி வகுத்த 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் மேற்கோள் காட்டுகிறார். தங்கள் அதிகாரத்தையும் சலுகைகளையும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறையாக மாகாண அரசாங்கங்களை நிறுவுவதை தமிழ் தலைவர்கள் வரவேற்றனர்.

உண்மையில், ஜனாதிபதி ஜெயவர்த்தனா, விரக்தியினாலேயே இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஒப்பந்தத்தை நாடினார். புலிகளுக்கு எதிரான போரில் இருந்து காலத்தை ஒதுக்கிக்கொள்ளும் முயற்சியாக அது இருந்த அதேவேளை, கொழும்பு அரசாங்கம் நாட்டின் தெற்கில் கிராமப்புற இளைஞர்களிடையே வளர்ச்சிகண்டு வந்த எதிர்ப்பை நசுக்க பொலிஸ்-அரச நடவடிக்கைகளைப் பயன்படுத்தியது. புலிகள் உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் ஆதரித்த இந்த அழுகிய ஒப்பந்தம், விரைவாக உடைந்து மோதலுக்கு வழிவகுத்தது. இதில் இந்திய "அமைதி காக்கும்" படையினால் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

உற்பத்தியின் பூகோளமயமாக்கல் செயல்முறைகளால் அனைத்து தேசிய திட்டங்களுக்கும் குழிபறிக்கப்பட்டதை பிரதிபலித்த சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை அடுத்து, புலிகளும் மற்றும் தமிழ் முதலாளித்துவ கட்சிகளும், உலகெங்கிலும் உள்ள தங்கள் சகாக்களைப் போலவே, தமது சோசலிச வாய்ச்சவடால்களை கைவிட்டன. ஏகாதிபத்திய-எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொள்வதற்கு பதிலாக, தமிழ் கட்சிகள் அனைத்தும் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவைத் தேடியதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை மலிவு உழைப்புத் தளமாக மாற்றுவதற்கு முன்வந்தன.

எவ்வாறாயினும், முடிவில், தீவில் தனி தமிழ் அரசை நிறுவுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எந்த ஆர்வமும் இருக்கவில்லை. தமிழ் பிரிவினைவாதம் தென்னிந்தியாவிலும் பரவும் என்று ஆழ்ந்த அக்கறை கொண்ட இந்தியாவுக்கும் அத்தகைய அக்கறை இருக்கவில்லை. இரு நாடுகளும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல்களையும், இறுதியாக 2009 இல் புலிகளின் ஆயுதப் படைகளை நசுக்குவதற்கும் ஒத்துழைத்தன.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வாரிசான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிபலிப்பு, இன்னும் வலதுபக்கம் நகர்ந்து, அமெரிக்காவுடன் தன்னை முழுமையாக இணைத்துக்கொள்வதாக இருந்தது. தமிழர்களுக்கு எதிராக கொடூரமான போரை நடத்தியதற்காக அன்றி, சீனாவுடன் மிகவும் நெருக்கமாக உறவை வைத்திருந்தமையால் அது 2015 இல் மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றிய அமெரிக்க ஆட்சி மாற்ற சதிக்கு ஆதரவளித்தது.

தமிழ் முதலாளித்துவம் மேற்கொண்ட சூழ்ச்சித்திறன்களின் சித்திரவதை வரலாற்றைப் பற்றிய சம்பந்தனின் மதிப்பாய்வு, தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்கள் தமிழ் கட்சிகளின் வெற்று வாக்குறுதிகளில் எந்த நம்பிக்கையையும் வைப்பது பயனற்றது என்பதையே வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு திருப்பத்திலும், தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், கொழும்பில் தங்கள் சகாக்களிடம் ஒரு சில தற்காலிக சலுகைகளைப் பெறுவதற்குப் பிரதியுபகாரமாக, கூட்டு ஒடுக்குமுறையின் தோற்றுவாயான முதலாளித்துவத்தைத் தூக்கி வீசுவதற்கு தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களின் எந்தவொரு ஒருங்கிணைந்த இயக்கத்தையும் தடுப்பதற்கு செயற்பட்டுள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களின் சிங்கள பேரினவாதம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளின் தமிழ் குறுந்தேசியவாதம் உட்பட அனைத்து வகையான தேசியவாதங்களையும் இனவாதங்களையும் இடைவிடாமல் எதிர்த்து வந்துள்ளதுடன், அவற்றுக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக போராடி வருகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி / புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை ஸ்தாபிப்பதற்கான போரட்டத்தின் ஒரு பகுதியாக, இன பாகுபாடுகளைக் கடந்து தொழிலாளர்களின் சோசலிச ஐக்கியத்துக்காகப் போராட, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்கான தனது வேலைத் திட்டத்தை 1987 இல் அபிவிருத்தி செய்தது. இந்த அடிப்படையில் நாங்கள் தொடக்கத்தில் இருந்தே போரை எதிர்த்து, வடக்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை திரும்பப் பெறக் கோரினோம். தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அதேவேளை, தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் துரோகத்தை எமது கட்சி இடைவிடாமல் அம்பலப்படுத்தி வந்துள்ளது.

இந்த தேர்தலில் அனைத்து முதலாளித்துவ கட்சிகளுக்கும் அவற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் போலி இடது வக்காலத்து வாங்கிகளுக்கும் எதிராக, இந்த வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம். நாங்கள் யாழ்ப்பாணம், நுவரெலியா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். எமது சோசலிச சர்வதேசியவாத வேலைத் திட்டத்தை ஆதரிக்க எங்களுக்கு வாக்களியுங்கள். எமது கட்சியிலும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் இயக்கத்திலும் இணைந்துகொள்ளுங்கள்.

Loading