சீனாவின் ஹூஸ்டன் துணைத் தூதரகத்தை மூட அமெரிக்க உத்தரவு பிறப்பித்தமை போரின் அபாயத்தை அதிகரிக்கின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அதன் முடிவை நியாயப்படுத்த எந்த விவரங்களையும் வழங்காமல் ஹூஸ்டனில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூன்று நாட்களுக்குள் மூடுமாறு சீனாவிற்கு ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது சீனாவுடனான அமெரிக்க மோதலை ஆபத்தான மற்றும் முன்னோடியில்லாதவகையில் தீவிரமாக்கும் நடவடிக்கையாகும்.

இது தென் சீனக் கடலில் அமெரிக்க மற்றும் சீன போர்க்கப்பல்களுக்கு இடையில் ஒரு பதட்டமான நிலைமையின் மத்தியில் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை போரை நோக்கிய ஒரு படி என்பதை தவிர வேறுவிதத்தில் பார்க்க முடியாது.

ஏற்கனவே 150,000 அமெரிக்க உயிர்களை இழந்த கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்த தவறியதால் பாரிய உள்நாட்டு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வெள்ளை மாளிகையும் மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும், உள் பதட்டங்களை வெளிப்புற "எதிரிக்கு" எதிராக திசை திருப்ப முயல்கின்றன.

1979 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை இயல்பாக்கியதிலிருந்து இயங்கும் அமெரிக்காவிலுள்ள மிகப் பழமையான தூதரகத்தை மூடுவதை சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் செய்தது. ஒரு செய்தித் தொடர்பாளர் அதை "இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை நாசப்படுத்தும் ஒரு மூர்க்கத்தனமான மற்றும் நியாயமற்ற நடவடிக்கை" என்று கூறினார்.

பெய்ஜிங்கிற்கு எதிரான அதன் முற்றிலும் ஆதாரமற்ற கூற்றுக்களை விளக்க அமெரிக்க அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சீனா "அமெரிக்கா முழுவதும் பாரிய சட்டவிரோத உளவு மற்றும் செல்வாக்கு செலுத்தும் நடவடிக்கைகளை" நடத்தியதாக வெளியுறவுத்துறை தெளிவற்ற முறையில் குற்றம் சாட்டியது. செய்தித் தொடர்பாளர் Morgan Ortagus இந்த வாரம் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட மோசமான குற்றச்சாட்டுகளை எதிரொலித்து, சீனா அமெரிக்க இறையாண்மையை "மீறுவதாக" குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்க மக்களை "அச்சுறுத்தி", "நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்" மற்றும் "பிற மோசமான நடத்தைகள்" மூலம் "அமெரிக்க வேலைகளை" திருடினார்கள் என்று குறிப்பிட்டார்.

Foreign Minister Jeppe Kofod, right, and US Secretary of State Mike Pompeo take part in a press conference in Eigtved's Warehouse, in Copenhagen Wednesday July 22, 2020. (Mads Claus Rasmussen/Pool Photo via AP)

தூதரகம் ஏன் மூடப்படுகிறது என்பது குறித்த விவரங்களைக் கேட்டபோது, வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, சீனா அமெரிக்க அறிவுசார் சொத்துக்களைத் திருடி வருவதாகவும், இது “நூறாயிரக்கணக்கான வேலைகளை இழக்கச்செய்கின்றது” என்றும் கடும் கூற்றுகளுடன் பதிலளித்தார். டென்மார்க்கின் கோபன்ஹேகனில் செய்தியாளர்களிடம் பொம்பியோ கூறினார்: “இது போதும், இது தொடர்ந்து நடக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை” என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார் எனக்குறிப்பிட்டார்.

ட்விட்டரில், சீனாவுக்கு எதிரான நீண்டகால ஆத்திரமூட்டுபவரான குடியரசுக் கட்சியின் செனட்டர் மார்கோ ரூபியோ இன்னும் தெளிவற்றதாகவும் ஆத்திரமூட்டும் விதமாகவும் இருந்தார். “சீனாவின் ஹூஸ்டன் தூதரகம் ஒரு இராஜதந்திர நிலையமல்ல. அமெரிக்காவில் உளவுபார்ப்பதற்கும் மற்றும் ஆதிக்கத்தை பெறுவதற்குமான நடவடிக்கைகளுக்கான கம்யூனிஸ்ட் கட்சியின் பரந்த வலையமைப்பின் மையமாகும். இப்போது இக்கட்டிடம் மூடப்பட்டு, உளவாளிகள் 72 மணித்தியாலங்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் அல்லது கைதுசெய்யப்படுவர். இது நடக்க வேண்டும்” என்றார்.

வூஹான் ஆய்வகத்தில் இருந்து உலகிற்கு சீனா COVID-19 வைரஸ் “ஆயுதங்களை” கட்டவிழ்த்துவிட்டதாக அதன் முந்தைய கூற்றுக்களைப் போலவே, இந்த தீமூட்டும் குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும், ஈரான் முதல் வெனிசுவேலா மற்றும் சீனா வரை உலகின் மிகப் பெரிய உளவு மற்றும் அரசியல் தலையீடு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்டினால் இக்குற்றச்சாட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

ஹூஸ்டன் குற்றச்சாட்டுகள் சமீபத்திய வாரங்களில் சீனாவுக்கு எதிரான கூற்றுக்கள் மற்றும் நடவடிக்கைகளின் கூட்டுக்களின் ஒரு பகுதியாகும். அதே நாளில், அமெரிக்கா தென் சீனக் கடலில் மற்றொரு பலத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. சீனாவால் உரிமை கோரப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட தீவுகளுக்கு அருகில் USS Ronald Reagan Carrier Strik குழுமத்திற்கும் ஜப்பானிய மற்றும் ஆஸ்திரேலிய போர்க்கப்பல்களுக்கும் இடையே கூட்டுப் பயிற்சிகளை அது நடத்தியது. இந்த வாரம் பொம்பியோ முதன்முறையாக, தென்சீனக் கடலில் சீனாவின் அனைத்து கோரிக்கைகளும் “சட்டவிரோதமானது” என்று வெளிப்படையாக குறிப்பிட்ட பின்னர் இது இரண்டாவது இராணுவ காட்சிப்படுத்தலாகும்.

அமெரிக்க அதிகாரிகள் சீனாவில் இரண்டு முன்னாள் பொறியியல் மாணவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை பதிவுசெய்தனர். சீன அரசாங்கத்தின் கட்டளையின் பேரிலும், அத்துடன் அவர்களின் “சொந்த இலாபத்துக்காகவும் COVID-19 தடுப்பூசி ஆராய்ச்சி பற்றிய தரவுகளைத் திருடுவதற்கு ஊடுருவல் செய்ததாக குற்றம் சாட்டினர்”.

செவ்வாயன்று, பொம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் இருவரும் லண்டனில் உரை நிகழ்த்தினர். அதில் சீனாவுடன் மோதலுக்கான சாத்தியமான செயற்பாடுகளுக்காக அமெரிக்கா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது இராணுவப் படைகளைத் தயார்படுத்தி வருவதாகவும், மற்ற அரசாங்கங்கள் மீது பெய்ஜிங்கின் உலகளாவிய செல்வாக்கிற்கு எதிராக கூட்டணியில் சேர அழுத்தம் கொடுப்பதாகவும் எச்சரித்தனர். "இந்த அச்சுறுத்தலைப் புரிந்துகொள்ளும் ஒரு கூட்டணியை நாங்கள் உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று பொம்பியோ அறிவித்தார். பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் அருகில் நிற்கையில் "இது ஒவ்வொரு நாட்டையும் உள்ளடக்கியது," என்று அவர் கூறினார்.

எஸ்பர், லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான நிறுவனத்திடம், அமெரிக்க இராணுவம் ஆசியா முழுவதும் தனது “தடுப்பு வலிமையை” நவீனமயமாக்கி வருவதாகவும், “சீனாவை முதலிடத்தில் வைக்கும் முற்றிலும் மாறுபட்ட பிராந்திய ஒழுங்கை நிறுவுவதற்கான சீன முயற்சிகளை எதிர்கொள்ள பலத்தையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார்.”

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பாளரான ஹூவாய் பிரித்தானியாவிற்கு 5G தொழில்நுட்பத்தை வழங்க அனுமதிக்கும் முந்தைய முடிவை மாற்றியமைக்க பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதில் வெற்றிபெற்ற நிலையில், சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் ஓரணியில் நிற்குமாறு அதன் அரசாங்கங்களை கோரி பொம்பியோவும் எஸ்பரும் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் செய்கின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில், ஹாங்காங்கில் சீனாவின் கொள்கைகள் தொடர்பாக பொருளாதாரத் தடைகளை அங்கீகரிக்கும் மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். திபெத் மற்றும் சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மையினரை பெய்ஜிங் நடத்துவது தொடர்பாக பல உயர் அதிகாரிகளை அமெரிக்க கருவூலத்துறை தடை விதித்தது.

ஒரேகன் போர்ட்லாண்டில், துணை-இராணுவ துருப்புக்களை அணிதிரட்டியதுபோல் பிற முக்கிய நகரங்களிலும் இதேபோல் செய்வதாக ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களை காண்கையில், சீனாவில் அல்லது வேறு எங்கும் உள்ள மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து வெள்ளை மாளிகைக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பது தெரிகின்றது. மாறாக, அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு முக்கிய அச்சுறுத்தலாக கருதும் சீனாவை எதிர்கொள்ள "மனித உரிமைகள்" மற்றும் "உளவு" பிரச்சினைகளை சுரண்டுவதற்கு வாஷிங்டன் பாசாங்குத்தனமாக முயல்கிறது.

ஹூஸ்டன் மூடலுக்கான பெய்ஜிங்கின் முதலாளித்துவ ஆட்சியின் பிரதிபலிப்பு மீண்டும் அதிகாரப் பகிர்வு சமரசத்திற்கு வாஷிங்டனுக்கு முறையீடு செய்வதும் அதன் சொந்த தேசியவாத மற்றும் இராணுவவாத பிரதிபலிப்பை வெளியிடுவதுமான ஒரு கலவையாக உள்ளது. புதன்கிழமை, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் அமெரிக்காவை மூடுவதை இரத்து செய்யுமாறு முறையிட்டார். அதே நேரத்தில், சர்வதேச சட்டத்தின் "மூர்க்கத்தனமான மற்றும் நியாயப்படுத்தப்படாத" மீறல் மற்றும் சீனாவுக்கு எதிரான சமீபத்திய அமெரிக்க நடவடிக்கைகளின் "முன்னோடியில்லாத வகையில் விரிவாக்கம்" ஆகியவற்றிற்கு எதிரான எதிர் நடவடிக்கைகளை அவர் அச்சுறுத்தினார்.

தென் சீனக் கடலில், சீனாவின் விமானப்படை நேரடிசுடும் பயிற்சிகளை நடத்தியதுடன், மேலும் போர் விமானங்களை சர்ச்சைக்குரிய வூடி தீவில் அதன் தளத்திற்கு அனுப்பியது. இது ஒரு அணுசக்தி மோதல் சுழலுக்குள் செல்லக்கூடிய ஒரு இராணுவ மோதலின் ஆபத்தை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தனது சொந்த சமூக நேரவெடிகுண்டின் மேல் அமர்ந்து பெய்ஜிங் ஒரு ஆயுதப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. அது மனிதகுலத்தின் பேரழிவில் மட்டுமே சென்று முடியும்.

இந்த ஆபத்துக்கள், ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள நெருக்கடி மற்றும் அச்சத்திலுள்ள ஜனாதிபதி தேர்தலால் மட்டும் இயக்கப்படவில்லை. COVID-19 தொற்றுநோயானது, ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட அமெரிக்காவின் உந்துதலை துரிதப்படுத்தியுள்ளது. இந்த உந்துதல், இராணுவரீதியாக ஒவ்வொரு முன்னணியிலும் சீனாவை எதிர்கொள்ளவும், அதை அடிபணியச் செய்வதற்கும், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் நிறுவிய உலகளாவிய உயர்வுக்கு அச்சுறுத்தலாகவும் மாறுவதை தடுப்பதற்குமாகும்.

தடுப்பூசி ஆராய்ச்சி திருடப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால், கொரோனா வைரஸுக்கு ஒரு தடுப்பூசி காப்புரிமை பெற்ற முதல் நிறுவனமாக இருப்பதற்கு போட்டியிடும் நிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் இடையில் ஒரு பிற்போக்குத்தனமான உலகளாவிய போராட்டம் உள்ளது. இதில் பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் தடுப்பூசி இலாபத்தை வெல்லும் நாட்டிற்கு பாரிய பூகோள அரசியல் அனுகூலங்கள் ஆகியவை பந்தயத்தில் உள்ளன.

அமெரிக்க தன்னலக்குழுக்களை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசியவாதக் கொள்கையை, அமெரிக்கா மிகவும் வெளிப்படையாகப் பின்பற்றுகிறது. அவர்கள் தடுப்பூசியை உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரு வழியாக அல்ல, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பார்வையில் குறுக்கே உள்ள நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த விரும்புகிறார்கள். உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் உந்துதலுக்கு இடையூறாக கருதப்படும் நாடுகளிலிருந்து தடுப்பூசியை வாஷிங்டன் தடுத்து நிறுத்துவதோடு, போருக்கும் ஆக்கிரமிப்புக்குமான அதன் திட்டங்களுக்குப் பின்னால் அணிதிரளும் நாடுகளுக்கு உயிர் காக்கும் மருந்தை கிடைக்கச் செய்வதன் மூலம் வெகுமதி அளிக்கவும் முனைகின்றது.

அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளும் ட்ரம்ப் நிர்வாகத்தின் சீன எதிர்ப்பு பிரச்சாரத்தின் பின்னால் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. அவரது உத்தேசமான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ட்ரம்பை மூர்க்கத்தனம் போதாது என தாக்குகின்றார்.

இந்த நிகழ்வுகள், போரின் பாரிய ஆபத்து மற்றும் சீன மற்றும் அமெரிக்க உழைக்கும் மக்கள் உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்தை இந்த அச்சுறுத்தலுக்கும் அதற்கு பொறுப்பான அரசியல் ஆட்சிகளுக்கும் எதிராக அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தையும், நோய்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சியின் தேவையையும் எடுத்துக்காட்டுகின்றன. இது முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீசி, உலகத்தை காலாவதியான போட்டி தேசிய அரசுகளாக பிரித்துவைத்திருப்பதை இல்லாதொழிக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும்.

Loading